பொருள் புரியா வாழ்க்கை

சமுதாயத்தில் இருக்கின்ற வாழ்க்கை முறைக்கும் ஆத்ம சாதனையைப் பழகிக்கொண்டிருக்கிற சாதகர்களின் வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சமுதாயம் பொருளியல் சார்ந்த வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. பட்டம், பதவி, பணச்செருக்கு, அதிகாரம், அந்தஸ்து பேதம் எல்லாம் சமூக வாழ்க்கை.

சமூகம் என்பது இவ்வளவுதான், இது நிலையற்ற தன்மை கொண்டது என்பதைப் புரிந்துகொண்டு ஆத்ம உயர்வை வளர்த்துக்கொண்டு போவது தான் சாதகர்களின் வாழ்க்கையாக இருக்க வேண்டும். இந்த நிலையில் அவர்கள் சாதாரண பொருளியல் வாழ்க்கையையும் தமது ஆன்மீக வாழ்க்கையையும் சமநிலைப்படுத்திக்கொண்டு போக வேண்டும். இரண்டையும் பேலன்ஸ் பண்ணத் தெரிய வேண்டும். சம்சாரிகளாக இருப்பவர்கள் சமநிலையாக நடக்கத் தெரிந்தால் தான் ஆன்மீகத்தில் முன்னேற முடியும். அப்படி விடாப்பிடியாக அதை நோக்கி முன்னேறுகின்றபோது, ஆன்மீகத்தின் உயர் பரிணாம நிலைக்கு உயர்கின்றபோது பரம்பொருளின் கருணையால் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் துவங்கும். மேலும் தகுந்த நேரத்தில் உரிய உதவிகள் கிடைக்கும். நினைப்பது நிறைவேறக்கூடிய வாய்ப்புக்கள் தானாக வந்து சேரும். இவையெல்லாம் சாதகர்கள் அப்பரம்பொருளுடன் ஒன்றுகின்ற விதத்தைப் பொறுத்தது. ஏனெனில் அது உள்ளேயே இருந்துகொண்டு எல்லாவற்றையுமே சாட்சியாக நின்று கவனிக்கின்றது.

பொருளியல் வாழ்க்கை என்பதே நமது ஆத்ம சக்தியின் ஓட்டம் தான். ஆசையின் காரணமாக சக்தி ஓட்டம் பொருள் சார்ந்த வாழ்க்கையில் செலவழிந்து கொண்டிருந்தது. அதை இப்போது ஆன்மீக ஞானத்தால் தடுத்து நிறுத்தி, சக்தி சேமிக்கப்படுகின்றது. மனமும் மாயை. பொருட்களும் மாயை. அவற்றின் மீது எழுகின்ற ஆசையும் மாயை. ஆனால் இந்த மாயைதான் பொருள்களாய்க் கவர்ச்சியைக் காட்டி அவற்றின் மீது ஆசை கொள்ள வைத்து, மனித மனதைத் தூண்டி அவற்றை வாங்கவோ, அனுபவிக்கவோ வைக்கிறது. அப்படிச் செய்கின்றபோது சக்தி இழுபட்டு இழக்கப்படுகின்றது. நமக்கு இது திருப்தியைத் தரும் என்று நினைத்துத் தான் ஒன்றை நாம் வாங்குகிறோம். ஆனால் ஆசைப்படுகின்றபோது நம்முள் எழுகின்ற ஆர்வம் அது நமக்குக் கிடைத்தவுடன் அடங்கித் திருப்தியாக மாறுகிறது. அதைப் பயன்படுத்தத் துவங்கியவுடன் அந்தத் திருப்தி நீங்கி அதிலுள்ள நிறைகுறைகள் வெளிப்பட்டு அதிருப்தியைத் தருகின்ற நிலை ஏற்படுகின்றது. சில சமயம் அது வெறுப்பாகவும் மாறிவிடுகின்றது.

சுவை கூடிய ஒரு பொருளை நம் மனம் விரும்புகின்றபோது அது மிக அருமையாக இருக்கிறது. அதன் தோற்றம், அதன் சுவை, ஆகியவை அதை ருசிக்கின்றபோது நமக்குள் ஒரு நிறைவைத் தரும். அதையே திரும்பத் திரும்ப சுவைக்கின்றபோது திகட்டத் துவங்கிவிடும். இது பொருளின் குறை அல்ல. நம் மனதின் நிலை. ஆகவே இந்த உலகத்தை நாம் மிகமிகக் குறைவாகவே பாவிக்கப் பழக வேண்டும். கூடுதலாகப் பாவிக்கத் துவங்கினால் மேலும் கூடுதலான தேவைகள் ஏற்படும். அது நாளாக நாளாக அதிகரிக்குமே தவிரக் குறையாது. ஏனெனில் இந்த உலகமும் நமது சூழ்நிலையும் ஆசைகளைத் தூண்டி அதிகரிக்கத்தக்க விதத்தில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இது தான் இன்றைய பொருளியல் உலக நிலை.

நம்மிடம் இருக்கின்ற கார் தான் லேட்டஸ்ட் மாடல் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றவனின் பக்கத்து வீட்டுக்காரன் அதற்கும் மேலான அடுத்த வருட மாடலை மறுநாள் தன் வீட்டு வாசலில் வாங்கி வந்து நிறுத்தினால், இவனது பெருமை தரை மட்டமாகிவிடுகிறது. வியாபாரம் இந்தப் போட்டியை வைத்துத்தான் லாபம் சம்பாதிக்கின்றது.

புத்தம் புது டிசைன் காஞ்சிபுரம் பட்டுச்சேலையை வாங்கி உடுத்திக்கொண்டு ஒரு பெண்மணி கல்யாண வீட்டிற்குப் போனாள். அது அவளுக்குக் கர்வம். சற்று நேரத்தில் அங்கு ஒரு பெண்மணி காரில் வந்து இறங்கி நடந்தாள். அவள் நடக்கும்போது டிங் டிங் என்று மணியோசை கேட்கிறது. என்ன என்று பார்த்தால் அவளது லேட்டஸ்ட் காஞ்சிபுரம் சாரியின் பார்டரில் சின்னச் சின்ன மணிகள் கோர்க்கப்பட்டு அவள் நடக்கின்றபோது சலங்கை போல சப்தம் எழுப்புகின்றன. பிறகு என்ன நடக்கும்?

மறுநாளே, முதல் பெண்மணி கடைக்கு ஓடி மணி வைத்துத் தைத்த காஞ்சிபுரம் புடவை இருக்கிறதா? என்று நிற்பாள். இன்று எங்கும் பெரும்பாலும் இந்தக் கதைதான் போய்க் கொண்டிருக்கிறது. சாதாரண பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு போகின்ற ஒரு பெண்ணின் மனம் இவற்றையெல்லாம் கண்டு கொந்தளிக்கும். இதன் முடிவு என்ன? இது தவறான போக்கு. சாதகர்களின் மனம் எளிமையைப் பழகி ஓரிடத்தில் நின்று விட வேண்டும். அமைதிப்பட வேண்டும்.

சொல்லப் போனால் இந்த நிலை இப்போது ஒரு பகுதியில் மாறிக்கொண்டுதான் வருகிறது. மாமிச உணவுகள் மாற்pக் காய்கறி உணவு விரும்பப்படுகின்றது. ஆட்டம், பாட்டம், குடி போன்றவற்றில் நாட்டம் குறைந்து யோகா, தியானம் போன்றவை அதிகரித்து வருகின்றன. பொருள்களைக் கண்டபடி வாங்குகின்ற ஆர்வம் படிப்படியாகக் குறைகின்றது. தெரிந்தோ தெரியாமலோ ஆரோக்கிய வாழ்வை நோக்கி உலகம் திரும்பிக் கொண்டிருக்கிறது. தூய்மையான வாழ்க்கை வாழ விரும்புபவர்களின் பார்வை ஆன்மீகத்தின் பக்கம் திரும்புகின்றது.

இது தான் பிரம்மம் செய்துகொண்டிருக்கின்ற மாற்றம். கிழக்கை நோக்கி மேற்குலகம் திரும்புகின்றது. ஆனால் கிழக்கோ மேற்குலக நாகரீகத்தைப் பெரிதும் விரும்புகின்றது. பலவகை யோகா, பலவகைத் தியானங்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால் நமது மனமாகிய சக்தியை உட்பக்கமாகத் திருப்பி அதை இயங்க விடாமல் ஆத்மாவில் நிலை நிறுத்துதல் தான் உண்மையான தியானம்.

இயந்திரத் தொழில் நுட்ப வளர்ச்சி இப்போது ஏற்பட்டிருப்பதைப் போல ஒரு நாளும் இருந்ததில்லை. ஆனால் இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் மனிதனாக வாழ முடிகிறதா? என்றுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது.

5000க்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் எல்லா நாடுகளிலும் தயாரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் பொருள் என்ன? பிரம்மம் அழிவிற்கு உலக நாடுகளைத் தயார்ப்படுத்திக்கொண்டு அதே சமயம் ஆக்கத்தைப் பற்றி யோசிக்கச் செய்கின்றது.

பொருளாதார மேம்பாட்டிற்கு உழைப்பு தேவை. கடின உழைப்பிற்கு மன அமைதி தேவை. மன அமைதிக்கு இயற்கையைப் புரிந்துகொண்டு வாழ்கின்ற அறிவு தேவை. ஏனெனில் நாம் இயற்கையின் அம்சம். என்னை நான் அறிகின்றபோது இயற்கையின் தன்மையையும் நான் புரிந்து கொள்கிறேன். மதர் நேச்சர் என்று உலகம் முழுவதும் இயற்கையைப் போற்றுகின்றது. இப்படி இயற்கையோடு ஒன்றி ஒத்துப் போகின்ற வாழ்க்கை நன்மை தருவதாக அமையும்.

இப்பொழுதே இயற்கைப் பேரழிவு பெருவௌளப் பெருக்கெடுப்பாகப் பல இடங்களில் துவங்கி விட்டது. இது போகப் போகப் பலவித பாதிப்புகளாக உருவெடுக்கும். ஆனால் சாதாரண மக்களுக்குத் தான் இது பேரழிவாக இருக்குமே தவிர ஆன்மீகவாதிகளுக்கு அப்படி இருக்காது. ஏன்? இவர்களின் எண்ணப் போக்கு புறப்பொருள்களைச் சார்ந்தவை அல்ல. அகப்பொருளாகிய ஆத்மாவால் பார்க்கப் பழகியவர்கள் இவர்கள். புறத்தை அகம் தீர்மானிக்கின்றது என்பது ஆன்மீகம். புறம் தான் அகத்தை உருவாக்குகிறது என்பது பொருளியல் கோட்பாடு. பொருள்கள் அழியக்கூடியவை என்பது தான் உண்மை.

புதிய கண்டுபிடிப்புகள் எல்லாமே இருப்பவற்றிலிருந்துதான் கண்டு பிடிக்கப்படுகின்றனவே தவிர நாமாகப் புதிதாக ஒரு புழுவையோ, பூச்சியையோ உருவாக்கி விட முடியாது. இருப்பதைப் போல் ஒன்றை உருவாக்க விஞ்ஞானத்தால் முடியும். அதற்கு க்ளோனிங் செய்த டோலி என்ற ஆட்டுக்குட்டி சாட்சி. ஆனால் அதில் உணர்வைப் புகுத்த முடியாது.

எல்லாமே ஆற்றல். அந்த ஆற்றல் எங்கிருந்து வருகின்றதோ அதைத்தான் பிரம்மம் என்று இந்து தர்மம் சொல்கின்றது. இந்தப் பூமிக்குரிய ஆற்றல் சூரியனிலிருந்து வருகிறது. சூரியனிடமிருந்து சந்திரன் அந்த ஒளியைப் பெற்று தனக்குரிய ஆற்றலை வெளிப்படுத்தி உதவுகின்றது. சூரிய ஒளிதான் தாவரங்களுக்கு உணவு தயாரிக்க உதவி, அதன் மூலம் நமக்கு உதவுகின்றது. சூரிய ஒளி உயிர்களுக்கு எழுச்சியை அளிக்கின்றது. சந்திர ஒளி உயிர்களை அமைதிப்படுத்துகின்றது.

இப்படி ஒவ்வொன்றாகப் பார்க்கின்றபோது எல்லாமே கடைசியில் பிரம்மத்தில் சென்று முடிவது தெரிய வரும். அப்படி எல்லாமே ஒன்று என்ற நிலையில் மற்றவரைப் பார்க்கத் தொடங்குகின்றபோது, நானும் அவரும் ஒன்று என்பது புரியும். அந்த நிலையில் நமக்குள் எழுவது அன்பைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? இந்த அற்புதமான உண்மையை இந்து தர்மம் தான் சொல்லித் தந்திருக்கிறது.

ஆனால் நாம் இன்று தெரிந்து வைத்திருப்பதோ பலவகையான தெய்வங்கள். பலவிதமான கோயில்கள். பல்லாயிரக் கணக்கான வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், இவற்றிற்கிடையே உருவாகி இருக்கின்ற ஏராளமான வேறுபாடுகள், அதனால் ஏற்படுகின்ற சந்தேகங்கள், சண்டைகள். இவற்றால் கடைசியில் மன அமைதியின்மை. இவையெல்லாம் அறியாமையால் விளைகின்ற தவறுகள்.

பார்வைகளை மாற்றி அமைக்க வேண்டும். உடலால் பார்க்கின்ற பார்வை, மனதால் பார்க்கின்ற பார்வை, புத்தியால் பார்க்கின்ற பார்வை என்றெல்லாம் இருக்கிறது. ஆத்மாவால் பார்க்கப் பழக உதவுவது தான் வேதாந்தம். அது ஆன்மீகப் பார்வை. ஆன்மீகவாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இந்தப் பார்வை மாற்றம் தான். மற்றவர்கள் பிள்ளையாரை வெறும் கடவுளாக மட்டும் பார்ப்பார்கள். ஆன்மீகவாதிகள் பிள்ளையாரை, இது ஓம் என்கின்ற பிரணவ சொருபம். நமக்குள் குண்டலினி சக்தியாக விரிகின்ற ஒன்று என்று பார்க்கிறார்கள்.

புராணத்தில் கணபதி என்று ஒரு பாத்திரம் வருகின்றது. கணங்கள் என்றால் விதைகள். ஐம்பூத சக்திகள் விதை வடிவில் இருக்கின்ற நிலை கணம் என்று குறிப்படப்படுகிறது. தேவ கணம் என்றால் தெய்வீகக் குணங்கள் நிரம்பிய ஜீவன் என்று பொருள். மனித கணம் என்பது மனிதத் தன்மையுடன் கூடியது. அசுர கணம் என்றால் முரட்டுத்தனத்துடன் கூடிய குணங்கள். இப்படிப்பட்ட இந்த கணங்களுக்கு அதிபதி ஓம் என்னும் பிரணவம்.

இந்த ஓங்காரத்திற்கு ஒரு வடிவம் கொடுத்து அதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி கணாதிபதி, கணபதி என்று உருவாக்கியுள்ளனர். ஓங்காரத்திற்கு உருவம் இல்லை. அதற்கு ஓர் உருவம் கொடுத்து அதைக் களி மண்ணால் உருவாக்கி, மிக இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை அதற்குப் படைத்து, வழிபட்டுக் கடைசியில் வழிபட்ட அதையே கொண்டுபோய்க் கடலில் அல்லது ஏதாவது ஒரு நீர்நிலையில் போட்டுவிட்டு வந்துவிடக் கூடிய ஓர் இந்துவின் மனப்போக்கு வேறு எந்த மதத்திலாவது இருக்கின்றதா என்றால் இல்லை. ஏனெனில் உருவ வழிபாடு என்பது ஓர் இந்துவிற்கு நம்பிக்கைக்கும் பிடிப்பிற்கும் தானே தவிர எதுவுமே நிலையில்லை என்ற இறுதி உண்மை அவர்களுக்குத் தெரியும்.

ஆத்மா படைப்பிற்காக சிவமாகவும், சக்தியாகவும் பிரிந்து நிற்கின்றது. சுழி முனையில் சிவமாகவும், மூலாதாரத்தில் சக்தியாகவும் அது உறைந்து நிற்கிறது. அது ஜீவ அணுக்களாகப் பாலுறவு சுரப்பிகளுக்கு உள்ளே தென் மேற்கு மூலையில் இருக்கிறது. மூலாதாரத்தில் அது ஆக்க சக்தி. பிறப்புறுப்பின் வழியே அது வரும்போது தான் பிள்ளைப்பேறுக்கான சக்தியாகிறது. மணிபூரகத்தில் வரும்போது அது சூரிய சக்தியாக இயங்குகிறது. இதயத்தில் வரும்போது அது கருணை மயமாகிறது.

சுஷூக்தி என்ற சக்கரம் இருக்கின்ற தொண்டைப் பகுதியில் அது ஏறி வருகின்றபோது பேச்சாற்றலாக வெளிப்படுகின்றது. அந்த சக்தி நெற்றிக்கு வரும்போது ஆக்ஞா சக்கரத்தில் ஆணையிடுகின்ற வலிமை உருவாகின்றது. ஒன்றைத் தீர்மானிக்கின்ற திறமையாக அது வெளிப்படுகின்றது. அதற்கும் மேலே தலைக்குப் போனவுடன் அது பிரபஞ்சத்தோடு, தெய்வீக சக்தியோடு இணைந்து, கலந்து விடுகின்ற நிலை ஏற்பட்டு விடுகிறது.

அந்நிலை வாய்த்து விட்டால் பிறகு பிறப்பில்லை. சிவம் சஹஸ்ராரம் என்ற தலைப் பகுதியில் ஒளியாக நிற்கிறது. கீழே மூலாதாரத்தில் ஆக்க சக்தியாக இறங்கியிருந்த சக்தி படிப்படியாக ஒவ்வொரு சக்கரமாக ஏறி ஒவ்வொரு ஆற்றலை வெளிப்படுத்திக் கடைசியில் சஹஸ்ராரத்தில் ஒளியாகிய சிவத்தில் கலக்கின்றது. இந்த நிலைதான் சிவசக்தி ஐக்கியம். இதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருவது ஏனென்றால் இதுதான் நாம் செய்ய வேண்டிய உண்மையான ஆத்ம சாதனை.

இந்த ஆத்ம சாதனை பிள்ளையாரிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. மூலாதார கணபதி என்று சொல்கின்றார்களே, அதன் பொருள் இதுதான். சக்தியாய்க் கீழே கிடப்பதை மேலே ஏற்றத்தான் பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடுவது என்ற பழக்கம். காதைப் பிடித்துக்கொண்டு அரைவாசி உட்கார்ந்து எழுகின்ற பயிற்சி, உடலைக் குலுக்கிக் குண்டலினியை மேலே எழுப்பத்தான். சிதறு தேங்காய் அடித்தல் என்ற செயல் எதற்காக என்றால், கால்களை ஊன்றி உந்தித் தேங்காயை ஓங்கி அடிக்கின்ற போது குண்டலினி மேலே ஏறும். கிரிக்கெட் பந்தை வீசிப் போடுகின்ற போதும் அது ஏறும். கயிறு தாண்டுதல் என்ற பயிற்சியும் குண்டலினியை உயர்த்தும்.

மனித மனம், தான் உயர்ந்துள்ள அளவிற்குத் தான் செயல்படும். குண்டலினி சக்தி நிலைபெற்றுள்ள இடத்திற்குத் தகுந்தபடி தான் ஒருவரது வாழ்க்கை அமைந்திருக்கும். இயற்கையால் அமைக்கப் பட்டிருக்கும் இந்தச் சக்தி அடுக்குகளின் அடிப்பாகம் பூமி. இந்த பூமி என்பது நிலமும், தண்ணீரும் சேர்ந்தது.

சாதாரண மனிதர்கள் தான் இவை இரண்டிற்காகவும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்களே தவிர அமைதியை விரும்புபவர்கள் கருணையும் அன்புமாகப் பிரச்னையை அணுகத் துவங்கி விட்டனர். இயற்கைச் சக்தி தற்போது பேரழிவுகளை உண்டாக்கிக் கொண்டு வருவது கூட இந்த அன்பும் கருணையும் கொண்ட நிலைக்கு மனிதர்களை உயர்த்த வேண்டும் என்பதற்காகத் தான். அழிவை நோக்கிப் போகின்றபோது தான் ஆசைகள் அழிந்து, ஏற்படுகின்ற பயத்தில் அன்பும் கருணையுமாகத் தன்னை வெளிப்படுத்துகின்ற தன்மை ஒருவனிடத்தில் உண்டாகும்.

எனவே ஆத்ம சாதகர்கள் தம்மையும், தம் பிறவியின் நோக்கத்தையும் புரிந்துகொண்டு இனியும் உலகம் போகின்ற போக்கில் போக விரும்பாமல் தன்னில் தான் மூழ்கிப் பூரணத் தன்மையுடன் கூடிய விழிப்புணர்வை வைத்திருக்க வேண்டும். தமக்குரிய கடமைகளைச் செய்கின்றபோதே அவர்கள் அவற்றில் ஒட்டாமல் பரிணாமத்தில் முன்னேறுகின்ற வழிகளில் தம் கருத்தையும் கவனத்தையும் செலுத்திப் பொருள் புரியா வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழப் பழக வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *