நினைப்பது நிறைவேறும்

சாதாரண நடைமுறை வாழ்க்கைக்கும் ஆன்மீக வாழ்க்கைக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன. சாதாரண வாழ்க்கையில் நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் ஆன்மீக வாழ்க்கையில் வேறு பொருள் உணர்த்துபவை. யோகம் என்ற சொல் அதிருஷ்டம் என்ற பொருளில் பழக்கத்தில் இருக்கின்றது. இது யோக ஜாதகம். அவனுக்கென்ன, பெரிய யோகக்காரன் என்றெல்லாம் சொல்வார்கள். இதே யோகம் என்ற சொல் ஆன்மீகத்தில் இணைதல் என்ற பொருளைத் தருகின்றது. உயிர்ச்சக்தியோடு நம்மை இணைத்து வாழ்வது யோக வாழ்க்கை.

எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்ற சக்திதான் நமக்குள் உயிராகப் பரவியிருக்கின்றது. இந்தச் சக்திதான் நம்மைப் பரிணாமப்பட வைத்தது. மண்ணாய் இருந்தது பரிணாமப்பட்டு மனிதப்பிறவியாய் மலர்ந்திருக்கிறது. மாணவப் பருவத்தில் வீடடங்காமல் ஊர் சுற்ற வைத்ததும், பிறகுக் குடும்பம், வேலை, சாதனை என்று ஓடித் திரிய வைத்ததும் இந்தச் சக்திதான். வாழ்க்கையில் வெவ்வேறு விதங்களில் நம்மைக் கொண்டு செலுத்திய இந்தச் சக்தி, இப்போது அடங்கியிருக்கிறது.

நேற்றைய வாழ்க்கையை இன்றைய முன்னேற்றத்திற்குரிய ஒன்றாக அமைத்துத் தந்தது இதன் உதவியால் தான். இவ்வாறு கர்மத்தடத்தில் செலவழிந்துகொண்டிருந்த நமது சக்தியை வீணாக்காமல் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தி ஆற்றலை அதிகரிக்கச் செய்ய முடிந்தது, நாம் பெற்ற ஞானத்தால்.

ஞானம் கிடைத்தால் எல்லாம் கிடைக்கும். ஞானம் பெற்றவர்களுக்கு வாழ்க்கை பறி போய்விடாது. பரதேசிகளாய் அவர்கள் மாறி விடமாட்டார்கள். குடும்பத்தை விட்டுவிட்டு சந்நியாசியாகப் போய் விடுவார்கள் என்பது பிழையான ஒரு கருத்து. ஞானம் பெற்றவர்களுக்கு எல்லாம் கிடைக்கும். ஞானி பிச்சையெடுக்க வேண்டும் என்பது சமுதாயக் கருத்து. எந்த ஞானியும் யாரிடமும் கை ஏந்த மாட்டார். பசித்தாலும் பொறுத்திருப்பார். அல்லது தீரனாகத் திகழ்வார். யாசித்தல் என்பது ஒரு ஞானிக்கு எளிமையின் வெளிப்பாடு. இல்லறத்தாரை நாடி நிற்கின்ற சந்நியாச நெறிகளில் ஒன்று. எனவே ஆன்மீகம் என்பது பரிணாம வளர்ச்சியே தவிர வாழ்க்கையை ஒதுக்கி விடுதல் அல்ல. இந்த ஆன்மீகப் பயிற்சியில் ஞான உபதேசம், தியானம் போன்ற சாதனா முறைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை கடவுளை அடைவதற்காக அல்ல. கடவுளுக்கும் இந்த முயற்சிகளுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. இவையெல்லாம் ஆத்மாவை சுத்தப்படுத்துபவை. தேவையற்ற மன அழுக்குகள், குடும்பம் தந்ததாக, சமுதாயம் தந்ததாக, சமயம் தந்ததாக நமக்குள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அந்த அழுக்குகளை நீக்கி, சுத்தப்படுத்தி ஆத்மாவை ஒளிரச் செய்வதே இந்தச் சாதனா முறைகளை மேற்கொள்வதன் நோக்கம்.

வேதங்கள், உபநிஷத்துகள் எல்லாமே, நீ, அது! என்பதைத்தான் வலியுறுத்துகின்றன. கர்ம அழுக்குகள் சேர்ந்த ஜீவனாக நாம் நம்மை நினைத்திருக்கிறோம். நீ ஜீவன் அல்ல. உண்மையில் அவன்தான் நீயாக வந்திருக்கிறான். நீ அவனே! என்று வேத உண்மைகளின் அடிப்படையில் குரு விளக்குவது ஞான உபதேசம். அதைப் புரிந்துகொண்டு ஜீவனில் படிந்துள்ள அழுக்குகளைக் களைகின்ற முயற்சியே தியானம்.

அன்பு புனிதமானது என்று ஏன் சொல்லப்படுகிறதென்றால் அங்கு ஆத்மாக்கள் ஒன்றாக சங்கமிக்கின்றன. யார் தனது அன்பை இந்தப் பிரபஞ்ச அளவிற்குமாக விரிக்கின்றானோ அவன் புனிதன். அன்பு அலைகள் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்ற நிலையே புனிதம். அந்த அன்பு அவனையும் நிறைத்துப் பிறரையும் அரவணைக்கும். ஆத்மாவின் சக்தியான அன்பு வெளிப்படும்போது அது அந்தச் சூழ்நிலையில் மலர்ச்சியை ஏற்படுத்தும். இறைவனிடத்தில் நமக்கு ஏற்படுகின்ற அன்பு பக்தி.

நம்மிலிருந்து வரையறையற்ற, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு பெருக்கெடுத்து வெளிப்பட்டு இந்தப் பிரபஞ்சம் முழுவதுமாக விரிகின்றபோது, இந்தப் பிரபஞ்ச சக்தியிடமிருந்து வெளிப்படுகின்ற இறையன்புடன் அது கலக்கின்றது. நம்மிலிருந்து வெளிப்படுவது கர்மக் கலப்புடன் கூடிய அன்பு. இறையருளாக வெளிப்படுகின்ற அன்பு புனிதமானது.

அப்படிப்பட்ட அந்தப் புனிதமான அன்புடன் ஒருவனது கர்மக் கலப்புடன் கூடிய அன்பு ஒன்றாகிக் கலக்கின்ற நிலையில் அற்புதங்கள் நிகழும். அப்படிப்பட்டவர்கள் நினைப்பது நடக்கும். இந்த நிலையை நாம் எப்படி அடைவது? மனிதப் பிறவி என்கிற ஒரு வரையறைக்குட்பட்டவனாகிய நான் மாபெரும் சக்தியாகிய இறைநிலையை அடைய முடியுமா? இறைவனின் ஆசியை, அருளை, அன்பை நான் எப்படி அடைவேன்? இறையருள் பெற்றவன் தான் நான் என்றாலும் சிறப்புத் தகுதியாக இந்த அருள் நிலை நமக்கு எப்போது, எப்படி வாய்க்கும்? இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். எல்லாம் பிரம்மம் என்று தெளிவற்ற நிலையில் சொல்லிக்கொண்டிருப்பதில் பயனில்லை. இப்படி ஒரு நிலையை உண்மையில் அடைய நம்மில் ஆர்வம் எழ வேண்டும். பிரம்மத்தை உணர்ந்த நான் அதுவாகவே ஆவது எப்படி என்று முயல வேண்டும்.

ஞான உபதேசத்தால் அஞ்ஞானத்தை விலக்குகின்றோம். தியானத்தால் கர்ம அழுக்குகளை நீக்குகின்றோம். ஆனால் இம்முயற்சிகளால் தெய்வீகத்தை அடைந்து விட முடியாது. பிரபஞ்சம் முழுவதுமாகப் பெருக்கெடுத்துக்கொண்டிருக்கின்ற அதன் கருணையை நான் உணர்ந்ததால் நானும் என்னிலிருந்து பெருக்கெடுக்கின்ற அன்பை வெளிப்படுத்தி அன்பால் அனைத்து உயிர்களையும் அணைக்கின்றபோது, அதனருகில் நான் செல்கின்றேன். அது என்னைத் தேர்ந்தெடுத்ததால் தான் என்னால் இந்த நிலையை அடைய முடியும் என்றாலும் இந்த நிலையை அடைவது என்னுடைய பொறுப்பு. நான் தான் இதற்காக முயல வேண்டும்.

எல்லாம் அது பார்த்துக்கொள்ளும் என்று சொல்லி சும்மா இருப்பது சரணாகதி நிலை. ஆனால் எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும் இந்தப் பூரண சரணாகதி நிலையில் ஒரு சாதாரண மனிதனால் இருந்துவிட முடியாது. ஒரு நாள் முழுவதும் நிகழ்பவை எல்லாமே அவன் செயல் என்ற ஒரே மனநிலையில் ஏற்றுக்கொள்வது என்று இருந்தால் சரி. ஆனால் அப்படி நிச்சலனமாக நம்மால் இருந்துவிட முடியுமா? அப்படி இருக்க முடிகிறதா?

ஆத்மாவாகவே நான் இருக்கிறேன் என்று நாம் நினைத்தாலும் ஜீவனாகத்தான் செயல்பட வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். கருணையாக, அன்பாக, நீதி நெறிப்படி நாம் வாழ்ந்தாலும் கர்மா சூழ்ந்த நிலையில் தான் நம் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. அதோடு நம்மோடு தொடர்பு கொள்பவர்களின் கர்மாவும் நம்மைத் தாக்குகிறது. இப்படி இருக்கும்போது இறைக்கருணையின் பூரண வெளிப்பாடாக நாம் எப்படிச் செயல்பட முடியும்? நாம் நினைப்பது எல்லாம் அப்படியே நடக்குமா என்றால் அப்படி நடக்காது. ஏனெனில் நான் இன்னும் பூரணமான அதுவாக மாற முடியவில்லை. ஜீவன் என்ற நிலையில் தான் நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

ஜீவனாக நான் வாழ்கின்ற கட்டத்தில் ஞானம் பெற்ற நிலையில் நான் கடவுளாக இயங்குகின்றேனா? அஹம் பிரம்மாஸ்மி! நான் கடவுள் என்பது எனக்குத் தெரியும். அது தெரிந்தும் நான் கடவுளாக வாழ்கின்றேனா என்று ஆராய்ந்தால் கருணையாக வாழ முடியும். ஆனால் கடவுளாக வாழ முடியவில்லை என்பது புரியும். ஞானம் பெற்றவுடன் எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் ஏற்படும். எல்லாம் தெரிந்தால் மட்டும் போதாது. அதுவாக மாறவும் வேண்டும். அந்த முயற்சியில் நாம் ஈடுபடுகின்றோமா என்றுதான் சோதித்துப் பார்க்க வேண்டும். ஜீவனாக இருக்கின்ற நிலையிலேயே கடவுட் தன்மையை நம்மிலிருந்து வெளிப்படுத்த முயல வேண்டும்.

இதற்கு நாம் நம்முடன் ஒத்திசைவுடன் இயங்க வேண்டும். அதுவா இதுவா என்று இன்னமும் தடுமாறக்கூடாது. முரண்பாடுகள் இருக்கக்கூடாது. ஏனெனில் பெற்ற ஞானமும், செய்கின்ற தியானமும் ஒரு பிரச்னைக்குச் சரியான தீர்வைக் காட்டித் தரும். நமக்கு நாமே வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர, இன்னும் நமது தீர்விற்காக இன்னொருவரை நாடிச் செல்லக்கூடாது. இதுதான் உயர்வு நிலை. இந்த நிலையை அடைவதற்குத் தான் நாம் முயல வேண்டும்.

நமது அண்டை வீட்டாரிடம் அன்பைப் பகிர்ந்துகொண்டு பழகுவதில் இறைத்தன்மை வெளிப்பட வேண்டும். நமக்குள்ளிருந்து வெளிப்படுகின்ற அன்பைப் பாகுபாடு இன்றி முழுமையாக விரித்துப் பிரபஞ்ச சக்தியின் அன்பு அலைகளோடு கலக்க விடுகின்ற நிலையில் தான் நாம் நினைத்தது நடக்கும். ஒருவரது வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ்வது இந்த நிலையில் தான். இறையருள் நம்மைக் காக்கின்ற நிலை அது.

நான் விரும்பியது நடக்கின்றது என்ற நிலையைப் போல எனக்குத் தேவையானவை தானாக நடக்கின்றன என்பதும் ஓர் உயர் நிலை. எனக்குத் தேவையானது நடக்கின்றது என்றால் நான் எனது அன்பை இறைக்கருணையுடன் இணைத்து விட்டேன் என்று பொருள். நமக்குத் தேவையானது நடப்பது கூட ஓர் அற்புதம் தான். யானாகிய என்னை விழுங்கித் தானாக நின்றது தற்பரமே! என்று அருணகிரி நாதர் இந்த நிலையை அற்புதமாகப் பாடியிருக்கின்றார். நான் என்பதே இல்லை. அது இருந்து நடத்திச் செல்கின்றது. இப்படி எனது அன்புச் சக்தி பிரபஞ்ச சக்தியைத் தொட்டுத் திரும்பி என்னுள் கலந்து என்னை சதா சர்வ காலமும் ஆனந்தத்தில் ஆழ்த்தி இருக்கின்ற நிலைதான் மேற்குறித்த பாடல்.

நம்முள் எழுகின்ற எண்ணங்கள், நமது கர்மப் பதிவுகளால் வெளியிலிருந்து வந்துதான் நம்மைச் சேர்கின்றன. ஓர் எண்ணம் வெளியிலிருந்து கண்ணுக்குள் இருக்கின்ற ரெட்டினா எனப்படும் கண்மணிக்குள் போய், அங்கிருந்து இடது மூளைக்குப் போய் பின் அங்கிருந்து வலது மூளைக்குப் போய் அங்குப் பதிந்து பிறகுதான் எண்ணமாக என்னுள் எழுகின்றது. ஆகையால் எண்ணங்களைத் தடுப்பதற்குக் கண்களை மூட வேண்டும். இப்படிக் கண்களை மூடுகின்றபோது, மனம் இயங்காமல் புத்தி இயங்குவதைக் கவனித்துப் பாருங்கள். ஆகவே வீண் எண்ணங்கள் வெளியிலிருந்து கண்ணுக்குள் புகுந்து நம்மைப் பாதிக்க விடுவதை விடக் கண்ணை மூடிக்கொண்டிருப்பது உத்தமம். இது ஓர் புதிய தகவல்.

நமது கடந்த கால வாழ்க்கைக்கும், இன்றைய வாழ்க்கைக்கும் உரிய கர்மப் பதிவுகள் பிரபஞ்சத்தில் தான் பரவியிருக்கின்றன. நாம் கண்ணை மூடுகின்றபோது எண்ணங்களை எழாமல் தடுப்பதோடு கர்மப் பதிவுகளையும் ஒரு பகுதியில் அழிக்கின்றோம். கர்மப் பதிவுகள் பரவெளியில் கலந்திருப்பதால் தான் இந்த உடல் மரணமுற்றாலும் அடுத்த பிறவி வாய்த்தவுடன் அந்த உடலோடு நமது கர்மப் பதிவுகள் இணைந்து கொள்கின்றன. சிந்தித்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.

விபத்தில் ஒருவர் காலை இழந்து விட்டால் ஆபரேஷன் செய்து காலை வெட்டிப்போட்டு அவருக்கு உணர்வு திரும்பிய நிலையில் மருத்துவர் அவரிடம் அவரது நிலைமையைப் பரிசோதிக்க வருகிறார். அப்போது அவர் மருத்துவரிடம் என் கால் விரல் மிக அதிகமாக வலிக்கிறது! என்று சொல்கிறார். காலே இல்லாதபோது விரல் வலிக்கிறது என்று சொல்வது எப்படி? மனப்பதிவில் கால் இருப்பதாகத்தான் தெரிகிறது. இந்தப் பதிவு இலேசில் போகாது. பழகிப் பழகித்தான் புரிந்துகொள்ள முடியும். இது விஞ்ஞான உண்மை. இப்படி எல்லாமே உள்ளுணர்வில் தான் படிந்திருக்கின்றன.

மனப்பதிவு செயல்படாமல் இருக்கக் கண்களை மூட வேண்டும் என்பதற்காகத்தான் யோகிகள் கண்களை மூடி எப்போதும் தியான நிலையில் இருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் பெறுகின்ற வசதிகளும் சுகங்களும் இதுவரை எந்தக் காலத்திலும் அனுபவிக்கப்படவில்லை. அதே போல் படுகின்ற துக்கத்தின் அளவும் இப்போதுதான் மிக அதிக அளவுள்ளதாக இருக்கிறது. நுhறு வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற சுகங்களுமில்லை, துக்கங்களுமில்லை என்றே சொல்லலாம். இது உண்மையான முன்னேற்றமா?

தொழில் நுட்பத்தால் ஏற்பட்டிருக்கின்ற முன்னேற்றங்கள் எல்லாம் சுகத்தை அதிகப்படுத்தித் துக்கத்தைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் பரவலாகத் துக்கம் தான் அதிகரித்திருக்கின்றது.

இதை ஆராய்ந்து பார்த்தால் சுயநலத்துடன் கூடிய சேகரிப்பு மனப்பான்மை தான் இதற்குக் காரணமென்பது விளங்கும். தர்மநெறி முறைகளைப் பற்றிக் கவலைப்படாமல், தான், தன் சுகம் என்கிற சுயநலப் போக்கில் தான் இன்று எல்லா நாடுகளும், எல்லா இனங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எழுநூறு கோடி மக்களின் மனப்பதிவுகளில் இந்த மனப்போக்குத் தான் இருக்கிறதென்றால் பிரபஞ்ச அலைகள் அமைதிப்படுமா? சிதறித் தெறிக்கின்ற நிலை என்று கூடச் சொல்லலாம். ஓர் ஆன்ம சாதகனின் உள்ளத்தின் அமைதித் தன்மை தான் இந்த ஆட்டத்தை ஓரளவிற்காவது அமைதிப் படுத்தும். ஆட்டத்தை நிறுத்தப் பார்க்கும்.

சமூகம் சொன்னவை எவை என்றாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டும் என்ற நியதி இல்லை. சொல்லப்பட்டது அல்லது கடைப்பிடிப்பவை எவை என்றாலும் அதைப்பற்றிய உண்மைகளை நன்கு உடைத்துப் பார்த்து, ஆராய்ந்து, சரிதான் என்று தெரிந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். மகான்கள் எல்லாம் சமுதாயம் சொன்னதை அப்படியே ஏற்று வாழவில்லை. தமக்குச் சரியென்று பட்டவைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு வாழ்ந்தனர். நமது வாழ்க்கை நெறிமுறைகள் ஞானிகளால் வகுக்கப்பட்டவை. சரியான விதத்தில் ஆராய்ந்து வகுக்கப்பட்ட அந்த உண்மைகள் சமுதாயத்தால் கையாளப்படுகின்றபோது அவரவர் வசதிக்காகவும், தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் கையாளப்பட்டு, சொல்லப்பட்ட உண்மைகள் மறைந்து போய் அர்த்தமற்ற சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாகவும் மாறி விட்டன. ஆகவே சமயம், சமுதாயம் என்று சொல்லிக்கொண்டு ஆன்மீக சாதகர்கள் அவற்றில் சிக்கித் தடுமாறிவிடக் கூடாது. அவற்றில் உண்மை இருக்கலாம். ஆனால் பொய் தான் அதிக அளவில் இருக்கின்றது. நமது ஆத்மீக வளர்ச்சி முக்கியமா? சமுதாய நடைமுறை முக்கியமா என்று சிந்தித்துச் செயல்பட்டால் நல்லது.

தொழில், வியாபாரம், வேலை என்னும் சமுதாயக் குறுக்கீடுகள் நமது உயர்நிலையைத் தடுக்க முயன்றாலும் அதற்கெல்லாம் இடம் கொடுத்து விடாமல் அவையும் ஆத்மாதான் என்ற நிலையில் பார்த்து ஒரு நிலையாகச் செயல்படப் பழக வேண்டும். ஞானத்தாலும், தியானத்தாலும் ஆத்மத் தொடர்பை எப்பொழுதும் வைத்துக்கொண்டு அந்த இணைப்பால் விளைகின்ற அன்பு அலைகளை நன்கு வெளிப்படுத்தி வாழத் தெரிய வேண்டும்.

இப்படி நம்மிலிருந்து வெளிப்படுகின்ற அன்பு அலைகளை மனிதர்கள் புரிந்து கொள்கின்றார்களோ இல்லையோ, நம்மை விடத் தாழ்ந்த நிலைப் பிறவிகளான மிருகங்களும், மரஞ் செடிகொடிகளும், பறவையினங்களும் நன்கு புரிந்து கொள்ளும். ஒரு ரோஜாச் செடியில் 100 முட்கள் இருக்கின்றன. நான்கு பூக்கள் தான் இருக்கின்றன. நாம் அதை முள்செடி என்று சொல்லாமல் ரோஜாச் செடி என்று தான் சொல்கிறோம். முள் என்பது தீமை. ரோஜா என்பது நன்மை என்று எடுத்துக்கொண்டால் நன்மையைத் தான் மனித மனம் பார்க்கின்றது என்பது தானே பொருள். நல்லதை வைத்து அழைப்பதுதான் சமுதாயப் பழக்கம்.

நாம் பழகுகின்ற தன்மையில் இந்த நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்து பாவித்தல் என்னும் நேர்மறைக் குணம் இருக்கிறதா என்று பாருங்கள். நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் கூட நன்மை பயக்கக்கூடிய நேர்த்தன்மை வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.

ஒரு உணவுப் பொருள் வீணாகி விட்டால் அது வேண்டாம் என்று சொல்வதை விட உண்ணத் தகுந்ததல்ல என்று சொல்ல வேண்டும். ஒரு பொருளை வீட்டில் இல்லை என்று சொல்வதை விட வாங்க வேண்டும் என்று சொல்லலாம். கெட்டது, கூடாது, வேண்டாம், இல்லை என்பவையெல்லாம் எதிர்மறைச் சொற்கள்.

சிந்தனையிலிருந்துதான் வார்த்தை வெளிவருகின்றது. நமது வாயிலிருந்து எதிர்மறை
வார்த்தைகள் வரக்கூடாது. ஏனெனில் எதிர்மறைச் சொல் காயப்படுத்தும். அது சிந்தனையை எதிர்மறையாக்கும். அது ஆத்மத் தொடர்பைப் பாதிக்கும். நேரான சிந்தனைதான் மாறி எதிர்மறையாக வெளிப்படுவதால் அது சிந்தனைப் போக்கையே மாற்றியமைத்துவிடும்.

சித்தர்கள், ஞானிகள் நேர்மறை வார்த்தைகளைத் தான் பயன்படுத்துவார்கள். மங்களகரமான சொற்களையே பேசுவார்கள். அதை நாமும் இனிப் பழக வேண்டும். இப்படி ஏன் இனிமையான நல்ல சொற்களைப் பேசிப் பழகச்சொல்வது என்றால், கர்மப் பதிவுகளை அழிக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற சாதகர்கள் நேர்மறைச் சக்தியை தமக்குள் அதிகரிக்கச் செய்வதற்காகத்தான். எதிர்மறைச் சிந்தனை நம்மை ஒருமைத் தன்மையிலிருந்து நீக்கி மாற்றிவிடுகின்றது. அது ஆத்மாவை உடைத்துத் தான் எதிர்மறைச் சொல்லாக வெளிவருகிறது.

நமக்கு சில நேரங்களில் எதிர்மறையான, நாம் விரும்பாத நிகழ்ச்சிகள் வந்து நம் மன அமைதியைக் குலைக்கும். அந்நேரங்களில் சாதாரணமாகக் கிரக நிலை சரியில்லை என்று சொல்வார்கள். நவக்கிரகங்களுக்குப் பரிகாரம் செய்யச் சொல்வார்கள். கிரகங்கள் எல்லாமே நம் கர்மப்பதிவிற்கேற்ப இயங்குகின்றனவே தவிர அவற்றிற்கென்று குண தோஷங்கள் இல்லை. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும். இதையெல்லாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். எதையுமே குறைவாகக் கருதக்கூடாது. எல்லாமே ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் படைக்கப்பட்டிருக்கின்றன.

நவக்கிரகங்களில் சனீஸ்வரனைக் கெட்ட கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் நவக்கிரகங்களில் மிகச் சிறப்பான கிரகம் சனீஸ்வரன் தான். அவர் நேர்மையானவர். கிரமம் தப்பாமல் சரியாகப் பலன் அளிப்பவர். நமது கர்மப்பலன் எதுவோ அதை நிறைவேற்றுபவர். சுக்கிரனை மிகச் சிறந்த கிரகம் என்று கூறுவார்கள். ஆனால் மிக அதிகக் கெடுதல்கள் தருவது அதுதான். எனவே கால நேரம், கிரக நிலை பார்ப்பதெல்லாம் இனி நமக்குத் தேவையில்லை. உயர் நிலை அடைகின்ற நிலையில் எல்லாமே நல்லவை தான். இதைத் தான் கோளறு பதிகத்தில் திருஞானசம்பந்தர், அவை நல்ல நல்ல…என்று பாடியிருக்கின்றார்.

ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. அந்த ஒன்று எனக்குள் நானாக இருக்கிறது. அதுவே பிரபஞ்சமாகப் பரந்து இருக்கிறது. இந்த ஆத்ம சக்தி திரிந்து, உடைபட்டு அல்லது மாறி, எதிர்மறையாக வெளிப்படுகின்ற போது அது எதிர்மறையாக விளைவை ஏற்படுத்திவிடுகின்றது. இது கர்ம வினையின் தூண்டுதலால் நிகழ்வது. அந்தச் சொல் நம்மிடமிருந்து வெளிப்பட நம்மைச் சேர்ந்தவர்களின் செயல்களும், சூழ்நிலையும் தூண்டுகின்றன. கர்மாவில் சிக்குவதற்காக ஏற்படும் இப்படிப்பட்ட சூழ் நிலையில் நாம் எதிர்மறையாகச் செயல்பட்டுவிட்டால் நாம் தான் அந்த வலையில் தானாகச் சிக்கிக்கொள்கிறோம். புரிகிறதா? யாருக்கும் துன்பம் விளைவிக்கவோ, குழி பறிக்கவோ கூடாது என்று நீதியாக நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கின்ற நற் பண்பு இங்கு ஆன்மீக, விஞ்ஞான ரீதியாக விளக்கப்பட்டிருக்கிறது.

நான் சரியாக நடந்தாலும் பிறர் எனக்குத் தொல்லை தருகிறார்களே, வஞ்சனையாக நடந்து என்னை வருத்துகிறார்களே என்ற எண்ணம் எழலாம். அது என் கர்மா என்றுதான் அதை ஏற்க வேண்டும். அவர்கள் அப்படி நடந்தால் சரி, நடக்கட்டும். அதற்குரிய பலனை அவர்களே அனுபவிப்பார்கள் என்று விட்டுவிட வேண்டும்.

நடைமுறையில் அன்பு, ஒற்றுமை, பொறுமை என்ற நேர்மையான குணங்களோடு வாழ்கின்ற குடும்பம் வளமுடன் வாழும். அனைவரின் கவனத்தையும் கவர்ந்து வியக்க வைக்கும். அவர்கள் நன்றாக இருப்பது வெளிப்படையாகவே தெரியும். எதிர்மறைக் குடும்பங்கள் படுகின்ற பாடுகளும் அங்கு நடக்கின்ற பாதிப்புகளால் வெளிப்பட்டுத் தெரிய வரும். எனவே இனியாவது ஜீவனாக செயல்படாமல் இறைத்தன்மையுடன் கூடிய கருணையும் அன்பும் நிறைந்தவர்களாகச் செயல்பட வேண்டும். செய்கின்ற செயல்களும், சொல்கின்ற வார்த்தைகளும் நன்மை தருபவையாக அமைய வேண்டும்.

நாம் தெய்வீக நிலையில் செயல்படுகின்றபோது பாதிப்பு ஏற்படாது. சாதாரணமாகச் செயல்படும்போது கர்மப் பாதிப்பு ஏற்படும். நிகழ்பவைகளால் உளவியல் தாக்குதல் ஏற்படும். அது மனதை வருத்தும். நம்மை யாரும் புறக்கணித்தாலும், அலட்சியப்படுத்தினாலும், வார்த்தைகளால் சுட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் எதிர்ப்பாகச் செயல்படாமல், எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக எடுத்துப் பொறுமையாக இருந்து விட வேண்டும். பெரிதுபடுத்தி அவதியுறும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

பிறர் சொற்களால் செயல்களால், நாம் பாதிப்படைந்து நமது ஆத்ம சக்தியை வீணாக்கக்கூடாது. அமைதியாக இருந்து விட வேண்டும். இனி வெளித்தூண்டல் இல்லை என்ற நிலைக்கு வந்துவிடுவது ஞானம். எந்தவிதத் தூண்டலுக்கும் தூண்டிலுக்கும் உட்படாத நிலையில் இருப்பது இது. இந்த நிலையில், இது ஒரு மரம், இது ஒரு ஜடம், சூடு சொரணை இல்லாதது என்ற பாராட்டுக்கள் எல்லாம் சமூகத்திடமிருந்து நமக்குக் கிடைக்கும். அது உண்மைதானே என்று சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

இப்படி அணுஅணுவாகத் தம்மைப் பரிசோதித்துக்கொண்டு நேர்மறையான விதத்தில் ஆத்மாவோடு இணைந்து, நான் ஆத்மா என்ற ஒரே தியானத்துடன் முறையாக வாழ்கின்றவர்களுக்கு எல்லாமே நன்மை தருபவையாக அமையும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *