ஒளியின் ஒளியே

பிரபஞ்சம் முழுவதும் மிக மெதுவாக ஒரு மாற்றத்திற்கு உட்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த 2012ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதியன்று 26 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும், பூமியும், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று சொல்லப்படுகின்ற ஏழு விண்மீன்களும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்தன.

இந்த நிகழ்வு சூரிய மண்டலத்தைத் திருத்தி அமைக்கின்றது. சூரியனின் வெப்பக் கதிர்கள் இதுவரை பூமியின் ஆர்பிட் எனப்படும் சுற்றளவிற்கு வெளிப்புறமாகச் சென்று கொண்டிருந்தன. இப்போது அவை பூமியின் உள் வட்டத்திற்கு வந்துவிட்டன. இதன் விளைவாக சூரியனில் ஏற்படும் புயல் அலைகளால் வெப்ப அலைகள் புரண்டு வெளிப்படும். இதனால் இயற்கையின் செயல்பாடு தடுமாறும். பு+மியில் எரிமலைகள் வெடித்தல், வெப்ப அளவு அதிகரித்தல், மலைச் சரிவுகள், பெரு வௌளம், பூகம்பம் போன்ற கடுமையான இயற்கைச் சீரழிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியிருக்கின்றது. இதன் பலனாக உலகிற்குப் பேரழிவு உண்டாகும். அத்தருணத்தில் இறைத்தன்மையோடு சேராதவை எல்லாம் அழிக்கப்படும். அதன் பிறகு தெய்வீகமான பொற்காலம் துவங்கும்.

இதனைத் தகவலாக மட்டும் வைத்துக்கொண்டு நமது ஆன்மீக நாட்டத்தை அதிகப் படுத்த வேண்டுமே தவிர இதைப்பற்றிச் சிந்தித்து வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. இயற்கை நியதிகளை மனமுவந்து ஏற்கத்தான் வேண்டும்.

பால்வெளியில் நூறு கோடிக்கு மேல் சூரியக் குடும்பங்கள் இருக்கின்றன. இதில் ஒரு சூரியக் குடும்பம் தான் நமது சூரியக் குடும்பம். இப்படிப் பால் வெளியில் சுழல்கின்ற பல நூறு சூரியக் குடும்பங்கள் கடைசியில் ஒரு காலகட்டத்தில் Black Holeல் சென்றுவிடும். அதே நேரத்தில் எதிர்ப்புறத்தில் White Holeலிலிருந்து புதுப்புது சூரியக் குடும்பங்கள் வெளிப்படும். இதைத்தான் பிரபஞ்ச சுழற்சி என்று சொல்கின்றனர். இயற்கையின் இந்த நியதியைப் பற்றித்தான் கண்ணபிரான் பகவத்கீதையில் விஸ்வரூப தரிசனம் என்னும் பகுதியில் விவரிக்கின்றார். நான் கால தேவனாக இருந்து அனைத்தையும் விழுங்குகிறேன் என்கிறார் அவர். இது மாறாதது. இந்நிகழ்வுகளைத் தடுக்க இயலாது.

இயற்கை அதிசயங்களில் ஒன்று என்னவென்றால், பாம்புகளுக்கு இப்படி இயற்கையில் ஏற்படப்போகின்ற மாற்றங்கள் முன்கூட்டியே தெரிந்துவிடுகின்ற சிறப்புச் சக்தி இருக்கிறது. அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் நில நடுக்கம் வரப்போகிறதென்றால் அதை இப்போதே பாம்புகள் உணர்ந்து கொண்டு விடும். அதுமட்டுமின்றி ஓரிடத்தில் தெய்வீக அலைகள் வீசுவதைப் பாம்புகள் சுலபமாகக் கண்டுகொண்டு விடும். தெய்வீக அலைகளை ஈதரிக் எனர்ஜி என்று சொல்கின்றனர்.

தீவிர ஆன்மீகப் பயிற்சிகளின் மூலம் சாதகர்கள் ஒளி உடல் பெறுகின்ற நிலையில் அந்த உடலில் மின்காந்த அலைகள் ஓடிக்கொண்டிருக்கும். பிறகு அந்த ஒளியுடல் உணர்விலேயே தொடர்ந்து இருந்தால் மின் காந்த அலைகள் ஈதரிக் எனர்ஜியாக மாறும். இப்படிப்பட்டவர்களைத் தேடிப் பாம்புகள் வரும். பாம்புகளுக்கு விழிப்புணர்வு மிக அதிகம். தெய்வீக சக்திகளோடு அவற்றிற்குத் தொடர்பு அதிகம்.

இந்த உண்மையைத் தெரிந்து கொண்ட நிலையில் சற்றே சிந்தித்துப் பார்த்தால் நம் நாட்டில் நாகங்களுக்குத் தரப்பட்டிருக்கின்ற உயர்ந்த ஸ்தானத்தைப்பற்றி ஒவ்வொன்றாகத் தெரிய வரும். சிவபெருமானுக்கு இவை ஆபரணங்கள். பார்வதிக்கு நாகபூஷணி என்ற அவதாரப் பெயர். விஷ்ணுவிற்கு ஆதிசேஷன் என்ற பாம்பு படுக்கை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மகான்களிடம் பாம்புகள் நெருங்கிப் பழகுவதையும், அவர்களும் அவற்றிடம் அச்சமின்றி அன்பு காட்டிப் பழகியதாகக் கூறப்படுகின்ற கதைகளையும் எண்ணிப் பாருங்கள். பாம்பாட்டிச் சித்தர் என்றே ஒருவர் வாழ்ந்து வந்தார். நமக்குள் இருக்கின்ற குண்டலினி என்னும் தெய்வீக சக்தியைப் பாம்பாகத்தான் சொல்லியிருக்கின்றனர்.

அடுத்து சொல்ல வருவது என்னவென்றால், வீட்டில் தீபம் ஏற்றி வைக்கும்போது அந்தத் தீபஒளிக்கு மேலாக சாம்பல் நிறம் கலந்த ஊதா நிறத்துடன் ஓர் ஒளி அந்தச் சுடரைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும். தீபத்தின் மேலாக அப்படி ஒளிர்வது தான் ஈதரிக் எனர்ஜி. நாம் கடவுளுக்குக் காட்டப்பட்டது என்று நினைத்துக் கற்பூர ஒளியைத் தொட்டுக் கண்களில் ஒத்திக்கொள்கிறோம். ஆனால் உண்மையில் அந்தக் கற்பூர ஒளிக்கு மேலாக வெளிப்படும் தெய்வீக சக்தியைத் தான் நாம் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அந்தத் தீப ஒளியை ஒற்றி நம் தலையின் மீதுதான் கையை வைக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் பெறுகின்ற தெய்வீக சக்தியை நம் தலை வழியே உடலில் சேர்ப்பதாகப் பொருள் படும். எல்லாச் சுடர்களுக்கு மேலாகவும் இந்தச் சாம்பல் கலந்த நீல ஒளி ஒளிரும். உற்றுப் பார்த்தால் சூரியனைச் சுற்றி மேலாகத் தனியாக ஓர் ஒளி தெரியும். சந்திரனிலும் இந்த ஒளி தெரியும். நன்றாகக் கவனிக்க வேண்டும். இது தான் தெய்வீக ஒளி.

இந்த நூல் முழுவதிலுமே நம்மைச்சுற்றி நமக்குத் தெரியாமலேயே பழக்கங்களாக நாம் செய்து வருகின்ற, அல்லது கடைப்பிடிக்கின்ற பல விஷயங்கள் இப்படி அறிவுபூர்வமாக விளக்கப்பட்டுக்கொண்டு வருவதை அவதானியுங்கள். இந்த விளக்கமும் ஞான உபதேசத்தின் ஓர் அங்கம் தான். ஏனெனில் நமது ரிஷிகள் ஒவ்வொரு சிறிய செயலையும் மிக மிக நுணுக்கமான தெய்வீகத்துடன் இணைத்து எப்படி நம்மை அதனுடன் தொடர்புபடுத்தி இந்த வாழ்க்கை முறையை வடிவமைத்துத் தந்திருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டால் தான் நாம் அந்த ஒழுக்க நெறிகளின்படி முறையாக வாழ முடியும்.

அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும் யுரேனியம் என்னும் கனிமப் பொருள் உலகிலேயே கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் மட்டும் தான் அதிக அளவில் கிடைக்கின்றது. அந்த யுரேனியத்தைச் சுத்தப்படுத்த யுரேனியத்தால் ஆன ஒரு வளையம் செய்து அதற்குள் யுரேனியத்தைச் செலுத்தினால் சுத்தம் அடையும். அவ்வளவு ஒளியும் சக்தியும் கொண்டது அது. வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும் என்பார்கள். இந்த விதத்தில் நம் உடலில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த மின்காந்த அலைகளைத் தெய்வீக சக்தி மிகுந்த அலைகளாக மாற்ற அந்த ஈதரிக் எனர்ஜியைத் தான் நாம் சேகரிக்க வேண்டும். இந்தத் தெய்வீக அலைகள் நமது செல்களில் கலந்து விட்டால் இந்த உடல் மிளிரும். ஞானிகளைப் பார்த்தவர்களுக்கு இந்த உண்மை விளங்கும்.

நமது உடலில் பலப்பல அடுக்குகளாகத் தெய்வீகசக்தி அமைந்திருக்கிறது. ஒவ்வொரு அடுக்காகத் தாண்டி அதை அணுக வேண்டும். ஆன்மீக சாதனைப் பயிற்சிகளில் முன்னேறிக்கொண்டு போகின்றபோது நாம் தனிமைப்பட்டுவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு தோன்றும். யாருடனும் ஒட்டமுடியாமல், பழக முடியாமல் மனதால் தனித்துப் போவது போன்ற உணர்வு அது. அப்படி ஏன் ஏற்படுகிறதென்றால் அதற்கு மேல் சாதனையில் முன்னேறவிடாமல் ஒரு சக்தி நம்மைத் திசை திருப்பப் பார்க்கும். ஒருவித பயத்தை ஏற்படுத்தும். அதில் மயங்கிச் சாதனையை விட்டு விலகாமல் ஒரே குறிக்கோளுடன் எனக்கு இது தான் போக வேண்டிய பாதை. மற்றவை பொருட்டல்ல என்ற திட வைராக்கியத்துடன் அதிலேயே ஒன்றிவிட முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் இந்த அடுக்குகளைக் கடக்க முடியும். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி என்ற பாடல் தெரியும் தானே. நாம் சார்ந்திருக்கின்ற எதுவுமே நம்மோடு கூட வராது. எவ்வளவோ பாதுகாத்த இந்த உடம்பே கூட வராது. விட்டு விட்டுத்தான் போக வேண்டும்.

இந்த நிரந்தரமின்மையைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும். இதை நமக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு வாழ வேண்டும். நம் உண்மைத் தன்மை என்ன என்று தெரியாமல் சின்னத் தனமாக, சிறுமைக் குணங்களுடன் வாழக் கூடாது. நிலையற்ற இந்த வாழ்க்கைக்காக மனிதாபிமானம், மனிதத்தன்மை, பிறரையும் நம்மைப்போல் நினைத்தல் போன்ற நற்குணங்களைத் தூக்கி எறிந்துவிட்டு வாழக்கூடாது. ஊரில் வாழ்ந்தபோது எப்படியெல்லாம் நம்மைப் பற்றி நாம் உயர்வாக நினைத்துக்கொண்டு இனபேதம் பார்த்து கீழ்மையான விதத்தில் எல்லாம் பிறரை சிறுமைப்படுத்தி நடத்தியிருக்கிறோம் என்பதை இந்த இடத்தில் யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மைப் போல் தான் அவரும் என்ற கருணை எத்தனை பேருக்கு இருந்தது?

ஈடு இணையற்ற இந்து மரபில் வந்தவர்கள் நாம். நமது மரபுப் பின்னணி மிக உயர்ந்த ஆன்மீக அடிப்படையில் அமைந்த ஒன்று. ஆனால் நாம் எப்படி வாழ்ந்தோம்? பிரிவினை பார்த்து, பேதம் பார்த்துத் தாழ்த்தி, உயர்த்திக் கேவலப்படுத்தி, நான் பெரியவன் என்று மார் தட்டி வாழ்ந்ததன் பலன் கடைசியில் என்னவாயிற்று? நடுநிலையில் நின்று தான் இதை யோசிக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் கூட்டுக் கர்மாதான் ஒன்று சேர்ந்து இத்தனை இன்னல்களுக்கும் காரணமாய் அமைந்தது என்று தைரியமாகச் சொல்லலாம். இங்கு இது எதற்குச் சொல்லப்படுகின்றதென்றால் சிந்திக்காமல் செயல்பட்ட தன்மை மாறிச் சிந்தித்துத் திருத்திக் கொள்ள வேண்டும். எல்லோரையும் சமமாகப் பார்த்து அன்பு, கருணையுடன் இனியாவது ஒன்றுபட்டு நீதி நேர்மையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

ஞானம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் சந்தோஷம் என்பது எனக்குள் தான் இருக்கிறது, அது வெளியில் இல்லை என்பது தெரியும். மற்ற மனிதர் அனைவரும் அந்த சந்தோஷத்தை வெளியில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு வகைகளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மாறிக்கொண்டே இருக்கின்ற வாழ்க்கையில், இந்த உலகத்தில் மாறாத ஒன்றாக இருப்பது நான் என்ற உணர்வு மட்டும் தான். அது நமக்குள்ளேயே ஒளியாக, ஒலியாக இருக்கிறது. அதுதான் நான் என்பதைத் தேடிக் கண்டுகொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய சாதனை. அது உள்ளேயிருந்துகொண்டு தன்னைக் கண்டறியும்படி சதா தூண்டிக்கொண்டே இருக்கிறது. அதைக் கவனிக்காமலேயே தான் பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆத்மாவைச் சுற்றியிருக்கின்ற ஆனந்த கோசத்தில் மின் காந்த அலையில் உள்ள ஒளியைத் தரிசித்து அதைத் தொடர்ந்து தியானித்து, அந்த ஒளியைத் தன்னில் நிலை நிறுத்திப் பிறகு உடல் முழுவதிலும் அதனைப் பரவவிட்டு, இந்த உடலை ஒளி உடலாக மாற்றுகின்ற முயற்சியில் தான் ஓர் ஆத்ம சாதகன் ஈடுபடுகின்றான். ஒளி உடம்பாகத் தன்னை மாற்றிக்கொண்டதும் பரவெளியின் ஒளியில் இந்த ஒளியுடலுடன் கலந்து அந்தப் பரவெளியில் தங்கியிருந்துவிட்டுத் திரும்புகின்ற பயிற்சியை மேற்கொள்கின்றான். அதற்கு அடுத்த கட்டம், மின் காந்த அலைகளால் ஏற்பட்ட ஒளியில் தங்கியிருந்தபடி தியானம் செய்யச் செய்ய, ஆன்மீகப் பாதையிலேயே வாழ்க்கை தொடர்ந்து போய்க்கொண்டிருக்க, அப்படிப்பட்டவர்களுக்கு ஈதரிக் எனர்ஜி தென்படும். அந்த ஈதரிக் எனர்ஜிதான் ஆத்மாவைச் சுற்றி ஒளிர்ந்துகொண்டிருக்க்pன்ற ஒளி வட்டம். அதைக் கண்டுணரத்தான் இனி ஆன்ம சாதகர்கள் முயல வேண்டும். நம்மையும் பிரபஞ்சத்தையும் இணைக்கின்ற ஒரு சக்தியை ஈதர் என்று பூமி சாத்திரத்தில் நாம் படித்திருக்கின்றோம்.

நாம் காண்கின்ற உலகம் மின் காந்த அலை. இந்த மின்காந்த அலைக்கு நடுவில் இருப்பது தெய்வீக அலை. இந்த இரண்டு சக்திகளையும் சரியாகக் கண்டறிய வேண்டும். அதை எப்படிக் கண்டறிவது என்றும் சொல்லியாயிற்று. இந்த ஈதரிக் எனர்ஜி ஒருவரிடம் விரிந்தால் அவரிடம் ஞான ஒளி வெளிப்படும். கௌதம புத்தர் ஞானம் பெற்றார், ரமணர் திருவண்ணாமலையில் கடுந்தவம் செய்து ஞானம் பெற்றார் என்று சொல்வதெல்லாம் இந்த ஈதரிக் எனர்ஜியை அவர்கள் பெற்று அது அவர்களிடமிருந்து விரிவடைந்ததால் தான்.

இந்த ஈதரிக் எனர்ஜியை அடைவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. 1 வரையறையற்ற கருணையை அளவின்றி வெளிப்படுத்துவது. 2 நம்மை அவரிடம் ஒப்படைத்தல் என்னும் முழு சரணாகதி. இப்படி முழுமையாக நம்மை ஒப்படைத்துவிட்டு அவன் விரும்புகின்ற விதத்தில் செயல்படுதல் என்பது மூன்றாவது படி. நான் இதைச் செய்கிறேன். இதைப்பற்றித் தீர்மானிப்பது அவன் விருப்பம். அவன் என்னுருவத்தில் செயல்களைச் செய்கிறான். நான் அவன் விருப்பத்தை நிறைவேற்றுகின்ற கருவி. அவ்வளவுதான். இந்த நிலையில் நான் இல்லை. அவன் தான் இருக்கிறான். இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவன் கர்த்தா, நான் கருவி. இயக்கம் அவனுடையது. இயங்குவது மட்டும் நானாகிய இந்த உடல் என்று வாழ வேண்டும்.

இந்த நிலையில் இல்லாமல் அல்லாவிற்குப் பகடி விட்ட மௌல்வி கதைபோல் செயல்படக் கூடாது. ஒரு மௌல்வி குட்டையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் ஒரு மீனும் கிடைக்கவில்லை. சோர்ந்துபோன அவர் உடனடியாக மீன் கிடைத்தால் முதல் மீனை அல்லாவிற்குத் தருவேன்! என்று வேண்டிக் கொண்டார். சில நிமிடங்களில் ஒரு பெரிய மீன் இவருக்குப் பிடிபட்டது. அதை எடுத்துத் தன் கூடையில் போட்ட அவர், இந்த மீன் சிறியதாய் இருக்கிறபடியால் இது எனக்கு. அடுத்து இதைவிடப் பெரிய மீனாய்த்தான் வரும். அது அவருக்கு! என்று சொல்லி மீண்டும் தூண்டிலைப் போட்டார். அப்போது கூடையில் போட்ட மீன் துள்ளிக் குட்டையில் குதித்துவிட்டது. தூக்கிவாரிப்போட்ட நிலையில் அவர், அல்லாவிற்குப் பகடி கூட விளங்கவில்லையே! நான் சொன்னதை நம்பி விட்டாரே! என்று புலம்பினாராம். அப்படி நாம் கடவுளிடம் போக்குக் காட்ட முடியாது. அப்படிச் செய்தால் சரியாக அடி விழும்.

உலகத்த்pல் நாம் அனுபவிக்கின்ற எந்த சுகம் என்றாலும் திகட்டிவிடும். சலித்துவிடும். ஆனால் ஆத்மாவை அனுபவிக்கின்ற சுகம் மட்டும் திகட்டாது. தெவிட்டாத தௌளமுதமாக இனிக்கும். விஷயசுகம் எல்லாமே ஓரளவிற்கு மேல் போதும் என்றாகிவிடும். ஏற்க முடியாமல் மறுக்கும். ஆத்ம சுகமோ மேலும் மேலும் இழுக்கும். தன்னுள் தன்னைச் சேர்க்கும் வரை அது விடாது. இப்படி ஓர் அற்புத அமைப்பை அந்தப் பிரம்மம் எப்படி அமைத்து வைத்திருக்கிறது என்று பாருங்கள்.

இப்போது நெருப்பைப் பற்றிய ஒரு தகவல். வயிற்றில் ஒரு நெருப்பு இருக்கிறது. உணவைச் செரிக்க வைக்கின்ற அது ஜடராக்கினி. வயிற்றின் கீழ்ப்புறத்த்pல் உள்ள அக்னி காமாக்னி. இது இனப்பெருக்கத்திற்காக இருக்கிறது. சித்தத்தில் எரிவது சிதாக்னி. இந்த சிதாக்னி சித்தத்தில் எரிந்தால் ஜடராக்னியும், காமாக்னியும் அடங்கி விடும். கடைசியாக இப்போது நாம் தெரிந்து கொள்வது ஆத்மாக்னி. ஈதரிக் எனர்ஜிதான் ஆத்மாக்னி. இது ஆத்மாவைச் சுற்றி ஒளிர்வது.

ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஓரோர் அக்னி இருக்கிறது. ஆத்மாக்னி மூன்றாவது கண். அது ஞானஒளி. நம் உள்ளேயிருக்கின்ற ஒவ்வொரு அக்னியும் கர்மாவால் எரியும். ஆத்மாக்னி எரிந்தால் மற்ற அக்னிகள் அடங்கிவிடும். ஒவ்வொரு வீட்டிலும் விளக்கு ஏற்றுவது ஈதரிக் எனர்ஜியை வெளிப்படுத்தவும், தெய்வீக அலைகள் வீட்டில் நிறைந்திருப்பதற்காகவும் தான். ஒளியில் உள்ள ஒளி வட்டமும், கருணையும் நம்மில் ஒளிர்ந்தால் தெய்வீக ஒளியாக அது பிரகாசிக்கும். அப்படி ஒளிரத் தொடங்கினால் முக்தி நிச்சயம்.

அப்படி இந்த இறுதி நிலையை எய்த முடியாமற் போய்விட்டால் கூட சொர்க்கத்தில் இந்திர பதவி, குபேர பதவி, எம பதவி போன்ற தேவப் பதவிகளை அடையலாம். அந்தப் பதவிகள் எல்லாம் நிரந்தரமற்றவை. மாறக்கூடியவை. சாதனையைப் பாதியில் விட்டவர்கள் இந்தப் பதவிகளைப் பெற்று செயலாற்றுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சக்தி ஓட்டம் உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் ஊடுருவி இணைக்கின்றது என்பதையும், உரிய பொருள்களைத் தேர்ந்தெடுத்து இணைப்பதன் மூலம் சக்தி ஓட்டத்தைச் சீராக்க முடியும் என்பதையும், நவக்கிரகங்கள் இந்தச் சக்தி ஓட்டத்தைப் பயன்படுத்தித்தான் இயங்குகின்றன என்பதையும், இந்த நவக்கிரகங்களைச் சரியாக இயங்கச் செய்யவும், செயல்படாமலேயே நிறுத்தி விடவும் முடியும் என்பதையும், இந்த உலகத்திற்கு இந்து சாஸ்திரங்கள் தான் சொல்லியிருக்கின்றன.

நடைமுறையில் நவக்கிரகங்கள் சம்பந்தமானவற்றை யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நிறம். அந்த நிறத்தில் ஆடை அணிவதன் மூலம் அந்தக் கிரக ஓட்டத்தை நம்முள் இயங்கச் செய்ய முடியும். வௌளை ஆடை அணிபவருக்குச் சந்திரனும், சுக்கிரனும் சக்தி கொடுக்கின்றனர். நீலமும், கருப்பும் சனீஸ்வரனுக்குரியவை. சிவப்பு நிறம் சூரியனுக்குரியது. காவி நிறத்தில் எந்தக் கிரகமும் இயங்க முடியாது. அதே போல் நவக்கிரகங்களுக்கும், நவதானியங்கள், நவ உணவுப் பண்டங்கள், ஒன்பது விதமான சமித்துக்கள், ஒன்பது விதமான ரத்தினங்கள், ஒன்பது வித மலர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். மிக நுணுக்கமாக இவையெல்லாம் ஆராயப்பட்டு சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் முறைப்படி இவற்றைப் பயன்படுத்தத் தெரியாமல், வியாபார நோக்கத்தோடு சுயநலம் கலந்து மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

எனவே தான் உலக சுகங்களுக்கு வழி வகுப்பவையான இவற்றின் வழியே ஆசையின் தூண்டுதலால் போய், மேலும் கர்ம வலையில் சிக்கிக்கொள்ளாமல் நேரடியாகப் பிரம்மத்துடன் தொடர்பு கொண்டு அனைத்திலிருந்தும் விடுபடுகின்ற வழியைக் குரு காட்டுகின்றார். ஒளியை வழிபட்டு அந்த ஒளியின் வழியே உள்ளத்தில் ஒளி வழிபாட்டினை ஏற்படுத்தி அதன் மூலம் ஒளியில் பயணித்து அதனுடன் கலந்து விடுகின்ற பாதையை உபதேசத்தின் மூலம் அவர் உணர்த்துகின்றார்.

நான் விரும்புபவை எதுவும் எனக்கு வேண்டாம். நீ விரும்புபவற்றை எனக்குத் தா. நான் அதை ஏற்கிறேன். ஏனென்றால் நான் உன்னுடைய கருவி மட்டுமே என்று அவனிடம் முழுமையாக நம்மை ஒப்படைத்து வாழப் பழகினால் தெய்வீக அனுபவங்களும், தெய்வம் நமக்கு விஷயங்களை உணர்த்துகின்ற அனுபவங்களும் தானாக நடக்கும். எத்தனையோ பேர் வாழ்க்கையில் தெய்வம் இப்படி உடனிருந்து உதவுவதை அனுபவித்திருக்கிறார்கள்.

நாம் விரும்புபவை எல்லாம் வயதிற்கும் அனுபவத்திற்கும் ஏற்றபடி மாறிக்கொண்டு வரும். பத்து வயதில் விரும்பிய பொம்மைகளை இப்போது வைத்துக்கொண்டு விளையாடுகிறோமா? நேற்று பிடித்த உணவும், உடையும் இன்று பிடிக்கின்றதா? இல்லையே! ஏன்? நமது சுவைகள் மாறிக்கொண்டே இருக்கும். இந்நிலையில் மாறாத ஒன்றை நாம் பற்றிக்கொண்டுவிட்டால் அது நாம் விரும்பியவற்றை மட்டுமல்லாது, நமக்கு நன்மை தருபவற்றையும் தரும். அல்லது கர்மாவிற்கேற்றபடி நம் வாழ்க்கையை அமைத்துத் தந்து வழி நடத்தி, முக்திக்குக் கொண்டு செல்லும். எது சிறந்தது என்பது தெரிகிறதா?

“நீங்கள் தொழுகைக்கு வாருங்கள். அப்படி வரும்முன் உங்கள் ஒட்டகத்தைக் கட்டிப் போட்டுவிட்டு வாருங்கள்.” என்று நபிகள் நாயகம் கூறினார். இதன் பொருள் என்ன? நாம் பூரண சரணாகதி நிலையில் நம்மை அவனிடம் ஒப்படைத்துவிட்டு அதே சமயம் நமது கடமைகளையும் ஒழுங்காகச் செய்துகொண்டிருக்க வேண்டும். நான் எல்லாம் அவனிடம் ஒப்படைத்துவிட்டேன் என்று சொல்லி இஷ்டத்திற்கு ஆடக்கூடாது. எதிலும் பற்றின்றி, தியானத்தில் ஆழ்ந்து, உரிய முறையில் சமூகத்துடன் ஒட்டியும் ஒட்டாமலும், எதனாலும் பாதிப்பு அடையாமலும், அசையாத தீபம் போன்ற மன நிலையில் இருந்து வந்தால் மற்ற அனைத்தையும் அது பார்த்துக்கொள்ளும். ஆத்ம ஒளி, முழு கருணை, சரணாகதி இம்மூன்றும் முக்திக்கு உரிய வழிகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *