எல்லாமே அவன் தந்தது

நமக்குள் உயிராக இருக்கின்ற தெய்வீக சக்தியை நாம் புலனின்பங்களை அனுபவிப்பதற்காக எடுத்துச் செலவழித்துக் கொண்டிருப்பது தான் வாழ்க்கை. இதில் தன்னைப்பற்றி அறிந்தவர்களாய் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் மூச்சுப் பயிற்சி செய்வது வழக்கம். மூச்சைக் கட்டுப்படுத்து வதன் மூலம் சக்தியைச் சேமிக்க முடியும். மூச்சுப் பயிற்சி உடல் நலத்திற்கும் நல்லது. மூச்சு என்பது வடமொழியில் வாயு என்று சொல்லப்படுகின்றது. அந்த வாயுவிற்கு ஒரு வடிவம் கொடுத்து வாயுபுத்திரன் அனுமான் என்று வழிபடு கின்றனர். மார்கழிமாத அமாவாசையான இன்று அனுமான் ஜயந்தி. மூச்சைக் கட்டுப்படுத்துவது என்பது அனுமானை வணங்குவது ஆகும்.

நாம் இதுவரை அனுமான் என்பது ஒரு குரங்கு, அவரை மக்கள் பலத்திற்காக வழிபடுகிறார்கள் என்று நினைத்தோம். எல்லோருக்கும் உயிரைத் தந்து கொண்டிருக்கின்ற வாயுவை மேம்படுத்த வேண்டுமென்பதற்காகப் புராணத்தில் அப்படிச் சொன்னார்கள். அனுமான் சிவனுடைய பதினோராவது அவதாரம். மற்றவர்களால் செய்ய முடியாதவைகளை அவர் செய்தார். காற்று மற்றவற்றால் செய்ய முடியாதவற்றைச் செய்யும், புரட்டிப் போட்டுவிடும். அதேவேளையில் தென்றலாக வீசிக் குளுமைப்படுத்தும். இந்தக் காற்றிற்கு ஒரு சிறப்புக் கொடுத்து, வடிவம் கொடுத்து வழிபடுகின்றனர் இந்துக்கள். அனுமான் மலையைக் கையில் தூக்கிச் சென்றான் என்று புராணம் சொல்கிறது. சுனாமியில் காற்றின் வேகத்தை நேரடியாகக் கண்டவர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள்.

எவ்வளவு குறைந்த சுவாசத்தை நாம் விடுகிறோமோ அந்த அளவிற்கு ஆயுள் நீடிக்கும். எனவேதான் மூச்சுப் பயிற்சியை வலியுறுத்துகின்றனர். சிவன் அனுமானாக அவதாரம் எடுத்து ராமருக்கு உதவினார். திருமால் நந்தியாக உருவெடுத்து சிவனைத் தாங்கினார் என்றெல்லாம் புராணங்களில் வருகின்றன. சிவனுக்கும் நாராயணனுக்கும் பேதமில்லை என்று புரிந்து கொண்டவர்களுக்கு இதன் உட்பொருள் விளங்கும். இது புரியாதவர்கள்தான் சிவனுக்காகவும் விஷ்ணு விற்காகவும் தங்களுக்குள் சண்டை பிடித்துக் கொண்டிருக் கின்றனர்.

எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக சுவாசிக்கிறோமோ அந்த அளவிற்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். நாம் ஒரு நிமிடத்திற்கு 12 என்ற அளவிற்கு சுவாசம் விட வேண்டும். ஆனால் நாம் 18, 20 என்ற அளவிற்கு எடுக்கிறோம். மனம் எந்த அளவிற்கு ஆடி, அசைந்து ஓடுகிறதோ அந்த அளவிற்கு சுவாசமும் அதிகரிக்கும். மனம் அடங்க அடங்க சுவாசமும் 7, 8 என்ற அளவிற்குக் குறையும். பாம்பு 5 இலிருந்து 7 முறைதான் சுவாசிப்பதால் நீண்டகாலம் உயிர்வாழும். புலி அதிக சுவாசம் எடுப்பதால் 10 வருடங்களுக்குள் செத்துப் போகும். கெட்ட பழக்கங்கள் கொண்டிருப்பவர்களுக்கு சுவாசம் மிக அதிகமாக இருக்கும். யோகம் என்பது சுவாசத்தை மிகக் குறைக்கும். முறையாகத் தியானப் பயிற்சி செய்துவந்தால் சுவாசம் 3, 4 தரம்தான் இருக்கும். சுவாசம் குறையக் குறைய முகத்தில் தேஜஸ்கூடும். பதறாதவனுக்கு ரென்ஷன் இல்லாத வனுக்கு மூச்சு சீராக ஓடும். உயர்ந்த ஞானம் பெற வேண்டு மெனில் மூச்சு ஓட்டம் அமைதியாக நடைபெற வேண்டும். எதற்கும் பதட்டமடையாமல் நிதானமாக செயல்படுபவனுக்கு ஞானம் சித்திக்கும். அவனது கேள்வித்திறன் கூடும்.

உலகத்திற்கு எனது கவனம் என்ற சக்தியைச் செலுத்துகின்ற போது, உலக விஷயங்களில் நான் ஈடுபடுகின்றபோது எனது மூச்சு ஏற்ற இறக்கத்தை அடைகிறது. உலகத்தை விலக்கி நான் என்னுடன் இருக்கப் பயின்றால் மூச்சு நிதானமாக மெதுவாக இயங்கும். எதிலும் ஈடுபடாமல் என்னை வேறாகப் பார்க்கும் நிலையில் ஞானம் கூடும். ஞானம் உடையவர் களுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி அளவிட முடியாத அமைதியை அனுபவித்தல். அந்த நிலையில் சுவாசம் சீராக இருக்கும். இதுவரை நான் உபதேசித்தவற்றில் மிக முக்கியமாக வலியுறுத்தி வருபவை; தினமும் இரண்டு வேளை தியானப் பயிற்சி, எல்லாவற்றிலும் பரிபூரண அன்பைச் செலுத்துதல், உன்னால் செய்யக்கூடிய சேவையைச் செய்தல் ஆகியவை ஆகும். ஒவ்வொரு நாளும் இவற்றைத் தொடர்ந்து செய்துவர உலகத்தில் சமாதானம் ஏற்படும். அதோடு உன்னுடைய வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறும். என்னை ஒருமுகப்படுத்தி அமைதியடைதல் தியானம். எதனால் நாமெல்லாம் உருவாகியிருக்கிறோமோ அதனால்தான் மற்ற எல்லாம் உருவாகியிருக்கின்றன. காற்றுப் பரவுகின்ற இடம் எல்லாம் எனது அன்புக்குரியவை. ஏனெனில் மூச்சால் அனைத்துடனும் நான் தொடர்பு கொள்கிறேன். காற்றுப் பரவி இருப்பது போலத்தான் அன்பும் எங்கும் பரவியிருக்கிறது. அந்த அன்பை நான் உருவாக்கவில்லை. அன்பு என் இதயத்திலிருந்து ஊற்றெடுப்பது. இதில் முரண்பாடு ஏதும் ஏற்படாது. ஆனால் அன்பை மனதிற்குள் எடுத்து உனது மதிப்பிற்கும் சமுதாயம் தந்துள்ள மதிப்பிற்குமாகப் போட்டுப் பார்த்தால் அன்பின் பரிமாணத்தையே இழந்து விடுகிறாய். அன்பைப் பற்றிச் சமுதாயம் பிழையாகச் சொல்லி வைத்திருக்கிறது. அன்பென்று சொன்னால் குழந்தைமீது வைக்கின்ற அன்பு, பெண்ணிடம் கொள்கின்ற அன்பு, இவற்றைத் தவிர வேறெதையும் அன்பென்று சமுதாயம் கற்றுத் தரவில்லை. உண்மையில் அன்பென்பது நெருக்கம். பக்தி என்பதும் நெருக்கம். அன்பில் வெவ்வேறு உணர்ச்சிகள் கலக்கலாம். ஆனால் பக்தியில் தெய்வீக உணர்ச்சி மட்டும்தான் வெளிப்படும். அனுமானைப் பக்தியின் முழுமை யான வடிவமாகக் குறிப்பிடுகின்றனர். எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் ராம பக்தனாகச் சேவை புரிந்தான்.

இப்போது நான் இவற்றை விட்டு உங்களுக்கு நான் வழங்கிக் கொண்டிருக்கின்ற பாடத்திட்டத்திற்கு வருகிறேன். ஆன்மீகப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற நீங்கள் உங்கள் வளர்ச்சியை இடைவிடாமல் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்குள் ஒரு ஒளியுடல் சூட்சுமமாக இருக்கின்றது. அதேபோல் விரிந்த அண்டத்தில் இதன் மறு பகுதி எங்கோ ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஒளியுடலை வெளியிலெடுத்து அந்த மறுபாதியில் கொண்டு இணைக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிதான் இந்தப் பாடத்திட்டம். ஆனால் இது இலேசான காரியமல்ல. மிகப் பெரிய முயற்சி இதற்குத் தேவை. இருந்தாலும் உங்கள் தியானத்தில் உங்கள் ஆத்மாவின் நுண்ணிய ஒளிச்சிதறல்களையாவது தரிசித்து வருகிறீர்களா?

நீங்கள் மேற்கொண்டு வருகின்ற ஆன்மீகப் பயிற்சிகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற அளவிற்கு உயர்கின்ற னவா? அல்லது குறையுணர்வைத் தருகின்றனவா? குறை யாகத் தெரிகின்றதென்றால் உலகாயதம் அந்த அளவிற்கு உங்களை ஆட்கொண்டிருக்கிறது என்று பொருள். அப்படியெனில் அந்த உலகாயத ஈர்ப்பையும் ஆன்மீகக் கண்ணோட் டத்தில் அணுகிச் செய்ய முற்படுங்கள். ஏனென்றால் உலகாயதம் உங்களால் தவிர்க்கப்பட முடியாத ஒன்றென்ப தால் உங்களை அணுகுபவை எல்லாம் ஆத்மாவே என்றும் உங்களது கர்மாவோடு தொடர்பு கொண்டவை என்றும் உணர்ந்து செயல்படுங்கள். அப்படி இல்லாமல் உங்களைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டு மிதப்பாக நடந்தீர்கள் என்றால் கட்டாயம் அடிவிழும். கர்மாவினால் விழுகின்ற அடி என்றால் அதனை ஆன்மீக இதயம் ஏற்றுத் தாங்கும். அது தன்னை நிலைகுலையச் செய்ய விடாது. இப்படிப்பட்ட ஆன்மீக சக்தியை வளர்த்துப் பெருக்கிக் கொள்வது உங்கள் கடமை. இனி உங்களை நீங்களே ஆழமாகக் கவனித்துப் பரிணாம வளர்ச்சியில் முன்னேற வேண்டும். நான் தூண்டிக் கொண்டே இருக்க இயலாது. ஆன்மீகத்தின் உண்மைத் தன்மை உணரப்படும்போதுதான் சமுதாயத்திலிருந்து எடுத்துக் கொண்ட தேவையில்லாத சுமைகளை எல்லாம் நம்மிலிருந்து இறக்கி வைக்க முடியும்.

சமுதாயத்தில் உள்ள குறைகளைத் துணிவுடன் சுட்டிக் காட்டுபவனுக்கு எதிர்ப்புகள் அதிகம். எல்லா சமூக சீர்திருத்த வாதிகளுக்கும் சமுதாயம் நஞ்சு கொடுத்தது. ஒன்றிலிருந்து மேலே மற்றொன்றிற்குப் போகும்போது ஏற்படும் மாற்றத்தை உலகம் சுலபத்தில் ஏற்றுக் கொள்ளாது. வேதாந்தம் இந்த உண்மைகளை நியாயப்படுத்துவதால் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆன்மிகப் பயிற்சி மன வலிமையை ஏற்படுத்தும். ஆனால் அதில் முயற்சி அவசியம். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அணுப்பை கூறுகளால் உருவாகி உள்ளது. மூன்று அணுக்கள் கொண்டது அணுப்பை. இந்த அணுப்பை எல்லா இடங்களிலும் ஒளியாய் சிதறிக் கிடக்கிறது. இந்த அணுப்பை உமிழ்கின்ற ஒளியைப் பாருங்கள்! என்பதுதான் எனது உபதேசம்.

பால் பிரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவஞானி இந்தியாவில் உள்ள அனேக மகான்களையும் சந்தித்து உரையாடியவர். இந்துசமய ஞானிகளைப்பற்றி உலகிற்கு எடுத்துரைத்தவர் இவர். ரமணரின்மீது அளவற்ற மதிப்பும், பக்தியும் கொண்டவர். ரமணரிடம் ஆன்மீகம் சம்பந்தமான வினாக்களை இவர் எழுப்பியபோது ரமணர் எந்தவித பதிலும் சொல்லாத நிலையில் தானாகவே பால் பிரண்டன் மனதில் அவற்றிற்கான பதில்கள் வெளிப்பட்டனவாம். இந்த பால் பிரண்டன் கந்தா பாபா என்ற வடநாட்டில் வாழ்ந்த ஞானியைத் தரிசித்தார். அவரைச் சந்தித்த வேளையில் ரோஜாவின் மணம் அறையில் கமழ்ந்ததாம். கந்தம் என்றால் வாசனை. பூக்களைக் காண வில்லை, ஆனால் ரோஜாவின் மணம் வீசுகின்றதே! என்று அவர் கந்தா பாபாவிடம் வினவினாராம். முடிந்தால் கண்டுபிடி என்று அவர் கூறினார். அடுத்த நிமிடம் ரோஜாவிற்குப் பதில் மல்லிகை மலரின் மணம் வீசியது. இது என்ன கண்கட்டு வித்தையா என்று பால் பிராண்டன் கேட்க, பாபா, உனக்கு எந்தப் பூவின் மணம் வேண்டும் கேள்! என்று சொல்லி இருக்கிறார். இவரும் இந்தியாவிற்கு அறிமுகமில்லாத மக்னோலியா என்ற மலரின் மணம் இப்போது வீச வேண்டும் என்று கேட்க, அதே மலரின் மணத்தை வீசச் செய்தது மட்டுமன்றி அந்த மலரையும் பால் பிரண்டன் கைகளில் கொடுத்து அவரை வியக்க வைத்தாராம். அதில் என்ன ரகசியம்? எனக்குச் சொல்லக்கூடாதா? என்று பிரண்டன் கேட்டார். இதில் ரகசியம் ஒன்றுமில்லை, மனதிலுள்ள அனைத்தையும் நீக்கி விட்டால் அங்கு ஒளி நிறையும். அந்த ஒளியை மூலக்கூற்றுக்குள் உள்ள அணுவை மக்னோலியா வாக நினை. இதற்கு மிகச் சிறந்த தியானப் பயிற்சி வேண்டும். தொடர்ந்து தியானப் பயிற்சியை உண்மையாக மேற்கொண்டு மூலத்துடன் நீ இணைந்திருந்தால் மக்னோலியா உன் கைக்கு வரும். மணமும் வீசும் என்று சொன்னார். இப்போதே நீ மிகத் தூய்மையான மனநிலையிலிருந்து இந்த மலரை ஆழமாக நினைத்துப் பெயரை உச்சரி. உன் கைக்கும் மலர் வரும் என்று சொல்ல, பால் பிரண்டனும் அதே போல் உச்சரிக்க மலர் அவர் கைகளிலும் கிடைத்ததாம். மூன்று மூலக்கூறுகளான அணுக்களும் மக்னோலியாவாக மாறி வந்தன. மனம் வெறுமையாகித் தூய்மையடைந்தால் எதை எண்ணமாக நீ வைத்திருக்கிறாயோ அது உண்மையாகி நிறைவேறும்.

திரைப்படங்களில் காதலன் காதலி ஒருவரையொருவர் நினைக்கும்போது பார்க்கின்ற எல்லாமும் அவனாக, அவளாகக் காட்சியளிப்பதைப் போல் காட்டுவார்கள். அவர்களது சிந்தனையின் தீவிரம்தான் எல்லாம் அப்படித் தோற்றமளிக்கச் செய்கிறது. பக்தர்கள் பகவானைப் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பதாக உணர்வதும் இப்படித்தான். ஒருமித்த மனதுடன் ஒன்றை நினைத்தால் அப்படி நினைப்பது நிறைவேறும். இப்படி இந்த மனதை வெறுமையாக்குவதற் கும், திருகிக்கொண்டிருக்கின்ற மனதை நேராக நிமிர்த்து வதற்கும்தான் வைராக்கியம் முதலான நற்பண்புகளை மேற் கொள்ளப் பழக வேண்டும் என்று சொல்கிறேன்.

தீய பண்புகள் நம் மனதைத் திரித்து சூடாக்கி விடுகின்றன. கோபம் என்ற தீய பண்பு நீங்கி அன்பு ஏற்பட்டு விட்டால் கோபத்தால் ஏற்பட்ட உள்ளப் பிரட்டல் மாறிவிடும். அன்புதான் இந்த உலகத்தை ஆள்கின்ற உண்மையான சக்தி. ஏனெனில் அன்பு படைத்தவனிடமிருந்து வருகிறது. புரோட்டோன், நியூட்ரோன், எலக்ட்ரோன் ஆகிய மூன்றும் ஒன்றாகச் சேர்ந்து ஒட்டியிருப்பதற்கு அன்புதான் காரணம். இந்த அன்பு கருணை என்ற பெயரால் உலகம் முழுவதையும் பசைபோல் ஒட்டி இருக்கிறது. இந்த அன்பை நாம் வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்த்துப் பார்த்து விடுகிறோம். அன்பு எனது ஆத்மாவில் இருந்து வெளிப்படுவது. நாம் பேசுகின்ற வார்த்தைகளை ஆத்மாவில் பெருகுகின்ற அன்பில் தோய்த்துக் கொடுத்தால் அது உண்மையான அன்பு. சும்மா காரியம் ஆவதற்காக எண்ணத்திலிருந்து அன்பாகப் பேசிப் பழகுவதுபோல் நடித்தால் அது சுயநலத்திற்காக வெளிப்படுத்துவது.

நற்பண்புகளால் ஏற்படும் நன்மைகளை, உள்ள உணர்வினை நான் உங்களுக்குப் படிப்படியாக விளக்கிக் கொண்டு வரு கிறேன். அவற்றை உள் வாங்கியபின் நீங்கள் உங்கள் மன முறுகலிலிருந்து, விஷத் தோய்விலிருந்து விடுபட்டு விட்டீர்களா? அன்பாக அனைத்தையும் பார்க்கத் துவங்கி விட்டீர்களா? மனம் அன்பென்னும் மாற்றத்தைக் கொண்டு விட்டதென்றால் பார்க்கின்ற அனைத்திலும் அன்பு செலுத்தத் தோன்றும். கோபம், வெறுப்பு போன்ற தீய உணர்வுகள் இனி உங்களில் எழாது. இனி உங்கள் உறவுகளிடமும் பொருள் களிடமும் அன்பாக இயங்க முடியும். ஆனால் விதவிதமாக உங்கள் தேவைக்கேற்ப அன்பைப் பாவிக்கிறீர்களே தவிர உங்களது முழு அன்பினால் யாரையும் மூழ்கடிப்பதில்லை. உங்கள் அன்பை நீங்கள் முழுமையாக வெளிப்படுத்தினால் தான் உலகம் முழுவதையும் அன்பால் பிணைத்து வைத்திருக்கின்ற பரம்பொருள் உங்களைத் திரும்பிப் பார்க்கும். அன்பு தெய்வீகம்; தெய்வத்திலிருந்து வெளிப் பட்டது. அது என்னிலிருந்து முழுமையாக வெளிப்பட்டால் உடல் நலம் சிறக்கும். இயற்கையில் அன்பு பொங்கிப் பெருகி வழிகின்றதைக் கவனித்தால் தெரியும். பறவைகள், விலங்குகள், பூச்சி, புழுக்கள் எல்லாமே அன்பை அழகாக வெளிப்படுத்துகின்றன. அன்பு பெருகினால்தான் உலகம் முழுவதையும் ஈஸ்வரதரிசனமாக, அன்புமயமாகப் பார்க்க முடியும்.

இந்தப் படைப்புக்கள் அனைத்துமே உலகம் என்ற மாபெரும் மேடை அனுபவம் பெறுவதற்காக அமைக்கப் பட்டுள்ளன. நம்முடைய வாழ்வில் எவ்வளவோ அனுபவங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு அனுபவமும் அறிவைக் கொடுத்துச் சென்றால் வாழ்க்கை வெற்றிமயம். தற்செயல், அதிர்ஷ்டம் எல்லாம் இறையருளே தவிர வேறல்ல. அதிர்ஷ்டக்காரன் என்று உலகத்தார் சொன்னாலும் அது அணைப்பதற்கா, அழிப் பதற்கா? என்ற உண்மைச் சிந்தனை ஆன்மீகவாதிக்குத்தான் ஏற்படும். அனுபவங்கள் அறிவைக் கொடுக்கவில்லை என்றால் வயதாகுமே தவிர வளர்ச்சி ஏற்படுவதில்லை. அனுபவம் என்பது நமது அனுபவம், மற்றவரின்; அனுபவம் என இரண்டு விதம். மற்றவர் அனுபவத்திலும் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வைராக்கியத்திலும் மற்றவர்களால் பெறும் அனுபவங்கள் நமக்குப் பாடங்களாக அமைய வேண்டும். செல்வந்தர்களாய்த் திகழ்ந்தவர்கள், பதவியில் மகிழ்ந்தவர்களெல்லாம் எதிர்மாறான நிலைக்கு வந்ததைப் பார்த்திருக்கிறோம். ஆரோக்கியமாக இருந்தவர்கள் நோயுற்று விடுவதைப் பார்த்திருக்கிறோம். நாம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது அனுபவம், மற்றவரின் அனுபவம், இதில் இருந்து நாம் பெறவேண்டிய அறிவு எல்லாம் ஒரு காலத்தில் இழக்கப்பட வேண்டியவை. அறிவு, ஞாபகசக்தி, உடல்பலம், செல்வம், பொருட்கள் எனக்கு இருந்தாலும், மற்றவர்களுக்கு இருந்தாலும் இழக்கப்பட வேண்டும். இழப்புக்கு உட்பட்டதே எல்லாம் என்று புரிந்து இன்றைய நாளை இறுதி நாளாக உணர்ந்து வாழ்வாயாக. இந்த எண்ணம் நமக்கு நிலையா மையை உணர்த்தும். இது வைராக்கியத்தைக் கொடுக்கும். இது உண்மையும் ஆகலாம். எனவே இந்த வாக்கியத்தை மனதில் கொள்வோமாக. “இன்றைய நாளை இறுதி நாளாக உணர்ந்து வாழ்”. இந்த உலகை இரண்டு கோணங்களில் பார்க்கலாம். ஒன்று நிலையற்ற தன்மை. நிலையாமையைப் பார்க்கும்போது அது வைராக்கியத்தை ஏற்படுத்தும். அடுத்து ஈஸ்வர விபூதி என்று இறைமயமாக அனைத்தையும் பார்த்தல். இவ்வுலகம் அனைத்தும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருளும் இறைவனே. இந்த அறிவும் வைராக் கியத்திற்கு உதவும்.

வைராக்கியத்திற்கு எதிர்ச்சொல் மோகம், மயக்கம். இறை அருளை அனைத்திலும் பார்த்தாலும் வைராக்கியத்தை ஏற்படுத்தும். இவ்வுலகில் சில பொருள்களின்மீது மோகம் அடைந்துள்ளோம். இன்பத்திற்காகப் பொருள்களின் மீது மோகம் கொண்டோம். அப்பொருளையே இறைவனாகப் பாவித்தல் மோகத்தை நீக்குவதற்குரிய உபாயம். தியான நேரத்தில் மோகப் பொருட்கள் அனைத்தையும் இறைவனாகப் பார்க்க வேண்டும். அதனால் அப்பொருள்களிலுள்ள கீழான எண்ணம் நீங்கும். மோகத்தை அடக்கும் ஈஸ்வரபுத்தி வர வேண்டுமானால் சாஸ்திரங்களின் உதவி தேவை. இறைவன் தன்னிடமிருந்தே அனைத்துப் பொருட்களையும் உருவாக்கி னான். பார்க்கும் பொருள்கள் அனைத்தும் ஈசுவரன். இது தியானத்திற்கான காரணம். ஈஸ்வரனே அனைத்துப் பொருள் களுக்கும் காரணம். எனவே பொருட்கள் அனைத்தும் ஈஸ்வரனே. அனைத்தும் நிலையானவை அல்ல என்று எதிர் மறையாகச் சிந்திக்காமல், அனைத்தும் ஈஸ்வரன் என்று சிந்திப்பது சிறந்தது.

இதுவரை வைராக்கியம் என்ற சாதனையைத் தியானித்தோம். வைராக்கியம் மெதுவாகக் காலக்கிரமத்தில் நமக்குக் கிடைக்கும். மற்றப் பண்புகளும் வைராக்கியத்திற்குத் துணை புரிய வேண்டும். உலகின் நிலையாமையும், ஈஸ்வர தரிசனமும் வைராக்கியத்திற்கு முக்கிய காரணம்.

அடுத்த பண்பு திருப்தி. போதுமென்ற மனநிலை உங்களுக்கு இருக்கின்றதா? அனுபவிக்கின்ற அனைத்திலும் திருப்தி ஏற்பட வேண்டும். திருப்தி ஏற்பட்டு விட்டதா என்று ஒவ்வொன்றிலும் கவனத்தைச் செலுத்திப் பார்க்க வேண்டும். திருப்திக்கும் பூரண நிறைவு என்ற முக்தி நிலைக்கும் தொடர்பு உண்டு. திருப்தி வர வர நிறைவு வந்துவிடும். ஞானம் வளர வளர ஆசைகளின் ஆதிக்கம் குறையும். ஆசை குறைந்தால் போது மென்ற நிறைவு தானே ஏற்படும். ஞானம் பெற்றபின் விரும்பியோ விரும்பாமலோ உங்களால் திருப்தியடையாமல் இருக்க முடியாது. வாழ்க்கையின் உண்மைத் தன்மை புரிந்து விட்டால் எதிலும் விருப்பமிருக்காது. எல்லாம் போதுமென்ற மனநிலை தானாக ஏற்பட்டுவிடும்.

திருப்தி என்ற பண்பு வேதாந்தத்தில் மிக முக்கியமானது. திருப்தி வந்துவிட்டால் வாழ்க்கையில் முன்னேற்றமடைய முடியாது என்று எண்ணுவது தவறு. திருப்தி வளர்ச்சிக்கு எதிரியில்லை. வளர்வதற்கு திருப்தி உந்துசக்தியாக இருக்கும். போதுமென்ற மனநிலை வளர்ச்சியைத் தடுக்காது. இக்கருத்தை நன்கு உணரவேண்டும். திருப்தி என்ற பண்பு தீயகுணங்களை நீக்கும். பொறாமை, கோபம், ஒப்பீடு போன்ற பல தீயகுணங்கள் திருப்தி என்ற பண்பினால் நீக்கப்படும். திருப்தியினால் மனம் ஓரளவு முதிர்ச்சி அடையும். யாரிடம் முதிர்ச்சி இல்லையோ அவர்களிடம் மகிழ்ச்சி இருக்காது. எந்த முன்னேற்றத்திலும் அவர்கள் மகிழ்ச்சியடைய மாட்டார் கள். தியானத்தில் இந்தத் திருப்தியைச் சிந்திக்க வேண்டும்.

இப்பண்பு நம் வளர்ச்சிக்குத் தடையல்ல. அறிவு, பொருளியல் ஆகியவற்றிற்கு இது தடையல்ல. நாம் செய்யவேண்டிய முயற்சியைச் செய்து பலனைப் பெற்றவுடன் வரவேண்டிய சாதனை திருப்தி. செயலுக்கு முன் அல்ல, செயலின் விழைவை அடைந்ததற்குப் பின். எவையெல்லாம் ஏற்கனவே இருக்கின்றனவோ அவற்றில் திருப்தி அடைய வேண்டும். சூழ்நிலைகள், உறவுகள், பொருளியல் நிலை, கல்வியறிவு, ஞாபகசக்தி, தனிப்பட்ட திறன் போன்றவற்றை நாம் அடைந்திருப்பதில் திருப்தி ஏற்படவேண்டும். குறை என்பது இல்லாமல் இல்லை. குறையாக நமக்குக் கிடைத்திருக் கலாம். கிடைத்ததில் திருப்தி. மற்றவருக்கு எல்லாம் அதிக மாகக் கிடைத்திருக்கலாம். எனக்குக் கிடைத்தவற்றில் நான் திருப்தியடைகிறேன் என்ற மனநிலை ஏற்படவேண்டும்.

வீடு, பொருள் என்று எவையெல்லாம் நம்மிடம் இருக்கின்ற னவோ அவைகளால் திருப்தி. அவை இல்லாமலும் மிக அதிக அளவில் அவற்றைப் பெற்றும் பலர் வாழ்கின்றனர். நாம் அடையப்பட வேண்டியவை வளர்ச்சிக்கு உட்பட்டவை. கிடைத்தும் திருப்தி இல்லையென்றால் பலனில்லை. எல்லாமே அவன்தான் தந்தது. அவனுக்கு நன்றி செலுத்தாதவனாக நான் மாறிவிடுகிறேன். திருப்தியடைந்தால்தான் அவனருளுக்கு நன்றி செலுத்துபவர்களாக ஆகிறோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *