மானிடர் ஆன்மா மரணம் எய்தாது

தியானம், ஞானஉபதேச உரைகளைத் திரும்பத் திரும்ப நினைவிற்குக் கொண்டுவந்து மனதில் பதித்தல் ஆகியவை நிதித்யாசனம் (திரும்பத் திரும்பச் சிந்தித்தல்)எனப்படுகின்றன. தியானம் செய்து உங்களுடைய கர்மாவை ஒதுக்காவிட்டால் உங்களால் பூரண நிறைவுத் தன்மையை அடைய முடியாது. மனமாக இயங்குகின்ற ஆத்மாவை எல்லா நேரத்திலும் ஆத்மாவாகப் பார்த்தலே நிதித்யாசனம். எந்த நேரமும் சலனப் பட்டுக்கொண்டே இருக்கின்ற மனதின் உண்மைத் தன்மையை ஞானத்தால் அறிந்ததால் இப்போது அது எந்த வெளிp விவகாரத்தையும் தன்னில் ஏற்றிவைத்துக் குழம்பாமல் ஆத்மாவாகவே ஆகிவிட்டது. ஆத்மாவில்தான் நான் இருக்கிறேன். இந்த ஆத்மா எல்லா இடங்களிலுமே பரவி இருக்கின்றது. உயிர்ச் சக்தி இல்லாத இடமே இல்லை. காற்று இருப்பதால் உயிர்ச்சக்தி இருக்கிறது. இந்த உயிர்ச் சக்தியோடு பஞ்சபூதச் சேர்க்கையும் இயற்கையும் இணைந்து அதனுடைய பலவிதத் திருவிளையாடல்கள் வாழ்க்கையாக நிகழ்கின்றன.

பஞ்சபூத சக்திகளில் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கையும் நாம் தொடமுடியும். ஆகாயத்தைத் தொட முடியாது. இப்படிக் கையால் தொட முடியாத ஆகாயத்தை நீங்கள் தொட முடிய வேண்டும். எண்ணங்களாலும் ஆசைகளாலும் அலைபாய்ந்தபடி இருக்கின்ற மனம் வெறுமையாகி வெட்டவெளியானால் அதுதான் மனஆகாயம். வேறு எந்தப் பொய்யான வடிவங்களையும் மனதில் பதிக்காமல் அந்த ஆகாயத்தைப் பிடித்து அதன்மூலம் ஆத்மாவைத் தொடத் தியானத்தில் முயல வேண்டும். இந்த உண்மைதான் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரத்தில் சிதம்பர ரகசியம் என்ற பெயரில் காட்டப்படுகின்றது. இயக்கத்திற்கு இடம் தேவை. வெளியில் இயக்கம் நடக்கிறது. இப்படிப் பார்த்தால் உங்கள் மனம் மறைந்து ஆகாய சக்தியாய் இப்போது இருக்கிறது. அது வெண்ணிறமாய்த் தெரியும். ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வோர் நிறம் வரும்.

இதில் உண்மை என்னவென்றால் ஆத்மாவாகிய மன ஆகாயவெளி தங்க நிறமாகத்தான் இருக்கிறது. ‘ஹிரண்யகர்ப்ப:’ என்று வேதம் சொல்கிறது. ஹிரண்யம் என்றால் தங்கம். உலகம் முழுவதும் ஒளி தங்கமயமாக மின்னுகின்றது. இப்போது உங்களில் தெரிகின்ற வௌ;ளி ஒளி (வெண்ணிற ஒளி) தங்க ஒளியாக மாறவேண்டும். தியானத்தில் நீங்கள் இந்த நிலையை எய்த வேண்டும். இதற்குத் தொடர்ந்த முயற்சி தேவை. நீங்கள் தியானத்தில் ஒன்றுமில்லாத நிலைக்குப் போகின்றபோது (சமாதி நிலை) பகலில் தெரிகின்ற சூரிய ஒளியில் ஊதா கலந்ததுபோல் தெரிந்து பிறகு ஒருவிதத் தங்க ஒளி காட்டி மறைந்துவிடும். இதைத்தான் பொன்னார் மேனியனே!.. என்று பாடினார். மூகாம்பிகை கோவிலில் லிங்கத்தில் தங்க ரேகை மின்னுவ தாகச் சொல்வதும் இதைக் குறித்துத்தான். தியானத்தின் இறுதிநிலை இந்தத் தங்க ஒளியைத் தரிசித்தல். அதன்பிறகு நீங்கள் உங்களை மானசீகமாக மனதில் பொன்னிறமான உருவமாக உச்சிமுதல் பாதம்வரை பொன்னிறமாக உருவகப் படுத்திப் பார்க்க முயல வேண்டும்.

எந்தவிதத் தடுப்புமில்லாமல், இடைஞ்சலில்லாமல் தங்கமாக மாற்ற முடியுமா? தியானத்தில் இது ஒரு பயிற்சி. இதைக் குறிப்பாக உணர்த்தத்தான் ஆலயங்களில் முக்கிய தினங்களில் விக்கிரகங்களுக்குத் தங்கக்கவசம் சாத்து கின்றனர். வௌ;ளிக் கவசமும் ஒளியைக் குறிப்பதுதான். உங்களை உங்களால் மனதில் தங்க ஒளியாகப் பதிக்க முடியுமா? உங்கள் மனம் தியானத்தால் பழக்கப்பட்டு ஞானத்தால் உரமேற்றி ஒளிமயமாகப் பார்த்து இப்போது தங்கமயமாக அந்த வெளியைப் பார்க்க வேண்டும். கஷ்டமாக இருக்கும். ஆனால் பயிற்சி மூலம் தங்க ஒளியைத் தரிசிக்க முடியும். சத்திய ஒளியின் மாறாத நிறம் தங்கம்.

வௌ;ளி ஒளியில்கூட மனம் அசையும். வேறு ஒன்றைக் கொண்டுவரும். தங்கத்தில் சிக்கிவிட்டாலோ பிறகு மனமே இருக்காது. ஆட்டமும் இல்லை, அசைவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். பரமாத்ம ஸ்வரூபம் பொன் நிறம். தங்க நிறத்தை தரிசித்தால் மூலத்தில் கொண்டு சேர்த்து விடும். உடலிலுள்ள எல்லாமே அடிப்படையில் தங்க நிறம். மருத்துவ மனையில் கர்ப்பப்பையைச் சுத்தப்படுத்துகின்ற சிகிச்சை (னுNஊ) செய்கின்றபோது அந்தக் கழிவைப் பரி சோதனைக்கு அனுப்புவார்கள். அதில் பொன்னிறத் துகள்கள் மின்னுவதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். உங்களுக்குள் தங்கம் இருக்கிறது. மனித உற்பத்திக்கு ஆதாரமான இடம் தங்கமயமாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மனோநாசம் செய்துவிட்டீர்களென்றால் சமாதி நிலையில் தங்கமாக ஜொலிப்பீர்கள். சமாதி நிலையில் தங்கமாக எல்லாம் தெரிந்ததென்றால் என் அணுக்கள் அனைத்தும் தங்கத்தில் நிலைபெற்றவையாகிவிடும். தங்களது வளர்ச்சியான இயக்கத்தை நிறுத்திச் சமாதி நிலைக்கு அவை உதவி செய்யும். அதாவது இந்தப் பிறவியின் இறுதிநிலை வரை குறைவான நிலையில் இயங்கிவரும். நான் முற்றுமுழுதாய் அமைதிப்பட்டு அந்தத் தங்க நிலையை அடைந்தால் ஸெல்களும் மாறும். அப்படி இந்த ஸெல்கள் மாறினால்தான் நான் தங்க நிலையை அடைந்ததாக ஆகும். இந்தத் தங்க நிலையை யோசித்துவிட்டு உலகத்தில் மக்கள் நடக்கின்ற நிலையைக் கவனித்துப் பாருங்கள்.

நான் சொல்ல வந்தது தங்கநிலை பற்றியது அல்ல. பூரண அமைதி நிலைபற்றித்தான். இந்தப் பூரண அமைதி நிலையில் நான் முதுமையை நோக்கிச் செல்கின்ற பயணத்தை நிறுத்துகிறேன். எனது உடலிலுள்ள ஸெல்கள் அதிவிரை வாகச் செயல்பட்டு விரைவில் முதுமையை எய்தி விரைவாக இந்தப் பூமியைவிட்டு அனுப்புவதற்குத் தீவிரமாக ஈடுபட்டிருக் கின்றன. இவற்றை நான் அமைதிப்படுத்திவிட்டால் ஸெல்களின் இயக்கங்கள் மெதுவாக இருக்கும். அப்படி அவை குறைந்த விதத்தில் செயல்பட நான் அமைதி நிலையில் எப்போதும் இருக்க வேண்டும். மனம் கட்டுப் பட்டால்தான் அமைதியடையும். கண்ணுக்கு முன் இனிப்புப் பண்டம் இருந்தாலும் அதை எடுத்துத் தின்னாத கட்டுப்பாடு உங்களில் ஏற்பட வேண்டும். அறிவுபூர்வமாக ஆராய்ந்து பார்த்தால்தான் வைராக்கியம் ஏற்படும். இல்லாவிடில் மனக்கட்டுப்பாடு இல்லாமல் உணர்ச்சி மேம்பட்டு எல்லாம் செய்வோம். ஒவ்வொரு நாளும் அறிவுக்கும் உணர்ச்சிக்கும் ஏற்படுகின்ற போராட்டம்தான் வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கை அறிவுபூர்வமாக இருக்கிறதா? உணர்ச்சி பூர்வமாகச் செல்கிறதா? என்று உங்களை நீங்கள் ஆராய்ந்தால் உண்மை புரியும். இனிப்பு நஞ்சாய் மாறும் என்பது ஞானம். ஞானத்திற்கு வந்துவிட்டால் ஒருவருடைய செயல்பாடுகள் உணர்ச்சி வசப்படாமல் பூரண நிலையில் இருக்கும். இந்த ஞானம் உங்களைக் கீழ்நிலைக்குப் போக விடாமல் தடுத்து மேலே உயர்த்தும். ஞானம் உள்ளவர்கள் என்றால் உணர்ச்சிக்கு அடிமையாகாதவர்கள், அறிவில் தெளிந்தவர்கள் என்று பொருள்.

ஞானம் சமுதாய வழக்கத்திற்கு மாறாகத்தான் பெரும்பாலும் இருக்கும். சமுதாயம் செய்துகொண்டு போகின்றவற்றை எல்லாம் ஞானமுள்ளவர்கள் செய்யமாட்டார்கள். சிந்தித்துச் செயல்படுவார்கள். உண்மை எது பொய் எது என்பது தெரிந்து, தனிப்பட்ட ரீதியில் ஞானத்தைப் பெற்றுச் சமுதாயம் எதிர்த்தாலும் தொடர்ந்து தமது முடிவைக் கைவிடாமல் கடைப்பிடித்து வாழ்பவர்கள்தான் ஆன்மீகவாதிகள். இனி நீங்கள் உங்களைத் தங்கமயமாகத்தான் பார்க்கப்பழக வேண்டும். தியானத்தில் உள்முகமாக உள்ளத்தினுள்ளே தங்க ஒளியைத் தரிசித்து அதை மெதுவாக உடல்முழுவதும் படரவிட வேண்டும். எனது இருப்பு நிலையை உணர்வால் காண உள்ளத்தால் பழகவேண்டும். எனது இருப்புநிலை தங்கம், அது மாறாது. மாறியவையெல்லாம் பார்வைக்குத் தெரிந்தபடி, எனது கர்மாவிற்கேற்றபடி, எந்த நிலையில் எனது பார்வை இருக்கின்றதோ அதற்கேற்றபடிதான் நிறம் மாறித் தோற்றமாகத் தெரியும். எனது கண் பார்ப்பது உண்மையல்ல என்பதுதான் நான் பெற்ற ஞானம். ஏனெனில் படைப்பிற்குக் கர்மாவையும், மாயையையும் இறைவன் பாவித்திருக்கிறான். இது கர்மா, இது மாயை என்று பிரித்துப் பார்ப்பவனுக்கு இறைவன் தங்கத்தில் காட்சியளிப்பான்.

வாழ்க்கையில் எதைச் செய்தாலும் எப்படி வாழ்ந்தாலும் கடைசியில் மிஞ்சுவது அனுபவம் மட்டுமே. எதை அனுபவித்தாலும் போகும்போது ஒன்றையும் கொண்டு செல்ல இயலாது. இங்கேயே விட்டுவிட்டுத்தான் போக வேண்டும். மாயை வலைக்குள் சிக்கினால் அப்படியே இழுத்துக் கொண்டு போய்விடும். காண்பவை எல்லாம் மாயை. படைப்பில் இருந்து விடுபடுகின்ற நிலைதான் ஞானம் பெறுதல். மாற்றத்தைப் புரிந்துகொண்டு விட்டால் மாறாததைப் புரிந்து கொள்ள முடியும். மனச்சாட்சி ஞானம் பெற்றால்தான் சரியாகச் செயல்படும்.

நிதித்யாசனம் என்ற தியானத்தில் மன ஒருமைப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஞானத்தையும் தியானத்தை யும் சேர்த்துச் செய்வது. சில கற்பனைகளுக்கும் சிந்தனை களுக்கும் பாவனைகளுக்கும் பெற்ற ஞானத்தைச் சிந்திப்பதற் கும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு கற்பனை எப்பொழுது வேண்டுமானாலும் உண்மையாகலாம். இன்று முதல் முப்பது நாள்களுக்குப் பிறகு எனது கை, கால்கள் செயல்படாமல் போகிறது. இது ஒரு கற்பனை. அப்படியானால் இந்த முப்பது நாட்களுக்குள் இவற்றை எந்த விதத்தில் நான் பயன்படுத்திக் கொள்வேன்? முப்பது நாட்களுக்குப் பிறகு எனது கைகால்கள் அசைவின்றிப் போய்விட்டன. இப்போது உறவினர் என்னைச் சுற்றி இருந்து பார்க்கின்றனர். நான் அவர்களை எப்படி எதிர்கொள்வேன்? இந்த உலகை எப்படிப் பார்ப்பேன்? பழகியவர்களிடம் எனது உணர்வுகளை எப்படி விவரிப்பேன்? பணம், பட்டம், பதவி, வெற்றி, தோல்வி, தாழ்வு, உயர்வு மனப்பான்மை இவற்றின் நிலை என்ன? அகங்காரத்தின் நிலை எப்படி இருக்கும்? என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற கர்வத்தின் நிலை எப்படி இருக்கும்? என்னைக் கண்டு பயப்பட்டவர்களைக் கண்டு நான் பயப்படுவேன். அந்த நிலையில் உலகம் என்னை எப்படி நடத்தும்? நான் என்னையே எப்படிப் பார்ப்பேன்? சிந்தித்துப் பார்ப்போம்.

என் கை கால்களை நான் வெறுப்பேனா? இதுவரை செயல்பட்டதற்காக நன்றி செலுத்துவேனா? சிந்தித்துப் பார்ப்போம். இந்தச் சிந்தனையில் நாம் அடிபட்டுப் போய் விடக்கூடாது. கீழ்நிலைக்கு இறங்கி அனைத்தையும் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவையும் உன் கர்மாவோடு தொடர்புபட்டவையே. மனதில் எழக்கூடிய அனைத்துப் பயங் களையும் கற்பனை செய்து அவற்றால் நான் பாதிப்படையக் கூடாது என்பதற்காக என் மனதை ஆத்மாவாக மாற்றிவைத்து ஒரு மனப்பயிற்சியாக இதை எடுக்க வேண்டும். முக்திக்கும் அன்பு செய்வதற்கும் பயம் தடை. எதற்கும் தயார் என்ற துணிவு ஏற்படவே இப்படிப்பட்ட சிந்தனைகள்.

நிலையானதை உணர்த்தும் விதத்தில் தியானத்தில் ஈடுபட்டு வருகிறோம். நிலையானதல்லாதவற்றை எல்லாம் நீக்குகிறோம். இங்கு ஒரு பாவனை. ஏழு நாட்களுக்குப் பிறகு நான் பார்வை அற்றவனாக இருக்கப் போகிறேன். அதுவரை நான் எதைப் பார்ப்பேன்? எந்தக் காட்சியை மனதில் பதிய வைத்து வாழ்க்கை முழுவதும் நினைத்துக் கொண்டிருப்பேன்? இந்த ஏழு நாட்கள் யாரை அல்லது எதைப் பார்க்கப் பயன் படுத்துவேன்? இந்தக் கற்பனை மூலம் கண்களின் மதிப்பும் நிலையாமையும் உணரப்படுகிறது. கண்களை இழந்தபின் என் உலகம் எப்படி இருக்கும்? எவற்றை மனக்கண் பார்க்கும்? இவ்வுலகம் என்னை எப்படி நடத்தும்? எனது கர்வம் எந்தநிலையை அடையும். நான் அடைந்த வெற்றி, செல்வம் போன்றவற்றை எப்படிப் பார்ப்பேன்? பார்வையிழந்தபின் எனது உலகம் பிரகாசமானதா? இருளானதா? பார்வை இருந்த காலத்தில் நான் துயரப்பட்டதில்லையா? இவற்றைச் சிந்திக்கும்போது அறிவுதான் நம் கண்கள் என்பதை அறி வோம்.

நிலையாமையைத் தியானித்து வருகிறோம். நமது உடல், செயல்படும் சக்திகள் உறவுகள் அனைத்தும் காலத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வறிவைப் பெற்றபிறகு நாம் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. கற்பனை ஒன்று; எனது உடல் செயல்படும் திறனை இழந்துவிட்டது. கால்கள் நடக்கும் சக்தியை இழந்துவிட்டன. அசைவற்ற நிலையில் படுத்திருக்கிறேன். உறவினர்கள் நண்பர்கள் என்னைச் சுற்றி வேடிக்கை பார்க்கிறார்கள். சமாதானப்படுத்துகிறார்கள். பேசும் திறனை இழந்த நான் இவ்வுலகத்தை எப்படிப் பார்ப்பேன்? நான் அடைந்த வெற்றிகளை எப்படிப் பார்ப்பேன்? அடைந்த தோல்விகளை எப்படிப் பார்ப்பேன்? என்னைத் துன்புறுத்தியவர்களை நான் எப்படிப் பார்ப்பேன்? அவர்களை மன்னிப்பேனா? அல்லது மனதில் சபிப்பேனா? எனக்கு உதவியவர்கள் சங்கடப்படுத்தியவர்கள் யாரும் எனக்கு எதுவும் தரமுடியாது. இந்நிலையில் இருக்கும் எனக்குப் புதிதாக அவர்கள் கஷ்டத்தைக் கொடுக்க முடியாது. நட்புகள், உறவினர்கள், பகைவர்கள் யாரும் இருந்தாலும் எனக்கு ஒன்றும் செய்ய முடியாது. இந்த நிலையில் இது புரிந்து என் மனதில் பற்றும் வெறுப்பும் நீங்கினால் எனது நோய்க்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இப்படி நோய்வாய்பட்டு விருப்பு வெறுப்பு நீக்குவதை விடுத்து இப்போதே சாஸ்திரத்தின் துணையினால் விடைபெறவேண்டும். நான் ஏன் இப்போதே விருப்பு வெறுப்பிலிருந்து விடுதலை அடையக்கூடாது என்று சிந்தித்துப் பாருங்கள். நிதித்யாசனத் தின் ஒரு பகுதி உடல், உலகம் இவற்றின் நிலையற்ற தன்மையைத் தியானித்தல். மறுபகுதி ஆத்மாவின் நிலையான தன்மையைத் தியானித்தல். இப்போது ஆத்மாவின் நிலையான தன்மையை எடுத்துக் கொள்வோம். பிரம்ம சத்தியம், ஜகத்மித்யா. (பிரம்மமே சத்தியம், இந்த உலகம் பொய்) பிரம்ம சத்தியம் என்ற பகுதிக்கு வருவோம். ஆத்மா சத்தியம் என்பதற்கு வருவோம். ஆத்மா சத்தியம் என்பதற்குப் பல விளக்கங்களைக் கேட்டிருக்கிறோம். அந்த லட்சணங்களில் சிலவற்றைத் தியானிக்கப் போகிறோம்.

ஆத்மா என்ற சொல்லை நாம் அகம் என்று பொருள் படுத்துவோம். ஆத்மா நித்யம் என்றால் நான் நித்தியமானவன். ஆத்மா அழியாத பொருளென்றால் நான் அழியாத பொருள். ஆத்மா என்ற சொல்லை நான் என்ற சொரூபத்தில் தியானிக்கப் போகின்றோம். ஆத்மாவின் முதல் சொரூபம், சத்தியம், இருத்தல்; நுஒளைவநnஉந. நான் இருத்தல் சொரூப மானவன். இருத்தல் என்றால் எப்படி இருப்பவன் என்ற கேள்விக்குப் பதிலில்லை. இருப்பவனாக இருப்பவன் நான். உடலாகவோ பஞ்சபூத சேர்க்கையாகவோ இல்லாமல் வெறுமனே இருத்தல். எனது இருத்தலை வாங்கிக்கொண்டு உடல், உலகம் இருக்கிறது. (நானாகிய உயிர் அல்லது ஆத்மா இருப்பதால் உடலும் உலகமும் இருக்கின்றன. இருத்தலாகிய அந்த நான் விலகினால் உடலும் உலகமும் இல்லை.) உடலில்லாதவனுக்கு உலகமில்லை.

நான் சற்சொரூபமானவன். எனக்கு வேறாக எனது இருத்தலை அவை பெற்றுக் கொண்டு காட்சியளிக்கின்றன. நான் ஒருவனே இருத்தலாகக் காட்சியளிப்பவன். அஹம் தத்சொரூபம். நான் தத்சொரூபமானவன். இந்த இருத்தலுக்கு இல்லாமை கிடை யாது. (மானிடர் ஆன்மா மரணம் எய்தாது) எனக்கு மரணம் இல்லை. மாற்றம் இந்த உடலுக்கு; எனக்கில்லை. இந்நிலையில் நான் என்பது அவனே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *