தெளிந்த நல்லறிவு

அஞ்ஞானம் என்பது பிறர் செய்வதைப் பார்த்துச் செய்வது. அது இயந்திரத்தனமான இயக்கம். ஞானம் என்பது நான் எதற்காகச் செய்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு செய்வது. இப்படி ஞானத்துடன் செயல்படுதலைப் புரிந்து செயல்படுதல் என்றும் கூறலாம். சில செயல்களை ஏன் செய்கிறோம் என்பதைப் பற்றி யோசிக்காமல் திரும்பத் திரும்ப செய்துகொண்டு போகின்ற நிலையில் அவை இயந்திரத்தனமாகப் பழக்கத்தால் செய்பவையாக ஆகிவிடுகின்றன. உணர்வு இல்லாவிட்டால் அது புரிதலாக மாறாது. இதுவரை செய்து வந்த பல செயல்களைத் தெளிந்த அறிவைப் பெற்றபிறகு, அவற்றின் உண்மைத்தன்மை புரிந்துகொள்ளப்பட்டு செய்யப்படவோ அல்லது செய்யாமல் விடுகின்ற தன்மையோ நம்மில் ஏற்பட வேண்டும். நம் மனப் பெட்டகத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

குருவால் அருளப்படுகின்ற ஞான உபதேசங்கள் திரட்டிய அறிவால் தரப்படுபவை அல்ல. அவை ஆத்மாவிலிருந்து வெளிப்படுகின்ற அனுபவ வார்த்தைகள். சொற்கள் என்பது புரிதலுக்காக ஏற்படுத்தப்பட்ட வாகனம். இந்தச் சொற்களின் வாயிலாக நாம் பெறுகின்ற புரிந்துணர்வு நம் செயல்களில் வெளிப்பட வேண்டும். புரிதல் வேறு, புரிந்ததை உணர்வது என்பது வேறு. புரிந்துகொண்ட விஷயங்களை உணர்ந்துகொண்டால் உடனடியாக நம்மில் மாற்றம் ஏற்பட்டுவிடும்.

ஆத்மாவிற்கும் நமக்கும் உள்ள இடைவெளி வெகு தூரம். ஆனால் பக்கம். இதன் பொருள் புரிகின்றதா? “அணோரணியான் மஹதோ மஹீயான்…” என்று ஒரு மந்திரம் இருக்கிறது. “அணுவைக் காட்டிலும் மிக நுண்ணியது. பிரம்மாண்டத்தை விட மிகப் பெரியது அது” என்பது இதன் பொருள். இதுவும் உடனடியாகப் புரியாது.

ஆன்மீக சாதகர்களுக்கு ஆத்மா மிகவும் பக்கத்தில் இருக்கிறது. சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டவர்களுக்கோ ஆத்மா என்பது வெகு தூரம். அதுபோல் ஆத்மா மிக நுண்ணியதாக எனக்குள்ளே பரம அணுவாக இருக்கிறது. அதே ஆத்மா தான் பிரம்மாண்டப் பிரபஞ்சமாக விரிந்திருக்கின்றது. இதை உணர்ந்துதான் புரிந்து கொள்ள முடியும்.

உலகப் பார்வையில் ஒரு நேரத்த்pல் எல்லாமே சலிக்கும். பார்த்தவர்களையே பார்த்தல் என்பது சில சமயம் வெறுப்பாக இருக்கும். அதையே பார்த்துப் பார்த்து அலுத்துப் போய்விட்டது என்று சொல்வார்கள். ஆனால் ஆன்மீகப் பார்வையிலோ இவை மலர வேண்டிய நிலையிலுள்ள ஆத்மாக்கள் என்பது தெரியும். இப்படிப் பார்த்துப் பழகும்போது சலிப்போ வெறுப்போ எழாது. இந்தப் புரிந்துணர்வு இருந்தால் அறிவு விசாலமடைந்து விரியும்.

ஞான உபதேசம் என்பது மூளைச் சலவை செய்வதல்ல. உலக இன்பங்களைப் பெறுவதிலிருந்து ஒருவரை விலக்கி அல்லது தடுத்து நிறுத்திக் குடும்பத்தையும் உறவுகளையும் வெறுத்து ஒதுக்கி விரக்தி அடையச் செய்வதல்ல. வாழ்க்கையின் உண்மைத் தன்மையை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு ஞானப் புரிந்துணர்வுடன் வாழ்க்கையை அன்பு கலந்த எளிய முறையில் கொண்டு செல்ல உதவுவது. சொல்லப்போனால் மாயையின் மயக்கத்திலிருந்து நம்மை விடுவிப்பது.

கம்ப்யூட்டர் படிப்பு படித்தவர்களுக்கு இங்கு சொல்லப்படுவது நன்கு விளங்கும். கம்ப்யூட்டரில் ஒரு தகவல் துளிக்கு (bit) பிட் என்று பெயர். மூன்று தகவல் துளி சேர்ந்தது ஒரு (byte) பைட். 1024 தகவல் துளி சேர்ந்தது ஒரு (kilobyte) கிலோபியட்  இதுவே பன்மடங்கு அதிகரித்தால் மெகா பைட். அதற்கும் மேலே போனால் கிகாபைட் (gigabyte). அதற்கும் மேலே போனால் ஜெராபைட் (terabyte). இந்த நிலையில் கம்ப்யூட்டரே எல்லாத் தகவல்களையும் இழுத்துத் தரும். இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு இந்த உடலைப் பார்ப்போம்.

இந்த உடல் ஒரு தகவல் பெட்டி. இதில் கோடிக்கணக்கான அணுக்கள் தகவல்களைச் சேகரித்துத் தருகின்றன. மூளையில் உள்ள எலக்ட்ரான்கள் ஒளிர்ந்து அந்தத் தகவல்களைப் பெற்று செயல்படுகின்றன. இவை அனைத்திற்கும் பின்னால் ஒரு மெகா தகவல் மையம் இருக்கிறது. அதுதான் ஆத்மா. அதன் விளையாட்டுத்தான் இந்த வாழ்க்கை.

இப்படிப்பட்ட இந்த விளையாட்டில், பிறப்புகள் தோறும் ஏற்றுக்கொண்டதை, சமுதாயத்தால் பெற்றவற்றை வைத்து நடந்துகொள்கின்ற வாழ்க்கை முறையில் தான் இன்னும் போய்க்கொண்டிருக்கிறீர்களா? அல்லது உபதேசத்தால் பெறப்பட்ட ஞானத்தெளிவினால் ஏற்பட்ட புரிந்துணர்வு தகவல் துளிகள் உங்களை வழி நடத்துகின்றதா? எது அதிக அளவில் இருக்கிறது? என்பவை இந்த இடத்தில் குருவிடமிருந்து எழுகின்ற கேள்விகள்.

குருவைச் சார்ந்து இருந்து ஞான உபதேசம் பெறுகின்ற வாய்ப்பை இழந்து போகின்ற தடை ஏதும் ஏற்பட்டால் அந்நிலையில் பெற்ற ஞானத்தைக் கைவிடாமல் அதே ஞானப் பாதையில் தொடர்ந்து போக முடியுமா அல்லது பெற்ற அனைத்தையும் தொலைத்துவிட்டுப் பழைய சமுதாயப் போக்கிலேயே இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு மனம் திரும்பி விடுமா? என்பது அடுத்த கேள்வி.

இது சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி. மனம் அப்படிப் போகாது என்று மிகச் சுலபமாகச் சொல்லி விடலாம். ஆனால் உண்மை வேறாகத்தான் இருக்கும். மாயை ஞானத்துடன் செயல்பட விடாது. சமுதாயமும் நம்மை அப்படி ஒதுங்கி இருக்க விடாது. பெற்றவற்றைத் திரும்பத் திரும்பச் சிந்தித்து, என்ன செய்தாலும் ஆத்மத் தொடர்பை விடாமல் இதே ஞானப் புரிந்துணர்வுடன் வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியுமா? அல்லது போலிகளை நம்பி ஏமாந்து திரிகின்ற நிலை ஏற்பட்டுவிடுமா? அல்லது பழைய பழக்க வழக்கங்களையே மீண்டும் மேற்கொண்டு செயல்படுவோமா? என்று பார்த்தால், உண்மையைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட்டால், அதை மனம் சரியாக ஏற்றுப் பிடித்துவிட்டதென்றால், நாம் பிழை விட மாட்டோம்.

என்னதான் சூழ்நிலை நம்மைப் பழைய பாதைக்கு இழுத்தாலும் பெற்ற ஞானத்தால்தான் செயல்பட வேண்டும். குரு வழங்கிய உபதேசத்தை உண்மையாக முழு உணர்வுடன் உள்வாங்கியிருந்தால் ஞானப் புரிந்துணர்வு நிலைத்து நிற்கும். ஞானஒளி நம்மில் என்றும் ஒளிரும். நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் பிரம்மம் கவனிக்காது. நாம் என்ன செய்கிறோம் என்பதைத் தான் நமது வளர்ச்சியாக அது கணக்கில் எடுக்கும். அது நாம் செயல்படும் விதத்தை வைத்துத் தான் தனது கருணையால் நமக்கு எதிரொலிக்குமே தவிர நமது எண்ணம் அதற்குத் தேவையில்லை. நாம் உயர்வான எண்ணம் கொண்டால் நமது செயல் உயர்வாக அமையும்.

நமக்குள் இருக்கின்ற ஆத்மசக்தியை இழுத்துத்தான் நாம் இந்த வாழ்க்கையை வாழ்கின்றோம். கோபம், ஆசை, பொறாமை, அன்பு, பொறுமை போன்ற எல்லாக் குணங்களுமே அதன் சக்தியை வைத்துத்தான் வெளிப்படுகின்றன. இந்த மனம் சமுதாயம் தந்த மனம். சமுதாயம் இந்தப் பெட்டிக்குள் போட்டவை தான் மனமாக இருக்கின்றன. அது தான் பிரச்னை தருகிறது. இந்த மனம் இல்லாமற் போனால், அல்லது இந்தச் சமுதாயம் தந்தவற்றை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வாழ்ந்தால், அவர் யோகி. அவர் என்ன சொல்வார், இவர்கள் என்ன சொல்வார்கள் என்ற மனக்குழப்பம் எத்தனையோ இரவுகளைத் தூக்கமில்லாமல் செய்திருக்கிறது அல்லவா? இனியாவது இதுபற்றிச் சிந்திக்க வேண்டும்.

என்னை நான் வென்றுவிட்டேனா? எனக்குச் சரியென்று பட்டதை என்னால் நூறுவீதம் செய்ய முடியுமா? என்று சிந்தியுங்கள். உண்மை விளங்கும். நம் உறவுகள் வெவ்வேறு கண்ணாடிகளை மாட்டிக்கொண்டு இந்த உலகத்தைப் பார்த்து ஒவ்வொருவரும் ஒவ்வொருவித அபிப்ராயங்களைக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் மாட்டியிருக்கின்ற கண்ணாடி சமுதாயக் கண்ணாடி அல்ல. ஞானக் கண்ணாடி. இதை வைத்துக்கொண்டு மற்ற உறவுகளின் போக்கில் சிக்கிக்கொள்ளாமல் தர்மப்படி வருபவற்றை மட்டும் ஏற்றுக்கொள்கின்ற உரம் நம்மில் இருக்க வேண்டும். இன்னமும் அவர்கள் சொல்கின்ற எல்லாவற்றையும் நமதாக எடுத்துச் சரியா, பிழையா என்று ஆராய்ந்து கொண்டிருக்காமல், குழப்பம் அடையாமல் தெளிவாகச் சிந்திக்க வேண்டும்.

அவர்கள் சொல்பவை சரியாக இருந்தால் ஏற்கலாம். அன்பையும் கருணையையும் வைத்துக்கொண்டு உறவுகளைக் கையாள வேண்டும். அன்பின் வெளிப்பாட்டை முழுமையாக நம்மால் வெளிப்படுத்த முடியாமல் உறவுகள் இடையிட்டுத் தடைகளை ஏற்படுத்தும். ஏனெனில் அவைகளின் பார்வை வேறு. நமது சக்தியை எந்தப் பிரச்னை தம் பால் இழுக்கின்றதோ, எந்தக் குடும்ப உறவு நம்மோடு பிரச்னைப்படுகின்றதோ அவற்றை எப்படிக் கையாள்வது என்பது நமக்குத் தெரிய வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். நாலு பேர் என்றால் அந்த நாலுபேரும் நாலுவிதமாக நடந்துகொண்டு பிரச்னைகளை எழுப்புவார்கள். அவை நமது கருத்தோடு ஒத்துப்போகாமல் முரண்பட்டதென்றால் அவர்களோடு சண்டை பிடித்துக்கொண்டு நிற்பதா? அல்லது இவர்கள் கர்மாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு நம்மளவு புரிந்துணர்வும் இல்லை. நாம் தான் எல்லாவற்றையும் அனுசரித்துப் போக வேண்டும் என்று சகித்துக்கொண்டு போவதா? ஏனெனில் எல்லாமே நான்தான் என்ற ஆத்ம உணர்வில் நின்று, பதட்டப்படாமல், பாதிப்பு அடையாமல் அந்த உறவுகளோடு சுமுகமாக உறவாட நமக்குத் தான் தெரிய வேண்டும். அப்படி நடைமுறையில் வாழ்க்கையை மன பாதிப்பு இல்லாமல், சமுதாய பாதிப்புக்கு உட்படாமல் வாழத் தெரிந்தால்தான் ஞான உபதேசம் பெற்றதன் பலன் கிடைத்ததாகப் பொருள்படும். இந்த நிலையில் நான் ஆன்மீகவாதி என்ற ஈகோ தலை தூக்கும். அந்த அகங்காரத்தையும் உடனடியாக இல்லாமற் செய்துவிட வேண்டும்.

நமது சக்தியை நாம் ஒன்று குவிக்க உதவுபவை தவமும், தியானமும். அதற்குத் தனிமையும், அமைதி நிலையும் தேவை. ஆனால் சமுதாயத்திற்கு நடுவில் குடும்பம் நடத்துகின்ற சூழ்நிலையில் இத்தகைய தனிமையும் அமைதி நிலையும் கிடைக்குமா? உறவுகள் நமது சக்தியை இழுத்துப் பிரச்னைப்படுத்தாமல் ஒதுங்கி இருக்குமா? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் எத்தனை எத்தனை பிரச்னைகள்? தடைகள்! எதிர்பாராத நிகழ்வுகள்?! இவற்றிற்கிடையில் ஆன்மீக சாதகர்களின் தியானமும், ஞான சாதனையும் எந்த அளவிற்குத் தடையின்றி முன்னேறிச் செல்ல முடியும்? நன்றாக யோசித்துப் பார்த்தால் தான் அணு அணுவாக முன்னேறுகின்ற வளர்ச்சிக்கு எவ்வளவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விளங்கும்.

ஆசிரமங்களில் தியானம் செய்கையில் இயற்கையும் ஒத்துழைக்கும். மிருகங்கள் கூட ஒலியெழுப்பிச் சலனப்படுத்தாமல் அங்கு மிக அமைதியாய் இருக்கும். ஆனால் வீட்டுச் சூழ்நிலையில் இந்த அமைதி இருக்காது. அமைதியில்லாத ஓர் அமைப்பில் அமைதியைப் பெற முயற்சிப்பதுதான் ஆத்ம சாதனை.

நமது கரு அணுவைச் சுற்றி ஒரு லட்சம் எலக்ட்ரான்கள் அலைகளாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. இந்தப் பூமியும் ஒரு வினாடிக்கு ஒரு லட்சம் மைல் சுழல்கின்றது. எது ஓர் அணுவிற்கு நிகழ்கின்றதோ அதுதான் அண்டத்திற்கும் நிகழ்கின்றது. இது புரிந்தால் நம்மில் ஓர் அசைவற்ற தன்மை தானாக ஏற்படும்.

பிறவிகள் வழியாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற பரம்பரை எதிர்மறைக் குணங்களை மாற்றியமைக்கத்தான் ஆன்மீக சாதனை பயிலப்படுகின்றது. கோபம், பொறாமை போன்ற பிறவிக் குணங்களை நாம் நம் ஆத்மீக முயற்சிகளால் இல்லாமற் செய்ய முனைகின்றோம். இவ்வாறு குணங்களை மாற்ற முடியும் என்பது இப்போது விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

டொரன்டோ பல்கலைக்கழகம, மனித உடலில் ஆக்ஸி டாக்ஸினிலிருந்து கருணையுள்ள சிற்றணுக் கூட்டம் சின்னச்சின்னப் புள்ளிகளாக வெளிப்படுகின்றது அந்தக் கருணை அணுக்கூட்டத் துகள்கள் (empathy molecule) அல்லது துளிகள் வெளிப்பட்டால் DNA பதிவுகளை மாற்றி அமைக்கலாம். அல்லது இல்லாமற் செய்துவிடலாம் என்று ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது. மனிதன் தன்னைத் தெய்வத்தன்மைக்கு உயர்த்திக் கொள்வதற்கு உரிய எல்லா அமைப்பும் இந்த உடலில் ஏற்கனவே வைக்கப்பட்டுவிட்டது. அதைக் கண்டறிந்து வெளிப்படுத்த முயற்சிப்பதுதான் ஞானத்துடன் கூடிய தியானம் என்பது புரிகிறதா?

தண்ணீருக்கு நிறமும் மணமும் இல்லை. ஓசோனுக்கு சுவை, மணம், நிறம் ஆகியவை உண்டு. ஓசோனை ஈதரிக் எனர்ஜி என்று அழைக்கின்றனர். ஓசோனில் உள்ள ஈதரிக் எனர்ஜிதான் எம்மில் ஆத்மாவாக இருக்கிறது. அது அதிகாலையில் பூமிக்கு இறங்கி வந்து பூமியைச் சுத்தப்படுத்தி மேலே எழும்பிச் செல்கின்றது. அதனால்தான் நாம் அதிகாலைப்பொழுதை மிகப் புனிதமானதாகக் கருதுகின்றோம். பஞ்சபூத சக்திகளை நாம் அன்பு செலுத்தி, நன்றி கூறி வெல்லலாம். நம் உடலிலும் ,வெளியிலும் அவை தான் நிறைந்திருக்கின்றன.

பூமியை, மண்ணை, கல்லைத் தொட்டு வணங்குவது சிறப்பு. இவற்றைத் தொடுவதால் தான் அதன் சக்தி நமக்குள் புகும். மண்ணின் சக்தி, நமது உடலின் சக்தியாக வடிவெடுத்திருக்கிறது. இந்த உடலில் உள்ள தசையை மண் என்றும், எலும்பைக் கல் என்றும் நினைக்க வேண்டும். கல்லைக் கும்பிடுகிறார்கள் என்று பிற மதத்தினர் கேலி செய்கிறார்களே! கல்லிலே தெய்வச் சிலை செய்து அதை வழிபடுவதிலும் ஓர் அர்த்தம் இருக்கிறது என்பது விளங்குகின்றதா? கைலாய மலையையும், திருவண்ணாமலையையும், திருப்பதியையும் மக்கள் கொண்டாடுவதன் பொருள் புரிய வேண்டும்.

இதே விதத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகளையும் நாம் மதித்துப் போற்றி வணங்க வேண்டும். இந்த வழிபாடு நமது வாழ்க்கை முறையில் நடைமுறையாகச் செய்கின்ற ஒன்றுதான். செருப்பு போட்டுக்கொண்டு வயலில் நடக்கக்கூடாது என்பார்கள். தண்ணீரைப் பழிக்காதே என்பார்கள். காலையிலும் மாலையிலும் சூரியனை வணங்கச் சொல்வார்கள். தரையைக் காலால் எட்டி உதைக்காதே என்பார்கள். அப்படிச் செய்தால் தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள். இவையெல்லாம் எத்தனை உயரிய பாடங்கள்! இனி நாம் மண்ணையும், கல்லையும் தொடும்போது உணர்வுடன் தொடுவோம். ஐம்பூதங்களையும் மதிப்போம்.

இப்படி இந்த ஐம்பூதங்களை நாம் போற்றி வழிபடுகின்றபோது அவற்றின் வழியே நாம் பிரம்மத்தைத் தான் நினைக்கிறோம். வணங்குகிறோம். ஆனால் இதுவரை நாம் அப்படி நினைத்துச் செய்வதில்லை. இனி நாம் பொருள் புரிந்து இவற்றின் உள்ளே இருக்கின்ற பிரம்மத்தையும் நினைத்து இவற்றை அன்போடும், நன்றியோடும் வணங்க வேண்டும். சடப்பொருள்களிலும் பிரம்ம தத்துவத்தை உணர்ந்த மரபு, நமது சனாதன தர்ம மரபு.

எல்லோரின் உள்ளேயும் பிரம்மம் உயிர்ச்சக்தியாக இருக்கிறது. இந்தச் சக்தியைச் சிதறவிடாமல் சேமித்து ஒன்றுபடுத்த வேண்டும். மிதமான உணவு, மிதமான செயல்பாடு, மிதமான தூக்கம் இம்மூன்றும் உடல் நலத்திற்கும் நல்லது. தியான உணர்விற்கும் நல்லது. சாத்வீகக் குணம் சாதனைக்கு மிக நல்லது.

நமது நிலை உயர உயர ஐம்பூதங்களுடன் நெருக்கமாகத் தொடர்பு கொள்ள முடியும். நமக்கு ஞானத்தைத் தருவது ஆகாயம். ஒலியின் மூலமே ஞானம் பெற முடியும். இசையின் இனிமையை ஆத்ம அனுபவமாக நாதமாக ரசிப்பவர்களுக்கு ஆகாய சக்தி உயர்வாக இருக்கும். ஒலியைக் கேட்பதற்குரிய கருவி காது. இந்த ஒலியோ ஆகாயத்தின் சக்தி. நமது சமநிலைக்கு இருப்பு காதுகள் தான். மரங்கள் ஓசையின் உக்கிரத்தைக் குறைக்கின்றன. மரங்கள் மனிதனுக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கின்றன என்பதை மனிதன் ஒருநாளும் எண்ணிப்பார்த்ததேயில்லை. மரங்களைச் சுற்றி எப்போதும் ஈதரிக் எனர்ஜி இருக்கும். இயற்கை நமக்குச் செய்யும் சேவையைப்பற்றி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஆகவே இயற்கையோடு இணையுங்கள். இன்பத்தைச் சுவையுங்கள்.

ஜாதக தீபிகை என்னும் சோதிட நூலில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. அன்றாட நியம நிஷ்டைகளில் மிகவும் முறையாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகப் பிராமணனுக்குத் தினப்பலன் முக்கியம். சத்திரியனுக்குக் கணம் முக்கியம். சத்திரியனுக்கு ரஜோ குணம் மிகுந்து இருக்க வேண்டும். ஏனெனில் போர் செய்வதற்குக் குணம் முக்கியம். அடுத்து வியாபாரத்திற்கு முகராசி, கைராசி போன்றவையெல்லாம் தேவை. எனவே வைசியனுக்கு ராசி முக்கியம். உழைப்பவர்களுக்கு சாப்பாடும் அனுபவித்தலும் தான் முக்கியம். உடல் பலமும், உற்பத்திப் பெருக்கமும் பற்றி அறிய யோனியின் அமைப்பு அவசியம். அதனால் சூத்திரனுக்கு யோனியின் பலன் முக்கியம். ஆனால் இந்தக் கலியுகத்தில் எதுவுமே ஒழுங்காக, முறையாக இல்லை. எனவே ஜாதகத்தையும் முறையாகப் பார்த்துச் சரியான பலன் சொல்ல முடியாது என்பது புரிகின்றதா?

நாம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் பிரம்மத்தோடு இணைந்த உணர்வில் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு செயல் செய்வதற்கு முன்பும் ஒரு மந்திரம் சொல்ல வேண்டும் என்று இந்து தர்மம் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் ஒரு மந்திரம். குளிக்கப் போகையில் ஒரு மந்திரம். சாப்பிடும் முன் ஒரு மந்திரம். மாலையில் முறையான இறை வழிபாடு. இரவு படுத்துத் தூங்குமுன் ஒரு மந்திரம் என்று எல்லாவற்றிற்கும் ஒரு மந்திரம் இருக்கிறது.

இப்படி ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த மந்திரங்களைச் சொல்வதால் பல விதங்களில் சிதறிக் கிடக்கின்ற மனம் ஒன்றுபட்டு ஆத்மசக்தியுடன் இணைகின்றது. தெய்வத்துடன் நம்மை எப்போதும் இணைத்துக் கொண்ட நிலையில் நமது செயல்கள் ஒவ்வொன்றும் செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப் பழக்கப்படுத்தி இருக்கிறது. ஆனால் நடைமுறையில் பழக்கத்தால் வாய் மந்திரங்களை முணுமுணுத்தாலும் மனம் எங்கெங்கோ அலை பாயும்.

உணர்வால் ஒன்றிய நிலையில் நமது செயல்கள் இருக்க வேண்டும். எந்த மனநிலையில் நாம் ஒன்றை ஏற்கின்றோமோ அந்த மனநிலைக்கு ஏற்றபடிதான் நமக்கு அவை அமையும். பிரம்மார்ப்பணம் பிரம்ம ஹவிர்… என்று சொல்லி உணவை இறைவனுக்குச் சமர்ப்பித்துவிட்டுச் சாப்பிடுகின்றபோது அதில் உள்ள தோஷங்கள் விலக்கப்பட்டு அது பிரசாதமாகி விடுகிறது. இறை உணர்வோடு ஒன்றைச் செய்ய முற்படுகின்றபோது அதில் எந்தவித விக்கினமும் இல்லாமற் போய்விடுகின்றது. எவ்வளவு உயர்ந்த கலாச்சார அமைப்பு என்று பாருங்கள். சர்வம் பிரம்மம் என்பது சொல் மட்டுமல்ல. உணர்ந்து செய்தால் உணர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை உயர்வு பெறும். பிரம்மம் தன்னை நமக்குத் தரும். வெறும் சடங்குகளால் எவ்விதப் பயனும் இல்லை. உணர்ந்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும்.

நல்ல அலை நம்மிலிருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தால் நமக்குத் தேவையான அனைத்தும் நம்மை நோக்கி இழுபடும். நான் பிரம்மம். நம்மைச் சுற்றி எல்லாம் பிரம்மம். இப்படிப் பிரம்ம உணர்வுடன் அனைத்தையும் பாருங்கள். பிரம்மப் பிரக்ஞை நம்மில் ஏற்பட்டுவிட்டால் பிரச்னை இராது. தனது ரகசியங்களை அது நமக்குத் தெரிவித்துக்கொண்டே இருக்கும்.

இதற்காக நாம் செய்யவேண்டியதெல்லாம் சும்மா இருப்பதுதான். இனி நாம் செய்ய வேண்டியது நமது ஆத்ம பலத்தை அதிகப்படுத்துவது தான். அதற்கான முயற்சிகளில் தான் இனி முழுமையாக நம்மை ஈடுபடுத்த வேண்டும். இனியாவது இதயத்தால் சிந்தித்துக் கருணையும் அன்புமாக நடந்துகொண்டு ஆத்ம பலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இந்த ஆத்ம பலம் கூடினால்தான் அழிவுகளுக்கு எதிராக ஒரு சமநிலையை ஏற்படுத்தச் சிறிதளவு முயற்சியாவது செய்து மனித குலத்தைக் காப்பாற்ற முடியும். இதயமும் மூளையும் ஒன்றுபட்டுச் செயல்பட, செயல்பட எந்தவித அசம்பாவிதத்தையும் தடுத்தி நிறுத்தி உலகத்தில் அமைதியையும், அன்பையும் நிலைநாட்ட முடியும். கருணைப் பரவலின் மூலமாகத்தான் உலகத்தில் சாந்தியை ஏற்படுத்த முடியும்.

இந்த இடத்தில் மிக வெளிப்படையாகப் பேசப்பட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. சமீபகாலமாகத் தமிழ்க் கலாச்சாரம் சொல்ல முடியாத சீரழிவிற்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கின்ற சூழ்நிலை வளர்ந்து கொண்டிருக்கிறது. நமது பண்பாடு, பெண்களை மதித்துப் போற்றுகின்ற தன்மை, தாயக மக்களின் மிகக் கொடுமையான வாழ்க்கைப் போக்கு எல்லாம் இந்தக் கலாச்சார சீரழிவில் அடங்கும். இந்தக் கலாச்சார சீரழிவிற்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு ஆன்மீகவாதிக்கும் இருக்கிறது. கலாச்சாரப் புனரமைப்பு தான் ஆன்மீகம். கலாச்சாரத்தை சீரழிக்காமல் தலை கொடுத்து காக்க வேண்டிய பொறுப்பு காலம் காலமாக ஞானிக்கு இருந்து வருகிறது.

நமது தமிழ்க் கலாச்சாரம் அதி உயர்ந்த ஒரு கலாச்சாரம். இந்தத் தமிழ் மரபு அளவுக்கு மீறிய சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் கிறித்துவ சமுதாயம் பிஷப்புக்கள் கைவசம் தான் இருக்கிறது. குருமார்கள் சொல்வதைத்தான் கிறித்துவ மக்கள் கேட்கிறார்கள். ஆனால் இந்துக்களுக்கு வழிகாட்ட இன்று யார் இருக்கிறார்கள்?

மனங்களைச் சீரமைப்பது தான் கலாச்சார சீரமைப்பு எனப்படுகின்ற ஆன்மீகம். கலாச்சார சீரழிவுகளைப் பற்றிய தகவல்கள் சமுதாயத்தில் மேம்படுகின்றபோது ஒரு ஆன்மீகவாதிக்குத் தான் மனம் பதைக்கும். பதைக்க வேண்டும். ஏனெனில் எல்லாமே ஆத்மா என்று பார்க்கின்ற நிலையில் நாம் இருக்கிறோம். யார் எக்கேடுகெட்டால் எனக்கென்ன என்று இருந்துவிட முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும் தனது இழிநிலையை உணர்ந்து திருந்த வேண்டும். இதற்காக நல்ல அதிர்வலைகளை நாம் தான் உருவாக்கி நமது சமுதாயத்தை நோக்கிப் பரவ விட வேண்டும். ஏனெனில் சமுதாயம் விட்ட பிழை இந்தச் சீரழிவு.

தமிழர்கள் ஒரு தனித்தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும் என்று பேசுவதைத் தவிர்த்துத் தமிழர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் நிலையை உயர்த்த வேண்டும். அவர்களுக்கு முதலில் சரியான முறையில் உணவும், தண்ணீரும் கிடைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தாயகத்தில் கோவில்களைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வதை நிறுத்தி யாழ்ப்பாணத்தின் உயிர்நாடியான விவசாயத்துறையை வளமுறச்செய்து மேம்படுத்த வேண்டும். மழை நீரைச் சேமித்துப் பயன்படுத்துகின்ற முறைகள், மாற்றுப் பயிர் விடும் முறைகள் தண்ணீர்ப் பாசன வசதிகளில் புதிய முறைகள் என்றெல்லாம் பணத்தைச் செலவழித்து முன்னேற்றமடையச் செய்யலாம். பணத்தைச் செலவழிக்க இது போல் எத்தனையோ நல்ல வழிகள் இருக்கின்றன.

தொழிற்சாலைகளை உருவாக்கித் தொழில் வளத்தைப் பெருக்க வேண்டும். யோசித்து யோசித்து, நலம் சேர்க்கின்ற திட்டங்களையெல்லாம் உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். இப்போது அங்குத் தமிழரின் கலாச்சாரம் அழிக்கப்பட்டு வருகிறது. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கோவில் என்பது கலாச்சார அடையாளம். மக்களின் நம்பிக்கைக்கும், சார்ந்து செயல்படுவதற்கும், சரணடைந்து முறையிடுவதற்கும் ஒரு போக்கிடமாக நமது கோவில்கள் அனைத்தும் அமைந்திருக்கின்றன. ஞானிகள் தான் நமது கோவில்களை உருவாக்கியவர்கள். அந்தக் கோவில்கள் வியாபாரக் கூடங்களாக ஆகி விடக்கூடாது. கலாச்சாரத்தை உண்மையாக வளர்க்கக்கூடிய ஆலயங்களாக அவை திகழ வேண்டும். கோவில்களில் ஆடம்பரங்கள் தவிர்க்கப்பட்டு உண்மையான பக்தியும், எளிமையும், ஆன்ம உயர்விற்கு வழி காட்டலும் இருக்க வேண்டும். ஆனால் இப்போது நடைபெறுபவை எப்படி இருக்கின்றன? ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும்.

ஆன்மீகவாதிகளுக்குப் பிறரைப் பற்றிய அக்கறை இல்லை, சமுதாயத்தைப் பற்றிய கவலையில்லை என்று சொல்லி விட முடியாது. அவர்களுக்கு அமைதியும், உயர் உணர்வு நிலையும் மிக முக்கியம். அதற்குச் சமுதாயம் சீரமைக்கப்பட வேண்டும். உலக மக்களுக்கு ஆன்மீகவாதி கருணையும் அன்பும் காட்டத்தான் வேண்டும். ஏனெனில் சமுதாய அமைதி நிலைதான் அவர்களை உயர்நிலைக்குக் கொண்டு nசல்லும். மக்கள் விடுகின்ற கண்ணீர் ஆன்மீகவாதியின் நெஞ்சை வாள் கொண்டு அறுக்கும். இந்தச் சமுதாயம் செய்கின்ற சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டித் தட்டிக் கேட்கும் துணிவும் ஆன்மீகவாதிகளுக்குத் தான் இருக்க வேண்டும்.

நான், உடல், சமூகம் இவை மூன்றும், ஆத்ம உணர்வைச் சென்று அடைவதற்குத் தடைகளாக இருக்கின்றன. மனித உறவுகளைப் பேண வேண்டும். அதன் மூலம் தான் ஆன்மத் தொடர்பை வளர்க்க முடியும். ஆத்ம பலத்தால் மற்ற அனைத்து பலங்களையும் அடக்க முடியும். ஆத்ம பலத்தைப் பலவீனப்படுத்துகின்ற செயல்கள் எதையும் இனிச் செய்ய வேண்டாம். இதன் உட்கருத்தை உணர்ந்து சமுதாய அமைப்புக்கள் தங்களது பார்வையை, மேலும் தங்களது திட்டங்களைத் தெளிந்த நல்லறிவுடன் உண்மையான கலாச்சார உயர்விற்கு வழி அமைக்கும் விதத்தில் அமைத்துத் தமிழரின் தரத்தையும், வாழ்க்கை வளத்தையும் பெருக்குகின்ற விதத்தில் செயல்பட முன் வர வேண்டும். இதற்குத் தெளிந்த நல் அறிவுதான் தேவை.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *