ஒலியும் ஒளியும் ஆனாய் நீயே

தன்னைப்பற்றிய அறிதலாகிய ஆன்மீகப் பயிற்சியில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திப் பக்குவப்பட்டுக்கொண்டு வருகின்ற நிலையில் இடைவிடாத சுய பரிசோதனை மிக அவசியம். குரு ஒரு தூண்டுகோலாய் அமைந்து நம்மை நாமே சோதித்துச் சரி செய்வதற்கு உரிய சாதனை முறைகளைத் தந்துகொண்டே இருக்கிறவர். இவ்வகையில் நம்மிடம் அவர் விடுக்கின்ற கேள்விகள் பல. அவை அடிக்கடி நம்மிடம் நாமே கேட்டுக்கொள்ளப்படவேண்டியவை.

அவர் விடுக்கின்ற முதலாவது கேள்வி, அன்றாடப் பிரச்னைகள் இன்னும் உங்களைப் பாதிக்கின்றதா? இந்தப் பிரச்னை எனக்கு ஏன் வந்தது என்பதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கின்றதா? ஏதோவொரு விதத்தில் நம்மோடு தொடர்புகொண்டு தான் இந்தப் பிரச்னை வந்திருக்கிறது என்ற தெளிவு கிடைத்துவிட்டதா? ஏதோ ஒரு பிரச்னை எனக்கு வரப்போகிறது என்பதை முன்னமே உங்களால் உணர முடிகின்றதா? போன்றவை. இப்படித்தான் நம்மை நாம் ஆராய்ந்து பதில் பெற்று ஆன்ம முன்னேற்றத்தைப் பெற முடியும். அதன் பிறகு அவரது உபதேசம் இவ்வாறு தொடர்கின்றது.

நமது வாழ்க்கையில் ஏற்படுகின்ற எல்லாப் பிரச்னைகளும் கர்மப் பதிவினால் நிகழ்பவையே. நமது அனுபவ முதிர்ச்சிக்கேற்றபடி அவற்றை நாம் அணுகுகின்றோம். ஆன்ம அறிவைப் பெறு முன்னர் நாம் சந்தித்த பிரச்னைகளின் அளவு அதிகமானதாகவும் அதனால் ஏற்பட்ட பாதிப்பும் மிக அதிக அளவினதாகவும் நமக்குத் தோன்றியது. ஆனால் இப்போது வாழ்க்கை என்றால் என்ன என்பது புரிந்த பிறகு நாம் வாழ்கின்ற விதத்தில் பிரச்னைகள் ஏற்படுவது குறைந்திருக்கும். அப்படி நம்மை மீறிச் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அது முன்போல் நம்மைப் பாதிக்காது. அதைத் தீர்க்கின்ற விதத்தைப் பதட்டமின்றிச் சிந்தித்து அறிவு பூர்வமாகச் செயல்பட முடியும்.

ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதைக்கண்டு பயம், சோகம், மனஅழுத்தம் போன்றவை ஏற்படாமல் எது வந்தாலும் ஏற்கத் தயார் என்ற மனநிலை நமக்கு வரவேண்டுமெனில், நமது உணர்வு ஆத்மாவுடன் கலந்த நிலையில் ஆத்மாவில் ஊன்றியிருக்க வேண்டும். இது அன்றாட வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய சோதனை.

எப்பொழுதுமே நாம் விரும்பியது நடப்பதில்லை. ஆனால் நாம் விரும்பாதது முன்னால் வந்து நிற்கும். இது தான் வாழ்க்கைப் போராட்டம். இப்படி நடப்பதால் தான் விரக்தி ஏற்படுகின்றது. எதிர்பார்த்தது நடக்கவில்லையே என்ற ஏக்கம், வேண்டாமே என்று நினைத்தது வந்து வாய்க்கின்றபோது வெறுப்பு. இந்நிலை நமது கர்மாவின் விளைவு.இதைப் புரிந்துகொள்ளாதவரை பிரச்னைக்குத் தீர்வு காணத் தெரியாமல் ஜாதகம் பார்ப்பது, குறி கேட்பது, பரிகாரத்தலங்களில் நேர்த்திக் கடன் செலுத்துவது என்றெல்லாம் அலைந்து திரிகின்றோம். இப்படித் திரிந்ததால் மனம் சற்றே அமைதியடையக்கூடும். அல்லது நம் மனம் கொண்ட நம்பிக்கையால் சில சமயம் பிரச்னைகள் சுமுகமாகத் தீரும். ஆனால் நுhறு சதவீதம் எல்லாம் சரி வருவதில்லை.

காலையில் எழுந்ததும் மலசலம் கழித்துவிட்டால் பிரச்னை இல்லை. ஒருநாள் முழுவதும் இது வெளியேறாமல் போனால் பிரச்னை. இப்படித்தான் எல்லாம். இயல்பான நடவடிக்கைகளில் பிரச்னைகளில்லை. இயல்புக்கு மாறானவை பிரச்னைகள். நாம் இயற்கையோடு ஒன்றிய நிலையில் வாழ்ந்தால் பிரச்னைகள் இல்லை. இயற்கை என்பது என்ன? படைத்தவனின் பிரதிநிதி அல்லவா? அப்படிப்பட்ட இந்த இயற்கையோடு ஒத்து வாழ்கின்றபோது நம்மில் முரண்பாடில்லை.

இன்றைய வாழ்க்கை முறையில் ஆன்மீகம் என்பது பல்வேறு வகைகளில் அமைந்து மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. ஆடம்பர ஆன்மீகம், அலங்கார ஆன்மீகம், அலங்கோல ஆன்மீகம், போலித்தனமான ஆன்மீகம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தன்னை உணர்ந்தவராய், பற்றற்ற நிலையில் தன்னில் தான் இணைந்தவராய் மிக எளிமையாக, ஞானத்துடன் கூடிய இயல்பான விதத்தில் வாழ்வதுதான் உண்மையான ஆன்மீகம். ஆன்மாவை உணர்ந்து அதில் ஆனந்திப்பவர் ஆன்மீகவாதி. அவ்வளவுதான்.

ஆன்மீகத்திற்கு வருவதற்கு முன் பிரச்னைகள் ஏற்பட்டபோது அதனால் ஏற்படுகின்ற லாப நஷ்ட விளைவுகளைக் கணக்கில் எடுத்து மனஉளைச்சல் படுவோம். இப்போதோ அது எப்படி வந்தாலும் இது இவ்வளவுதான் என்ற மனத் தெளிவு இருப்பதால் சரியாக அணுகி, ஏற்படுகின்ற விளைவை சரி என்று ஏற்றுக்கொள்கின்ற பக்குவம் ஏற்பட்டிருக்கின்றது. சரிதானே!

பெற்ற ஞானத்தாலும், அதனால் ஏற்பட்ட மன ஒழுக்கத்தாலும் தான் இந்தத் தெளிவு ஏற்படும். அமைதியான மனநிலையில் இருக்கின்றபோது பிரச்னை வரப்போவது சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தால் உணரப்படும்.

எனது உயிர்ச் சக்தியை நான் சேமித்து அதிலேயே கலந்திருக்கின்றபோது, நான் தெய்வீக சக்தியுடன் தொடர்பு கொள்கின்றேன். இந்த நிலையில் உயிர்ச் சக்தி தெய்வீக நிலையுடன் இயங்குகின்றது. இந்தத் தெய்வீக சக்தி எனக்குள் இருப்பது போலவே உலக முழுவதுமாகப் பரந்து விரிந்திருக்கிறது. உடல் சக்தியாகவும், மனச் சக்தியாகவும், புத்தி சக்தியாகவும் உயிர்ச் சக்தியாகவும் வெளிப்படுவது அந்தத் தெய்வீக சக்திதான். எல்லாமாக அது தான் இருக்கிறது. அது தான் செயல்படுகின்றது.

எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வான் என்று சாதாரண மனிதர் சொல்வது இந்த உள் விவரங்கள் தெரியாத நிலையில். ஆதலால், அவர்களுக்குப் பிரச்னைகள் தீரும். ஆனால் விடுதலை கிடைக்காது. ஞானம் பெற்றவர்களுக்கு இந்த உண்மை மிக நன்றாகத் தெரிந்திருந்தால் அவர்களுக்குப் பெரிதாக பிரச்னைகள் வராது. வந்தாலும் பாதிக்காது. ஆனால் விடுதலை உண்டு. நம்பிக்கை அல்லது பக்தி சில வேளைகளில் மாறும். ஆனால் ஞானம் ஒருக்காலும் மாறாது. பிரச்னை வரப்போவது எனக்குத் தெரிகிறது என்றாலும, பிரச்னைகள் வந்தாலும் என்னைப் பாதிப்பதில்லை என்றாலும் அடிமனதில் உள்ள பதிவுகள் அழியத் துவங்கிவிட்டன என்று பொருள். கர்மப் பதிவுகள் குறையக் குறையப் பிரச்னைகள் ஏற்படுவதும் குறைந்துகொண்டே போகும். எனவே, அடி மனதிலுள்ள கர்மப் பதிவுகளை அழிக்கத்தான் நாம் சதா முயற்சி செய்ய வேண்டும். இதற்கு ஞானமும் தியானமும் தான் வழி. வேறு வழியே இல்லை.

உயிர் சார்ந்த சக்திகளாகத் திகழ்பவையெல்லாம் தெய்வீக சக்தியை அடித்தளமாகக் கொண்டு இயங்குபவையே. அந்தத் தெய்வீகச் சக்தியில் தொடர்ந்து இணைய இணையப் பூரண அமைதி நமக்குள் ஏற்படும்.

ஒளிச் சக்தியின் உள்ளே வெப்பம், குளிர்ச்சி இரண்டும் இருக்கும். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் இரண்டும் சேர்ந்ததுதான் ஒளியாகத் தெரிகின்றது. உலகத்திலுள்ள சகல மதங்களிலுமே ஒளியைப்பற்றி மிக உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒளி வழிபாடு எல்லா மதங்களிலும் இருக்கின்றது. ஒளியைப் பாடாத ஆன்மீகவாதிகள் இல்லை. இறைச்சக்தியை ஒளியாகப் பார்த்து அதைத் தன்னில் உணர்ந்து பரவசப்பட்டுத்தான் இவர்கள் பாடியுள்ளனர். ஜோதி ஜோதி ஜோதி சிவம்! ஜோதி ஜோதி ஜோதி பரம்! என்று இராமலிங்க அடிகள் ஜோதி வழிபாட்டின் உயர்வை உலகுக்கு உணர்த்தினார். அருட்பெரும் ஜோதி, தனிப் பெருங்கருணை! என்பது அவரது அற்புதமான சொற்றொடர்.

மாசற்ற ஜோதி, மலர்ந்த மலர்ச்சுடரே! என்று வியந்தார் மாணிக்கவாசகர். புருவ மத்தியில் ஒளிச்சுடராய் என்னைத் தியானிப்பவர்கள் என்னையே வந்தடைகின்றனர்! என்றார் கீதையின் நாயகனாகிய கண்ணபிரான். வேதங்களில் ஒளியைப்பற்றி மிக விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றது. “அறியாமை என்னும் இருளிலிருந்து எம்மை ஞானமென்னும் ஒளி நிலைக்கு அழைத்துச் செல்க!” என்பதைத்தான் “தமஸோமா ஜோதிர்கமய!” என்ற வரிகள் உரைக்கின்றன. ஈசாவாஸ்ய உபநிஷத்தில் சூரியனைப் பார்த்து, “ஓ சூரியனே! உனது கிரணங்களைச் சுருக்கித் தங்கத்தால் ஆன மூடியைத் திறந்து உனக்குள் ஒளிர்கின்ற பரப்பிரம்மத்தை எமக்குக் காட்டுக! ஏனெனில் உனக்குள் ஒளிர்கின்ற அதுதான் எம்முள்ளும் உயிர்ச் சக்தியாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டு விட்டேன்!” என்று ஒரு ரிஷி உரைக்கின்றார். தேவாரம், திருவாசகம் பாடிய நாயன்மார்கள் எல்லாம் ஒளியைப் பற்றித்தான் பாடி இருக்கின்றனர். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து பாடுபவர்களுக்கு இந்த உண்மை நன்கு விளங்கும்.

ஒளி என்பது ஒரு புதிய விஷயமே இல்லை. ஏற்கனவே அனைவரும் அறிந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். சமயம் சார்ந்த விஷயம் தான் இங்கு விஞ்ஞான பூர்வமாக, விளக்கமாகச் சொல்லப்படுகின்றபோது வேறானதாகத் தெரிகின்றது.

ஆத்ம அனுபூதி பெறுவதோடு ஆத்ம சாதனை முடிவடைவதில்லை. ஆத்மாவை அறிந்து அதைத் தனக்குள் தியானத்தின் மூலம் ஒளியாகத் தரிசித்து அந்த ஒளியில் தன்னைக் கரைத்துவிடுவது ஒரு நிலை. அந்த நிலையில் அங்கு நான் என்பது இல்லாமற்போய், அது நானாகி விடுகிறது. அந்நிலையை அடைகின்றபோது ஆத்மாவின் உறையாகிய இந்த உடல் கர்ம உடலாக இல்லாமல் ஒளி உடலாகி விடுகின்றது. அப்படி ஆகும்போது நம்மைச் சுற்றி ஒளி வட்டம் சூழ்கின்றது. அதைத்தான் ஓரா என்கின்றனர். எத்தனையோ பேரைப் பார்க்கின்றபோது அவர்களில் ஒரு தெய்வீக ஒளியை நாம் கண்டு வியந்திருக்கின்றோமே! அந்த ஒளி நிலையை அடைவதுதான் ஆத்ம அனுபூதியின் வெளிப்பாடு.

ஒளி உடல் பெற்ற பிறகு அந்த நிலையிலேயே தொடர்ந்து இருக்கப் பழகத்தான் பரவெளியில் ஒளிவீடு கட்டுங்கள் என்று சொல்லப்படுகின்றது. தொடர்ந்து குருவின் அருகில் இருந்து அவரது கருணை செறிந்த வழிகாட்டுதலுடன் ஞான உபதேசம் பெற்றுத் தியானப் பயிற்சியின் மூலம் ஒளித்தொடர்பு ஏற்படுத்திக்கொண்டவர்களுக்குத் தான் இந்த நிலை விளங்கும்.

ஆனால் இங்குக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால் தாம் கற்றவற்றை மட்டும் பிடித்துக்கொண்டு, விளக்கம் பெறா நிலையில் இதுதான் ஆன்மீகம், இதற்கு மேல் சொல்லிக்கொண்டு போவது சமயத்திற்கு ஒவ்வாது என்று சொல்லி வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுபவர்கள் இருக்கலாம்.

உண்மையான ஆன்மீக சாதகர்களுக்கு அறிவுக்குத் தீனி போடக்கூடிய, ஞான முன்னேற்றத்தைத் தடை செய்யக்கூடிய வாதப் பிரதிவாதங்கள் எல்லாம் தேவையில்லை. எப்படியெல்லாம் இந்த ஊனினை உருக்கி உள்ளொளியைப் பெருக்கிப் பிரம்மமாகி விடலாம் என்ற முயற்சிதான் இனித் தேவை. பிறவி இல்லா நிலையை அடைய நாம் என்ன செய்யலாம் என்னும் முன்னேற்றத்திற்குரிய வழியைத் தான் இனி நாம் பார்க்க வேண்டும்.

அனைத்தையும் கடந்து அதுவாகின்ற தருணத்தில் ஒளியாய் மாறுவதும், ஒளி உடலைப் பெறுவதும் சாத்தியமே. ஆத்மாவை அனுபவிக்கும்போது ஒளி பீறிடும். நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருப்பது ஒளியே. நல்லது கெட்டது இரண்டிற்குமே தீபம் தேவைப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து தான் படைப்புக்கள் ஒளி பெற்று உயிர்ப்படைகின்றன.

மனக்கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு விட்டாலே முகம் ஒளிரும். உள்ளத்தில் ஒளியைத் தரிசித்தால் ஒளிமயம். உறையாகிய உடல் ஆத்மாவில் தன்னை ஊன்றி ஆத்ம உணர்வில் இயங்கினால் ஒளி உடல். இந்த ஒளிஉடல் பரவெளியில் கலந்து பரந்து விரிகின்ற உணர்வைப் பெற்றால் பரவெளி ஒளித் தொடர்பு. தீர்ந்தது.

இவற்றைப்பற்றியெல்லாம் நன்றாகப் புரிந்துகொண்டு ஐயம் தீர்ந்த நிலையில் தொடர்ந்து ஆன்ம சாதனையில் ஈடுபடுகின்றபோது நாம் இழுக்கின்ற மூச்சுக் காற்றில் இருக்கின்ற பிராணவாயு ஒளி என்பதும், கரியமிலவாயு இருளான கரிய நிறமாகச் சொல்லப்படுவதும் விளங்கும். அதாவது எங்கும் பரவியுள்ள தெய்வீகசக்தி இந்த உடலுக்குள் ஒளிச்சக்தியாக உட்புகுந்து உயிர்ச்சக்தியோடு இணைந்து பிறகு வெளியேறுகின்றது. ஒலியாய், ஒளியாய் ஆனாய் நீயே!

அறியாமைக்கும் அறிவிற்கும் இடையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அறியாமையில் இருப்பவர்களுக்கு அறிவொளியுடன் செயல்படுபவர்களைப் பொறுத்துக் கொள்ள இயலாது. அதன் காரணமாக அவர்கள் தமது அறியாமையை வெறுப்பாக, எதிர்ப்பாக வெளிப்படுத்துவார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் உண்மைகளைத் துணிவாக எடுத்துரைக்க வேண்டும். சாக்ரடீஸ், ஆர்க்கிமிடீஸ் போன்ற அறிஞர்கள் கண்டறிந்து சொன்ன உண்மைகளை முதலில் உலகம் ஏற்கவில்லை. எதிர்ப்புகள் உருவாகி அவர்களையே அழித்து விட்டன. ஆனால் அவர்கள் கண்ட உண்மை இன்று பேசப்படுகிறது.

ஆன்மீகவாதிகள் சாத்வீகக் குணம் கொண்டவர்கள் தான். ஆனால் சமூக அவலங்களைப் பொறுக்க இயலாத நிலைகளில் அவர்கள் வீறுகொண்டு எழுந்திருக்கின்றனர். உண்மைகளை எடுத்துரைக்கின்ற நேரங்களில் சூழ்நிலைக்கு பயந்துவிடக்கூடாது. சத்தியத்தை எடுத்துரைக்கின்ற துணிவு வேண்டும். ஏனெனில் அவர்கள் ஆத்மாவோடு தம்மைப் பிணைத்துக் கொண்டவர்கள்.

ஆத்மா சர்வசக்தி வாய்ந்த பெரும் சக்தியின் ஒரு துளி. ஆத்மாவால் ஆகாதது எதுவுமில்லை. இந்தச் சக்தி கட்டுப்படுத்தப்பட்ட வரையறைகளுக்கு உட்பட்ட நிலையில் செயல்படுகின்ற என்னுள் முழு ஆற்றலுடன் வெளிப்பட்டதென்றால் என்னால் சர்வ வல்லமையுடன் செயலாற்ற முடியும். ஆனால் அதற்குச் சரியாக, மிகக் கடுமையாக முயன்று அதன் அருளைப் பெற்று அதுவாகவே ஆகிவிடுகின்ற தன்மை நம்மில் அமைய வேண்டும். அதுதான் முக்கியம்.

உலகிலேயே மிக அற்புதமானது ஆன்ம சுகம்தான். என்னுடைய சுய எண்ணங்களையும் பதிவுகளையும் உடைத்தெறிகின்ற நிலையில் தான் அதை முழுமையாக அனுபவிக்க முடியும். எனது சகல உறுப்புக்களும் தம்மை மறந்த நிலையில் அதனில் ஒன்றிப்போவது தூக்கம். விழிப்பு நிலையிலேயே இந்த உணர்வில் ஒன்றி சகலத்தையும் மறந்து இருப்பது தியானம். இதைத்தான் அறிதுயில் என்பர். தூக்கம் மனிதனுக்கு ஒரு சுகம். ஆன்ம லயிப்பான தியானமும் சுகம்தான். இது ஆத்ம சுகம். ஆனந்தத்திலேயே பெரிய ஆனந்தம் என்னோடு நான் இருப்பது தான். இதற்குப் புறம்பாகப் பெறப்படுகின்ற வேறு எந்த ஆனந்தமும் எனது சக்தியை இழுப்பவையாகவே இருக்கும். என்னோடு நான் இருந்தால் சக்தி இழப்பு இல்லை. ஏனெனில் சக்திக்குள்ளேயே நான் இருக்கிறேன். இந்த நிலையில் நான் பேரறிவுடன் தொடர்பு கொள்கிறேன்.

நான் இந்தப் பிறவி என்ற நிலையில் செயல்படுகின்றபோது எனது எண்ணங்கள் என்னைத் தூண்டுகின்றன. துன்பம் அல்லது இன்பத்தைத் தருகின்றன. அந்தத் தூண்டுதலில் மனம் இயங்குகின்றது. சக்தி செலவழிகின்றது. ஆனால் அறிதுயில் என்னும் சமாதி நிலையில் சித்தமும் மனமும் இல்லாமற்போய் நான் அதுவாக ஆகிவிடுகின்றேன். இது தான் ஆத்ம சுகம்.

எண்ணங்கள் என்பது கர்மப் பதிவின் பிரதிபலிப்பு. அவை இல்லாத நிலையில் கர்மப் பாதிப்பு இல்லை. செயல்படாததால் இருக்கின்ற கர்மாவும் அழிந்து விடுகின்றது. நான் கொண்ட புலன்கள் இயங்காததால் எனக்கு நிம்மதி, மகிழ்ச்சி, சக்தி, நிறைவு. பிரச்னைகள் எனக்கு ஏற்படும். போகும். நான் அவற்றிற்குள் போக மாட்டேன். ஏன்? என்னோடு நான் இருக்கின்ற சுகத்தை அனுபவிக்கின்ற நிலையில் எந்தப் பிரச்னையும் எனக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. நான் நானாகவே நிம்மதியாக, நிறைவாக, சுகமாக இருப்பேன். இதுதான் நாம் அறிய வேண்டிய ஆன்மீகம்.

ஆன்மாவாகிய என்னைப்பற்றி நாம் கூடுதலாக அறிய அறிய, பிறவியாகிய நம்மில் அன்பும் கருணையும் பெருக்கெடுக்கின்றன. அன்பு செலுத்துபவர்களை அனைவரும் விரும்புகின்றனர். இந்த அன்பும் கருணையும் பெருகி விரியும்போது, என்னோடு நான் இருக்கின்ற நிலையில் தொடர்ந்து இருக்கின்றபோது, என் வாழ்க்கை நிறைவடைகின்றது. இந்த நிலையில் எதிர்மறையாக எதுவும் நிகழாது. அப்படியே நிகழ்ந்தாலும் நம்மைப் பாதிக்காது.

இந்த நிலையில் நமது வாழ்க்கை ஒளிமயம். நாம் அதன் சாட்சி. நமது பரிணாமம் உயர்ந்துகொண்டு போவதை நாமே உணரலாம். நான் அதுவாக ஆகி விட்டேன் என்றால் எனது வருகை நிறைவு பெற்றுவிட்டது என்று பொருள். எனது பிறப்புச் சுழற்சி முற்றுப்பெற்று விடுகிறது. இதுதான், இந்த நிலைதான் மனிதன் என்பவன் தெய்வமாகின்ற நிலை. நான் யாரோ, என் இயல்பு எதுவோ, அதுவாகின்ற நிலை இது. அது நம்மைக் கூப்பிடுகின்ற நேரத்தில் கூப்பிடட்டும். அதுவரை நாம் அதுவாகவே இருப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *