சுடர் மிகு ஒளி உடல்

1960ம் ஆண்டிற்குப் பிறகு இந்தப் பூமியின் சக்தி உயர்வடைந்திருக்கிறது. இயற்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த உயர்வு அல்லது மாற்றம் தனி மனிதனின் தன்மையையும் உயர்த்தியிருக்கின்றது. நன்கு சிந்தித்தால் தான் இந்த உண்மை விளங்கும். மனித மனம் பெரும்பாலும் எதிர்மறையாகவே சிந்திக்கும். உலகம் கெட்டுப் போச்சு, எங்கு பார்த்தாலும் வன்முறை, போராட்டம், இயற்கைப் பேரழிவு என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் அது உண்மையல்ல. உண்மையைச் சொல்வதென்றால் உலகம் உயர்ந்திருக்கிறது. எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம். அறிவியல், பொருளாதாரம், வாழ்க்கைத் தரம், புரிந்துணர்வு, கல்வி, அரசியல், குடும்பச் சூழ்நிலை என்று எதையெடுத்தாலும் மாறியிருக்கிறது. வளர்ச்சிதான் ஏற்பட்டிருக்கிறது. அந்த மாற்றமும் வளர்ச்சியும் கூட அதி வேகமாக நிகழ்கின்றது.

1960 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த குழந்தைகளைக் கவனித்தால் அவர்களின் அறிவு வளர்ச்சியும், புத்திக்கூர்மையும் நம் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் அதிக அளவில் வெளிப்படுவதை நன்கு அறியலாம். பூமியின் உயர்நிலை முன்னேற்றத்தின் சூழ்நிலை அவர்களுக்கு அறிவாற்றலை அதிகரிக்கச் செய்திருக்கின்றது. அதற்கேற்ப வாய்ப்புகளும் வளர்ந்திருக்கின்றன. இப்போதைய சிறுவர்களுக்குத் தெரிகின்ற விஷயங்கள் நமக்குத் தெரிவதில்லை என்பது உண்மை.

பூமியின் கீழ்நிலை மண். பூமியின் படைப்புகளில் சிகரம் மனிதன். மண் தான் பரிணாம வளர்ச்சியுற்று மனிதனாக ஆகியிருக்கிறது. அந்த மனிதனும் தனது பொய்த்தன்மைகளை நீக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு முன்னேறுகின்றபோது உயர்வடைகின்றான். ஆனால் சாதாரண மனிதன் இன்னும் மண்ணாசை என்னும் கீழ் நிலையில் தான் நிற்கிறான் என்பது வழக்கு மன்றங்களில் நிலத்தகராறுகளுக்காகப் போடப்பட்டிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையின் மூலம் தெரியவரும். போகும்போது எதையும் கொண்டு போகப்போவதில்லை என்ற அறிவுத் தெளிவு ஏற்பட்டால் மண்ணிற்காக அடிதடி, போராட்டம் இருக்குமா? இப்படி யோசிக்க வேண்டும். இது தான் ஆன்மீக மனப்போக்கு.

சாதாரண மனிதமனம், உடல், மனம், புத்தி ஆகியவற்றின் சக்தியை, அவற்றின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளாத நிலையில், அறியாமையுடன் பயன்படுத்தித் தமக்குள் இருக்கும் சக்தியைப் புலன்களின் வழியாகச் செலவழித்து விடுகின்றது. ஆனால் ஆன்மீகத்தை அறிகின்ற நிலையில் சத் சங்கத்தை நாடி, அதனுடன் தொடர்பு கொண்டு தியானம் முதலிய ஆத்ம சாதனைகளில் தொடர்ந்து ஈடுபடுகின்ற மனம் பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கின்ற சக்தியுடன் தனது ஆத்மசக்தியை இணைத்து உலக இயக்கத்திற்கு ஒரு சம நிலையை ஏற்படுத்துகின்றது.

உணர்ச்சிப் போராட்டங்களால் கொந்தளிக்கின்ற சாதாரண மனம், புலன்களை ஒன்றுபடுத்தி, மனம், புத்தி ஆகியவற்றை உள்முகமாகத் திருப்பித் தன்னில் தான் இணைந்திருப்பதான ஆன்ம சாதகர்களின் தியான அலைகளால் அமைதிப் படுத்தப்படுகிறது. இப்படி ஒருவன் தன்னை அமைதிப் படுத்துகின்றபோது அந்த அலைகளால் பத்துப்பேர் அமைதிப்படுகின்றனர். இவ்வாறு ஆன்மீக சாதகர்கள் மறைமுகமான ஒருவித சமூகசேவை செய்து வருகின்றனர் என்றே கூறலாம்.

பிரபஞ்ச சக்திதான் உடல் சக்தியாகவும், உள்ளச் சக்தியாகவும், அறிவாற்றலாகவும், ஆத்மசக்தியாகவும் தனி மனிதனின் தரத்திற்கேற்ப வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து தம்மை உலக நடவடிக்கைகளிலிருந்து விலக்கி, ஆத்ம சாதனையில் ஈடுபடுத்திப் பயின்று கொண்டிருப்பவர்கள் இந்தப் பிரபஞ்ச சக்தியைத் தமக்குள் எடுத்துத் தம் சக்தியை அதனோடு இணைத்து அமைதியை உருவாக்குகின்றனர். எங்கிருந்து வந்தோமோ அங்கே தம்மை மீண்டும் கொண்டு சேர்க்கின்ற முயற்சியில் ஈடுபடுவதுதான் உண்மையான வாழ்க்கை. அதுதான் வாழ்க்கையின் உண்மையான நோக்கம். இது ஆன்ம அறிவு பெற்றவருக்குத்தான் விளங்கும்.

இப்படிப்பட்ட ஆன்மீக சாதகர்கள் ஒளி உடம்பைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். அதிலேயே நிலைபெற்றிருக்கும் தன்மையைப் பழக வேண்டும். இது புரிந்து விட்டால் நம்மை நாம் இருக்கின்ற நிலையிலிருந்து இன்னும் உயர்நிலைக்கு மேம்படுத்திக்கொள்வது எளிதாகிவிடும். ஒளி உடம்பு இருந்தால் சமாதி நிலை ஏற்படும். தியானமும் பிசகல் இல்லாமல், எந்தவித மனச் சிதறலும் இல்லாமல் இன்னும் சொல்லப்போனால் எவ்வித மன அழுக்கும் இல்லாமல் ஆத்ம சக்தியைப்; பூரணமாக அனுபவிக்க முடியும். தியானம் செய்யும்போது முதலில் மனம் புலன்களின் போக்கில் இழுபட்டுப் போகின்ற நிலை மாறுகின்றது. மனம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகின்றது. இந்த நிலையில் எண்ணங்கள் குறுக்கிடுவதில்லை. மனம் எந்த ஆசையிலும் துhண்டப்படாமல் அமைதியாக இருக்கின்றது. இந்நிலைக்கு மனோலயம் என்று பெயர்;. மனம் ஆன்மாவுடன் லயமாகிறது. அதாவது ஒன்றிலேயே முழுமையாகத் தோய்ந்து விடுகின்றது. ஆன்மா லயப்படும் இடம் ஆலயம் என்று சொல்வது இந்தப் பொருளில் தான்.

லயப்படுதல் என்பது ஒன்றை மட்டும் கூர்ந்து நோக்குதல் என்றும் பொருள் படும். அதாவது நான் ஆத்மாவுடன் இணையத் தியானம் செய்கின்றபோது ஆத்மாவில் தோய்ந்துவிடுதல். இந்நிலையை அடைய எண்ணங்கள் வராமல் தடுக்கப்பட வேண்டும். இதற்கு அதிகக் கவனம் தேவை. ஏனெனில் மனம் சும்மா இருக்காது. ஒரு நொடியில் பல நுhறு எண்ணங்களுக்குள் ஓடிவிடும். இதைத் தடுக்க விழிப்புணர்வைப் பழக வேண்டும்.

என்னைச்சுற்றி என்ன நடக்கிறது, நான் என்ன செய்கிறேன் என்பதை மிகக் கவனமாகக் கண்காணித்தலே விழிப்புணர்வு ஆகும். சரியான விழிப்புணர்வு நமக்குள் இல்லையென்றால் எண்ணங்கள், அனுபவங்கள் எல்லாம் உட்புகுந்துவிடும். மனம் இயங்குவதற்கு அடித்தளமாக இருப்பது விழிப்புணர்வு தான். ஆத்மாவின் விரிவாக இருக்கின்ற சித்தத்தைத் தான் விழிப்புணர்வு அல்லது சைதன்யம் என்று சொல்கிறோம். ஆத்மாவின் விரிவு சித்தம். பரமாத்மாவின் விரிவு பிரபஞ்சம்.

இந்தச் சித்தத்திலிருக்கும் பழைய பதிவுகளை, எண்ணக் குவியல்களை இல்லாமற் செய்வதுதான் ஆன்ம சாதகர்கள் மேற்கொள்கின்ற ஆன்மீகப் பயிற்சிகள். சித்தத்தில் உள்ள ஆசைகள், அனுபவங்கள், வேண்டுதல்கள், தேவைகள் ஆகியவற்றைத் தொடர்ந்த தியானத்தால் இல்லாமற் செய்கின்றனர். இப்படி அவர்கள் தொடர்ந்து முயல்கின்றபோது சித்தம் சுத்தமாகின்றது. அதாவது கர்மாவால் இயக்கப்பட்டது, ஆத்ம ஒளியில் செயல்படத் துவங்குகின்றது. அதன்பின் கர்மப் பாதிப்பு இல்லாமல் சித்தம் சரியாகச் செயல்படும்.

நமக்கு வெளிமனம், ஆழ்மனம் என இரண்டு மனங்கள் இருக்கின்றன. வெளிமனம் எல்லாவற்றிலும் ஈடுபட்டுச் சுற்றித் திரியும். உள்மனதில் தான் அங்குள்ள மூலகங்களில் பதிவுகள் இருக்கின்றன. அவை கர்மப்பதிவுகள். அதைச் சுத்தம் செய்ய வேண்டும். சித்தத்தைச் சுத்தம் செய்தல் என்பது சாதாரண செயலல்ல. அதற்கு ஞானமும், தியானமும் தேவை. ஞானம் என்பது தெளிந்த அறிவின் சேர்க்கை. தொடர்ந்த தியானத்தால் சித்தம் சுத்தப் படுத்தப்படுகின்றது.

அடுத்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று ஆத்ம சக்தியைப்பற்றி. அழுத்தி வைக்கப்பட்ட சித்தம் தான் ஆத்மசக்தி. எல்லா இடங்களிலும் இது இருக்கிறது. ஒளியும், ஒலியும், பேரறிவும் சேர்ந்ததுதான் ஆத்மசக்தி. பேரறிவு என்பது கடவுள் சக்தி. ஒளி, ஒலி, உயிரணு மூன்றையும் ஒன்றாக்கி அழுத்தி வைக்கப்பட்டது படைப்பு என்றாயிற்று. இது தான் முதலில் நோக்கமும் உணர்வும், எண்ணமும் உணர்வும் என்றாகிப் பிறகு அவை அன்பும் அறிவுமாகப் படைப்பிலிருந்து வெளிப்படுகின்றன. இந்த அழுத்தப்பட்ட சக்தி எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்றது.

இந்த உடல் 16 அலைகளால் ஆனது. மனமாகவும், புத்தியாகவும் இயங்குபவை 19 அலைகள். மின்காந்த சக்திதான் இந்த 35 அலைகளாக இயங்குகின்றது. எமக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்ற மேற்குறித்த அலைகள் தான் நம்மை அலைக்கழிக்கின்றன. இந்த சக்தி அனைத்தையும் அலை பாயாமல் நிறுத்தி நாம் ஒன்றுபடுத்தப் பயிலும்போது சக்தியெல்லாம் திரண்டு சிவமாகின்றது.

என்னில் இந்த அலைகளை நிலையாக நிறுத்த வேண்டும். அதற்காகத் தான் முதல் முயற்சியாக மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்வது. ஏனெனில் மூச்சு கட்டுப்பட்டால் மனம் கட்டுப்படும். அல்லது அடங்கும். அதனால் தான் யோகா பயிற்சியில் மூச்சுப் பயிற்சி முக்கிய அங்கம் வகிக்கிறது. மூச்சை அடக்கி நிறுத்துவதைக் கும்பகம் என்று சொல்வார்கள். அந்த நிலையில் எண்ணங்கள் இருக்காது. மனம் அடங்கி நிற்கும். மனம் அடங்குகின்றபோது ஆத்ம சக்தி நம்மில் பரவும்.

வெளியிலிருந்து வரும் அலைகளையும், நம்மில் எழுகின்ற அலைகளையும் எழாமல் செய்கின்றபோது ஆத்மா வெளிப்பட்டுப் புத்தியாக இயங்கும். இந்த உண்மை புலப்படாதவரை மனம் அலைந்துகொண்டு தான் இருக்கும். இது தெரியாமல் மனதை அடக்க வேண்டும் அல்லது ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக விவரம் தெரியாதவர்கள்; கோவில்களுக்குச் சென்றால் மனம் ஒருமுகப்படும்; மந்திரங்கள் செபித்தால் மனம் ஒடுங்கும்; பூசை செய்தால் மனக்கட்டுப்பாடு ஏற்படும் என்றெல்லாம் ஏதேதோ முயற்சிகளில் ஈடுபட்டுப் பார்க்கின்றனர். ஆனால் அந்த முயற்சிகளால் மனம் அடங்காது. சிறிது நேரம் அமைதியாய் இருந்துவிட்டுப் பின் மீண்டும் அலைபாயத் தொடங்கிவிடும். நம்மைப் பற்றிய உண்மைகளைத் தௌ;ளத் தெளிய விளங்கிக்கொண்டால், அந்த ஞானத்தின் வழியே முயற்சிகளை மேற்கொண்டால் பலன் கிடைக்கும். எதற்கு என்றாலும் உடனே ஒரு குழந்தை அழும். நாம் அப்படி அழுவோமா? இது தான் அனுபவத்திற்கேற்ப அறிவு.

அன்றாட வாழ்க்கையில் நமக்கு வருகின்ற பிரச்னைகள் எல்லாம் பெரிது படுத்தப்படுவது நமது அறியாமையால் தான். ஆத்மத் தொடர்பு கொண்டவர்களுக்குப் பிரச்னைகள் இருக்காது. தீர்வு தான் இருக்கும். நமது அறிவின் வளர்ச்சிக்குத் தகுந்தபடிதான் நாம் பிரச்னைகளைக் கையாளுகின்றோம். பரிணாம நிலைக்குத் தக்க செயல்பாடு. ஆரம்பத்தில் பிரச்னைகளை எதிர்த்துப் போராடி, அடிபட்டு, அடிபட்டு, பக்குவப்பட்டு, பிறகு அறிவுடைமையுடன் செயல்பட்டு முன்னேற்றமடைகின்றோம்.

சர்வ வல்லமை கொண்ட பரம சக்தியுடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் தான் நம் வாழ்க்கை எப்போதுமே போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் தான் அதைக் கவனிப்பதில்லை. நித்திரையில் நாம் சென்று ஒடுங்குவது அந்தப் பரமாத்ம சக்தியுடன் தான். பிறகு எழுவது அதனிடமிருந்து விடுபடுகின்ற நிலை. இதிலிருந்தே சர்வ வல்லமையுள்ள சக்தியின் ஒரு பிரிவு தான் நான் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

நாம் ஆத்மாவை இனித்தான் அடைய வேண்டும் என்பது அல்ல. ஏற்கனவே நாம் ஆத்மா தான். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் நமது முயற்சியாகவும் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும். மனிதப்பிறவி எடுக்கின்றபோது ஆத்மசக்தியுடன் தொடர்பு கொண்ட நிலையில் தான் நாம் பிறக்கிறோம். ஆனால் அதுதான் நானாகப் பிறந்திருக்கிறது என்பதை அறியாமல் நாம் வாழ்கிறோம்;. அந்த அறியாமை தான் தன்னைப் பற்றி அறியும்படி நம்மைத் துhண்டிக்கொண்டே இருக்கிறது. இந்த அறியாமையும் இறைவனின் விருப்பம் தான்.

முழு நிலைமைக்கு வா! பரிபூரணத்தை அடை! என்று நம்மைத் துhண்டுவதும், அப்படிப் பூரணத் தன்மையை அடைவதற்குரிய வழிகளை நமக்கு அமைத்துத் தருவதும், அதற்கேற்ப வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவதும், உரிய வழிகாட்டிகளைத் தருவதும் கூட இறைவன் தான். நாம் இந்தப் பாதையை நோக்கித் திரும்புகின்றவரை நாம் இதை நோக்கித்தான் செலுத்தப்படுகின்றோம் என்பதே நமக்குத் தெரியாது. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று தான் நினைப்போம். ஆனால் எல்லாவற்றிற்கும் பின்னால் அவனது கை இருக்கிறது என்பது ஞானம் பெற்ற பிறகு, அதாவது அவனைப் பற்றி நன்கு அறிந்தபிறகுதான் விளங்கும். அவன் தான் நான் என்பது தெரிந்த பிறகு என்ன ஆகும்? நமது ஓட்டம் நின்றுவிடும்.

அப்படி சக்தி ஓட்டம் நிறுத்தப்பட்டது தான் பொருட்களாகக் காட்சியளிப்பவை. பொருள்களுக்குள் சக்தி இருக்கின்றது. ஆனால் அவை நிறுத்தப்பட்டுவிட்டன. அப்படியென்றால் மனிதனாகிய நமது சக்தி ஓட்டம் நிறுத்தப்பட்டால் நாம் என்னவாக ஆகிறோம்? சீவன் என்று சொல்லப்படுகின்ற நாம் அந்நிலையில் சிவமாக மாறுகின்றோம். சீவனில் உள்ள சுழிதான் இந்த ஓட்டம். அதை நிறுத்தினால் சிவம். சிறிய மாற்றம்தான். ஆனால் கடினமாகத் தெரிகிறது. சீவனை சிவமாக்க வேண்டுமெனில் அதற்கு மௌனம் அவசியம். இங்கு மௌனம் என்பது வாய் பேசாமலிருப்பது அல்ல. எண்ண அலைகள் எழாத நிலையும் அல்ல. ஆத்ம இணைவில் ஏற்டுகின்ற நிறைவு.

அன்பினால் ஏற்படும் இணைவில் ஒரு மௌனம் ஏற்படும். அது மனமில்லாத நிலை. அங்கு அறிவு செயல்படாது. ஆத்மாக்கள் இணையும். ஒன்றுபடும். ஈருடல், ஓருயிர் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? ஒரு சமயம் விஞ்ஞானி எடிசனும், கார்ல் ஏல் என்ற அறிஞரும் ஓரிடத்தில் சந்தித்தனர். ஆனால் இருவரும் ஒரு வாய் வார்த்தையும் பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவ்வளவுதான்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷியை யாழ்ப்பாணத்திலிருந்து சிவயோக ஸ்வாமிகள் சந்திக்கச் சென்றார். ஆசிரமத்திற்குச் சென்றவுடன் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். ஒரு பேச்சும் இல்லை. இருவர் கண்களிலும் கண்ணீர். சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டு யோகர் சுவாமி எழும்பிப் போனார். ரமணரும் கிரிவலம் சுற்றப் புறப்பட்டுப் போய்விட்டார். இது போன்ற சம்பவம் இந்தியாவிலேயே ரமணரைப் பார்க்க வந்த சமகால மகான்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது. அவர்கள் எதற்காக இவ்வளவு துhரம் போக வேண்டும்? ஏன் ஒரு வார்த்தையும் பேசாமல் திரும்ப வேண்டும்? அதைத்தான் சிந்திக்க வேண்டும். ஆத்ம இணைவு அங்கு நிகழ்ந்தது. அன்பு சங்கமித்தது. இரண்டும் ஒன்றுதான்;. வேறுவேறாக இல்லை. இரண்டும் ஒன்று என்று அறிந்த பின்பு அங்குப் பிரிவு ஏது? பேச்சு எதற்கு? மௌனம் என்பது ஞானவரம்பு. மனதை ஒருமைப்படுத்துவது மனோலயம். மனதையே இல்லாமற் செய்வது மனோ நாசம். இதை நன்கு புரிந்து உணர்ந்து தொடர்ந்து முயல வேண்டும்.

இனி அடுத்து அறிய வேண்டியது என்னவென்றால் இந்தப் பேரறிவு நாம் கருவிலிருந்து குழந்தையாக வெளிப்படுகின்றபோது நமது உச்சந்தலையிலேயே ஏழாவது சக்கரத்தில் இருக்கின்றது. குழந்தை வளர வளர அது ஓரோர் சக்கரமாக இறங்குகின்றது. பிறகு நமது வளர்ச்சிக்குத் தகுந்தபடி மீண்டும் ஒவ்வொரு சக்கரமாக மேலேறுகின்றது. 2வது 3வது சக்கரத்தில் வருகின்றபோது அந்த ஆற்றல் காந்தசக்தியை அதிகமாக வெளிப்படுத்துகின்றது.

அந்நிலையில் இரு பாலருக்கும் பாலுணர்வு வெளிப்படுகின்றது. ஒருவரால் ஒருவர் ஈர்க்கப்படுவது இந்தக் காந்த சக்தியாலேயே. 18லிருந்து 20 வயது வந்தவுடன் காந்தசக்தி ஒருவரை ஒருவர் இழுக்கும். இந்தக் காந்த சக்தியால் ஏற்படும் கவர்ச்சி குறையக் குறைய அறிவு வேலை செய்யும். ஆனால் 80 சதவீத மனித சமுதாயம் இந்தக் காந்த ஈர்ப்பில் சிக்கிக்கொண்டு விடுகிறது. காந்த சக்தியிலிருந்து விடுபட்டவர்கள் தான் அறிவு நிலையில் மேன்மையடைகின்றனர். கண்ட பேருடன் சுற்றித் திரியாதே. படிப்பில் கவனத்தைச் செலுத்து என்று பெற்றோர் இந்த வயதில் பிள்ளைகளைக் கண்காணித்துத் திருத்துவது அவர்களைக் கவர்ச்சியிலிருந்து விடுவித்து அறிவுப் பாதையில் செலுத்தி மேம்படச் செய்வதற்குத்தான். இந்தப் பாலுணர்வு மாற்றப்பட்டவுடன் மின்சக்தியாக மாறி அறிவாற்றலாக வெளிப்படுகிறது. இளம் பருவக் கவர்ச்சியால் தான் காதல், சிகரெட், மது அருந்துதல், சூதாட்டம் போன்ற பல வகைகளில் இளைஞர்கள் சிக்கிவிடுகின்றனர். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு விட்டால் அந்தக் காந்தக் கிளர்ச்சியை எலக்ட்ரிக் எனர்ஜியாக மாற்றிப் பல சாதனைகளைச் செய்வார்கள். செய்ய முடியும்.

இப்படி இந்த எனர்ஜி ஒவ்வொரு சக்கரமாக மேலேறி உலகக் கருணையாக மலர வேண்டும். அது இதயச் சக்கரத்தில் வருகின்றபோது அன்பையும் கருணையையும் உணர வேண்டும். சுஷூக்தியில் வரும்போது உணர்ந்ததைச் சொல்ல வேண்டும். நெற்றிக்கு வரும்போது ஒளி உடம்பைத் தரிசிக்க வேண்டும். கடைசிச் சக்கரத்தில் பரிணாமப்பட வேண்டும். இறங்கிய பேரறிவை மேலேற்றிப் புறப்பட்ட இடத்தில் மீண்டும் கொண்டு சேர்த்தல் தான் வாழ்க்கை என்று சொல்லலாமா?

இப்படி இந்த ஆற்றலை மேம்படுத்திக் கொண்டு போகாமல் தம்மிலிருந்து வெளிப்படும் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவதில் நம் கவனம் திரும்பி விடுகிறது. அதனால் வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகின்றது.

உணர்வாய் இருப்பது காந்த சக்தி. அறிவாய் இருப்பது மின் ஆற்றல். இந்த மின் காந்த அலைகள் தான் நம்மை இயக்குகின்றன. நாம் ஒளிக்கீற்றுகளின் படைப்புக்கள். சூரிய ஒளியிலிருந்து தான் நாமும், நாம் காண்பவை அனைத்துமே தோன்றின. இவை அனைத்தின் இறுதி நிலை ஒளி. இந்த ஒளியைத் தமக்குள் தியானத்தால் தரிசித்துப் பரிணாம உயர்வைப் பெறுகின்ற முயற்சியில் தான் ஆன்மீக சாதகர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே ஆன்மீகம் என்பது ஒளி நிலையை அடைதல் என்பது தான். இது புதிய விளக்கம்.

நாம் பிறக்கும்போது ஒளிசக்தி சகஸ்ராரத்தில் இருக்கும். பிறந்தவுடன் மூலாதாரத்திற்கு இறங்கிப் பிறகு படிப்படியாக முன்னேறி மீண்டும் தனது இருப்பிடமான சகஸ்ராரத்தை அடைவதுதான் பரிணாம முதிர்ச்சி அல்லது முக்தி நிலை. இதற்கு ஞானமும் தியானமும் தான் உரிய சாதனம். ஞானம் தான் முதல் தேவை. ஒருவரது ஞானம் தான் அவரது தியானத்தை வெற்றி ஆக்குகின்றது. ஞானமில்லா விட்டால் நானல்லாத, இந்தப் பிறவிக்குரிய, அவன் அப்படிச் சொன்னானே! இவள்; இப்படிச் செய்தாளே! என்பன போன்ற கீழான எண்ணங்கள் திரும்பத் திரும்ப வரும். கோவிலுக்குப் போய்ப் பிரார்த்தனைகளைச் செலுத்துவதாலோ, கண்ணை மூடிக்கொண்டு மந்திரங்களை ஜெபிப்பதாலோ இந்த மன அழுக்குகளை அகற்ற முடியாது. அக அழுக்கை அகற்ற ஞானத்தால் தான் இயலும். சடங்கு சம்பிரதாயங்களெல்லாம் செயல்பாடுகளில் மனதை ஈடுபடுத்தி எண்ணங்களை மறக்க வைப்பவையே தவிர வேறல்ல. இவற்றையெல்லாம் செய்தவுடன் மனம் அமைதிப்பட்டது போல சில மணி நேரங்கள் வரை தான் இருக்கும். பிறகு பழையபடி புலம்பத் தொடங்கிவிடும். ஆனால் ஞானத்தின் வழி சென்று எவையெவை என்னென்ன என்ற நம்மைப் பற்றிய உண்மைகளை அறிந்து அவற்றை ஆராய்ந்து புரிந்துகொள்ள முற்படுகின்றபோது அமைதித் தன்மை நம்மில் தங்கி விடுகின்றது. ஆகையால் வளர்ச்சி என்பது ஞான யோகத்தால் வர வேண்டும். மற்ற வழிகளில் முயன்றால் பலன் இருக்காது.

கோவில்களில் சிலைகளை வடிவமைத்து அவை தெய்வங்களாக உருவகிக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. அந்த வழிபாடு உண்மையை உணர்த்துவதில்லை. செய்ததைச் செய்கிறோம். அவ்வளவுதான். அந்தத் தெய்வங்களின் உண்மைத் தன்மையை, அவ்வடிவங்களின் பின்னால் வைக்கப்பட்டுள்ள உண்மையான கருத்துக்களை, அறியப் பயில்வது தான் ஆன்மீக ஞானப் பயிற்சி. தெய்வீகம் எனக்குள் செயல்படுகின்றபோது அதனை உயிர்சக்தி என்று அழைக்கின்றோம். உயிர்ச் சக்தி இந்த உடலில் ஒவ்வொரு நிலைகளில் நின்று செயல்படுகின்றது.

இதயம் ஒவ்வொரு துடிப்பிற்கும் bio-electric-energyயை உற்பத்தி செய்கின்றது. மனம் ஒன்றை விரும்புகின்றபோது bio-magnetic-energyயைத் தயாரிக்கின்றது. இந்த உயிரியல் மின்சக்தி என்னில் கதிர்வீச்சை ஏற்படுத்தியதென்றால் அதைத் தான் ஓரா(aura) என அழைக்கின்றனர். அதாவது ஒளிவட்டம். இதனை உடலுக்கு வெளியில் பார்த்தோம் என்றால் அது ஒளியுடல் (light body).

இந்நிலை அமைவதற்கு முன்பாக எனக்குள் bio-atomic energy என்னும் ஆற்றல் தியானத்தால் ஏற்படுகின்றது. இந்த உயிரியல் அணு ஆற்றல் என்னுள் இயங்கத் துவங்கினால் என்னால் அடுத்தவர் எண்ணங்களை இருந்த இடத்திலிருந்தே அறிய முடியும். பிறரது உள்மன ஓட்டங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

முதலில் bio-magnetic அடுத்து bio-electric அதையடுத்து bio-atomic இறுதியில் bio-light. இதுதான் உயிர் ஒளி நிலை. இதன் அடுத்த படியாக அமைவது athmic energy. இவை எல்லாம் முறையாகச் செயல்படத் தொடங்கினால் இறுதியில் நேரடியான ஆத்மத் தொடர்பு ஏற்படும். இந்த ஆத்மாவின் ஒளி வெளிப்பட்டுப் பரவுகின்ற நிலையில் தான் ஒளி உடல் பிரகாசிக்கும். இது பரமாத்ம நிலை.

இந்த உயர் அலை ஓட்டத்திற்கு நாம் நம்மை உயர்த்திக்கொண்டு வருகின்றபோது, அந்தப் பரம்பொருள் தானாகவே நம்முடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளும். இந்தத் தொடர்பு ஏற்படுவது தான் உண்மையான வாழ்க்கை. இந்நிலையில் ஆத்மா, பரமாத்மாவுடன் தொடர்பு கொண்ட நிலையில் வாழ்க்கை அமைந்துவிடும். பரம்பொருள்; ஆத்மாவாக என்னுள் இருந்து வாழ்கின்ற நிலை இது.

அலகில் சோதியன், அம்பலத்தாடுவான்! என்று ஒரு பாடல் வரி வருமே! அதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா? அலகு என்பது நான். எனக்குள் சோதியாக ஒளிர்;பவன் அவன். அம்பலத்தாடுவான் என்றால் இந்தப் பிரபஞ்சமாக நின்று ஆடுகின்றவன். என்றால் என்ன பொருள்? அவன் தான் எனக்குள் இருந்துகொண்டு நானாக வாழ்கிறான். நான் இந்தப் பிரபஞ்ச வடிவமான பரமாத்மாவின் ஒரு சிறிய அலகு (unit). அவ்வளவுதான். புரிகின்றதா?

இந்தச் சிறிய அலகிற்கும் அந்தப் பரந்து விரிந்த பரம்பொருளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆனால் அதை நாம் அறியவில்லை. ஏற்கனவே இருக்கின்ற இந்தத் தொடர்பை நான் அறியக்கூடிய நிலையை அடைகின்றபோது நான் மலர்கிறேன். இவ்வாறு நான் மலர்ச்சி அடைகின்ற நிலையில் எனது பிறப்பின் முயற்சி நிறைவடைகின்றது. புத்துணர்ச்சியும் நிறைவும் சேர்ந்தது இந்த மலர்ச்சி.

நம் உடலில் உள்ள ஏதேனும் கழிவு வெளியேறிய பிறகு ஒரு விடுதலை உணர்வு நம்மில் ஏற்படும். அது ஒரு சுகம். இந்த சுகம், முக்தி, விடுதலை, வெளிப்படுதல் எல்லாமே ஒன்று. நம்மைப் பற்றிய உண்மையை நாம் அறிந்தால், அறியாமை என்னும் கழிவு நம்மிலிருந்து வெளியேறினால், அந்த ஞானம் நம்மை விடுதலைக்கு அழைத்துச் செல்லும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *