வாழ்வைச் சுகமாக்கும் சுவாசப் பயிற்சி

ஆன்மீகப்பயிற்சி என்ற சொல்லிற்கு உங்களை நேர்ப்படுத்துதல் என்று ஒரு பொருள் இருக்கிறது. நாம் இப்போது பார்த்து வருகின்ற பண்புகளைத் தியானம் செய்து அவற்றை எங்களில் பதிக்கின்ற பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களது கர்மாவால் இந்தப் பண்புகளின் ஆழம் முன்பு எமக்கு விளங்கவில்லை. இவற்றைப்பற்றி அறிந்திருந்தும் கடைப் பிடிப்பதில் எமது கவனம் முன்பு செல்லவில்லை. ஓரிரண்டு பண்புகள் சிலருக்கு இருக்கலாம். ஆனால் எல்லா நற்பண்புகளும் நம்மில் செயல்பட்டன என்று சொல்ல முடியாது. அதற்குக் காரணம் மனோ சக்தி எனது கர்மாவால் திரிந்து செயல்பட்டதுதான். இந்தப் பண்புகளைப் புரிந்து எனதாக்குவதன் மூலம் மன ஆற்றலை நேர்க்கோட்டிற்குக் கொண்டு வரலாம். கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்ற சூட்சும சரீரத்தில்தான் இந்த மன ஆற்றல் இருக்கிறது. இதனை சித்தர்கள் நாடி என்று சொன்னார்கள். இந்த நாடிகள்தான் சக்தியைக் கொண்டுசெல்கின்ற பாதை.

நரம்புகள் ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. நாடிகள் சக்தியைக் கொண்டு செல்கின்றன. நாடிகளைக் கண்களால் பார்க்க முடியாது. மூச்சுப் பயிற்சி செய்பவர்கள் நாடி சுத்தி செய்கிறோம் என்று சொல்வார்கள். அதாவது மூச்சுப் பயிற்சி மூலம் நாடிகளைச் சுத்தம் செய்யலாம். எப்படி உயிரும், மனமும், புத்தியும் கண்ணுக்குத் தெரியாதோ அதுபோல நாடியும் கண்ணுக்குத் தெரியாது. இவையெல்லாம் சூட்சுமமாக அமைந்திருப்பவை.

விபத்தில் அகப்பட்டுத் தன் வலது காலை இழந்த ஒருவன் தனக்குக் கால் இல்லை என்பதை மறந்து பாதத்தில் மிகவும் வலிக்கிறது என்று வலியை உணர்ந்து சொல்லியிருக்கிறான். ஏனெனில் அங்கு நரம்பில்லை ஆனால் நாடி நிற்கிறது. தனக்குக் கால் இல்லை என்பதை அவன் நன்றாக உணரும்வரை கால் இருப்பது போன்ற உணர்வு அவனுக்கு இருக்கும். நாடியை மருத்துவர்கள் இன்னும் ஒத்துக் கொள்ள வில்லை.

ஒருவனது மனம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அவனது நாடி இருக்கும். அழுக்கு இல்லாத மனத்தை உடையவனது நாடி பிரகாசமாக இருக்கும். அதனால் அவனது முகம் பிரகாசமாக இருக்கும். அதைத்தான் தேஜஸ் என்று சொல்கிறார்கள். குண்டலினி சக்தி என்னும் ஆதாரசக்தி ஒவ்வொரு சக்கரமாகத் தொடுவதற்கு இந்த நாடிதான் உதவுகிறது. இடகலை, பிங்கலை, சுழுமுனை என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவை நமது சூட்சும சரீரத்தில் அமைந்துள்ள சில நாடிகளின் பெயர்களே. நான் இப்போது விளக்கிக் கொண்டிருக்கின்ற நற்பண்புகள் நம்மிடம் இல்லாவிட்டால் இந்த நாடி ஓட்டம் ஆறு சக்கரங்களையும் தொடாது. அதாவது நாளமில்லாச் சுரப்பிகளை இணைக்காது. மனம் கோணினால் சக்கரங்களின் தொடர்பும் கோணும். சுரப்பிகள் தாங்கள் சுரப்பதை நிறுத்திவிடும்.

அதிக அளவில் ஒருவர் கவலைப்பட்டால் அவரது கணையம் பாதிக்கும். என்ன மனநிலை இருக்கிறதோ அந்த அளவிற்கு உடல் பாதிப்பு அடையும். மனம் மிருதுவாகவும் எந்தவித வில்லங்கங்களுக்கும் உட்படாமலும் இருக்க வேண்டும். ஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் ஒரு பாடகி ‘மார்கழித் திங்களல்லவா’ என்ற பாடலைப் பாடினாள். இந்தப் பாடலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று நடுவர் கேட்டதற்கு அவள், ஒரு பக்கம் பக்கவாதத்தால் கையும் காலும் பாதிக்கப் பட்டிருந்தேன். அச்சமயத்தில் இந்தப் பாடலை எப்போதும் தொடர்ந்து பாடிக் கொணடே இருந்தேன். கர்நாடக ராகத்தில் அமைந்த அந்தப் பாடலின் சக்தியால் எனது பக்கவாதம் சிறிது சிறிதாகக் குணமடைந்து விட்டது. இன்று இங்கு வந்து பாடும் சக்தியை எனக்குத் தந்தது. இந்த உண்மையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்துப் பாடினேன் என்றாள். மருந்துகளால் தீர்க்க முடியாத நோய்களை இசையின் அங்கங்களான பலவித ராகங்கள் தீர்த்து வைக்கின்றன. அந்தப் பெண் பாடலால் மனதை ஒன்றுபடுத்தினாள். நாடிகளை ஒழுங்குபடுத்தினாள். அவை சுத்தமாகி நோய் தீர்ந்தது.

நாம் முன்பு பொறாமை என்ற தீயகுணத்தால் ஏற்படும் விளைவுகளைப் பார்த்தோம். பொறாமைப் படுவதால் சுரப்பிகள் ஒழுங்காகச் சுரக்காது. நோய்கள் ஏற்பட இவை அடிப்படைக் காரணம். நாடியைச் சுத்தம் செய்து நேராக்குவதற்கு நற்பண்புகளை வளர்த்தலும் தியானித்தலும் முக்கியத் தேவைகள் என்று வேதம் சொல்கிறது. தொடர்ந்து கோபப் பட்டால் ரத்தத்தில் கட்டிகள் வந்துவிடும். கோபப்படுவது இறுதியில் மாரடைப்பில் சென்று முடியும். பொறாமை என்பதும் அவ்வளவு கொடுமையானதுதான். திறமைக்கும் திறமையின்மைக்கும் இடையில் தாழ்வு மனப்பான்மைக்கும் கர்வத்திற்குமிடையில் பொறாமை நிச்சயம் இருக்கும். தொடர்ந்து தியானப் பயிற்சியை மேற்கொண்டால் நாடிகளில் ஓடுகின்ற உயிர்ச்சக்தி நேர்ப்படுகிறது. நாடிகளில் இடகலை என்பது இடப்பக்கமாகவும் பிங்கலை என்ற நாடி வலப்பக்க மாகவும் இயங்குபவை. நாடிகளைச் சுத்தப்படுத்தி ஒழுங்கு படுத்தி அடி ஆதாரத்தில் இருக்கின்ற மின்னல் கொடிபோன்ற குண்டலினி சக்தியை மேலெழுப்பி மூளையோடு இணைப்பது தான் தியானம் எனப்படுகிறது. அப்பொழுது எல்லா இடங்களும் ஒளியாகத் தெரியும். இதுதான் தியானப் பயிற்சி.

கர்மப் பதிவுகள் தான் நாடிகளின் வழியாகச் செயல் படுகின்றன. இதே நாடிகள்தான் கர்மாவிற்கு ஏற்றபடி நரம்புகளை இயங்கச் செய்கின்றன. சிந்தனை செய்கின்ற ஆற்றல் உடம்பின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பது இதுவரை முடிவாகத் தெரியவில்லை. மூளையின் ஒரு பகுதியிலிருந்து சிந்தனை செயல்படுகிறது என்று அறிவுலகம் நம்பி ஏற்றுவருகிறது. இப்படி மூளையிலிருந்து உற்பத்தியா கின்ற எண்ணங்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்லும் பொறுப்பு நாடிகளுக்கு இருக்கிறது. இந்த நாடிகள் மூலமாகவே குண்டலினி சக்தி கீழேயிருந்து மேலே ஏறிச் செல்கிறது.

நாடிகள் மிக நுட்பமானவை. இவை சாதாரண கண்களுக்குத் தட்டுப்படாது. மனித எலும்புகளை நரம்புகளைப் பார்க்கலாம். நாடிகளைப் பார்க்க முடியாது. நவீன உருப்பெருக்கிகள் மூலம் கூடக் காண முடியாது. இந்த நாடிகள்தான் மனித உடலை ஆட்சி செய்கின்றன. உயிர் உடலில் தங்குவதற்கு நாடிகளே ஆதாரமாய் இருக்கின்றன என்பதை முதலில் உலகிற்கு உணர்த்தியவர்கள் நமது சித்தர்களே ஆவார்கள். பூதசுத்தி ஸம்ஹிதை என்ற வைத்தியநூல் நம் உடலில் 72,000 நாடிகள் இருக்கின்றன என்று கூறுகிறது. பிரபஞ்ச சாரம் என்ற நூல் 3 லட்சம் நாடிகள் இருப்பதாகச் சொல்கிறது. சிவஸம்ஹிதை என்ற நூல் மூன்றரை லட்சம் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கணக்கு எப்படி இருந்தாலும் இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சரஸ்வதி, லட்சுமி, மேதா, காந்தாரி, அலங்குடை, சுக்குணி, குரு ஆகிய பத்து நாடிகளே முக்கியம் என சித்தர்கள் கூறுகின்றார்கள்.

இவை மூலாதாரத்திலிருந்து சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுப்தி, ஆக்ஞை ஆகிய ஐந்து ஆதாரங்களைத் தொடர்பு கொண்டு மேலெழும்பும்போது ஒன்றையொன்று நேருக்குநேர் சந்தித்துக் கொள்கின்றன. கத்தரிக்கோல் போன்று மேலே வருகின்ற இரு நாடிகளும் புருவ மத்தியில் வந்து விரிந்து இடகலை நாடி என்று இடது மூக்கையும் பிங்கலை நாடி என்று வலது மூக்கையும் ஆதாரமாகக் கொண்டு நிற்கின்றன. இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய நாடிகளுக்குள் இடகலையிலிருந்து இரண்டு நாடிகளும் பிங்கலையிலிருந்து இரண்டு நாடிகளும் உருவாகி வலமாகவும் இடமாகவும் இரண்டு கண்களையும் இரண்டு காதுகளையும் செயல்படச் செய்கின்றன. சுழுமுனையிலிருந்து தோன்றும் ஒரு நாடி, நாவின் அடிப்பகுதியில் நிற்கிறது. இந்த நாடியை சிகுவை அல்லது சிங்குவை என்று சித்தர்கள் குறிப்பிடு கின்றார்கள். சுவாதிஷ்டானத்திலிருந்து இரண்டு நாடிகள் புறப்படுகின்றன. இவை கீழ் நோக்கிச் சென்று ஆண்குறி, பெண்குறிகளைத் தொடுகின்றன. இதற்குச் சங்கி என்று பெயர். எரு வாயைத் தொடுகின்ற இன்னொரு நாடிக்குக் குரு என்று பெயர்.

இடகலை, பிங்கலை, சுழுமுனை நாடிகள் கடவுளோடு மனிதனை இணைக்கும் நாடிகள் என்றால் சரஸ்வதி, லட்சுமி, மேதா என்ற நாடிகள் இந்த உலகியல் வாழ்க்கையைச் செம்மையாக்கித் தருகின்றன. இந்த அமைப்பினால்தான் சிலர் கல்வி, கலைகளில் ஆர்வமுள்ளவர்களாகவும் சிலர் செல்வச் செழிப்பு மிக்கவர்களாகவும் சிலர் மேதைகளாகவும் திகழ்கின்றார்கள். இடகலை நாடிக்கும் சரஸ்வதி நாடிக்கும் உறவு உண்டு. அதுபோல சுழுமுனை நாடிக்கும் மேதா நாடிக்கும் நெருக்கம் உண்டு. சரஸ்வதி நாடி மூளையோடு தொடர்பு கொண்டது. மனிதனின் சிந்தனை ஆற்றல் சரஸ்வதி நாடியாலேயே செயல்படுகிறது. இதனால்தான் சரஸ்வதியைக் கல்வி மற்றும் கலைகளின் கடவுளாக ஞானிகளும் முனிவர்களும் கண்டார்கள்.

லட்சுமி, சரஸ்வதி, சுழுமுனை, மேதா நாடிகள் எல்லா மனிதர்களுக்கும் சமமாக, ஒரே மாதிரியாகச் செயல்படுவது கிடையாது. தனிமனிதனின் தன்மைகளுக்கேற்பக் கூட்டியோ குறைத்தோ செயல்படுகின்றன. இதன் செயற்பாட்டிற்கு வம்சாவளி, பரம்பரை, சுற்றுப்புறச் சூழல், சுய சிந்தனை போன்றவை வெகுவான காரணங்களாக இருக்கின்றன. மனிதன் திறமையானவனாகவும் திறமையற்றிருப்பதற்கும் இந்த நாடிகளே ஆதாரங்கள். கடவுளிடம் மனிதனை அழைத்துச் செல்லும் நாடிகளாக இடகலை, பிங்கலை நாடிகள் இருப்பதனால் அவை பேதமில்லாமல் அனைவருக் கும் செயல்படுவதாக இருக்கிறது. பிராண சக்தியை உடம்பில் கட்டுப்படுத்தி உடல் இயக்கத்திற்கு எந்த நேரத்தில் எது தேவை என்பதைக் கண்டறிந்து இந்த நாடிகள் செயல்படுகின்றன. அதனால் இவற்றைச் சூரியகலை, சந்திரகலை என்று சித்தர்கள் அழைக்கின்றார்கள். சந்திரகலை என்ற இடகலை நாடி செயல்படும்போது இடது மூக்கு வழியாக சுவாசம் நடக்கிறது. சூரியகலை என்ற பிங்கலை நாடி செயல்படும்போது வலது மூக்கு வழியாக சுவாசம் நடக்கிறது. சூரியகலை இயங்கும்போது சந்திரகலை அசையாது. சந்திரகலை செயல்பட்டால் சூரியகலை நின்றுவிடும். சந்திரகலை சுவாசம் குளிர்ச்சியையும் சூரிய கலை சுவாசம் வெப்பத்தையும் உடம்பிற்குத் தருகின்றன. இந்தத் தட்ப வெப்ப நிலையைப் பயன்படுத்தியே குண்டலினி சக்தி மனித உடலின் வெப்பத்தை சீராக வைக்கிறது.

சுவாசம் என்பது மனித உடலில் பல இந்திர கலைகளை நடத்துகின்றது. உடம்பு உயிரோடு இருப்பதற்குப் பிராண வாயுவை உள் வாங்கி வெளியே விடுவதோடு மட்டும் சுவாசத்தின் பணிகள் முடிவதில்லை. அருள்நிலை என்ற ஆன்மீகப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்வதற்கும் சுவாசம் பயன்படுகிறது. சுவாசத்தை ஒழுங்குபடுத்தினால் மனம் ஒழுங்குபடும். சுவாசத்தைக் கட்டுப்படுத்தினால் மனம் அடங்கும். மனம் ஞானத்தாலும் தொடர்ந்த தியானப் பயிற்சியாலும் அமைதியடைந்தால் சுவாசம் சீராக இருக்கும். பொருள்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவை யானவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் சுவாசம் பயன்படு கிறது. சுவாச ஓட்டத்தில் நமது ஆயுளின் அளவு அடங்கி இருக்கிறது என்று வாசியோகம் குறிப்பிடுகிறது. ஒரு நிமிடத்திற்குப் 10, 12 என்று சுவாசம் இருந்தால் சரி. அதுவே 19, 20 என்று அதிகரித்தால் விரைவில் போய் விடுவார். 4, 5 என்று குறைந்தால் அவர் பெரிய யோகி. கெட்ட பழக்கங்கள் என்று சமூகத்தால் அடையாளம் காணப்பட்டவை எல்லாம் சுவாசத்தை ஒரு நிமிடத்திற்கு 20, 25 ஆக அதிகரிக்கச் செய்யும். நம்மை அமைதிப்படுத்தினால் சுவாசம் அமைதிப்படும். சுவாசத்தைக் குறைவாக விடுகின்ற நாகம், ஆமை போன்றவை எல்லாம் 100, 125 வருடங்கள் உயிர் வாழும். எனவே இனி எதற்கும் பதட்டப்படாமல் அமைதியான சூழ்நிலையில் இருக்கப் பழகுங்கள்.

சுவாசத்தை மாற்றியமைத்தால் நமது விருப்பப்படி விரும்பிய வற்றை அடையலாம் என்று ஹடயோகம் கூறுகிறது. நமது ஊரில் உள்ள சிலபழக்க வழக்கங்களைக் கவனித்திருந்தால் இது உண்மை என்பது விளங்கும். பெரிய பண்ணையார்களிடம் பணிபுரிகின்ற வேலையாட்கள் தங்களுக்கு எஜமானிடம் இருந்து ஏதாவது கேட்டுப் பெறவேண்டுமென்றால் தமது மேல்துண்டை எடுத்து இடது கை இடுக்கில் வைத்துக் கொண்டு கேட்பார்கள். அப்படிச் செய்யும்போது வலது மூச்சு ஓடும். அப்படி வலது பக்க சுவாசம் ஓடும்போது அவர்கள் சொல்வதை எதிரில் உள்ளவர் கேட்பார். தரகர்கள் குடையை இடது பக்கம் வைத்துப் பேசுவதும் ஒரு வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழையச் செய்வதும் இந்தக் காரணத்திற்காகத்தான். வலது பக்க சுவாசம் ஓடிற்றென்றால் கோபம் போன்ற எதிர்க் குணங்கள் ஏற்படாது. இடது பக்கமாக அழுத்திக் கொண்டு அமர்ந்தால் வலது பக்கம் சுவாசம் ஓடும்.

சூரிய கலையை வலது நாசிவழியாக சுவாசத்தை நடத்து வதற்குக் கற்றுக் கொண்டால் படித்தது அனைத்தும் மனதில் ஒட்டிக் கொள்ளும். சுவாசத்தால் எத்தனையோ சாதனைகளைச் செய்யலாம். சித்தர்களின் தலைவரான திருமூலர் சுவாசத்தை மாற்றித் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் விரும்பின குழந்தை பிறக்கும் என்று கூறுகின்றார். இப்படி சுவாசத்தின் பயன்கள் விரிந்து கொண்டே செல்கின்றன. நீங்கள் தியானம் செய்வது இந்த நாடிக்கு உள்ளாகத்தான் மனதைச் சென்று அடைகின்றது. இந்த உடம்பைச்சுற்றி நாடி ஒளியாக ஒளி அலையாக உணர்வாகக் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது. அதைத்தான் ஒளி உடம்பு என நான் சொல்லிக் கொண்டு வந்தேன்.

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 1960ஆம் ஆண்டிற்குப் பிறகு மக்கள் பூமியை நேசிக்கத் துவங்கி விட்டனர். சுற்றுச் சூழலில் மாசு படுவதைத் தவிர்க்க விரும்புகின்றனர். சிறுசிறு குழுக்களாகத் தங்களுக்குள் சண்டையிடுவதை விரும்புவதில்லை. நட்புணர்வு வளர்ந்திருக் கிறது. பிறரது திறமைகளை வளர்ப்பதில் உதவி செய்ய முன்வருகின்ற மனப்போக்குடன் சுய முன்னேற்றத்தையும் பெண்களுக்கு சம உரிமை தருவதையும் வரவேற்கின்றனர். புதிய வழியில் சிந்தனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தப் பூமியை இது எங்களது பூமி என்று நேசிக்கவும் பாதுகாக்கவும் துவங்கி விட்டனர் என்று தெரிய வந்திருக்கிறது. இப்படி ஆன்மீகத்தை நோக்கிய ஒரு முன்னேற்றம் ஏற்படத்துவங்கி இருக்கிறது. இப்போது மக்களின் கவனம் கோவில்களில் இருந்து விடுபட்டு ஆன்மீகத்தை நோக்கி நிம்மதியைத் தேடுகின்ற முயற்சியாகத் திரும்பியிருக்கிறது.பூமியே மனிதர் களை ஆன்மீகத்தை நோக்கித் தள்ளிச் செல்கின்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மனிதத்தன்மை வெளிப்பட்டு உயர்கின்றது.

எனவே நம்மிடமுள்ள தீய குணங்களின் குறைபாடுகளையும் அவற்றால் ஏற்படுகின்ற பாதிப்புக்களையும் நன்றாகச் சிந்தித்து அவற்றை நம்மிடமிருந்து இல்லாமற் செய்கின்ற முயற்சியில்  தொடர்ந்து ஈடுபட்டால் நாடிகள் சுத்தமடையும். நாடிகள் சுத்தப்பட்டால் மனம் தூய்மையடைந்து வாழ்வு சிறக்கும். மனம் கெட்டவனுக்குத்தான் சுரப்பிகள் இயங்காது. மனதைத் திருத்தினால் சுரப்பிகள் சிறப்பாகச் செயல்படும்.

மிக நேர்மையாக எந்தவிதத் தில்லுமுல்லுகளும் இல்லாமல் மனதை ஒழுங்குபடுத்தி வைத்திருப்பவர்களுக்கு ஆரோக்கியம் கெடுவதில்லை. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கும் பூர்வ கர்மா இருந்து அவற்றை அனுபவிக்க வேண்டிய நேரம் வரும்போது வருவதை ஏற்று மனதில் படாமல் அனுபவித்துத் தீர்க்கத்தான் வேண்டும். எத்தனையோ மகான்கள் கருணை யினால் பிறரது கர்மாக்களைத் தாங்கள் ஏற்றுத் துன்பப் பட்டிருக்கிறார்கள். ஞானம் மனதைச் சமநிலையில் வைத்திருக்க உதவும். நான், எனது பிரச்சனைகள், எனது நிலை எல்லாவற்றிற்கும் அவன் காரணம். ஆகவே எல்லாவற்றையும் அவனிடமே விட்டாயிற்று என்று மனம் பக்குவப்பட்டு இயங்கினால் நிம்மதி கெடாது. எல்லா ஆசைகளையும் ஒருவனால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. எனவே இவற்றை எப்போதும் சிந்தித்து வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *