உடலென்னும் மாயப் பெட்டி

இந்த உடல் தகவலும் தரவும் உள்ள ஒரு பெட்டி. இந்தப் பெட்டியின் உள்ளே சக்தி இருக்கிறது. இந்தப் பெட்டிக்குள் எதைப் போடுகிறோமோ அதற்குத் தகுந்தபடி சக்தி நேராகின்றது அல்லது சிக்கலாகின்றது. ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையில் உலகாயத ரீதியில் இந்த சக்தி இயங்கிக்கொண்டிருந்தது. ஏனெனில் அப்பொழுது வாழ்க்கையின் உண்மையான நோக்கமும் வாழும் முறையும் அறியாமல் நாம, நம் குடும்பமும், சமுதாயமும் கற்றுத் தந்தவற்றை ஆராயாமல் ஏற்றுக்கொண்ட நிலையில் இந்த சக்தியைப் பயன்படுத்தினோம். ஆனால் அப்படி வாழ்ந்த விதம் நமக்கு அமைதியையோ நிறைவையோ தரவில்லை. அந்நிலையில் ஏதாவது தகவல் வெளியிலிருந்து வந்தால் ஏற்கனவே உள்ளேயுள்ள தரவுகனின்படி இந்தப் பெட்டி ஆடத் துவங்கிவிடுகின்றது. அப்படி இதை ஆட விடலாமா? அப்படி வாழ்வது உண்மையான வாழ்க்கையா?

அதே சமயம் உயர் அறிவு நிலையில் தன்னை உணர்ந்து வாழ்பவர்கள் அந்த ஆட்டங்களுக்கு ஆட்படுவதில்லை. அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் இது இயற்கை என்று புரிந்துகொண்டு நிதானம் தவறாமல் நின்று செயல்படுவார்கள். வெளி சக்திகளை அனுபவிக்கின்ற ஆர்வம் உடலின் உள்ளே வைக்கப்பட்ட தரவுகளால் ஏற்படுகின்றது. சாதாரண உணவிலிருந்து இயற்கைக் காட்சியிலிருந்து வெளி விவகாரங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற தூண்டல் இந்த உடலில் வெளிப்படுகின்றது. அப்படி இந்த உலகிலுள்ள அத்தனையையும் அனுபவிக்க வேண்டும் என்று முயன்றால் இந்தப் பெட்டி பழுதாகிவிடும். இந்தத் தூண்டல் எழாமல் அமைதியாக இருந்தால் இது சக்தி செலவழியாத நிலையில் நலமாக இயங்கும்.

பரம்பரை என்றும், இனம் என்றும், மதம் என்றும், சமுதாயம் என்றும் அறிந்து வாழ்ந்த வாழ்க்கை இந்தப் பெட்டிக்குள் நிரப்பப்பட்ட தரவுகளால் இயக்கப்பட்ட வாழ்க்கை. இப்படி நிரப்பப்பட்டவைகளால் சக்தியையும் அமைதியையும் வீணாக இழக்க விடலாமா? அப்படி என்றால் நாம் இவற்றை எப்படிப் பார்க்க வேண்டும் அல்லது எப்படிக் கையாள வேண்டும்? இவையெல்லாமே என்னைப் படைத்தவனின் விளையாட்டு. உறவுகளாக, பொருள்களாக, சமுதாய மதிப்பாகப் பார்க்கப்படுகின்ற, அவற்றிற்கேற்றபடி ஆடுகின்ற இந்த வாழ்க்கை பிரம்ம லீலை. அதை நான் பார்த்து ரசிக்க வேண்டியது தான் என் வேலை என்று எண்ணி அவற்றைப் பார்க்கப் பழக வேண்டும். அவன் ஆட்டம். நான் சாட்சி.

எது ஒன்றைப் பார்த்தாலும் அதை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கும் இயல்பாக எழும். ஆனால் அப்படிப் பார்க்கின்ற எல்லாவற்றையும் பெற்று அனுபவிப்பதென்பது ஒருக்காலும் இயலாத ஒன்று. சக்திச் செலவழிப்பிற்கு அவை தூண்டல்கள். எனவே அந்த ஆசைகளை உணர்வு நிலையிலேயே கிள்ளி எறியத் தெரிய வேண்டும்.

இந்த வாழ்க்கையில் வருகின்ற எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்துகொண்டே போனால் கடைசியில் எல்லாம் ஒன்று என்று முடியும். அந்த ஒன்றும் அன்பு அல்லது கருணை என்று தெரிய வரும். அது தான் வெளிப்படும்போது கருணையாக வெளிப்படுகின்றது. அதை இறையருள் என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர பேதப்படுத்திப் பார்க்கக்கூடாது.

ஞானம் என்பது எல்லாவற்றையும் புரிந்துகொண்ட அறிவு. நாம் எதைப் பார்த்தாலும் பார்க்கப்படுகின்ற அது ஒளிபெற்றுத் துலங்குகின்றது. அதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் ஒளி மட்டுமே தெரியும். அப்படிப் பொருளை நீக்கிப் பார்த்தால் எல்லாமே ஒளி மயம். எது மூலமோ அதனிடம் நாம் சென்றால் எல்லாம் விளங்கும். பரிணாமத்தில் முன்னேற ஒவ்வொரு அடுக்குகளாகக் கடந்து வருகின்றபோது கடைசி அடுக்கை அடைந்தவுடன் அங்கு பெறுகின்ற அனுபவம் வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாதது. உணர்வுக்குள் மட்டுமே அடங்குவது. ஏனெனில் சொல், வார்த்தை போன்றவை மனிதனால் உருவாக்கப்பட்டவை.

வாய் வார்த்தையால் கடவுளே! கடவுளே! என்றால் ஒன்றும் நடக்காது. தன்னை மறந்து நான் என்பதைத் துறந்து அவனுடன் ஒன்றினால் தான் அது அசையும். மகா பாரதத்தில் திரௌபதி தன்னை நம்பிய வரை கண்ணன் அவளைக் காப்பதற்கு வரவில்லை. அவள் தன்னை மறந்து கதறி அழுதபோது தான் காத்தருளினான். இப்படிக் கதைகள் மூலமாக ஏராளம் நமக்குச் சொல்லித்தரப்பட்டிருக்கின்றன.

நான் என்பதை நிலை நிறுத்திக்கொண்டு நாம் அதைத் தேட முடியாது. தேடினாலும் அடைய முடியாது. அதனால் தான் சரணாகதி சிறந்தது என்று சொல்லப்படுகின்றது. இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து என்னையும் படைத்து இவையெல்லாவற்றையுமே ஒவ்வொரு கணமும் அது காப்பாற்றி வருகிறது என்பதே அதன் அற்புதச்சக்திக்குச் சான்று. இந்த அற்புதத்தைத் தான் புராணங்கள் கதைகதையாகச் சொல்லி வைத்திருக்கின்றன. அவை இனி நமக்கு வேண்டாம். நாமே நம்மில் ஆராய்ந்தால் பல அற்புதங்கள் நமக்கு விளங்கும்.

நான் கர்மாவைக் கழிப்பதற்காக எனக்கு ஒரு குடும்பத்தைத் தந்து அந்த உறவுகளின் கர்மாவை நான் அனுபவித்து, அவர்கள் பரிணாமத்தில் எந்த அளவில் நிற்கிறார்களோ அந்த அளவிற்கு நானும் உயர்ந்து அல்லது தாழ்ந்து வாழ்வது எவ்வளவு அற்புதம்! உலகம் என்ற ஒரு மிகப் பெரிய நட்சத்திர ஓட்டலை நாம் பயன்படுத்துவதற்காகவே இறைவன் கட்டி வைத்திருக்கின்ற விதம் ஓர் அற்புதம்.

பிறந்த இடத்திலேயே உழன்று உழன்று வாழ்க்கையைக் கழித்துப் விட்டுப் போய்ச் சேராமல் நாடு விட்டு நாடு வரச்செய்து உயரிய வாழ்க்கைத் தரத்தைத் தந்து வாழ்க்கையின் பொருளை நமக்கு உணர வைத்தது அற்புதம். நமது பரிணாம வளர்ச்சியை நாம் திரும்பிப் பார்க்கின்றபோதுதான் இப்படி அவன் கருணை அற்புதங்களாக நன்கு விளங்கும்.

இந்த உலகில் உள்ள நாடுகள், அதில் வாழ்கின்ற மக்கள், அவர்களின் வாழ்க்கை முறைகள் போன்ற வலைப் பின்னல்கள் எல்லாமே அதனுடைய தீர்மானம். எல்லா இனங்களுமே ஒருவரையொருவர் எதிர்த்து சண்டையிட்டு வெட்டிக் கொன்று தான் வாழ வழி வகுத்துக்கொண்டன. சமயம் என்ற பெயரால் சண்டை. உலக வரலாற்றைப் பார்த்தால் அமைதியைவிட சண்டைதான், அழிவுதான் அதிகமாக நிகழ்ந்திருக்கிறது. எல்லாமே அதன் விருப்பம். ஒன்றும் நிரந்தரம் இல்லை என்பதுதான் அறிய வேண்டிய உண்மை.

இனி எந்த உறவைப் பார்த்தாலும் அந்த உறவுப் பார்வையால் அதைப் பார்க்கக்கூடாது. ஆத்மா என்ற பார்வைதான் இனி நம்மிடம் இருக்க வேண்டும். அவர்கள், ஆத்மா என்ற இறுதி உண்மையை அறியாதவர்கள். நாமோ ஆத்மாதான் எல்லாமாக இருக்கிறது என்ற உண்மையை அறிந்தவர்கள். நாம் இனி எந்தப் பாத்திரமாகவும் நடிக்க முடியாது. ஏனெனில் நாம் அந்த நிலையைக் கடந்து விட்டவர்கள். அன்பும் கருணையும் கொண்ட இறைப் பார்வை கொண்டவர்கள். அந்தப் பார்வைக்கு நிறைகுறை இல்லை. உறவுமுறைகள் எல்லாம் சமுதாய அலங்கோலங்கள். ஆன்மீகவாதிகளுக்கு உறவு, பகை என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு விதமான நடைமுறைகள், சம்பிரதாயச் சடங்குகள் இருக்கின்றன. ஒன்றின் செயல்பாடு மற்றொரு சமூகத்திற்கு நடைமுறைக்கு ஒவ்வாத செயல். இதெல்லாம் மனிதன் உருவாக்கியவை. அதைத்தான் நாம் நம்முடையதாக ஏற்றுக்கொண்டு கடைப்பிடித்து வாழ்கிறோம். எந்தவித சமுதாயக் கட்டுப்பாடுகளும் ஆத்மாவிற்கு இல்லை என்பதை அறிந்து உடம்பிற்குரிய இந்த சமுதாய அழுக்குகளை நீக்கி ஆத்மாவை அடைய வேண்டும்.

ஆத்மா சாட்சியாக மட்டுமே நம்முள் இருக்கிறது. மிக மெல்லிய குரலில் செய்யாதே என்று அது சொல்லும் அவ்வளவுதான். அதைக் கேட்டுப் பழகினால் பிறகு பிழையானவற்றைச் செய்ய விடாமல் அது சரியாக நம்மை வழி நடத்தும். தடைகளை ஏற்படுத்தும். ஓர் ஆன்மீகவாதி வாழ்வில் தனக்கு ஏற்படும் தடைகளைத் தடையாக நினைக்காமல், வேறொரு பாதையைத் தேர்ந்தெடுக்க இது உதவுகின்றது என்ற கண்ணோட்டத்தில் அந்தத் தடைகளைப் பார்க்கப் பழக வேண்டும்.

ஒரு செயலைச் செய்ய நாம் முற்படுகின்றபோது, அது நடக்கும் அல்லது நடக்காது என்று இரண்டு விதமான நிலை நமக்கு ஏற்படும். நடக்கும் என்று நினைத்துச் செயல்பட்டால் அது நடக்கும். நடக்காது என்று நினைக்கத் தொடங்கினால் அது நடக்காது. நாம் தனியாக நல்லதையேதான் நினைத்துச் செய்கிறேன் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நல்லது கெட்டது இரண்டும் ஒரு செயலில் கலந்துதான் இருக்கும். ஆனால் அனுகூலமாக ஒன்றைக் கொண்டு சென்றால் அது அனுகூலமான பலனைக் கொடுக்கும்.

எதுவும் நடக்கவில்லை, நான் போனாலே அது நடப்பதில்லை என்றெல்லாம் சதா சிந்தித்தால் நடக்காமலே போய்விடும். ஆன்மீக சாதகர்களிடம் இயல்பாகவே பாஸிட்டிவ் எண்ணங்கள் தான் கூடுதலாக இருக்கும். எதிர்மறை எண்ண அலைகள் அவர்களிடம் எழாது. அவர்களிடம் கோபம், பொறாமை, கோள் மூட்டுதல் போன்ற எதிர்மறைப் போக்கு இருக்காது. எதிர்மறைக் குணங்களை இல்லாமற் செய்தால் தோல்வி ஏற்படாது, நல்லதே நடக்கும். அதனால்தான் நல்லவராய் இரு என்று சொல்வது. நல்லது கெட்டது என்றால் நேர்மறை எதிர்மறை எண்ணப்போக்கு என்று பொருள்.

ஒன்றைச் செய்யப் போகின்றபோது நேர் மறையாக அதை அணுக வேண்டும். அப்போது அது சுமுகமாக நடக்கும். எதிர்மறையாக எதைச் செய்தாலும் அது நமக்குத் துன்பத்தைத் தான் கொடுக்கும். எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும். எல்லாவற்றையும் பாராட்டத் தெரிய வேண்டும். ஆன்மீகவாதிக்கு நெகடிவ் எண்ணம் இருக்கவே இருக்காது. வெற்றி தோல்வி அவர்களுக்கு இல்லை. ஆத்ம அளவில் அவர்கள் இருப்பதால் அவர்களில் எல்லாமே சம நிலையில் அமைந்திருக்க வேண்டும்.

சமுதாயம் சொல்வதைத் தான் செய்ய வேண்டும் என்று இனியும் எல்லாம் செய்துகொண்டு போகக்கூடாது. எது என்றாலும் நமக்குள் எடுத்து ஆராய்ந்து சரி பிழை பார்த்துச் சரியானதைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அப்பனும் மகனும் கழுதையைச் சுமந்த கதையாகிவிடும். நாம் விடுதலையை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்ட பிறகு இனி கல்வி, மதம், இனம், சமுதாயம், உறவுகள் போன்ற எதுவும் நமக்கு இடையில் குறுக்கிடக்கூடாது. மனக்கட்டில் இவையெல்லாம் தடைகளாக இதுவரை இருந்தன. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் நான் ஆத்மாவாக இருந்துகொண்டு, .இது கர்மாவால் எடுத்த உடல். இவை கர்மாவோடு சம்பந்தப்பட்டு அமைந்த உறவுகள் என்று புரிந்துகொண்டு ஒட்டியும் ஒட்டாமல் வாழ்வதே சரியான வாழ்க்கை முறை. யாரோ சொன்னவற்றைப் பிடித்துக்கொண்டு இனி நாம் போகக்கூடாது.

நம் மனதில் அன்பு இருந்தால் எதிராளியிடம் அந்த அன்பு வெளிப்படும். யாராயிருந்தாலும் எதுவாக இருந்தாலும் அன்பிற்குக் கட்டுப்படாதவர்கள் இல்லை. உள்ளத்தில் அன்பு இருந்தால் பயம் இருக்காது. ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பயம் இருக்காது. சுயநலம் உள்ள இடத்தில் பயம் இருக்கும். அரசியல்வாதிகள், அறிஞர்கள், பணக்காரர்கள் என்று யாராயிருந்தாலும் அவர்களின் பலம் ஆன்மீக பலத்திற்கு முன் அடி பணியும். ஏனெனில் ஆன்மீக பலம் எதையுமே எதிர்பார்க்காது. ஆத்ம பலத்தின் முன் மற்றவர்கள் தம்மைத் தாழ்த்தித்தான் உணர்வார்கள். அந்த ஆன்மீக பலம் மற்ற பலமுள்ளவர்களை இழுக்கும். ஏனெனில் மற்ற எந்த பலமும் மனச்சமநிலையைக் கொடுக்காது. மற்ற பலங்கள் எல்லாம் மாறக்கூடியவை. அழியக்கூடியவை. ஆன்மீக பலம் ஒன்றுதான் இறுதிவரை நிலைத்து நிற்கும். ரமணர், மகாப் பெரியவர் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், வள்ளலார் போன்ற மகான்களை அனைவரும் கொண்டாடுகின்றனர். ஏன்? அவர்கள் ஆத்மாவோடு நின்றவர்கள். அதனால் தான் மற்ற பலங்களைக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவர்களை அடி பணிந்தனர்.

எல்லாப் பிரச்னைகளையுமே அடி ஆழத்தில் போய் ஆராய்ந்தால் ஆத்மதான் கர்ம அடிப்படையில் அவற்றைத் தருகிறது என்ற உண்மை தெரியவரும். நான் ஆத்மாவோடு இணைந்து வாழ்ந்தால் கர்மா என்னைத் தாக்காது. எந்த சக்தியாலும் கர்மாவை ஏவி விட முடியாது. ஏனெனில் நான் ஆத்மா என்ற விழிப்புணர்வோடு இருக்கிறேன். பிரச்னை வருகின்ற வேளைகளில் அவற்றை உரிய முறையில் எதிர்கொள்ளலாம். ஆனால் அப்போது நான் ஆத்மா என்ற உணர்வில்தான் தோய்ந்து இருக்க வேண்டும். நான் ஆத்மா என்ற ஒரே உணர்வில் ஒன்றியிருப்பதுதான் உண்மையான தியானம் என்றே சொல்லலாம்.

நான் அல்லாத எதுவும் நமது உண்மையான தியானத்தில் இல்லை. நான் ஆத்மா என்ற ஒர் உணர்வு மட்டுமே நமது தியானத்தில் இருக்கும். உடல், மனம், புத்தி என்ற எதுவுமே அப்போது அங்கு இல்லை. அன்பும் கருணையும் மட்டுமே இருக்கும். ஏனெனில் இந்த உணர்விற்கு ஆத்மாவே காரணம் என்ற நன்றி அங்கு அன்பும் கருணையுமாக வெளிப்படும். எனவே ஆன்மீக சாதகர்களின் கவனமும் முயற்சியும் ஆத்மாவே நான் என்ற ஒரே உணர்வில் தோய்ந்திருக்கின்ற நிலையிலேயே இருக்கப் பழக வேண்டும். அது நம்மை விடுதலையை நோக்கி உயர்த்திக்கொண்டு செல்லும்.

ஞான உபதேசத்தைத் தொடர்ந்து கேட்டு ஆத்மீகப் பயிற்சியில் தொடர்ந்து தம்மை ஈடுபடுத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு ஆத்மசக்திச் சேகரிப்பு அதிகரிக்கும். இனி வெளி விவகாரங்களில் ஈடுபடுவது, பூஜை வழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்துவது, பிறர் அழைப்பை ஏற்றுப் பல இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது போன்ற செயல்களெல்லாம் நமது சக்திச் சேகரிப்பை வெளியில் இழுத்துக் குறைத்து விடும். சமுதாய வாழ்க்கையில் சிதறிக் கிடப்பவனுக்குத் தான் தனது மனதை ஒன்றுபடுத்தப் பூஜை, புனஸ்காரம் போன்றவை எல்லாம் தேவை. ஆத்ம சாதகர்களுக்கு, ஞானவழிப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு அவை இனி அவசியமானவை அல்ல. எனவே விழிப்புணர்வுடன் ஒதுங்கி இருந்து தியானத்தில் தொடர்ந்து ஈடுபட்டு, அதனோடு ஒன்றிய நிலையில், வெளி உலகில் செயலாற்ற வேண்டும்.

வீட்டில் விளக்கு ஏற்றி வணங்குவது தெய்வீக அலைகளைப் பரவச் செய்வதற்காகத்தான். நல்லெண்ணெய் விட்டு விளக்கு ஏற்றினால் கர்மாவினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் நீங்கும். ஆன்மீக சக்தியோடு இணைந்திருக்கப் பயில்பவர்கள் ஆத்மரீதியாக உணர்வுகளைத் தெய்வீகமாக்குவதற்கு நெய் விளக்கு ஏற்றுவதுதான் சிறப்பு. தியானம் செய்பவர்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். தீபம் ஏற்றுவதன் உட்பொருள், எனக்குள் இருக்கும் ஆத்மஜோதியை நான் இதில் ஏற்றுகின்றேன் என்பதுதான். தியானம் என்பது விழிப்புணர்வு. ஆத்ம ஒளி என்பது அதன் விளைவு. நமக்கு உள்ளே ஆண், பெண் சக்திகள் இணைவது, அதாவது பிரம்மமும் ஆத்மசக்தியும் இணைவது தான் தியானம்.

ஒவ்வொருவரின் உள்ளேயும் ஆண், பெண் என்ற இரண்டு சக்திகள் உள்ளன. ஈஸ்ட்ரஜன் என்ற பெண் தன்மை ஹார்மோன் 80 சதவீதமும், டெஸ்ட்ரஜன் என்ற ஆண் தன்மை ஹார்மோன் 20 சதவீதமும் பெண்களில் இருக்கும். இது அப்படியே மாறி ஆண்களுக்கு 80 சதவீதம் டெஸ்ட்ரஜனும், 20 சதவீதம் ஈஸ்டரஜனும் அமைந்திருக்கிறது. இந்த அளவு மாறி அமைந்தால் அதாவது அளவு கூடினால் பெண்களுக்கு ஆண் தன்மையும் ஆண்களுக்குப் பெண் தன்மையும் அதிகரித்துக் காணப்படும். ஹார்மோன் மாறுபாடுகளின் செயல்பாடுகள் இவை. நமக்குள் இருக்கும் இந்த ஆண் தன்மையும் பெண் தன்மையும் தியானத்தில் இணைகின்றன. இதைத்தான் உட்புணர்வு என்று சொல்வது. இதை சிவசக்தி ஐக்கியம் என்றும் சொல்லலாம். தியானத்தில் இந்த இணைவு நிகழும்போது சம நிலை ஏற்படும். நிதானத்துடன் செயல்படும் தன்மை உண்டாகும். கருணையும் அன்பும் அறிவும் ஆற்றலும் கலந்த தன்மையுடன் இப்படிப்பட்டவர்கள் செயல்படுவார்கள்.

ஹார்மோன்களுக்கும் தியானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஹார்மோன் என்பவை உள் ஆற்றல். இதனை சக்தித் தளத்தில் இருந்து பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கின்றபோது முன்பு சுற்றித் திரிந்த ஆற்றல் இப்போது தியானத்தால் ஒன்றுபட்டு இணைகின்றது. இந்நிலையில் நன்றே வரினும் தீதே ஆயினும் வருக! என்ற சமத்தன்மை நமக்குள் ஏற்பட்டு விடும். ஏனெனில் நன்மை தீமை என்று எதுவுமில்லை. அன்பிற்கும் கருணைக்கும் முன் எதுவுமில்லை. ஆத்மா மட்டும் தான் இருக்கும். காலொடிந்த ஆட்டிற்காகக் கண்ணீர் சிந்திய புத்தரின் கருணையைக் கடைப்பிடிப்பதாகக் கூறுபவர்கள் நடந்து கொள்கின்ற விதத்தை இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். புத்தர் போதித்த கருணைப் பாதையில் இன்று புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் நடக்கிறார்களா? இல்லையே!

கருணை, உள்ளத்தில் மட்டும் இருந்தால் போதாது. செயலில் சேவையாக வெளிப்பட வேண்டும். அது நம் உள்ளத்தைப் பார்ப்பதில்லை. அறிவைப் பார்ப்பதில்லை. நாம் செயல்படும் விதத்தைத் தான் அது கவனித்துக் கணக்கில் எடுக்கிறது. ஆகவே கருணையால் செயல்படுங்கள். நாம் தர்மவழியில் செயல்படத் தவறினால் அது நமக்குப் பாடம் கற்பிக்கும்.

மகா பாரதத்தில் அர்ச்சுனனின் மகனான அபிமன்யுவை, தனி ஒருவனாகப் பத்ம வியூகத்தின் உள்ளே துணிவுடன் புகுந்த வீர இளைஞனை, ஒன்பது பேர் சுற்றி நின்று அடித்துக் கொன்றனர். வஞ்சகமாக நடந்து கொண்டனர். கடைசியில் என்னவாயிற்று? அதர்மமாகச் செயல்பட்டவர்களில் ஒருவர் கூட உயிருடன் மிஞ்சவில்லை. தர்மம் நின்று கொல்லும். அன்றும் இன்றும் என்றும் அது அப்படித்தான். புராணம் சொல்வதெல்லாம் சுவையான கதை அல்ல. நமக்குத் தேவையான பாடங்கள். அவற்றை நாம் படிக்கின்றோமே தவிரப் பாடமாக எடுக்கவில்லை.

அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற அறிஞர்கள் நாட்டை ஆள்பவன் ஞானியாக இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ஏனெனில் ஞானிகள் தர்ம வழியை அறிந்து நடப்பவர்கள். விருப்பு வெறுப்பு அற்றவர்கள். இந்தியாவில் அரசாண்ட மன்னர்களில் பெரும்பாலோர் ஞானியராகத்தான் இருந்தார்கள். அப்படி அவர்கள் தர்மவழியில் நடப்பவர்களாக இருந்து ஞானியாக இல்லாவிட்டால் தமது குலகுரு சொல்கின்ற விதத்தில் செயல்படுவார்கள். அந்த குரு ஒரு ரிஷியாகத் தான் இருப்பார். அவர் தர்ம சாஸ்திரங்களைக் கற்பிப்பதோடு மன்னர்களுக்கு நீதியையும் யுத்த சாஸ்திரத்தையும் கற்றுத் தந்தார். எல்லாம் முறைப்படி நடக்கத் தர்மம் தான் பின்னணியில் இருக்க வேண்டும். நமது நடைமுறை வாழ்க்கையும் தர்மப்படி தான் அமைய வேண்டும் என்பது கவனத்தில் வைக்க வேண்டிய உண்மை.

அடுத்து நாம் விடுதலைக்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு முன்னேறுவதற்குப் பல விஷயங்களையும் ஒழுங்குபடுத்துவதைப் போல மூச்சையும் கவனித்துப் பழக வேண்டும். மூச்சை இடைவிடாமல் கவனிக்க வேண்டும் என்பது யோகாவில் ஒரு பயிற்சி. சில நேரங்களில் வலது பக்க மூச்சு மட்டும் ஓடிக்கொண்டிருக்கும். சில சமயம் இடது பக்கத்தால் மட்டும் போய் வரும். மனம் சலனப்படுகின்றபோது மூச்சு தாறு மாறாக ஏறி இறங்கும். உணர்ச்சி வசப்படுகின்ற தருணங்களில் மூச்சு வாங்கும். தியானம் செய்து எழும்பும்போது இரண்டு பக்கமும் சீராக இயங்கும். நாம் இவற்றைக் கவனித்தால் தெரியும்.

நாம் பழக்கத்தில் கொண்டிருக்கின்ற பல செயல்கள் மிக சூட்சுமமானவை. வலது காலை முன் வைத்து ஓர் இடத்தில் அல்லது வீட்டில் நுழைகின்றபோது வலது பக்க மூச்சு இயங்கும். அப்போது நம்மிலிருந்து நேர்மறை அலைகள் வெளிப்படும். அது அந்த இடத்திலும் ஒரு பாஸிட்டிவ் அலையை உருவாக்கும் மற்றுமொரு தகவல், நமது இடது கரத்தில் அல்லது இடது பக்கத்தில் ஒரு பொருளை வைத்துக்கொண்டு ஒரு விஷயத்தை அணுகினால் அந்த விஷயம் நல்லவிதமாக நிறைவேறும். ஊரில் சிலபேர் இடது பக்கம் கை இடுக்கில் ஒரு குடையை அல்லது ஒரு துண்டை வைத்துக்கொண்டு கும்பிடு போடுவார்களே! காரியம் நிறைவேற வேண்டுமெனில் அப்படிச் செய்வார்கள். வலது பக்க மூச்சு ஓடினால் அந்தக் காரியம் வெற்றி. ஏனெனில் வலது பக்க மூச்சின் அசைவு நல்லுணர்வைத் தரும். மூச்சு இரண்டு பக்கமும் சமமாகச் சீராய்ச் சென்றதென்றால் நான் அமைதியாக, சமநிலையில் இருக்கிறேன் என்று பொருள்.

மூச்சைப்பற்றி சொன்னதுபோல் மற்றொரு உண்மையும் சொன்னால் வியப்பைத் தருவதாக இருக்கும். முதியவர்கள் வீட்டில் முடங்கி இருக்கின்ற நிலையில் யாராவது தங்களை வந்துப் பார்த்துப் பேச மாட்டார்களா, நலம் விசாரிக்க மாட்டார்களா என்று ஏங்குவார்கள். அதற்குக் காரணம் வயது அதிகரிக்கும்போது நம் உடலில் காந்த சக்தி குறைய ஆரம்பிக்கும். காந்த சக்திதான் கவர்ச்சியைத் தருகின்ற சக்தி. சிலரைப் பற்றி, அவர் முகம் காந்தம் போல் வசீகரிக்கிறது என்று சொல்வார்கள். தவப் பயிற்சி உள்ளவர்களின் முகம் காந்த சக்தி கொண்டிருப்பதால் பொலிவுடன் மிளிரும்.

இந்த காந்த சக்திதான் அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துகின்ற சக்தி. அன்பாலும் கருணையாலும் தான் நாம் பிறரைக் கவர்ந்து இழுக்க முடியும். இளம் வயதில் காந்தம் மிகுந்து இருப்பதால் உடல் கவர்ச்சியாகத் திகழ்கிறது. இது வேறு விஷயம். நாம் பேசுவது அன்பால் விளைகின்ற ஈர்ப்புசக்தியைப் பற்றி. முதுமையில் இந்த காந்தசக்தி குறையத் துவங்கினால் வலியும் நோயும் வருத்தத் தொடங்கும். இந்த எனர்ஜி குறைகின்ற நிலையால் தான் முதியவர்கள் அன்பிற்காக ஏங்குகின்ற நிலை ஏற்படுகின்றது. பிறரது அன்பை அதாவது பிள்ளைகள், பேரக்குழந்தைகள் அன்பைப் பெற்ற பெரியவர்கள் கலகலப்பாகத் தெம்பாக இருப்பார்கள்.

குழந்தைகளிடம் மிக அதிக அளவில் இந்த காந்த சக்தி இருக்கும். அதனால் முதியவர்கள், தான் பெற்ற பிள்ளைகளை விடப் பேரப்பிள்ளைகளிடம் அதிகப் பாசமாக கட்டிப்பிடித்துக் கொஞ்சி மகிழ்வார்கள். எல்லாமே ஆத்ம சக்தியின் காந்த வெளிப்பாடு. செழிப்பாய்த் திகழ்கின்ற எல்லாமே காந்த சக்தியால் இழுக்கும். இவற்றையெல்லாம் அன்பின் வெளிப்பாடு என்பதாகப் புரிந்துகொண்டு நாமும் அந்த அன்பையும் கருணையையும் அதிக அளவில் பெருக்கி வெளிப்படுத்தி நமது காந்த சக்தியால் உலகைக் கவர்ந்து இழுத்து ஆனந்தத்தைப் பகிர்வோம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *