பூரண சரணாகதி

வெளி உலகத் தொடர்புகளையெல்லாம் விட்டு விட்டுத் தன்னைப்பற்றி அறிய வேண்டும் என்ற உந்துதலில் ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டு நம்மைச் சிறிது சிறிதாக உயர்த்திக்கொண்டு வருகின்ற இந்நிலையில் குருவிடமிருந்து எழுகின்ற ஒரு கேள்வி இதுவரை நீங்கள் உண்மையாகவே வாழ்ந்திருக்கிறீர்களா? அல்லது காலம் தான் உங்களை உருட்டிக்கொண்டு வந்திருக்கின்றதா? என்பது. பெரும்பாலும் இதற்குக் கிடைக்கின்ற பதில், காலம் எங்களைத் தள்ளிக்கொண்டு வந்தது என்பதாகத்தான் இருக்கிறது.

ஆம், காலம் நம்மை உருட்டிக்கொண்டு வர நாம் அனுமதித்திருக்கிறோமே தவிர நாம் வாழவில்லை. அதாவது பெற்றோர் சொல்லித் தந்தவை, ஆசிரியர் அள்ளித் தந்தவை, சமுதாயம் போதித்தவை என நாம் புரிந்துகொள்ளாத கருத்துக்கள் தான் நம்மைக் கொண்டு சென்றனவே தவிர வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நாம் வாழ்ந்ததில்லை.

உள் ஆராய்ச்சியாளர்களாகிய நமது ரிஷிகள் உயிர்ச்சக்தி தான் புலன்களாகவும், மனமாகவும், புத்தியாகவும் இந்த உடலை இயக்குகின்றது. இது பிரபஞ்ச சக்தியை இழுத்துத் தான் இயங்குவதற்கு அதைப் பயன்படுத்துகின்றது என்பதைக் கண்டறிந்தனர். இந்த உயிர்ச்சக்திதான் உடல் வழியாக உறவுகளோடும், பொருள்களோடும் தொடர்பு கொண்டு தன் அறிவின் தன்மைக்கேற்ப வாழ்கின்றது. இப்படிப்பட்ட வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அது எத்தனையோ விதங்களில் அடிபட்டு, அவமானப்பட்டு இருக்கிறது. பிழையாகச் செயல்பட்ட தருணங்களில், தான் அடிபட்ட அனுபவங்களைப் பாடமாக எடுக்காமல் மேலும் மேலும் பழைய நிலையிலேயே வாழ்ந்தால் எந்தவிதப் பயனுமில்லை. அனுபவங்களைப் பாடமாக எடுக்க வேண்டும். வாழ்க்கையில் பலவேறு நிலைகளில் நாம் உருட்டப்பட்டிருக்கின்றோம். சில இடங்கள் சமதளமாக இருக்கும். சில நேரங்களில் மேடு பள்ளங்களாக இருக்கும். ஏற்ற இறக்கங்கள் ஏராளம் இருந்திருக்கும்.

இந்த ஏற்ற இறக்கங்களைப்பற்றி, வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகள்பற்றி நாம் சாதாரணமான அறிவு நிலையில் சிந்தித்துப் பார்த்தால், என் வாழ்க்கை பூரா நான் கண்டது வெறும் துன்பம்தான் என்ற எண்ணம் எழும். இதையே ஆன்மீக அறிவு பெறுகின்ற நிலையில் அந்த அறிவோடு நின்று சிந்தித்தால் துன்பமயமாகத் தெரிந்த இந்த வாழ்க்கை என்னை உயர்த்திக்கொண்டு போவதற்காகத் தரப்பட்ட சோதனை. இறைக்கருணை என்னை இவற்றின் வழியே கொண்டு வந்து நான் பரிணாமப்படுவதற்குப் பக்குவப்படுத்தியிருக்கிறது என்பது புரியும்.

என்னுடைய முயற்சியைத் துரிதப்படுத்த, எனது பரிணாம வளர்ச்சியை நான் விரைவாக அடையக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள், சாதாரண அறிவு நிலையில் எனக்குத் துன்பங்களாக, அடிகளாகத் தெரிந்தன. ஆனால் உண்மையில் அந்தக் கஷ்ட நஷ்டங்கள், நமக்கு உயர்வதற்கான படிகள். பயணப்பட்டுத்தான் பரிணாமப்பட வேண்டும். பிறந்ததிலிருந்து பயணப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றோம். சிந்தித்தால் விளங்கும். உங்களுக்குத் தெரியுமா? தனக்கு எது தேவையோ அதை உடம்பு கேட்கும். கர்ப்பிணிகளுக்குக் கால்சியம் அதிக அளவில் தேவை. கிராமத்துப் பெண் படிக்காதவள், தன்னாலேயே மாங்காயைத் தின்பாள். சுவரில் இருக்கும் சுண்ணாம்பை அல்லது அடுப்புச் சாம்பலை அள்ளித் தின்னுவாள். இவற்றில் கால்சியம் இருப்பது அவளுக்குத் தெரியுமா? இந்த உடம்புக்கு என்ன தேவையோ அதில் கூடுதல் விருப்பம் தானாகவே ஏற்படும்.

கங்கைக்கரையில் உள்ள கிராமப்புறங்களில் பெரிய பாறைகள் இருக்கும். அந்தப் பாறைகளைப் பெரிய பெரிய கொழுத்த மாடுகள் நாவால் நக்கிக்கொண்டு நிற்கும். இதில் அதிசயம் என்னவென்றால் ஆண் மாடுகள் ஒருவிதக் கற்பாறைகளையும், பசுக்கள் வேறுவகைப் பாறையையும் தனித்தனியாக நின்று நக்கும். இந்தப் பாறைகளில் என்ன தனித்தன்மை என்று ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அவற்றில் உப்புத் தன்மை இருப்பதும் அதிலும் ஆண் மாடுகள், நக்குகின்ற பாறைகளில் ஒருவிதக் காரத்தன்மை மிகுந்திருப்பதும் பசுக்கள் பயன்படுத்துபவைகளில் அமிலத்தன்மை இல்லாமல் குளிர்த்தன்மையுடன் கூடிய உப்பு மட்டுமே இருப்பதையும் கண்டறிய முடிந்தது.

இவ்வளவு நுட்பமான அறிவை இவற்றிற்குத் தந்தது யார்? இப்படி இவ்வளவு நுட்பமாக இந்தப் பிரபஞ்சத்தையும் இயற்கையையும் படைத்துள்ள ஒன்றுதான் நமக்குள் இருந்து நம்மையும் இயக்கிக்கொண்டு இருக்கிறது. அது தன்னைப் பற்றிய அறிவைத் தரக் காத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் நாமோ அதைப்பற்றி அறியாமல் அலைந்து திரிந்து வாழ்க்கையை வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். நமக்கு அது தேவை என்று உணர்ந்தவர்கள்தான் ஆன்மீகத்தை நாடுகின்றனர். நீங்கள் இதனைப் படிப்பதும் அந்தத் தேடலின் விளைவே.

நமது வாழ்க்கை மிகக் குறுகியது. நமக்குக் கொடுக்கப்பட்ட அறிவும் குறைவு. இந்த நிலையில் இந்த வாழ்க்கை முடிவதற்குள்ளாகவே இதைப்பற்றி நன்றாக அறிந்து அதுதான் நான் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு அதுவாக நம்மை மாற்றுகின்ற முயற்சியில் உடனடியாக ஈடுபடாமல் இன்னும் வெளிவிவகாரங்களிலேயே ஈடுபட்டுக்கொண்டு, பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்தால், இனியொரு வாய்ப்பு கிடைக்குமா?

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் இந்த ஆன்மீக முயற்சிகளில் ஈடுபட்டுத் தியானப் பயிற்சி, தன்னாராய்ச்சி ஆகியவற்றில் முறையாகச் செயற்படத் துவங்கிய பிறகு வெளி உலகப் பொருட்கள் அல்லது உறவுகளில் நமது நாட்டமும் ஈடுபாடும் அதிகரித்தால் அவற்றில் உள்ள தோஷம் நம்மிடம் வந்து ஒட்டிக்கொள்ளும். அந்தத் தோஷங்கள் நமது சந்தோஷத்தை இல்லாமற் செய்துவிடும். அதற்காகத்தான் குரு நமக்குச் சொல்கிறார். “உமது மனதையும், புத்தியையும் ஆன்மாவிலேயே வைத்திருங்கள்” என்று.

நாம் நாமாக நமது பிரச்னைகளைத் தீர்த்துவிட நினைத்தால் அவற்றிற்கு உரிய தீர்வு கிடைக்காது. அதற்கு மாறாக அதனுடன் தொடர்புகொண்ட நிலையில் பிரச்னையை அணுகினால் சரியான தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் தீர்க்கப்படாத பிரச்னையென்று ஒன்று இல்லை. நமது மனச்சிக்கல்களால் தான் அப்படித் தோன்றுகிறது. நமது அறிவு மட்டத்திற்கு ஏற்றபடி தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது பிரச்னைகளை நாம் அணுகியிருக்கின்றோம். எத்தனையெத்தனையோ பிரச்னைகள் நமக்கு முன்னால் ஏற்பட்டு நம்மைக் கஷ்டப்படுத்தி நம்மைக் கடந்து சென்றிருக்கின்றன. பிரச்னைகளை நாம் டக்கென்று உடனடியாகப் புரிந்துகொள்கின்றபோது அவற்றைத் தீர்க்கின்ற விதம் தெரிந்துவிடும். இதைத் தான் புத்திசாலித்தனம் என்பது. புரிதல் என்பது வளர்ச்சி. நம்மைப்பற்றி நாம் புரிந்துகொள்ள முயல்கின்ற விதத்தில் தான் நமது பரிணாம வளர்ச்சி அதிகரிக்கும்.

மனதை எண்ணங்களில்லாமல் வெறுமையாக்கி அந்த வெற்றிடத்தை அப்படியே இருக்கச்செய்து சும்மா இருந்தால் அந்த இடத்தில் ஆத்மசக்தி நிரம்பும். இப்படிச் செய்யாமல் மனதால் இயங்கிக்கொண்டே இருந்து ஆத்மசக்;தியை அனுமதிக்காமல் இருந்தால் அதற்குத் தண்டனையாக மீண்டும் பிறந்து வாழ வேண்டியிருக்கும்.

இப்படி மனதை வெற்றிடமாக அமைதியும் ஆனந்தமுமாகத் தொடர்ந்து வைத்துக்கொண்டால் தான் அடுத்த படி ஏற முடியும். அதாவது மனமில்லாமல் முற்றிலும் ஆத்மசக்தியாக நிறைந்து உடலில் ஒளி பரவும். பிறகு அந்த ஒளியால் பரவெளி ஒளிச் சக்தியைப் பிடிக்கலாம். நானும் அதுவும் ஒன்று என்ற நிலை நமக்கு ஏற்பட்டுவிட்டால் அது அதி உயர் உணர்வு நிலை. அந்த நிலைக்கு நம்மை உயர்த்திக்கொள்ளத்தான் நமது முயற்சிகள் எல்லாமே. ஆத்மாவை அடைய நாம் செய்கின்ற முயற்சிகளால் தான் கர்மாவையும் அழிக்க முடியும்.

கர்மா என்பது நாம் வாழ்ந்து அனுபவிக்கவேண்டியது. அல்லது நமது ஆன்மீக ஞானத்தால் அழிக்கப்படவேண்டியது. அவரவர் படைப்பிற்கேற்ற விதத்தில் அவரவர் கர்மா அமைகின்றது. கர்மா நாம் இருக்கின்ற சூழ்நிலையிலும் நாம் செய்கின்ற வேலையிலும் தான் மிக அதிக அளவில் பிரதிபலிக்கும்.

கர்மாவால் நமது வாழ்க்கை சரியாக அமையாவிட்டாலும் கூட அதைப் பொறுத்து ஏற்றுக் கொள்கின்ற தன்மை நம்மில் ஏற்பட வேண்டும். எனக்கு நிகழ்பவை எல்லாம் என் கர்மாவின் விளைவு என்று அதனை அன்புடன் அணுகி ஏற்று அனுபவித்துத் தீர்க்க வேண்டும். அலைமோதி அவதிப்படக்கூடாது.

நான் யார்? எங்கிருந்து வந்தேன்? இந்த வாழ்க்கையின் நோக்கம் என்ன? நான் எதை அடைய வேண்டும்.? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்ற ஞானத்தையெல்லாம் பெற்றாகிவிட்டது. செயல்படுகின்ற விதத்தில் தான் குறைபாடு. எவையெவை என்னை இழுத்துக்கொண்டு என்னைப் பூரண ஆனந்த நிலையை அனுபவிக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன? என்று ஆராய வேண்டும். ஏன் நான் அதை அடையவில்லை?

பூரணத்தைப்பற்றி அறிந்தும் பூரணத்தை அடையவிடாமல் எது தடையாக இருக்கிறது என்ற கேள்விக்கு என்ன பதில்? எல்லாவற்றையும் விட்டுவிட, அனைத்தையும் தியாகம் செய்ய நாம் முற்படவில்லை, அதற்கு மனம் வரவில்லை என்பது தான் அந்தத் தடை. சித்தம் சுத்தம் அடைந்தால் பூரணத்தன்மை ஏற்படும். மன அழுக்குத்தான் அந்தத் தடை. நான் அதனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட பிறகு என்னுடைய வாழ்க்கையை அது பார்த்துக்கொள்ளும் என்ற உண்மை நம்மில் முழுமையாகப் படியவில்லை. அதனுடைய துhண்டுதலால் தான் இந்த வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது என்பது இன்னும் புரியவில்லை.

பகல் முழுவதும் இயங்க வைத்து, இரவில் உறங்கச் செய்து அந்த நேரத்தில் இந்த உடலின் களைப்பை நீக்கிப் புதுப்பித்துப் பிறகு விழித்து எழுந்ததும் கழிவுகளை வெளியேற்றிச் சுத்தப்படுத்தி இதனை மீண்டும் இயக்கத்திற்குத் தயார்ப்படுத்துவது வரை அதுதான் உட்சக்தியாக இருந்து எல்லாம் செய்கிறது. செயல்படுவது மட்டும்தான் இந்த உடலின் பங்காக இருக்கிறது. நான் செய்விக்கப்படுகிறேன். அவ்வளவுதான்! அதுதான் உள்ளிருந்து இயக்கி வழி நடத்தி, உயர் நிலைக்கு இட்டுச் செல்கின்றது. அதன் உதவியால் தான் என்னால் ஆன்ம முன்னேற்றத்திற்காக முயற்சி செய்ய முடிகின்றது. அப்படியிருந்தும் என்னால் அதை அடைய முடியாமற் தடையைத் தருவது எதற்காக அல்லது இந்த அளவிற்கு முயன்றும் தடுப்பது ஏன் என்று பார்த்தால் நான் அதனிடம் முழுமையாகச் சரணடைய வேண்டும் என்பதற்காகத்தான்.

பூரண சரணாகதி அடைந்தவரால் தான் அதனைப் பூரணமாகப் பெற முடியும். இது என்னுடைய வாழ்க்கை என்று நாம் எண்ணாமல் அதனுடைய விருப்பம் என்று ஏற்றுக்கொண்டால் பிறகு நம் முயற்சியே இல்லாமல் எது நடக்க வேண்டுமோ அது தானாகவே நடக்கும். அதனிடமும் கேட்டுக்கொண்டு நாமும் எதையாவது செய்துகொண்டே இருப்பதுதான் பிரச்னை. புரிகிறதா? இனி நாம் என்ன செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் அதனிடமே ஒப்படைத்து விட்டு நீயே பார்த்துக்கொள் என்று இருந்துவிட வேண்டும். இது ஒரு சின்ன மாற்றம் தான். அது தந்த அறிவையும் ஆற்றலையும் நாம் அதனிடமே தந்துவிட வேண்டும். அதனால் தரப்பட்டு எனதாக மாற்றப்பட்ட எனது வாழ்க்கைப் பிரச்னையை அதனிடமே திருப்பி ஒப்படைத்து விட்டு நான் பேசாமல் இருக்கின்ற போது நடப்பது நடக்கும். அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் சரி. இதுதான் உண்மையான சரணாகதி.

இவ்வளவு பெரிய பிரபஞ்ச இயக்கத்தையே சிறிதும் பிசகாமல் நடத்திக்கொண்டு போகின்ற சக்திக்கு நமது பிரச்னையை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதா, நம்மால் தான் அப்படி விட இயலாதா? ஆனால் இது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. இந்தச் சமயத்தில் தான் அது பயங்கரமாக நம்மை சோதித்துப் பார்க்கும். இந்தச் சரணாகதி உண்மையானது தானா என்பதற்காக எத்தனையோ சோதனைகளைத் தரும். இருக்கின்ற சோதனைகளிலேயே மிகக் கடினமானது ஆத்ம சோதனைதான். அது தனக்குரியதைத் தேர்ந்தெடுக்க சகலவிதத்திலும் சோதித்துத்தான் எடுக்கும். நுணுக்கமான சோதனைகள் தான். என்றாலும் அதனை வெல்ல வேண்டும். தருவதும் நீ தான். அதைத் தீர்;ப்பதும் நீ தான் என்று அதைப் பூரணமாக ஏற்க வேண்டும். நான் எல்லாப் பிரச்னைகளையும் அதனிடமே விட்டு விட்டேன் என்று வாயால் சொல்லிவிட்டுப் பிறகு அதைப்பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருந்தால்! இது தான் நாம் விடுகின்ற பிழை.

பிரச்னைகளாக வருவது நமது கர்மா. அப்படி வருகின்ற பிரச்னைகளைப் பெரிதாகப் பார்ப்பதும், சின்னதாக எடுப்பதும் நமது அறிவு சார்ந்த மனம் தான். ஆன்மீகப் பாதையில் பயணப்படுபவர்கள் பிரச்னையைப் பெரிதாகவோ, சிறிதாகவோ பார்க்கத் தேவையில்லை. எனது உயிர்ச்சக்திதான் வாழ்க்கையாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதை அறிந்த பிறகு பிரச்னைகளுக்காக அவதிப்பட்டு உயிரின் சக்தியை வீணாக்கலாமா?

ஆத்மாவை அடைவதற்கான இப்படிப்பட்ட முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றபோது துர்ச்சக்தி நம்மைக் கலைக்கப் பார்க்கும். கவனித்துப் பார்த்தால் ஓர் உண்மை தெளிவாகப் புரியும். ஆன்ம முயற்சியில் உயர் நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருப்பவர்களுக்கு நண்பர்கள் குறைவாக இருப்பார்கள். அவர்கள் கூட்டங்களில் சென்று கலக்கமாட்டார்கள். கண்ட இடங்களில் அவர்கள் சாப்பிடமாட்டார்கள். அதிகம் பேசமாட்டார்கள். ஏனெனில் ஆன்மக் கலப்பில்லாத அந்தக் கெட்ட உணர்வுகள் அவர்களைத் தாக்கிக் கீழ்நிலைக்கு இழுக்கும்.
நம் உறவுகளிலேயே கூட கீழ்நிலை உணர்வு அல்லது எதிர்மறைச் சக்தி இருந்தால், அது நமது முன்னேற்றத்தைத் தடுக்கும்;. அவர்களது எதிர்மறையான எண்ண அலைகள் நம்மைத் தாக்கும். அவை நம்மில் எழும் ஆன்ம உயர் உணர்வலைகளை அமர்த்திக் கீழ் நிலைக்குத் தள்ளும்.

இந்தக் கெட்ட உணர்வலைகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக நம் வீடுகளில் சின்னச்சின்ன செயல்களைச் செய்து வருவதைக் கவனித்தால் தெரியும். குழந்தைக்குக் கண்திருஷ்டி படக்கூடாது என்பதற்காகக் கன்னத்தில் கறுப்புப் புள்ளி வைப்பார்கள். மாவிலைத் தோரணத்தை வீட்டு வாயிலில் கட்டுவார்கள். திருமண வீட்டில் மணமகன் வீட்டார் வரும்போது முக்கியமான நபர்களுக்குத் தேசிக்காயைத் தருவார்கள். ஏதாவது தகராறு செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தால்கூட எலுமிச்சம் பழத்தைக் கையில் கொடுத்ததும், அந்த எண்ணம் மாறிவிடும். மாவிலை, எலுமிச்சம் பழம் ஆகியவை கெட்ட சக்தி அலைகளைத் தடுக்கக்கூடியவை. நம்மிடமிருந்த எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்களை நாம் இப்போது கைவிட்டு விட்டோம்.

சமீபத்தில் லண்டனிலும், அமெரிக்காவிலும் கோடிக்கணக்கான டாலர்களை செலவழித்துச் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் சிவப்புநிற மாமிசத்தை உண்ணுபவர்களுக்குப் புற்றுநோய் வரலாம். அவர்கள் நீண்ட காலம் வாழமாட்டார்கள். மீன், இறைச்சி போன்றவை உடலுக்கு ஒவ்வாதவை. காய்கறிகளிலும் செயற்கை உரங்கள் இல்லாத இயற்கையான காய்கறிகளைத் தான் சாப்பிட வேண்டும். கொட்டைகளையும், நல்ல காய்கறிகளையும் சாப்பிடுவது நல்லது போன்ற உண்மைகள் ஆராய்ச்சி முடிவில் கண்டறியப்பட்டிருக்கிறது. சைவ உணவு வாழ்க்கை முறைக்கும் நல்லது, ஆன்ம முன்னேற்றத்திற்குத் தேவையான சாத்வீக மனநிலைக்கும் அது மிக நல்லது.

ஆத்ம முன்னேற்றத்தில் ஈடுபட்டிருக்கும் சாதகர்கள் உணவில் கவனம் செலுத்துவதைப்போல தம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கின்ற உறவுகளோடும் சரியான கவனத்துடன் பழக வேண்டும். தமக்கு நெருக்கமான உறவுகள் உயர் உணர்வு மன நிலையில் நல்ல முறையில் பழகினால் அவர்களுக்கு அதனால் பாதிப்பு இல்லை. மாறாக எதிர்மறை உணர்வு நிலையில் நமது ஆன்மீக சாதனைக்கு எதிர்ப்பான நிலையில் நடந்துகொண்டால், அவர்களை எதிர்த்து நின்று நாம் கீழ் உணர்வு நிலைக்குப் போய்விடாமல், இது என் கர்மாவால் ஏற்பட்ட உறவு; இதை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் என்று ஏற்றுக்கொண்டுவிட வேண்டும். அவர்களோடு சுமுகமாகப் பழகுகின்ற நிலையில் இருந்துகொண்டு, மனதால் அவர்களை விலக்கிவிட வேண்டும். அவர்களின் கர்மாவை எதிர்த்து நாம் செயல்பட்டு நமது கர்மாவை ஏற்றிக்கொண்டுவிடக் கூடாது.

நாம் வரும்போது யாருடனும் சேராமல் தனியாய்த்தான் வந்தோம். போகும்போதும் யாரும் கூட வரமாட்டார்கள். தனியாய்த் தான் போவோம். இங்கு ஏற்பட்ட உறவுகள் கர்மாவால் வந்த கூட்டு. அவ்வளவுதான்! இதைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும். வேண்டாத ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இப்படியெல்லாம் நடந்துகொண்டால் கீழ்நிலைக்குப் போய் விட நேரிடும். இந்த அளவிற்கு நமது ஆன்ம அணுகுதலை உயர்த்திக்கொண்டு வந்த பிறகு இனி சறுக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது.

உயர்நிலைக்குப் போகப்போக சோதனைகள் அதிகரிக்கும். கெட்ட அலைகள் தாக்கி அலைக்கழிக்கும். எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகங்காரம் ஏற்படும். அந்த அகங்காரம் நம்மை அழித்துவிடும். புராணங்களில் வருகின்ற கதாபாத்திரங்கள் எல்லாம் அருள் பெற்றவை. இராவணன் மிகத் திறமை வாய்ந்த ஒரு சிவ பக்தன். சகல கலைகளையும் அறிந்தவன். வல்லவன். பிராமணன். ஆனால் அப்படிப்பட்ட வீரனை அவனது அகங்காரமும், மோகமும் அழித்துவிட்டன.

இயற்கையின் விதிகள் நமக்குள்ளும் இருக்கின்றன. இந்த இயற்கையின் நியதிகளை நாம் மனதால் தான் மீறுகின்றோம். அலைகளாக இருக்கின்ற மனதையும், புத்தியையும் இயற்கையின் நியதிகளோடு ஒத்துப்போகச் செய்கின்றபோது வெளிப்புற இயற்கைச் சக்தியோடு நாம் ஒத்துப்போய் அதனுடன் இணைகின்றோம். அந்த நிலையில் நம்மை இயற்கை பாதுகாக்கும். இது நாம் அறிய வேண்டிய ஒன்று. காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிடுவதும், பூங்காவில் உலவுவதும் நாம் இயற்கையோடு கொள்கின்ற தொடர்பு.

காலநிலைக்கு ஏற்றபடி இயற்கை அதற்குரிய பழங்களையும், காய்கறிகளையும் உற்பத்தி; செய்து தருகிறது. இயற்கை விதிப்படி நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பிரச்னைகள் இருக்காது. அப்படியே இருந்தாலும் குறைவாகவே இருக்கும். இயற்கையை அனுசரித்தல் சுகமான வாழ்க்கை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

எந்தவிதத் தீர்மானமும் எடைபோடும் மனப்பான்மையும் இல்லாமல் நம்மைப் பற்றி நாமே எப்போதும் ஆராய்ந்து சுயபரிசோதனை செய்துகொண்டு இருக்க வேண்டும். மற்றவரைப்பற்றி ஆராய்ந்துகொண்டிருப்பதை அறவே விட்டுவிட்டு, நம்மை நாம் உற்று நோக்கித் திருத்திக்கொள்ள வேண்டும். இது தான் நாம் நம்மை உயர்த்திக்கொள்ள உரிய முயற்சி.

நமது இறுதி நிலை ஒளிநிலை. இந்த நிலையில் நமது மூளையில் உள்ள எல்லா நியுரோன்களும் ஒளிரும். இந்நிலையில் ஒளிமயமான ஆத்மா பரமாத்மாவாக மாறுகின்றது. அதன் பிறகு இதற்குப் பிறப்பில்லை. அதற்குத் தேவையுமில்லை. இந்த நிலையை அடைவதற்கு நாம் கருணையால் நிரம்பியிருக்க வேண்டும். அன்பும் கருணையும் தான் நம்மை ஒளிநிலைக்கு உயர்த்தும். கொஞ்சம் எதிர்க்குணங்கள்; நம்மில் வெளிப்பட்டாலும் இந்த ஒளித்தன்மை நம்மை விட்டு விலகிவிடும். நமது தன்மை உயர உயர ஒளியுடல் பெற்றுத் திகழலாம். நமது தன்மை கீழிறங்கிற்;றென்றால் ஒளி உடல் மறைந்து போகும்.

இந்த ஒளிநிலைக்குப் போவது நமது பிறப்புரிமை. ஆத்ம சக்தியும் அதற்காகத்தான் காத்திருக்கிறது. நமது புரிதல் வளர்வதற்கு ஏற்பக் கர்மா அழியும். புதிய கர்மா ஏற்படாது. நம்மை நாம் புரிந்துகொண்டுவிட்டால் பிறகு நாம் பிறருக்குச் செய்வதெல்லாம் சேவையாகிவிடும். நான் இல்லை. இருப்பது அவனே! என்ற உணர்வில் தோய்ந்து வாழ்வதுதான் பூரண சரணாகதி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *