அறிவுத்தேடல் ஞானமாகி அத்வைதமான நிலையில்

அறிவை வளர்க்க வேண்டும் என்ற சொற்றொடர் எல்லாச் சமுதாயத்திலும் இனக் குழுக்களிடத்தும் அனைத்து மனிதர்களிடத்திலும் பொதுவான ஒன்று. எந்த அறிவை? என்ற கேள்வி எழுப்பும்போது திகைப்பு ஏற்படுகிறது. என்னையும் சுற்றியுள்ளவைகளையும் அறிவதே அறிவென ஆரம்பத்தில் எண்ணத்தோன்றும். உலக அறிவென்பது பொருட்களால் ஆன ஒழுங்கையும் அதன் நிகழ்வுகளையும் அறிதல் என அறிய லாம். பொருட்கள் எல்லாம் அலைகளின் வடிவ இருப்பே, என விஞ்ஞான அறிவு கூறுகிறது.

மின்காந்த அலைகளால் ஏற்பட்டதே பார்வையில் படும் உலகம் எனக் கொள்ளலாம். அலைகளே அதிர்வுகளின் உருவாக்கம் என்றும் அதிர்வுகள் ஈர்ப்பால் உருவாகின என்றும் அவற்றின் மூலம் பிராணன் என்கிற உயிர் அல்லது ஆத்மா என்றும் முடிகிறது. ஆத்மாவோ பரமாத்மாவாக அண்டமெல்லாம் விரிந்து எல்லையில்லாமல் திகழ்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. அதனால் வேத – வேதாந்த அறிவே உண்மையான அறிவு என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் அறிவைத் தேடுபவர்கள் இருக்கிறார்கள். இந்த அறிவு எல்லாருக்கும்; இலகுவாகக் கிடைத்து விடுவதில்லை. ஒரு ஒழுக்கத்தைப் பின்பற்றி அதை அறிவதற்கு ஒரு உந்து சக்தி வேண்டும். அந்த நல்லொழுக்கம் எப்படி அமையும்? அன்பால்தான் அமையும். மனித இனத்துக் குள்ளேயே பாகுபாடு இல்லாமல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற ஒற்றுமை மனப்பான்மையோடு வாழும் சீரிய வாழ்க்கைக்கு அன்புதான் அடிப்படை.

அன்பைப் பாரபட்சம் இல்லாமல் விரித்தால் உலகெங்கும் அமைதி தானாக நிலவும். அதற்குத் தேவை பரமாத்மா என்று கூறப்பட்ட கடவுளின் அருள். என்ன அற்புதம்! அன்புக்கு இறைவன் அருள் தேவை. அறிவு இறையருளில் ஞானமாக நிறைவடைகிறது. ஞானம் என்பது தெளிந்த அறிவு. இந்த ஞானத்தை விசாரம் என்று கேள்விகளால் சந்தேகமற குருவின் வழிகாட்டலுடன் ஆய்ந்து, உண்மை நிலையை அறிவது. அறிந்தவுடன் அதற்கான பயிற்சியை மேற்கொள்வது என்பவைகள் சாதனை என்று அழைக்கப்படுகிறது. அறிந்த வுடன் ஞானம் பெற்றவுடன் என்னை அதுவாக ஆக்க வேண்டும் என்ற உந்தல் வாழ்க்கையில் அர்ப்பணிப்பை ஏற்படுத்தும்.

இந்த உலகம் ஏன் படைக்கப்பட்டது? நான் அனுபவிக்கும் இன்பங்களுக்கோ துன்பங்களுக்கோ என்ன காரணம்? உணவு, உறவுகள், உறையுள், இயற்கை என்றால் என்ன? என்று சுலபத்தில் விடை காண முடியாத கேள்விகளுக்கு விடை கிடைத்ததும் அதன் பின்னர் அடைய வேண்டியதை அடைவதே பிறப்பின் நோக்கம் என்ற தெளிவு ஏற்பட்டு மனிதப் பரிணா மத்தின் உயர்வாகிய ஆத்ம வாழ்வை விரித்துக் கொள்ளும் நிலையை எனக்கருளிய இறைவனுக்கு நன்றி செலுத்துவதே என்முன்னாலுள்ள கடமை. எல்லா வாழ்வும் அவனுக்கே. எனது பிறப்பை நீக்கி தன்னோடு என்னை அணைத்துக் கொண்ட அவனுக்கு – இல்லை – எனக்கு – வாத்சல்யமான நன்றிக் கண்ணீர் அரும்புகிறது. அவன் என்பது நானே என்ற அத்வைத அறிவு அவன் அருளை விரிக்கிறது.

அறிவுத் தேடல் அருளாகி நானும் அவனும் ஒன்றாகி வாழ்வின் நிறைவில் நான் மறைந்து அவனே மிளிர்கின்றான்.

எனது வாழ்க்கை என்னும் நீண்ட பயணத்தில் என் வேடத்தில் நீ எனக்காக, என்னுடன் பயணிக்கிறாய் என்ற உண்மையை ஞானத்தால் நான் இன்று பூரணமாக அறிந்து கொண்டேன். நான் என்பது நீயே.

நன்றி பரமாத்மாவாகிய இறைவனே!

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *