விலகி நின்றால் விரும்பி வரும்

உள்ளம் பெரும் கோயில். ஊன் உடம்பு ஆலயம் என்று திருமூலர் பாடிய பாடலின் உட்பொருளை உணர்ந்து வாழ்பவர்கள் ஆன்மீக சாதகர்கள். அவர்கள் தாம் பெற்ற ஞானத்தால் இந்த உடலையே கோவில் என உணர்ந்து தமக்குள் இருக்கின்ற ஆத்மாவாகிய உயிர்ச்சக்தியை இறை என உணர்ந்து அதனோடு இணைந்த நிலையில் வாழ்க்கையைக் கொண்டு செலுத்துகின்ற போது அவர்களுக்குப் புற வழிபாடுகள் பயனற்றவையாகி விடுகின்றன.

இந்த உடல் இறைவன் வசிக்கின்ற கோயில். இதனுள்ளே இருக்கின்ற உயிர்ச்சக்தி இறைவன். இதனிடையே கொள்கின்ற தொடர்பு பக்தி. இவை எல்லாம் தெரிகின்றது. ஆனால் அதனோடு நம்மைத் தொடர்பு படுத்துவதிலும் அதுவாக நாம் வாழ முயலாததும் தான் பிரச்னை. அந்தத் தொடர்பை ஏற்படுத்துவதற்காகத் தான் இந்த ஆன்மீக வாழ்க்கை, நாம் நம்மிலிருந்து வெளிப்படுத்துகின்ற கருணை, தியானம் செய்தல் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிணாமம் நமக்குத் தந்த எண்ணப்படிவுகளை எல்லாம் ஒதுக்கி, ஆத்மாவில் படிந்துள்ள அழுக்குகளைச் சுத்தப்படுத்துவது தான் தியானம் என்பது. ஏனெனில் ஆத்மா மன அழுக்குகளுக்கு இடையில் மறைந்து கிடக்கின்றது. அந்த அழுக்குகளை நீக்கி ஜீவனைச் சுத்தப்படுத்தினால் தான் ஆத்மா பளிச்சிடும்.

ஆனால் இந்த உலகமோ, புற வழிபாடுகளாக ஏராள விதங்களில் ஏதேதோ செய்து பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஞானம் பெற்ற நிலையில் இருப்பவர்கள் தான் இந்த உண்மையைப் புரிந்துகொண்டு தம்மைத் தாமே சுத்தப்படுத்துவதைத் தம் வழிபாடாகக் கொள்கின்றனர். வழிபாடு என்பது கருணையின் பெருக்கமே தவிர வேறில்லை.

பொருள்களோடும் உறவுகளோடும் நாம் நம்மைப் பிணைத்துக்கொண்டு வாழ்கின்ற நிலையில் நட்பு, பாசம், நேசம், அதிகாரம், உழைப்பு என்றெல்லாம் நமது சக்தி பிரிந்து பிரிந்து செலவாகி விடுகின்றது. இவையெல்லாம் இந்தப் பிறவியோடு மட்டும் சம்பந்தப்பட்டவை. உண்மையில் பார்த்தால் இவை நிலையானவை அல்ல. அழியக்கூடியவை. இந்த உண்மைகளை அறியாமல் வாழ்வதால் ஏற்பட்ட விளைவு இது. வாழ்க்கைக்கு உயிர்ச்சக்தி செலவழிக்கப்படுகின்றது. அறியாமையுடன் கூடிய அந்த நிலையில் உயிர்ச்சக்தி வெறும் சாட்சி மட்டுமே.

நான் என்பது படுகின்ற கஷ்டங்கள், கவலைகள் எதுவுமே உயிர்ச்சக்தியைப் பாதிக்காது. நாம் படுகின்ற துன்பங்கள் எல்லாம், நான் அவன் என்பதை அறியாததால் வந்தது. நான் துன்பப்படுகிறேன் என்று சொல்வது பொய். ஆத்மாவே நான் என்று அறிந்தவர்களுக்கு இந்தத் துன்ப நிலை இருக்காது. எதுவும் பாதிக்காது. இது தான் உண்மை. ஆத்மாவோடு இணைந்து வாழும்போது முரண்பாடுகள் இல்லாமல் ஒத்திசைவாக உள்ளம் அமைதியாய் இருக்கும். எதையும் நாடாது. எதையும் தேடாது. தனிமை இனிக்கும்.

ஐம்புலன்களில் மனதை அதிகமாக வெளியில் இழுக்கக்கூடியது கண். கண் மூடியிருந்தால் மனம் உள்ளேயே தங்கி அமைதியாய் இருக்கும். அமைதியாய் இருக்கின்ற மனதிற்கு ஞாபக சக்தி அதிகம். உலகத்தில் அதிக நினைவாற்றல் உள்ளவர்கள் யாரென ஆராய்ந்தால் குருடர்கள் என்பது தெரிய வரும். ஏனெனில் அவர்களின் மனம் கண் வழியே வெளியேறுவதில்லை. எதைக் கேட்டாலும் கண்ணை மூடிக் கேட்டால் அது மனதில் ஆழமாகப் பதியும். கண் திறந்திருந்தால் மனம் வெளியில் ஓடிவிடும். மனம் கட்டுப்பட்டு இருந்தால் கண் பார்த்தாலும் பதியாது. காட்சி, காட்சியாக மட்டும் இருக்கும். கட்டுப்பாடற்ற நிலையில் எதைப் பார்த்தாலும் மனப்பதிவு ஏற்படும்.

எல்லாவற்றையும் சுத்தப்படுத்திக்கொண்டே போனால் தான் மன அழுக்கு நீங்கும். மூச்சுப் பயிற்சி செய்தால் உள்ளம் சுத்தமாகும். உள் சுத்தத்திற்கு வெளிச் சுத்தம் மிக அவசியம் என்பதால் தான் வீட்டைச் சுத்தப்படுத்துதல், பூசைப் பொருட்களைச் சுத்தப்படுத்துதல், உடலைச் சுத்தப்படுத்துதல் போன்ற எல்லாம். தெய்வ காரியங்களைச் செய்கின்றபோது சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது தூய்மையில் இறைச்சக்தி வெளிப்படும் என்ற உணர்வில் தான். உலகத்திலுள்ள ஆன்மீகச் செயல்கள் எல்லாமே சுத்தப்படுத்துதல் தான்.

வாழ்க்கையை உண்மையென்று நம்பி இதில் ஏற்படுகின்ற சம்பவங்களிலேயே தொடர்ந்து உடல், மனம், புத்தியோடு சேர்ந்து அறியாமையுடன் செயல்படுவதால் தான் கர்மப்பதிவு ஏற்படுகிறது. இந்தக் கர்மப் பதிவுகளால் தான் மீண்டும் மீண்டும் பிறவி ஏற்படுகின்றது. எதிலும் ஒட்டாத நிலையில் வாழ முற்படுகின்றபோது தான், உள் முகமாகக் கவனத்தைத் திருப்பி ஆத்மாவோடு இணையத் துவங்குகின்ற போதுதான் கர்மப் பதிவுகள் அழியத் துவங்கும். தியானம் செய்வது கர்மப்பதிவுகளை அழிப்பதற்குத் தான். இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றது.

ஆழ் மனநிலையில் நின்று சிந்தித்துப் பார்த்தால் நாம் இப்போது செய்துகொண்டிருக்கின்ற எந்தவிதச் சடங்குகளும் தேவையில்லை என்பது விளங்கும். அதுதான் இந்தப் பிறவியைத் தந்தது, அது தான் எல்லாவற்றையும் செய்துகொண்டு போகிறது என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டால், நமது மனநிலையே மாறி விடும். இந்த நிலையில் நல்ல நாள் பார்த்தல், பிறந்த நாள், திருமண நாள் போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுதல், திவசம், விரதம் என்று சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்றவை எல்லாம் குறைந்து போகும். இப்படியெல்லாம் எடுத்துச் சொல்வது மிகக் கடுமையானதாகவும், சமுதாய நடைமுறையை எதிர்ப்பதாகவும் தெரியும். ஆனால் ஒரு கருத்தை மிக ஆழமாகப் பார்த்தால்தான் அதிலுள்ள உண்மை புரிய வரும். யாரையும் உடனே எல்லாவற்றையும் நிறுத்தி விடுங்கள் என்று இங்கு சொல்லப்படவில்லை.

வாழ்க்கை பொய்யானது என்பதை உணர்ந்து ஞானம் பெற்றுத் தம்மைத் தனிமைப்படுத்தி ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் மேலும் பல படிகள் முன்னேற வேண்டும் என்பதற்காகச் சில உண்மைகள் விளக்கப்படுகின்றன. அதில் ஒன்றுதான் சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என்று சொல்வது.

ஏனெனில் நமக்கு ஏற்படுகின்ற உறவுகள் கர்மப் பிணைப்பால் வந்து வாய்த்தவை. அதனதன் கர்மா முடிந்தபின் அவையவை பிரிந்து செல்கின்றன. இந்தப் பிரிவு துயரம் தருபவையாகத்தான் இருக்கின்றன. ஆனால் இது நியதி என்பதைப் புரிந்து ஏற்றுக்கொண்டால், எண்ணமில்லா நிலையில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்னும் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு இறந்தவர்களைப்பற்றித் திரும்பத் திரும்ப நினைக்கத் தேவையில்லை என்பதுதான் சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை.

வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஏராளமான துன்பங்கள், துன்ப நிகழ்வுகள், பிரச்னைகள் போன்ற எல்லாவற்றையும் இறைவனின் ஆசீர்வாதம் என்று ஏற்க வேண்டும். ஏனெனில் இந்தத் துன்பங்கள் ஏற்பட்டதால்தான் நான் சிந்தித்து என்னைத் தேட முற்பட்டேன். இல்லாவிடில் நான் வாழ்க்கை போகிற போக்கிலேயே போயிருப்பேனே தவிர ஆன்மீகப் பாதைக்குத் திரும்பியிருக்க மாட்டேன்.

ஆன்மீக உயர் உணர்வு நிலைக்கு வந்த பின்பு வாழ்க்கையில் எனக்கு அது கிடைக்கவில்லை, இது நிறைவேறவில்லை என்ற குறை இருக்கக்கூடாது. நான் நினைத்தபடி என் வாழ்க்கை அமையவில்லை என்று புலம்பக்கூடாது. கிடைக்காதது என்று நினைப்பது நமது நன்மைக்காகத்தான் கிடைக்காமல் போயிற்று என்று புரிந்துகொள்ள வேண்டும். தேவைகளில் நிறைவு இருக்க வேண்டும். அல்லது எது எனக்குத் தேவை என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் திருமணம் என்பது ஒரு பெரிய சிக்கலாக இருக்கின்றது. பெண்களை விட ஆண்களுக்குத் திருமணம் நிறைவேறாமல் தடைப்படுவது அதிகமாக இருக்கிறது. இங்கு ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லற வாழ்க்கை என்பது கர்மப் பகிர்வு. இருவரின் கர்மா பகிர்ந்துகொள்ளப்பட்டு வாழ்க்கையாக அமைகின்றது. இது தெய்வ சங்கல்பத்தால் ஏற்படுவது. காலம், நேரம் சரியாய் அமைகின்றபோது நடக்க வேண்டியவை நடந்தே தீரும். முயற்சி செய்யலாமே தவிர அதற்கு மேல் கவலைப்படக் கூடாது.

கல்யாணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வதன் பொருள், அது நாம் தீர்மானித்து நடைபெறுபவை அல்ல. வேறொன்று அதைத் தீர்மானிக்கின்றது என்பதை உணர்த்தத்தான். இனக்கவர்ச்சியில் சிக்கி அல்லது பணம், பதவி, அழகு, படிப்பு என்று அவற்றை மட்டும் அளவுகோல்களாகக் கொண்டு முடிவுகளை எடுத்துவிடக்கூடாது. ஆன்மீக சாதகர்கள் புத்தியால் தான் செயல்பட வேண்டுமே தவிர உணர்ச்சிபூர்வமான மனதின் வழி செல்லக்கூடாது. அது கர்மாவின் வழியில் கொண்டு செலுத்தி விடும்.

புத்தி தீர்மானித்தால் அங்கு ஆன்மாவின் உடன்பாடு இருக்கும். பானை பிடித்தவள் பாக்கியசாலியென்றால் ஏர் பிடித்தவன் கையில் புதையல் கிடைக்கும் என்பார்கள். ஏனெனில் இரு ஆத்மாக்கள் ஒன்றாக இணைகின்ற திருமண பந்தத்தின் மூலம் இருவேறு ஜீவன்களின் கர்மப்பதிவுகள் இணைகின்றன. அதுமட்டுமல்ல, இரு குடும்பங்கள் முழுவதற்குமான கர்மப்பிணைப்பும் இதன் மூலம் அவர்களோடு இணையும். சடங்குகள் ஏராளமாகச் செய்து பூஜை, பரிகாரங்கள் எல்லாம் முறையாகச் செய்து நடத்தப்படுகின்ற திருமணங்கள் கூட நன்றாக வாழாமல் பாதியிலேயே முறிந்துவிடுகின்றனவே. பத்துப் பொருத்தம் பார்த்து செய்யப்பட்ட திருமணங்களில் கூட மன ஒற்றுமையின்றிப் போராட்டங்களுடன் கூடிய வாழ்க்கையைப் பலர் வாழ்ந்துகொண்டு இருப்பது அவரவர் மனதைக் கேட்டால் தெரிய வரும். நமது சமுதாய அமைப்பின் கூட்டமைப்பால் மன வேறுபாடுகளையும் குறைகளையும் மறைத்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் என்னுடைய கர்மா இது என்று நினைத்துப் போன தலைமுறை வரை பிரச்னைகளைச் சமாளித்து வாழ்ந்தனர். ஆனால் இளையதலைமுறைக்கு இந்தச் சகிப்புத் தன்மை இல்லை. அதனால் மண வாழ்வில் ஒத்திசைவு குறைந்து போய்விட்டது. அதனால் தான் மனமுறிவுகளும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதும், ளiபெடந அழவாநச என்ற வாழ்க்கை முறையும் சகஜமாகிக் கொண்டிருக்கிறது.

திருமணமாகாத நிலையில் 45, 50 வயதில் மனதில் ஒரு ஏக்கம் ஏற்படும். எனக்கு என்று ஒரு குடும்பம் இல்லையே, வயதாகின்றபோது என்னை அக்கறையாகக் கவனிக்க ஒருவர் இல்லையே, ஒரு பிள்ளை இருந்தால் நன்றாய் இருக்குமே என்றெல்லாம் எண்ணம் வரும். ஆனால் இது சரியான புரிந்துணர்வு இல்லாததால் ஏற்படுவது, நான் யார், இந்த வாழ்க்கை என்பது என்ன என்பதைப்பற்றியெல்லாம் ஒரு தெளிந்த அறிவு அமைந்து விட்டால் இந்தப் பிரச்னை ஏற்படாது. அறிவால் வெல்ல வேண்டிய பிரச்னை இது.

எனக்கு வாழ்க்கைத் துணையை ஏற்படுத்தித் தரும் பொறுப்பை நான் உன்னிடம் தந்து விட்டேன். நீ வழிகாட்டு! என்று முழுப் பொறுப்பையும் அதனிடம் ஒப்படைத்துவிட்டுப் பேசாமல் இருந்தால் நடக்க வேண்டியது தானாக நடக்கும். இவ்வளவு பெரிய இயக்கத்தின் மூலமாகிய அதற்கு இது பெரிய காரியமா? மேலும் ஆன்மீக சாதகர்கள் உயர் உணர்வு நிலையில் எப்போதும் இருப்பவர்கள். அவர்களுக்குச் சாதாரண சலசலப்பு வாழ்க்கை முறை சரி வராது. இந்நிலையில் உள்ளவரைத் திருமணம் செய்பவர்களுக்கு இவர்களின் அமைதித் தன்மை சலிப்பை ஏற்படுத்தும். ஆட்டம். பாட்டம், கொண்டாட்டம், ஆடம்பரம், வீடு, கார், வங்கிக் கணக்கு என்று இல்லையே என்ற ஏமாற்றம், சண்டை சச்சரவுகளை உருவாக்கும், நமக்கு ஏற்ற விதத்தில் அல்லது கர்மப் பிணைப்பால் வருவது வந்தால், சரி என்று ஏற்றுக்கொள்ளலாம். அப்போது வேண்டாம் என்று மறுக்கத் தேவையில்லை. நடக்க வேண்டும் என்று இருந்தால் நடக்கட்டும் என்று ஆத்மாவுடன் தொடர்புகொண்ட நிலையில் அமைதியுடன் வருகின்றவற்றை எதிர்கொள்ளுங்கள். வர வேண்டியது வரும். அவ்வளவுதான்.

ஆன்மீக சாதகர்கள் கவனிக்க வேண்டிய அடுத்த முக்கிய அம்சம் என்னவென்றால் வெளிவிவகாரங்களில் அதிகக் கவனம் செலுத்தக்கூடாது. சமுதாயத்தில் நடைபெறுகின்ற சீரழிவுகளைப்பற்றிக் கேட்கவோ அல்லது பார்க்கவோ முனைகின்றபோது அவையெல்லாம் பதிவுகளை ஏற்படுத்தும். அதனால் தான் தொலைக்காட்சித் தொடர்களைத் தவிர்க்க வேண்டும் என்பதும் செய்தித்தாள்கள் படிப்பதில் ஆர்வம் காட்டக்கூடாது, தொலைபேசியில் ஊர்க்கதைகளைப் பேசிப் பிறர் பற்றிய குற்றம் குறைகளைக் கேட்கக் கூடாது என்று சொல்வதும்! ஏனெனில் அவை பற்றிய எண்ணங்கள் மனதில் பதிந்துவிடும். பிறகு இலேசில் போகாது. வேறு எதையும் பார்க்கின்றபோது தொடர்பு படுத்திப் பார்க்கும். இப்படி மனச் சலனத்திற்கு இவையெல்லாம் காரணமாகிவிடும். தியானத்திலும் இவை தடைகள் ஏற்படுத்தும். இவற்றிலெல்லாம் ஈடுபடாமல் ஒதுங்கி வாழ்ந்தால் நன்மை ஏற்படும். தன்னோடு தான் இருத்தல் என்ற பயிற்சிக்கு இவையெல்லாம் எதிர் மறையானவை.

இப்படிப்பட்ட வெளிஉலகத் தடைகளையெல்லாம் நீக்கி நீக்கித்தான் நாம் உயர் உணர்வு நிலைக்குப் போக முடியும். அப்படிப் போவதற்கு நம்மை மேலும் மேலும் தயார்ப்படுத்த வேண்டிய நிலையில், தடையாக நாமே செயல்பட்டுவிடக் கூடாது. அது சொல்லி நான் செயல் பட்டால் இடையில் கர்மா குறுக்கிட்டுவிடும். இடைத்தரகனாக நான் நின்று செயல்படாமல் அதுவே செய்யட்டும் என்று இருந்து விட்டால் ஆத்மாவே செயல்பட்டுப் பிரச்னையை அது விரும்பிய வண்ணம் தீர்க்கும். நமக்கும் கர்மா ஏற்படாது.

நடக்க வேண்டியது நடந்தே தீரும். நடக்காதது நடக்கவே நடக்காது. கீதையின் சாரமாக இது தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்மாவின் விருப்பமே நமது வாழ்க்கை. இதில் ஈடுபடுகின்ற நாம் வெறும் கருவி மட்டும் தான். இந்தத் தத்துவம் விளங்கிவிட்டால் வாழ்க்கை எளிது. எல்லாம் ஓடி முடிந்த பிறகு நின்று திரும்பிப் பார்த்தால் அந்த அனுபவங்கள் இந்த உண்மையைத்தான் சொல்லும்.

சாதாரண வாழ்க்கையில் நாம் பெரிய அதிசயமாகக் கருதுவது ஒரு பெரிய நஷ்டத்தையோ அல்லது லாபத்தையோ தான். ஆனால் நாம் கவனிக்காத ஒரு பெரிய அதிசயம் என்னவென்றால் இத்தனை காலம் வரை நாம் உயிரோடு வாழ்ந்திருக்கிறோமே. இன்று காலை படுக்கையிலிருந்து உயிரோடு எழுந்தோமே! இதைப்பற்றி யாரும் சிந்தித்துப் பார்த்து அந்த இறைக்கருணைக்கு நன்றி செலுத்துகிறோமா?

நம் நாட்டில் ஒரு பழைய கதை சொல்லப்படுவதுண்டு. நாரதர் தன் மனதில் நான் தான் இந்த மூன்று உலகிலும் மிகப் பெரிய பக்தன் என்று நினைத்துப் பெருமிதம் கொண்டாராம். இதனை அந்தர்யாமியான நாராயணன் அறிந்தார். அவர் நாரதரை அழைத்து அவரிடம் ஒரு ஏழைக் குடியானவனின் அன்றாட நடவடிக்கையைக் காட்டினார். அவன் அதிகாலையில் எழுந்தவுடன் கைகளைக் கூப்பி, ‘நாராயணா’ என்று இறைவனை மனப்பூர்வமாக நினைத்து வணங்கிவிட்டுத் தன் குடும்பக் கடமைகளைச் செய்யத் துவங்கினான். பகல் முழுவதும் கடுமையாக உழைத்துக்
கடமைகளை முடித்தான். இரவு படுக்கைக்குப் போனவுடன் ஆழ்ந்த பக்தியுடன் நாராயணா! என்று உரக்கச் சொல்லிக் கைகூப்பித் தொழுது விட்டுப் படுத்து நித்திரை கொண்டான். அவனது ஆழ்ந்த பக்தியே தமது பக்தியை விட மேலானது என்பதை நாரதர் உணர்ந்து கொண்டார் என்று அந்தக் கதையில் வரும்.

சும்மா வெளிவேஷத்திற்காக உதடுகள் மந்திரங்களை ஜபிக்க, விரல்கள் ஜபமாலையை உருட்டக் கண்கள் சும்மா மூடியிருக்கக்கூடாது. உள்ளம் அவனில் தோய்ந்திருக்க வாழ்க்கையில் நமக்கு வருபவைகளை எல்லாம் அவனது பிரசாதமாக நினைத்து ஏற்று முறையாகவும் சரியாகவும் செயல்படுவதுதான் உண்மையான பக்தி நெறி. இந்த நாளை எனக்குத் தந்தாயே, நன்றி இறைவா! என்பதுதான் உண்மையான பக்தி நிலை.

உயர் தெய்வீக சக்தி என்னை இயக்கிக்கொண்டிருக்கிறது என்பதை எப்பொழுதுமே எண்ணியபடி அவன் கருணை என் வாழ்வு என்று இருந்துவிட வேண்டும். இதுவரை இல்லாவிட்டாலும் இனியாவது இந்த வாழ்க்கையின் நோக்கம், கொள்கை, இயல்பு, செயல்பாடு எல்லாமே ஆன்மீகமயமாக இருத்தல் வேண்டும். எண்ணமில்லாத நிலையைப் பழக வேண்டும். மனோநாசம் செய்யப்படவேண்டும். ஆத்மாவோடு மட்டும் தொடர்புகொண்ட நிலையில் வாழ வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *