ஒருவரது எண்ணப் போக்கை (உபதேசத்தால் பெற்ற) ஞானம் மாற்றுகின்றது

மனித மனதில் தோன்றுகின்ற எண்ணங்கள் மூளையில் இருந்து வருகின்றன. இந்த எண்ணங்கள் மூளையில் இருந்து வரும்போது நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்ற இரண்டாகப் பிரிகின்றன. இப்படி இரண்டாகப் பிரிவதைப் பார்த்து நல்லது கெட்டதைத் தீர்மானிப்பது இன்னொரு எண்ணம். அந்த எண்ணம் என்பது என்ன? அது எங்கே இருந்து வருகிறது? எப்படித் தீர்மானிக்கிறது என்றால் அதற்குப் பதிலில்லை. ஒவ்வொரு மரபணுவினுள் எது படிந்திருக்கிறதோ அதற்கு அந்த சக்திக்குத் தூண்டலைக் கொடுப்பது உயிர்ச்சக்தியான பிரம்மம். அந்தப் பிரம்மம்தான் அவரவர் கர்மப் பின்னணிக்கு ஏற்றபடி எண்ணங்களைத் தீர்மானிக்கிறது என்பதே உண்மை.

உபநிஷத் என்பது கேள்வி; அதற்குப் பதில்; அந்தப் பதிலில் இருந்து அடுத்த கேள்வி என குருவிற்கும் சிஷ்யனுக்கும் இடையே நடைபெறுகின்ற உரையாடல்களால்தான் தொகுக் கப்பட்டிருக்கின்றது. உபநிஷத் என்றாலே குருவின் அருகில் மாணவன் அமர்ந்து ஞானத்தைப் பெறல் என்பதே ஆகும். அதன்மூலம் சத்தியத்தை அடைதல். நீயே ஞானம் என்றால் நீ சத்தியம். மறைந்திருக்கும் அந்த அறிவைத் தெளிய வைத்தல்தான் ஞானம். பொருள் அடிப்படையில் அமைந்தது இந்த உலகம். பொருளுக்கு அடியில் ஆற்றல் இருக்கிறது என்கிறது விஞ்ஞானம். நீங்களோ அதையும் தாண்டி ஒவ்வொரு படைப்புமே மூலத்தில் தங்கி இருக்கிறது. இந்த மூலம் என்பது பிரம்மம். எது எல்லையற்றதோ, எது எல்லா வற்றையும் செய்விக்கிறதோ, எது எல்லாவற்றையும் செய்கின்றதோ அந்த முழுப் பிரம்மம் இந்த உலகமுமாக இருக்கிறது என்பதுவரை இப்போது அறிந்திருக்கிறீர்கள்.

பிரம்மம் உயிரைக் கொடுக்கிறது. அந்த உயிர்கள் பலவாகப் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் மனித குலத்தைப் பொறுத்தவரை பிரம்மத்தை மீண்டும் அடைவதுதான் சரியான போக்கு. அதில்தான் நிம்மதியும் சந்தோஷமும் அடங்கி இருக்கின்றன. நாம் நமது வாழ்க்கையில் நடப்பவற்றைக் கொண்டு சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம் என்று சந்தர்ப்பத் திற்கு ஏற்றபடி பாவிக்கிறோம். ஆனால் நமக்குள் பூரணமான ஆனந்தம்தான் எப்போதும் இருக்கிறது. அந்த ஆனந்தத்தைப் பூரணமாக அடைகின்றவரை இந்த உலக இன்பங்கள்தான் மகிழ்ச்சி, சந்தோஷத்தைத் தருவதாக நினைக்கிறோம்.

என்னில்தான் அது (பிரம்மம்) இருக்கிறது. அதில்தான் நான் இருக்கிறேன். எனது கர்மா எனது மரபணுக்களின் உள்ளே இருந்து கொண்டு வழிகாட்டுகிறது. நல்லதோ கெட்டதோ எது என்றாலும் முயற்சி என்ற பெயரில் என்னை வாட்டி எடுக்கிறது. இப்படிச் செய்கின்றபோது எனது கர்மா கழிகின்றது. மேலும் கர்மா ஏறாமல் இருக்கவும் ஒருவன் உண்மையில் தான் பிரம்ம நிலையை அடையவேண்டும் என்றாலும் வேதாந்தத்தை அறிந்தால் மட்டும்தான் அது முடியும். இப்படி வேதாந்தத்தின் மூலம் வாழ்க்கை பற்றிய உண்மைகளை நீங்கள் அறிந்து வருவதால் தற்போது உங்களின் வாழும்முறை சரியான மனிதர்களாக அதிகப் பிழை செய்யாமல் வாழ்கின்ற மனிதர்களாக உங்களை ஆக்கி இருக்கிறது அல்லவா. பிரம்மத்தின் விருப்பம் இல்லாமல் உங்களால் இங்கு வந்திருக்க முடியாது.

உங்களை இந்த விதத்தில் மாற்றி உயர்த்திக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக என்னையும் உங்களுக்கு ஏற்ற விதத்தில் தயார் செய்து வடிவமைத்ததும் பிரம்மம்தான். எனது கடந்த கால வாழ்க்கையை பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். எனக்கு ஏராளமான திருப்பங்களைத் தந்து ஆசீர்வாதங்களை அள்ளிக் கொட்டியது. இந்த அற்புதப் பணிக்கு மீண்டும் பிறவாமை என்னும் உயரிய பலனும் உண்டு. நான் சொல்கின்ற உண்மைகளைச் சரிதான் என்று உங்களை ஏற்றுக்கொள்ள வைத்துத் தொடர்ந்து இங்கு வரச் செய்ததும் பிரம்மத்தின் செயலே.

ஞானம்தான் இறைவன். பக்தியோகம் என்றால் மனம் உருகி அழலாம். அவனருளை வேண்டலாம். ஆனால் மரபணுக்களில் உள்ள பதிவுகள் அழுவதால் போகாது. ஞானத்தால் மட்டும் தான் நீ பிரம்மம் ஆகலாம். இதனைத் தொடர்ந்து பயிற்சி செய்வதனால் அந்தப் பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கக் கூடும். அவனது அருளால் உங்களது சக்தி முழுவதும் ஒன்றுபடுத்தித் தியானத்தில் அவனை நோக்கிச் செலுத்துகிறீர்கள். தொடர்ந்து முயற்சி செய்கிறீர்கள். அதற்குப் பலன் உண்டு. விஞ்ஞான ரிதியாக இறைவன் இல்லை என்று சொல்ல முடியாது. விஞ்ஞான ரிதியாக மனதை ஒன்றுபடுத்து வதால் ஏற்படுகின்ற சக்தியை நிராகரிக்க முடியாது. விஞ்ஞான ரிதியாக ஒரே ஒரு பிறப்புத்தான் என்பது உண்மை அல்ல என்பதை நிரூபிக்கலாம். மத இலக்கியங்கள் இதை ஏற்றிருக்கின்றன.

பல பிறப்புக்கள் எடுத்ததால்தானே இந்த ஆன்மீக உணர்வு வந்தது உங்களுக்கு? உங்களது செயற்பாட்டைப் பொறுத்து உங்களின் இந்த ஞான அறிவு ஞானமாக மாறவேண்டும். இப்போது யாரைப் பார்த்தாலும் அவர்களை வேறாக நினைக்காமல் அவரும் நானும் ஒன்று என்று நினைக்கிறீர் களா? யாருக்கென்றாலும் தகுந்த சமயத்தில் உதவி செய்ய முன்செல்கிறீர்களா? அதில் எல்லைகள் ஏதும் இருக்கிறதா? பிரபஞ்ச அளவிற்கு உங்கள் மனம் விரிவதற்கு எல்லோரையும் தனதாக உணர்ந்து செயல்படுவதற்கு இவை போன்றவைதான் உதவி செய்யும்.

ஆன்மீகப் பயிற்சிக்குத் தேவையான பண்புகளை எடுத்து அவற்றைப்பற்றி நன்கு ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். நம்மிடம் உள்ள பண்புகளில் ஏராளமான விசத்தன்மைகள் கலந்திருக்கின்றன. அவற்றை நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும். மரபணுக்களில் இப்படிக் கெட்ட பண்புகள் படிந் திருந்தாலும் தெளிந்த அறிவு ஊட்டப்படும்போது மூளை அவற்றைச் சுத்தப்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்ற னர். மரபணு ஞானத்தால் திருத்தி வடிவமைக்கப் படுகிறது. ஏனெனில் பல பிறப்புக்களில் மரபணுக்கள் பிடித்து வைத்திருந்த பதிவுகள்தான் இந்தப் பிறப்பின் வாழ்க்கையாகத் தொடங்கின. மரபணுக்களில் உள்ள ஜீன்களில் உள்ள பதிவுகளும் அவரவர் வளர்கின்ற சூழ்நிலைகளின் கலவையும் தான் நாங்களாக வாழ்ந்தோம். இப்படி உள்ள ஜீனையே மாற்றி அமைக்கின்ற கல்விதான் சாகாக்கல்வியான வேதாந்தம். இதைத் தற்போது நன்கு அறிந்துள்ள உங்களுக்கு இனி உங்களை மாற்றுகின்ற வேலை மட்டும்தான்; இருக்கிறது. வேதாந்தத்தின் சாராம்சத்தைக் கரைத்துக் குடித்துவிட்ட நீங்கள் இனி கற்றவற்றைப் பயிற்சியாக எடுத்து வாழ்க்கை யின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்படுத்தி அனுபவித்தால் தான், செயல் முறைக்குக் கொண்டுவந்தால்தான் உங்கள் ஞானம் முழுமைபெறும். அப்போதுதான் உங்களது மரபணுக் களில் உள்ள ஜீன்ஸ் எடுக்கப்பட்டு புதிய ஞானத்தோடு கூடிய ஜீன்ஸ் பதியப்படும். அந்தப் பழைய மரபணுக்களைச் சுத்தப்படுத்தத்தான் நீங்கள் தியானத்தை மேற்கொள்கிறீர்கள். சமயக் கல்வியைப் பயின்று அதைப் பின்பற்றி வாழ்ந்தபோது இந்தத் தெளிவு உங்களுக்குக் கிடைத்திருக்காது. அதைத் தாண்டி மேம்பட்டு தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்களுக்குத் தான் இது கிடைக்கும். அரிதினும் அரிதான இக்கல்வி இனிவரும் பிறவிகளையே இல்லாமற் செய்துவிடக் கூடியது. அதற்கு அவன் அருள்தேவை.

உலக இன்பங்களை அனுபவிக்கச் செய்து அவற்றின் ஊடாக துன்ப துயர ஏமாற்றங்களையும் தந்து இப்படி ஏன் நடக்கின்றன என்று சிந்தித்திருப்பவர்களைத் திசை திருப்பித் தன்னை அறியவைத்து பேரின்பமாகிய பரசுகத்தை வழங்கு கின்றது அந்தப் பரம்பொருள். உங்களது கர்மாவையும் உங்களை மயக்குகின்ற மாயையின் தன்மையையும் புரிந்து கொண்டு தியானத்தில் புதிய இடத்திற்கு போகின்றபோது கிடைக்கின்ற சுகம் தொடர்ந்து உங்களில் இருக்கின்ற நிம்மதி போன்றவற்றை விபரிக்க இயலாது. பரம்பொருள், சிற்றின்பங் களாகிய உலக சுகங்களை வைத்தது இதைக்காட்டிலும் பெரிய சுகம் உனக்குள்ளேயே இருக்கிறது என்பதை நீ அறி வதற்காகத்தான் என்று நான் சில வேளைகளில் யோசித்திருக்கிறேன்.

“பிரம்மம் வாழ்க்கையின் இழைகளைக் குறுக்கு நெடுக்காக ஓடவிட்டு உருவாக்கி இருக்கிறது” என்று ஒரு உபநிஷதம் உரைக்கின்றது. இடியப்பச் சிக்கல்தான் வாழ்க்கை. பிரம்மத் தின் உதவியுடன் சென்றால்தான் சரியான வழி திறக்குமே யொழிய அது இல்லாமல் தனது மூளை, தனது முயற்சி என்று போனால் நடுவில் சிக்கி வெளியேறத் தெரியாமல் திணற வேண்டியதுதான். விஞ்ஞானத்தின்படி பார்த்தாலும் மின்சக்தியும் காந்த சக்தியும் எதிரும் புதிரு மாகத்தான் சுழன்று கொண்டிருக்கின்றன. அவை இரண்டும் சந்திக்கின்ற மையப் புள்ளி சிவலிங்கம் என்று குறிப்பிடப் படுகின்றது. விஞ்ஞானம் கூறி உள்ள உண்மை இது.

‘பிரஸ்தானத்ரயம்’ என்று குறிப்பிடப்படுகின்ற இந்து மதத்தின் மிகச்சிறந்த மூன்று முக்கிய வேதாந்த சாத்திரங்கள் ஆன பகவத்கீதை, உபநிஷதங்கள், பிரம்மசூத்திரம் உங்களுக்குத் தகுந்த விதத்தில் உபதேசிக்கப்பட்டு உங்களைத் தூய்மைப் படுத்தி ஆயிற்று. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மரபணு மாற்றத்தைத் தடுக்க இயலாது. தெய்வம் என்று ஒன்று இருக்கிறது. அதுவேறு நான்வேறு என்ற நிலையில் இருந்து அதுவே நான் என்றும் எல்லாமே அது என்றும் அறிந்து அதன் சூட்சும அமைப்பையும் புரிந்து மூலத்தை அறிந்து விட்டீர்கள். இப்போது உங்களுக்குப் படைப்பின் ரகசியம், பிறப்பின் ரகசியம் தெரிந்துவிட்டதா? ஓர் உயிர் பல உயிர்களாயின என்று விஞ்ஞானம் கூறுகின்றது. உயிரில் இருந்துதான் படைப்பு வந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இரும்பு ஏன் துருப்பிடிக்கிறது. சும்மா கிடக்கின்ற மரம் மக்கிப் போகின்றது. ஏன் வெட்டப் பட்ட மரம் மக்குகின்றது. உயிரில்லாததால்! என்ற பதில் ஞானம் ஆக இருக்கிறது.

இந்த ஞானப் பாதையில் நீங்கள் உயர்ந்து செல்லச் செல்ல மற்றவர்கள் உங்களை மதிக்கத் துவங்குவார்கள்; வணங்கு வார்கள். யார் என்ன செய்தாலென்ன, எல்லாமே அவனது ஆற்றலின் மகிமை. இறைவனின் விபூதி என்று அடங்கி இருக்கத் தெரிய வேண்டும். உறவுகளுடனும் சமுதாயத் துடனும் இப்போது நீங்கள் இந்நிலையில் தொடர்பு கொண்டு பழகும்போது நீங்கள் தற்சமயம் எந்த நிலையில் இருக்கிறீர் கள் என்பது தெரியவரும். உபநிஷதங்கள் தந்த பதிவுகள் எப்படி உங்களில் இருந்து வெளிப்படுகின்றன என்பதை முன்பு உங்களிடம் பழகிவந்த உறவுகளும் சுற்றமும் மிக நன்றாக உணர்வார்கள்.

நீங்கள் பெற்றுள்ள இந்தக் கல்வி அல்லது அனுபவம் மிக வலிமையான பதிவு பெற்றுவிட்டதொன்று. சிலவேளை உங்களில் சிலருக்கு இந்த சாகாக் கல்வி பெற்ற எனக்கு அசாதாரணமாக ஒன்றும் நடக்கவில்லையே என்ற எண்ணம் எழக்கூடும். அதிசயங்களை நாடுவதல்ல உங்கள் நோக்கம். பிறவியை இல்லாமல் செய்வதுதான் உங்கள் நோக்கம். பிறப்பின் நோக்கம் எப்போதுமே ஆனந்தமாய் இருப்பது என்னும் ரகசியத்தை அறிந்தாயிற்று. ஆனால் உலகத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும்தான் இருக்கிறதே தவிர ஆனந்தம் என்பது இல்லை. அவையும் வந்த விரைவில் போய்விடும். அந்த மகிழ்ச்சி, சந்தோஷத்தின் நிலைபெற்ற தன்மைதான் ஆனந்தம். அவனுடன் இணைந்திருக்கின்ற நிலைதான் ஆனந்தத்தைத் தரும். வேறு வெளி உலக விஷயங்கள் எதுவும் நிரந்தர ஆனந்தத்தைத் தராது. அந்த ஆனந்தத்திற்கு பூரண அமைதி தேவை. அந்தப் பூரண அமைதியை இந்தக் கல்வி உங்களுக்குத் தந்திருக்கிறது.

உங்களுக்கு என்று தனிப்பட்ட கடமைகள் இருக்கின்றன. அவற்றைச் செய்யலாம், செய்யாமல் விடலாம். அப்படிச் செய்யாமல் இருப்பதற்கு 24 மணி நேரமும் ஞானநிலையில் இருக்க வேண்டும். மனம் இயங்காமல் இருந்தாலும்கூட உடல் இயங்கத்தான் வேண்டும். முன்பு அர்த்தமின்றி ஈடுபட்டுக்கொண்டிருந்த பல உலக விவகாரங்களை இப்போது நீக்கி விட்ட நிலையில் தேவையானவற்றை மட்டுமே செய்து கொண்டு போகின்றபோது சிலருக்கு வாழ்க்கையில் பிடிப்பு போய்விட்டதுபோல் தோன்றும். ஆனால் அது உண்மை அல்ல, மனதின் விளையாட்டு. மனதைச் சுத்தப்படுத்தி ஆயிற்று. பண்புகளை அலசி ஆராய்ந்து இருக்கின்ற பண்புகளுக்கு மாறான பண்புகளை ஒவ்வொன்றாக விளங்கி எடுத்தாயிற்று. எனவே மூளையில் அந்தப் பகுதி இல்லை. மீதி உள்ள அழுக்குகளைத் தியானம் மூலம் அழிக்கிறோம். தியானம் என்பது இந்த உடலையும் உயிரையும் பிரித்துப் பார்த்தல்.

இப்படித் தியானம் செய்கின்றபோது தற்போது என்னிடம் என்னென்ன நற்பண்புகள் சிறந்திருக்கின்றன எந்தெந்த தீய பண்புகளை இன்னும் நீக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பண்புகளில் இலாப நஷ்டம் பார்க்க வேண்டாம். எல்லாமே நன்மை தருபவை. இந்தப் பாதையில் உங்களுக்கு எல்லாமே பெறுதலே தவிர இழப்பு ஒன்றும் இல்லை. இலாப நஷ்டம் பார்த்தீர்களானால் உலகத்திற்குப் போய்விடுவீர்கள். இந்த உபதேசங்களை இடையறாது கேட்டு மனதில் பதிப்பதே மிகப்பெரிய லாபம். நீங்கள் இப்போது கட்டுப்படுத்தக்கூடிய நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டாயிற்று. மதம் என்பது வரையறுக்கப்பட்ட நம்பிக்கைகளுக்கு உட் பட்டது. அதைத்தான் எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.

உங்களது முழுமையை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள். வாழ்க்கையின் நோக்கத்தை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதும் அடைய வேண்டிய இடம் எது என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் தற்போது அனுபவிக்கின்ற அமைதி அளவிட முடியாததாக எல்லையற்றதாக இருக்கிறது. ஆத்மாவை நோக்கிய பயணமும் ஆன்மீக வளர்ச்சியும்தான் ஜீவனுடைய இலட்சியமாக இருக்கிறது. ஆனந்தம் நிரம்பிய தொடர் வாழ்க்கையையே மனம் விழைகிறது. நானல்லாத நான் வைத்திருக்கின்ற எல்லாம் இந்நிலையில் என்னில் இருந்து விலகிச் செல்கின்றன.

நமது உடலை எவ்வளவு நவீன உபகரணங்களைக்கொண்டு ஆராய்ந்து பார்த்தாலும் னுNயு ஐயே ஊடுருவித் தேடினாலும் நான் யார்? என்று கண்டு பிடிக்க இயலாது. அதாவது நான் ஆத்மா என்பதை இந்த உடலைக் கொண்டு கண்டறிய முடியாது. ஆர்கானிசம் என்று எதை எடுத்து ஆராய்ந்தாலும் வாழ்க்கையின் ரகசியத்தை அறிய முடியாது.

இந்து மதம் மனித மனதை மானுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றது. நடராஜர் சிலையைக் கவனித்தால் அவரது ஒரு கரத்தில் மானைப் பிடித்திருப்பார். ஒரு கையில் நெருப்பு, ஒரு கையில் உடுக்கை, ஒரு கையில் மான். அவர் ஏன் மானைப் பிடித்திருக்கிறார்? மான் சிறிய சலசலப்புக்கும் பயப்படும். மான் என்பது சலனம். மான் ஒரு வினாடி கூட அமைதியாக இருக்காது. ஆடிக்கொண்டே இருக்கும். ஓடும். மான்மாதிரி ஓடுகின்ற மனதை, எதற்கெடுத்தாலும் பயப்படுகின்ற மனதை, சதா சலனப்படுகின்ற மனதை கட்டுப்படுத்திப் பிடித்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் பிரபஞ்ச நடனத் தோற்றத்தில் நடராஜர் மானாகிய மனதைக் கரத்தில் பிடித்திருக்கிறார்.

அமைதியாய் இருக்கின்ற இறை மனதை பயம் உடைத்து விடும். சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். ஆனால் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற நீங்கள் மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மனம் போன போக்கிற்கு நீங்கள் ஓடக்கூடாது. பெண்கள்தான் மன தோடு சிக்கி ஓடித்திரிபவர்கள். மனக்கட்டுப்பாடு எவ்வளவோ விதத்தில் எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது.

நம்முடைய பயத்திற்கு எவை காரணம் என்று நினைக்கிறோமோ அவை காரணங்கள் அல்ல. குழந்தைப் பருவத்தில் எவற்றிற்குப் பயப்பட்டோமோ அவற்றிற்கு இப்போது பயம் இல்லை. இன்று நாம் பயப்படுபவை சில காலத்திற்குப் பிறகு பயப்படுத்தாது. இவை இல்லாம் கற்பனை, அறியாமை, தியான நேரத்தில் எவற்றைப் பயக் காரணமாக நினைக்கின் றோமோ அவற்றைக் கண்முன் நிறுத்தி அனுபவிக்கும்போது இவை பயக் காரணம் இல்லை என்பதைச் சிந்திக்க வேண்டும். மனதில் பதிப்பதுதான் தியானிப்பது. இப்போது எவை பயப்படுத்துகின்றனவோ அவற்றை மனதிற்குக் கொண்டு வருவோம். அவை பயத்தின் காரணம் அல்ல என்று தியானித்து அமர்ந்திருப்போம்.

ஒரு சூழ்நிலை, சில மனிதர்கள், சில பொருட்கள் பயக் காரணமாகத் தெரியலாம். அந்தச் சூழ்நிலைகளை, மனிதர்களைப் பயக் காரணமாகக் காட்டியது நம் மனம். மரணம் உட்பட எந்தச் சூழ்நிலைக்கும் நம்மைப் பயப்படுத்தும் சக்தி இல்லை. பயத்திற்குக் காரணம் நம்மனம். நம்மைக் கண்டு தான் நாம் பயந்து கொண்டிருக்கிறோம். நமது மனதில் தோன்றும் பயத்திற்குப் பல காரணங்கள் இருப்பதாகத் தோன்றினாலும் எல்லாப் பயமும் துயரத்தை அனுபவிக்க வேண்டுமே என்பதாகத்தான் இருக்கும். கஷ்டம், துயரம் இவற்றைக் குறிப்பதே பயம் என்பது நாம் உணர வேண்டிய உண்மை. நம்மால் எவ்வளவு துயரத்தைத் தாங்க முடியுமோ அனுபவிக்க முடியுமோ அவ்வளவு துயரத்தைத்தான் இறைவனோ இயற்கையோ தர முடியும். இது மிகப்பெரிய உண்மை.

இந்தத் துயரத்தை அந்தச் சமயத்தில் தாங்கக்கூடிய சக்தி தானாகவே வந்துவிடும். துயரத்தைக் குறித்த பயத்தை இந்த உண்மை நீக்கிவிடும். துயரத்தைக் குறித்து நான் பயப்படத் தேவையில்லை. என்னுடைய சக்திக்கு மீறிய துயரத்தை இறைவனாலும் கொடுக்க முடியாது. துயரம் வரும்முன் அதைச் சந்திக்கக்கூடிய சக்தியை இறைவன் கொடுத்து விடுகிறான். பயம் பழக்கத்தால் வந்துள்ளது. மெதுவாக நம்மிடமிருந்து அந்தப் பயம் அகன்றுவிடும். எதைக் குறித்து பயப்படுகிறோமோ அதை தியான காலத்தில் பார்த்து பயம் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். அறியாமையைத் தவிர வேறு பயம் காரணமில்லை. இறைவன் அபய சொரூபன். அதர்மம் பயத்திற்குக் காரணம். தர்மம் அபய காரணம். தர்மத்தைப் பின்பற்றினால் பயமின்மையை அடைவோம்.

அதர்மம் தைரியத்தை இழக்கச் செய்யும். தர்மத்தைப் பின் பற்றுகின்ற நிலையில் பயப்படுதல் தேவையற்றது. அதர்மத் தைக் கண்டு பயப்படுதல் நன்மையைத்தரும். தர்மத்தைக் கண்டு பயப்படுதல் பலனற்றது.

இறைவன் எனக்குள் இருக்கின்றான் என்ற உண்மையை அறிந்த பிறகு எனக்கு எதற்குப் பயம்? நாம் நற்பண்புகளைச் சாத்திரங்கள் மூலம் அறிகின்றோம். நமக்குள் இயற்கையாக சில பண்புகள் வருகின்றன. என்ன பண்புகளை வளர்க்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற அறிவு மட்டும் போதாது. நாம் அடைய வேண்டிய குணங்களைத் தவத்தின் மூலம், பயிற்சியின் மூலம் காலக் கிரமத்தில் அடைய வேண்டும். ஒருவிதமான பயிற்சி பண்புகளைத் தியானித்தல். சில பண்புகளை இப்போது எடுத்துத் தியானிப்போம். அவரவர்களுக்குத் தேவையான பண்பை எடுத்துத் தியானம் செய்யுங்கள். எடுத்துக் கொண்ட பண்பின் தன்மை, அதனால் விளையும் பயன், இல்லையானால் அதன் இழப்பு, பலன்கள் ஆகியவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்.

நாம் அடைய வேண்டிய பண்புகளை அறிந்தோம். பண்பு களை நம்வயமாக்கிக் கொள்ளச் சில பண்புகளைத் தியானித்துப் பழகினோம். பண்பின் தன்மை, அதன் நன்மை, அது இல்லையென்றால் விளையும் தீமை இவைகளை மீண்டும் மீண்டும் மனம் பார்க்கின்றபோது பண்புகளின் மதிப்பு உயர்கிறது. அதிக மதிப்பு கொடுக்கினறபோது உற்சாகம், ஊக்கம் தோன்றுகிறது. எதைத் தொடர்ந்து சிந்திக்கிறோமோ அது நம்முடைய குணமாக மாறுகிறது. அதன் அடிப்படையில் அமைதியான முறையில் தொடர்ந்து சிந்தித்தல் முக்கியமான தியானமாகிறது. இப்போது ஏதோ ஒரு பண்பை எடுத்து அது இருப்பதால் ஏற்படும் பலன், இல்லாவிடில் ஏற்படும் இழப்பு பற்றி சிந்தித்து அதையே தியானமாகச் செய்யுங்கள். பயமின்மை பற்றி இப்போது தியானிப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *