கருணை என்பது கடவுள் தன்மை

தியானப் பயிற்சிக்குக் குளிர்த்தன்மை மிகமிக அவசியம். குளிரில் குண்டலினி சக்தி உயரும், மனம் ஒடுங்கும். அதனால்தான் தவ முனிவர்கள் இமயமலையை நாடிச் சென்றார்கள். ஐம்பூத விளையாட்டுத்தான்; இயற்கை. இந்த ஐந்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற நான்கினைத் தொடலாம். ஆகாயத்தைத் தொட முடியாது. இந்த ஐம்பூதங்களின் ஒலிதான் சிவாயநம. தொடமுடியாத வெளியைத் தொடத்தான் நாம் முயற்சிக்கின்றோம். வேதாந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு எண்ணமும் நமக்குள் எழக்கூடாது. எண்ணங்கள் வருவது தோஷம். ஒரு பொருளைப் பார்த்ததும் என்னுடைய மதிப் பீட்டால் எனக்குள் ஓர் எண்ணம் வருகின்றது. அது எனக்குத் தரப்பட்ட சின்ன அறிவால் வருவது. எவ்வித எண்ணமும் எழாத அமைதி நிலையைத்தான் சும்மா இருத்தல் என்று சொல்வது. மனம் இழந்த அந்த நிலைதான் மோட்சத்தின் வாசற்படி.

முன்பு வாழ்ந்த நிலையையும் இப்போதுள்ள நிலையையும் ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது என்னை நான் வெறுமையானவனாக மாற்றிக்கொண்டேனா என்று ஆராய்ந்தால் தேவையான வற்றைச் செய்ய வேண்டிய நேரத்தில் சரியாகச் செய்ய முடிகின்றது என்பது தெரியும். வேலைக்குப் போகின்றபோது குடும்பத்தில் ஈடுபட்டுச் செயல்படுகின்றபோது எதையாவது பேச வேண்டிவரும். எதையாவது சிந்திக்க வேண்டிவரும். சிந்தனையுமில்லை, பேச்சுமில்லை என்று இருக்கப் பழக வேண்டும். இதுநாள்வரை கடமையாகச் செய்த அனைத்தையும் தற்போது சேவையாகச் செய்ய மனம் பழக வேண்டும்.

நான் சுதந்திரமானவனா? என்ற வினாவை அடிக்கடி நமக்குள் நாம் கேட்க வேண்டும். நான் இங்கு வந்ததற்குக் காரணமான தாய் தகப்பனை எனக்குத் தெரியும். மூன்று தலைமுறைக்கு முன்னால் இருந்த எனது முன்னோர்களைப்பற்றி எனக்குத் தெரியாது. எதற்கு இங்கு வந்தேன் என்பது எனக்குத் தெரியாது. எங்கே போவேன் என்று தெரியாது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட ஒரு வாழ்க்கை எனக்குத் தரப் பட்டிருக்கிறது. இதில் எப்படி வாழ்வது என்பதும் தெரியாது. எனக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அதைக்கொண்டு நான் ஏன் பிறந்தேன்? எனது பிறப்பின் நோக்கம் என்ன? என்றெல்லாம் யோசிக்கும்போது அது இறைவனிடம் என்னைக் கொண்டு சேர்க்கிறது.

இறைவன் இல்லை என்று சொல்வதுதான் பகுத்தறிவுக் கொள்கையாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது அது அடிபட்டுப் போய்விட்டது. இந்தக் கணனி யுகத்தில் இறைவன் இருக்கிறான் என்பதற்குக் கோடிக்கணக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஒருவரது மூளையின் செயல்திறன் பத்தாயிரம் கோடி கம்ப்யூட்டர் இணைப்பிற்குச் சமமானது. இப்படி ஒன்றைப் படைத்தது யார்? எந்த மட்டத்திலிருந்து நீ ஆராய் கின்றாயோ அந்த அளவிற்கு உனது பகுத்தறிவு வேலை செய்யும். உலகத்திலுள்ள அனைத்து மக்களையும் அணைத்துச் செல்வதுதான் கம்யூனிசக் கொள்கை. ஆனால் அது மனிதனுக்கு மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் தங்களைப் பகுத்தறி வாளர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். அது பகுத்தறிவு அல்ல.

எல்லோருக்கும் உள்ளே இருக்கின்ற மூல சக்தியைத் ‘தத்வமஸி’ என்று வேதாந்தம் சொல்கின்றது. நீ அதுவாக ஆகலாம் என்பதன் பொருள் நீ பிறந்தபோது எப்படி மலர்ந்து இருந்தாயோ அதுவாக இப்போது நீ ஆகலாம் என்பதாகும். ஏனெனில் உனது வளர்ச்சி அல்லது முயற்சி எல்லாம் நீ மனதில் சேர்த்து வைத்திருப்பவை. மனதில் எதையெல்லாம் கொண்டிருக்கிறாயோ அவைதான் உன் முயற்சி அல்லது வளர்ச்சி என்று சமூகம் சொல்லும் அல்லது நிராகரிக்கும்.

அதுவாகவே நீ ஆகின்றாய்! நீதான் அது! என்பவையெல்லாம் தத்வமஸி என்ற சொற்றொடரின் விளக்கம். மனித ஆராய்ச்சியின்படி ஏதோ ஒன்றில் பெரு வெடிப்பு (big bang) ஏற்பட்டு அதிலிருந்து எல்லாம் பல்கிப்பெருகி விரிந்தன என்று சொல்கின்றனர். அதற்குமுன் என்ன இருந்தது என்பதை விஞ்ஞான ஆராய்ச்சிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதையே தோற்றமாக வைத்துக் கொண்டு பார்த்தாலும் அது ஏன் வெடித்தது? என்பதற்குப் பதிலில்லை. அந்த ஆற்றலைத் தான் நாம் இறைசக்தி என்று கூறுகிறோம். அதுதான் நானா கவும் இருக்கிறது என்பதை உணர்த்துகின்ற வேதவாக்கியம் தத்வமஸி.

ஆழ்ந்த நித்திரை கொள்வதன் அளவிற்கு உங்களது ஆழ்ந்த தியானம், முக்திநிலை போன்றவை சித்திக்கும். உடல் பற்றிய நினைவே இல்லாத செத்துப்போன நிலை என்று சொல்வதைப்போல ஆழ்ந்த நித்திரை அமைய வேண்டும். அந்த அளவிற்குக் கோடானகோடி வருடங்களாக உங்களுக் குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பதிவுகள், மனிதக் குப்பைகள் எல்லாம் உங்களுக்கு ஆழ்ந்த நித்திரை வர விடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. ஆழ்தியானம் பழகப்பழக ஆழ்ந்த நித்திரையும் வரும். நிகழ்வில் உணர முடியாததை நித்திரையில் உணரலாம். நித்திரை எனது ஆழ்ந்த அமைதியைக் குறிக்கின்றது.

என்னில் நினைவாக நிற்கின்ற எண்ணங்கள், நிறைவேறாத எண்ணங்கள். அவற்றை ஞானத்தாலும் தியானத்தாலும் இல்லாமற் செய்து கொண்டு வருகின்றேன். மனதை வெறுமை ஆக்குகிறேன். மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவை இல்லை என்று திருமூலர் சொன்னார். அந்த மனதைத்தான் நாம் செம்மைப்படுத்தி வருகிறோம். மனதை இயங்கவிடாமல் செய்ய வேண்டும். எனது தேவைக்கு என்றால் கூட மனம் ஞாபகப்படுத்தி உதவி செய்ய முடியாத ஒரு நிலைக்கு வரவேண்டும். இது தோல்வியல்ல; வெற்றி. மனம் செயல்படா நிலை வெற்றி. ஆழமான தியானமும் ஆழமான பயிற்சியும் செய்பவர்களுக்குத்தான் மனம் மறைந்து போகும். மனம் மறைந்து போனால் அந்த இடம் வெற்றிடமில்லை. அந்த இடம் முழுவதும் தெய்வீக சக்தி நிரம்பியிருக்கும். தேவாத்ம சக்தி அது. எண்ணமில்லாத நிலையில் நானும் இறைவனும் ஒன்று.

எண்ணமென்பது அபிப்பிராயத்தில் இருந்தும் வரலாம். எனது அபிப்பிராயம் எதையாவது ஒன்றைப்பற்றி முழுமையாக இருக்கிறதா என்றால் இல்லை. யாருடைய கருத்தையோ நாம் வைத்திருக்கிறோம். பிறரது கருத்துக்களோ கண்டு பிடிப்புக் களோ இனி எனக்குத் தேவையில்லை. தேவாரம், திருவாசகம் எல்லாம் அவர்களுடையவை. அவர்களது அந்த அனுபவங்கள் எனக்கு வேண்டாம். எனக்குத் தேவை என்னுடைய அனுபவங்கள். எனது கருத்துக்கள் சரியானவை தானா என்பதை அறிவதற்கு அளவுகோல் எனது ஆத்மா. என்னுடைய ஆத்மா எனது அபிப்பிராயங்களைக் கவனித்து சரி பிழை சொல்லும். முன்பு மனம் மற்றவரின் கருத்துக் களைத் தனதாக்கிக்காட்டியது. இப்போது ஒரு கருத்துமில்லை; நான் அவனோடு இருக்கிறேன். அவன்தான் சொல்கிறான். நான் அதன்படி செய்கிறேன். இதில் குழப்பம் வந்தால் தோஷம்.

உன்னுடைய ஆத்மாவிலிருந்து உனக்கு வெளிப்பட்ட ஒளிதான் உனது தெய்வம். உங்களது உயிராகிய ஆத்மாவில் இருந்து நீங்கள் பெறுகின்ற அனுபவம்தான் உங்களது தெய்வீக அனுபவம். உங்களது செயலின் வெளிப்பாட்டிலும் இறைசக்தி, இறை சேவையாக வெளிப்பட வேண்டும். எனக்கு ஏற்படும் அளவிட முடியாத அமைதிதான் இதனால் விளையும் நன்மை. எனது அமைதியைக் குலைக்கும் விதமாக என்னை நோக்கி எதுவும் வருவதில்லை. அமைதி என்பது என்வாழ்வின் வெற்றி.

நானும் அவனும் ஒன்று. எனக்கு என்ன ஏற்பட்டாலும் அவை எனக்கு ஏற்பட்டதல்ல; அவனுக்கு ஏற்பட்டது. தோல்வி என்று சொல்லப்படுவதுகூட ஒத்திப்போடப்பட்ட வெற்றி. எனவே தோல்வி என்பதே இல்லை. எனக்கு இந்த வாழ்க்கையில் எதுவும் ஒரு பொருட்டல்ல. ஏனெனில் நான் முக்தியை நோக்கமாகக் கொண்டு முயன்று கொண்டிருக்கிறேன். இந்தப் பிறப்பில் நான் முக்தியடைந்தேன் எனில் அது எனக்கு வெற்றியேயன்றித் தோல்வியல்ல. ஏன் பிறந்தோம்? எங்கே போகிறோம்? சமுதாய ரிதியாக வாழ்க்கை, அனுபவங்களைச் சுமக்கச் செய்கிறது. அதிலிருந்து நான் பெற்றவை நாலைந்து பிள்ளைகளும் நானூறு பிரச்சனைகளும் அவ்வளவுதான். உலகத்தை நம்பி ஓடுகின்றவரை தலைகீழாய் விழவேண்டி வரும். ஆத்ம சக்தியை அண்டியிருந்து வாழ்ந்தால் அந்த வீழ்ச்சியில்லை. சமுதாயம் மதிப்பவை எல்லாம் உண்மை யான மதிப்புடையவை அல்ல. உலகம் போலித்தனமானது.

நாம் பெற்ற அறிவுடன் உலகச் சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டும். ஆத்ம ஞானத்துடன் சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் சூழ்நிலைகள் நாம் பெற்ற அறிவை இழந்து விடும்படி செய்கின்றன. சூழ்நிலைகள் ஆத்ம அறி வின்படி செயல்பட வேண்டும். ஆனால் சூழ்நிலைகள் மாறாக அமைகின்றன. ஏனென்றால் அறிவு உணர்வாகாத நிலை. உணர்வு செயல்படுகின்ற நேரத்தில் சூழ்நிலைகள் அறிவை இழக்கச் செய்கின்றன. அறிவுடன் சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டும். சூழ்நிலைகள் அறிவை நம்மிடமிருந்து பிரித்து விடுகின்றன.

தியான காலத்தில் கற்பனையான சூழ்நிலைகளை பாவனை செய்கின்றோம். இந்தப் பயிற்சி உண்மையான சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது அறிவை இழக்காமல் இருக்கச் செய்யும். அந்த நிலைகளில் வேதாந்தியாகச் செயல்படத் தெரிய வேண்டும். ஒரு வெளிச் சூழ்நிலையைக் கற்பனை செய்வோம். என்னை முழுமையாக ஏற்றுக் கொள்பவர் என்னுள் இருக்கிறார். என்னை முழுமையாக அன்பு செய்பவர் என்னுள் இருக்கிறார். என்னை ஏற்றுக்கொள்ளாதவா;, குறைகளைப் பார்ப்பவர், நிராகரிக்கின்ற ஒருவரும் என்னுள் இருக்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர், ஏற்றுக் கொள்ளா தவர் இருவரையும் பார்க்கின்றேன். ஏற்றுக் கொள்பவரிடம் எனக்கு வருகின்ற உணர்வைக் கவனிக்கின்றேன். ஏற்றுக் கொள்ளாதவரின் உணர்வையும் கவனிக்கின்றேன். யாரிடம் உள்ள உணர்வு எந்தவிதமானது என்பதையும் கவனிக் கின்றேன். என் எந்த உணர்வினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்பதைச் சிந்திக்கிறேன். அதில் உண்மை விளங்கு கிறது. என்னை ஏற்றுக்கொள்பவரிடமிருந்து நான் கொள்ளும் உணர்வே என்னை மகிழ்வைப் பெற வைக்கிறது. அதேபோல் என்னைத் துயரத்தில் ஆழ்த்துவது அவருடைய ஏற்றுக் கொள்ளாமையல்ல. அவரிடம் எனக்குத் தோன்றும் உணர்வு களே. நான் அந்த என் துயர உணர்வுகளை மாற்ற வேண்டும்.

எனக்குள் என்னை ஏற்றுக்கொள்பவரும் இருக்கின்றார்; ஏற்றுக் கொள்ளாதவரும் இருக்கின்றார். நான் என்னை ஏற்றுக் கொள்ளாதவரை வெறுக்கின்றேன். ஏற்றுக்கொள்பவரை அணைக்கின்றேன். ஆனால் இவை சரியல்ல. துயரத்தின்மீது எனக்குள்ள உணர்வுகளை நான் மாற்றிக்கொள்ள வேண்டும். நான் துயரத்திலிருந்து மீள என் உணர்வுகளை மாற்ற வேண்டும். சிலர் நம்மை மதிக்கிறார்கள்; புகழ்கிறார்கள். சிலர் நம்மை மதிப்பதில்லை; இகழ்கிறார்கள்.

இவற்றில் எது உண்மை? இதில் ஒரு ரகசியம் இருக்கிறது. உண்மையில் நம்மை அவர்கள் மதிப்பதுமில்லை; இகழ்வது மில்லை. நம்மைப்பற்றிச் சிலர் சில முடிவுகளைச் செய்துள் ளார்கள். என்னைப் பற்றி சில தீர்மானங்கள் செய்துள் ளார்கள். தீர்ப்பு அவர்கள் செய்த அந்த முடிவுதான். அந்த முடிவைத்தான் அவர்கள் மதிக்கிறார்கள்; இகழ்கிறார்கள். அந்த நான் அவர்கள் மனத்திலிருக்கின்ற நான். உண்மையில் நானல்;ல. நானாகிய நான் வேறு; அவர்கள் மனத்திலிருக்கும் நான் வேறு. அவர்கள் இகழ்வது அவர்கள் மனதிலுள்ள நான். அது சரியாக அல்லது பிழையாக இருக்கலாம். அது அவரவர் முடிவைப் பொறுத்தது. யாரும் நானாகிய என்னை மதிப்பதில்லை; யாரும் என்னை இகழ்வதுமில்லை.

ஒருவரைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கின்ற அபிப்பிராயம் முன்பு நீங்கள் கொண்டிருந்த அபிப்பிராயமா? இப்போது புதிதாக ஏற்பட்டிருக்கின்ற அபிப்பிராயமா? உங்கள் குடும்ப அங்கத்தவர்களைப் பற்றிய உங்கள் கருத்து பழைய விதத்திலேயே இருக்கிறதா? இப்போது மாறியிருக்கின்றதா? முன்பு விருப்பு வெறுப்புக்களின் வழியாகப் பார்த்தீர்கள். இப்போது ஆன்மீகப் பார்வையில் பார்க்கிறபோது முன் கூறியவை நீங்கி நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. குற்றம் குறைகள் தெரியாத அல்லது பார்க்காத உயர்ந்த நிலை இது. இது உங்களில் ஏற்பட வேண்டிய பார்வை மாற்றம்.

ஒன்றைப் பற்றிய உங்களது கருத்து ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக இருக்க வேண்டும். பழைய பார்வையை மாற்றி இன்றைய மன உயர்விற்குத் தக்கபடி நீங்கள் பிறரை அணுக வேண்டும். அவர்களும் நான்தான் என்று பார்த்து அதன்படி அவர்களை நடத்த வேண்டும். நானாகிய என்னை அவர்கள் மதிப்பதுமில்லை; இகழ்வதுமில்லை. அவர்கள் தங்களுக்குள் வைத்து இருக்கும் என்னைப் புகழ்கிறார்கள்; இகழ்கிறார்கள். உண்மை இப்படி இருக்கும்போது யார்யாரைக் கோபப்படுவது? உன்னை அவன் அப்படிச் சொன்னானப்பா! என்று ஒருவர் சொன்னால் அவன் என்னைச் சொல்லவில்லை; அவனுக்குள் இருக்கும் என்னை அப்படிச் சொல்லியிருக்கிறான் என்பதுதான் என் பதிலாக இருக்க வேண்டும். உண்மையான தன்னை அவரவர்தான் அறிய முடியும். பிறரால் அறிய இயலாது. பிறர் என்னைப் பற்றித் தான் வைத்திருக்கின்ற பழைய அபிப்பிராயத்தைத்தான் இப்போதும் சொல்வான். நான் புதிதாக முளைத்திருப்பது அவர்களுக்குத் தெரியாது.

இப்போது நான் எவரிடம் பழகி வருகின்றேனோ அவர்களால் பாதிக்கப்படுகின்றேன்; அவர்களால் துயரப்படுகின்றேன். இந்தத் துயரத்திலிருந்து விடுபட ஒரு கற்பனை. யார் மூலமாக நாம் துயரப்படுகிறோமோ அவர்கள் பத்து பன்னிரெண்டு வருடங் களுக்குமுன் எப்படி இருந்தார்களென்பதை இப்போது நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் இன்னும் பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு எப்படி இருப்பார்கள் என்று நினைத்துப் பார்ப்போம். நம்மைத் துயரப்படுத்துபவர் அறுபது வயதில் இருக்கிறார். அவர் இன்னும் சில வருடங்களுக்குப்பின் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்தால் அக்கற்பனை அவர்கள்மீது அனுதாபத்தையும் அன்பையும் ஏற்படுத்தும். தனது உயர்வு மனப்பான்மை, ஈகோ, செல்வச் செருக்கு, ஆரோக்கியம் போன்றவை அப்போது அவரிடம் இருப்பதில்லை. இக்கற்பனையின் மூலம் கருணையை உருவாக்கி இப்போதே ஏன் அவரிடம் அக் கருணையைக் காட்டக்கூடாது என்று சிந்திக்க வேண்டும். அவர் எண்பது வயதில் இருப்பதாக நினைத்து அவரிடம் கருணையை உருவாக்கி இப்போதே காட்ட வேண்டும் என்று சிந்தித்துத் தியானிக்க வேண்டும்.

எந்தக் கட்டத்திலும் கருணை மறையக்கூடாது. ஏனென்றால் கருணைதான் தெய்வீகம் தவழ்ந்து வரக்கூடிய இலகுவான வழி. எல்லோரையுமே கருணையுடன் பார்க்க வேண்டும். கருணை என்னில் இல்லாவிட்டால் கடவுள் தன்மை வராது. நமக்கு வெளியே உள்ள சூழ்நிலைகள் நம்மைப் பாதிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய சிந்தனையைப் பயிற்சி செய்து வருகின்றோம். நாம் எவருடன் பழகுகிறோமோ அவர்களை ஐந்து வயதுக் குழந்தையாகவோ 90 வயதுக்கு மேலான தளர்ந்த முதியவராகவோ கற்பனை செய்து பார்ப்போம். அக்கற்பனையுடன் அவரைப்பார்க்கும் போது அவரது நடத்தை, சொற்கள் நம்மைப் பாதிக்காது.

இவ்வாக்கியத்தைச் சிந்திப்போம். இவ்வுலகத்தில் உள்ள அனைவரும் குழந்தைகள் அல்லது முதியவர்கள் என்று சிந்தித்து அமர்ந்திருப்போம். குழந்தைகளின் பிடிவாதம், முதிர்ந்தவர்களின் பிடிவாதம், அறியாமை, இயலாமைகளின் விளைவு இவைகளை இப்போது நாம் உணரும்போது நம்மனம் பாதிப்புக்கு உட்படுவதில்லை. இவ்விதம் பிறரின் தன்மையையும் அவர்களின் நிலைமையையும் சிந்தித்துத் தெளிவாகப் புரிந்து கொண்டு அவர்களிடம் நாம் பழகத் துவங்குகின்றபோது முதலில் இருவருக்குமிடையே ஓர் அமைதி அலை உருவாகின்றது. அவர்களை நாம் சகித்துக் கொள்ள முயல்வதால் நம்மிடம் வெறுப்பும் எதிர்ப்பும் எழுவ தில்லை. அவர்கள் செய்கின்ற வேண்டாதவைகளைக் கூட ஏற்றுக்கொள்ள முற்படுகின்றோம். எதிர்ப்பு எழாத நிலையில் சகித்துக் கொள்வதால் நம் அமைதி கெடுவதில்லை. அதே நேரம் கர்மாவும் கழிகின்றது. இதுதான் நமது ஆன்ம முன்னேற்றத்திற்கான முயற்சி.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *