விண்ணில் விரியும் ஒளி

வாழ்க்கை என்பது நாம் வாழ்கின்ற விதத்தில் அமைகின்றது. உடல் அளவில் வாழ்கின்ற வாழ்க்கை சாதாரண இயந்திர வாழ்க்கை. உடலோடும் மனதோடும் வாழ்கின்ற வாழ்க்கை பொருள் வாழ்க்கை. மனதோடும் புத்தியோடும் வாழ்கின்ற வாழ்க்கை அறிவு வாழ்க்கை. புத்தியோடும் ஆன்மாவோடும் வாழ்கின்ற வாழ்க்கை ஆன்மீக வாழ்க்கை. புத்தியையும் விட்டு ஆன்மாவோடு சேர்ந்து வாழ்வது தெய்வீக வாழ்க்கை. வாழ்க்கை தெய்வீகமாக மாறுகின்றபோது முன்பு வாழ்ந்த வாழ்க்கைகளின் எண்ணங்களையும், ஞாபகங்களையும் நம்மில் எழுப்பிக்கொண்டு அலைபாயக் கூடாது. வளர்ச்சியடைந்தபின் மீண்டும் கீழ் நிலைக்குப் போகக்கூடாது.

பு+மி மண்டலத்தில் 16 கி.மீட்டர் உயரத்திற்கு உயிர்சக்தி எழும்பி அடர்த்தியாக எல்லா இடங்களிலும் பரவி நிற்கிறது. இதனை அறிவியல், ஓசோன் என்று சொல்கின்றது. இவற்றை உணர்ந்த ஞானத்தினால் தான் நம் முன்னோர் மார்கழி மாதத்தில் வைகறைப்பொழுதில் வெற்றுடம்புடன் நகர சங்கீர்த்தனம் என்று பஜனை பாடிக்கொண்டு வருவார்கள். ஏனெனில் அந்த வேளையில் இந்த உயிர்ச் சக்தி பூமியில் இறங்குகின்றது. உடம்பில் படும்போது அது நிறையும் என்பது தெரிந்துதான் வைகறையில் எழுந்து குளித்துப் பூசை செய்வதும், அதிகாலையில் தியானம் முதலிய பயிற்சிகளில் ஈடுபடுவதும், மாணவர்களைப் படியென்று பழக்குவதும். ரிஷிகள் ஏற்படுத்திய வாழ்க்கை இது. உயிர்ச்க்தியை உடலில் நிறைத்தல் தான் இந்த வாழ்க்கை முறை. இந்த முறை இந்து மதம் தந்தது.

தர்மம் என்பது நியதி. நாம் நியதி எனப்படும் தர்மத்தைப் பாதுகாத்தால் அந்த தர்மம் நம்மைப் பாதுகாக்கும். தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும். ஆனால் தர்மம் வெல்லும். இந்த தர்மநெறி பற்றி நமது ரிஷிகள் அறிந்து அவற்றை வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எனத் தெளிவாக எழுதி வைத்தனர். அவற்றின் வழி செல்வதுதான் சனாதன தர்மம். சனாதன தர்மம் சொன்னதை இந்து சமயம் ஏற்றுக்கொண்டதே தவிர இந்த சனாதன தர்மம் படைப்பு ஆரம்பித்தது முதலே இருப்பது. தர்மத்தை ஒட்டிய வாழ்க்கை முறையைச் சொல்வது இயற்கை முறையில் வாழப் பழக்குவது. இது எந்த மதத்திற்கும் உரியது இல்லை. இயற்கையை வழிபடுதல், இயற்கை உணவு, இயற்கை வைத்தியம், இயற்கை உணர்வு என்பவை இந்து மதத்தில் உள்ள சிறப்புகள்.

ஒரு நியதியால் இந்த உலகம் இயங்குகின்றது. ஒரு நியதியால் தான் இந்த உடம்பும் இயங்குகின்றது. இந்த நியதியில் செயல்படுகின்ற மனதைக் கண்டபடி அலையவிடாமல் ஒழுங்குக் கட்டுப்பாட்டிற்குள் வைத்து வாழ்வது தான் ஆன்மீக வாழ்க்கை. வேறொன்றுமில்லை.

ஒவ்வொரு உயிரினத்திற்கும் வளர்ச்சி நிச்சயம். மனித வளர்ச்சி என்பது தெய்வீக வாழ்க்கையை அடைவதாக இருத்தல் வேண்டும். இதில் ஒரு படி தான் ஒளி உடம்பாய் மாறுவது. இப்படி இந்த ஒளி உடம்பை அடைவதற்கான முயற்சியில் இரவில் தான் ஈடுபட முடியும். ஏனெனில், இரவில் தான் நாம் தனிமையில் நம்மோடு இருக்கின்றோம்.

ஒளி என்பது ஈதரிக் எனர்ஜி எனப்படும் பரவெளி ஆற்றல். நாம் மிகுந்த முனைப்புடன் ஆன்ம சாதனையில் ஈடுபட்டு, ஆசைகளையும், எண்ணங்களையும் ஒதுக்கி, சிந்தனையை இல்லாமற் செய்து நமக்குள் ஒளிர்கின்ற ஒளியைத் தரிசிக்க முயற்சி செய்கின்றபோது அதில் வெற்றியடைகின்ற நிலையில் பரவெளியில் பரந்து நிற்கின்ற ஈதரிக் எனர்ஜியாகிய ஒளிப்பரப்பில் சென்று கலக்க நம்மால் முடியும். இது சும்மா சொல்லப்படுகின்ற ஒன்றல்ல. சித்தர்களும் ஞானிகளும் இந்த ஒளிப்பரவெளியில் கலந்து இன்புற்றிருக்கின்றார்கள். ராப்பகல் இல்லாப் பெருவெளி வீட்டில் ரமித்திடுவோம்! வா! அருணாசலா! என்று அட்சர மணிமாலையில் ரமணர் இதைப் பாடியிருக்கின்றார்.

ஆத்மசக்தி ஆன்மீக சாதகர்களின் பெரும் முயற்சியால் அவர்களின் உடலில் பரவி நிறைந்துவிட்டதென்றால் அப்படிப்பட்டவர்கள் நோயாளிகளைத் தொட்டால் அவர்களது நோய்த் துன்பம் குறைந்து அமைதி அடைவார்கள். நெற்றியில் கை வைத்துத் தடவினால் தலைவலி பறந்து போய்விடும். சிலரைச் சொல்வார்களே! அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும்! அவன் கை, ராசிக்கை! அவன் தொட்டால் வளரும்! என்று. ஆம். அதெல்லாம் உயிர்ச் சக்தி உடம்பில் பரவியவர்களுக்கு வெளிப்படும் விதம். சிலரைப் பார்த்தாலோ அல்லது பேசக் கேட்டாலோ மனதில் அமைதியும், நிறைவும் உண்டாகும்.

ஒளி உடலுடன் ஒளி உலகில் கலந்து கொள்வது இரவு சார்ந்த சாகசம் என்று சொல்லலாம். ஆன்மீக சாதகர்களின் நான்காவது நிலையில் முயன்றால் இது சாத்தியமாகும். அதாவது உடல், மனம், புத்தி என்ற மூன்று நிலைகளைத் தாண்டி ஆத்மாவில் கலந்து ஒளிஉடல் பெறுகின்றபோது ஒளி உலகிற்குச் செல்வது இந்த 4வது நிலையில் முயன்றால் முடியும். ஆனால் இதற்கு, அந்த உலகிற்குச் சென்று அங்கு ஒளி வீடு கட்ட வேண்டும். அங்கு சென்று தங்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும். இவையெல்லாம் சாத்தியமா என்று யோசிக்க வேண்டாம். நமது முயற்சி அதை நோக்கியதாக இருக்கட்டும். மற்றவை அவன் விருப்பமாக நடக்கட்டும்.

ஈதர் என்று சொல்வது வெட்டவெளி. அதில் பரவி நிற்கின்ற சக்தி ஈதரிக் எனர்ஜி. அதைத்தான் விஞ்ஞானம் ஓசோன் என்கிறது. அது உயிர்ச் சக்தி. அதுதான் சூரியனிடமிருந்து வருகின்ற தீமை தரும் ஒளிக்கற்றைகளைத் தடுக்கின்றது. அதன் மூலம் பூமியைக் காக்கின்றது. அதிகாலையில் தான் இது முழுமையாகப் பூமியில் இறங்கும். இலைகளின் அடிப்புறத்தில் பனித்துளிகளாய்த் தங்கியிருப்பது இதுதான்.

நாம் அறிய வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், இந்த ஆண்டு முதல் மேற்கத்திய நாகரீகம் உடைந்து போகும். இன்னும் சில ஆண்டுகளில் பூமி சார்ந்த ஒரு நாகரீகம் உருவாகும். பேரழிவு ஒன்று ஏற்பட்டு முடிவேற்பட்டு பிறகு உலகம் முழுவதும் ஒன்றாக இணைகின்ற தன்மை ஏற்படும். நம் உடலில் ஏழு சக்கரங்கள் இருப்பதைப் போலவே இந்த பூமிக்கும் ஏழு நிலைகள் இருக்கின்றன. நமது சக்தி நம் உடலில் ஒவ்வொரு சக்கரமாக ஏறுவதைப்போல் இந்த பூமியும் ஒவ்வொரு நிலையாக உயர்ந்து இப்போது இதயத்தால் செயல்படுகின்ற நிலையை அடைந்திருக்கிறது. இந்தப் பூமியின் மூலாதார நிலை மண். இரண்டாவது நிலை ஸ்வாதிஷ்டானம். அது பூமியின் உற்பத்திப் பெருக்கமாக இருந்தது. மூன்றாவது நிலை மணிபூரகம். அது உணவின் மீது மிகுந்த விருப்பத்தைக் கொண்ட வர்க்கத்தை உடையதாக அமைந்து, தான், தன் சுகம் என்ற நிலையில் சுயநலமாக வாழ்கின்ற தன்மையைக் கொண்டிருந்தது. இப்போது இன்றைய காலகட்டத்தில் பூமியின் தரம் அனாகதம் என்னும் இதயப்பகுதிக்கு உயர்ந்திருக்கிறது. ஏற்படப்போகின்ற பேரழிவுகளால் மனிதமனம் வருந்தும். அந்நிலையில் போட்டி, பொறாமை, பூசல் போன்றவை அகன்று கருணைமயமான அன்பு உருவாகும்.

நீயா நானா என்று இந்த உலகின் போக்கு இருந்தது. இனி அன்பை பாவிக்கின்ற நிலை ஏற்பட்டவுடன் நீயும் நானும் என்று மாறும். இது பூமியின் நியதி.

ஒரு யுகம் என்று சொல்கின்றபோது அது மனித மனோ நிலையைக் குறிப்பதாகவே இருக்கும். போட்டி, பொறாமை, பூசல், வன்முறை போன்ற விதத்தில் தான் இது வரை உலகம் போய்க்கொண்டிருக்கிறது. எதுவும் நிலையில்லை. நாம் விரும்பினாலும் எதையும் இங்கிருந்து கொண்டு போக முடியாது. இங்கே இருக்கப் போகின்ற கொஞ்ச காலத்தில் எல்லோரிடமும் அன்பாய் இருந்து விட்டுப் போகலாம் என்ற போக்கு சிறிது சிறிதாக இப்போது ஏற்பட்டு வருகிறது. இப்படி இந்த அன்பு உணர்வு வளர்கின்றபோது நம் உடலில் உள்ள செல்கள் வறட்சித்தன்மை நீங்கி, ஈரத்தன்மை பெற்று உயிர்ப்படைகின்றன. அன்பும் கருணையும் மிகுவதால் உடலில் ஒளித்தன்மை அதிகரிக்கின்றது.

தற்போது உலகம் எல்லா விதத்திலும் சுருங்கிக்கொண்டு வருகின்றது. எதுவுமே சுருங்கினாலும் வெடிக்கும். விரிந்துகொண்டே போனாலும் வெடிக்கும். பொருளாசை அதிக அளவிற்குப் பேராசையாக விரிய விரிய அது அழிவிற்கே தான் கொண்டு செல்லும். இப்போது துறவி என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் தான் பொருளாசை கொண்டு பேராசையுடன் செயல்படுகின்றார்கள். இது தான் இன்றைய நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாகப் பேசப்படுகின்றது. நாட்டின் நலனுக்காகவே செயல்பட வேண்டிய அரசியல் தலைவர்களும் இந்த நிலையில் தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

நமது சனாதன தர்மத்தில் சந்நியாசிகள் தம் உணவிற்காக ஏழு இல்லறத்தாரின் வீட்டில் ‘பவதி பிச்சாந்தேஹி’ என்று கேட்க வேண்டும். யாராவது உணவளித்தால் அதைச் சாப்பிடலாம். ஒன்றும் கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் குடித்துவிட்டு இருப்பார்கள். அவ்வளவு நிராசையுடன் கூடிய வாழ்க்கை முறை இது. சித்தார்த்தர் ஓர் இளவரசன். அவரிடம் இல்லையென்றா அவர் பிச்சை எடுத்தார்? பசியை வெல்கின்ற பெரிய முயற்சி இது. இந்த இடத்தில் குறிப்பிடவேண்டிய முக்கிய தகவல் ஒன்று உண்டு. நமது ஆன்மீகப் போக்கிற்கு இது அவசியமானது இல்லையென்றாலும் நடை முறைக்காகச் சொல்லப்படுகின்றது.

ஆதிசங்கரர் பால சந்நியாசியாக ஒரு வீட்டில் பிச்சை கேட்டபோது, அவ்வீட்டில் கொடிய வறுமை. உணவுக்கு வழியற்ற நிலை. நித்திய விரதம். இருந்தாலும் அந்த வீட்டிலிருந்த பெண்மணி ஏகாதசி விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தாள். மறுநாள் துவாதசியில் பாரணை செய்ய வேண்டும் என்ற நியதிக்காக எப்படியோ ஒரு காய்ந்த நெல்லிக்காயைப் பாதுகாத்து வைத்திருந்தாள்.

வீட்டு வாயிலில் ஒரு பால சந்நியாசி பிட்சைக்கு நின்றதைப் பார்த்ததும், அவள் தன் வறுமைக்காக ஒரு நிமிடம் கலங்கினாள். மறுகணம் அந்த நெல்லிக்காயின் நினைவு வந்தது. தன் விரதபங்கத்தைப்பற்றிச் சிறிதும் யோசிக்காமல் உடனே மன நிறைவுடன் அதைக் கொண்டு வந்து பாலகனுக்குப் பிச்சை இட்டாள். தனது பிச்சைப் பாத்திரத்தில் விழுந்த சுருங்கிய நெல்லிக்கனியைப் பார்த்ததும் சங்கரருக்கு வீட்டு நிலமை விளங்கிவிட்டது. அந்தத் தாயின் கருணையை உணர்ந்து மனம் நெகிழ்ந்து கனகதாராh ஸ்தோத்திரம் என்ற பாடலை உருக்கமாகப் பாடினார். அந்தப் பெண்மணியின் வீடு பொன்னால் நிறைந்தது. இது கதை. கவிஞர் கண்ணதாசன் இந்த வடமொழிப் பாடலைப் பொன்மாரி என்று தமிழில் மொழி பெயர்த்தார். அப்படி அவர் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு வர வேண்டிய பாக்கிகளெல்லாம் தானாகவே வந்து சேர்ந்தனவாம். இது வரலாறு.

இப்படிப்பட்ட அருமையான இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தை லட்சுமி பூஜை, லட்சுமி ஹோமம் செய்கின்றபோது முடிவில் முழுமையாகச் சொன்னால் அந்தப் பூஜையின் பலன் முழுமையாகக் கிடைக்கும். இது பலருக்கும் தெரிவதில்லை என்பதற்காகவே இங்கு சொல்லப்படுகின்றது. ஏனெனில் உலகியலைத் தாண்டித்தானே ஞானத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கின்றது.

சரி! இனி நாம் நம் பாதைக்குத் திரும்புவோம். நாம் நினைப்பது நடக்க வேண்டுமென்றால் நமக்குள் இருக்கும் ஆத்மசக்தியைப் பரவெளி ஒளிச் சக்தியுடன் இணைக்க வேண்டும். ஈதரிக் எனர்ஜியாக நம்மை நாம் மாற்ற வேண்டும். மின் ஆற்றலை விட அதிக ஆற்றல் கொண்டது ஈதரிக் எனர்ஜி. இந்த உலகம் மின்காந்த சக்தியால் உருவாகி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை விட அதிக ஆற்றல் கொண்ட ஆத்ம சக்தி இந்த உலகில் பரவினால் அந்நிலையில் எது நினைத்தாலும் நிறைவேறும். உலகம் அதற்குப் பணிந்து செல்லும்! ஆத்ம சக்தி ஓங்க வேண்டும் உலகிலே! என்று பாடிய ஓர் உள்ளத்தின் உயர்வு புரிகின்றதா?

படிப்படியாகத்தான் இந்த உயர்வு நிலைக்கு நாம் போக முடியும். ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்ட ஆரம்ப கால கட்டத்தில் ஆன்மீக சாதகர்கள் முதலில் என்ன செய்கிறார்கள்? தம் மனதை ஒருமைப்படுத்தி, ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகிறார்கள். கவலை, பயம், சந்தேகம் எல்லாவற்றையும் ஞானத்தால் போக்கி, அறிவு நிலைக்கு வருகிறார்கள். வக்கிரமாக, எதையுமே ஆராய்ந்துகொண்டிருந்த புத்தியை ஞானத்தால் சீரமைத்து எண்ணங்களை ஒதுக்கித் தியானத்தால் ஆத்மாவில் கொண்டு சேர்க்கிறார்கள். இதற்குப்பின், இதற்கு அடுத்த நிலைதான் தனக்குள் இருக்கும் ஒளியைத் தரிசித்து ஒளியுடலாய் மாறுதல். அதற்குப் பிறகு அடுத்த கட்டம் இந்த ஒளியுடலுடன், பரவெளியில் பரவியிருக்கின்ற ஈதரிக் எனர்ஜி எனப்படும் பரவெளி ஒளிச்சக்திக்குச் சென்று அதனுடன் கலந்து ஒளிமயமாய் அதில் இருந்து விட்டுத் திரும்புதல்

நன்றாய்ப் புரிந்துகொள்ள வேண்டும்! நம்மிடம் இருப்பது bio- electro magnetic energy என்னும் மின்காந்த உயிர்ச்சக்தி. தொடர்ந்த தியானப் பயிற்சியின் மூலம் நாம் அந்தப் பரவெளி ஒளி உயிர்ச்சக்தியைத் தொடுகின்றபோது அது நம்மில் கலக்கிறது. அது நம்மில் கலந்துவிடும் நிலை ஏற்பட்டால் நாம் அதுவாகிவிடுகிறோம். அந்நிலையில் தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நடக்கும்.

இங்கு இன்னொரு நுட்பத்தைச் சொல்கிறேன். நமது உடலில் உள்ள மின்காந்த உயிர்ச்சக்திதான் பரவெளியில் உள்ள ஈதரிக் எனர்ஜியின் தூண்டுதலைப் பெற்று மூளையிலுள்ள நரம்புகளைக் கொண்டு, நரம்புகளின் வழியாக நமது உடலுறுப்புகளை நன்கு இயங்கச் செய்கின்றது. இந்த உடல் முதுமை அடையும் நிலையில் உடல் உறுப்புகளுக்குத் தொடர்பு ஏற்படுத்தும் இந்த நரம்புகள் சரியாக இயங்க வேண்டும்.

ஆனால் நாம் சாப்பிடுகின்ற உணவிலுள்ள ஸ்டார்ச், கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்றவை முதுமையில் சரியாகச் செரிக்காமல் இந்த நரம்புப் பாதைகளை அடைத்துவிடுகின்றன. இந்த அடைப்பால் மூளையின் தொடர்பு அற்றுப்போய் உறுப்புகள் செயல்படும் திறனை இழக்கத் துவங்குகின்றன. இதைச் சரிப்படுத்தத்தான் முதுமையில் உணவுப் பழக்கத்தை மாற்றுவது, உடற்பயிற்சிகள் செய்யச் சொல்வது, அதிகமாக நடக்கச் சொல்வது போன்ற எல்லாமும். இதுவும் நாம் அறிய வேண்டிய ஒரு தகவல்.

ஒளி உலகம் என்று சொல்லப்படுகின்ற ஆன்மீக உலகம் வேறு. ஆவி உலகம் வேறு. இதைப்புரிந்து கொள்ளவேண்டும். இந்த உடலால் வாழ்கின்ற வாழ்க்கை மனதைச் சார்ந்ததாகும். நாம் கொண்டு வந்த கர்மாவிற்கு ஏற்றபடி மனம் செயல்பட்டு அதற்கேற்ப இந்த உடல் இயங்கியது. இப்போது ஒளி உடலைப்பற்றி அறிந்துகொண்டு விட்ட நிலையில் உடலோ, மனமோ, புத்தியோ அல்லது புலன்கள் கூடத் தம் விருப்பப்படி இயங்காது. நமக்குள் இருந்து இயங்குகின்ற உயிர்ச்சக்தியே எல்லாமாகச் செயல்படத் துவங்கும். ஏனெனில் இப்போது புத்தி, மனம், உடல் எல்லாமே உயிர்ச்சக்தியாக மாறி விட்டன. அங்குக் கர்மா இல்லை.

இப்படி எல்லாமே உயிர்ச்சக்தி மயமாக மாறிவிட்ட மகா புருஷர்கள் மலடியின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தால் அவளது மலட்டுத்தன்மைக்கு எது காரணமாக இருந்ததோ, அந்தக் குறை இவர்களது ஈதரிக் எனர்ஜி லெவலால் எடுக்கப்பட்டுவிடும். கர்ம வினை தடையாக இருக்கிறது என்றால் மகானின் தொடுதலால் அது நீங்கிவிடும். எனவே தான் வாழ்வில் குறைகளை உடையவர்கள் புண்ணியத் தலங்களுக்குப் போவதும், மகான்களைத் தரிசிப்பதும் நடைமுறையில் இருந்து வந்தது. அங்கு அவர்களால் பரவியுள்ள உயிர்ச்சக்தி அவர்களின் குறைகளை அல்லது தடைகளை நீக்கும். இவை போலிச் சாமியார்களுக்குப் பொருந்தாது.

ஆன்மீக வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறும்போது, ஈகோ ஏற்படக்கூடாது. மாறாகப் பணிவும் அடக்கமும் ஏற்பட வேண்டும். எனக்குத் தெரிந்தது யாருக்குத் தெரியும்? என்று செயல்பட்டால் அவ்வளவுதான். எனக்கு என்றால் அது அகம்பாவம். நான், தான் என்று கிளம்பினால் என்னில் கருணை பெருகிப் பரவாது. உயர் அறிவு, உயர் ஞானம் என்பது எல்லாம் ஒன்று என்பதை ஏற்றுக்கொள்ளுதல். நானும் அவனும் ஒன்று என்று புரிந்தவனிடம் தான் கருணை வெளிப்படும். நான் என்று நிமிர்ந்தால் பிரிவு ஏற்பட்டுவிடும். ஒன்றுபட முடியாது. நான் ஒவ்வொன்றாக விட்டு விட்டு எனக்குள் ஒடுங்கியதால் தான் தெய்வீக சக்தியாக நான் மாறுகிறேன். இந்த நிலையில் நான் என்னும் செருக்கு எழும்பினால் அது என்னை அதனிடமிருந்து பிரித்து விட்டு விடும்.

அறிவாலும் உணர்வாலும் நாம் மாறிக்கொண்டிருக்கின்றபோது நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் கூடப் பிரிவை ஏற்படுத்தாதவையாக இருத்தல் வேண்டும். ஒன்று சேர்கின்ற முயற்சியில் பிரிவு ஏற்பட்டுவிடக் கூடாது. எல்லாவிதத்திலும் எல்லாப் பக்கத்தாலும் ஒன்று பட வேண்டும். நாடு, இனம், மொழி, சாதி என்று எதிலும் பிரிவினை இருக்கக்கூடாது.

உயர்நிலைக்குப் போகும்போது இப்படி எல்லாவற்றையும் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். போலித்தனமான அனைத்தையும் விட்டொழிக்க வேண்டும். மூடநம்பிக்கைகள், பாரபட்சம் போன்ற எந்தக் குறைபாடும் இனி நம்மிடம் இருக்கக்கூடாது. உயர்நிலைக்கு முயன்று கொண்டிருப்பவர்கள் இந்த ஒரு பிறவியில் மட்டும் முயல்வதில்லை. பலப்பல பிறவிகளில் எடுக்கப்பட்ட தொடர்ந்த முயற்சிதான் இந்தப் பிறவியில் ஞானம் பெறுகின்ற அளவிற்கு அவர்களை உயர்த்தி ஒளிஉடல் பற்றியும், பரவெளி ஒளி உயிர்ச்சக்தி பற்றியும் அறிந்து அதுவாக மாறுகின்ற முயற்சியில் ஈடுபடுகின்ற அளவிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இனி மற்றொரு கருத்து விளக்கப்படுகின்றது. நமது இந்தப் படைப்பு ஐந்து கோசங்களாக அமைந்தது. ஆன்மீக சாதகர்கள் தங்கள் பயிற்சியில் முதலில் உடலாகிய அன்னமய கோசத்தையும், அதனையடுத்துப் பிராணமய கோசத்தையும், மனமய கோசத்தையும், அதனையடுத்து விஞ்ஞான மயகோசம் என்ற அறிவையும் கடந்து ஆனந்த மயகோசத்தை அடைகின்றனர். எண்ணமோ, சிந்தனையோ இல்லாமல் இருக்கின்ற அந்த நிலையில் ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர். ஆனால் இந்த ஆனந்த மயகோசம் என்பதும் ஓர் உறையே தவிர இது ஆத்மா அல்ல. ஆத்மாவிற்கு அருகில் இருப்பதால் இந்த உறையை அடைந்ததும் நமக்கு ஆனந்தத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் இந்த உறையையும் கடக்க வேண்டும். மேலும் ஆனந்தத்தால் விடுதலை இல்லை. இதையும் கடந்து ஆத்மாவில் உணர்வு கலக்கின்ற போதுதான் நாம் ஒளியைத் தரிசிக்கின்றோம். இந்நிலையை அடைவதற்கு இந்த ஐந்து உறைகளைக் கடந்தாக வேண்டும். இனி ஆனந்தமும் தேவையில்லை. ஏனெனில் ஆத்மாவாகிய எனது சுய இயல்பே ஆனந்தம் தான். இது அனைத்தையும் கடந்த ஒளி நிலை. எனது இந்த ஒளி விண்ணில் விரியும் ஒளியில் கலந்து விட்டால் அது பேரானந்தம். இது தான் இனித் தேவை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *