அனைத்துப் பெருமையும் அவனுடையதே!

தொடர்ந்து ஆன்மீக உபதேசம் பெறுகின்ற நிலையில் ஆன்மீகப் பயிற்சியில் உங்களது முன்னேற்றம் எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்று இப்போது சுய சிந்தனையில் ஈடுபட்டு ஆராய்ந்து பாருங்கள். முன்பு சாதாரண விதத்தில் வாழ்ந்து வந்த உங்களுக்கும் இந்த உபதேசத்தில் நனைந்த உங்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரிகின்றதா? இதை எவ்வாறு அளப்பது என்றால் உங்களது மன அமைதியை, நிம்மதியை அல்லது உங்களது வேலையில் இப்போது ஏற்பட்டுள்ள ஈடுபாட்டையும் சிறப்பை யும் வைத்துக் கணக்கிடலாம். வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் உணர்ந்தீர்களா? உங்களோடு உங்களுக்கு உள்ள உறவு, உங்கள் உறவுகளோடு உள்ள உறவு, சமுதாயத்தில் பழகுகின்ற உறவு, உங்கள் பொருள்களோடு உங்களுக்கு உள்ள உறவு போன்றவை எல்லாம் வளர்ச்சிக்கு மாறி விட்டனவா? இன்னமும் உங்களை நீங்கள் குறைசொல்லிக் குற்ற உணர்வுகளோடு பார்க்கின்ற நிலைதான் இருக்கிறதா? முன்பு செய்த பிழைகளை நினைத்து இன்னும் வருந்திக் கொண்டிருக்கிறீர்களா?

சந்தர்ப்ப சூழ்நிலைகளும் சுற்றி இருப்பவர்களும் என்னில் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் மன பாதிப்புகள் எதுவும் இப்போது என்னிடமில்லை. அதற்கு மாறாக அவை ஏன் வருகின்றன என்கிற காரணத்தை நான் புரிந்து கொள்கிறேன். எனக்கு வருகின்ற பிரச்சனையை நான் தவிர்த்தால் அது கர்மாவாகி மீண்டும் வரும். புரிந்து கொள்வதுதான் நல்லது போன்ற சிந்தனைத் தெளிவுடன் கூடிய ஆன்மீக வளர்ச்சி உங்களுக்கு ஏற்பட்டதென்றால் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் இதன் விளைவு சென்று சேரும். நீங்கள் நிம்மதி யாகவும், அமைதியாகவும் இருந்தால் அந்த அமைதி அலை மற்றவரையும் அமைதிப்படுத்த அணுகும்.

இயல்பிலேயே நம்மிடம் ஆன்மீக வளர்ச்சிக்குரிய தன்மைகள் அமைந்திருக்கின்றன. சிறு வயதிலிருந்தே பிறரிடம் அன்பு செலுத்துதல், உதவி செய்தல், பிராணிகளிடம் அன்பு, இரக்கம் போன்ற நல்ல பண்புகள் எல்லோரிலும் இருக்கின்றன. ஆனால் சரியான உண்மைகள் தெரியாததால் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி நம்மிடம் இல்லை. நம்மைப்பற்றி அறிய முற்படுகின்ற தருணத்தில்தான் இவற்றின் உயர்வில் நமது கவனம் சென்றது. இப்போது இந்த ஆன்மீக வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி அவசியம். இந்த சுய ஆராய்ச்சிதான் உங்களை உங்களுக்குச் சுட்டிக்காட்டும். இல்லாவிட்டால் உலகத்தோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தன்நிலை பற்றிப் புரியாத மனக்குழப்பத்தில் டல்லடிக்கப் பார்க்கும். ‘டல்’ என்பதே ஒருவித வளர்ச்சியின்மைதான். எனவே ஆன்மீக வளர்ச்சி உங்களில் ஏற்பட்டிருக்கிறதா என்பதைப் பற்றி இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். ஆன்மீக வளர்ச்சி என்பது பலருக்குப் பலமாதிரி இருக்கும். உனக்கு எதைச் சுட்டி நிற்கிறது? ஆன்மீக வளர்ச்சியில் எது உனக்கு விருப்பமுடையதாக இருக்கிறது?

அறிவு என்பது அடைவதற்காகவே. ஒன்றைப்பற்றி அறிவதால் பயனில்லை. எனக்குத் தெரியும் என்ற கர்வம்தான் அதன் பயன். பெற்ற அறிவு செயல்முறைப்படுத்தப்பட வேண்டும். மற்றவர் பாராட்டுவதற்காக அல்ல. அவர்களின் பாராட்டு நிலையானதல்ல. நன்மையிருந்தால் பாராட்டுவான். தீமையாகத் தெரிந்தால் குறை சொல்வான். பாராட்டுதலுக்கும் ஏசுதலுக்கும் இடைப்பட்ட உறுதியான மனோநிலை ஒன்றைப்பற்றிய உண்மைகள் முழுமையாகப் புரிந்தால்தான் ஏற்படும். அந்த மனோநிலைதான் வலிமையைத் தந்து ஒருவனை உயர்த்திக் கொண்டு போகும். விவேகம் இருப்பவனுக்குத்தான் உறுதி யான மனோநிலை வைராக்கியமாக மாறும்.

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது நமக்கு முன்வருகின்ற பிரச்சனைகளின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டு அவற்றைக் கையாள்வது, குறையிருந்தாலும் அவற்றை நிறைவாக ஏற்றுக் கொள்வது போன்ற எல்லாமே ஆன்மீக வளர்ச்சிதான். நீங்கள் பெறுகின்ற மன அமைதிதான் ஆன்மீகத்தின் வெற்றி.

கர்மாவை அழிக்க இயலாது என்று சொல்கின்றனர். கர்மாவின் பிரதிபலிப்பு மனதில் தீய பண்புகளாக உருவெடுத்து நின்றன. இந்த உபதேசங்களின் வாயிலாக நற்பண்புகளை எடுத்துச் சொல்லிச் சொல்லி அந்தத் தீய உணர்வுகளை உங்கள் மனதிலிருந்து நீக்க முயன்று கொண்டிருக்கிறேன். பொறாமை உங்கள் மனதில் இல்லை என்றால் கர்மா எங்கே? எண்ண ரூபத்தில் பொறாமை உங்கள் மனதில் இருக்கிறது. இந்த உபதேசத்தால் அதை எடுத்து விட்டேன். பொறாமைபற்றிச் சரியாகப் புரிந்து கொண்டபின் இனி உங்களுக்குள் பொறாமை இருக்குமா? இதுதான் கர்மாவை மனத்திலிருந்து எடுக்கின்ற முயற்சி.

நற்பண்புகளைத் தியானித்து வருகிறோம். சில குணங்களை முயற்சி செய்து அடைய வேண்டும். சிலவற்றை முயற்சி செய்து நீக்க வேண்டும். எவற்றைச் சேர்க்க வேண்டும், எவற்றை நீக்க வேண்டும் என்ற அறிவு போதாது. ஆகவே பண்புகளைத் தியானமாகப் பயின்று வருகிறோம். ஏனெனில் மனதில் இவை ஆழமாகப் பதிய வேண்டும்.

அடுத்து நாம் புரிந்து கொள்ளவேண்டிய நற்பண்பு அமானித் துவம். அமானித்துவம் என்றால் கர்வம் கொள்ளாதிருத்தல் என்று பொருள். கர்வம் கொள்கின்ற கடைசித்தளம் ஆன்மீகம். எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் ஆன்மீகவாதிக்கு எழும். தன்னை அறிந்தவன் அடங்கி இருக்க வேண்டும். கர்வம் கூடாது.

பணம், பதவி, அறிவு, வெற்றி, மற்றவர்களைக் காட்டிலும் மேலான பொருட்களை வைத்திருத்தல் இவைகளெல்லாமே நமக்குக் கர்வத்தைக் கொடுக்கலாம். ஆனால் இவைகளைப் பெற்றிருந்தும் அதற்காகக் கர்வப்படாமல் இருத்தலே அமானித்துவம். என்ன இருந்தாலும் கர்வப்படாமல் இருத்தல் அமானித்துவம்.  அதை நாம் தியானத்திற்கு இனி எடுத்துக் கொள்வோம். தியானிக்க வேண்டிய முறை, எந்தெந்த செல்வங்கள் என்னிடத்தில் வந்துள்ளனவோ அவையனைத்தும் அவனுடைய அருளினால் வந்தவை. என்னுடைய முயற்சி சிறிதளவே. ஈஸ்வரன் கருணையினால் இவற்றை நான் அடைந்துள்ளேன். இவ்வாறு நாம் அடைந்துள்ள பிரசாதங்களில் அவனது அருளை எண்ணிப் பார்த்து அனைத்துப் பெருமையும் அவனுடையதே என்று நினைத்து அமானித்துவம் பெறவேண்டும். அவற்றின் நிலையாமையைத் தியானிக்க வேண்டும். இறையருள் என்று தியானிக்க வேண்டும். நாம் பெற்றுள்ள அனைத்துச் செல்வங்களுமே ஈஸ்வரனுடைய பிரசாதம். இறைவனை நினைத்து நினைத்துத்தான் கர்வத்தை நீக்க முடியும். அகங்காரத்தை ஒடுக்க முடியும். நாம் அனுபவி;க்கும் அனைத்திற்கும் அவனே காரணம். அகங்காரத்தை முன்வைத்து அதற்குள் அவன் ஒளிந்து கொண்டிருக்கிறான். அனைத்தும் அவனது பெருமையாக இருந்தும் இறைவன் அவற்றைக் காட்டிக் கொள்ளவில்லை.

நாம், நமது என நினைப்பது அறியாமை. கர்வமின்மை என்பது நாம் எடுத்துக் கொண்ட பண்பு. வாழ்க்கையில் வெற்றிகளைச் சந்தித்துக் கொண்டே வந்தால் மனமகிழ்ச்சி, உற்சாகம் இவற்றுடன் தவறான விளைவாக வருவது கர்வம். அகங்காரம் வலுவடைகிறது. அதை நீக்குதல் நாம் எடுக்க வேண்டிய முயற்சி. நமது பொருள், செல்வம், அறிவு மற்ற உடமைகள் நம்மைக் கர்வமுடையவனாக மாற்றுகிறது. நாம் அடைகின்ற அனைத்துச் செல்வங்களின் நிலையாமையை நாம் உணர வேண்டும். அனைத்துச் செல்வங்களும். விளையாட்டும் வாழ்வில் ஒருகாலம் வரைதான். இந்த உணர்வைத்தான் பொருட்களை அனுபவிக்கும் போது நாம் புத்தியில் கொள்ள வேண்டும். அனைத்துச் செல்வங்களின் நிலையாமையை எண்ணிப் பார்க்க வேண்டும். எந்த ஒன்று கர்வத்தைக் கொடுக்கிறதோ அதைக் கண்முன் நிறுத்தி அதன் காலத்திற்கு உட்பட்ட தன்மையை எண்ணிப்பார்த்து உண்மை நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். எதுவுமே நிலையானதல்ல, எல்லாமே வரும், போகும் என்பதைப் புரிந்து கொண்டால் நிம்மதி கெடாது; மனம் பக்குவப்படும். கர்வத் துடன் நடந்து கொள்பவர்கள் பிரம்மத்திற்குப் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். கீழ்நிலைக்கு இறங்கத்தான் வேண்டும்.

நம் உடல், ஆரோக்கியம், நண்பர்கள், வயது, இளமை, பொருட்கள், உரிமை உள்ளவை, அறிவு, ஞாபகசக்தி போன்ற அனைத்தும் ஒரு காலம்வரைதான். இவை எதுவும் நிரந்தரமான தல்ல. இதன் காரணமாகக் கர்வம் கொள்ளுதல் வேடிக்கைக் குரியது. நம்முடைய மனதில் கர்வம் ஏற்படாமல் இருக்க இரண்டு விதமான சிந்தனைகளை மேற்கொள்ளலாம். ஒன்று நாம் அடைந்தவற்றை நிலையற்றவையாக எண்ணிப் பார்த்தல். பெற்ற அறிவு, செல்வம், புகழ், இளமை எல்லாமே நிலையற்றவை என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளுதல். இரண்டாவது இவையனைத்தும் ஈஸ்வரனது பெருமையே தவிர எதுவுமே என்னுடையதல்ல. இவையனைத்திற்கும் ஈஸ்வரனே உரிமையாளன். எவை குறித்துக் கர்வப்படுகிறோமோ அவை எனது கர்வத்தைச் சார்ந்ததல்ல. எனவே எது குறித்தும் என்னில் கர்வம் ஏற்படாமலிருக்க அனைத்துமே இறைவனைச் சார்ந்தவை என்ற சிந்தனையில் மூழ்குவோம். இப்படிச் சிந்திக்கப் பழகினால் மனச் சமநிலை கெடாது.

எனது பொருள்கள், ஆயுள், அடைந்த அறிவு அனைத்தும் இறைவனுடைய அருளினால் அடையப் பெற்றவை; எனது அகங்காரத்தினால் அல்ல. இன்று நான் இவ்விதம் இருப்பது இறைவன் எனக்கு இட்ட பிச்சை. ஆகவே கர்வத்திற்கு இடமில்லை. அவனை அடைய நான் முயற்சித்தது, முயற்சித்ததால் அவனைப் பற்றி நான் சிந்தித்தது எனது எதிர்மறைக் குணங்களை நீக்க முயற்சிப்பது இவை எல்லா வற்றையும் நான் அவனை நம்பித்தான் மேற்கொள்கிறேன். அவனை நான் அடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். ஆகவே எனது முயற்சியில் அவனது பொறுப்புத் தான் அதிகம்.

அளவற்ற ஆற்றலைக் கொண்ட பெரும் சக்தியிடம் உங்களை அறியாமலேயே நீங்கள் உங்களை ஒப்படைத்து விட்டீர்கள். நான் உன்னை என்னில் நிறுத்துவதற்கு உன்னை என்னில் இருந்து வெளிப்படுத்துவதற்கு பல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். உனது அருளால்தான் இவற்றை மேற் கொள்ள என்னால் முடிகிறது. எனவே எனது முயற்சிகளுக்குப் பதிலளிக்க வேண்டியது நீதான். எல்லாவற்றையும் செய்ய வைக்கிற என்னை உன்னில் சேர்க்கவும் வேண்டும். என்னைப் பொருள்களிலிருந்தும் உடலிலிருந்தும் நான் பிரிக்கிறேன். அப்படிப் பிரித்துப் பார்க்கின்றபோது உனது தெய்வீக சக்தி மட்டும்தான் இருக்கிறது. என் வாழ்க்கையை நான் வாழ்கின்ற போது எனக்குத் தேவையானவற்றை நீதான் அருளுகின்றாய். அதேவேளையில் இடையூறுகளைத் தந்து என்னைத் துன்பத்தில் ஆழ்த்துவதும் நீ தான்! என்று அவனோடு நீங்கள் உரையாடிப் பழகவேண்டும். அவனோடு தொடர்புகொள்ள மானசீக உரையாடல் ஒருவழி.

என்னுடையது என்று ஒன்றும் இல்லை. எல்லாமே அவனுடை யது. எனது இயக்கம் அனைத்துமே அவனதுதான். இதை எப்போதும் நினைப்பதற்கு விழிப்புணர்வு தேவை. அவனுடைய வெளிப்பாடு நான். என்னுடைய உள் தூண்டல் அவன். இதைத்தவிர வேறு ஒன்றுமில்லை. இதை உணரும்போது என்னில் ஒரு திருப்தி, ஒரு நிறைவு ஏற்படும். எனது கர்ம அளவிற்கு ஏற்றபடி எனது வாழ்க்கை அமைந்திருக்கிறது. இதில் அமைதி கெடாமல் வாழ்ந்து முடிப்பதுதான் நாம் செய்ய வேண்டியது. எனது மனம் எப்போதும் அவனில் ஒட்டியிருக்க வேண்டுமே தவிர உலக விவகாரங்களில் சிக்கி அலைபாயக்கூடாது. ஒட்டாத நிலையில் உலகத்தை அனுபவிக்க வேண்டும். உலகத்தை அனுபவிக்கும் போதே அதில் ஈடுபட விடாமல் அது தடுக்கும் என்று வேதம் சொல்கின்றது. தன்னை நோக்கி என்னை இழுப்பதற்காகத் தான் அது வாழ்க்கையில் இப்படிப்பட்ட தடைகளை ஏற்படுத்து கின்றது. ஒவ்வொரு நாளுமே நான் எதை அனுபவிக்க வேண்டும் எதை அனுபவிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிப்பவன் அவனாகத்தான் இருக்கிறான். நமது வாழ்க்கையில் நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்திருந்தால் நான் சொல்வது விளங்கும். இவையெல்லாம் உணர்த்துவது என்ன? நம் கையில் ஒன்றுமே இல்லை, நீ தேடவேண்டியது படைப்பையல்ல; படைத்தவனைத்தான். ஆகவே தியானத்தின் மூலம் தீய பண்புகளை நீக்கி நற்பண்புகளை வளர்த்து அவனை அடைவதையே நோக்கமாகக் கொண்டு வாழுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *