உண்மையான விடுதலை

எல்லோரும் வாழ்வதைப் போன்று கர்மாவால் பிணைக்கப்பட்ட விதத்தில் வாழ்ந்தபோது ஒருவருக்கு இருந்த மனம் ஆசாபாசங்களுக்கு உட்பட்டு அறியாமையுடன், சமுதாயமும் குடும்பமும் சொல்லித் தந்த அறிவின்படி இயங்கிக்கொண்டு இருந்தது. அந்த வாழ்க்கை முறையில் சலிப்புற்று, விரக்தியுற்று இனி என்ன என்ற நிலையில் ஏதோ ஒரு புண்ணிய வசத்தால் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுக்கின்ற நல் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கின்றது. அப்படிப்பட்ட வாய்ப்பும் கூடப் போலிகளால் ஏமாற்றப்பட்டும், ஞான வழி அல்லாத பிற வழிகளைச் சார்ந்தவையாகவும் மாறி அமைந்து விடுகின்றன. அப்படி இல்லாமல் உண்மையான உந்துதலின் காரணமாக இறையருளால் ஒரு குருவை அடைந்து அவரிடம் தன்னை ஒப்படைத்து அவரின் சரியான வழிகாட்டுதலால், வந்தவரின் தன்மையை அறிந்து அவர் அளிக்கின்ற உபதேசத்தால், தான் யார், தனது வாழ்க்கையின் நோக்கம் என்ன போன்ற உண்மைகளைச் சிறிது சிறிதாக அறிந்து அதன்பின் அந்த ஆன்மீக சாதகர்கள் வாழ்கின்ற வாழ்க்கை முற்றிலும் மாறுபட்ட நிலையில் அமைய வேண்டும்.

பழைய மனப்போக்கைக் கைவிட்டு, ஆசைகளைத் துறந்து ஒரு சீரான, அமைதி நிறைந்த, அன்பு கலந்த வாழ்க்கை வாழத் துவங்குவதுதான் அறிவு பெற்றதற்கான அடையாளம். உறவுகளோடும் பொருள்களோடும் ஆன்மீக சாதகர்கள் கொள்கின்ற தொடர்பு நிம்மதியைக் குலைப்பதாக இருக்கக்கூடாது. ஆத்மாவை அறிந்த நிலையில் சமநிலைப் புத்தியுடன் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும். கொல்லத்தக்க நிலையில் இடர் ஏற்பட்டாலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமுடன் நெறிமுறைக்கு உட்பட்ட தீர்வை எடுக்கக்கூடிய தெளிந்த உள்ளம் இருக்க வேண்டும். எண்ணங்களால் மனம் சிதறுண்டு போகாமல் ஒன்றுபட்ட நிலையில், எண்ணங்கள் இல்லாத மௌன நிலையில் இருக்கப் பழக வேண்டும். இவைதான் உண்மையான ஆன்மீக வளர்ச்சியே தவிர, எனக்கும் ஆன்மீகம் தெரியும் என்று காட்டுவது உண்மையான ஆன்மீக வளர்ச்சியல்ல. இந்நிலையை அடைவதற்கு ஞானமும் தியானமும் தான் உதவும்.

பழைய மனதை வைத்துக்கொண்டு தான் புதிய அறிவைப் பெற்றுக் கொண்டோம். அப்படிப் பெறுகின்ற புதிய அறிவு நமது அறிவை மாற்றியமைப்பதில்லை. விரியச் செய்கின்றது. ஞான உபதேசத்தால் புதிய மனம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்தவொரு முடிவையும் அறிவு பூர்வமாக எடுக்கத் தெரிய வேண்டும். எல்லா முடிவுகளுக்கும் பின்னால் ஆசைகள் இருக்கின்றன. அந்த ஆசைகளுக்கு ஆட்படாமல், உணர்ச்சி வசப்படாமல், சாதகமான முடிவு வேண்டும் என்று கணக்கிடாமல், சரியான விதத்தில் முடிவு எடுக்கத் தெரிகின்றதா என்று ஆராய வேண்டும்.

தியானம் செய்தல் என்பது ஒரு பழக்கமாக இருக்கிறதா அல்லது அதன் பயனைப் புரிந்துகொண்டு செய்யப்படுகின்றதா என்று யோசியுங்கள். நமக்குள்ளே உயிராக சக்தி இருக்கின்றது. மூலத்தின் பிரதிபலிப்பு அது. முழு சக்தியை ஒன்றுபடுத்தி அதனை நிலை நிறுத்தி அதனுள்ளே சிவத்தை உருவாக்குவதே தியானமாகும்.

முன்பெல்லாம் கடவுள் என்ற ஒன்றை நம்மிலிருந்து வேறான ஒன்றாகக், கோவில்களில் இருப்பதாக நினைத்திருந்தோம். இப்போது கடவுள் என்பது எனக்குள்ளேயே உணர்வு ரீதியாக இருக்கின்ற சக்தி என்பதைப் புரிந்துகொண்டு விட்டோம். நாம் உயிரோடு இருக்கிறோம் என்றாலே நாம் அதனோடு வாழ்கிறோம் என்று தான் அர்த்தம். ஆத்மா என்பது நமது உள்ளத்தின் உள்ளே கட்டை விரல் அளவிலான ஒளியாக இருக்கின்றது என வேதம் உரைக்கின்றது. இந்த ஒளியை சக்தி சேருகின்றபோது அது ஒலியாக மாறுகின்றது. ஒலியாக உட்புகுந்து மூளையிலுள்ள நியூரோன்களை ஒளிரச் செய்வதுதான் உபதேசம். ஆத்மாவைப் பற்றிய உண்மைகள் போதிக்கப்படுகையில் அவை ஒலியாக நம் செவிக்குள் புகுந்து மூளையை அடைந்து அங்கு அறிவு என்ற ஒளியை ஏற்றுகின்றன. எந்த ஒலியிலிருந்து ஒளி பிறந்ததோ அந்த ஒளியை நான் மீண்டும் ஒலியாக மாற்றுகிறேன். சிவசக்தி ஐக்கியமும், ஓங்கார நாதமும் இதுதான். சக்தி என்பது அம்பாள். அம்பாள் தான் சிவனைக் காட்டுகிறாள் என்று புராணம் கூறுகின்றது.

எந்த அளவிற்கு நாம் இந்த உண்மைகளைப் புரிந்துகொள்கின்றோமோ அந்த அளவிற்கு நமது பரிணாமம் உயரும். இந்தப் பூமிக்கு நாம் வந்தபோது ஓரளவு ஒளி நிலையில் தான் பிறந்திருக்கின்றோம். பிறக்கும்போதே நம்மில் உள்தேடல் இருந்தால் தான் நம்மால் குருவைச் சந்திக்க முடியும். ஞான ஒளியைப் பெற முயற்சி செய்ய முடியும். உள் தேடலைத் துவங்கத் துன்பமும் துயரமும் ஒரு காரணம். இந்த உள்தேடலால் கிடைத்த ஞானத்தால் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்படி ஏற்பட்டு விட்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும். நாம் அதனிடம் தொடர்பு கொண்ட நிலையில் வாழத் துவங்கினால் அதன் பிறகு மாறாத சுகம் நம்மில் நிலைத்திருக்கும். மற்ற சுகங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஆத்மசுகம் மாறாதது.

சும்மா இருந்துகொண்டு எந்த வேலையும் செய்யாமல் எண்ணங்கள் ஏதுமின்றி எதனோடும் நம்மைப் பிணைக்காமல் தனக்குள் தான் மூழ்கிய நிலையில் சுகத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கின்ற நிலையை யோக நிலை என்று சொல்வர். எதையாவது செய்து கொண்டிருந்தாலும் எண்ணமே இல்லாமல் அதில் மூழ்கிச் செயல்படுகின்ற நிலையும் யோகம் தான். எதைச் செய்தாலும் அச்செயல் ஆன்மீகமாக அமைய வேண்டும். ஓர் எதிர்மறைச் சக்திக்கு எதிராகச் செயல்படுகின்ற போராட்டமாக இருந்தாலும் அது ஆன்மீகமாக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் அது வாழ்க்கையின் வெற்றிக்கு நம்மை இட்டுச் செல்லும்.

மாறுபட்ட கருத்துக்களைச் சொல்பவர்களையும் ஏற்க வேண்டும். ஏனெனில் கருத்துக்கள் தான் வேறானவை. மனிதர்கள் அல்ல. ஒவ்வொரு கால கட்டத்திலும் சமுதாயக் கருத்துக்களோடு முரண்பட்டு எதிர்த்துப் போராடியவர்கள் தான் உண்மையான ஆன்மீகவாதிகளாக உயர்ந்து நிற்கிறார்கள். அவர்கள் தம்மை உயர்த்திக்கொண்டு சமுதாயத்தையும் உயர்த்தியவர்கள். விவேகானந்தர், சின்மயானந்தர், மார்டின் லுhதர், மகாத்மா காந்தி போன்றவர்கள் எல்லாம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வைத் தந்ததால் தான் மக்கள் மனதில் பூத்த புதிய மலர்களாக இன்றும் மலர்ந்திருக்கின்றார்கள். மனம் அடங்கியவர்கள் மலர்கின்றார்கள்.

உபதேசம் உள்சென்று உள்ளத்தை மாற்ற வேண்டும். எந்தப் பிரச்னைக்கும் ஆடாமல் அசையாமல் வருபவற்றை அப்படியே ஏற்க வேண்டும். நமது பிரச்னைகளைத் தீர்க்க நாம் பெற்ற ஞானம் கைகொடுத்து உதவுவதோடு அங்கு நாம் செயல்படும் விதத்தால் நம் மனதில் ஒரு சுகம் அல்லது நிம்மதி அடைகின்ற நிலை ஏற்பட வேண்டும். தொடர்ந்த, புத்திசாலித்தனமான அணுகுமுறை ஞானத்தைத் தொட்டு நின்று செயல்படுகின்ற நிலையாகும். எனக்குள் இருக்கின்ற அதுதான் கர்மாவால் இந்த விதமாக நடந்து துன்பத்தை ஏற்படுத்துகின்றது. எதிரில் இருந்து எனக்கு எதிராகச் செயல்படுபவரும் எனது கர்மாவால் தான் அப்படிச் செயல்படுகின்றார் என்பதைப் புரிந்துகொண்டு நடப்பவற்றை அறிவுபூர்வமாகப் பார்த்து அதற்கேற்றபடி நிதானமாகச் செயல்படுவதுதான் ஞானத்தோடு செயல்படுகின்ற நிலை. இப்படி ஞானத்துடன் செயல்படத் துவங்கியதும் அது நம்மை மூலத்திற்குக் கொண்டு செல்லும். மூலத்தைத் தொட்டால் நாம் மலர்வோம். இனி நமக்கு ஏற்படுகின்ற விருப்பம் அல்லது ஆசை ஆகியவை மாயை என்பது புரிந்து செயல்படாத தன்மை நமக்கு ஏற்பட்டுவிடும்.

ஒன்றைச் செய்யலாம், செய்யாமல் விடலாம், தூக்கி எறியலாம் அல்லது மறந்து விடலாம் என்பது ஏற்கனவே உபதேசித்த ஓர் உண்மை. நமது பரிணாமத்தைப் பொறுத்த விதத்தில் தான் நமது செயல்கள் அமையும். நாம் பெறுகின்ற இந்த ஞானம் நிச்சயம் நம்மைப் பரிணாம உயர்வை நோக்கிக் கொண்டு செல்லும். ஏதேதோ ஆசைகளோடும், வெவ்வேறு பார்வைகளோடும் வாழ்ந்த நாம் இப்போது சமநிலையில் நிதானமாகச் செயல்படுகின்ற தன்மைக்கு வந்துள்ளோம். அது நாம் பெற்ற ஞானத்தின் விளைவு அல்லவா?

ஆழ்ந்த தியானத்தில் முழுமையாக மூழ்கி இருக்கின்ற தருணங்களில் ஒளியைத் தரிசிப்பதோடு ஒலியையும் கேட்கின்ற நிலை ஏற்படும். அப்படிக் கேட்கின்ற அந்த ஒலியே ஓங்கார நாதம். அந்தத் தியான நிலையில் சிவமும் சக்தியும் இணைந்து அந்த நாதம் எழுகின்றது. அப்படி நிகழ்வது ஓர் உயர்ந்த நிலை. ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஓர் ஒலி இருக்கின்றது. இதை சோனிக் என்று சொல்வார்கள்.

வௌவால்களுக்குக் கண் தெரியாது. அவை எதிலும் அடிபடாமல் பறந்து சென்று தம் இரையைத் தேடுவதற்குத் தம்மிலிருந்து எழுகின்ற சோனிக் என்ற ஒலியைத்தான் பயன்படுத்துகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த ஒலி தடைகளில் பட்டுத் தெறித்து வௌவால்களை அடிபடாமல் தடுக்கின்றதாம். இந்த ஒலியமைப்பைப் பயன்படுத்தி இப்போது கார்கள் தயாரிக்கப்படுகின்றன. தமது காரைப் பார்க் செய்யப் போதுமான இட வசதி இருக்கின்றதா, தடை ஏதும் உள்ளதா என்பதை இந்த ஒலியலைகள் முதலில் சென்று சிக்னல் தரும். பிறகு அதற்கேற்றபடி வாகனங்களை அங்கு விடலாம்.

இந்த சோனிக் என்ற ஒலியலைகள் நம் உடலில் ஒவ்வொரு சக்ராவிலும் ஒவ்வொரு விதமாக ஒலிக்கின்றன. ஏழு சக்கரங்களுக்கும் ஏழு ஒலிகள். அவைதான் ஏழு ஸ்வரங்கள். கர்நாடக இசையைத் தெய்வீகமான இசை என்றும் அது ஆத்ம சுகத்தை அளிப்பது என்றும் சொல்வதன் பொருள் இப்போது விளங்கியிருக்கும். இந்த அடிப்படையில் தான் உடலுக்குரிய கவசமாகத் தாம் உருவாக்கிய கந்தர்சஷ்டி கவசத்தில் தேவராயன் என்பவர், அவர் சித்தராய் இருந்தபடியால் மந்திரச் சொற்களாக இடையில் இத்தகைய சொற்களைப் பயன்படுத்திப் பல இடங்களில் வைத்துப் பாடியிருக்கின்றார்.

இப்படிப்பட்ட, உள்ளுக்குள் எழுப்பப்படுகின்ற இந்த ஒலிக்குப் பரநாதம் என்று பெயர். பிரணவ மந்திரம் என்று குறிப்பிடப்படுகின்ற ஓம் என்ற மந்திரத்தை மிக நீளமாகச் சொல்லி இழுத்தால் நம் உடலில் பலவித நன்மைகள் ஏற்படும். தினமும் மூன்று வேளைகள் ஓம் என்ற ஒலியை எழுப்பிவிட்டுத் தியானத்தில் அமர்வது நல்லது. ஒலிப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி இரண்டுமாகத் தியானம் அமைவது நன்மையைத் தரும். அ…உ…ம் என்று பிரித்துச் சொல்லிச் செய்தால் இன்னும் நல்லது. வாய்விட்டுப் பெரிதாய், சத்தமாய் ஓம் என்று சொல்ல வேண்டும். முடிந்தவரை நீட்டிச் சொல்ல வேண்டும்.

நாத பிந்து கலாதி நமோ நம.. என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியிருப்பது இதைப்பற்றியே. ஸ்ரீசக்கரபூஜையில் இந்த பிந்து நவகோணம் பற்றி வருகின்றது. ஒளியாக இருப்பதும், உயிராக இருப்பதும் அன்பும், கருணையும் நிறைந்த பிரம்மமான சிவமே. சக்தி, படைப்பாய் வந்து ஆற்றலாய்க் கர்மாவிற்கு ஏற்றபடி செயல்பட்டுச் செலவழிகின்றது. அல்லது அந்த சக்தி ஞானத்தால் சேகரிக்கப்பட்டுப் பயிற்சிகளால் சிவத்தை அடைகின்றது. நான் அது என்ற ஐயமில்லாத தன்மை கொண்ட ஞானம் தான் இம்முயற்சிக்குத் தேவை.

ஞானத்திற்காகப் பெற்றுக்கொண்ட இத்தகைய உபதேசங்கள் என்னை நான் அடைவதற்கு உதவ வேண்டுமே தவிர நம்மை அவை குழப்பக்கூடாது. கற்றுத்தந்த குருவின் குரல் கூட அங்கு ஒலிக்கக்கூடாது. எங்கே நான் ஞானம் பெற்றேன் என்பது கூட நினைவில் வரக்கூடாது என்று இங்குக் குரு சொல்கின்றார். இது மிகப் பெரிய அரிய உபதேசம். ஏனெனில் ஆத்ம சாதகர் உபதேசம் பெற்று ஞான ஒளிப்பாதையில் செல்கின்றபோது, செய், செய்யாதே என்று உள்ளிருந்து உட்குரலாக ஒலிப்பது குருவின் குரலாகக் கேட்கின்ற விதம் பலரும் அனுபவத்த்pல் கண்ட உண்மை. என்னை நான் அடைவதற்கு நானே தான் முயல வேண்டும், வேறு எதுவுமே அங்குக் குறுக்கிடக்கூடாது என்னும் உயரிய தத்துவம் இது. ஏனெனில் ஆத்ம சாதகனின் ஒரே நோக்கம் விடுதலை என்பதுதான் எனக் குரு வற்புறுத்திக் கூறுகின்றார். இவற்றை நாம் புரிந்துகொண்டு நான் அல்லாதவற்றை அதாவது புற ஆசைகளை ஒவ்வொன்றாக விட்டுக்கொண்டே வர வேண்டும்.

நாம் இப்படி விட்டுக்கொண்டே வர அதன் பிறகு அவை தாமாகவே நம்மைத் தேடி வந்து சேரும். பொருள் சார்ந்த உலகில் எல்லோரும் பொருள்களைத் தான் மிக விரும்பி வாங்குகின்றனர். இது உலக வழக்கம். அந்தப் பொருள்களைக்கூட வாங்க வேண்டாம், இருப்பது போதும் என்று எண்ணி வாழ்வதும் ஞானம் தான். கனடாவில் நாம் தேடாமலேயே நல்ல தரமான அனைத்துப் பொருள்களும் நமக்குக் கிடைத்துக்கொண்டிருப்பதும் கூட அவன் அருளால் தான். எதுவும் வாங்க முடியும் என்ற நிலையில் ஆடம்பரத்தைத் தவிர்த்துத் தேவைகளை மட்டும் பூர்த்திசெய்து வாழ்கின்ற முயற்சி உன்னதமானது.

கர்மாவால் வடிவமைக்கப்பட்டிருந்த பழைய மனம் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளாமல் அறியாமையுடன் அவற்றை அணுகிச் சிக்கலாக்கித் தனது நிம்மதியையும் குலைத்துக்கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது ஞானத்தால் பெற்றுக்கொண்ட புதிய மனம் பிரச்னை என்ன என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு எந்தவித ஆவலாதியும் இல்லாமல், தன்னுடையது, பிறருடையது என்ற பாகுபாடு இல்லாமல், அன்பும் கருணையும் பின்னணியில் இருக்க அந்தப் பிரச்னையை அணுக முடிகிறது. தன்னால் தீர்க்க முடியாவிட்டாலும் அதை அவனிடம் ஒப்படைத்துவிட்டு வருகின்ற தீர்வை ஏற்றுக்கொள்கின்ற மனப் பக்குவம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. அப்படி ஏற்பட்டிருக்க வேண்டும். பிரபஞ்சம் முழுவதுமாக விரிக்கப்பட்ட ஞானம் கொண்ட மனதில் ஏற்படுகின்ற விழிப்புணர்வு எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு செல்ல வழி வகுக்கின்றது. இறைக்கருணைதான் எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறது என்ற புரிந்துணர்வு தான் இந்த ஞானம்.

இயற்கையை இடைவிடாமல் உற்று நோக்கி ரசிக்கத் தெரிந்தாலும் இந்தப் புரிந்துணர்வு உண்டாகும். ஒவ்வொன்றிலும் பிரம்மத்தின் ஆற்றலை, அதன் கைவண்ணத்தை, அதன் ரசனையை எண்ணிப் பார்த்து வியக்கும்போது பிரம்மத்தின் உயர்வு மற்றும் அதன் படைப்புத் திறன் புரிந்து நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும். மெய் சிலிர்க்க வைக்கும். இயற்கையின் எழிலை இப்படிப் பார்க்க வேண்டும். ஒரு பூ விரிந்து மலர்கின்றபோது அதன் மலர்ச்சியைக் கண்டு ரசிக்கத் தெரிய வேண்டும். நாய்க்குட்டி துள்ளிக் குதித்து வந்து நம் முன் வாலாட்டுகின்றபோது அதனில் உள்ள பிரம்மமும், என்னில் உள்ள மூலமும் அன்பால் ஒன்றுபடுகின்ற நிலையில் அதைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சி மகிழத் தோன்றும். இந்த உணர்வு எழவில்லையென்றால் அது வாலாட்டினாலும், தலையாட்டினாலும் நாம் அதைப் பார்க்காமலேயே ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போய்க்கொண்டே இருப்போம்.

நம்மைச்சுற்றி நடக்கின்ற எல்லாவற்றையும் உற்றுப்பார்க்கத் தெரிய வேண்டும். இப்படி மனிதர்களை, நமக்கு நெருங்கிய உறவாக இருக்கின்றவர்களை எந்தவித மதிப்பீடும் நமக்குள் வைத்துக்கொள்ளாமல் சும்மா அப்படியே அது ஒரு ஆத்மா என்று பார்க்கத் தெரிய வேண்டும். அப்படிப் பார்க்கப்பழகினாலேயே பாதிப் பிரச்னை இல்லாமற் போய்விடும். அதுவும் ஒரு படைப்பு, அது தன் கர்மாவைக் கழிக்க என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது என்று நினைத்து எவ்வித வெறுப்பையும் ஏற்றிக்கொள்ளாமல், அவை நம்மை எவ்வளவு கடுப்பேற்றினாலும் கூட எந்தவிதப் பாதிப்பும் அடையாமல் அப்படியே சாதாரணமாகப் பார்க்கப் பழகிக் கொள்ளவேண்டும்.

வீட்டில் உறவுகள் கொடுக்கின்ற நெருக்கடிகளால் தான் இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியேறத் துடிக்கின்றனர். உறவுகள் அன்பைக் காட்டவேண்டிய தருணத்தில் கண்டிப்பைக் காட்டி நெருக்கியதால் பிள்ளைகள் மனதில் வெறுப்பை வளர்த்துக்கொண்டுவிடுகின்றனர். பிள்ளைகளின் விருப்பத்தையும் ஆர்வத்தையும் உணர்ந்து அவர்களது ஆற்றலை வளர்க்கின்ற விதத்தில் நாம் அவர்களை அனுசரணையுடன் நடத்தத் தெரிய வேண்டும். அன்பாய் அணுகி அன்பை உணர்த்தினால் அவர்கள் நாம் சொல்வதைப் புரிந்து கொள்வார்கள்.

நம்முள் இருப்பதை நாம் உணர வேண்டும். இந்த உலகம் முழுவதும் பரந்து இருப்பதும், நமக்குள் உயிராக இருப்பதும், நம்மைச் சேர்ந்த உறவுகளாகப் பழகுவதும் அந்த ஒன்றுதான் என்பதை உணர்ந்தால்தான் நாம் நம்மை அதுவாக மாற்ற முடியும். அப்படி மாறினால்தான் விடுதலை பெற முடியும். சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெறுக என்பதன் பொருள் இதுதான். அது எல்லாம் வல்லது. எல்லாம் அறிந்தது. நம் முயற்சியை அது புரிந்துகொண்டு நிச்சயம் நம்மைத் தனதாக்கிக்கொள்ளும். இது சத்தியம்.

உலகத்தில் சரியாக சிந்திக்கத் தெரியாதவர்கள் 92 சதவீதம் இருக்கின்றார்கள் என்று யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருக்கின்றது. 1700 கோடி பேருக்குத் தேவையான உணவு இந்தப் பூமியில் தயாராகின்றது. அப்படி இருந்தும் 300 கோடி பேர் சிலவேளை சாப்பிட்டும், சிலவேளை சாப்பிடாமலும் அரைப்பட்டினி நிலையில் வாழ்கிறார்கள் என்று அது கூறுகிறது. ஏன் இப்படி? என்று ஆராய்ந்தால் மக்களின் சாமர்த்தியமும், ஏமாளித்தனமும் புலப்படுகின்றதா இல்லையா? சமப்பங்கீடு இல்லாததனால் பணக்கார நாடு என்றும் ஏழை நாடு என்றும் பாகுபாடு ஏற்பட்டுவிட்ட நிலை இது. சோமாலியாவில் ஐந்து லட்சம் பேர் அகதிகளாக இருக்கின்றனர். இவற்றையெல்லாம் பார்த்தால் மக்கள் அதர்மமாகச் செயல்படுவது புரியும். இடைத்தரகர்கள் செழிப்பது தெரிய வரும்.

உணவு அதிகமாக வைத்திருப்பவர்கள் இனி இல்லாதவர்களுக்குக் கொடுக்க முன் வர வேண்டும். உண்மையான தேவை உள்ளவர்களுக்கு உதவக் கருணை மனம் கொண்ட நிலையில் செயல்பட வேண்டும். சாப்பிடும் உணவின் அளவையும் நாம் இனிக் குறைத்துக் கொஞ்சமாகச் சாப்பிடப் பழக வேண்டும். அளவுக்கு மீறிச் சாப்பிடுவதால் நோய்கள் மிகும். உணவைக் குறைத்தால் உடல் பொலிவு பெறும். சமைத்துச் சாப்பிடுவதை விட இயற்கை உணவு வகைகளைச் சாப்பிடுதல் நல்லது. இப்படி நாம் குறைப்பது, பிறருக்கு ஒருவேளை உணவாகக் கிடைக்கும்.

இப்போது உலகம் விரும்பியோ விரும்பாமலோ நல்லனவற்றை நாடித் திரும்புகின்றது. உலகத்தில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. காய்கறி உணவு, யோகப் பயிற்சிகள், தியானம் செய்தல் என்று மனித முயற்சிகள் நல்லனவற்றை நாடுகின்றன. ஆனால் இவையெல்லாம் தெரியாத நிலையில் இன்னும் பலர் ஏமாந்த நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மற்றொரு தகவல் என்னவென்றால் உலகத்தில் இப்போது எல்லாமே நச்சுத்தன்மை மிகுந்தவையாக ஆகிவிட்டன, எதை எடுத்தாலும் மாசு பட்ட நிலையிலே தான் இருக்கின்றன. இயற்கையோடு இணைந்த நிலையில் வாழ முற்பட்டால்தான் ஓரளவிற்காவது இந்த விஷச் சூழலிலிருந்து விடுபட முடியும். தினமும் ஒரு பூங்காவிற்குச் சென்று உலாவிவிட்டு வர வேண்டும். சூரிய ஒளி உடலில் பட வேண்டும். தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். காய்கறிகளைக் கழுவி சுடுநீரில் உப்புப்போட்டு அதில் அவற்றை 15 நிமிடம் ஊறவிட்டுப் பிறகு எடுத்துச் சமைக்க வேண்டும்.

விலை அதிகம் என்றாலும் ஆர்கானிக் உணவு வகைகளையும், காய்கறி, பழங்களையும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இயற்கை மருத்துவமுறைக்கு மாற வேண்டும். இவற்றையெல்லாம் ஓரளவிற்காவது கடைப்பிடித்தால் தான் உடல் நலம் நன்றாக இருக்கும். அப்போதுதான் சாதனைகளில் தொடர்ந்து தொய்வின்றி ஈடுபட முடியும். ஏனெனில் இவையெல்லாம் விடுதலையைத் தடுப்பவை. இவற்றிலிருந்து விடுபட்டால் தான் விடுதலையை நோக்கிப் போக முடியும்.

கடலில் மூழ்கிவிட்ட லெமூரியா கண்டத்தின் ஒரு பகுதியாகத் தான் முன்பு இலங்கை திகழ்ந்தது. இலங்கை மலைப் பகுதி. ஆஸ்திரேலியாவின் ஒருவகைப் பழங்குடி மக்கள் இப்போதும் தமிழ் கலந்த ஒருவித மொழியைத்தான் பேசுகின்றனர். முன்னொரு காலத்தில் இவையெல்லாம் ஒரே கண்டமாக, ஒரே நிலப்பகுதியாகத் தான் இருந்திருக்கின்றன. இயற்கையின் சீற்றத்தால் கடல் பொங்கி எழுந்து ஒரு பெரிய பூமிப்பகுதியை விழுங்கிவிட்டதால் பல பகுதிகளாக இவை இன்று பிரிந்து கிடக்கின்றன. லெமூரியா முழுவதும் திராவிட நாகரீகம் தான் இருந்தது. தமிழ்மொழிதான் பேசப்பட்டு வந்தது. 1000 ஆண்டுகளுக்கு முன் மேற்கு நாடுகளில் குறிப்பாகக் கனடாவில் சமஸ்கிருதம் தான் முதல் மொழியாக இருந்தது என்று பாலகங்காதர திலகர் கூறியிருக்கின்றார். கனடியப் பழங்குடி மக்களின் வழிபாட்டு முறை இந்துக்களின் வழிபாட்டு முறையை ஒத்ததாக, இயற்கையை வழிபடுவதாகத்தான் இருந்தது.

இப்படி வளர்ந்து, அழிந்து, வாழ்கின்ற வரலாற்றுப் பாதையில் இப்போது பிரம்மம் தன்னை அறிகின்ற முயற்சியில் ஈடுபடுகின்ற தன்மையை எங்கும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. தன்னைப்பற்றி அறிவதற்குரிய சூழ்நிலைக்கு வழிவகுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. மூலத்தைத் தொடர்பு கொண்டால் எல்லாவற்றையும் நிறைவேற்றலாம் என்பது தான் நாம் அறிய வேண்டிய உண்மை. அந்த முயற்சியை நாம் முன்பே மேற்கொண்டதால்தான் நம்மை இந்து மரபில் பிறக்க வைத்து, வேத உண்மைகளை அறியக்கூடிய வாய்ப்பையும் அருளியிருக்கின்றது.

மிக நெருக்கடியான ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றபோது அதனால் தாக்கப்பட்டு நிலை குலையாமல் ஆடாமல் அசையாமல், நான் கடவுள்! – வருகின்ற இவையெல்லாம் என் கர்மாவால் வருபவை: இவற்றை நான் ஏற்கத்தான் வேண்டும் என்று அமைதிப்பட்ட நிலையில், இயலும் என்றால் சிரித்துக்கொண்டு இக்கட்டான அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடிய துணிவும் அறிவும் சாதகர்களுக்கு ஏற்பட வேண்டும். இது கஷ்டம் போல் தெரிந்தாலும் உண்மையைச் சரியாகப் புரிந்துகொண்டவர்களுக்கு இது கஷ்டமல்ல. தன்னை யார் என்று சரியாகப் புரிந்துகொண்டவர்களால் நெருக்கடியைச் சிரித்துக்கொண்டு ஏற்க முடியும்.

நாம் கடவுளாக மாறிக்கொண்டிருந்த நிலை மாறி இப்போது ஆகிக்கொண்டிருக்கின்ற நிலையாக வளர்ந்திருக்க வேண்டும். மாறுவது என்பது சிந்தித்துச் செய்வது. ஆவது என்பது உண்மை புரிந்தபின் அதை ஏற்பது. கடவுளாக ஆனபின் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. ஆசையும் இல்லை. எண்ணமே இல்லை என்ற நிலை. அது ஆளுமையற்ற நிலை. அவன் தான் நான் என்று ஆகிவிடுகின்ற நிலை இது.

வெளிப்படத்தக்க கடவுள்களாகத் திகழ்பவர்களுக்கு இறை நிலையை நெருங்க நெருங்கத் துன்பங்களும், சோதனைகளும் மிக அதிகமாக ஏற்படும். அன்பும், கருணையுமாக அனைவரையும் நெருங்குகின்றபோது முதலில் உலகம் நம்பாது. ஏளனப்படுத்திக் கேவலப்படுத்தும். அடி விழும். ஏன் தெரியுமா? ஒரு தகரத்தையோ, ஒரு கண்ணாடித் துண்டையோ யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஒரு தங்கக் காசு கீழே கிடந்தால் அதை எடுத்துப் பலவிதத்திலும் சோதித்துப் பார்ப்பது மனித இயல்பு. சுடச்சுடத் தங்கம் ஒளிர்வது போல என்று சொல்வது இதைத்தான். சித்திரவதைகளையும் சோதனைகளையும் தாண்டினால் தான் தங்கத்தின் மதிப்பு உயர்கின்றது. அதுபோல் தான் மனிதன் தன்னைத் தெய்வமாக்குகின்ற முயற்சியில் மாயை என்பது முதல் முட்டுக்கட்டை. அது அவனை மாற விடாது. தடுக்கும். முயற்சியும், சிரத்தையும் தான் சாதகர்களுக்குத் தேவை.

எது அசைகிறதோ அது மாயை. இந்த உபதேசத்தை வெறும் சொற்களாக எடுத்தால் மாயை தடுக்கின்றது என்று பொருள். உபதேசம் உரைக்கின்ற உண்மையைத்தான் எடுக்க வேண்டுமே தவிர உபதேசத்தையோ, சொன்னவரையோ பிடித்துக்கொண்டு அதோடு நின்றுவிடக்கூடாது. முன்னேறிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். ஆத்மாவிற்கும் நமக்கும் இடையில் வேறு எதையும் கொண்டு செருகக்கூடாது. கற்றவையெல்லாம் அடைய வேண்டியதை அடைவதற்காகப் போடப்பட்ட படிகளே தவிர அவையே முடிவல்ல. அந்த முடிவை அடைய வேண்டியது என்னிடம் தான் உள்ளது. ஆகவே சமய நூல்களோ, குருவோ மனதில் நிற்கக் கூடாது. நான் அவன் என்பது மட்டும் தான் இனி இருக்க வேண்டும்.

எல்லாம் விடுபட்டுவிட்ட நிலையில் இப்போது நான் ஆத்மாவாக மட்டும் இருக்கிறேன். இங்கு நான் என்பது அவனேயன்றி இந்த உடலோடு தொடர்புகொண்ட பெயர் அல்ல. மாறுகிறேன் என்ற நிலையிலிருந்து ஆகிறேன் என்ற நிலைக்கு உயர்வது தான் உண்மையான விடுதலையை நோக்கிச் செல்வது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *