என்னையே எனக்குத் தா!

கர்மாவால் சூழப்பட்ட மனதிற்கு அடிக்கடி சோதனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். வெளி உலகம் கர்ம மனதை வெளியில் இழுத்துக்கொண்டே இருக்கும். முன்னேறிச் செல்ல விடாது. சமூக ரீதியாகச் செயல்படுவதற்குத்தான் சாதாரண மனதைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, ஆன்மீக சாதகர்கள் தனிப்பட்ட விதத்தில் தாங்கள் செயல்பட ஆத்மீக மனதைத் தான் வைத்திருக்க வேண்டும். பழகிய மனம் சமூகத்தால் நிம்மதி கிடைக்காததால் தான் ஆன்மீகத்தைத் தேடித் திரும்பியது. அறிவுத் தெளிவுதான் ஆன்மீகம். எனவே சமூக வௌளம் நம்மை அடித்துக்கொண்டு போக முயல்கின்றபோது அதன் போக்கில் போய்விடாமல் திடமாக ஆன்மீக தளத்தில் நின்று செயல்படத் தெரிய வேண்டும். அங்கு ஆன்மீகம் ஒரு தடுப்பு வேலியாக இருக்க வேண்டும்.

உறவுகள் நாம் அன்பு செலுத்துவதற்காகவும், உதவிகள் செய்வதற்காகவும், மகிழ்வதற்காகவும் தான் தேவைப்படுகின்றன. ஆனால் நடைமுறையிலோ உறவுகள் இதற்கு நேர் மாறான விதத்தில் அமைந்து விடுகின்றன. இப்படி இருந்தாலும் தெளிந்த அறிவைப் பெறுகின்ற நாம் என்ன செய்ய வேண்டும்? உறவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அவைகளுக்காக நாம் என்றில்லாமல் நமக்கு அவை உறவு என்று பார்க்க வேண்டும். ஆத்மாவைச் சென்று சேர்கின்ற முயற்சி என்றால் அந்த ஆத்மாவின் தன்மை நம்மில் இருக்க வேண்டும். ஆத்மாவின் தன்மை அன்பும் கருணையும். அது கடவுள் தன்மை. அந்தக் கடவுள் தன்மை நம்மிடமிருந்து வெளிப்பட்டு உறவுகளைச் சேர வேண்டும்.

நமது கண்களின் உள்ளே கண்மணிப் பகுதியில் விரிந்திருக்கின்ற கோடுகள் ஒவ்வொன்றும் உடலிலுள்ள ஒவ்வொரு அங்கத்தைக் குறிக்கும். இந்தக் கண் அமைப்பை வைத்து நோய்களைக் கண்டறியும் முறை இப்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. Iridiology என்று இந்த மருத்துவ முறைக்குப் பெயர்.

இன்னும் 10,15 ஆண்டுகளுக்குப் பிறகு பிற நாடுகளுக்குப் போகப் பாஸ்போர்ட் இருக்காது. ஏனெனில் அதிலும் பலவகையான தில்லுமுல்லுகள் நடைபெறுகின்றபடியால் இனி கண் பார்வையை வைத்துத்தான் அனுமதி கிடைக்கும். ஒருவரது பார்வைபோல் அடுத்தவரின் கண் அமைப்பு இருப்பதில்லை என்பதே இதற்குக் காரணம். கண் பார்வையும், கை ரேகையும் தனித்துவமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. எனவே இனி கண்ணின் முக்கியத்துவம் அதிகரிக்கும். மேலும் ஒரு முக்கிய ஆன்மீகத் தகவல் என்னவென்றால் கண்களின் வழியாகவும் கர்மா நம்மைச் சேர்கின்றது. அதனால் தான் கண்களை மூடியிருப்பது ஆன்மீகப் பயிற்சியில் ஓர் அங்கமாக இருக்கிறது. உண்மையில் கண் ஒரு கருவி மட்டும் தான். ஆத்மாதான் கண் வழியாகப் பார்க்கிறது. மின் காந்த அலைகளால் சூழப்பட்டு முரண்பட்ட இந்த உலகத்தைப் பார்ப்பதற்குத் தகுந்தபடி நமது கண் அமைக்கப்பட்டிருக்கிறது.

பார்க்கின்ற பார்வைக்கு ஏற்ப எல்லாம் தெரிய வருகின்றது. அகக்கண்ணால் பார்க்கப் பழகியவர்களுக்குக் காலம் கடந்த விதத்திலும, ஆழமான விஷயங்களும் தெளிவாகத் தெரியும். புறக் கண்ணால் பார்க்க முடியாத, எல்லாம் நன்றாகப் புரியக்கூடிய அந்த அகக் கண்ணைத் திறப்பதற்காகத்தான் ஆத்மவித்தை பயிலப்படுகின்றது. அகக்கண் படைப்பு முழுவதையும் பார்க்கும்.

எல்லாவற்றையும் இறைவனின் கண்ணால் பார்க்க வேண்டும் என்று போன கட்டுரையில் கூறினோம். அது கருணைப் பார்வை. உறவுகளைக் கருணைக் கண்ணால் பார்த்தால் தான் அவை நம்மை எப்படி வருத்தினாலும் அது பாதிக்காமல் நாம் அதையும் கடந்த நிலையில் அவைகளிடம் அன்பு செலுத்த முடியும். சாதாரணக் கண்ணால் பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் கூட அகக்கண்ணால் பார்க்க முடியும். ஏனெனில் அது ஞானத்தால் விரிந்த அன்புப் பார்வை. கருணைப் பார்வை. இதை நாம் நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.

எண்ணங்களே இல்லாத நிலையில் ஒருவர் இருக்கப் பழகி விட்டார் என்றால் அவர் ஆன்மீக சாம்ராஜ்யத்தைத் தனக்குள் அமைத்துக்கொண்டு விட்டார் என்பது பொருள். எண்ணமே இல்லை. நான் விரும்பினால் தான் ஓர் எண்ணம் எனக்குள் எழும் என்ற நிலைக்கு நம்மை நாம் தியானத்தால் உயர்த்திக் கொள்ள வேண்டும்.

ஆன்மீகப் பாதையில் விரைவான முன்னேற்றத்தை அடையத் தடையாக இருப்பவை ஏராளம். அவற்றில் ஒன்று எதிர்மறை எண்ணங்கள். பொறாமை, கோபம், வயிற்றெரிச்சல் போன்ற குணங்கள் இன்னும் நம்மில் இருந்தால் முன்னேற்றம் இருக்காது. திரும்பக் கீழ் நிலைக்குப் போக வேண்டி வரும்.

அடுத்த தடை, வெளி விவகாரங்களில் இன்னும் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு இருப்பது. செய்திகளைக் கேட்க விழைவதும், செய்திகளைப் பரப்ப விழைவதும் ஆத்ம சக்தியை வீணடிக்கின்ற செயல்கள்.

அடுத்தது பிறரின் அன்புக்காக ஏங்குவது. அன்பும் கருணையும் நமக்குள்ளேயே அபரிமிதமாக இருக்கிறது. அதை நாம் பிறருக்கு வழங்கத் தெரியாமல் அவர்கள் என்னை வெறுக்கிறார்களே, அன்பு செலுத்தவில்லையே என்று ஏங்குவது பிழை. அதற்கு மாறாக நம்மால் வெறுக்கப்பட்டவர் மீதும் அன்பு செலுத்துகின்ற தன்மை நம்மில் ஏற்பட வேண்டும்.

நமக்குள் ஏற்படுகின்ற குற்ற உணர்வு அடுத்த தடை. நாம் எப்போதோ செய்த பழிக்கத்தக்க செயல்கள் நமக்குள் இருந்துகொண்டே இருக்கும். நான் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அடிக்கடி ஏற்படும். இது ஆத்ம சக்தியை இழுத்துக் கீழே தள்ளுகின்ற ஒரு பெரிய தடை. சமுதாயத்தால் பிழை அல்லது குற்றம் என்று பார்க்கப்படும். ஏதோ சிலவற்றை ஆன்ம அறிவு பெறுவதற்கு முன்பு நாம் செய்திருந்தாலும் அவை அப்படியே மறக்கப்பட வேண்டியவைகளே தவிர இன்று வரை அதை நினைத்துக் குற்ற உணர்வால் பாதிக்கப்படுகின்ற நிலை இனி இருக்கக்கூடாது.

பிறர் செய்கின்ற குற்றங்களையும் கூட இவை அவர்களால் அறியாமல் செய்யப்படுபவை. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அப்படி நடக்கிறார்களே தவிர அவர்கள் உண்மையில் குற்றவாளிகள் அல்ல என்று உணர்ந்து அவர்களை மன்னிக்கின்ற உயர்ந்த குணம் நம்மில் ஏற்பட்டுவிட வேண்டும். இந்நிலையை அடைந்துவிட்டால் அவர்களிடம் குறை காணும் தன்மை நம்மிடம் இல்லாமற் போய்விடும். ஏனெனில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஆன்மீகவாதிகள் அல்ல. அவர்கள் நமது போக்கைக்கூடக் குறை சொல்கின்ற நிலையில் இருப்பவர்கள். அறியாமையுடன் செயல்படுபவர்கள். உலகியல் போக்கில் போகின்ற இவர்களில் சிலர் எது என்றாலும் அதில் குற்றம் கண்டுபிடித்துக் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

அப்படிக் குறை சொல்பவர்கள் சின்னக் குழந்தை போன்றவர்கள். ஒரு குழந்தை கீழே விழுந்துவிட்டால் உடனே சுற்றுமுற்றும் பார்க்கும். யாரும் இல்லையென்றால் அது தானாக எழுந்து பேசாமல் போய்விடும். யாரும் பார்த்துவிட்டாலோ, அல்லது பதறிப்போய் ஓடி வந்தாலோ அது உடனே அழத் துவங்கும். அப்போது அவர்கள் அதைச் சமாதானப்படுத்துவதற்காக அது விழுந்த இடத்தை அல்லது பக்கத்தில் உள்ள பொருள்களை, ஏன் தள்ளி விட்டாய்? அது இது என்று ஏதேதோ சொல்லி இரண்டு அடி கொடுப்பார்கள். அதுபோலத் தான் இவர்கள் தமது குற்றங்களை எண்ணிப் பிறரைக் குறை சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

அனுபவம் மிக்கவர்கள் எதையுமே குற்றமாகப் பிழையாகப் பார்க்க மாட்டார்கள். போனால் போகிறது, விடு என்று சாதாரணமாக சொல்லி விடுவார்கள். சொல்லப் போனால் உலகில் ஏற்படுகின்ற எல்லாத் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் நானும் ஒரு காரணம் என்பது நமக்குத் தெரிய வேண்டும். ஏனெனில் எல்லாம் ஒன்று. நான் செய்கின்ற தியானத்தால் ஒரு கோடிப் பேருக்கு அமைதி அலைகள் பரவுகின்றன என்ற நிலையில் நான் அந்தத் தியானத்தை ஒழுங்காகச் செய்யாமல் விட்டால் அது சமநிலை ஏற்படுவதைக் குறைக்கும் அல்லவா? ஒருவர் பெறுகின்ற அமைதித் தன்மை மற்றவரின் அமைதியின்மையைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

விஷயம் தெரியாதவர்கள் இயற்கைச் சீர்குலைவிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, எங்கோ நடக்கிறது என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் நடைபெறுகின்ற அனர்த்தங்களுக்கும் நமக்கும் கட்டாயம் தொடர்பு இருக்கிறது. எங்கேயும், எப்போதும், எதுவும் ஏற்படலாம். உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வு மிக உயர்ந்த உணர்வு. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. நல்லவர்கள் மனம் நிறைந்து வாழ்த்துகின்றபோது நல்லது நடக்கும். இயற்கையின் சீற்றம் அடங்கும். இது உண்மை. உலகம் நன்மை பெற வேண்டும் என்னும் மாபெரும் வேள்வியில் ஆன்மீகப் பயிற்சியின் மூலம் நம்மையும் நாம் இணைத்துக் கொள்கிறோம்.

இந்த ஆன்மீக முயற்சி ஒன்றிணைகின்றபோது அதனால் விரிக்கப்பட்ட பேரன்பு எங்கும் பரவி என்னையும் அணைக்கின்றது. இந்த அணபைபில் சகல ஜீவராசிகளும் அடங்குகின்றன. பரமாத்மா எங்கும் விரிந்திருப்பது. அதில் இந்தப் பேரன்பு கலக்கின்றபோது அது பெரும் கருணையாகின்றது. பூமிக்கு நன்மை ஏற்பட வழி செய்கின்றது. நான் அவன் என்றால் என்னில் அன்பு பெருக வேண்டும்.

நாம் இந்தப் பாரிய பிரம்மாண்டத்தில் ஓர் அங்கம். நாம் அந்தப் பூரணத்தோடு மீண்டும் இணையத்தான் பூமியில் பிறந்திருக்கிறோம். அப்படி அந்தப் பூரணத்தோடு இணைய இது ஒரு சந்தர்ப்பம். இப்போது நடக்கப் போகின்ற பேரழிவினைத் தடுப்பதற்கு நானும் என்னளவில் முயற்சிகளை எனது ஆத்ம உணர்வின் வழியாக மேற்கொள்கின்றேன் என்னும்போது அப்படி நான் செய்வது சித்திரகுப்தனின் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் என்பது இந்து மத நம்பிக்கை. இதையே நுனபயச ஊயலஉந என்ற அமெரிக்க உளவியலாளர் மனித மன நிகழ்வுகள் ஆகாயத்தில் பதிவு செய்யப்படுகின்றன என்று கூறியிருக்கிறார்.

இயற்கையும் அதன் செயல்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இயக்கம். எல்லாமே ஒரு கட்டுப்பாட்டில், ஒரு நியதியில் செயல்படுகின்றன. திட்டமிடப்பட்ட வடிவமைப்பு பிரபஞ்ச இயக்கம். படைப்புகள் எல்லாமே இதே இயக்க நியதிக்கு உட்பட்டவை. இந்த நியதியை மீறி நடந்ததால் பெற்ற துன்பங்களால் துரத்தப்பட்டுத்தான் ஒருவன் ஒரு குருவைச் சரணடைகின்றான். அந்த சத்குருவின் உபதேசத்தால் உண்மை உணர்த்தப்பட்டு ஆன்மீகப் பாதையில் சரியாக நடக்கப் பழகுகின்றான் . இது தற்செயலானது அல்ல. இது பிரம்ம விருப்பம்.

ஏனெனில் எங்கே இருந்து வந்தோமோ அங்கே திரும்பிப் போக வேண்டும். வந்த இடத்தில் திருவிழாவில் காணமற்போன மகன் மாதிரி நாம் தொலைந்துவிட்டாலும் இப்போது சரியான வழியைக் கண்டுபிடித்து வந்துவிட்டோம்.

அடுத்த சந்தேகக் கேள்வி, சரியான பாதையில் இப்போது செல்கின்றோம் என்பதற்குச் சான்றுகள் எவை என்பது. சற்று இதை ஆராய்ந்தால் முன்பு நான் எதிர்கொண்ட அதே விதமான பிரச்னைகள் இப்போதும் ஏற்பட்டால் வலிமை வாய்ந்த சக்தி ஒன்று அவற்றைத் திசைமாற்றிச் செலுத்தி விடுகின்றது. அல்லது அன்றாட வாழ்க்கையில் பிரச்னைகள் தொடர்ந்து வந்தாலும், இந்தப் பிரச்னைகள் என்னைப் புடம்போட்டு மெருகேற்றுவதற்காகவே வருகின்றன என்பதை உணர்ந்து நம்மைச் செயல்படச் செய்கின்றது என்பது தெரிய வரும். நம்மிடம் முன்பு இருந்த துள்ளலோ துவளுதலோ இப்போது இல்லை. மனதில் ஓர் அமைதியும், நிறைவும் எப்போதும் இருக்கிறது. இவை எல்லாம் நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதற்குச் சாட்சி.

அடுத்த ஆராய்ச்சி என்னவென்றால் தியானத்தில் ஈடுபடும்போது எந்தவித எண்ணமும் நம்மைக் குலைக்காமல் தொடர்ந்து தியானத்தில் மூழ்கியிருக்க முடிகின்றதா என்பது. சில வேளைகளில் தியான நிலையில் எண்ணங்கள் நம்மைக் கடத்திக்கொண்டு போய் விடும். அல்லது மனம் ஒருவித மயக்கத்தில் நம்மைக் கொண்டு ஆழ்த்திவிடும். எண்ணங்கள் இருக்காது. தியானமும் இருக்காது. இது மாயையால் நிகழ்வது. அப்படிப் போகாமல் விழிப்புணர்வோடு தியானிக்க வேண்டும்.

நான் இருக்கிறேன், தியானத்தில் இருக்கிறேன் என்ற உணர்வு நம்மில் இருக்க வேண்டும். விழிப்புணர்வு என்ற பாதையில் தான் ஆத்மா வசப்பட்டு உணர்வாய், ஒளியாய் வரும். அந்த உணர்வில் ஒரு சிலிர்ப்பு, பரவசம், கண்ணீர் போன்ற உடல் மாற்றங்கள் ஏற்படுவதை நம்மால் உணர முடியும். ஆத்மா அப்படி வந்து வந்து போவதை உணர்ந்தால் உள்ளமும் முகமும் ஒளி பெறும். இப்படிப் பழகினால் மலை போல் பிரச்னை வந்தாலும் அது தாங்கக்கூடியதாய், தீர்க்கக்கூடியதாய்ப் பனிபோல் மாறிவிடும். இந்த நிலை ஞானம் என்ற தெளிந்த அறிவால் ஏற்படும்.

நமது நிலையை, நமது முன்னேற்றத்தைச் சோதிப்பதற்காகவே இப்போது சோதனைகள் ஏற்படுகின்றன. அவற்றைச் சரியான விதத்தில் தீர்ப்பதன் மூலமே நாம் உயர்கிறோம். கூர்ந்து கவனித்தால் தெரியும், ஒரே பிரச்னை மீண்டும் மீண்டும் வராது. பிரச்னை என்பதே ஏன் வருகிறதென்றால், நாம் அதற்கு எப்படிப் பதில் அளிக்கிறோம் என்பதைச் சோதிப்பதற்காகத்தான் பிரம்மம் தருகின்றது. நமக்காகத் தான் அது இந்த உலகத்தைப் படைத்திருக்கின்றது. ஒவ்வொரு கிரகமும் தங்களது சக்தியை பூமிக்குக் கொட்டி நம்மை வழி நடத்துகின்றன. புதன் மெர்க்குரி அணுக்களை நமக்கு அனுப்புகின்றது. வியாழன் தங்க அணுக்களை அனுப்புகின்றது. சூரியன் பல வகைகளில் பூமிக்கு உயிர்ச் சக்தியை வழங்குகின்றது.

ஒவ்வொரு கிரகமுமே தமது சக்தியை அணுக்களாக மாற்றிப் பூமிக்குத் தேவையான உலோகத் தாதுக்களாக பூமிக்கு அனுப்பி சேமித்து வைத்திருக்கின்றன. நாம் அவற்றைப் பூமியிலிருந்து வெட்டி எடுத்து வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துகிறோம். பூமிக்கு இவையெல்லாம் எப்போது தேவையில்லையோ அப்போது வியாழன் தங்கத்திற்குரிய அணுக்களைத் திருப்பி இழுத்துக்கொண்டுவிடும். இரும்புத் தாதுவை சனீஸ்வரன் இழுத்து விடுவார். ஆனால் பூமியிலிருந்து இக்கிரகங்கள் எதையுமே பெறுவதில்லை என்பதும் உண்மை. அவற்றின் அன்பளிப்புகளைத்தான் நாம் நகைகளாக மாட்டிக்கொண்டு திரிகின்றோம். சுக்கிரன் தருகின்ற வௌளி நமது எலும்பு, தோல் போன்றவற்றை நலமடைய வைக்கின்றன. மரபு வழியால், கர்மத் தொடர்பால், கிரகங்களின் வழியாக நமக்கு வருகின்ற பாதிப்புகள் எல்லாம் உடலைத்தான் தாக்குகின்றன. இவற்றிலிருந்து நம்மை ஆத்ம சக்திதான் பாதுகாக்கும்.

பூமியில் எல்லாவற்றிற்குமே ஓர் அதிர்வு இருக்கின்றது. பரமாத்மாவிற்கும் இந்த அதிர்வு இருக்கிறது. பிரம்மத்தின் அதிர்வால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆத்மாவின் அதிர்வு நமது இயக்கம். உடல் ரீதியாக, மன ரீதியாக, ஆத்ம ரீதியாக இந்த அதிர்வுகள் வெளிப்படுகின்றன. ஆத்மாவை நாம் முன்னிறுத்தி செயல்படுகின்றபோது அதிர்வுகள் வெளிப்படும். இந்த ஆத்ம அதிர்வுகளை நாம் உணர்ந்து சரியாகக் கையாள வேண்டும். ஏனெனில் இந்த அதிர்வு மிக அதிக அளவில் வெளிப்படத் துவங்கினால் அபரிமிதமான சக்தியை நமக்கு அளிக்கும். இந்நிலையில் அது நமக்குத் தேவையானவற்றை அள்ளிக் கொண்டு வந்து கொட்டும். மேலும் மனம் நிறைந்து புத்தி நிறைந்து குடும்ப வளம் நிறைந்து உடல் பூரண நலத்துடன் எல்லாமே நிறைவாக இருக்கும். ஆனால் அந்நிலையில் திருப்தி ஏற்பட்டு விட்டதால், எதிலுமே வேண்டும் என்ற ஆசையோ எண்ணமோ எழாது. குறிப்பாகப் பொருளாசை இல்லாமற் போய்விடும்.

நமக்கு ஆத்ம அதிர்வைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை. அதற்கு நான் என்பது தியானத்தில் ஆத்மாவுடன் கலந்துவிடத் தெரிய வேண்டும். நாம் ஆத்மாவாக ஆகிவிட்டால் அல்லது அதுவாக ஆகிவிட முயன்றுகொண்டிருந்தால் தான் சகல விதத்திலும் ஒரு பூரணத் தன்மை, ஞானியின் நிலை நம்மில் வாய்க்கும். உடல், மனம், புத்தி இம்மூன்றிலும் நிறைவு ஏற்படும்.

உடலும் மனமும் சேர்ந்ததுதான் கர்மா, வேலை, துன்பம் எல்லாம். நாம் ஆத்மாவில் கலந்து நின்றால் இவை எதுவும் நம்மைப் பாதிக்காது. உடலோடு மனமும் சேராவிட்டால் உடலில் நோய் இருந்தாலும் மனம் கஷ்டப்படாது. கஷ்டம் என்பது உடல் படுகின்ற துன்பத்தை மனம் உணர்வதால் ஏற்படுவது. இப்போது உடல் வலியை நோயை எப்படி ஏற்றுச் சமாளிப்பது என்பதற்காக அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் தனிப்பட்ட மருத்துவ நிபுணர்கள் செயலாற்றத் தொடங்கிவிட்டனர்.

உடல் துன்பத்தைத் தாங்குவதற்குரிய ஒரு சக்தி நம் மனதில் இயல்பாகவே இருக்கின்றது. மூளை வலியை உணர்வதால் தான் மாத்திரைகள் மூலம் மூளையை மரத்துப்போக வைத்து வலியை உணராமல் செய்கின்றனர் மருத்துவர்கள்.

சுகம், துக்கம் இரண்டையுமே உடலும் மனமும் தான் உணர்கின்றன. துன்பத்தை உடலும் மனமும் அனுபவிக்கின்றபோது அந்தத் துன்பத்தையே இன்பமாக எடுத்துக்கொள்கின்ற பக்குவத்தை நாம் பழக வேண்டும். இடுக்கண் வருங்கால் நகுக! என்று சொல்லித்தந்தது இந்நிலையை அடைந்து துன்பத்தை மறக்கத்தான். மிக அதிக அளவில் கடுமையான துன்பங்களை வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்கு இந்த அனுபவ முதிர்ச்சி ஏற்பட்ட பிறகு வருகின்ற எந்தத் துன்பமுமே துன்பமாகத் தெரியாது. இது மிக அரிய ஓர் உண்மை.

ஒரு பக்தர் எல்லா நோய்களையும், துன்பங்களையும் எனக்குக் கொடு! என்று பாடியிருக்கிறார். உண்மையில் துக்கம், சுகம் எதுவுமே ஆன்மீக சாதகர்களுக்கு இல்லை. ஆத்ம தளத்தில் இரட்டை உணர்வுகள் இருக்காது. ஆனந்தம் மட்டுமே எப்போதும் இருக்கும். சமநிலையில் வாழ்வது தான் உண்மையான ஆன்மீகம். இந்த நிலையிலிருந்து கீழிறங்கினால் சிக்கல் ஏற்படும்.

சமுதாயத்திற்குப் பயப்பட்டு அந்த உணர்வுகளையும் தன்னுள் வைத்துக்கொண்டு, தன்னை நாடி வருகின்றவர்களை, ஆத்மா தன் கர்ப்பக்கிரகத்திற்குள் அனுமதிக்காது. வெளிப்புறத்திலேயே நிறுத்தி விடும். போலித்தனங்களிலிருந்து, கீழ்மைத்தனங்களிலிருந்து ஆன்மீக சாதகர்கள் விடுபட வேண்டும். பொய்யான நடிப்புக்களைக் கைவிடல் வேண்டும். எல்லோரையும் ஆத்மாவாகப் பார்த்து அன்பு செலுத்தி வெளி வேஷங்களை ஒதுக்கி, அமைதிச் சமநிலையைப் பழக வேண்டும்.

தன்னைப்பற்றி சிந்தித்து உண்மையாக, நேர்மையாக, எளிமையாகப், பற்றற்று வாழ்ந்தால் ஆன்மாவை நெருங்கிச் செல்ல முடியும். எந்தக் கேள்வியும் இல்லாமல், எந்தத் தேவையும் வேண்டுதலும் இல்லாமல், எந்தத் தேடலும் சந்தேகமும் இல்லாமல், அதையே சார்ந்து அதனிடமே நம்மை ஒப்படைத்து விட வேண்டும். என்னையே எனக்குக் கொடு! என்று அதனிடம் கேட்க வேண்டும். இது தான் இனி நாம் செய்ய வேண்டியது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *