இயற்கையோடு இயற்கையாக உறவு

உண்மையிலேயே பரிணாமத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் அவனுக்கு அன்பு செலுத்தத் தெரிய வேண்டும். ஏனெனில் எல்லா உயிர்களிலும் அன்பு செலுத்தாமல் ஒரு படைப்பு முழுமை அடைய முடியாது. அன்பு செலுத்துவதால் நமது உடலிலுள்ள அணுக்கள் எல்லாம் புத்துணர்ச்சியுடன் திறமையாகச் செயல்படும்போது நமது இயல்பு உயர்வடைகின்றது. அப்பொழுது மனித மனம் தெய்வீகமாகச் செயல்படப் பழகுகின்றது. பல நேரங்களில் நாம் விழிப்புணர்வுடன் செயல்படுகின்ற போதே பிழை விடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது. மனமும் அறிவும் நமக்குத் தெரியாமலேயே கடத்தப்பட்டு விடுகின்றன. நம்மையும் மீறி நாம் சில சமயம் நடக்கும்படியான நிலை அமைந்து விடுகின்றது. அப்படிச் செயல்பட்டு விட்டாலும் அதையே தொடர்ந்து போய்க்கொண்டு இருந்து விடாமல் சுதாரித்துக்கொண்டு நமது விழிப்புணர்வை நிலை நாட்டப் பழக வேண்டும்.

இந்தப் பிறவியும் நமக்குத் தரப்பட்ட உடலும், அங்க அமைப்பும் விலை மதிப்பற்றவை என எண்ணுகின்றோம். ஆனால் இவற்றையெல்லாம் விட ஆத்மாதான் விலை மதிப்பற்றது. உயர்வானது. நமக்குள் இருக்கின்ற பொக்கிஷம் நமக்குத் தெரிவதில்லை.நான் ஆத்மா என்று நாம் எப்போதும் நினைத்தால் அது அனைத்தையும் ஒழுங்கமைக்கும். உடலுக்கு சக்தியைத் தருவதும், நம்மை வாழ வைப்பதும் ஆத்மா தான். மனித உடல் 72 வீதம் தண்ணீரும் 28 வீதம் மண்ணும் சேர்ந்த பிசைவு. பூமியும் இதே அளவில் தான் மண்ணும் தண்ணீரும் கொண்டிருக்கிறது. பஞ்சபூதங்களில் கடைசி இரண்டு பூதங்கள் இந்த மண்ணும் நீரும். இந்த உடலின் முக்கியமான இரண்டு தேவைகள் கொட்டிக் கொள்வதும் ஊற்றிக்கொள்வதும் தான். இதன் பொருள் புரிகின்றதா? வேளா வேளைக்குச் சாப்பிடுவதும் அடிக்கடி தண்ணீர் குடிப்பதும் மனிதனின் பொதுவான செயல்கள்.

பஞ்சபூதங்களில் மண்ணையும், தண்ணீரையும் விட்டு விலகிக் காற்றைச் சுவாசித்து, சூரிய ஒளியைப் பருகப் பழகினால் அதிலிருந்து அளவிடமுடியாத சக்தி கிடைக்கும். அதே சமயம் மண் தண்ணீர் இவற்றின் தேவை குறையும் என்ற உண்மை பலருக்குத் தெரியுமா? சித்தர்கள் காற்றையும் சூரிய ஒளியையும் உணவாகப் பெற்று மற்ற உணவும் தண்ணீரும் எடுக்காமல் வாழ்ந்தார்கள்.

உமா சந்திர கேசவ் என்பவர் வங்காளத்தில் வசிப்பவர். அவர் 20 வருடங்களாகச் சாப்பிடுவதுமில்லை, தண்ணீர் குடிப்பதும் இல்லை. சூரியனைச் சாப்பிடுகிறேன் என்று அவர் சொல்கிறார். சூரிய ஒளிச் சக்தி ஒன்றே அவரைக் காக்கின்றது.

பிரணாயாமம் தினமும் செய்து அதிகாலையில் உதயசூரிய ஒளியை 24 நிமிடம் என்று 21 நாட்கள், வெட்ட வெளியில், விடாமல் பார்த்து வந்தால் அவர்களை ஒரு நோயும் அணுகாது. மண்ணும் தண்ணீரும் தவிரக் காற்றும், நெருப்பும், வெளியும் கூட நமக்குச் சக்தியை அளிக்கின்றன.

விதி என்பது நமது கர்மாவின்படி அமைவது. மதி என்பது நமது புத்தியைப் பயன்படுத்தி அந்த விதியை வெல்வது. உதாரணத்திற்கு வீட்டைச் சுற்றி இலை தழைகள் கொட்டுவது விதி. தினமும் இரண்டு வேளை அதைக் கூட்டிச் சுத்தப்படுத்துவது மதி. ஏதேதோ கர்மாவோடு நாம் பிறந்திருக்கிறோம். ஆனால் ஆன்மீக ஞானத்தோடு அவற்றைக் கையாண்டு அந்தக் கர்மாவை இல்லாமற் செய்வது மதி. இப்படிச் செயல்படுவது நம்மைப் பரிணாமத்தில் உயர்த்துகின்றது.

வெறும் கால்களோடு நடந்தோம். பிறகுக் கால்நடைகளைப் பயணத்திற்குப் பயன்படுத்தினோம். அது வண்டியாகி, சைக்கிளாகிக், காராகி, ஆகாய விமானம், ராக்கெட் என்று வளர்ந்து இப்போது எந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்தால் அது மதி. விதியை மதியால் வெல்லுதல் என்பது இதுதான். மதி தான் முன்னேற்றம். ஆனால் இந்த முன்னேற்றம் வெறும் உலகியல் முன்னேற்றம் மட்டுமே.

இந்த மதியையும் அதன் தூண்டலையும் வழிநடத்துவதும் பிரம்மம் தான். வெளிப்பக்கமாக எல்லாவற்றையும் ஆராய்ந்துகொண்டு போனவர்கள் விஞ்ஞானிகள். உள் பக்கமாகத் தங்களுக்குள்ளேயே ஆராய்ந்து கொண்டு போனவர்கள் ரிஷிகள். உள் தேடல் தான் மிக ஒழுங்காக இருக்க வேண்டும். இப்படி நம் கவனத்தை உட்புறமாகத் திருப்பி வைத்தால் உள்ளுணர்வு சக்தி அதிகரிக்கும். உள்ளுணர்வு விழிப்பாக இருந்தால் தான் நம்மிலிருந்து என்னென்ன அலைகள் வெளிப்படுகின்றன என்பது நமக்குத் தெரிய வரும்.

நாம் ஒருவரைப்பற்றி ஆழமாக நினைக்கின்றபோது அந்த எண்ண அலைகள் அவரைப் போய்ச் சேர்ந்து அவரை அசைக்கும். அதைச் சிலர் உணர்வார்கள். பலர் உணரமாட்டார்கள். யாரையும்பற்றித் தீயதாக நினைத்து வயிறெரிந்தால் அது அவர்களையே தாக்கி அழித்துவிடும். சப்தம் தான் நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. வேத உண்மைகளை சப்தத்தால் மட்டும் தான் அறிய முடியும். சப்தத்திற்குக் காற்று உதவி செய்கின்றது. அந்தக் காற்றின் உதவியால் ஒலி உள்ளே நுழைந்தவுடன் ஆத்ம நெருப்பு அதைக் கிரகிக்கின்றது. செவிக்கு உணவு கிடைக்கின்றபோது மண்ணுக்கும், தண்ணீருக்கும் தேவை இருக்காது. யோகிகளுக்குப் பசியும் தாகமும் குறைவாக இருக்கும். மேல் நிலைக்கு உயர, உயரக் கீழ்நிலைகள் இல்லாமற் போகும். இந்த அமைப்புகள் எல்லாம் ஜீவன் தன்னை அறிவதற்காகவே வைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அதைப்பற்றி நாம் அறிவதற்கு முன் நம்மைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள முற்பட வேண்டும்.

கரு மையத் தொடர்பால் தான் நாம் உருவாகி இருக்கின்றோம். இது மரபு வழியால் ஏற்பட்ட தொடர்பு. அடுத்தது கர்மவழித் தொடர்பால் இந்தப் பிறவி நமக்கு வாய்த்திருக்கிறது. இவை சேர்ந்ததுதான் விதி எனப்படுகிறது. இதைத் தவிர நமக்கு இருக்கும் மற்றொரு தொடர்பு சூரிய மண்டலத் தொடர்பு. சூரிய ஒளிச்சக்தி நவக்கிரகங்களின் வழியாக நம்மை வந்தடைகிறது. ஆகவே நவக்கிரகத் தொடர்பு என்றும் இதைச் சொல்லலாம். இதற்கும் அடுத்ததாக அமைந்திருப்பதுதான் ஆத்மத் தொடர்பு.

ஆத்மத் தொடர்பு நம்மை இழுக்கின்றது. ஆத்மா பொய்யானவற்றிலிருந்து நம்மை விடுவித்து முக்தி அடையச் செய்வதற்காகவே நம்மை இழுக்கிறது. மற்றொரு பக்கம் உலகம் அதாவது சமூகம் நம்மை முக்தியடைய விடாமல் வெளிப்புறமாக இழுக்கிறது. நான் என்பது ஆத்மா. என்னுடைய உடலோடு தொடர்பு கொண்டுள்ள எல்லாம் சமூகம். நாம் ஆத்மத் தொடர்பை வளர்த்துக்கொண்டு சமூகத் தொடர்பை ஓரளவோடு வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். அந்தச் சமூகத் தொடர்பையும் கருணையுடன், அன்புடன் கையாள வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் அங்கு எழக்கூடாது.

ஆத்மத் தொடர்பைச் சரியாகக் கையாள்பவருக்குத் தான் சமூகத் தொடர்பும் சரியாக இருக்கும். நம்மை நாம் சரியாகக் கவனிக்காமல் வெளியில் ஈடுபாட்டை அதிகப்படுத்தினால் குழப்பம் ஏற்படும். நம்மைப்பற்றி நாம் சரியாகத் தெரிந்துகொண்டால் தான் பரம்பொருளைப் பற்றி நன்கு அறிய முடியும். அப்படி அறியாததால் தான் சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களை வழிபடாமல் நவக்கிரகம் போன்ற தேவதைகளை, சிறு தெய்வங்களை வழிபாடு செய்து கொண்டிருக்கிறது இந்தச் சமூகம். இது பிழையான வழிகாட்டுதலால் விளைந்து விட்ட தவறு.

காக்கும் கடவுள் விஷ்ணு. விஷ்ணு என்பதற்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்று பொருள். காற்று எங்கும் பரவியிருக்கின்ற சக்தி. பித்தம் என்பது சூடு. நெருப்பு சூடானது. அது ஒளிர்வது. நெருப்புச் சக்திக்கு அதிபதி சிவன். எனவே தான் அவரைப் பித்தன் என்று அழைத்தனர். பித்தம் தலைக்கேறிவிட்டது என்றால் குண்டலினி சக்தி மேலேறிவிட்டது என்று அர்த்தம். சிவசக்தி ஒன்றாகத் தான் குழந்தையின் தலை வழியே உள்ளே நுழைந்து, சிவம் தலையிலேயே நின்றுவிட, சக்தி கீழே படிப்படியாக இறங்கி மூலாதாரத்தில் தங்கிப் பிறகு மீண்டும் படிப்படியாக ஒவ்வொரு சக்கரமாக மேலேறி இறுதியில் ஆறு சக்கரங்களையும் தாண்டி சிவசக்தி ஐக்கியமாக சூடும் குளிர்மையுமாக, சிவனும் சக்தியும் ஒன்றாகி ஜீவன் சிவமாக ஆகி விடுகின்றது. இந்தச் சுழற்சிதான் வாழ்க்கை விளையாட்டு. இப்படிப் பார்த்தால் நானும் பிரம்மமும் ஒன்று என்பது உண்மைதானே!

இது தெரியாமல் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துகொண்டு உலக விஷயங்களில் ஈடுபட்டுத் திண்டாடுவது அறியாமை, மூடத்தனம். எனவே இனி எல்லாவற்றையும் தெய்வீகப் பார்வையாகக் கடவுளின் கண்ணால் பார்க்கப் பழகுங்கள். அப்போது அதில் அன்பும் கருணையும் தான் பெருக்கெடுக்கும். அதே கடவுளின் கண்ணாக இருந்து நம்மையும் நாம் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் இதனுடைய குறைகள் எல்லாம் கர்மா என்பது விளங்கும். இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் ஆன்மீகத்தைப் பிழையாகப் பார்த்தால் அது கட்டாயம் தண்டனை கொடுக்கும் என்பது கண்கூடு.

ஆன்மீக சாதனைகளை ஆர்வமுடன் செய்துகொண்டு வருபவர்கள் இயற்கையுடன் மிகவும் நெருக்கமாக உறவாடி மகிழுங்கள். தினமும் காலையில் உதயமாகி வருகின்ற சூரியனையும் மாலையில் தங்க நிறத்தில் மறைகின்ற சூரியனையும் அன்பு கலந்த மன நிறைவுடன் தரிசியுங்கள். வெறும் கால்களுடன் புல்மீது நடந்து மகிழுங்கள். மண்ணில் கால்களை அளைய விடுங்கள். இயற்கை சூழ்ந்த அழகிய இடங்களுக்குச் சென்று அதனுடன் கலந்து விடுங்கள் .கடல் சார்ந்த நிலங்கள் உள்ள பகுதிகளில் நடந்து ஓடிக் களிப்படையுங்கள். மண் சிகிச்சை இயற்கை வைத்தியத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. மண் தொடர்பால் பல நோய்கள் சரியாகியிருக்கின்றன. காந்தியடிகள் இதில் அதிக ஈடுபாடு காட்டினார். ஆழ்ந்த தியானம், இயற்கையோடு இதயம் கலந்த தொடர்பு ஆகியவற்றைக் கடைப்பிடித்தாலே நன்கு முன்னேற முடியும்.

இயற்கை என்பது விதியைத் தருகிறது. முயற்சி என்பது உயர்வைத் தருகிறது. என்னிடம் இருப்பவை எல்லாமே அவன் தந்தது தான். அவன் எனக்குள் இருந்துகொண்டு உள்ளுணர்வால் அனைத்தையும் எனக்கு உணர்த்துகின்றான். அப்படி அவனால் உணர்த்தப்படுபவற்றை விழிப்புணர்வோடு நாம் இருந்தால் உணரலாம். அப்படி இருக்கின்றபோது நம்மிடமிருந்து தெரிந்தும் தெரியாமலும் உள்ளமும் உணர்வும் கடத்தப்படுகின்றன என்பது தெரிய வரும். அப்படி நிகழ்வதை நிறுத்துகின்ற வலிமை தான் நமது ஆத்மீக உயர்வு.

உள்ளம், எண்ணங்கள் மூலமாகத் தான் நம்மை அறியாமலேயே கடத்தப்படுகின்றது. அறிந்து கடத்தப்படுவது சிந்தனை. எனவே சிந்தனை கூட இனி வேண்டாம். செயலின்மையில் செயல் என்று இதைக் கண்ணன் கீதையில் கூறுகின்றார். உடல் இயங்கிக் கொண்டிருந்தாலும் உள்ளம் இயங்காமல் இருக்கின்ற நிலை இது.

சும்மா ஈஸிசேரில் படுத்துக்கொண்டு இருப்பவன் மனதிற்குள் வீடு கட்டிக்கொண்டு இருப்பான். மனதின் வேலையால் முழு வீடும் கட்டப்பட்டுவிடும். இது கற்பனையில் உருவான வீடு. இது தேவையா? முயற்சியும், எண்ணமும், புத்தியும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நம்மால் ஆன்மீகத்தில் உயர முடியும். ஆனால் அது மட்டும் போதாது. இறைக்கருணையும் கட்டாயம் வேண்டும். நாம் கருணை உள்ளத்துடன் முயன்றுகொண்டே இருந்தால் அதனருள் காலம் கனிந்தவுடன் கிடைக்கும். காலம் கனியவேண்டுமென்பது நம் மனப்பக்குவத்தைக் கவனிப்பதற்காகக் கடவுள் தருகின்ற அவகாசம். சில வேளை இந்த மனம் மாறி விடலாம். கீழ்நிலைக்குப் போய் விடலாம். முயற்சியைக் கைவிட்டு விடலாம். இப்படியெல்லாம் நடக்கிறதா என்று இறைவன் கவனித்துத் தான் அருள்வான். பூரண சரணாகதியுடன் முயன்றால் அருள் கிடைக்கும்.

ஏகப்பட்ட பின்னல்கள் சூழ்ந்த நிலையில் தான் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. இந்த இணைப்புகளையெல்லாம் இல்லாமற் செய்தால் தான் உயர முடியும். அடுத்து அதனோடு நாம் இணைந்துகொண்டு விட்டாலே இந்தப் பிணைப்புகளிலிருந்து விடுபட்டு விடலாம்.

ஜெர்மனியில் ஒரு விஞ்ஞானி மூன்று ரோஜாச் செடிகளைத் தனித்தனியாக வளர்த்தார். முதலாவது ரோஜாச் செடிக்கு அருகில் சென்று தினமும் அதைப் பார்த்து வாய்க்கு வந்தபடி திட்டினார். இரண்டாவது செடிக்கு ஒன்றுமே பேசாமல் நீரை ஊற்றி வந்தார். மூன்றாவது செடியிடம் மிக அன்பாகப் பேசி அதைத் தடவிக் கொடுத்து ஆசை காட்டி வளர்த்தார். முதல் செடி பட்டுப்போய்விட்டது. இரண்டாவது செடி சில பூக்கள் பூத்தது. மூன்றாவது செடி முழுவதுமாகப் பூத்துக் குலுங்கியது. இதன் மூலம் வார்த்தைகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பது விளங்கும். அதனால் தான் நம் வீடுகளில் பெரியவர்கள், சிறியவர்கள் பேசுகின்ற தன்மையைக் கவனித்துத் திருத்துவார்கள். கத்திப் பேசாதே! மெதுவாகப் பேசு! அன்பாகப் பேசு! இனிமையாகப் பேசு! அதட்டிப் பேசாதே! பெரியவர்கள் பேசும்போது குறுக்கில் பேசாதே! பேசாதிருந்தும் பழகு! என்றெல்லாம் சொல்லித் தருவார்கள்.

நம்மை நாமே எதற்கும் லாயக்கில்லை அப்படி இப்படி என்று குறைவாக மதிப்பிட்டுத் தாழ்த்திப் பேசிக்கொண்டே இருந்தால் அதே நிலைக்குப் போய் விடுவோம். வார்த்தைகளில் மங்கலம், அமங்கலம் என்று இரண்டு வகை இருக்கின்றன. நாம் பேசுகின்ற வார்த்தைகள் ஒலியலைகளாக இந்த வெற்றிடத்தில் பரவி நிலைத்திருக்கும். அதை எவ்வளவு காலத்தின் பிறகும் மீட்டெடுக்கலாம். இப்படிப்பட்ட ஒலியலைகளை இழுத்துத்தான் வேத உண்மைகளாக ரிஷிகள் தொகுத்தனர்.

சப்தம், நிசப்தம், அமைதி என்று படிப்படியாக நாம் உயர்வதற்கு இதுவரை கேட்ட ஞான உபதேச வார்த்தைகள் நம் செவி வழி புகுந்து நம்மைப் பண்படுத்தி சாந்தி என்ற அமைதி நிலைக்கு நம்மைக் கொண்டு செல்ல வேண்டும். இதற்கு ஒரே வழி ஒலியும் காற்றும் தொடர்புகொண்டு சொற்களாக உள் புகுந்து உள்ளிருக்கும் ஒளியில் கலந்து மன ஆகாயத்தில் பரவுவது தான். இயற்கையின் பிடியில் நாம் இருந்தால் நமது உள்ள நிலை நிச்சயம் உயரும். செயற்கைத் தன்மையான செயல்களை விட்டு மெதுமெதுவாக விலகப் பழக வேண்டும். அதோடு விலங்குகளோடும் பறவைகளோடும் அன்பு காட்டிப் பழகினால் அவை தம் அன்பை அப்படியே நம்மிடம் வெளிப்படையாகக் காட்டும். இது உண்மை. நாம் பயப்படுகிறோம். பயமில்லாமல் நெருங்கிப் பழகினால் எல்லாமே நம்மிடம் அன்பு காட்டும். பயிர்கள் செடிகொடிகள் அன்பை உணர்ந்து தமது அன்பை அவையும் வெளிப்படுத்தும். தமது வாகனங்களுடனும் கருவிகளுடனும் உரையாடித் தட்டிக் கொடுத்துப் பழகுபவர்கள் அனேகம். சொல்லப் போனால் சில பூச்சிகள், எறும்புகள், மீன்கள், பாம்புகளிடம் கூட வாய்விட்டுப் பேசுபவர்களைப் பார்க்கலாம். கார் ஓட்டும்போது ஏதும் பிரச்னை வந்தால், மக்கார் பண்ணாமல் போடா ராஜா! என்று சொல்வார்கள். இது அன்பை வெளிப்படுத்துகின்ற வழிகளில் ஒன்று.

எமது குரு கைலாச யாத்திரை சென்றிருந்தபோது அங்கு கண்ட ஒரு காட்சி. ஒரு யானைப் பாகன் தன் சொல் பேச்சு கேட்கவேண்டுமென்பதற்காகத் தன் யானைக்கு அடி கொடுத்தான். அந்த யானை அழுதது. அதன் கண்களிலிருந்து கண்ணீர் வருவதைக் கண்ட மக்கள் பதறிப் போய் அனுதாபப்பட்டுக்கொண்டு அதனைச் சுற்றிச் சூழ்ந்தனர். அதைக் கண்ட யானை தன் வாலையும் ஆட்டி, காதுகளையும் ஆட்டித் தலையைத் தாழ்த்தி நன்றி தெரிவித்த பாங்கைக் கண்ட யாத்ரா குழுவினர் வியந்தனராம்.

இவையெல்லாம் எதைக் காட்டுகிறதென்றால் எல்லாவற்றிற்குள்ளும் பிரம்மம் இயங்குகின்றதென்பதைத் தான். நாம் அவற்றிடம் அன்பைச் செலுத்தினால் அவை நமக்குத் திருப்பி அன்பைச் செலுத்தும். மௌன மொழியில் நம்மிடம் பேசும். நம் ஊரில் சைக்கிளை சிங்காரித்து அழகு பார்த்து அதைத் துடைத்துத் துடைத்துப் பேசி, அதில் ஏறும் போது, ஜோரா போடி என் ராசாத்தி! என்று கொஞ்சுபவர்களைப் பார்த்திருக்கிறோமே! சடப்பொருள்களிடமும் அன்பு காட்டி அவற்றைத் தெய்வமாகக் கருதிப் பொட்டிட்டுப் பூசை செய்வது நமது கலாச்சாரம் அல்லவா? ஆயுதபூஜை, பொங்கல், மாட்டுப்பொங்கல் எல்லாம் இந்த வகையில் செய்பவை தான். எல்லாம் அன்பின் வழிபாடு. நன்றி தெரிவித்தல் என்ற அடிப்படையில் தான் இவையெல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றன.

கடவுளின் கண்ணாக நம் கண்களைப் பாவித்து எல்லாவற்றையும் பார்த்து நம்மையும் நாம் பார்க்கப் பழக வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். அப்படிப் பார்த்தால் எல்லாமே கருணைமயமாகி மாறிவிடுகின்ற அற்புதம் நிகழும். உண்மையில் பார்க்கப்போனால் இறைவனின் கண்ணால் தான், அதாவது உயிர்ச்சக்தி நம்முள் இருப்பதால் தான் நாம் வெளி உலகைப் பார்க்கிறோம். இப்படி இதை உணர்ந்து பார்க்கின்ற தருணத்தில் நம்மில் உயர்நிலை மாற்றம் நிகழ்கின்றது. இப்படிப் பார்க்கின்றபோது தான் இறைத்தன்மையோடு கூடிய பார்வை வேறு, மனிதப் பார்வை வேறு என்ற வேறுபாடு நமக்கு நன்கு விளங்கும். இறைப் பார்வை முழுக் கருணை. மனிதப் பார்வை அவரவர் தகுதிக்கேற்றபடி அமைகின்ற சுயநலப் பார்வை.

இந்தக் கருணைப் பார்வையை அடைவதென்பது அவ்வளவு சுலபமல்ல. இதற்குச் சமூகம் எதிர்ப்பாக நிற்கும். அது சுயநலப் பார்வையால் நம்மைப் பார்க்கும். நமது கருணையும் அன்பும் பொருளாதாரத்தைப் பாதித்து விடுமோ என்று குடும்பம் எதிர்க்கும். கருணையால், இருக்கின்ற அனைத்தையும் அள்ளிக்கொடுத்த பக்தர்களின் கதைகளும், அவர்களது மனைவிமார் அவர்களிடம் சண்டை போட்ட கதைகளும் நாம் அறிந்தவை தானே!

பெண்ணைப் படைக்கும்போதே இறைவன் பொருள், பண்டம் மீது ஆசை உள்ளவர்களாகப் படைத்து விட்டான். ஆனால் ஒரு நொடியில் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி விடுகின்ற வைராக்கியமும் பெண்களுக்குத் தான் இருக்கிறது. எனவே நாம் பழகுகின்ற இறைக் கருணைப் பார்வை சிறிது சிறிதாகத் தான் சமுதாயத்திற்குத் தெரிய வரும். அதுவரை ஏற்படுகின்ற இடையூறுகளைப் பொறுமையுடன் தாங்கித்தான் நாம் இதனைப் பழக வேண்டும். நமது லட்சியம் இது என்பதால் மற்றவை ஒரு பொருட்டல்ல என்பது நமக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

அடுத்தது, இந்த உடம்பை வைத்துத்தான் நாம் நமது ஆன்மீக வளர்ச்சியில் முன்னேற வேண்டும். அதனால் உடம்பை நாம் பழிக்கவோ, அலட்சியப்படுத்தவோ கூடாது. உடலை விரதம் அது இது என்று பட்டினி போட்டு வருத்தக்கூடாது. இடைக்காலத்தில் இந்த உடம்பை ஒரு பாரம், சுமை என்று வெறுத்தனர். திருமூலர் தான் இந்தக் கருத்தை மாற்றி உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே! என்று பாடினார். மூச்சுப் பயிற்சி, யோகா, ரசாயனம் கலக்காத இயற்கை உணவு முறை, சரியான அளவில் நித்திரை போன்றவற்றைக் கடைப்பிடித்து உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும். இதில் தெரிய வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், விரதம் நல்லதுதான். சாப்பாடு வயிற்றுக்குள் போனால் கிரகங்கள் இயங்கத் துவங்கும். ஆனால் எளிய தாவர உணவு உண்பவர்களுக்கு விரதம் தேவையில்லை. மாமிச வகைகளை உள்ளே தள்ளுபவர்களுக்குத் தான் தேவை.

நமக்கு சாப்பாட்டில் கவனம் இருக்க வேண்டும். சுற்றுச் சூழலில் கவனம் இருக்க வேண்டும். எலக்ட்ரானிக் பொருள்கள் போன்ற வீட்டில் புழங்குகின்ற மின் சாதனங்கள் எல்லாமே விஷ வாயுவை வெளியேற்றுகின்றன. கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, செல்போன் போன்றவை உடல் நலத்தைப் பாதிக்கக்கூடிய கருவிகள். அவற்றை ஓரளவிற்குத் தான் பாவிக்க வேண்டும். படுக்கை அறைக்குள் எந்த வித மின் சாதனங்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வீட்டில் காற்றைச் சுத்தப்படுத்தும் கருவி கட்டாயம் இருக்க வேண்டும். இவையெல்லாம் செலவு கூடிய விஷயம் தான். ஆனால் உடல் நலத்திற்கு நல்லது. இயற்கையாக இறப்பதற்கு இயற்கையோடு உறவாடி, இயற்கையாக வாழப் பழக வேண்டும்.

இனி எதைப்பற்றியும் மனதில் எந்தவிதப் பிடிப்போ அல்லது முடிச்சோ இருக்கக் கூடாது. ஆத்மாவை அடைகின்ற முயற்சிக்கு அதிக சக்தி தேவை. கவனம் முழுவதும் அதை நோக்கியே இருக்கின்ற விதத்தில் வாழ்க்கை அமைய வேண்டும். இதில் உலக விவகாரங்களை இழுத்துவிட்டுக் கொண்டு அவதிப் படக்கூடாது. சரியான எண்ணம், சரியான முயற்சி என்ற விதத்தில் நம்மைச் செலுத்த வேண்டும். இப்படி எல்லாவற்றையும் அதை நோக்கிய விதத்தில் நாம் செய்து கொண்டு போனால் அது நமக்கு வேண்டிய விதத்தில் எல்லாம் செய்து தரும்.

இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை, இறைவனின் பார்வையால் என்னையும், உலகத்தையும் பார்த்தல், குறைந்த பேச்சு, அதுவும் மங்களகரமாக இருத்தல், முழு கருணை என்ற விதத்தில் தான் இனி ஆன்மீக சாதகர்களின் வாழ்க்கை அமைய வேண்டும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *