வாழ்க்கை ஒரு விளையாட்டு

ஆன்மீகக் கூட்டங்கள், ஸத் சங்கங்கள் என்றாலே பொதுவாக மக்கள் மனதில் ஒரு சலிப்பும், அலட்சிய மனப்போக்கும், ஆர்வமின்மையும், நமக்குத் தேவையில்லாத ஒன்று என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஆனால் இந்த ஆன்மீகம் தான் வாழ்க்கைக்குத் தேவையான உண்மையான அறிவு, நிம்மதியைப் பெறுவதற்குரிய சரியான வழி என்பதைப் புரிந்துகொண்ட ஆன்மீக சாதகர்களுக்கு, இன்னும் சொல்வதானால் நம்மைப் பற்றிய சரியான உண்மைகளை அறிய வேண்டும் என்னும் தீராத தாகத்தோடு கூடிய தேடலைக் கொண்டவர்களுக்கு, மேற்குறித்தவை கவர்ந்து இழுக்கக்கூடியவையாக, போகாமல் இருக்க முடியாது என்ற தூண்டலை அளிக்கக்கூடியவையாக இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்?

ஒருவனது பரிணாம வளர்ச்சிதான் இதற்கு முக்கிய காரணம். அதை அறிய வேண்டும் என்ற ஆவலில் தான் ஒருவன் ஆன்மீகத்தை நாடுவது. ஆனால் அதன் பிறகு, தன்னைப் பற்றிய உண்மைகளைக் குருவின் மூலம் அறியத் துவங்கிய பிறகு ஞானத்தின் ஒளி தன்னில் பரவி, அறியாமை இருள் அகலத் துவங்கிய பின், தான் அதுவாகவே ஆகிவிட வேண்டும் என்ற உந்துதல் அவனுக்குள் எழுகின்றது. அதனால் வெளி உலக நாட்டங்கள் தாமாகவே குறைந்துகொண்டே வர, ஆன்மீக ஆர்வமோ மென்மேலும் வளர்கிறது. சாதாரண வாழ்க்கைக்குரிய அறிவாற்றலின் மேன்மை ஆன்மீகப் பயிற்சிக்குச் சிறிதும் தேவையில்லை. வெளி உலக அறிவு, வேலை வாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும், மதிப்பு மரியாதையைத் தரக்கூடியதாகவும் கருதப்படுகின்றது. அந்த அறிவு வெளி உலகத்தில் மட்டும் பயன்படக்கூடியது. ஆனால் தன்னைப்பற்றி அறிதலாகிய ஆன்மீக அறிவோ ஒருவனை ஆன்மாவிற்கு வெகு அருகில் அழைத்துச் சென்று இறைத் தொடர்பையே ஏற்படுத்திவிடுகின்றது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்றால் நமது ஆன்மீக அறிவின் அளவு பற்றி அல்லது வளர்ச்சி பற்றி இறைச்சக்திக்குக் கவலையில்லை. பெற்ற அந்த ஞானத்தால் நாம் எந்த அளவிற்கு மாறிச் செயல்படுகின்றோம் என்பதைத்தான் அவன் கவனிக்கிறான்.

நம் உள்ளத்தில் உலக அளவிற்கு விரியக்கூடிய அன்பும், கருணையும் தான், ஆன்மீக வளர்ச்சிக்கு அடையாளம். எங்கேயோ போய் எதையெல்லாமோ கற்றுக் கொண்டு, நான் ஞானம் பெற்றுவிட்டேன் என்று சொல்லிப் பழைய அறியாமையிலேயே மூழ்கி வாழ்ந்தால் அது உண்மையான ஆன்மீக வளர்ச்சியா?

செஸ் விளையாட்டைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நான் சொல்லப் போவது விளங்கும். அந்த விளையாட்டில் நாம் விளையாடும் விதத்திற்கு ஏற்றபடி தான் எதிராளி அதற்குப் பதில் கொடுப்பார். நாம் காயை நகர்த்துவதற்கேற்ப அவரின் அடுத்த நகர்வு அமையும். செயலுக்கேற்ற எதிர்ச்செயல். அவ்வளவுதான். இதுதான் இறைவன் செய்கின்ற ஒன்று. நமது நடவடிக்கைகளுக்கு ஏற்ற பலனையே அவன் தருவான்.

நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை இப்போது நான் கேட்கிறேன். உங்களது இதயம், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளை உங்களுக்குத் தெரியுமா? எனக்குள் இருக்கின்றபடியால் அவற்றை எனக்குத் தெரியும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பத்துப்பேருடைய சிறுநீரகங்களை எடுத்து வைத்து, இவற்றில் உங்களுடையது எது? என்று கேட்டால் உங்களால் காட்ட இயலுமா? இதே விதத்தில் மற்றொரு கேள்வி!

உங்களை இறைவனுக்குத் தெரியுமா? இது என்ன புது விதமான கேள்வியாக இருக்கிறதே என நீங்கள் யோசிக்கலாம். பிரபஞ்ச வடிவாயிருக்கின்ற இறைவனில் எல்லா உயிரினங்களுமே இருந்தாலும் நம்மைக் குறிப்பாக அவருக்குத் தெரியுமா? அதாவது நம்மை அவர் அறிகின்ற விதத்தில் நாம் மிக நெருக்கமாக அவரருகில் சென்று விட்டோமா? என்ற கருத்துத்தான் இக்கேள்வியின் தொடர்ச்சி. நம் உடலில் இருக்கின்ற உள் உறுப்புக்களை நாம் அறிந்திருக்கின்ற விதத்தில்தான் தன்னில் வெளிப்பட்டிருக்கும் நம்மைப்பற்றி அவர் அறிந்திருக்கிறாரா? அல்லது நம்மை அவருக்குத் தெரிய வைத்து விட்டோமா? என்று இப்படிச் சிந்தித்துப் பாருங்கள்!

நமக்கு இறைவனைத் தெரியும். ஆனால் இறைவனுக்கு நம்மை நம் படைப்பில் ஒன்று என்ற அளவில் தான் தெரியுமா? அல்லது என்னை அவர் நன்கு தெரிந்துகொள்ளும் அளவிற்கு நான் நடந்துகொண்டு அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றேனா? அவருடைய உள் வட்டத்திற்குள் நாம் போய்விட்டோமா? என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். இல்லையென்ற பதில் தான் பெரும்பாலும் கிடைக்கும்.

உங்களை நேரடியாக அது அறிந்துகொள்ள என்ன வழி? என்பது அடுத்த கேள்வி. அது என்னை அறியவேண்டுமெனில் அதனுடைய அருங்குணங்கள் எல்லாம் என்னில் இருக்க வேண்டும். சரிதானே! அதற்கு நான் வாழ்ந்த வாழ்க்கை முறையை அப்படியே மாற்றி, அதற்கு ஏற்ற விதத்தில் அமைத்திருக்க வேண்டும். அப்படி நாம் தளம் மாறியிருக்கிறோமா?

நம்மால் 24 மணிநேரமும் ஆத்ம உணர்வில் தோய்ந்து வாழ முடியாது. ஆனால் மனிதனாக வாழ்கின்றபோது இறை குணங்களுடன் வாழ முடியும். இதற்கு மிகுந்த முயற்சி தான் தேவை. ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து ஞான உபதேசம் பெற்று, இறைவனைப்பற்றி, நம்மைப்பற்றி நன்கு அறிந்து ஞானம் பெற்றாகிவிட்டது. இனி அவனை அடைவதற்குரிய செயல் தான் தேவை. அதற்கு என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்கிறீர்கள்?

நம் வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு. நாம் அவனோடுதான் நமது செயல்களால் விளையாடுகின்றோம். நம் விளையாட்டின் தரத்திற்கேற்றபடி அவன் திரும்ப விளையாடுவான். நாம் வஞ்சகமாகவோ, பிழையாகவோ விளையாடினால் அது அவனுக்குத் தெரியும். அத்தகைய விளையாட்டில் நமக்குத் தோல்வி தான் கிடைக்கும். இந்த விளையாட்டில் நாம் வெற்றி பெறுவதற்குரிய பல சந்தர்ப்பங்களை அவன் நமக்குத் தருகிறான். அதை நாம் கவனித்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த விளையாட்டு ஒரு தரம் தான் விளையாடக்கூடியது. இது எப்போது முடியும் என்பது அவனுக்குத்தான் தெரியும். நமக்குத் தெரியாது. ஆகவே குறுகிய காலத்திற்குள் வெற்றிபெறும் விதத்தில் விளையாட வேண்டும். இதில் வெற்றி பெறும் வாய்ப்புகளும் மிகக் குறைவு.

இந்த விளையாட்டை மிக மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடவும் வேண்டும். நமக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் கூட மகிழ்ச்சியாக விளையாடக்கூடிய தன்மை, நமக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். பூவுலக வாழ்க்கைதான் இந்த விளையாட்டு. இதனை நாம் நம்மைப் படைத்துக் காத்துத் திரும்ப அழிக்கின்றவனுடன் தான், விளையாடிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் அவன் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. அப்படி அவன் தெரியவில்லை என்பதற்காக நாம் பிழையாக விளையாடலாமா? அப்படி மாறி விளையாடினால் அவன் நம்மைப் பூமிக்குத் திருப்பி அடிப்பான்.

நாம் ஞானத்துடன் விளையாடுகிறோமா, அறியாமையுடன் விளையாடுகிறோமா என்பதையெல்லாம் அவன் பார்ப்பதில்லை. நாம் எந்த நிலையிலிருந்து விளையாடுகிறோமோ அதற்கேற்றபடி அவன் நம்மிடம் திருப்பிக் காயை நகர்த்துவான். செயலுக்கேற்ற விளைவாக நாம் எதையும் பெறுவது இப்படித்தான். எனது கர்மநிலையைப் பொறுத்து எனக்குரிய வாய்ப்புகள் அமைகின்றன.

கோவிலுக்குப் போகிறோமா, பஜனை செய்கிறோமா, விரதம் பிடிக்கிறோமா என்பதையெல்லாம் அவன் கணக்கில் எடுப்பதில்லை. நீ மனிதத்தன்மையுடன் நடந்துகொள்கிறாயா? உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் நான் அன்பு கொண்டிருப்பதைப்போல் நீயும் அவற்றிடம் உன் அன்பு வலையை விரிக்கிறாயா? என்பதைத்தான் அவன் கண்காணிக்கின்றான். அன்புநெறியில் வாழ்பவன் புனிதமானவன்.

நாம் அப்படி அவனது உள்வட்டத்திற்குச் சென்றுவிட்டோம் என்று சொன்னால் அவனது நேரடித் தொடர்பு நமக்குக் கிடைக்கும். நம்முடைய பிரச்னைகளுக்கு அவனிடமிருந்து பதில் வரும். மேலும் நாம் விரும்புவது நடக்கும். அற்புதங்கள் நிகழும். அட்டமா சித்திகள் என்று சொல்கிறார்களே அத்தகைய திறமைகள் எல்லாம் நம்மிடமிருந்து வெளிப்படும்.

ஆகவே கடவுளுக்கு நாம் இருப்பதைத் தெரிவிக்க நாம் என்ன செய்யலாம்? எல்லாம் அவன் தந்தது என்று எது என்றாலும் அவற்றை அவனது பிரசாதமாகவே நினைத்து ஏற்க முடியுமா? ஒரு வழி இருக்கின்றது. அது நம்மை நீக்கி அவனை வெளிப்படுத்துதல். நம் உள்ளத்தில் எந்தவிதமான எண்ணமும் இல்லாமல் இருந்தால், எதைப்பற்றியும் யோசிப்பது, நினைத்துப் பார்ப்பது, திட்டம் போடுவது என்றெல்லாம் எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தால் ஆத்ம சக்தி தானாக நம்மில் நிறையும். அது தானாகவே செயல்படும்.

ஏனெனில் இந்த ஆத்ம சக்தியைத்தான் நாம் எண்ணமாக, சொல்லாக, செயலாக மாற்றி மாற்றிப் பயன்படுத்துகின்றோம். எந்த எண்ணமுமின்றி இருக்கின்றபோது ஆத்ம ஆற்றல் சேமிக்கப்படுகின்றது. அப்படி சேமிக்கப்பட்ட ஆற்றல் தானாகவே தேவையானவற்றிற்கு வெளிப்பட்டு சொல்லாக, செயலாக நம்மை வழி நடத்திச் செல்லும். அது செலுத்தும் வழி நாம் செல்கின்ற நிலை இது. ஆன்மீக சாதகர்களாகிய நம்மில் எத்தனைபேர் இப்படிப்பட்ட எண்ணமில்லாத ஒரு நிலையைத் தியானத்திலாவது அடைந்திருக்கின்றோமா என்று அவரவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எண்ணமில்லாமல் இயங்க முடியுமா என்று யோசிக்கலாம். அப்படி எண்ணமற்று செயல்படும்போது தான் இறையாற்றல் நம்மை வழி நடத்தும் என்பது ஓர் உண்மை.

ஆன்மீக சாதகர்களுக்கு இனி சிந்தனை என்பது கூடத் தேவையில்லை. சிந்தனை என்பது உள்ளத்திலிருந்து எழுகின்ற பதில் தெரியாத கேள்விகளுக்கான விடையைத் தேடுவதாகத் தான் பெரும்பாலும் இருக்கிறது. சிந்திப்பதும் கூட ஆத்மசக்தியைப் பயன்படுத்துகின்ற ஒன்றே. இதை மேலோட்டமாகப் பார்த்தால் அர்த்தமற்ற ஒன்றாகத் தான் தெரியும். சிந்திக்காமல் எப்படி இருக்க முடியும் என்று தோன்றும். ஆனால் ஆத்மாவை நோக்கிச் செல்வது என்பது மிக மிக நுண்ணியதான ஒரு நகர்வு. அதற்கு மிக நுணுக்கமாக வழியைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆத்மசக்தியைச் சேமிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஆத்மாவின் துணையால் தான் ஆத்மாவை அடைய முடியும். சிந்தித்தல் ஆத்மாவின் சக்தியை வீணடிக்கின்றது.

உலக வாழ்க்கைக்குச் சிந்தித்தல் மிக அவசியமான ஒன்று. நாம் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்ததே நமக்குள் எழுந்த பல கேள்விகளுக்குப் பதில் தேடியது சிந்தனையால் தான். ஆனால் ஞானம் பெற்ற பிறகு சிந்தனை தேவையில்லை. ஏனெனில் சிந்தனை மனித நிலையில் தான் தேவைப்படும். ஆத்மாவை நெருங்கிக்கொண்டிருக்கின்ற போது ஒவ்வொன்றாக விட வேண்டும்.

இந்த இடத்தில் வேறொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ஞாபகத்திற்கும் சிந்தனைக்கும் அர்த்தங்கள் வேறு. ஞாபகம் என்பது உடல் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. சிந்தனை என்பது நமக்குள் நாமே எழுப்பிக்கொள்கின்ற கேள்விகளுக்கு விடை தேட முயற்சி செய்வது. ஞாபகம் கர்மாவை அதிகரிக்கச் செய்யும். சிந்தனை தேடலைத் தூண்டும். தெளிந்த ஞானம் பெற்ற பிறகு சிந்தனை தேவையில்லை. ஆன்ம சாதகர்கள் அப்படி எதையாவது சிந்தித்துத் தங்களின் ஆத்மசக்தியை இழக்கக்கூடாது என்பதற்காகவே இங்கு இந்த விளக்கம் தரப்படுகின்றது. ஆத்மசக்தியை எந்தவிதத்திலும் இழந்துவிடாமல் முழுமையான தியானத்தில் மூழ்கி அந்த ஆத்ம மலர்ச்சியை முழுமையாக ஏற்படுத்த வேண்டும். அந்த மலர்ச்சியில் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் மேற் சொன்னவற்றையெல்லாம் விட வேண்டும்.

எண்ணம், ஞாபகம், சிந்தனை என்ற எல்லாவற்றையும் இல்லாமல் செய்கின்றபோது தான் ஆன்ம மலர்ச்சி பூரணமடையும். எனவே இதுவரை சொல்லி வந்த விளக்கத்தைப்பற்றி மீண்டும் சிந்தனை செய்து கொண்டிருக்காமல், வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடாமல், அப்படியே அதை ஏற்றுக்கொண்டு பதிய வைக்கின்றபோது அமைதியின் அளவு அதிகரிக்கும்.

இவ்வாறு இடைவிடாத ஞான உபதேசத்தின் மூலமும், தொடர்ந்த தியானத்தின் மூலமும் படிப்படியாகத் தம்மை உயர்த்திக்கொண்டு வரும் ஆன்ம சாதகர்கள், தமது உடல், மனம், புத்தியின் பிடியிலிருந்து விடுபட்டு ஆத்ம தளத்தில் வந்துவிடுகின்றனர். இந்த நிலைக்கு வந்துவிட்ட பிறகு இந்த ஆத்மசக்தியே மற்ற மூன்று சக்திகளையும் ஒழுங்கமைத்து விடும். இது ஒரு ரகசியம்.

ஆத்மா தான் நமது மூலம். இந்த மூலத்தில் நாம் நமது தெளிந்த ஞானத்தாலும் தொடர்ந்த தியானத்தாலும் நம்மை நிலை நிறுத்தினால் அந்தப் பரமாத்மா தானாக நம்மைத் தன்பால் இழுத்து வழி நடத்தும். நமக்குத் தேவையானவற்றைத் தரும். ஆத்மாவை நாம் பிடித்துவிட்டால், பரமாத்மாவை அடைந்ததாகத்தான் அர்த்தம்.

ஆத்ம நிலையில் மனம் தேவையில்லை. புத்தி மட்டும் ஆத்மாவின் ஒளியில் நேரடியாகச் செயல்படுவதற்காகத் தேவைப்படும். இனி அந்தப் புத்தியும் தேவையில்லை. அதாவது மனதைப் புத்தியில் கரைத்துப் புத்தியை ஆத்மாவில் கலக்கின்ற நிலையில் நாம், உடல், மனம், புத்தியைக் கடந்து பூரணமாக ஆகிவிடுகின்றோம்.

இனி என்ன நடக்கும்? இந்த உடலோடு, நாம் வாழ்கின்ற வாழ்க்கையில் புத்தி, மனம், ஆகியவற்றைக் கடந்து வராமல் ஆத்மசக்தி நேரடியாக உடலுக்கு வரும். இப்படி நிகழ்கின்றபோது இந்த உடல் ஒளிரும். இதைப் புரிந்துகொள்வதும் இப்படி இதனை நடைமுறைப்படுத்துவதும் தான் ஒரு முழுமையான ஆன்மீக சாதனையாக அமையும். இறைவன் விரும்புவதும் இதைத்தான். ஆன்மாவாகிய தன்னைப் புரிந்துகொண்டு ஆத்ம நிலையில், ஆத்ம தளத்தில் நின்று வாழ்கின்றபோது அந்த வாழ்க்கை என்னும் விளையாட்டு ஆனந்தமயமாக அமைகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *