இறைவனில் இணைதல்

நமது சனாதன நெறிமுறைகளை மிகச் சிறந்த முறையில் வகுத்துத் தந்த மாமுனிவர்கள் மனித வாழ்க்கையின் எல்லாக் கோணங்களையும் நன்கு ஆராய்ந்து இந்த வாழ்க்கை முறையை ஆழ்ந்த மறைபொருளுடன், சாதாரண நடைமுறையாகச் செய்து வைத்திருக்கின்றனர். தெய்வ வடிவங்களின் உருவ அமைப்பு, புராணப் பாத்திரங்களின் வடிவம், ஆலயங்களின் அமைப்பு போன்ற சகலத்தையும் குறியீடுகளாக அவர்கள் வடிவமைத்துத் தந்திருக்கின்றனர்.

உதாரணத்திற்கு இராமாயணத்தில் வருகின்ற இராவணனுக்குப் பத்து தலைகள் என்று வருகிறது. உண்மையில் அவனுக்குப் பத்துத் தலைகளா இருந்தன! இல்லை. பத்துத் தலைகளுக்கு உள்ள ஆற்றல் அல்லது பத்துத் தலைகளுக்குரிய அகந்தை அல்லது பத்துத் தலைகளுக்குரிய பிரச்னைகள் அவனுக்கு இருந்தன என்பதன் குறியீடு அது. ஆனால் மதம் எல்லாவற்றையும் நேரடியாக எடுத்துக் கையாண்டதால், பொருள் புரியாத நிலையில் சந்தேகப்பட்டுக்கொண்டு மக்கள் அவற்றைப் பிழையாகக் கொண்டு திரிகின்ற நிலை ஏற்பட்டது. உள் அர்த்தம் தெரிந்து கொள்ளாத நிலையில் நாத்திகவாதிகளும், அந்தக் குறியீடுகளுக்கு எதிரான வாதங்களைக் கொண்டுதான் மதத்தைத் தாக்குகின்றனர். உட்பொருள் தெரியாததால் பதில் கூற முடியவில்லை.

அலை ருபமான ஆத்மா நமக்குள் ஜீவனாக இருக்கிறது. ஒருவர் மரணமடைந்துவிட்டால் ஆத்ம சாந்தி அடைய வேண்டும் என்று தான் பலரும் சொல்லுவார்கள். ஆனால் அவர்கள் ஆத்மா என்று குறிப்பிடுவது ஜீவனைத்தான். ஆத்மா எப்போதுமே சாந்தியாகத் தான் இருக்கிறது. ஜீவன்தான் பல பிறப்புகள் எடுத்து அல்லல் படுகின்றது. ஆத்மா நிலையானது. அது அழிவதில்லை. இந்த உண்மை புரியாமல் ஜீவாத்மாவை ஆத்மா என்று சொல்லுகின்றனர்.

இப்படிப்பட்ட இந்த உண்மைகளைப்பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதற்கு வேத ஞானம் தேவை. அடிப்படை உண்மைகளை ஓரளவிற்காவது மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டால் இப்போது நிலவி வருகின்ற மதவெறுப்புகள், பேதங்கள், சைவ வைணவப் போராட்டம் போன்ற எதுவுமே இருக்காது. இந்தப் பிரிவினைகள் எல்லாமே உண்மை புரியாமல் செயல்படுகின்ற நிலை.

நமது வேதங்கள் ஐந்தொழில்களைப் பற்றிக் கூறுகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்னும் இவை பற்றிய மூல உண்மைகள் புரிய வேண்டும். நமது இந்து தர்மம் படைத்தல் தொழிலுக்குப் பிரம்மனையும், சரஸ்வதியையும் குறியீடுகளாக அமைத்திருக்கின்றது. காத்தலுக்கு மகா விஷ்ணுவையும் லட்சுமியையும், அழித்தல் என்னும் பிரிவுக்கு ருத்திரனையும் துர்க்கையையும், அருளல் என்பதற்கு மகேசன் மகேஸ்வரி என்னும் தெய்வங்களையும், மறைத்தலுக்கு சதாசிவன் மனோன்மணி என்பவர்களையும் வடிவமைத்துள்ளது.

ஓர் அரசாங்கம் செயல்படுகின்ற அமைப்பில் தான் இந்தத் தெய்வீக ஆட்சியும் நடைபெறுவதாக வரையறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரம்மாவும் சரஸ்வதியும் மருத்துவம், கல்வித்துறைக்குரிய கடவுள்கள். விஷ்ணுவும் மகாலட்சுமியும் நிதித்துறை, தொழில்துறை போன்றவற்றை நிர்வகிக்கின்றனர். அழித்தலுக்குரிய ருத்திரனும் துர்க்கையும் உள்துறையையும், நீதித்துறையையும் கவனிக்கின்றனர். இந்த எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக வைக்கப்பட்டது ஆதி பராசக்தி. அதாவது அனைத்துத் தெய்வங்களுக்கும் மூலமாகிய பேரருள் சக்தி. அதுதான் சிவமாக, சக்தியாக, பிற தெய்வங்களாக, தேவதைகளாக விரிந்து நிற்கிறது. இந்த மூலத்தை அறிந்தால் பேதமில்லை. படைத்தல் என்பது தெரியும். காத்தல் என்பதும் தெரியும். அழித்தல் என்பது இல்லாமற் செய்துவிடுவது அல்ல. ஆத்மாவில் படிந்துள்ள குறைகளை நீக்குவது. ஆத்மாவாக இருந்த ஒன்று ஜீவனாக வந்து குறைகளோடு வாழ்கின்றது. மனித நிலையில் ஜீவனாக இருப்பதை இல்லாமற் செய்வதன் மூலம் ஆத்மாவின் குறைகளை நீக்குதலைத் தான் அழித்தல் என்ற ஒரு வார்த்தை உட்பொருளாகக் கொண்டிருக்கிறது. உடல் தான் அழியுமே தவிர ஆன்மா அழியாது.

ஆன்மீக சாதகர்களாகிய நாம் மனமென்னும் மரப் பெட்டிக்குள் இவ்வளவு காலமும் சேகரித்து வைத்திருந்த குப்பைகளையெல்லாம் ஞான உபதேசத்தின் மூலமும், தியானத்தின் மூலமும் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு நாளும் புதுப்புது சமுதாயக் குப்பைகள் எப்படியோ அந்தப் பெட்டிக்குள் விழுந்து விடுகின்றன. அவற்றை உடனுக்குடன் சுத்தப்படுத்தத்தான் தினமும் கட்டாயம் இரண்டு வேளை தியானம் செய்யச் சொல்வது. அதற்கும் அதிகமாகப் போயிற்றென்றால் மூன்று வேளையும் செய்யலாம். இந்த அடிப்படையில் தான் பிராமணர்கள் அவ்வப்போது சேர்ந்து விடுகின்ற மனக்குப்பைகளை எரித்து விடும்படி மந்திரங்களைக் கூறி மூன்று வேளை சந்தியாவந்தனம் என்னும் சடங்கைச் செய்வது. 108 காயத்ரி மந்திரங்களைச் சொல்வது, சூரியனை வணங்குவது போன்ற எல்லாம்.

குடும்ப நிகழ்வுகள், சமய நிகழ்வுகள், சமுதாய நிகழ்வுகள் ஆகியவற்றில் போய்க் கலந்து இருந்துவிட்டு வந்தால், நம் மனம் ஏராளமான குப்பைகளை சுமந்து கொண்டு வந்து சரியாகக் கஷ்டப்படும். நாம் பார்க்கின்ற பார்வைக்கு ஏற்ப நமது சிந்தனை அமையும். எதையும் நடுநிலையாகப் பாரபட்சமின்றி யாரும் பார்ப்பதில்லை. விருப்பு வெறுப்புகளோடுதான் ஒரு விஷயத்தைப் பார்த்து அதை மனதில் ஏற்றித் துன்பப் படுகின்றோம்.

இயற்கையின் வலைப் பின்னல்களுக்குள் தான் நாம் இருக்கிறோம். இயற்கை தான் இந்த உடலையும் ஆள்கின்றது. உடல் மண்ணால் ஆனது. சாப்பிடுதல் என்பது என்ன? மண் தான் பலவேறு உணவுப் பொருள்களாக மாறியிருக்கின்றது. மண்ணுக்கு மண் உணவு. இப்படித்தான் ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டும்.

இயற்கையோடு இணைந்து வாழ்கின்ற வாழ்க்கை சிறந்தது. இப்படி வாழ்கின்றபோது நமது சூட்சும சரீரம் அமைதியடைகின்றது. உடல், மனம், புத்தி எல்லாம் அலை பாயாமல் அடங்கியிருக்கின்றன. பிரம்மாண்டத்தை ஒரு தடவை மட்டும் யாரும் பார்க்க மாட்டார்கள். திரும்பவும் ஒரு தடவை கட்டாயம் பார்ப்பார்கள். மலை, கடல், யானை, புகைவண்டி போன்றவற்றை நாம் திரும்பத் திரும்பப் பார்த்து ரசிப்பது அவை பிரம்மாண்டமாய்த் தெரிவதால் தான். ஏனெனில் இயற்கை பிரம்மத்தின் விரிவு. அது பிரம்மாண்டமானது. பேராற்றல் கொண்டது.

இயற்கை எப்பொழுதுமே நம்மைப் பாதுகாக்கின்றது. நம்மை அழிப்பது இயற்கைக்கு மாறான நமது நடவடிக்கைகள் தான். உணவு, பழக்கவழக்கம் எல்லாம் இயற்கைக்கு மாறாக நம்மிடம் இருந்தால் நாம் கஷ்டப்படுவோம். இந்த உண்மை புரிந்தவர்களெல்லாம் இயற்கை உணவு, மூலிகை மருந்து என்று மாறிவிடுகின்றனர். குளிர் சாதன வசதிகளை விடப் பூஞ்சோலையின் குளிர்மை மிக அற்புதமாக இருக்கிறது. இதை அறிந்து தான் மக்கள் இயற்கைச் சூழலை விரும்பி யாத்திரைகள் மேற்கொள்வது, தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது, பூமியில் படுத்து உறங்குவது, கால்களை மடக்கி உட்கார்ந்த நிலையில் மலசலம் கழிப்பது போன்ற அன்றாடப் பழக்க வழக்கங்களை எல்லாம் (இப்படி ஒவ்வொன்றையும் பற்றிச் சொல்லலாம்) இயற்கையோடு இணைந்து செயல்படுகின்ற தன்மை கொண்டவைகளாகப் பழக்கத்தில் வைத்திருந்தனர். இந்த ஆண்டு இயற்கை வலைப் பின்னலின் சக்தி மிக அதிகமாக இருக்கிறது. இந்த இயற்கைச் சூழலில் நன்கு இணைந்து ஆழ்ந்த தியானம் செய்தால் நமது கர்மப் பதிவுகளை நிச்சயம் இல்லாமல் அழித்து விட முடியும்.

மாக்வெல் யுனிவர்சிட்டி விஞ்ஞான ரீதியாக மிகத் துல்லியமாக ஆராய்ச்சி செய்து DNAயை ஒரு ரப்பரால் எழுத்தை அழிப்பதைப்போல் செயற்கையாக அழித்துவிடலாம் என்று அறிவித்திருக்கின்றனர். ஆனால் அது எப்படி என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நாமோ அதைத் தியானத்தால் அழிக்க முடியும் என்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.

நமது ஆத்ம சக்தி உடல் இயக்கத்தால் இழப்பதை விட அதிக அளவில் மனஓட்டத்தினால் செலவழிகின்றது. உலக விவகாரங்களில் ஈடுபட்டு மனம் அது வேண்டும் இது வேண்டும் என்று விஷய சுகங்களுக்காக அலை பாய்கின்றபோது, நமது உயிர்ச் சக்தி வீணாகின்றது. இதை ஈடுகட்டுவதற்கும் தியானம் தான் உதவும். மன ஓட்டம் தியானத்தால் தான் கட்டுப்படுத்தப்படும் பொருள்களில் ஏற்படுகின்ற ஆசை, அவற்றை எதிர்பார்க்கின்ற மனப்போக்கு எல்லாம் சக்திச் செலவு. கிடைத்தால் சரி! கிடைக்காவிட்டால் பரவாயில்லை என்ற மனப்போக்கு இருப்பது நல்லது.

நமது ஆத்மாவை நாம் அடைய உயிர்ச் சக்திதான் உதவ வேண்டும். எனவே இந்த உயிர்ச் சக்தியை நாம் பாதுகாக்க வேண்டும். அறிவு ஆட்சி நடைபெறுகின்ற இன்றைய வாழ்வில் அருளாட்சி நடைபெற வேண்டும். அருள் வெளிப்பட்டால் தான் தெய்வீகம். கருணை வெளிப்பட்டால் அது சேவையாக மாறும். அன்பு, கருணை என்பது ஆத்மாவிலிருந்து நேரடியாக வெளிப்படுகின்ற அலைகள். இந்த அலையைத் திரும்ப நமது ஆத்மாவிற்கே செலுத்தி அன்பாகக், கருணையாக அதனுடன் ஒன்றி அதுவாகவே மாற முயற்சிப்பது தான் தியானம்.

தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டின், “நான் அமைதியாய் இருந்தேன். பேரறிவு எனக்குள் வந்து, இதை அப்படிச் செய், இப்படிச் செய் என்று சொன்னது. எனது ஆராய்ச்சிக்கு அது உதவியதால் தான், நான் சிந்தித்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெற்றேன்” என்று கூறினார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, தான் என்னும் உணர்வை இயங்காமல் நிறுத்தி அமைதியாய் இருந்தபோது பிரம்மம் உதவிய தன்மையைத்தான் இப்படிச் சொல்லியிருக்கின்றார். நாமும் நம்மை அமைதிப்படுத்தி அதனுடன் இணைந்தால் அது உடனடியாக உதவும். உண்மை என்ன என்பதை அறிந்த பின்பு மிருக நிலையிலிருந்து மனித நிலைக்கு மாறி, மனித நிலையிலிருந்து தெய்வீகப் பண்புகளுக்கு உயர்ந்து பின்பு தெய்வம் எப்படிச் செயல்படுகின்றதோ அந்த விதத்தில் அத்தகைய அன்பும் கருணையும் நம்மிடமிருந்து வெளிப்பட வேண்டும். பேரருள் பெரும் சக்தி தான் நானாக இருந்து என்னை இயக்குகின்றது, எனக்கு முன் இருந்து பழகுகின்றவையும் அதே பேரருள் பெரும் சக்தியால் இயங்குபவைதான், ஆகவே அவையும் நானும் ஒன்று என்ற உணர்வு நம்மிலிருந்து சதா வெளிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அன்பும் கருணையும் பெருகும்.

இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்லப்பட வேண்டும். இந்த நூல் அறிவுத் தரத்தை உயர்த்துவதற்காக எழுதப்பட்ட நூலல்ல. நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி நுணுக்கமாக ஆராய்வதற்காகத் தரப்பட்ட ஞான உபதேசம. இதில் திரும்பத் திரும்பப் பல விஷயங்கள் கூறப்படலாம். மனதைப் புண்படுத்தக்கூடிய அல்லது வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுகின்ற விஷயங்கள் வரலாம். கூறியது கூறல் குற்றம் என்கிற மரபோ, சமயத்தை அல்லது சமுதாயத்தைச் சாடுதல் என்கிற பார்வையோ இங்கு இல்லை. நம்மை நாம் அறிய வேண்டும். பிறகு நம்மை நாமே திருத்திக்கொண்டு முறையாக, வகையாக வாழ வேண்டும். ஞானப் பாதையில் சென்று தெய்வ நிலைக்கு நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். அதற்குத் திரும்பத் திரும்ப நம்மைப் பற்றிய விஷயங்களைப் பற்றிய உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து அறிய வேண்டும் என்பதுதான் இந்நூலின் குறிக்கோள். இவ்வகையில் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான உண்மை இங்கு ஆராயப்படுகின்றது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற உயர் உணர்வு இது. இந்த நினைவுடன் இதைப் படித்தால் தான் முழுப் பயனையும் அடைய முடியும்.

இலங்கை என்ற எழில் சூழ்ந்த ஓர் அழகிய தீவில், இருப்பதைக் கொண்டு மன நிறைவுடன் சுற்றமும் நட்பும் சூழ இறைபக்தியுடன் வாழ்ந்து கொண்டிருந்தது தமிழ்ச் சமூகம். கல்வியறிவிலும், பண்பாட்டிலும் தன்னிறைவுடன வாழ்ந்த இந்த மக்களைத் தமிழ் நாட்டிலிருந்து வீசிய தமிழ் வாழ்க என்னும் அரசியல் காற்று உசுப்பி விட்டது. தமிழ் மொழி என்னும் பற்று போதையாகத் தலைக்கேற, இரு இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்த சூழ்நிலை மாறி அரசியல்வாதிகளின் சிந்தனையற்ற சந்தர்ப்பவாத நிகழ்வுகளால் இனக்கலவரம் என்ற நிலைமைக்கு நடைமுறையைக் கொண்டு சென்றன. இதைத் தமிழர் பட்ட இன்னல்கள் என்ற கண்ணோட்டத்திலிருந்து மாறிப் பிரம்மத்தின் செயல் என்று பார்த்தால், பிரம்மம் தமிழ் இனத்திற்கு எவ்வளவு பெரிய நன்மையைச் செய்திருக்கின்றது என்பது விளங்கும்.

பட்டவை எல்லாம் பெருங் கொடுமைகள் என்றாலும் ஒரு புறம் அழித்தல் என்ற செயலின் மூலம் கட்டுப்பாடு நிலை குலைந்தாலும், பரிணாமத்தில் உயர்ந்தவர்கள், தாம் பெற்றிருந்த வசதி வாய்ப்புகளால் அந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்திலிருந்து விடுபட்டுப், பரந்து விரிந்த இந்த உலகத்தில், பெரும்பாலும் சகல நாடுகளிலுமே இப்போது தமிழர்கள் என்று வாழ்கின்ற நிலை ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது. இது அழித்தல் அல்ல. மாற்றி அமைத்தல் என்பது தான் உண்மை.

அங்கு மிகச் சாதாரண நிலையில் வாழ்ந்தவர்கள் அல்லது ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் எல்லாம் கூடப் புலம் பெயர்ந்து வந்த நாடுகளில் உயர்ந்த அந்தஸ்தில் வாழ்கின்ற நிலை வாய்த்தது. இதிலும் மற்ற நாடுகளை விடக் கனடா நாட்டில் வாழ வழி அமைந்தது இறைக் கருணை என்றே சொல்ல வேண்டும். இந்த நாடு ஒரு புண்ணிய பூமி. இந்த நாட்டு மக்கள் கண்ணியமும் தன்னிறைவும் பெற்ற மக்கள். அவர்களின் உயர்ந்த உணர்வு அலைகள் இந்த நாடு முழுவதிலும் நிறைந்திருப்பதை இங்கு அடிக்கும் காற்றின் தழுவலிலேயே உணர முடியும். சொந்த நாட்டைவிட்டு நாடோடிகளாக ஓடித் திரியவிட்டாலும், வாழ்க்கையின் சகல வசதிகளையும் அள்ளித் தந்து நம்மவரின் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்தி உலகப் பார்வையில் தமிழனுக்கு என்று ஓர் உயர்வைத் தந்திருக்கிறது, அன்று நடந்த ஈழத்தமிழ் இனக்கலவரம் என்பது உண்மை.

இதுவரை நீயா நானா என்றிருந்த நிலை மாறி நீயும் நானும் என்ற உணர்விற்கு இறங்கிக் காலம் கொடுத்த அடியில் இன்று நாட்டின் சூழ்நிலையும் மாறித்தான் இருக்கின்றது. இந்த உண்மையை நன்கு ஆராய்ந்து புரிந்துகொண்டால் இன்னும் ஆக்க சக்தியாக நம்மை நாம் உயர்த்திக்கொள்ள முடியும். இனியும் மொழிப்பற்று, இனப்பற்று என்றெல்லாம் கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே முடியும். வேறுபாடற்ற உயர் உணர்வு நிலைக்கு நம்மை உயர்த்திக்கொண்டு போகின்றபோது இனியும் எதையும் பிரிவுபடுத்திப் பார்க்கக்கூடாது. மொழிப்பற்றை, அதனை வளப்படுத்துவதில் காட்ட வேண்டும். இனப்பற்றை அதன் ஒற்றுமைக்காகச் செலவழிக்க வேண்டும்.

இதை அறிவு ரீதியாகக் கற்ற கல்வியின் வழியாக அல்லது மனித நிலையில் நின்று பார்த்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அந்த நிலை குறியீடுகளை நேரடியாக எடுத்த நிலை, குறியீடுகள் உணர்த்துகின்ற உட்பொருளைச் சிந்திக்காத நிலை. குறியீடுகளோ உண்மையை அறிவதற்காகக் வைக்கப்பட்டவை. ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை வெளிப்படும்.

எனவே தான் சிந்தனையில் ஏற்பட்ட தவறு, தத்துவத்தை அறிவதில் ஏற்பட்ட தவறு, செயல்முறையில் ஏற்பட்ட தவறு ஆகிய எல்லாவற்றையும் கிருஷ்ணருக்கே அர்ப்பணம் செய்கிறேன் என்ற பொருளில் மந்திரஹீனம், தந்திரஹீனம், க்ரியாஹீனம், பக்திஹீனம் என்று எந்த பூஜைகளைச் செய்தாலும் கடைசியில் செய்தவற்றில் ஏதும் பிழை இருந்தால் மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்யும் மந்திரம் நடைமுறையில் சொல்லப்படுகிறது. செய்த பிழைகளைத் திரும்பவும் செய்து கொண்டே போகக்கூடாது என்பதே இதன் உட்பொருள். திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்வதும் பிறகு மன்னிப்பு கேட்பதும் வளர்ச்சிக்கு உகந்தவை அல்ல.

நான் பரிணாமப்பட்டு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு வருகிறேன் என்பதைப் பேரருட்பெரும் சக்தி உணர்ந்தால், நான் என் அன்பைப் பெருக்கி அனைத்தையும் சேவையாகச் செய்தால், அந்த அன்பின் உண்மைத் தன்மையை அது உணர்ந்தால் அந்த நொடியே நம்மில் தன்னை அது வெளிப்படுத்தும். நாம் என்ன செய்கின்றோம் என்பது தான் அதற்கு முக்கியமே தவிர, நமது அறிவுக் கூர்மையோ, கெட்டிக்காரத்தனமோ, சாமர்த்தியமோ, சாதனையோ அதற்குத் தேவையில்லை. செயல்படும் விதம் தான் அதற்குத் தேவை. இந்த உலகத்திற்குரிய சாதுரியம் கடுகளவும் தேவையில்லை. கசிந்துருகிக் கண்ணீர் மல்கிப் பிழை பொறுத்துக் கருணையுடன் அன்பு செலுத்தி அனைத்துயிரையும் அணைத்துச் செல்கின்ற தன்மை நம்மில் பெருக வேண்டும். சேவையும் அன்பும் கலக்காத செயல்பாடு வீண். நாம் செய்வதற்குத் தான் அது பலன் தருமே தவிரக் கடவுள் என்ற பெயரில் நினைப்பது, சொல்வது எல்லாம் பொய் வேடமாகிவிடும். 24 மணி நேரமும் இடைவிடாமல் இறைத் தொண்டு புரிவதாகக் கூறுகின்றவர்கள், மடாதிபதிகளாக, ஆத்திகவாதிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்கின்றவர்கள் ஏன் சட்டத்தின் பிடியில் சீரழிகின்றார்கள்? இறைசக்தி ஏன் அவர்களைக் காக்கவில்லை? சிந்திக்க வேண்டும். நாம் போடும் கணக்கு வேறு, அவன் போடும் கணக்கு வேறு.

நாம் செய்த செயலைப்பற்றிப் பெருமிதப்பட்டுக்கொண்டால் கூடத் தண்டனை கிடைக்கும். நமக்குத் தரப்பட்ட வாய்ப்பு என்று வருபவற்றைச் சேவையாக ஏற்றுப் பணிவுடன் செய்ய வேண்டும். செய்த பின் நன்றியுடன் இறைச்சக்தியை வணங்கி, நான் சேவை செய்ய இனியும் வாய்ப்புகளைத் தந்தருள்க என்று பிரார்த்தனை செய்துகொண்டிருக்க வேண்டும். நான் தான் எல்லாம் செய்தேன், என்னைத் தவிர யாரால் செய்ய முடியும்? என்று கர்வப்பட்டால் மூக்கு உடையும்.

பேரறிவுடன் இணைந்திருக்கும் நிலையில் எப்பொழுதும் செயல்பட்டால், எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலேயெ உதவிகளும் வாய்ப்புகளும் தாமாகத் தேடி வரும். நம்மை நாமே உற்று நோக்கி ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை தௌளத்தெளிவாகத் தெரிய வரும்.

இயற்கையின் வலைப் பின்னலை வெட்டாமல் அதற்குள் இருந்துகொண்டே ஆத்மாவுடன தொடர்பு கொண்ட நிலையில் செயல்படுகின்றபோது வெளியிலிருந்து உதவி வருவதோடு நமக்குள்ளும் செய்கின்ற ஆற்றல் பெருகும். புதிய புதிய யோசனைகள் உள்ளிருந்து கிடைத்துச் செயலைச் சுலபமாக்கும் நமது தேவைகளையெல்லாம் கிடைக்கச் செய்து நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். அந்த ஆனந்தத்தை அனுபவிக்கின்றபோது அதற்கு உடனடியாக நன்றி தெரிவிக்க வேண்டும்.

கடமைகளைச் செய்வதன் மூலம்தான் கர்மாவைக் கழிக்க முடியும். அப்படிச் செய்கின்றபோது அது தர்மமாகச் செய்யப்பட வேண்டும். அதர்மமாகச் செயல்பட்டால் கர்மா மேலும் மேலும் அதிகரிக்கும். தர்மமாகச் செய்தால் கர்மா குறையும். அனைத்தையும் சமமாகப் பார்த்தால் தான் தர்மமாகச் செயல்பட முடியும். எல்லாமே ஒன்றுக்கொன்றாக உட் தொடர்பு கொண்டவை. எல்லாமே ஒரு கணக்குடன் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. கர்மா நன்றாகக் கழிந்த நிலையில் தான் ஞானம் பெற முயல முடியும். அப்படிப்பட்டவர்களுக்குத் தான் இறையருள் ஞான வழியைக் காட்டித் தரும்.

கர்மாவை அழிக்க வேண்டும், என்பது தெரிகிறது. எப்படி அழிப்பது? என்பது தெரியவில்லை அல்லவா! எண்ணங்கள் எழாத நிலையில் இருந்தால் கர்மா ஏறாது. பலா பலன்களை எதிர்பார்த்து ஒன்றைச் செய்கின்றபோது அதன் விளைவு கர்மாவாக மாறும். தேவைதான் எண்ணமாகிறது. எதற்காகவும் ஆசைப்படாமல் எதையுமே எண்ணாமல் செய்கின்றபோது கர்மா ஏறாததோடு கடமையாகச் செய்வதால் இருக்கின்ற கர்மாவும் இல்லாமற் போகும். யாருக்கு எண்ணமில்லையோ அவருக்குக் கர்மா இல்லை. எண்ணமே இல்லாத நிலையில் நாம் பிரம்மத்துடன் இணைந்திருக்கின்றோம். அப்படிப்பட்ட தெய்வீகமான அந்நிலையில் அது வரும் அது பேசும் விழிப்புணர்வு இருக்கும். எண்ணம் செயல்படாது. எண்ணம் செயல்படாததால் சக்திச் செலவழிப்பு இருக்காது. விழிப்புணர்வு இருந்தால் நம்முள் ஈரத்தன்மை மிகும் இந்தக் குளிர்த்தன்மை நமக்கும் சுகமளித்துப் பிறருக்கும் சுகத்தைக் கொடுக்கும். விழிப்புணர்வோடு கருணை கலந்தால் இறைத் தன்மை வெளிப்படும். தான் கஷ்டப்பட்டு யாரையும் வெறுக்காமல் மற்றவர்களின் நன்மைக்காகப் பாடுபட்டதால் தான் மகாத்மா காந்தி, மதர் தெரஸா, நெல்சன் மண்டேலா போன்றவர்கள் உலகம் முழுவதிலும் போற்றப்படுகிறார்கள். அவர்கள் தங்களை வருத்திக்கொண்டு மற்றவர்களுக்கு சுகமளித்தார்கள். இது தான் உண்மையான கருணை.

நம்மைப் பிரம்மம் இந்துக்களாகப் படைத்து இந்த ஆன்மீக நெறிமுறைப்படி வாழ வைத்திருப்பதும் அதன் கருணை தான். மிக அதிக அளவில் ஞானிகள் அவதரித்தது இந்தியாவில் தான். ஏனெனில் இந்து தர்மநெறியில் வாழ்பவர்களால் தான் ஞானியாக முடியும். மற்ற நாடுகளில் ஞானிகள் பிறந்தாலும் அவர்கள் எதிர்க்கப்பட்டார்கள். அந்த சமுதாயம் அவர்களை எதிரியாகப் பார்த்து அடக்கி ஒடுக்கியது. இந்துக்களோ ஞானியரைப் போற்றி வணங்கி அவர்களின் வழிகாட்டுதலில் வாழ்ந்தனர்.

இயற்கையோடு ஒத்து வாழ்ந்து அதிலிருந்து வெளிப்படும் தெய்வீகத்தை உணர்ந்து தம்மை அதனோடு பிணைத்துக்கொண்டு வாழ்கின்ற வாழ்க்கை ஓர் இந்துவுடையது. மேற்குலகம் இயற்கையை ஆராய்ச்சிக்கு உரியதாக எடுத்துக்கொண்டு வசதிகளைப் பெருக்கிக்கொண்டது. அவர்களின் ஆராய்ச்சிகளுக்குப் பின்னணியாக இந்திய ஞானிகள் தான் உதவி செய்தனர் என்பது வரலாறு. உலகத்தில் எத்தனையோ ஞானிகள் பிறந்திருந்தாலும் காலப்போக்கில் வருகின்ற காலத்தில் மகரிஷி ரமணரும், வள்ளலாரும் தான் நிலைத்து நிற்பார்கள். சிறப்புற ஒளிர்வார்கள்.

இத்தகைய ஞானப் பின்னணியில் பிறந்து வாழ்கின்ற பேற்றினை இப்பிறவியில் பெற்றுள்ள நாம் இனியும் காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலுத்தி வீணாக்கி விடாமல் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் முழுமையான அன்பு கலந்த நிலையில் செய்து கொண்டு சதா சர்வ காலமும் இறைசக்தியோடு இணைந்துள்ள நிலையிலேயே, அதனோடு தொடர்பு கொண்ட நிலையிலேயே வாழ முற்படுவதுதான் உண்மையான ஆத்மீக சாதனை. இப்படி எண்ணங்களற்ற நிலையில் கடமையைச் சரியாகச் செய்வதன் மூலம் கண்ணுக்குத் தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கின்ற கர்மச் சக்கரத்தை நாம் சரியாகச் சுற்ற வைக்கிறோம். வருகின்ற பொற்காலத்திற்குத் தகுதியுடையவராக ஆவதற்கு உங்களை இறைவன் கைகளில் உடனடியாக ஒப்படையுங்கள் என்பது தான் குருவின் அருளாசி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *