எளிமை என்னும் நற்பண்பின் அடையாளம்

ஆன்மீக உபதேசத்திலும் பயிற்சியிலும் வாழ்க்கை இலகுவாக ஆகியிருக்க வேண்டும். நீங்கள் என்னென்ன நினைத்தீர்களோ அவை ஒவ்வான்றாக நிறைவேற வேண்டும். உங்களுக்கு என்னென்ன தேவையோ அவை கிடைக்கவில்லையென்றால் யாரில் பிழை? இறைவனிருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை. அந்த இறைவனால் எல்லாம் முடியும். அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? இறைவனிடம் கருணையும் அருளும் இருக்கிறது. ஆனால் அவற்றை எனக்கு ஏன் முழுமையாக வழங்கவில்லை? கடவுள் என்ற சக்தி படைப்புகளுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. நானும் அவனுடைய படைப்பு. எனக்கு ஏன் தரவில்லை? எங்களது கர்மாவும் நாங்கள் அதனை நோக்கி எங்களைத் திருப்பி வைத்து சரணாகதி அடையாததும்தான் காரணமா? பிள்ளைகள், குடும்பம் போன்ற கட்டுக்கள் எங்களைப் பிடித்து வைத்திருக்கின்றதால் அவனை நோக்கி எங்களால் போக முடியவில்லையா?

உங்களிடம் மாறுபாட்டையோ, வளர்ச்சியையோ அல்லது விருப்பு வெறுப்பையோ கருதுகின்ற ஒன்று இருக்கிறது. அதன் மூலம்தான் நீங்கள் அதைப் பிடிக்க முடியும். இறைவன் தந்த சக்தியான அதைத்தான் மனம் என்று நாம் சொல்கிறோம். இந்த மனம்தான் அவனைப் பிடிக்க வேண்டும். வேறு ஒன்றாலும் அதைப் பிடிக்க இயலாது. மனம் ஏன் பிடிக்க மறுக்கின்றது? என்று ஆராய்ந்து பார்த்தால் மனதில் அவனைத் தவிர மற்ற எல்லாமும் இருக்கிறது. அப்படி என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? அவனை மட்டும் வைத்திருக்க வேண்டும். மற்ற எண்ணங்களை, ஆசைகளை இல்லாமற் செய்ய வேண்டும். வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஆனால் அவற்றை மனதில் ஏற்றி வைத்துக் கொண்டு அவற்றையே அலசி ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதனால் பூரணமாக வெளிப்பட முடியாது.

படைத்து, காத்து அழிக்கின்ற ஒரு மாபெரும் சக்தி இறைவன் என்ற பெயரில் எங்கும் நிறைந்த நானாகவும் இருக்கிறது. அது கருணை மிக்கது. கேட்கும் முன்பே கொடுக்கக்கூடியது. ஏன் நான் பெறவில்லை? அதைப் பெற்றால் அனைத்தையும் பெறலாம். ஆனால் நானோ படைப்புகளுக்குப் பின்னால் ஓடித்திரிந்து கொண்டிருக்கிறேனே தவிர அதன் பக்கம் திரும்பவில்லை. அந்த சக்தி எனக்குள்ளேதான் இருக்கிறது. கருணை என்ற பெயரில் அதன் அருள்தான் இந்த வாழ்க்கை யாகப் போய்க் கொண்டிருக்கிறது. உங்களுக்குள்ளேயே இருக்கின்ற அதனிடம் நீங்கள் பேசுகின்றீர்களா? பேசி இருக்கின்றீர்களா? அது உங்களிடம் பேசியிருக்கின்றதா? மனச்சாட்சி என்ற பெயரில் அது எத்தனையோ முறை உங்களுக்குள் பேசியிருக்கிறது. இதைச் செய்யாதே, இதைச்செய் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நீங்கள் உங்களின் அகங்காரத்தினால் ஆசைகளால் சூழப்பட்டு சொல்வதைத் தவிர்த்திருக்கிறீர்கள். நீங்கள் செய்வது பிழையாகப் போனால் அது மெல்லிய குரலில் நான் சொன்னேனே, கேட்டாயா? என்று கேட்கும். எனவே மனச் சாட்சியின் குரலை வலுவடையச் செய்ய அது சொல்பவற்றை எப்போதும் கேட்கின்ற நிலையில் நான் பழக வேண்டும். அதன் குரலுக்குச் செவி சாய்த்து நடக்கப் பழக வேண்டும்

என்னுடைய நடைமுறைகளும் விருப்பங்களும் உலகத்தைச் சார்ந்தவையாக இருக்கின்றன. இறைவனின் நோக்கமோ வேறு ஒன்றாக இருக்கிறது. எனக்கு என் வாழ்க்கை சம்பந்தமான திட்டங்களை அவன் நிறைவேற்றித் தரவேண்டும் என்பது நோக்கமாக இருக்கிறது. வேதங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைகளைப் புரிந்து கொண்டு அதன்படி நடந்து நீ என்னை நோக்கி வா! என்பது அவனது நோக்கமாக இருக்கிறது. ஒன்று நீ உன்னுடைய திட்டங்களை முழுமையாகக் கைவிட்டு விட்டு இறைவனின் திட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது புத்திசாலி என்றால் உன்னுடைய திட்டங்களை அவனது திட்டங்களாக மாற்ற வேண்டும். அதாவது உன்னை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படிச் செய்தால் உனது திட்டங்கள் என்று எதுவுமில்லை. இப்படி அவனிடம் உன்னை ஒப்படைப்பதற்கு அவன் உன்னைப் பக்குவப்படுத்த சோதனைகளால் வாட்டி வதைக்க வேண்டும். சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! என்று கதறுமளவிற்கு உன்னைப் போட்டுப் பிரட்ட வேண்டும். இப்படிச் செய்தால்தான் மனம் பிடிப்புகளை விடும்.

எந்தச் செயலைச் செய்ய முற்பட்டாலும் அதனுடைய அருள் இருந்தால்தான் முடியும் என்பதைப் புரிந்துதான் எமது இந்துக் கலாச்சாரமும் முதலில் இறைவனை வணங்கி அவனிடம் அந்தப் பணியை ஒப்படைத்து விட்டுப் பிறகுதான் அதைத் துவங்குவது என்னும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறது. கல்வி, வேலை. குடும்ப நிகழ்வுகள் எது என்றாலும் பு+சை செய்யாமல் துவங்குவதில்லை. பயத்தாலும் பலவீனத்தாலும் தான் பலரும் பக்தி செய்கின்றனர். ஆனால் என்னுடைய இயக்கம் முழுவதுமே அவனால்தான் நடக்கிறது என்னும் உண்மை யாருக்கும் நினைவிருப்பதில்லை. ஒரு மூன்று நிமிடம் மூச்சு விடாமல் நின்றுவிட்டால் என்ன நடக்கும் என்பது முடிந்த பிறகுதான் தெரியும். மூளைக்கும் இதயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் இரண்டு நரம்புத் தொகுதிகள் அமைக்கப்பட்டிருப்பது ஏன்? ஒன்று பழுதடைந்தாலும் அடுத்தது இயங்கும் என்பதற்காகத்தான். அவனது கருணை யினால் தானே இந்த அமைப்பு? நம் உடம்பிற்குள் நுட்பமாக நடந்து கொண்டிருக்கின்ற வேலைகளைப்பற்றிச் சிந்தித்தாலே மனிதன் கடவுளின் பேராற்றலைப் புரிந்துகொண்டு திகைத்துப் போய் விடுவான்.

நீங்கள் முயன்றால் இந்தத் தெய்வீகப் பேராற்றலை உங்கள் பக்கம் இழுக்கலாம். எந்தப் பிரச்சனை தீர்க்க முடியாமல் இருந்தாலும் இறை சக்தியைக் கொண்டே அதைத் தீர்த்துவிட முயல வேண்டும். உங்களது முயற்சி நிறைவேறாமல் தடைப்பட்டால், உங்களில் நீங்கள் கருணையை நிரப்பினால் இறைவனைக் கொண்டு அவனது உதவியால் அதை நிறைவேற்றலாம். ஏனெனில் உங்களுக்கு மிக அதிக நெருக்கமானவன் அவன். இந்த உலகிற்கு ஏதோ ஒன்றை அடைவதற்காகத்தான் வந்திருக்கிறோம். நான் பெறுவதற்கு இந்தப் பு+மியில் ஒன்றுமில்லை என்ற மனோநிலையைப் பெறுவதற்கும் அவனது உதவி தேவை. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற பாடல் வரிகள் நிறைவேற முடியும். ஏனெனில் அவனது கருணை எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. அந்தக் கருணை நம்மிலும் பெருகிற்றென்றால் நிச்சயம் அவன் எல்லாவற்றையுமே நிறைவேற்றித் தருவான்.

தியானத்தின் மூலம் நீங்கள் உங்கள் மனதைக் கவனித்து, அதிலிருந்த தீயகுணங்களைக் கண்டறிந்து, அவற்றை ஒவ்வொன்றாக நீக்கி, நற்பண்புகளைப் பற்றி விளக்கமாக அறிந்து கொண்டு, அவற்றை மனத்தில் பதித்து வளர்த்துக் கொண்டு வருவதன் மூலம் மனம் தூய்மையடைகிறது. தூய்மையடைந்த மனதில் எண்ணங்களும் எழாத நிலை ஏற்பட்டால் மனம் வெறுமையாகி விடுகின்றது. அந்த வெற்றிடத்தில் தெய்வீக சக்தி ஒளியாக நிறைகிறது. மனம் தெய்வீகமானால் நம் இயக்கமும் தெய்வீகமாகி விடும் என்பதைச் சொல்ல வேண்டுமா? அந்த நிலையை நாம் முயன்று அடைந்தால் நம்மால் அதனுடன் தொடர்பு கொள்ளவும் முடியும். அதனுடன் பேசிப் பதிலைப் பெறவும் முடியும்.

ஆனால் அந்த நிலையை மனம் அடையவிடாமல் இன்னும் என்னில் கர்வம், பொறாமை, தலைக்கனம் எல்லாம் இருக்கின்றன. அது உன்னுடன் பேச எப்பொழுதும் தயாராக இருக்கிறது. ஆனால் நீயோ அதனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யாமல் உன் விவகாரங்களிலேயே மனதைப் போட்டு அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாய். நீ தொடர்ந்து அதனுடன் உரையாடிக் கொண்டே இருந்தால் அது நிச்சயம் பதிலளிக்கும். உணர்வுதான் இங்கு செயல்பட வேண்டும். உனது அன்பு திறக்கப்படும்போது அவன் கருணை திறக்கப்படும்.

திறமை இருந்தால் கர்வம் இருக்கும். அவன்தான் அதை அளித்தவன் என்று எண்ணுவது ஞானத்தின் முதிர்ச்சியால். திறமை வளரும்போது கர்வமும் சேர்ந்து வளரும். சமுதாயம் பாராட்டும்போது கர்வம் வளர்ந்தால் நிச்சயம் அடிவிழும். ஒவ்வொரு நாளும் மனதின்மீது உங்கள் கவனத்தை வைத்திருந்தால் அது சரி பிழைகளை உணர்த்துவது தெரிய வரும். பிழையாகச் செய்தால் உடனே குறிப்பால் உணர்த்தும். அதை நாம்தான் கவனிக்க வேண்டும்.

நாம் இப்போது அதம்பித்துவம் (எளிமை) என்னும் பண்பு பற்றி ஆராய்வோம். நாம் செய்கின்ற தானம், தவம் ஆகியவற்றைப் பற்றி பிறரிடம் வெளிப்படுத்தி வீண் பெருமை பேசுவது தம்பித்வம் எனப்படுகிறது. டம்பமடித்துக் கொண்டு திhpவதுஉலகில் இயல்பாக உள்ள ஒரு குணம். பெண்களிடம் இது அதிகமாக உள்ள பண்பு. நம் உடை, ஆபரணங்களில் பேச்சுக்களில் நம்மை உயர்வாகக் காட்டிக் கொள்வது டம்பித்துவம். அது வராமல் பார்த்துக் கொள்வது அதம்பித்துவம். பிறரின் எளிமை, உடை, அலங்காரம், சொற்கள் ஆகியவற்றைக் கவனிக்கின்ற நாம் இனி நம்மையே கவனிப்போம். நம்மிடம் தற்புகழ்ச்சி, வீண்பெருமை உள்ளதா என நன்கு உற்றுக் கவனித்துத் திருத்த வேண்டும். ஆடம்பரம், கட்டு ஆகியவற்றில் வீழ்ந்திருக்கிறோம். மற்றவர் முன் உயர்வாய்க் காட்டிக் கொள்ளும்போது நாம் வீழ்ந்து விடுகிறோம். தியான காலத்தில் எப்படியெல்லாம் என்னை நானே உயர்த்திக் காட்டியிருக்கிறேன் என்பதைச் சிந்தித்து உணர்ந்து அவற்றை நீக்கிக் கொள்ள வேண்டும். நம்மைப் பெருமைப்படுத்துவதற்கு எப்படியெல்லாம் நடந்து கொண்டுள் ளோம் என்பதை அறிவது இத்தியானம். ஆன்மீகவாதிகள் கூடத் தாங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பதைப் பெருமையாகச் சொல்லி மற்றவரைத் தாழ்த்தும்போது அது வீண் பெருமையாகிவிடும்.

நம்மிடமுள்ள செல்வம், அறிவு இவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாதிருத்தல், உடை, ஆபரணங்கள், சொற்கள் ஆகிய வற்றில் நம்மை உயர்த்திக் காட்டாதிருத்தல் போன்றவை எளிமை என்னும் நற்பண்பின் அடையாளமாகும். தியான நேரத்தில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்து இந்த நற்குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு தற்பெருமைகள் நாம் கொண்டிருக் கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். நம்மிடமுள்ள தீயவைகளை மறைத்து நல்லவற்றை மட்டும் காட்டிக் கொள்வது மனித இயல்பு. தியானத்தில் ஈடுபடுகின்ற நாமோ நல்லவற்றையும் காட்டிக் கொள்ளாமல் இருப்போம். இப்படிக் காட்டிக் கொள்வதால் மற்றவரின் பொறாமையைத் தூண்டு கிறோம். அவரவர்கள் எங்கு பெருமையுடன் பேசுகிறார்கள், எதைப் பெருமைப்படுத்துகிறார்கள் என்பதைக் கவனித்து நாம் நம்மில் அவற்றை நீக்க வேண்டும்.

எங்கு நாம் பகட்டுடன் செயல்படுகிறோம் என்பதைக் கண்டு பிடியுங்கள். அச்சிந்தனையை மேற்கொள்ளுங்கள். பகட்டு, தாழ்வு மனப்பான்மையால் அல்லது கர்வத்தால் ஏற்படுகிறது. சமுதாயத் தாக்கமும் பகட்டிற்கு ஒரு காரணம். யாரிடத்தில் நம்மை நாம் பெருமைப்படுத்துகிறோம், எதை வைத்துக் கொண்டு நம்மை நாம் பெருமைப் படுத்துகிறோம், எவரிடத்தில் எதன் நிமித்தமாக நம்மை நாம் பெருமைப்படுத்துகிறோம், எவ்விதத்தில்? சொல்லிலா, உடையிலா, வெளியிலா? இவைகளைக் கண்டறிவோம்.

நாம் அடைய வேண்டிய பண்புகளைத் தியானிக்கிறோம். வேதாந்தத்தில் குறிப்பிட்ட பண்புகளைத் தியானித்து வருகிறோம். அடுத்த பண்பு வைராக்கியம் என்பது. சமுதாயத்தில் வைராக்கியம் என்ற சொல் வறட்டுப் பிடிவாதம் என்ற பிழையான விதத்தில் பாவிக்கப்படுகிறது. வைராக்கியம் என்பது உலகம் கொடுக்கின்ற இன்பத்தில் பற்றின்மை, விருப்பமின்மை. இது சில சமயங்களில் மனதில் தோன்றி மறைந்து விடுகிறது. இதற்குக் காரணம் இது அறிவிலிருந்து தோன்ற வேண்டும். விவேகத்திலிருந்து உதிக்கின்ற வைராக்கியம் நிலையானது. விவேகமில்லாத வைராக்கியம் குறுகிய காலத்திற்கே நிற்கும். எந்தெந்த பொருள்களில் அதிக மோகம், போகம் இருக்கின்றன என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். ஒவ்வொரு மனதிற்கு ஒவ்வொரு பொருளின் மீது பற்று அதிகரித்தால் அதற்கு அது அடிமையாக இருக்கும். சில மனிதர்கள்மீது கொண்ட மதிப்பால் மனம் அவர்களுக்கு அடிமையாக இருக்கும்.

சில சமயங்களில் மனதில் வைராக்கியம் தோன்றிப் பிறகு மறைந்துவிடும். எந்தப்போக இச்சை என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறது? உணவு, பொருள், மனிதர் இவற்றில் எது உங்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள். எப்பொருள், எந்த மனிதர்கள், எதைச் சார்ந்திருக் கிறேன் என்பதை ஆராய வேண்டும். நம்பூத உடலைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் மனதைப் பார்க்க வேண்டும். எந்தப் பொருள் என்னை அடிமையாக்குகிறது, எந்த உறவு எனக்குள் வந்து வந்து போகிறது, மனம் எதன்மீது அதிகம் ஆசை கொண்டிருக்கிறது என்றெல்லாம் மனதை உற்று நோக்கி அறிய வேண்டும்.

வைராக்கியம் என்ற பண்பை எடுத்துக் கொண்டுள்ளோம். வைராக்கியம் என்பது உலகம் தரும் போகப் பொருள்களில், போகங்களில் விருப்பமின்மை. உலகத்தில் ஏராளமான போகப் பொருள்கள் இருக்கின்றன. அதில் நம்மை எந்தப் பொருள்கள் ஈர்க்கின்றன என்பதை அறிய வேண்டும். எந்த போகங்களுக்கு அடிமையாக இருக்கிறோம், எந்தப் பழக்கங்களை விடமுடியவில்லை ஆகியவற்றை அமைதியான மனதின் துணைகொண்டு அறிய வேண்டும். தியான நேரத்தில் எதை நோக்கி ஓடுகிறேன், எப்பொருள்களெல்லாம் என்னை இழுக்கின்றன? எதை அதிகமாக எண்ணிக் கொண்டிருக்கிறேன், எவற்றையெல்லாம் விடமுடியவில்லை? இக் கேள்விகளை நம் மனதிற்குள் அடிக்கடி கேட்க வேண்டும். நிம்மதி, நிம்மதி இன்மை இரண்டுமே நம்மால் ஏற்படுத்தப்படுபவைதான். எதையுமே எடுத்து எடுத்து சிந்தித்தால் நிம்மதியில்லை. எல்லாம் அவன் செயல், அனைத்தையும் அவனே பார்க்கட்டும் என்று எதையுமே மனதில் எடுக்காமல் இருந்தால் நிம்மதி. ஆனால் அறிவு நிம்மதியை அடைய விடாது.

நம்முடைய பலவீனங்களை மற்றவர்கள் அறிந்துள்ளார்கள். நாம் அறியவில்லை. நாமே அறிவது ஆன்மீக முன்னேற்றப்படி. அதற்கு நற்பண்புகளைப் பற்றிச் சிந்தித்தல் என்னும் தியானப் பயிற்சி உதவி செய்யும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *