பெற்றவை அனைத்தும் நிலையற்றவை

வேத உபநிஷதங்கள், அடிக்கடி உபதேசித்த மகா வாக்கியங்கள் நான்கு. அவற்றில் ஒன்று அஹம் பிரம்மாஸ்மி. நானே கடவுள் என்பது இதன் பொருள். உங்களைப்பற்றி உண்மைகளை அறிவதற்கு முன் நான் கடவுள் என்று யாராவது சொன்னால் அது உங்களுக்குப் பரிகாசத்திற்குரிய ஒரு சொல்லாகத் தோன்றியிருக்கும். ஆனால் தற்போது நான் யார்? இந்த உலகம் என்றால் என்ன? நான் பிறவி எடுத்ததன் நோக்கம் யாது? போன்றவற்றை அறிந்து ஞானம் பெற்ற நிலையில் ‘நான் கடவுள்’ என்பதன் உள்கருத்து உங்களுக்கு நன்கு விளங்கி ஏற்றுக் கொள்ள முடியும். இப்படி உணர்ந்த நிலையில் உங்களால் இப்போது ‘நானே பிரம்மம்’ என்று உணர்ந்து அமைதியுடன் அனைத்தையும் எதிர் கொள்ள முடியுமா? இப்படி மாறும் பொழுது இதுவரை வாழ்ந்த வாழ்க்கை, பெற்ற அறிவு எல்லாம் அடிபட்டுப் போகும் அல்லவா? ஆனால் நீங்களோ இன்னும் அழியும் பொருள்களில் அல்லது நிரந்தரமில்லாதவற்றில் அந்த ஆத்ம சக்தியை மனமென்ற பெயரில் வைத்துச் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள். அன்றாடம் உங்களுக்கு வருகின்ற பிரச்சனைகளைப் பாhக்கிறீர்களே தவிர எந்த ஒன்றைப் பிடித்தால் எல்லாப் பிரச்சனையும் தானே தீர்ந்து போகுமோ அதைப் பிடிப்பதற்குச் சொல்லிக் கொடுத்தும் அதைப் பிடிக்க விரும்பவில்லை.

இயல்பாக நம்மில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற அந்த தெய்வீக சக்தியை நாம் நமது மனதாலும் ஆசைகளாலும் போட்டு முறுக்கி வைத்திருக்கிறோம். அதனுடைய சக்தி பிரதி பலிக்கின்றபோது எனது மனம் எந்த நிலையில் இருக்கின்றதோ அந்த நிலையில்தான் பிரதிபலிக்கும். நாம் கற்கின்ற நற்பண்புகளைக் கடைப்பிடிக்கத் துவங்கும்போது இதுவரை முறுக்கி வைத்திருந்த அந்த சக்தி இறுக்கம் தளர்ந்து போகும். தியானத்தின் மூலம்தான் அப்பண்புகளைத் திரும்பத் திரும்ப சிந்தித்து உங்களில் பதிக்க முடியும். மனதால் அந்த நற்பண்புகளைப் புரிந்து கொண்டு தொடர்ந்து செயல்பட முற்படும்போது புனிதமானவனாக மாறுகின்ற முயற்சியில் தொடர்ந்து வெற்றி கிடைக்கும்.

நான் எப்பொழுதுமே என்னைப் பெரிதாக நினைத்துக் கொண்டு எந்தப் பிரச்சனை எனக்கு ஏற்பட்டாலும் என்னுடைய மட்டத்தில் நின்று அதை எப்படித் தீர்க்கலாம் என்றுதான் பார்க்கிறேன். என்னுடைய மட்டமென்பது வளராத, உலகத்தில் உள்ள குப்பைகள் எல்லாவற்றையும் போட்டு வைத்திருக் கின்ற மனதை வைத்துக் கொண்டு என்னுடைய வாழ்க்கை என்ற வண்டியை இதற்குள் எவ்வாறு ஓட்டுவது என்று யோசிக்கின்ற நிலை. எப்போதும் நான் என்னை மட்டுமே வைத்து யோசிக்கின்றேன். ஆனால் இந்த நான் என்பது பிரபஞ்சத்தோடு ஒட்டியது. இதில் நான் என்று தனியாக எதுவுமில்லை. இருப்பது எல்லாமே அதுதான்.

அஹம் பிரம்மாஸ்மி என்று மனதில் நினைத்துத் தியானத்தில் அமர்கின்ற போது சொல்லமுடியாத ஓர் அமைதி தானாகவே நமக்குள் ஏற்படும். இந்த அமைதி நிலையை உணர்ந்தால் தான் அவனை நெருங்க முடியும். நான் பதட்டமின்றி அமைதியாக இருக்கும்போது அவனது சக்தி என்னில் முழுமையாக நிரம்புகின்றது. ஆகவே அந்த நேரத்தில் அவனாகவே நான் இருக்கிறேன். அவனது குணங்கள்தான் என்னில் இருக்கும். வெளிச் சூழ்நிலை நம்மைப் பாதித்தால் தான் நமது அமைதி குலைந்து சஞ்சலம் ஏற்படும். முழுமையான தியானத்தைப் பழகி சமாதி நிலையை அடையும்வரை உங்களுக்கும் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது குளறுபடி நடந்து கொண்டே தான் இருக்கும். ஏனெனில் முறுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து இந்த மனம் நேராக நிமிர்ந்து நிற்கின்ற தனது இயல்பு நிலைக்குத் திரும்ப சதா முயற்சிக்கின்றது. அதைத்தான் நாம் பிரச்சனைகளாகப் பார்க்கிறோம். ஒரு கம்பியை முறுக்கினால் கையை விட்டவுடன் அது அந்த முறுக்கிலிருந்து விடுபட்டு நேராக நிமிர்ந்து விடுவதைப் பார்க்கிறீர்கள் அல்லவா? இந்த மனமும் அப்படித்தான். மனதின் முறுகல்தான் பிரச்சனை.

மனம் எங்கே போக நினைக்கிறது? அது தோன்றின இடத்திற்குச் செல்ல. மனம் வெளியில் அலை பாயாமல் ஒன்றில் நிலைத்து நிற்கத்தான் கோவில்களில் தெய்வ வடிவங்களை வைத்திருக்கின்றனர். அதிலும் தஞ்சாவு+ருக்கு அருகில் உள்ள ஆவுடையார் கோவிலில் லிங்க வடிவம் இருக்காது. அடிப்பகுதி மட்டும் தான் இருக்கும். ஒரு விளக்கு இருக்கும். அதன் பொருள் உருவமற்ற வெளியில் பிரம்மமென்ற ஒளிதான் இருக்கிறது. அதுதான் நீ என்பதைப் புரிந்துகொள் என்ற கருத்தை உணர்த்தத்தான். எண்ணங்கள் இல்லாத மனமென்ற வெளியில் இறைசக்திதான் நிரம்பியிருக்கும். அது ஒளியாக இருக்கும். ஒன்றுமில்லை என்று எதுவுமே கிடை யாது. எல்லா இடங்களிலும் ஒலி, ஒளி அலைகள் நிரம்பி இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

இறைசக்தியை விளக்குவதற்கு ஏதுவான காரணங்கள் வந்துவிட்டன. அலை என்பதை விஞ்ஞானம் கண்டுபிடித்து ஏற்றுக் கொண்டபின்பு தெய்வீக அலை எல்லா இடங்களிலும் ஆழமான கருணையாகப் பரவியிருக்கிறது என்பதை எளிதாக எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். நான் யார்? என்ற கேள்வியை இந்த நிலையில் கேட்டால் நான் அவன்! என்பது தான் பதில். உருவம் அழியும். பரவி நிற்கின்ற தெய்வீக சக்தி நிலைத்திருக்கும்.

உலக இன்பங்கள் அமைதியைத் தருகின்றனவா? உலக இன்பங்கள் நிரந்தரமில்லை என்று உணர்ந்து கைவிடுதல் வைராக்கியம். இந்த உடலும் மனமும் உலக இன்பங்களைத் தான் விரும்புகின்றன என்று நாம் பழகி வைத்திருக்கிறோம். ஆனால் மனம் உண்மையில் விரும்புவது சாந்தியை. உலக இன்பங்களை அனுபவிக்க மனம் விரும்புவதாகத் தோன்றுவது கூட அதில் கிடைக்கும் தற்காலிக சுகத்திற்காகத்தான். நிரந்தர சுகத்தை உணர்ந்து விட்டால் இவற்றில் உள்ள விருப்பம் போய்விடும். நான் கடவுள் என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிப் பழகுவது ஓர் உறுதி மொழிபோல் எனக்குள் மிக ஆழமாக இறங்கிப் பதியும். ஏனெனில் வாழ்க்கையில் பழகிய மனம் இறைசக்திதான் நானாக வாழ்கின்றது என்ற உண்மையை இலேசில் ஏற்றுக் கொள்ளாது.

உன்னைச் சுருக்குகின்ற உணர்வுகளுக்கு நீ இடம் கொடுக்காதே. நீ அஹம் பிரம்மாஸ்மி தான். மனிதர்களுடைய சொற்கள் உன்னைச் சுருக்கப் பார்க்கும். அதாவது உன்னை வரையறைகளுக்குள் கட்டுப்படுத்தப் பார்க்கும். ஆனால் நீ சுயமாக இருப்பதை உணர்ந்து கொண்டு விட்டால் அந்தச் சொற்கள், அவற்றிற்குரிய அர்த்தங்கள் மறைந்து போகும். யாராவது ஏதாவது தாழ்வானதாகவோ உயர்வானதாகவோ சொன்னால் நீண்டநேரம் அந்த வார்த்தைகளையே பிடித்து வைத்துக்கொண்டு யோசிக்கின்ற பழக்கம் பெரும்பாலோர்க்கு இருக்கிறது. அதோடு மட்டுமின்றி அவற்றை மறக்காமல் மனதிற்குள்ளேயே போட்டு வைத்து அப்படிச் சொன்னாளே! என்று திரும்பத் திரும்ப அதை நினைத்துப் பார்க்கின்ற தன்மையும் இருக்கக்கூடாது. நான் பிரம்மம், நான் பிரம்மம் என்பதை மட்டுமே நினைத்து நினைத்துப் பழகுகின்றபோது அடி மனதில் அது ஆழமாகப் பதிந்துவிடும். பிறகு பிற நினைவுகள் எழாது. சொற்களைப்பற்றி இனி நீ கவலைப்படாதே. எதுவாக ஆகவேண்டுமென்று நீ விரும்பு கிறாயோ அதை மந்திரம் போல் சொல்லிப் பழகு.

ஓம் நமசிவாய என்று மந்திரத்திற்கு அன்பே சிவம் என்று பொருள். சகல உயிர்களிடத்திலும் அன்பாய் கருணையாய் இருக்கச் சொல்லும் மந்திரம் இது. பன்னெடுங்காலமாய் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம் இது. நமது இயல்பே அன்பும் கருணையும்தான். ஒரு முனிவர் ஆற்றில் விழுந்து தத்தளித்த கருவண்டைக் கையில் எடுத்துக் கரையில் விட்டார். அப்பொழுது அது அவர் கையில் கொட்டிவிட்டது. அது மீண்டும் அந்த நீரில் விழுந்து தத்தளித்தது. முனிவர் மீண்டும் அதை எடுத்துக் கரையில் விடும்போது அவரது கையை அது கொட்டியது. பலமுறை அது ஆற்றில் சென்று விழுவதும் அவர் கையில் எடுத்துக் கரை சேர்ப்பதும் அது அவர் கையைக் கொட்டுவதும் நடந்தது. இதையெல்லாம் கவனித்த அவரது சீடன் என்ன சுவாமி அது பலமுறை உங்களைக் கொட்டியும் நீங்கள் அதைத் திரும்பக் காப்பாற்றுகிறீர்களே! என்று வினவினான். அதற்கு அவர் கொட்டுவது அதனுடைய சுபாவம். உயிர்களிடத்தில் அன்பும் கருணையும் கொண்டு அவற்றைக் காப்பாற்றுவது எனது சுபாவம். நான் எத்தனை முறை காப்பாற்றியும் அது திரும்பத் திரும்பச் சென்று தண்ணீரில் விழுகிறது. ஆகவே அது வண்டாக இருக்க முடியாது. என்னை அவன் சோதிக்கிறான் என்று அமைதியாகக் கூறினாh;. இந்த அன்பும் கருணையும் இறைத்தன்மை. இவை என்னில் வெளிப்பட வேண்டுமென்பதற் காகத்தான் ஓம் நமசிவாய! என்னும் மந்திரத்தை உங்களுக்கு உபதேசித்தேன். இனி அஹம் பிரம்மாஸ்மி என்பதையும் மனதிற்குள் பழகி வாருங்கள்.

உலக இன்பங்களிலிருந்து ஒதுங்கியிருத்தல் வைராக்கியம் ஆகும். நற்பண்புகளைப் பற்றி நன்கு அறிந்து அவற்றின் மதிப்பை உணர்ந்து நாம் பின்பற்றினால் அதன் வழியாக இறையருள் நமக்குக் கிடைக்கும். அந்த இறையருள் தக்க நேரத்தில் தக்க விதத்தில் வந்து நமக்குக் கட்டாயம் உதவி செய்யும். நமக்குத் தற்செயலாக நடந்ததாக நினைப்பவை கூட அதனருளால்தான் இது நடந்தது என்பது சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். எனவே அமைதியாய் அஹம் பிரம்மாஸ்மி என்று இருந்தால் நடக்க வேண்டியவை தானாக நடக்கும். அதனோடு தொடர்புகொண்டு மானசீகமாய் பேச வேண்டும். அமைதியாய் அதை நோக்கி மனதைத் திருப்பி அதனோடு பேசினால் அது கட்டாயம் நம்மில் இறங்கும். அருளாளர்களெல்லாம் இறையருளைப் போற்றிப் புகழ்ந்து ஆயிரம் ஆயிரம் பாடல்களை இயற்றி இருப்பது அது அவர்களோடு பேசி அவர்கள் பாடல்களை விரும்பிக் கேட்டதால்தான்.

வைராக்கியம் விவேகத்திலிருந்து தோன்ற வேண்டும். எல்லாம் நிலையானவை அல்ல. என்னோடு எதுவும் வராது. இவற்றின் மீது ஆவலை வளர்த்து என் சக்தியை வீணாக்குவது சரியல்ல என்ற அறிவினால் தெளிவடைவது விவேகம். விவேகத்தின் கனிந்த, முதிர்ந்த நிலை வைராக்கியம். எப்படிப்பட்ட விவேகம் வைராக்கியமாக உருவெடுக்குமோ அதனைத் தியானத்தில் கொண்டுவர வேண்டும். அந்த அறிவு இந்த உலகத்தைப் பற்றிய உண்மைகளைக் கூறுகிறது. அநித்யம் என்னும் நிலையற்ற தன்மையை உணர்ந்து வாழ்தல் விவேகம். உலகப் பொருள்கள் நிலைப்பதில்லை என்பதை நாம் அறிவோம். இருப்பினும் அந்த அறிவில் கவனத்தைச் செலுத்துவதில்லை. இப்போது அதில் கவனத்தைச் செலுத்துவோம். நம் உடல் நிலையானதல்ல. ஒரு காலத்தில் தோன்றியது, சில காலத்தில் வளர்ந்தது, ஆரோக்கியமாக சில வருடங்கள், நோய்வாய்ப்பட்டு சில வருடங்கள், பின் மரணம். இவ்வளவு தான் இந்த உடல்.

இந்த உடலிலுள்ள ஆரோக்கியம், சக்திகள் மிகக் குறுகிய காலத்திற்கே இருக்கின்றன என்பதை நாம் பார்க்கிறோம். உடல் ஆரோக்கியமானது, உடல் சக்தியின் தோற்றம். அது குறுகிய காலத்தில் இழுக்கப்படும். உடலின் நிலமையை நாம் தியானிக்கிறோம். அவரவரின் மனக்கண்முன் முன்பு இந்த உடல் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதை நிறுத்திப் பார்த்தால் இந்த உடல் மாறிக் கொண்டே இருக்கிறது என்பது புரியும். நாம் நமது உடலின் நிலையாமையை உணர்வோம்.

நமது வாழ்க்கையில் மிகக் கடினமான சாதனை வைராக்கியத்தை அடைவது. பல நூல்களைக் கற்கலாம், பொருட்களை ஈட்டியிருக்கலாம். பட்டம், பதவி அனைத்தையும் மிகக் கடின முயற்சியினாலேயே அடைந்திருக்கிறோம். இருந்தபோதிலும் வைராக்கியத்தை அடைதல் அனைத்திலும் மிகக் கடினம். சரியான முயற்சி தேவை. மெதுவாகப் பொறுமையாக வைராக்கியத்தை அடைய நிலையாமை என்ற அறிவை அடைய வேண்டும். நிலையாமையின் உண்மைப் பொருளை நாம் தியானித்து உணர வேண்டும். அனைத்தும் நிலையற்றவை என்பதை அறிந்திருந்தும் மனம் உணர்வ தில்லை. தியான காலத்தில் நிலையானதை உணர முற்படு வோம். ஸ்தூல உடலின் நிலையாமையைத் தியானிப்போம். உடல் மாற்றத்தை அடைகிறது. வளர்ந்து தேய்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. நடத்தல், உயர்த்துதல், பேசுதல், பார்த்தல், ஞாபகம் போன்றவை எல்லாம் குறிப்பிட்ட காலம்வரை இருந்து பிறகு மெல்ல மெல்ல அவற்றின் சக்தி குறைவதை உணர்கிறோம்.

உடல், புலன்கள், மனம் ஆகியவற்றின் சக்திகள் நிலை அற்றவையாக இருப்பதை மனக்கண்ணில் பார்க்கிறோம். இந்த உலகை அனுபவிக்கும் உறுப்புக்கள் நிலையற்றவை என்றால் பொருள்களும் நிலையற்றவையே. நம் வசதிகள் நிலையானவை அல்ல. வருகின்றன, செல்கின்றன, இந்த நிலையாமையைக் கண்முன் நிறுத்திக் காண்போம். பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பிருந்த சூழ்நிலை இப்போதில்லை. அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பல வருடங்களுக்கு முன் மகிழ்வித்த உறவுகள், நட்புகள் பொருள்கள் இப்போது மாறிவிட்டன. மற்றவர்களைத் திருப்திப் படுத்தவே இயலாது. இத்தன்மைகளை மனதில் நிறுத்திப் பார்ப்போம். வைராக்கியம் விவேகத்திலிருந்து உதிக்க வேண்டும். அந்த விவேகத்தைத் தியானிப்போம்.

நிலையாமையை உணர்தல் மிக மிக அவசியமான ஒரு சிந்தனை. அனைத்தும் அழிவுக்குட்பட்டவை என்பதை அறிவோம். அறிந்தும் உணர்வதில்லை. இத்தியானத்தின் மூலம் இதை உணரப் பயிற்சி மேற்கொள்வோம். தூல உடல் ஒரு காலத்தில் இழக்கப்படும். மரணத்தை அடையும். இந்த உடலை அழிக்கின்றதென்றால் உடலைப் பாதுகாக்க நாம் தேடிய செல்வங்களால் பலன் என்ன? தர்மத்தை விட்டு அதர்மமாகத் தேடுகின்றோமே அவற்றின் நிலையாமையைப் புரிந்து கொண்டபின் அதர்மத்தை மேற்கொள்வோமா? இவற்றைப்பற்றியெல்லாம் தியானத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த உடலுக்கு எத்தனை விதமான பாதுகாப்புகள், திட்டங்கள்! அவற்றை அறிந்திருந்தாலும் இது நிலையற்றது என்பதை உணர்வில் வைத்திருக்க வேண்டும்.

அடுத்த நிலையாமை ஆரோக்கியம். இந்த உடல் சில வருடங்கள் ஆரோக்கியமாக செயல்படுகிறது. வலிமையுடன் சிலகாலம் செயல்படுகிறது. தேய்வடைவதும் சிலகாலம். உடலின் சக்திகளும் குறிப்பிட்ட காலம்தான். நடக்கும் சக்தி, பார்த்தல், கேட்டல், சுவைத்தல் ஒரு காலம் வரைதான் செயல்படும். நன்கு செயல்படும் சக்தியைத் தியானிப்போம். இதன் குறுகிய கால இருப்பைத் தியானிப்போம். உடல் சக்தியின் குறுகிய காலத்தைத் தியானிப்போம்.

வாழ்க்கையின் உண்மைத் தன்மையை நிலையாமை மூலமாக அறிய முடிகிறது. உண்மை என்னவென்று தெரிந்தாலும் உணர்வில் கொள்வதில்லை. நிலையாமையை உணர்ந்த நிலையில் என்னுடைய எல்லா நடவடிக்கைகளிலும் இந்த உணர்வு பிரதிபலிக்க வேண்டும். இவ்விதம் இருக்கும்போது எனக்குள் எழும் ஒரு கேள்வி நான் எதற்காக மனிதர்களையும் பொருள்களையும் பற்றி இருக்க வேண்டும்? சில காலங்களுக் குப் பிறகு நான் விட இருப்பவைகளை ஏன் நான் இன்றே விடக்கூடாது. இதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

வைராக்கியத்தை அடைய நிலையாமை என்ற அறிவை அடைய வேண்டும்; உணரவேண்டும். அதைத் தியானத்தில் அப்பியாசம் செய்து வருகிறோம். மனம், அறிவு, ஞாபகசக்தி என்பவையிடம் நிலையாமையைத் தீர்மானித்துப் பார்ப்போம். இவை நிலையற்றவை என்றால் இவற்றிற்கு இன்பத்தையும் பாதுகாப்பையும் தரும் பொருள்களும் இவற்றைவிட நிலையற்றவை. எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் மரணம் தகர்த்துவிடும். இவ்விதம் நிலையாமையை அமைதியான மன நிலையில் சிந்திக்க சிந்திக்கப் பொருள்களின் மீதுள்ள மோகம் குறைந்துவிடும்.

நிலையாமையையும் நிலையானதையும் தெரிந்து கொள்வது வேறு, உணர்வது வேறு. விவேக அப்பியாசத்தால் அறிவை உணர்வு மயமாக்க வேண்டும். மனம் பல்வேறு குணக் குறை பாடுகளால் சிக்குப்பட்டுக் கிடக்கிறது. இதைப் பழைய நிலைக்குத் திருப்பிக் கொண்டு வருவது ஆன்மீகம். ஞானத்தைத் தொட்டு, இவை அனைத்தையும் அழித்து, நான் ஞானமாகவே ஆகி, என்னுள் எழுகின்ற அலைகளை நேராக்கி வைத்தால் எனக்கும் அவனுக்கும் இணைப்புக் கிடைத்து விடும். சுருட்டி, முறுக்கி வைத்திருக்கின்ற பக்தியை நீட்டி நேராக்கி விஷம் படியாமல் எனது சக்தியை அதன் சக்தியாக்கி என்னில் வைத்தவுடன் அது பேசும்.

இந்து மதத்தின் வேர்களான வேதங்களின் உதவியால்தான் உங்களுக்கு ஞானம் உபதேசிக்கப்படுகின்றது. தத்வமஸி-அது நீ தான் என்பதை உணர்த்துவதே உபதேசம். இந்தத் தத்துவத்தை நான் உண்மையாக உணர்ந்தால் நானும் அவனும் ஒன்று.

நிலையாமை உணரப்படுகின்றபோது வைராக்கியம் மேலெழுகின்றது. வைராக்கியமுள்ள மனம் மற்ற பண்புகளைச் சுலபமாக அடைகின்றது. வைராக்கியம் மெதுவாகக் காலப் போக்கில் கிடைக்கின்றது. உடனடியாக ஒரேநாளில் கிடைத்து விடாது. மன வளர்ச்சியைக் காட்டும் ஒரு சாதனையே வைராக்கியம். வைராக்கியம் முழுமையாகின்றபோது விருப்பும் வெறுப்பும் நீங்கி விடுகின்றன. கெட்ட குணங்கள் எல்லாம் மறைந்துவிடும். வைராக்கியம் வந்தால்தான் அவனை அடைய முடியும். உலகம் தருகின்ற இன்பங்களை விருப்பமில்லாமல் ஏற்று அனுபவித்தலே வைராக்கியம். ஒருவர் சந்நியாசியாக வருவதற்கு வைராக்கியம் மிக அவசியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *