பொறாமை என்பது நிறைவின்மையே

வேதாந்தப் பாடங்களைப் படிக்க முனைந்ததால் பிரம்மத்தைப் பற்றி அறிய முடிந்தது. என்னையும் பிரபஞ்சத்தையும் நான் ஆராய்ச்சி செய்து அறிய முயன்றபோது அது பிரம்மம் என்று தெரியவந்தது. எல்லாவற்றிற்குள்ளேயும் எல்லாமாய் நிறைந்து இருப்பது பிரம்மமே என்று நான் நம்புகிறேன். இது உண்மையை அறிந்ததால் ஏற்பட்ட அறிவுத் தெளிவு. என்னைப்பற்றிய, இந்த வாழ்க்கையைப்பற்றிய, இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய, நான் இங்கு வந்ததன் காரணத்திற் குரிய தெளிவு இது. நான் என்பது பிரம்மத்தின் ஒரு துளி, ஒளியாய் இருப்பது. எனது கட்டமைப்பு பஞ்சபூதங்களின் சேர்க்கையால் கர்மாவினால் வடிவமைக்கப்பட்டது. ஆசைகளின் அடிப்படையில் எழுந்த எண்ணங்கள் தேவைகளாக மாறி அந்தத் தேவைகளைத் தேடித் திரிந்து நிறைவேற்றுவதே வாழ்க்கை என்று ஆயிற்று. தேவைகளில் தெளிவு ஏற்பட்ட பின் மனம் நிறைவைத் தேடியது. நிறைவு பெறுதலே விடுதலை அல்லது முக்தி என்பது புரிந்தது.

ஆழமான பிரார்த்தனை மூலம் எனது மனதை அந்த எல்லையில்லாத சக்தியான பிரம்மத்துடன் தொடர்பு படுத்தியவுடன் அந்த சக்தி எனக்குள் வந்து உதவுகின்றது. அந்த சக்தியை இழுக்கின்ற அளவிற்கு மனம் விரிகின்றது. எந்த அளவிற்குப் பிரம்மம் விரிந்திருக்கிறதோ அதை அணுகுகின்ற சக்தி மனதிற்கு இருக்கிறது. இவ்வளவு ஆற்றல் மிகுந்த மனதை நான் சின்னச் சின்னத் தேவைகளுக்காகச் செலவழித்து வீணாக்குகின்றேன். மாறாக பேராற்றல் இந்த மனதைச் சுருட்டி தியானத்தில் ஆழ்த்தி வைத்திருந்தால் எனது சக்தி பெருகுமல்லவா? இப்போதைய மனதைத் திறந்து அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தால் ஒரு சின்னவீடு, வங்கியில் சேமிப்பு, ஒரு கார் என்று ஒருசில அற்ப ஆசைகள்தான் அதில் நிரம்பியிருக்கும்.

அளப்பரிய ஆற்றலை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம். அதை எப்படிப் பயன்படுத்துவது? வாழ்க்கைக்கு உரிய அனைத்துத் தேவைகளுக்கும் முயற்சி என்ற பெயரில் எனக்குள் இருக்கின்ற ஆற்றலைத் தான் பயன்படுத்துகிறோம். எவ்வளவு கடினமான முயற்சி என்றாலும் அதை அந்த சக்தியை இழுத்துப் பயன்படுத்துகின்றபோது அது அந்த அளவிற்கு உதவுகிறது.

உங்களுடைய உள்ளத்தில் நிரப்பி வைத்திருப்பதோ உங்களுடைய கர்மா. இந்தக் கர்மாவை வைத்துக்கொண்டு அந்தப் பேராற்றலை நீங்கள் அடைய முடியுமா? கர்மா என்பது அழுக்கு. தீய உணர்வுகளால் நிரம்பிய அழுக்கு. இந்த நீக்க முடியாத அழுக்கைத் தியானத்தாலும் பக்தியாலும்தான் கழுவிக் களைய முடியும். அதற்கு மிகப்பெரிய முயற்சி தேவை. அவன் அருள் தேவை.

இப்போது நாம் பழகி வருகின்ற நற்பண்புகளைப் பயிற்சி செய்வதன் மூலம் மனமுடிச்சுகளை அவிழ்க்க முடியும். இன்று நாம் ஆராய்ச்சி செய்ய இருப்பது நம்மிடம் இருக்கக் கூடாத தீய குணமான பொறாமைபற்றி. பொறாமைக்கு அடிப்படைத் தூண்டல் ஒப்பிட்டுப் பார்ப்பது. பொறாமை உள்ளத்தில் இருந்து கொண்டு மனச் சமநிலையைக் குறைக்கும். ஒப்பிட்டுப் பார்த்து மனச்சஞ்சலத்தை இடை விடாமல் இருக்கச் செய்யும். பொறாமை என்பது தன்னிடம் இல்லாத எது என்றாலும் நமக்கு வேண்டியவரிடமிருந்தால் அவரிடம் உள்ள அந்த உயர்வைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிறெரிவது. அந்த உணர்வை வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளே குமைவது.

உள்ளத்தில் பொறாமை இருந்தால் முகத்தில் முழுவிரிவு அல்லது மலர்ச்சி ஏற்படாது. முகத்தில் முழு விரிவு ஏற்படுவதற்கு இதயம் மலர வேண்டும். இதயம் என்பது கருணைமயமான உணர்வு. படைப்பால் பெண்கள் கருணை மிக்கவர்கள். ஆனால் தாய்க்குலத்திற்குத்தான் பொறாமையும் அதிகம் இருக்கும். பொறாமை உணர்வு கல்லீரலையும் இருதயத்தையும் அடிவயிற்றையும் பாதிக்கும். பொறாமை இருந்தால் தியானம் செய்ய இயலாது. பொறாமை என்ற தீயகுணம் இல்லாமல் இருந்தால் உடல்நலம் சிறக்கும். முக்கிய உறுப்புக்கள் பாதிப்படையாது. பிறருடைய உயர்வை, முன்னேற்றத்தைப் பார்த்து உள்ளுக்குள் பொருமுவதால், தொடர்ந்து பொறாமைப்பட்டால் ரத்தம் கொதிப் படையும். பிறரைப் பாராட்டுவதன் மூலமும் பொறாமை வெளிப்படும். தன்னிடமில்லையே என்ற ஏக்கத்தை மறைத்துக் கொண்டு அவர்களைப் பாராட்டுவதைப்போல் பொறாமை ஏற்படும் விதம் இது.

பொறாமை போன்ற தீய குணங்களை முழுமையாக மனதில் இருந்து அகற்றினால்தான் மனம் தூய்மை பெறும். முக்தி அடைய முயற்சிக்க முடியும்; நிறைவடையும். சமுதாயப் போக்கால் பொறாமை பிறந்ததிலிருந்தே ஏற்றப்படுகிறது. வீட்டில்தான் இது துவக்கப்படுகிறது. ஒப்பிட்டுப் பேசுகின்ற போது மனதில் தனது குறை அடுத்தவர்மீது பொறாமையாக உருவெடுக்கிறது. நாளாக நாளாக அது பல விதத்தாலும் விரிவடைகின்றது. உங்களை நீங்களே ஆழமாக ஆராய்ந்தால் உங்களுக்குள்ளும் அது ஒளிந்திருப்பது தெரிய வரும். பொறாமை என்ற இந்த உணர்வுதான் என் மனதைப் பழுதாக்கி உடலையும் தாக்கும். என்னுடைய நோக்கம் தடைப்படுகிறது. நிம்மதியும் நித்திரையும் இல்லாமற் போகும். அதனுடைய வெளிப்பாடு அகங்காரத்தை வளர்க்கும். நம்மை அறியாமல் நமது நிலை பிறரது பொறாமையைத் தூண்டும்.

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டுமென்றுதான் இயற்கை எல்லா வளங்களையும் கொட்டி வைத்திருக்கிறது. ஆனால் அவற்றைப் பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் மனிதனுடைய சுயநலம் குறுக்கிட்டு பாகுபாட்டையும் ஏற்றத் தாழ்வையும் ஏற்படுத்தி விட்டது.

நாம் செய்துவரும் தியானத்தில் நற்பண்புகளை நம் வசமாக்கும் பயிற்சி செய்கிறோம். சில பண்புகளை நாம் அடைய வேண்டியுள்ளது. சில பண்புகள் நம்மை அறியாமலேயே நம்மிடம் பொதிந்துள்ளன. அடைய வேண்டிய வற்றை அடையவும் நீக்க வேண்டியவற்றை நீக்கவும் நாம் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நம்மிடமிருந்து நீக்க வேண்டிய முக்கிய குணம் பொறாமை. அசூயை என்றால் பொறாமை. அநசூயா என்றால் பொறாமையற்றவள் என்று பொருள். மற்றவர்களின் உயர்வைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ளாமல் ஒப்பிட்டுப் பார்த்து தாழ்வு மனப்போக்கு ஏற்பட்டு அது பொறாமையாகிறது. பிறர் முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் பொறாமைப்படுவது மனிதரது இயல்பாகி விடுகிறது.

கெட்டவை நம்மிடமிருந்தால் அவை வெளிப்பட்டு அவற்றைக் காட்டிக் கொடுக்கும். கோபம் காட்டிக் கொடுக்கும். ஆனால் பொறாமை காட்டிக் கொடுக்காமல் இருக்கும். கான்சர் கிருமிகள் போல் உள்ளேயே மறைந்திருக்கும். அனைத்து ஐஸ்வர்யங்கள் இருந்தாலும் பொறாமை இருந்தால் நிம்மதி இல்லை. இதற்கு மகாபாரதத்தில் துரியோதனனே சரியான சான்று. நாம் நீக்க வேண்டிய எவ்வளவோ குறைகளில் முதலாவது பொறாமை. பொறாமையை முதலில் ஏற்றுக் கொள்வோம். எனக்கு இல்லையென்று ஏமாற்ற வேண்டாம். அது இருப்பதைக் காட்டாமலே நம்மை அழிக்கின்றது. இந்த உணர்விலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற சங்கற்பத்தை முதலில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பொறாமைப்படுகிறார்கள் என்பதை நாமறிவோம். நாம் பொறாமைப்படுவதை மற்றவர்கள் அறிவார்கள். நாம் பொறாமைப்படுவதை நாம் அறிந்தால் அது வளர்ச்சியின் முதல்படி.

சில குணங்களை நாம் முயற்சி செய்து அடையவேண்டும். சில உணர்வுகள் நம் முயற்சியின்றி நம்மிடம் இருக்கும். அவற்றைக் களைதல் ஆன்மீகம். பொறாமை நம்மை அறியாமல் நம்மிடம் உள்ள ஒரு தீயகுணம். பொறாமை நாம் முயற்சி செய்து அடைந்ததல்ல. நிறைவின்மை பொறாமையாக வளர்ந்து விடுகிறது. அது இப்போது நம்மால் நீக்கப்படவேண்டிய ஒன்று. நம் எல்லோரிடமும் இது மறைந்து இருக்கிறது. எனக்குள் பொறாமை இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதுதான் இதனை நீக்க முதற்படி. விழிப்புணர்வுடன் இருந்தால்தான் அது எனக்குள் எழுவதைக் கண்டு பிடிக்க முடியும். பல சமயங்களில் பொறாமையால் தூண்டப்பட்டு சில காரணங்களைக் கூறுவோம். அவற்றை ஆராய்ந்து பார்த்தால் அது பொறாமையின் வெளிப்பாடு என்பது விளங்கும்.

மற்றவர் நம்மீது பொறாமைப்படுவதைப்போல் நானும் சில சமயங்களில் பொறாமையால் தூண்டப்படுகி;றேன். இதைக் கண்டுகொள்ள வேண்டும். பொறாமைக் கிருமிகள் நமக்குள் இருப்பதைக் கண்டுகொள்ளுதல் முக்கியம். பொறாமையால் பீடிக்கப்பட்டு உள்ளேன் என்பதைக் கண்டுபிடித்துவிட்டால் உணர்தல் என்பது முதற்படி. பொறாமைப் பழக்கத்திலிருந்து நான் என்னை மாற்ற விரும்புகிறேன் என்ற சங்கற்பத்தை மேற்கொள்ளுதல் இரண்டாவது படி. பொறாமையில் இருந்து விடுபடுவேன் என்ற சங்கல்பத்தைச் சில காலங்கள் தியானத்தில் கொள்ள வேண்டும். நான் பொறாமைப்பட மாட்டேன் என்ற உறுதியை நாம் தொடர்ந்து தியானிக்க வேண்டும். ஏனெனில் பொறாமைப்படுவதால் நம் உடலிலுள்ள ஏழு சக்கரங்களும் (நாளமில்லாச் சுரப்பிகள்) சிறிது சிறிதாகப் பழுதாகி சுரக்க வேண்டியவை சுரக்காமல் வற்றிவிடும். பிறகு சரியாகச் செயல்படாது. மூலாதாரச் சக்கரத்திலிருந்துதான் இது ஆரம்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக நோய்கள் வளர்ந்து அதிகரிக்கும். தியானம் செய்யச் செய்ய மனம் தூய்மை அடைந்து நோய்கள் குறையும்.

நம்முடைய வாழ்வில் எவ்வளவோ பொருள்களை, இன்பங் களை, உறவுகளை, சுகங்களை அடைகிறோம். நம்மைப் பாதுகாக்கும் இன்பத்தைக் கொடுக்கும் பொருள்கள், உறவுகள், மனிதர்கள் எமது தேவைக்கு அதிகமாக இருக்கின்றன. உண்ண, உறங்க, உடுக்கத் தேவைக்கு மேல் கிடைக்கின்றன. இவ்வளவு பெற்றும் இன்னும் ஏன் பொறாமை? இருப்பினும் மனம் இன்னும் அவற்றில் குறைவைப் பார்க்கின்றன. இவையெல்லாம் தேவைக்குமேல் கிடைத்தும் நாம் நிறைவடையாததற்குக் காரணம் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தல்தான். எல்லோருக்கும் கிடைத்தது தேவைக்கு மேல்தான். ஒப்பிட்டுப் பார்த்து நிறைவடையாமல் செய்வது பொறாமை. நம்மிடம் இருக்கின்ற பொருட்களை இல்லாததாக அது ஆக்குகின்றது. நிறைவின்மையைப் பொறாமை காட்டுகின்றது. இந்த நிறைவின்மை ஏழையாக்கித் துயரப்படுத்துகின்றது.

தேவைக்குமேல் இருக்கின்ற பொருட்கள் பயனற்றவை. பயனற்ற பொருள்கள் ஒருவனிடம் அதிகமாக இருப்பதைப் பார்த்து மனம் பொறாமைப்படுகிறது. உன்னிடமும் அப்படித் தான் இருக்கிறது. ஆனால் அதை உணராமல் அவனைப் பொறாமைப்படுவது எந்த விதத்தில் நியாயம்? ஏனெனில் மனதில் நிறைவில்லை; இது சிறுமையானது. பொறாமை எவ்வளவு வேடிக்கையானது! என் வீட்டில் குறைவான குப்பைகள். உன் வீட்டில் அதிகமான குப்பைகள். அதைப் பார்த்துப் பொறாமைப்படுதல் அறிவுடைமை ஆகாது. குப்பைக்காக நான் பொறாமைப்படுகிறேன்.

இவ்வுலகில் எப்பொருளுக்கும் மதிப்பில்லை. ஒரு பொருளின் மதிப்பை நிர்ணயம் செய்வது நாம்தான். நாம் ஏற்றிவைத்துப் பார்க்கிறோம். ஒரு பொருளை உலகம் மதித்து அதை நான் மதிக்கவில்லையெனில் அதன் மதிப்பு என்னைப் பொறுத்த வரை ஜீரோ. நாம் எப்பொருளை மதிக்கிறோமோ, உண்மை, சத்தியம் என்று பாவிக்கிறோமோ அது மற்றவரிடம் அதிகமாயிருந்தால் அது பொறாமையைத் தூண்டும். மதிக்கப்படாத பொருள்கள் மற்றவரிடம் இருந்தால் நாம் பொறாமைப்படுவதில்லை. நான் வைக்கின்ற மதிப்புத்தான் பொறாமை தோன்றக் காரணம். இந்த உண்மையை நாம் உணர்ந்த பின்பு பொருளில் வைத்த மதிப்பை நாம் நீக்க வேண்டும்.

உண்மையான மெய்ப்பொருள் ஆத்மசக்தி. அது ஒன்றுதான் உண்மை. மற்றவை அனைத்தும் தோற்றங்களே. ஆத்மசக்தி என்னைவிட ஒருவரிடம் அதிகம் வெளிப்பட்டால் அவரை மதித்துப் போற்றி வணங்கத் தோன்றுமே தவிரப் பொறாமை ஏற்படாது. அப்படி மதித்தால் பக்தி, மதிப்பு, அன்பு எல்லாம் வளரும்.

இப்பொழுது நாம் தியானத்தில் பொறாமை என்ற உணர்வை நம்மிலிருந்து நீக்க முயற்சி செய்கிறோம். பொறாமை நம்மைத் துயரப்படுத்துகிறது.

இறைவன் நமக்குத் தேவையான அனைத்தையும் கொடுத் திருந்தபோதும் அதனால் நிறைவுறாது பொறாமையால் துயருறுகிறோம். என்னிடம் இருக்கின்ற பொருட்களைக் காட்டிலும் என்னைச் சுற்றியிருப்பவர்களிடம் அதிகமாக இருக்கும்போது பொறாமை தோன்றுகிறது. நாம் விரும்பாத பொருள், பற்று வைக்காத பொருள், அவர்களிடம் அதிகமாக இருந்தால் நாம் பொறாமைப்படுவதில்லை. ஆகையால் பொறாமைக்கு மூலகாரணம் பொருள்களுக்கு நாம் கொடுக்கும் அதிகமான மதிப்பு. இந்த உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களும் அழியும். ஒன்றையும் நாம் கொண்டுபோக முடியாது. எல்லாரிடமுமே இருப்பதும் பொறாமைப்பட வைக்காததுமான ஒரே பொருள் இறைவன் மட்டுமே. யார் எதைக் காட்டிப் பெருமைப்பட்டால் என்ன? அது பாதிக்கக் கூடாது.

ஒரு குழந்தை அதிக பொம்மைகள் வைத்திருக்கும். மற்றொரு குழந்தையைப் பார்த்துப் பொறாமைப்படுகிறது. ஆனால் நாம் அந்தக் குழந்தையைப் பார்த்துப் பொறாமைப் படுவதில்லை. ஏனெனில் நமக்குப் பொம்மைமீது பற்றில்லை. நாம் வைப்பதுதான் மதிப்பு. உலகப் பொருள்கள் அனைத்தும் குழந்தைகளின் பொம்மைகள் போன்றவைதான். இந்த உணர்வோடு பார்ப்பதால் இவ்வுலகப் பொருட்கள் அனைத்தும் குழந்தைகளின் பொம்மைகள் போல். இதைக் குறித்தா நான் பொறாமைப்படுவது? என்ற எண்ணம் நம்மில் ஏற்படும்.

மனதை அமைதியாகத் தியானத்தில் வைத்திருக்கும் போது தெளிவான உடல், நல்ல குணங்கள், சரியான உபாயம், இவை நமக்குக் கிடைக்கின்றன. நம்மிடமிருந்து உடனடியாக நீக்க வேண்டிய குணம் பொறாமை. ஆத்மதத்துவம், ஆத்மா, இறைவன் ஆகியவை எல்லாம் உண்மையான மதிப்பு உடையவை. எல்லாமே ஒன்று. என்னுடைய ஆத்மா பிறருடைய ஆத்மாவைப் பார்த்துப் பார்த்துப் பொறாமைப் படுவதில்லை. உடல், வயது, பணம், அறிவு, புகழ், ஞாபக சக்தி, அதிகப்புலமைகள், அழகு, குடும்பம் போன்ற எவற்றிற்கும் மதிப்பில்லை. யாரால் எதைக்குறித்து எப்படிப் பொறாமைப்பட முடியும்?

ஆத்மா மதிப்புடையது. மற்ற எதற்கும் மதிப்பில்லை. இக்கருத்தைச் சிந்தித்து அமர்ந்திருப்போம். எப்பொருள்கள் எல்லாம் பொறாமைக்குக் காரணமாக அமைகிறதோ அவற்றிற்கு மதிப்பில்லை. ஆத்மா ஒன்றிற்குத் தான் மதிப்பு. குழந்தையின் பொம்மைகள் நமக்கு மதிப்பில்லாதவைதான். அதுபோல் உலகப் பொருள்கள் அனைத்தும் மதிப்பில்லா தவை. அனைத்துப் பொருள்களும் இறைவனுக்குச் சொந்த மானவை. உடமையானவை. நமது உடல், அறிவு, பணம் எல்லாம் இறைவனுக்குச் சொந்தம். நாம் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள். உரிமையாளர் இறைவன்.

பகவான் கீதையில் இவ்வுலகத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் மேன்மைகளையும் தனதாகக் கூறுகிறார். நம்மிடம் உள்ள அனைத்துச் சிறப்புகளுமே இறைவனுடையவை. அதுபோல மற்றவரின் உயர்வும் சிறப்புக்களுமே இறைவனுடையவைதான். அறியாதவர்கள் எல்லாம் தன்னுடையவை என்று நினைக்கின்றனர். அனைவரிடமும் உள்ள அனைத்துமே இறைவனுடையதாக இருக்கையில் யாரைக்கண்டு பொறாமை? இக்கருத்து மனதில் பதியட்டும், பொறாமையை வெல்லட்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *