வியாச பூர்ணிமா

இந்தியாவின் வட மாநிலங்களில் குருவிற்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அறியாமை என்னும் இருளை நீக்கி சத்திய ஒளியைத் தரிசிக்க வைக்கின்ற குருவை வட இந்தியர்கள் தெய்வத்திற்கும் மேலாக வைத்து மதித்துப் போற்றிக் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆதி காலத்தில் ரிஷிகள் தான் குருவாக இருந்து குருகுல முறையில் வேத சாஸ்திரங்களையும், உபநிஷத்துக்களையும், புராணங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை கலைகளையும் மாணவர்களுக்குப் போதித்தனர். இவ்வகையில் வேதங்களை ஒன்று திரட்டி அவற்றைத் தொகுத்து நான்கு வேதங்களாக்கி நமக்குக் கொடையாக அளித்தவர் வியாசர். எனவே சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஆதி குரு வேத வியாசர் என்றே கூறலாம்.

வேதங்கள் பிரம்மாவைத் தான் ஆதி குரு என்று சொல்கின்றன. பரம்பொருள் அளித்த வேதங்களின் துணை கொண்டு பிரம்மா படைப்புத் தொழிலைத் துவங்கினார். பிறகு சூரியனைக் குரு என்று குறிப்பிட்டனர். அதன் பிறகு தென்திசைக் கடவுளான தட்சிணாமூர்த்தியைக் குருமூர்த்தி என்று கூறி, அவரிலிருந்து தான் குரு சிஷ்ய பரம்பரை உருவாயிற்று என்று கூறுகின்றனர். குரு தட்சிணாமூர்த்திக்கு சனகர், சனாதனர், சனத் குமாரர், சனந்தனர் என நான்கு சிஷ்யர்கள் இருந்தனர் என்றும், மௌனத்தாலேயே குரு அவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இப்படி வந்த குரு பரம்பரையில் மறைபொருளாய் இருந்த வேதங்களை முறையாக வெளிப்படுத்தி, அவற்றை உரிய முறையில் தொகுத்து, மனித சமுதாயத்திற்கு சனாதன தர்மத்தை உருவாக்கியவர் மகரிஷி வியாசரே ஆவார். வியாசர், வசிஷ்டர், விசுவாமித்திரர், துரோணாச்சார்யர் எனக் குரு பரம்பரை நீண்டுகொண்டே வந்து இன்று வரை இருக்கின்ற குரு பரம்பரையாக விளங்கி வருகின்றது. இது ரிஷி பரம்பரை.

தமிழர்களுக்கு வியாசரைப் பற்றி இன்னமும் சரியாகத் தெரியவில்லை. ஆன்மீக அடிப்படையில் இந்த வாழ்க்கையை நிறைவுடன் வாழ்வதற்கு அடித்தளமாக வேதங்களைத் தொகுத்து அளித்த அரும் பணியைச் செய்தவர் வியாசர் என்றாலும் அவருக்கு அது மட்டும் திருப்தியளிக்காமல் வேத உண்மைகளை அடிப்படையாக வைத்து 18 புராணங்களை எழுதி, அதற்கும் மேலாக மகா பாரதம் என்ற மாபெரும் இதிகாசத்தையும் இயற்றிய பெருமைக்குரியவர் வியாசர். பாரதத்தின் பெருமை மிகு வரலாற்றை, அதன் விழுமிய தர்மச் சிறப்புகளை மகா பாரதம் வெகு விரிவாக எடுத்துரைக்கின்ற ஒன்று.

இந்த மகா பாரதத்தை வியாசர் எழுதியதால் தான் எது தர்மம், எது நியாயம், எவையெல்லாம் செய்யக்கூடாது, போன்ற நியதிகள் எல்லாம் நமக்குத் தெரிய வந்தன. பகவத்கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் போன்ற அரிதான பொக்கிஷங்கள் எல்லாம் மகா பாரதத்தில் ரத்தினங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை அறிந்தாலே போதும். வாழ்க்கை நெறி மிக அற்புதமாக அமையும். இப்படி எவ்வளவோ தர்ம நியாயங்களைப் போதித்தும் திருப்தி அடையாமல் வியாசர் பிறகு ஸ்ரீமத் பாகவதம் என்னும் பக்தி மார்க்கத்தையும், கலியுகத்தில் மக்கள் எளிய வழியில் மனதை ஆன்மீகத்தில் ஒருமைப்படுத்துவதற்காக எழுதினார்.

நான்முகனான பிரம்மாவிற்கே முழு வேதங்களின் அளவு என்ன என்று தெரியாது. இந்நிலையில் நாராயணனே வியாச முனிவராக அவதரித்து வேதங்களைக் கொஞ்சம் சொல்லி வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. வியாசருக்கு பைலர், வைசம்பாயணர், ஜைமினி, சுமந்து என்று நான்கு சிஷ்யர்கள் இருந்தனர். வியாசர் அவர்களுக்குத் தான் கண்டறிந்த வேத உண்மைகளை மீண்டும் மீண்டும் சொல்லித் தந்தும், அவற்றை முழுவதுமாகப் பயின்று புரிந்து கொள்ள இயலாமல் சிஷ்யர்கள் சிரமப்பட்டனர்.அதைக் கண்ட வியாசர் அவர்களிடம் வேதங்களின் பரிமாணத்தைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

முன்னொரு காலத்தில் பரத்வாஜர் என்ற முனிவர் பிரம்ம தேவனைக் குறித்துத் தவம் செய்தார். பிரம்மதேவன் அவருக்குக் காட்சியளித்ததும் அவர், தான் பிரம்மசாரியாக இருந்து வேதங்கள் அத்தனையையும் கற்க வேண்டுமென்றும், தாங்கள் தான் அதை எனக்குக் கற்பிக்க வேண்டுமென்றும் வேண்டினார். அதற்குப் பிரம்மா, வேதங்கள் எவ்வளவென்று எனக்கே தெரியாது. அவை எண்ணிக்கையில் அடங்காதவை. ஆனால் அவற்றின் பரிமாணத்தை உனக்குக் காட்டுகிறேன் என்று சொல்லி ஞானப் பார்வையில் காட்ட அவை கோடி சூரிய பிரகாசமுள்ள மூன்று பெரிய மலைகளாகக் காணப்பட்டன.

அவற்றைக் கண்டு திகைத்துப்போன பரத்வாஜர் பிரம்மாவை வணங்கித் தன்னை மன்னிக்கும்படியும் தான் மிகவும் ஆசைப்பட்டுவிட்டதால் பிரம்மாவிற்கு விருப்பமான அளவில் வேதங்களைக் கற்றுக் கொடுக்கும்படியும் பக்தியுடன் கேட்டுக்கொண்டார். பிரம்மா அந்த மூன்று குவியல்களிலிருந்து மூன்று கைப்பிடி அளவு எடுத்து அவரிடம் கொடுத்து அவற்றைப் பயிற்சி செய்யும்படி சொன்னார். அதைத் தாமும் அறிந்துகொண்டு அந்த மூன்று வேதங்களிலிருந்து மந்திரங்களை மட்டும் தனியாகப் பிரித்து நான்காவது வேதமாகச் செய்ததாகவும் அவையே ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் என்றும் வியாசர் தம் சீடர்களுக்குச் கூறினார்.

நான்கு வேதங்களிலும் இருந்து நான்கு மகா வாக்கியங்கள் பிரம்மாவால் உச்சரிக்கப்பட்டன என்று அந்த நான்கு வாக்கியங்களையும் வியாசர் எடுத்துரைத்தார். அவை பிரக்ஞானம் பிரம்மம், அயம் ஆத்மா பிரம்மம், தத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி என்பனவாகும். பின்னர் வியாசரே பைலர் என்ற சீடருக்கு ருக் வேதத்தையும், வைசம்பாயணருக்கு யஜூர் வேதத்தையும், ஜைமினிக்கு சாம வேதத்தையும், அதர்வண வேதத்தை சுமந்து என்ற சீடருக்கும் முறையாகக் கற்பித்தார். அதன்பின் வியாசர் அந்த வேதங்களை இந்தப் பூமி முழுவதும் பரப்பும்படி தன் சிஷ்யர்களிடம் கூறினார்.

வேதங்களை வெளிப்படுத்தி அவற்றை மிக விரிவாக வகைப்படுத்தித் தம் சீடர்களுக்கு போதித்ததனால் அவர் வேத வியாசர் என அழைக்கப்பட்டார். இது ஒரு புராணக் கதைதான் என்றாலும் இதன் உட்பொருளைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்று ஔவையார் சொல்லியிருக்கிறார். பிரம்ம தத்துவம் அறிதற்கு அரிதானது. அவரவர் அனுபவத்திற்கேற்ப ஆத்ம அறிவிற்குப் பிரம்ம தத்துவம் விரியும். வியாசர் தம் தவத்தால் கைவரப்பெற்ற உள் தொடர்பால் தெய்வீக சக்தி தமக்களித்த உண்மைகளைப்பற்றியே இவ்வாறு புராணக்கதையாக வெளிப்படுத்தி இருக்கிறார். பிரபஞ்ச ரகசியம் மிகக் கொஞ்சமாகத்தான் வெளிப்பட்டிருக்கிறது: இன்னும் அறிய வேண்டிய உண்மைகள் மலைபோல் குவிந்திருக்கின்றன என்பது தான் இதன் உட் பொருள்.

வியாசர் சிரஞ்சீவி. இவர் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆதி சங்கரர், மண்டன மிகிரர் என்பவரை வாதத்தில் வெல்லப் போகுமுன் வியாசரை சந்தித்து உரையாடி மீமாம்சத்தில் பல ஐயங்களைப் போக்கிக் கொண்டார் என்பது வரலாறு. வட இந்தியாவில் வியாச குகை என்று இன்றும் இருக்கிறது.

மகா பாரதத்தில் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வியாசரைப் பற்றி பீஷ்மர், நாராயணனின் அம்சமும், சக்தியின் பேரனும், பராசர முனிவரின் மகனுமாகிய வியாசரை வணங்குகிறேன்! என்று கூறுகின்றார். வியாசர், பராசர முனிவருக்கும் சத்தியவதிக்கும் மகனாகப் பிறந்தவர். சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தவர்.

வியாசர் மகா பாரதத்தை இயற்றியபோது, அவர் சொல்வதைக்கேட்டு விநாயகர் தான் பொருள் புரிந்து அத்தனை சுலோகங்களையும் எழுதினார் என்று சொல்லப்படுகின்றது. வியாசர் 18 வகையான புராணங்களை எழுதியதால் தான் இந்து தர்மத்தில் ஏகப்பட்ட தெய்வங்களும் அவற்றிற்குரிய ஏராளமான கதைகளும் உருவாகி, அவற்றின் உள் தத்துவங்கள் புரியாததால் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன என்று கூறலாம். தத்துவத்தைக் கதைகளாக விளக்கப்போய் இப்போது தத்துவம் தெரியாமல் மக்கள் கதைகளோடு மட்டும் நிற்கின்றனர்.

ஆனால் அதே சமயம் புராணங்களின் வாயிலாகத்தான் இந்துக் கலாச்சாரம் வெளிப்பட்டது என்பதும் உண்மை. சாதாரண மக்கள் தர்மப்படி வாழ்ந்தால் வாழ்க்கையை வெல்லலாம் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்வதற்காக அவர் அவற்றை எழுதி வைத்தார். மக்களோ கதைகளைப் பிடித்துக்கொண்டு சண்டை போடுகிறார்களே தவிர, தர்மப்படி வாழ முயற்சிக்கவில்லை.

இந்தியாவில் புராணக்கதைகளின் பிரவசனம் இன்றும் மிக உயரிய நிலையில் மக்களால் போற்றப்படுகின்றன. இராமாயணம், மகா பாரதம் போன்ற இதிகாசங்கள் பேசப்படும்போது லட்சக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடி, இருந்து அந்தக் கதைகளைப் பக்திப் பரவசத்துடன் கேட்டு மகிழ்வார்கள். புராணக் கதைகளை அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளால் எடுத்துக்காட்டுகளாக சாதாரண மக்கள் பயன்படுத்திப் பேசுவது இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இராமாயணம், மகாபாரதக் கதைகளை எந்தக் காலத்திலும் யாராலும் அழிக்க முடியாது. குணங்களை வைத்துத்தான் அவற்றில் கதா பாத்திரங்கள. சகுனி, கூனி, தருமர், ராமன், லட்சுமணன், சீதை, கைகேயி, தாடகை, பாஞ்சாலி போன்ற குணங்களை உடையவர்களை இந்தப் பெயர்களால் தான் மக்கள் இன்றும் குறிப்பிடுகின்றனர். ராமனுக்கே அவ்வளவு கஷ்டம் வந்ததென்றால் எனக்கு வந்தது ஒன்றும் பெரிதல்ல – என்று சொல்கின்றனர். இந்தக் கதைகளைத் தொடர்ந்து கேட்கின்ற மனித மனம் அதில் சென்று படிந்து சமாதானப்பட்டு அமைதியடைகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தர்மத்தைப் பற்றிய சகல விஷயங்களும் வியாசரால் எழுதப்பட்டிருக்கின்றன.

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்கும் உரிய நெறிமுறைகளை ஆத்மா சார்ந்த தர்மநெறி வாழ்க்கையை அவர் புராணங்களில் கதைகளாகக் கதாபாத்திரங்களாக அமைத்துத் தந்தார். இன்றைய நமது இந்து மரபிற்கு வித்திட்டவரான, ஆதியும் மூலமுமான குருவாய்த் திகழ்கின்ற வியாரை நாம் நன்றியுடன் போற்றித் துதிக்க வேண்டும். அவரைப்பற்றி மேலும் மேலும் அதிகத் தகவல்களை மிகத் தெளிவாகக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். வடமொழியிலிருந்து உண்மைகளை எடுத்துத் தமிழில் நமக்கு வழங்கிய கம்பரையும், திருவள்ளுவரையும் கொண்டாடுகின்ற நாம் இவர்கள் பயின்ற வேதங்களை வடிவப்படுத்தித் தந்த வியாசரைப் பற்றியும் நன்கு தெரிந்து வணங்க வேண்டும். வியாசர் இல்லையேல் நமது சனாதன தர்மத்தின் பெருமையும், உயர்வும், சிறப்பும் இந்த அளவிற்கு வெளிப்பட்டிருக்காது. வேத விற்பன்னராகத் திகழ்பவர்களுக்கு வியாசர் தான் மிகச் சிறந்த வேத வழிகாட்டியாக விளங்குகின்றார்.

கனடாவில் உள்ள தமிழ் மக்களுக்கு வியாசரைப் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கனடா யோக வேதாந்த நிறுவனம் ஆண்டு தோறும் வியாச பூர்ணிமாவைக் குரு பூர்ணிமாவாகக் கொண்டாடி வருகின்றது. குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகின்ற வியாச பூர்ணிமா, சாதுர்மாஸ்ய ஆரம்ப காலத்தில் வருகின்ற ஆனி மாதப் பௌர்ணமி திதியில் ஒரு சிறந்த பண்டிகையாக வைக்கப்பட்டிருக்கிறது. ஜூன் தொடங்கி நான்கு மாதங்களை சந்நியாசிகள் சாதுர் மாஸ்ய விரதம் என்று சொல்லி எங்கும் யாத்திரை செல்லாமல் ஒரே இடத்தில் தங்கி தியானம், தவம், பூஜை, விரதம் போன்ற நியமங்களைக் கடைப்பிடிப்பார்கள். ஆத்மீக சாதனைகளைத் தீவிரமாக மேற்கொள்வதற்கு இந்த நான்கு மாதங்களும் சிறந்தவை. மற்றொரு விதத்தில் பார்த்தால் விண்ணில் பரவியிருக்கின்ற தெய்வீக சக்தி ஒன்று குவிந்து மழை மூலமாகப் பூமிக்கு இறங்கி வருகின்ற மாதங்கள் இவை. அப்படி வருகின்ற அந்த ஈதரிக் எனர்ஜி, ஆன்மீக சாதனைகளை ஒரு முனைப்புடன் கூடுதலாகச் செய்கின்றபோது அப்படிச் செய்பவரின் மரபு அணுக்களை மாற்றி, உயர்த்தி அமைக்கும்.

குரு பூர்ணிமா என்பது குருவின் பெருமைகளை, உயர்வை உணர்ந்து அவரைப் போற்றித் துதித்துப் பூஜைகள் செய்து சிஷ்யர்கள் நன்றியையும் காணிக்கைகளையும் செலுத்தி மகிழ்கின்ற ஒர் உணர்வு பூர்வமான நன்னாள்.

ஓர் ஆத்ம சாதகனின் வாழ்க்கையில் குருவின் ஸ்தானம் மிக முக்கியம். குருவின் பெருமையை விவரிக்க இயலாது. குருவே பிரமன், குருவே விஷ்ணு, குருவே மகேஸ்வரன் என்று வேதங்களே குருவைப் புகழ்கின்றபோது, நாம் என்னவென்று சொல்வது? பல நூறு பிறவிகளாய்த் தான் யாரென்று தெரியாமல் அறியாமையால் அல்லல்பட்டுப் பிறவிகள் தோறும் கர்ம வினைகளைச் செய்து துக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டு, ஒரு பிறவியில் வாழ்க்கையில் விரக்தியுற்றுக் குருவைத் தேடிச் சரணடைந்தவனை அவர்தான் அணைத்து எடுத்து அருகில் வைத்து, ஆறுதல் படுத்தி, உண்மையில் அவன் யார், அவனது உண்மைத் தன்மை என்ன, எதனால் அவனுக்கு இத்தனை துயரம் ஏற்பட்டது, உண்மையில் துயரம் என்பது துயரம் தானா? அவன் அவற்றிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் போன்ற விபரங்களையெல்லாம் வேத உண்மைகளை அடிப்படையாக வைத்து எடுத்துரைத்து அவனுக்கு ஞானப் பாதையைத் திறந்து விடுகின்றார். அந்தப் பாதையில் தானே ஒளி விளக்காய் இருந்து வழி காட்டுகிறார். அஞ்ஞானம் என்னும் இருட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜீவனை ஞானமென்ற ஜோதியைப் பிரகாசிக்கச் செய்து எழுப்பி விடுபவர் குருவே ஆவார். ஒரு குருவால் தான் மனித மனதை மாற்றி அமைக்க முடியும். தான் தன் நிலையில் இருந்துகொண்டு, அறியாமையால் கீழ்நிலையில் இருப்பவரைத் தன் உபதேசத்தால் உயர்த்தி, மாற்றியமைக்கின்ற ரஸவாதியாகக் குரு செயல்படுகின்றார்.

குரு உண்மையில் நிலைத்து நிற்பவர். அவர் தான் சத்தியத்தில் நிலைத்து நின்றுகொண்டு மற்றவரை மாற்ற முடியும். ஆனால் அவர் மாறக்கூடாது. எப்படி சிந்தாமணி என்ற அபூர்வமான ரத்தினம் தன்னைச் சேர்ந்த இரும்பினைத் தங்கமாக மாற்றுகிறதோ அதுபோல் குரு தன் மாணவனை உயர்த்துகின்றார். ஓர் ஆத்ம சாதகன் படைப்பையும், தன் நிலைமையையும், படைப்பின் உயர் பரிணாமத்தையும் புரிந்துகொள்ளக் குருவே காரணம். நாம் நம் நிலையையும், பூரணத்தையும், அதன் படிமுறை வளர்ச்சியையும் பற்றித் தெரிந்துகொள்ள, வேதங்கள் சொல்லிய உண்மைகளைத் தனதாக்கிக்கொண்டு, அவற்றை எளிமைப்படுத்தித் தெளிவாகக் குரு தான் உபதேசிக்கிறார்.

அவதார புருஷர்களான ராமர், கிருஷ்ணர், ஆதி சங்கரர் போன்றவர்கள் கூட ஒரு குருவிடம் சென்று தங்கி வேதம், சாஸ்திரம் எல்லாம் பயின்றார்கள். குரு குலத்தில் தங்கிக் குருவிற்குப் பணிவிடை புரிந்து, ஓர் ஆசிரமத்தில் புரிய வேண்டிய வேலைகள் அனைத்தையும் ஈடுபாட்டுடன் செய்து, குலக்கல்வியையும், வேத சாஸ்திரங்களையும் கற்பதே குருகுலத்தில் ஒரு மாணவனின் கல்விமுறை. அவர்கள் பசுக்களை மேய்க்க வேண்டும், தர்ப்பைப்புல் சேகரித்து வர வேண்டும். யாகம், பூஜைக்குத் தேவையான உபகரணங்களைத் தயாரிக்க வேண்டும். சமையலுக்கு வேண்டிய தானியங்களையும், உணவுப் பொருள்களையும், விறகுகளையும் கொண்டு வர வேண்டும். குருவின் குறிப்பறிந்து எல்லாம் செய்ய வேண்டும். இவ்வாறு குருவின் நேரடிப் பார்வையில் மாணவனின் வாழ்க்கை நெறிப்படுத்தப்பட்டது. சகல சாஸ்திரங்களிலும் பயிற்சி என்பது தான் நேரடி குருகுலக் கல்விமுறை.

குரு உளவியல் தெரிந்தவராக, மாணவனின் தகுதி, திறன் அறிந்து அவரவர் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப ஞானத்தைப் போதிக்க வேண்டும். தான் சொல்பவற்றை இவன் விளங்கிக்கொள்வானா என்ற புரிதல் குருவிற்கு இருப்பதால் அவர் அதற்கேற்பத்தான் சீடனைக் கையாளுவார். குருவிற்குத் தான் இது புரியும். சீடனால் தன் குருவைப் புரிந்துகொள்ள முடியாது.

கு..என்ற எழுத்து சித்தி. ர..என்பது பாபங்களைத் தடுப்பது. உ.. என்பது விஷ்ணு ஸ்வரூபம். இம்மூன்றும் சேர்ந்து குரு என்ற சப்தமாகிறது. கு..என்றால் இருட்டு. ரு..என்றால் விலக்குபவர். அறியாமை என்ற இருளை விரட்டுபவர் குரு என்றும் சொல்லப்படுகிறது. ஒருவனுடைய தந்தை, தாய், குரு, ஈஸ்வரன் ஆகியவர்களுக்கும் குரு சப்தம் இருக்கிறது. ஒரு வேளை ஈஸ்வரன் நம்மீது கோபமடைந்தாலும் குரு நம்மை ரட்சிப்பார். ஆனால் குரு நம்மீது கோபமடைந்தால் மும்மூர்த்திகளாலும் ரட்சிக்க முடியாது. ஒருவனுக்குக் குரு கிடைத்தால் தெய்வ அருள் கிடைக்கும். வித்தை, வேதம், ஞானம், விரதம், யாகம், சாஸ்திரம் முதலியவற்றைக் குரு இல்லாமல் அறிய முடியாது. பக்தி, வைராக்கியம், விவேகம், தர்ம மார்க்கம் இவைகளைக் காட்டக்கூடியவர் குரு ஒருவரே. குருவை ஒளிவடிவமாகக் கருத வேண்டும். குரு நமக்குக் காதுகளின் வழியாக அதாவது சிரவணத்தின் மூலமாக எல்லா வித சாஸ்திரங்களையும் கற்றுத் தருகின்றார். அதனால் நாம் எல்லாவித சித்திகளையும் பெற்றுக் கடைசியில் சம்சாரம் என்ற கடலைத் தாண்டுகின்றோம். இவ்வாறு நமது சனாதன தர்மநெறி கூறுகின்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆடி வரக் குரு கிடைப்பார் என்ற தொன்மொழி நாம் அனைவரும் மிக நன்றாக அறிந்த ஒன்று. ஒருவன் செய்த பூர்வ ஜன்மப் புண்ணியத்தாலும், ஒரு ஜீவன் தன்னை யார் என்று அறிய வேண்டும் என்ற தாகத்துடன் தெரிந்தோ தெரியாமலோ இறைவனிடம் சரணடைந்தால் இறைவன் அருளால் அவனுக்குரிய குரு நிச்சயம் கிடைப்பார். ஒரு சீடன் பிறக்கின்றபோதே தனக்குரிய குரு அவனுக்காகக் காத்திருப்பார். எப்படிச் சென்று சேர்கிறோம் என்பதுதான் நமது பாக்கியம்.பெரும்பாலும் அமைதி பெற வேண்டும் என்கிற தற்காலிக சாந்திக்காகப் போலித்தனமான வழிகாட்டிகளைத் தவறாகத் தம் குருவாகத் தேர்ந்தெடுத்து விடுகின்ற அபாயம் நேரிட்டு விடும். அதனால் ஆத்மீகத் தாகம் கொண்டவர்கள் அவசரப்படாமல், உரிய காலம் வரும் வரைப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். காலமும் நேரமும் சேர்கின்றபோது நமக்குரிய அருள் நம்மை வந்து சேரும். யாரைச் சந்தித்த பிறகு நம் மனதிலிருந்த சந்தேகங்கள், குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து மனம் தெளிந்து சாந்திமயமாகின்றதோ, அதன்பின் எந்தவிதத் தேடலுமின்றி அமைதியடைந்து விடுகின்றதோ அப்படிப்பட்டவரே நமது குருநாதர் ஆவார்.

இவ்வாறு வியாஸரின் பெருமைகளையும், குரு பரம்பரையின் சிறப்பையும், குருவின் உயர்வையும் புரிந்துகொண்டு, குரு பூர்ணிமாவை இனியாவது குருவின் சேவையைப் போற்றி வழிபடுகின்ற உன்னத நன்னாளாக மாற்றி, ஆத்ம சாதனையில் மேம்படக் குருவின் ஆசிகள் சாதகர்களுக்குக் கிட்டட்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *