உண்மை சுடும்

உயிர்ச்சக்தியை இந்துமதம் பிராணன் என்றும், விஞ்ஞானம் ஈதரிக் எனர்ஜி என்றும், சீனர்கள் ச்சீ என்றும், ஜப்பானியர் கீ என்றும் சொல்கின்றனர். சக்தி ஓட்டத்தை மருந்தால் சீர்ப்படுத்துவது ஆயுர்வேத சிகிச்சை முறை. ஊசிகளைப் பயன்படுத்திச் சீர் செய்வது அக்குபங்சர். கைகளால் மாற்றியமைக்கின்ற முறை ரெய்க்கி. ஒளி பொருந்திய மனம் தனது உயிராற்றலாகிய ஒளிச்சக்தியைப் பயன்படுத்தித் தொலைவில் இருப்பவருக்கும் சிகிச்சை செய்கின்ற முறை ஒளி சிகிச்சை (Light Healing).

இந்த உடல் வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூன்று தோஷங்கள் கொண்டது. வாதம் என்பது வாயு. பித்தம் என்பது உஷ்ணம். சிலேத்துமம் என்பது குளிர்ச்சி. ஆயுர்வேத சிகிச்சை இவற்றைச் சரிசெய்கின்ற வித்தில் நடைபெறும். காலையில் எழுந்ததும் சில பேருக்குத் தலையைச் சுற்றும், பித்தநாடி அதிகமாயிருக்கும். மதிய வேளையில் வாதம் என்னும் வாயு அதிகரிக்கும். இரவில் சளியும், இருமலும் அதிகரிக்கும். இவ்வாறு சக்தி 3 விதமாகப் பிரிந்து செயல்படுகின்றது.

இந்த உடல் சம்பந்தப்பட்ட மூன்று தோஷங்களை நம் முன்னோர் சாதாரண நடைமுறையில் எப்படிச் சமப்படுத்திச் சமாளித்தனர் என்று ஆராய்ந்து பார்த்தால் வியப்பாக இருக்கும். ஆமாம்! தாம்பூலம் தரித்தல் என்பது நமது மரபு. போன தலைமுறை வரை, ஏன் இன்றும் கூட மூன்று வேளை வெற்றிலை போடுகின்ற வழக்கம் நம்மவருக்கு உண்டு. அவர்கள் எப்படி வெற்றிலை போடுவார்களென்றால் காலையில் பாக்குச் சீவலை அதிகம் வைத்து வெற்றிலையையும், சுண்ணாம்பையும் குறைத்துப்போட்டு மெல்லுவார்கள். மதிய வேளையில் சுண்ணாம்பைத் தூக்கலாக வைத்து, வெற்றிலைப் பாக்கைச் சிறிது குறைத்துப் போடுவார்கள். இரவு வேளையில் சுண்ணாம்பும், பாக்கும் நிதானமாக இருக்கும். வெற்றிலையின் அளவு அதிகமாக இருக்கும். விஷயம் தெரிந்தவர்களுக்கு நான் சொல்ல வருவது சட்டென்று விளங்கும்.

பாக்கு பித்தத்தைத் தணிக்கும் குணத்தையும், சுண்ணாம்பு வாயுவைக் கண்டிக்கும் குணத்தையும், வெற்றிலைக் காரம் குளுமையைக் குறைக்கும் குணத்தையும் கொண்டவை. இம்மூன்றையும் ஏற்ற இறக்கமாகப் பாவித்துப் பெரியவர்கள் உடம்பின் வாத, பித்த, சிலேத்தும நாடிகளின் இயக்கத்தை வெற்றிலை போடுதல் என்ற சாதாரண பழக்கத்தின் மூலம் சரி செய்து கொண்டார்கள். புகையிலை போடுவது என்பது இடையில் எங்கோ ஏற்பட்ட கூடாத பழக்கம். புகையிலை சேர்ப்பதால் எந்தவித மருத்துவப் பயனுமில்லை. அடிக்கடி புகையிலை போட்டால் புற்றுநோய் தான் வரும். புகையிலைக்கும் தாம்பூலத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.

இந்த ஒரு தகவலின் மூலமே நமது வாழ்க்கை முறையின் ஒவ்வொரு நுணுக்கமான அம்சமும் எவ்வளவு அறிவு சார்ந்த, நலம் சார்ந்த முறையில், வாழ்க்கையை வளமாக வாழ்கின்ற விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஏன் என்றால் சனாதன தர்ம முறையிலான இந்த வாழ்க்கை அமைப்பு இறைச் சக்தியோடு முழுமையாகத் தங்களைப் பிணைத்துக்கொண்டு இறைத்தன்மையோடு வாழ்ந்த ஞானிகளாலும், சித்தர்களாலும், தவ முனிவர்களாலும் வகுக்கப்பட்டது. இந்த அமைப்பில், உணவே மருந்து.

இப்படி அன்றாட வாழ்க்கை முறையின் மூலமே சக்தியைச் சமப்படுத்திச் சேமிக்கின்ற முறை வைக்கப்பட்டிருந்தும் அவற்றிலிருந்து நாம் விலகி வாழ்கிறோம். இந்த நிலையில் இந்தச் சக்திச் சேகரிப்பிற்காகத்தான் ஆன்மீக சாதகர்கள் மூச்சுப் பயிற்சி, தியானம், போன்ற சாதனைகளில் ஈடுபடுகின்றனர்.

இந்தச் சக்தியைச் செலவழித்து எல்லாவற்றையும் அனுபவித்தால் அது போகம். இந்த அனுபவித்தல் அதிகரித்தால் ரோகம். எந்தவித அனுபவத்திற்கும் ஆசைப்படாமல் அடங்கி எனக்குள் நான் இணைந்திருந்தால் அது யோகம். சக்தியைச் சேமித்தல் யோகம். எனவே தான் ஆன்மீகவாதிகள் உலகத்தில் ஒட்டாமல் விலகியிருந்து யோக சாதனைகளில் ஈடுபட்டு சக்தியைப் பெருக்குகின்றனர். ஓரளவிற்காவது அடிப்படை சக்தியைச் சேமித்தவர்களுக்குத் தான் யோகம் சித்திக்கும். இந்த யோகத்தைப் பயன்படுத்தித்தான் நாம் உயர் நிலைக்கும் போக முடியும். யோகம் என்பது நாம் ஆத்ம சாதனையில் முன்னேறுவதற்கான ஏணி.

சேமிக்கப்பட்ட பரிசுத்தமான சக்தியிலிருந்து சொல்லாக வெளிவருவது மந்திரம். அந்தச் சக்தியைச் சிந்தித்துக் கவனமாகச் செலவழிக்கின்றபோது அது தந்திரமாகிறது. இதைத்தான் திட்டம், தத்துவம் என்று சொல்வது. எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு தத்துவம் இருக்கும். இப்படிச் சிந்தனையில் உருவாகின்ற தத்துவம் தான் கிரியையாக, செயலாக வெளிப்படுகின்றது. அந்தத் தத்துவத்தின் வெளிப்பாடு மந்திரம். இந்த மந்திரம், தந்திரம், யந்திரம் எல்லாம் இந்து மதத்திற்குரியவை. ஆனால் இதை ஏனோ தாந்தரீகம் என்று கெட்ட சக்திகளாக வைத்துப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

இதைப்பற்றி நாம் சிந்திக்காமல் யோக முறையைப்பற்றிப் பார்க்கலாம். நமது யோகமுறை மிக உயர்ந்த நிச்சயமான ஒரு வழி. சாதாரண வாழ்க்கையில் தெய்வீக சக்திக்கும், நமது கர்மாவிற்கும் இடையில் நாம் சிக்கி அவதிப்படுகின்றோம். சென்ற பல பிறவிகளில் நாம் எப்படி நமது உயிர்ச் சக்தியைப் பயன்படுத்தினோமோ அந்தத் தடங்கள் நமது பதிவாக இருப்பதால் இந்தப் பிறவியில் அவற்றிற்கேற்ப பதிலளிக்கின்ற விதத்தில் வாழ்க்கை அமைந்து நாம் தடுமாறுகின்றோம்.

இதிலிருந்து விடுபடுவதற்கு என்ன வழி? இந்தப் பிறவியில் நாம் பெற்ற ஞானத்தால் இனியாவது புலன்களையும் மனத்தையும் கண்டபடி அலைந்து திரிய விடாமல் அவற்றை உள்முகமாகத் திருப்பி ஒன்றுபடுத்தி உயிர்ச் சக்தியில் இணைந்திருக்கப் பழகுவதன் மூலம் தான் இந்த அலைக்கழிப்பிலிருந்து நாம் விடுபட முடியும்.

நமது இந்த யோக சாதனைகளுக்கு இடையூறாகச் சமூகம் தனது குப்பைகளைக் கொட்டிக்கொண்டே இருந்து நம்மை வெளியில் இழுக்கும். செய்தித்தாள்களும், தொலைபேசிகளும், தொலைக்காட்சிகள், வானொலிகளும், உறவுத் தொடர்புகளும் நமது யோக இணைப்பைக் குலைக்கும். சமூகக் குப்பைகளைத் தவிர்க்க முடியாது. ஆனால் நாம் அதில் இழுபட்டு ஈடுபட்டு விடுகின்றோமோ அல்லது குப்பையென்று ஒதுக்கித்தள்ளி அவற்றைக் கிளறாமல் ஒதுங்கி இருக்கின்றோமோ என்பதை நன்கு ஆராய வேண்டும்.

மனமில்லாத நிலைக்குப் போய்க்கொண்டிருக்கின்றபோது இவை மிகுந்த இடையூறாக இருக்கும். பிறருடன் பழகுவது கூட மிகக் கஷ்டமாக இருக்கும். சமுதாயத்திற்கு ஏற்றபடி இயங்கத் தெரியாது. இந்த நிலையில் சம்சாரிகளாக உழன்று
கொண்டிருக்கின்ற ஆன்மீக சாதகர்கள் படுகின்ற பாடு மிகக் கடினமான ஒன்று. நாம் வேறு உலகம். சமுதாயம் வேறு உலகம். நம்மை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏளனமாகப் பேசுவார்கள். நம்மால் அவர்களுக்கு ஏற்றபடி ஓடியாடித் திரிய முடியாது. இப்படி முரண்பாடான நிலையில் எப்படி சமாளிப்பது?

இவர்களும் ஆத்மாக்கள், இவர்களுக்கு எனது மன ஓட்டம் விளங்காது என்று புளியம்பழமும் ஓடும் ஒட்டாதது போல், தாமரை இலைத் தண்ணீர் போல், நாம் நமக்குள் ஒன்றிய நிலையில் இருந்துகொண்டு வெளி உலகில் நடிக்கத்தான் வேண்டும். ஏனெனில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அந்தக் காலத்தைப் போல் காட்டுக்கெல்லாம் ஓடி விட முடியாது. குடும்பம், உறவுகள், வாழ்க்கை முறை எல்லாம் இருக்கின்ற நிலையில் கடமையாக நினைத்து எல்லாம் செய்து கொண்டு ஒட்டாமல் இருக்க வேண்டும். சமூகம் என்ற பலாப்பழத்தைக் கையாளுகின்றபோது கையில் ஆன்மீகமென்ற எண்ணெயை நன்றாகப் பூசிக்கொண்டு செயல்பட வேண்டும்.

இந்த நிலையைப் பற்றித்தான் பகவத்கீதையில் கர்மயோகம் விவரிக்கின்றது. உலகத்தில் குடும்பம், தொழில், உத்தியோகம் என்று எல்லா பந்தங்களிலும் ஈடுபட்ட நிலையில் இருப்பவர்கள், இதயத்தை இறைச்சக்தியிடம் வைத்துக்கொண்டு உடம்பை உலக விவகாரத்தில் ஈடுபடுத்தி வாழ்வது. இப்படி ஒட்டாமல் கர்மாவை மட்டும் கடமையாகச் செய்து கொண்டிருந்தால் அந்த கர்மா ஜீவனைப் பாதிக்காது. அந்தக் கர்மா யோகமாக ஆகிவிடும். அந்நிலையில் வாழ்க்கை மந்தமாக இல்லாமல் முக்திக்கு வழியாக அமைந்து விடும். அகங்காரம் நீங்கிய நிலையில் ஞானம் பெற்றுப் பாவமோ புண்ணியமோ பாதிக்காத விதத்தில் வாழ்கின்ற வாழ்க்கையே கர்ம யோகமாகும்.

இந்த மனம் சமுதாய ரீதியாக, மதரீதியாகக் குடும்ப ரீதியாக வெட்டிச் செதுக்கி வரையறைகளுக்கு உட்பட்ட விதத்தில் இருக்கின்றது. நமது சிந்தனை ஓட்டம் இப்போது ஞானம் பெறுகின்ற நிலையில் இந்தக் கட்டுபாடுகளுக்குள் போய், சிக்கி அவதியுறாமல் வெளியில் நின்று பழக வேண்டும். மேற்குறித்தவை சம்பந்தமான பிரச்னைகளில் நின்று தடுமாறுகின்ற நிலை இனி இருக்கக்கூடாது. திட்டமோ பட்டியலோ போட்டுக் கொண்டிருக்காமல், மிகச் சுதந்திரமாக நிகழ்காலத்தில் நின்று செயற்படத் தெரிய வேண்டும்.

சூரியன் மேஷ ராசியில் இருக்கின்ற தருணத்தில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆழ்நிலைத் தியானத்தில் தினமும் ஈடுபட்டு வந்தால் அப்படிச் செய்பவரின் DNAயில் உள்ள பதிவுகள் அழிந்து போய்விடும். இது உண்மை. சூரியன் அப்படிப்பட்ட ஒரு கிரக நிலை அமைப்பில் இப்போது ஆற்றல் பெருகி நிற்கின்றது.

எனக்குள் இருக்கின்ற உயிர்ச் சக்தி சர்வ வல்லமை வாய்ந்த பிரம்ம சக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. நான் எனது புலன்களை உள்ளிழுத்துக் கண்களை மூடி உள்ளத்தை எனது உயிர்ச் சக்தியில் கலந்து தியானத்தில் மூழ்கினால் சர்வ வல்லமை படைத்த இறைச்சக்தி எனது உயிர்ச் சக்தியில் இறங்கி என்னுள் அளப்பரிய ஆற்றலை நிச்சயம் அளிக்கும். இதற்கு வலிமை வாய்ந்த விடா முயற்சியுடன் கூடிய ஆழ்நிலைத் தியானம் ஒன்றுதான் வழி.

இந்த ஆண்டு (2013) மிகச் சிறப்பான ஓர் அற்புத ஆண்டு. இந்த ஆண்டு முதல் தான் பொற்காலம் துவங்குகின்றது. கீழ்நிலை உயிர்கள் வௌளம், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சக்திகளால் ஏற்படுகின்ற பேரழிவில் சிக்கினாலும், பரிணாமத்தில் முன்னேறி நிற்கின்ற உயர்நிலை மாந்தர், எங்கு ஒரு ஞானி இருக்கின்றாரோ அந்தப் பகுதியில் இருக்கின்ற மக்கள், ஆகியோர் சுகமாக எந்தவித நலிவுமின்றி இருப்பார்கள்.

அப்படி அந்தப் பொற்காலத்தில் நாமும் தங்கியிருக்கவேண்டுமென்றால் நாள் முழுவதும் இறைவனின் கருணையிலேயே உள்ளத்தைச் செலுத்திக்கொண்டு யோக நிலையில் வாழ வேண்டும். தினமும் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை தியானம் செய்ய வேண்டும். அதற்கு இப்போதிலிருந்தே நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் மனமாகிய சக்தியை அதனிடம் (இறைச்சக்தியிடம்) ஒப்படைத்து விடுவதுதான். தொடர் தியானத்தில் இருப்பதென்பது இது தான். இதைத்தான் ஞான ஒடுக்கம் என்கின்றனர். என்னுடைய எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்து விடுவது ஞான ஒடுக்கம். என்னை அழித்தாலும், வாழ வைத்தாலும் எல்லாம் எனக்கு நீ தான் என்ற உயர்நிலை. என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே! என்ற பாடலின் பொருள் புரிகின்றதா?

இருந்த அமைப்பை மாற்றியமைப்பது பிரளயம். இப்படி மாற்றியமைக்கும்போது நல்லதாகவும் இருக்கும். கெட்டதாகவும் இருக்கும். இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அது இறை விருப்பம். அவன் செயல். எந்த நிலையிலும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயார். ஏனென்றால் உடம்பு தான் அழியுமே தவிர நான் அழிவதில்லை என்பது உண்மை. நான் என்பது அவன். அவனே என் உயிர்ச் சக்தியாக என்னுள் இருக்கிறான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல், இன்றைய உலகம் பல்வேறு கவர்ச்சிகளிலும் சிக்கி இழுபட்டு உயிர்ச்சக்தியைச் சீரழிக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பிரம்ம சக்தியிலிருந்து வெளிப்பட்ட பஞ்ச சக்திகள் தான் இந்தப் பிரபஞ்சத்தையும், இந்த உடலையும் முறையாக இயங்கச் செய்கின்றன. இந்த வெளியும், காற்றும், நெருப்பும், நீரும், நிலமும் வெளியிலும் இருக்கின்றன: நம் உடலிலும் இருக்கின்றன. இந்த ஐம்பூத சக்திகளும் முறையாகவும் சரியாகவும் செயல்படத் தக்க விதத்தில் தான் ஓர் இந்துவின் வாழ்க்கை முறை, சித்தர்களாலும் ஞானிகளாலும் வடிவமைக்கப்பட்டன. நமது உணவு முறை, உடைப் பழக்கம், வீடு கட்டுவதில் கவனிக்கப்படும் விஷயங்கள், நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்க சம்பிரதாயங்கள் ஆகிய எல்லாமே இந்தப் பஞ்ச பூத சக்திகளை வெளியிலும், நமக்கு உள்ளேயும் சம நிலைப் படுத்தத்தான். இதற்கு ஏராளமான அன்றாட வாழ்க்கை முறைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இவை விரித்தால் பெருகும். எனவே இதை விடுத்து மேலே போகலாம்.

ஆனால் இவற்றைப்பற்றி ஆராய ஆராயத்தான் இவற்றின் உட்பொருளைப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்கலாம். அல்லது நீக்கி விட்டு நிம்மதியாக வாழலாம். இப்படிப் பொருள் புரிந்து வாழத் துவங்கினால் நமது நிலை, உடலை, மனதை, புத்தியை விட்டு விலகி இவை எல்லாமாக விரிந்து நிற்கின்ற ஆத்மாவை நான் என உணர்ந்து அதில் இந்த உணர்வு சென்று சேர்ந்து கலந்து விடும். அல்லது எஞ்சிய வாழ்க்கையை அந்த முயற்சிக்கெனவே பயன்படுத்தும்.

இந்த மனித உடலைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். சாதாரண நிலையில் பார்த்தால் இந்த உடல், பகுதி பகுதியாக அமைக்கப்பட்டுப் பூட்டப்பட்ட ஓர் இயந்திரம். இதில் உள் கலவையாகக் காற்று, தண்ணீர், மண், நெருப்பு, வெளி என்ற பஞ்ச சக்திகளும் கலக்கப்பட்டிருக்கின்றன. இதையே ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், இவை எதுவுமே நான் அல்ல என்ற தெளிவும் இவை அனைத்தையும் பார்க்கின்ற நிலையில் இருக்கின்ற, இயக்குகின்ற உயிர்ச் சக்திக்கு ஆதாரமான இறைசக்தியே நான் என்பதும் விளங்கும்.

இந்த உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தையும் அவற்றின் உருவத்தை நீக்கி உள்ளே இருக்கின்ற உயிர்ச்சக்தியைப் பார்க்கத் தெரிந்தால் எல்லாமே ஒளியாகத் தெரியும். இவ்வுலகில் படைக்கப்பட்டுள்ள எல்லாமே ஒளிவிடும் தன்மை கொண்டவை. ஒளியாகிய பிரம்மம் தான் எல்லாமாக இருக்கின்றது. அந்த ஒளிதான் நானாகவும் இருக்கின்றது. கண்ணின் வழியே வெளியில் பாய்வதும் ஒளிதான். நாம் கண்களை மூடித் தியானிக்கும்போதும் ஆத்ம ஒளியையே தரிசிக்கின்றோம். இதிலிருந்தே புரிந்துகொள்ள முடியுமே பிரம்மமாகிய எல்லாமே ஒளிமயம் என்று.

இந்த உண்மையை நன்றாகப் புரிந்துகொண்டு விட்டால் நம் முயற்சி எளிதாகி விடும். நான் ஒளி. எல்லாம் ஒளி. பிரம்மம் ஒளி. அப்படியென்றால் இருப்பது ஒன்றேயன்றி வேறில்லை. எனவே ஆத்மாவில் சரணடையுங்கள். உலகத்தை ஒளியாய்ப் பாருங்கள். உடலை ஒளியுடம்பாய் உணருங்கள். தியானத்தில் ஒளியைத் தரிசியுங்கள். முடிந்தது கதை.

இந்த உபதேசத்தைப் படிக்கின்றபோதே உண்மை விளங்கும். அந்த உண்மை சுடும். அந்தச் சூட்டில் பொய்யானவை எல்லாம் கருகிப் போய் சாம்பலாகி உதிர்ந்து விடும். பிறகு அங்கு ஒளி மட்டுமே பிரகாசிக்கும். இதை அறிவது தான் ஞானத் தெளிவு. அந்த ஞானத்தெளிவால் பற்றறுத்த நிலை தானாகவே ஏற்படும்.

இந்த உண்மை சுடுகின்ற நிலையிலேயே மேலும் சிறிது சிந்திப்போம். ஐம்பூதங்களின் விரிவுதான் இந்தப் பிரபஞ்சம். இந்த விரிவு பிரம்மாண்டமானது. ஆனால் இது ஒன்றோடொன்று ஒட்டப்பட்டது. பஞ்ச பூதங்களும் ஒட்டப்பட்டே, ஒன்றிணைந்து இருக்கின்றன. இந்த ஒட்டியிருக்கின்ற தன்மையை வடமொழியில் புத்தம் என்று சொல்லுகின்றனர். சித்தார்த்தரை புத்தர் என்று மக்கள் அழைத்தனர். ஏனெனில் விரிந்து நிற்கின்ற வெளியினை அன்பு என்ற சக்திதான் ஒட்ட வைத்திருக்கிறது. கருணை என்ற பசைதான் பஞ்ச பூதங்களை ஒட்ட வைத்திருக்கிறது என்ற உண்மையை உலகிற்கு அவர் எடுத்துச் சொன்னதால் புத்தர் என அழைக்கப்பட்டார். அன்பால் தான் உலகம் ஒட்டியிருக்கின்றது. எனவே தான் புத்தர் அன்புதான் உலக மகா சக்தி, அன்புதான் உலக மகா ஜோதி என்று கூறினார். அன்பால் நிரம்பிய இதயம் மலரும். அன்பை வெளிப்படுத்துகின்ற முகம் ஒளிரும்.

என்னை உன்னோடு இணைத்துவிடு. நீ விரும்பியதை நான் தருகிறேன் என்ற இறைக் கருணையை நம்பித்தான், அவனது கருவியாகச் செயல்பட வேண்டும் என்ற உறுதியைப் பெறத்தான் இந்த ஞான வழியை சிலராவது பின்பற்றுகிறார்கள். ஏனெனில் நாம் சேர்த்து வைத்த கர்மப் பின்னணியில் நாம் பிறந்து வாழ்கின்ற வாழ்க்கை இது. இந்த வாழ்க்கையை இன்னதென்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் எதிர்பார்த்த எத்தனையோ விஷயங்கள் நிறைவேறாமல் போயிருக்கின்றன. நாம் விரும்பாத எத்தனையோ திருப்பங்கள் நம்மை உலுக்கி எடுத்திருக்கின்றன. நன்மை, தீமை, இன்ப துன்பம், மான அவமானம், வெற்றி தோல்வி என்று ஏதேதோ நிகழ்வுகள். இதையெல்லாம் சொல்லவும் முடியாமல் தூக்கி எறியவும் முடியாமல் உலகம் தவிக்கின்றது. ஜாதக அமைப்பு, கிரகங்களின் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் எல்லாம் போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து ஞானம் பெற்றுத் தன்னையறிதலாகிய பயிற்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு இருப்பவர்கள், உண்மை எது, பொய் எது என்பதை அறிந்து, வாழ்க்கையின் போலித் தன்மையைப் புரிந்துகொண்டு, நான் அல்லாத பொய் உறைகளை உதறித் தள்ளித் தானாகிய இறையாற்றலில் தமது உயிராற்றலை இணைத்து விடுகின்றார்கள். பிறகு வருவது எது என்றாலும் வரட்டும் என்ற அறிவுத்தெளிவு அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றது. எல்லாம் இறைக் கருணை என்பது புரிந்த பிறகு நல்லது என்ன, கெட்டது என்ன? வாழ்க்கையின் நிகழ்வுகள் போய்க்கொண்டே இருக்கும். நாம் நம்மில் நிலைத்து நிற்போம். இந்த நிலையில் நமக்குக் கிடைப்பது நிம்மதி.

இப்படி உயர்வான மனங்களின் நிம்மதியைப் பற்றிச் சொல்கின்றபோதே ஆன்மீக உலகில் உலவிக்கொண்டிருக்கின்ற போலிகளின் வீழ்ச்சியும் கடந்த சில ஆண்டுகளாகத் துவங்கி விட்டன என்பது கண்கூடாகக் காண்கின்ற உண்மை. இறைவனோடு இணைதலாகிய உயர் ஆன்மீக நெறியை யார் தனது சுயநலத்திற்காக, சுய நன்மைக்காகப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களின் வேஷமெல்லாம் வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கின்றன. பொய்யானவை, போலியானவை எதுவுமே நிலைத்து நிற்காது. எப்படியாவது அப்படிப்பட்டவர்களின் பொய்த்தன்மை காலத்தால் வெளிப்படுத்தப்பட்டுவிடும். நாம் அன்றாட நிகழ்வுகளாகக் கண்ணுக்கு நேராகக் காண்கின்ற தகவல்களே இதற்குச் சாட்சி. தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள். இந்தக் காலகட்டத்தில் தெய்வ சக்தி இப்படிப்பட்டவர்களின் போலித்தனங்களை, அது எங்கே இருந்தாலும் அவற்றை வெட்ட வெளிச்சமாக்கி உண்மையை உணர்த்திக் கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்டவர்களின் பின்னால் அறியாமையால் ஓடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது திகைத்துப்போய் இருக்கின்றார்கள். உண்மை சுடும். ஆனால் உண்மை ஒரு நாளும் மாறாது அழியாது ஒளிர்ந்துகொண்டே இருக்கும்.

ஆன்மீகவாதிகள், அரசியல் தலைவர்கள், கோவில் குருமார்கள், மடாதிபதிகள் யாரென்றாலும் போலி என்றால் அவர்களின் சாயம் கட்டாயம் வெளுத்துவிடும். போலிகள் கண்டறியப்பட்டு களையப்படுகின்ற கால கட்டம் இது. நாம் என்ன செய்கிறோமோ அதற்கேற்ற பலன் கிடைக்கும். சமுதாயத்தை அதிகம் நமக்குள் இழுத்து விட்டுக்கொண்டால் அவ்வளவும் கர்மா. எதிலும் போய் விழாமல் ஒதுங்கி இருந்தால் கர்மா இல்லை. செயலுக்கேற்ற விளைவு. தர்ம வழியில் நாம் நடந்தால் தர்மம் நம்மைக் காக்கும். இதைத் தான் கீதை வலியுறுத்துகின்றது.

நாம் பிறக்கும்போது பரிசுத்தமாகப் பிறக்கிறோம். நம்மிடம் தரப்பட்டவை எல்லாம் சுத்தமாகத்தான் இருந்தன. வளர வளர நாம் தான் அவற்றைப் பழுதாக்கி விடுகின்றோம். நம் குணக் குப்பைகளை அகற்றிக் கொட்டி அசுத்தப்படுத்தி விட்டோம். இப்போது அறிவு தெளிந்து ஒவ்வொன்றாக ஞானத்தால், தியானத்தால், செயல்படுகின்ற விதத்தில் சுத்தப்படுத்திக்கொண்டு வருகின்றோம். அதே சமயத்தில் உடலை விட்டு, மனதை இல்லாமற் செய்து, புத்தியை ஆத்மாவில் செலுத்தி ஆனந்தத்திலேயே மூழ்கி இருந்து விடாமல், அந்த உண்மையாகிய உயிர்ச்சக்தியில் நம்மை இணைத்து விட்டோம். இந்நிலையில் நானல்லாத அனைத்தையுமே விட்டாயிற்று. இந்த நிலை உயர் நிலை. இந்த உயர் நிலையிலேயே இருந்து கொண்டு மற்ற உயிர்களையும் நாமாகப் பார்த்து ஒட்டியும் ஒட்டாமல் வாழ்ந்தால் அந்த வாழ்க்கை பூரணமான வாழ்க்கை. அப்படிப்பட்டவர்களின் நிலை பூரணம். குறைவாக இருப்பவை கூட இந்நிலையில் பூரணமாகத் தெரியும். மனித மனோநிலையும் ஆன்மீக மனோ நிலையும் எந்த அளவிற்கு மாறுபட்டிருக்கின்றன என்ற உண்மை இப்போது இதைப் படிப்பவர்களுக்கு விளங்கியிருக்கும். எல்லாம் எப்போதோ முடிந்த காரியம். ஒரு பொல்லாப்புமில்லை என்று யோகர் சுவாமி சொன்னதன் பொருள் இந்த மனத் தெளிவைத் தான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *