உண்மை பேசுதலின் உயர்வு

ஆன்மீக உபதேசங்களைத் தொடர்ந்து கேட்டு வருவதால் நோயைத் தாங்கிக் கொள்ளக்கூடிய மனச் சமநிலை ஏற்படும். அப்படித் தாங்கக்கூடிய மனநிலை இல்லாவிட்டால் நோயின் வலியும், துன்பமும் கூடுதலாக இருக்கும். ஆன்மீகத்தைக் கேட்பது, சிந்திப்பது, பயிற்சி செய்வதெல்லாம் மனப்பக்குவத் தைப் பெறுவதற்காகத்தான். மனதில் எடுக்காமலிருந்தால் வலியை உடம்பு தாங்கும். வலியும் துன்பமும் எல்லாம் மனதில்தான் எழுகின்றன. துன்பம் இன்பம் எல்லாவற்றையும் ஏந்திப் பிடிப்பது மனம்தான். ஆகையால்தான் மனதை மாற்றுகிறோம். மாற்றுவது என்று சொல்வதைவிட மனதைப் பழைய நிலையில் இல்லாமல் செய்கிறோம். மனமென்னும் சக்தி உயிரிலிருந்து வெளிப்படுவது. அந்த மனதில் நமது விஷயங்களையெல்லாம் போட்டு வைத்திருக்கிறோம்.

இயற்கையும், இயற்கையின் அமைப்பும் எல்லாவற்றையும் மறக்கச் சொல்கிறது. ஆனால் நாமோ பழைய சம்பவங்களையே மீண்டும் மீண்டும் நினைத்துத் துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறோம். எவ்வளவு சந்தோசமாக வாழ்ந்தாலும் ஒரு துன்பச் சாயல் மனதில் எப்போதும் இருக்கிறது. மனதிற்கு அல்லது உடலுக்கு இவ்வளவுதான் என்றொரு கட்டுப்பாடு இருக்கிறது என்பதை அறியாமல் உலகம் முழுக்க உள்ளதெல்லாம் எனக்கு வேண்டும் என்று ஆசைப்பட்டு யோசிப்பதால்தான் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் இந்த உடலைப் பரிபாலிப்பதன் மூலம் பல உண்மைகள் தெரியவரும்.

தற்போது மருத்துவ விஞ்ஞானம் ஒருவரின் நிம்மதியான தூக்கத்தை வைத்துத்தான் உடல் ஆரோக்கியத்தைக் கணக்கிடுகின்றது. ஒருவருக்கு ஒழுங்கான நித்திரை இல்லை என்றால் அவருக்கு உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றார்கள். நித்திரை இல்லாமைக்கு உண்மையில் உடலைவிட மனம்தான் காரணம். மனம் ஆசைகள், ஏக்கங்கள் போன்றவற்றைத் திரும்பத் திரும்பக் கொண்டுவந்து அசை போட்டவுடன் அது உடம்பைத் தாக்குகிறது. மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாமல் நீ தூங்கு என்று மருத்துவர்கள் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து நோயாளியின் மனதை அமைதிப் படுத்துகின்றனர். நமது மதமும் ஆன்மீகமும் மனம் அமைதி அடைய நீ தியானம் செய்! என்று சொல்கின்றன.

ஆன்ம அறிவு இல்லாமல் வாழ்பவர்கள் மன நோயாளிகள். உலகம் ஒரு பைத்தியக்கார மருத்துவமனை. நாமெல்லாம் அந்தப் பைத்தியம் தெளிவிக்க அனுப்பப்பட்ட நோயாளிகள். விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒருவரை உற்றுநோக்கி ஆராய்ந்தால் அவருடைய பல குணாதிசயங்கள் பைத்தியக் காரத்தனமாகத் தெரியும். எவ்வளவு படித்து நாகரீகமாக நடப்பவராக இருந்தாலும் அவர்களையும் அறியாமல் சிலவற்றைப் பழக்கமாகச் செய்து கொண்டிருப்பார்கள். கர்மவாசனைதான் அது. மனிதர்கள் தாங்கள் எதைச் செய்கி றோம் எதற்காகச் செய்கிறோம் என்று தெரியாமலே வாழ்கின்ற விதத்தில் காலம் அவர்களை இழுத்துக் கொண்டு போகிறது. சிந்திக்கத் தெரியாததால் எழுகின்ற சிக்கல் இது.

ஆன்மீகத்தில் முதலாவது பாடம் நீ எண்ணங்களோடு இருக்காதே! நீ உன்னோடு இரு! என்பதுதான். எண்ணம் என்பது பழைய குப்பை. நிகழ்காலத்தில் வாழ். அப்பொழுது தான் என்னென்ன கர்மா உன்னை நோக்கி வருகிறது என்பதை உன்னால் அறிய முடியும். பழைய நினைவுகளால் நீ வழிநடத்தப்பட்டாய் என்றால் உனது கர்மா செயல்படுகிறது என்று பொருள். கர்மாவை உடைப்பது கஷ்டம் என்றாலும் உடைக்கலாம் என்ற விதியையும் படைத்தவன் வைத்திருக் கின்றான். நாமெல்லாம் கர்மாவை வெல்ல முயற்சிப்பவர்கள். கர்மாவிலிருந்து விடுபட நாம் எண்ணிச் செயல்படுகிறோம். ஆத்மாவை எந்த அளவிற்கு நாம் உயர்த்துகிறோமோ அந்த அளவிற்குக் கர்மாவும் மெலிந்து மெலிந்து வரும். இல்லாமற் போகாது; பலவீனப்பட்டுப் பிறகு மாறிவிடும்.

சூரன்போரில் சூரன் அழிக்கப்படவில்லை; சேவலாக, மயிலாக மாற்றப்படுகிறான். அது இந்திய இலக்கியங்களில் சொல்லப் படுகின்ற ஒரு புதிய கருத்து. மற்ற கதைகளெல்லாம் தீமை அழிக்கப்பட்டது, அதர்மத்தை அழித்தான் என்றுதான் இருக்கும். முருகன் கருணையினால் மாற்றி வைத்தான். அகங்காரம் என்பது ‘நான்’ என்று முன்னால் தள்ளி நிற்கின்ற சக்தி. அந்த சக்தியை மாற்றாமல் அழிக்க இயலாது. ஏனெனில் அது என்னிலிருந்துதான் வெளிப்படுகிறது. எது கோபமாக, ஆங்காரமாக வெளிப்படுகிறதோ அதுவே சிறிதுகாலம் சென்ற பின் அன்பாக நேசமாக வெளிப்பட்டுச் சூழ்நிலையை மாற்றும். அந்த உணர்வுதான் இப்படியெல்லாம் மாறுகின்றது.

வியாசமுனிவர் வேதங்கள், உபநிஷதங்கள் எல்லாவற்றையும் தொகுத்து. இதிகாசங்களையும் எழுதித் திருப்திப்படாமல் சாதாரண மக்களுக்கும் உண்மைகள் போய்ச் சேரவேண்டும் என்பதற்காகப் பதினெட்டுப் புராணங்களை எழுதினார். அவற்றில் ஒவ்வொரு தெய்வத்தை அறிமுகப்படுத்தினார். அந்தத் தெய்வங்களைத்தான் சங்கரர் ஆறு பிரிவுகளாகப் பிரித்து இந்து மதத்தை நெறிப்படுத்தினார். வேத காலத்தில் தெய்வங்கள் இல்லை. அவர் எழுதிய 18 புராணங்களும் 4 லட்சம் சுலோகங்களில் அடங்கும். இவற்றில் ஸ்கந்த புராணத்தில் மட்டும் ஒரு லட்சம் சுலோகங்கள் உள்ளன. இந்த ஒரு புராணத்திலேயே சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட அந்த ஸ்கந்த புராணத்தில் தான் அரக்கனை சேவலும் மயிலுமாக மாற்றுதல் என்ற புதிய முறையைக் கூறியிருக்கிறார். சக்தியை ஒருக்காலும் அழிக்க முடியாது. உருவத்தை மாற்றலாமே தவிர அதன் சக்தி எப்போதும் இருக்கும். இதை விஞ்ஞானம் ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஆன்மாவிலிருந்து வெளிப்படுகின்ற இதே உணர்வு மனதில் கருணையாக மாறவேண்டும். உள்ளத்திலிருந்து அன்பும் கருணையும் வெளிப்பட வெளிப்பட முகம் ஒளிரும். கருணையும் அருளும் ஒன்று. நான் இவற்றை சகல ஜீவராசி களிடமும் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால்தான் அது என்னிலிருந்து மேலும் வெளிப்படும். இதற்குக் கால வேறுபாடு இல்லை. பழையகாலம் செத்தவை. அவற்றை மீண்டும் நிகழ்காலத்தில் எடுத்தால் அவை மீண்டும் புதிதாக சக்தி பெறும். ‘இப்போது’ என்ற நொடியைக் கருணையாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது. எப்படி மாற்றுவது என்றால் கருணை எனக்குத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. நான் இருப்பது கருணையால்.

ஒரு பதினைந்து நிமிடம் நம்மூச்சு நிறுத்தப்பட்டு விட்டது என்றால் அதன் விளைவு என்ன? பூமியில் 15 நிமிடங்களுக்கு ஆக்சிஜன் இல்லாமற் செய்தால் மாரி காலத்தில் தவளைகள் செத்துக் கிடப்பதைப்போல் மனிதர்கள் விழுந்து கிடப்பார்கள். மனிதகுலம் இல்லாமற் போய்விடும். எனவே எனது வாழ்க்கை இந்த 5 நிமிடக் காற்றுக்குள்தான் தங்கியிருக்கிறது. ஆனால் நான் போடுகின்ற திட்டங்களோ உலக அளவிற்குப் போகின்றது.

இந்த உண்மை புரிந்தவுடன் ஒரு தயவான தாழ்மை நிலை ஏற்படும். இது என்னுடைய பிரச்சனை என்று நீங்கள் எடுத்துப் பார்த்தால் உங்கள் ஈகோ உங்களைத் தூண்டிவிடுகிறது என்பது தெரியும். ஒரு பிரச்சனை உங்களைக் குற்றவாளியாக்கி இருந்தால், உங்களை ஒரு தாங்க முடியாத நிலைக்குக் கொண்டு வந்ததென்றால் அது நீங்கள் உங்களுக்குள் ஏற்றிய கர்வம். எனக்குள் இருக்கிற சக்தியை பிரச்சனையால் தாக்கப் பட்டு சூடேற்றுவதால் பிரச்சனை பெரிதாகிறது. நானோ மூன்று நிமிடக் காற்றிற்காக இறைவனில் தங்கியிருப்பவன். அவனே காற்றை என்னில் விட்டு வெளியில் எடுக்கிறான். அப்படிச் செய்வது என் கையில் இல்லை. அவனது கருணை யிலும் கட்டுப்பாட்டிலும் எனது மூச்சு தங்கியிருக்கிறது. உனது அன்றாடச் செயல்கள் உங்களைச் சார்ந்தவையாய் இருக்கின்றன. ஆனால் இதயத் துடிப்பையும் சுவாசித்தலையும் அவன் கையில் வைத்திருக்கிறான். இதற்கு எந்த விஞ்ஞானமும் பதில் சொல்ல முடியாது.

இந்த மனம் என்ற சக்தியைத்தான் நான் கருணையாக்கிப் பயன்படுத்துகிறேன். மனம் இந்தப் பிரபஞ்சத்தை எத்தனை தரமென்றாலும் சுற்றலாம். உண்மையிலேயே இதன் மூலம் சக்தி பாய்கின்றது. எனவேதான் தேவையில்லாமல் சிந்திக்கக் கூடாது என்று சொல்வது. சிந்தனையால் ஏற்படும் மனக் குழப்பத்தை முகம் உடனே காட்டும். இறைசக்தி எனது கர்மப் பதிவின்படி தொடர்ந்து எனக்கு வந்து கொண்டே இருக்கிறது. அதாவது நவக்கிரகங்கள் என்னும் கட்டுக் கோப்பின் வாயிலாக எனது வாழ்க்கையின் போக்கு கர்மாவின் பின்னணியில் செயல்படுகிறது.

இந்தப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துமே அவனுடைய ஏற்பாட்டால் படைக்கப்பட்டவை. நமது முன்னோர்களான ரிஷிகளும் முனிவர்களும் தமது உள்ளுணர்வால் நேரடியாக அவனைத் தொட்டுத் தொடர்பு கொண்ட நிலையில் தான் எல்லா உண்மைகளையும் சரியாக உணர்ந்து அவற்றிற் கேற்ப வான சாஸ்திரம், ஆயுர்வேதம், சித்த வைத்தியம் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் இம்மிபிசகாமல் எந்தவித அளவுகோலுமின்றி எழுதி வைத்திருக்கின்றார்கள்.

உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் திருநள்ளாறு என்ற ஊரில் சனீஸ்வரனுக்குக் கோவில் அமைந்திருக்கிறது. அது ஒரு சிவன் கோவிலில் உள்ள சின்ன சன்னதியாகத்தான் இருக்கிறது. ஆனால் அது அமைக்கப்பட்டுள்ள விதம்தான் வியக்கத்தக்க ஒன்றாக இப்போது குறிப்பிடப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் வான்வெளி ஆராய்ச்சிக் கென ஏராளமான செயற்கைக் கோள்களை செலுத்தி வருகின்றன. அதில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் உண்மை என்னவென்றால் அந்த சட்டிலைட்டுகள் பூமியைச் சுற்றி வருகையில் திருநள்ளாறு அமைந்துள்ள அந்தக் குறிப்பிட்ட இடத்தைக் கடக்கின்றபோது 13 நிமிடங்கள்வரை சிக்னல் இல்லாமற் போய்விடுகிறதாம். திருநள்ளாற்றைக் கடந்தபின் மீண்டும் செயல்பட்டிருக்கின்றன. இது நாஸாவால் வெளியிடப்பட்ட உண்மை.

அப்படி அந்தக் கணக்கின்படி அந்த சனீஸ்வர மூர்த்தியை அங்கு வைத்தது யாரோ ஒரு சித்தரால் தியானத்தில் சொல்லிச் செய்யப்பட்டதாகத்தான் இருக்கும். அந்த சனிக் கிரகத்தைச் சுற்றி 16 சந்திரன்கள் சுற்றி வருகின்றன. அவை சுற்றுகின்ற வட்ட ஒளிப்பாதைக்கு டைட்டான் என்று பெயர். இந்த சனிக்கிரகத்திற்கு இத்தனை சக்தியுள்ள சந்திரன்கள் சுற்ற வேண்டும் என்ற கணக்கைப் போட்டுத் தீர்மானித்தது யார்? பிரம்மம்.

நடைமுறை வாழ்க்கைக்குள் எங்களுக்கு ஏற்படுபவைகளுக்கு உடனடியாக எதிரொலிக்காமல் எதற்காக இதை எனக்குத் தருகிறார்? ஏன் தருகிறார்? என்று ஆராய முற்பட்டால் உள்ளேயிருந்து உண்மை வெளிப்படும். என்ன செய்வது? என்ற பிரச்சனை உங்கள் எல்லோருக்கும் அடிக்கடி ஏற்படும். முடிவெடுப்பதில்தான் உங்களுக்குப் பிரச்சனை. முடிவெடுப் பதில் உங்களுக்கு எது உதவி செய்கிறது? நாலைந்து சிந்தனைகள் முடிவாக வரும். மனம் சுத்தமாக இருந்தால் சரியான முடிவு தெளிவாகத் தெரியும். இல்லையேல் உங்களை மீண்டும் கர்மாவின் வழியாகத் திருப்பி அடிக்கும். இதில் முக்கியமானது என்னவென்றால் தொடர்ந்த தியானம் உங்களது உள்ளுணர்வை வளர்க்கும். உள்ளுணர்வு உங்களை வழிநடத்துகின்றது என்றால் நீங்கள் கடைசிவரை எதையும் பிழையாகச் செய்யமாட்டீர்கள்.

நீங்கள் இந்தப் பூமிக்கு வந்ததன் காரணம் உண்மையை அறிவதற்கும், ஆனந்தமாக இருப்பதற்கும்தான். இந்த நிலை யில் நீங்கள் இவற்றை விட்டுவிட்டு உங்கள் உறவுகளோடும் பொருள்களோடும் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறீர் களா? உங்கள் மனைவி, குடும்பமெல்லாம் உங்களது கர்மாவை அனுபவிக்க. அவர்களுடைய பிரச்சனைகள் உங்களுடையவை அல்ல. நீங்கள் பாதுகாவலர் என்ற வகையில் அன்பைக் கொடுத்து அன்பைப் பெறலாம். அறிவுரைகள் கூறலாமே தவிர இதைத்தான் செய் என்று அவர்களிடம் சொல்ல இயலாது. அப்படிச் செய்யப் போனால் பிழைக்கும். இந்த நிலையில் பூமிக்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றுவதில் எத்தனை சதவீதத்தைப் பூர்த்தி செய்திருக் கிறீர்கள்? இன்று நீங்கள் இறந்தால் உங்கள் நோக்கம் முழுமையடைந்துவிட்ட நிறைவு உங்களில் இருக்கிறதா? உங்களது ஆத்மா காட்டிய வழியில் அன்போடு அதை அணுகி அடைந்துவிட்டீர்களா? வேதாந்த அறிவு உங்களில் அன்பை நிறைத்திருக்கிறதா? உங்களது அணுக்களில் அன்பு நிறைந்திருந்தால் அது பிற உயிர்களின் அணுக்களோடு பேசும்.

இந்தப் பிரபஞ்சத்தில் என்னைப்போல ஒரு உடல் நிறைவான ஒளியுடலாக இருக்கிறது. எனது உடல் குறையுடையது. அந்த ஒளியுடலை இறக்கி இந்த உடலுடன் சேர்ப்பதுதான் மோட்சம். பிறவிகள் தோறும் முயன்று, முயன்று இந்த உடலையே ஒளியுடையதாக்கினால் அந்த ஒளியுடல் இந்த ஒளியுடலுடன் இணையும். அந்நிலையில் இந்த உடலில் உள்ள மனம், புத்தி எல்லாம் ஒளி. எனது கர்மாவை நான் ஏற்றி வைத்திருப்பதால் இப்போது ஒளியில்லாமல் இருக்கிறது.

மனித அறிவு பொருட்களை ஆராய்ந்து, ஆராய்ந்து இந்த மூளையிலுள்ள ஸெல், அடுத்த ஸெல்லை அறிந்து வைத்திருக்கிறது. ஏதாவது ஒரு உணவைச் சாப்பிட்டால் அதிலுள்ள புரோட்டீனை எடுத்துப் புரோட்டீனைச் சேகரிக்கின்ற அணுக்களிடம் கொண்டு சேர்க்கிறது. தண்ணீரைச் சேகரிக் கின்ற ஸெல்லிடம் அதைக் கொடுப்பதில்லை. மாப்பொருளை சேகரிக்கின்ற ஸெல்கள் மாப்பொருளைத்தான் எடுக்கின்றனவே தவிரப் பிறவற்றை எடுப்பதில்லை. என்னைவிட எனது ஸெல்களுக்கு அறிவு அதிகம். கீமோ தெரபிக்குக் கட்டுப் படாத கேன்ஸர் ஸெல் (tumor) எலுமிச்சைச் சாற்றுக்குக் கட்டுப்படுகிறது. அதிகாலையில் சுடுதண்ணீரில் சிறிது தேசிக்காயைப் பிழிந்து அப்படியே குடித்தால் உடம்புக்கு மிக நல்லது.

நம்முடலில் சூட்சுமமாக அமைந்திருக்கின்ற ஆறு சக்கரங்களின் வழியாகக் குண்டலினி சக்தி மேலே ஏறி ஏழு, எட்டு, ஒன்பது என்று தலைக்கு மேலாகப் பல அடுக்குகள் தாண்டி சக்தி, தளம், சிவதளம் எல்லாம் கடந்து 12வது அடுக்கை அடைந்தால் அதுதான் பிரம்மஸ்திதி. பதினெட்டு என்ற எண் வேதாந்தத்தில் மிக முக்கியமானது. பதினெட்டாவது நிலை தான் இறுதிநிலை. இவையெல்லாம் இப்போது உங்களுக்குத் தேவையில்லை என்றாலும் தெரிந்து கொள்வதில் தப்பில்லை. இந்த நிலைமைக்கு என்னை உயர்த்திக் கொண்டு போகின்றது எனது தியானமும் ஞானமும்.

தியானத்தில் இப்போது நாம் வழிகாட்டல் தியானத்தைப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த வழிகாட்டல் தியானத்தில் நற்பண்புகளை நம்வசமாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இதில் கடைசியாக உண்மை பேசுதல் என்ற நற்பண்பை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். உண்மை பேசுவதன் மூலம் நான் என் சக்தி ஓட்டத்தை நேர்ப்படுத்துகிறேன். பொய் சொல்லும்போது எனது சக்தி ஓட்டத்தை மாறுபடச் செய்கிறேன். அப்படிப் பொய் சொல்லும் போது எனது சூட்சும சரீரத்தில் நான் ஓட்டையை ஏற்படுத்து கிறேன். எனது உடலமைப்பும் இதனால் பழுதடைகின்றது. இயற்கையாய் உண்மைதான் முதலில் வெளிப்படும். அதைத் தடுத்து நிறுத்திச் செயற்கையாய் ஒரு பொய்யைச் சொல்ல முற்படும்போது அங்கு முரண்பாடு எழுகின்றது. அது எனது கட்டமைப்பைப் பலவீனப் படுத்துகிறது. ஒருவரை ஏமாற்றித் தப்பிக்கத்தான் பொய் சொல்லப்படுகிறது. அவனும் ஆத்மா, நானும் அவனும் ஒன்று என்று நினைத்து உண்மையைப் பேசும்போது அங்கு நன்மைதான் ஏற்படும். வர இருக்கின்ற பெரிய இழப்பை எதிர்கொள்ளாமலிருக்க சில சிறிய இழப்புக் களைத் தாங்கத்தான் வேண்டும்.

இயல்பான ஆன்மீக வாழ்க்கையை நீங்கள் பின்பற்றுவதால் அன்றாட வாழ்க்கை மாறி இருக்கிறதா? ஞானம் பெற்றதால் வெளிப்படும் கருணையை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் எல்லாமே என் கர்மாவைக் கழிப்பதற்காக ஏற்படுபவை. அவற்றிற்கேற்ப நான் செயல்படத்தான் வேண்டும். ஆனால் எல்லாமே மாயை என்ற அடிப்படை உண்மை புரிந்திருக்க வேணடும். அன்றாடம் அனுபவிக்கின்ற சின்னச் சின்ன இன்பங்களுக்கும் பேரின்பத் திற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு விளங்குகிறதா? சிற்றின்பங்கள் குறையுள்ளவை; விரைவில் மறைந்து போகும். நிரந்தர இன்பம் நிறைவானது; மறையாதது; அமைதியைத் தரக்கூடியது. தொடர்ந்த சின்ன இன்பம், இன்ப வாழ்க்கையாக மாறும். ஆனால் அது தொடர்ந்து திருப்தியைத் தராமல் இன்னும் வேண்டும் என்று தேடவைக்கும். எனவே சின்ன இன்பங்களைத் தேடி விழாமல் பேரின்பத்தை நாடி முயல்வதே நல்லது. மனித இன்பமெல்லாம் சிற்றின்பம். இறைவனை நாடிச் செல்லல் பேரின்பம்.

உடல் சற்று ஆரோக்கியமாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை வளர்க்கிறோம். அதுபோல மனமும் சற்று அமைதியாக இருக்கும்போதுதான் நற்பண்புகளை வளர்க்கிறோம். மன அமைதி இருந்தால்தான் பண்புகளை வளர்க்க முடியும். நற்பண்புகளை உணர்ந்து கடைப்பிடிக்கத் தொடங்கியதால் ஏற்பட்ட அமைதி முன்னர் பெற்றிருந்த அமைதியைவிட அதிகம். நமக்குத் தீமை செய்பவரையும் ஆத்மாவாகப் பார்க்கின்ற பண்பு ஏற்பட்டுவிட்டதா? ஒவ்வொரு மனப்பதிவாக வெளியில் எடுத்து நீக்க, நீக்க மனம் பு+ரண நிலையில் இருக்கின்றபோது அந்த மனம் முழுவதும் இறைசக்தியாக நிரம்பியிருக்கும். உங்களது மன ஓட்டைகள் அடைபட நற்பண்புகளைப் பயிற்சி செய்தல் அவசியம். அந்த மன ஓட்டைகள்தான் கர்மாக்கள். கர்மாதான் மனதில் எதிரொலித்து செயலாக வெளிப்படுகிறது. இப்போது உங்கள் மனம் பாசி மூடிய கிணறாகத் தெரிகிறதா? தெளிந்த நீராக இருக்கிறதா? அப்படியென்றால் உங்கள் மனம் தூய்மை அடைந்து விட்டது என்று பொருள். மனம் ஆரோக்கியமடைந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மனம் தூய்மை அடைந்துவிட்டால் உங்களைச் சுற்றி உங்களுக்கு மேலாக நிறைந்து இருக்கின்ற தெய்வீக சக்தி உங்களுடன் தொடர்பு கொள்ளத் துவங்கும். அதனுடைய வழிகாட்டலில் உங்கள் வாழ்க்கை செல்லும். அந்த நிலையை அடைந்து விட்டீர்களா? மனம் இன்னும் தூய்மை அடைய வில்லையென்றால் தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். அப்படியும் முடியவில்லை என்றால் பார்க்கின்ற அனைவரையும் ஈஸ்வரனாக நினைத்துப் பார்க்கப் பழகுங்கள். பிரம்மமயம் என்ற உணர்வில் தோய்ந்து வாழ். இதைத்தவிர வேறு வழியில்லை.

தியானத்தில் அமர்ந்து பண்புகளை வளர்க்கின்றோம். சத்யம்வத – உண்மைபேசு என்பது வேதத்தின் கட்டளை. அது இறைவனின் ஆணை. சத்யமேவஜயதே வேதவாக்கு. வாய்மையே வெல்லும். சத்தியம் என்பது எண்ணத்திற்கும் சொல்லுக்கும் உள்ள ஒற்றுமை. எண்ணம் வேறு சொல் வேறு என்றால் அது பொய். சொல்லிய சொற்கள் எண்ணப் பட்டிருக்க வேண்டும். சத்தியபலன் கைமேல் கிடைக்கிறது. ஆனால் இது உடனடியாகத் தெரிவதில்லை. உபநிஷத்தோ சத்தியம்தான் வெல்லும் என்கிறது. உண்மையை விட்டு விடுவதனால் வரும் நஷ்டத்தை உணரவில்லை. அந்த உணர்வைத் தியானத்தினால் அடைகிறோம். உண்மையினால் ஏற்படும் லாபத்தை உணரவில்லை. மனம் அமைதியாக இருக்கும்போதுதான் நுட்பமான விஷயங்கள் விளங்கும்.

சில சந்தர்ப்பங்களில் தீமை பயக்காத விதத்தில் பிறரைப் பாதிக்காத அளவில் சமுதாயப் போக்கின் காரணமாகப் பொய் சொல்ல வேண்டியிருக்கும். “பொய்மையும் வாய்மையிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்று அதற்கு ஒரு விதிவிலக்கு சொல்லப்பட்டிருக்கிறது. உண்மை பேசுதல் என்பது உங்களது சக்தியைச் சுருக்காமல் நேரடியாகப் பாயச் செய்கிறது. அது ஒரு விரதம் மாதிரி. மேலும் ஆத்மாவை நோக்கிப் பயணம் செய்து முழு இறைவனாக நீங்கள் மாறுவதற்குப் பொய் பேசுகின்ற பண்பு தடையாய் இருக்கும். பொய் பேசுவதால் குற்ற உணர்வு எப்போதும் இருக்கும். உடல் உள்ள ரீதியாக உங்களை நீங்கள் உயர்த்திக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நிலையில் நீங்கள் உண்மையைத் தான் பேச வேண்டும். ஆனால் அதைத் தாங்கிக் கொள்கின்ற சக்தி நீங்கள் சொல்வதைக் கேட்கும் மற்றவருக்கு இருக்க வேண்டும். உண்மை பேச முடியாத நிலையில் மௌனமாக இருப்பது வழக்கம். ஆனால் அதுகூட உண்மையை மறைப்பது தான். அதற்குப் பதிலாக உண்மையை எடுத்துக்கூறி விளக்க வேண்டும். பிரச்சனையை வளர்க்காமல் இருக்க மௌனம் சிறந்தது என்றாலும் உண்மை சொல்லப்பட வேண்டும்.

மௌனம் என்பது எண்ணங்கள் இல்லாத நிலையை எனக்குள் பதிப்பது. அதற்குப் பின்னால் அமைதி இருக்கிறது. உலகத்தை விலக்கிப் பற்றறுத்து வாழ்பவர்களுக்குத்தான் மௌனம் சித்திக்கும். உலகத்தில் சம்பவங்களுக்கு சாட்சியாக இருந்துகொண்டு மௌனமாக இருப்பதென்பது நடப்பவற்றை மறைப்பதாக முடியும். உலகத்தோடு சம்பந்தப்பட்டு வாழ்ந்தால் பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் உலகத்தில் இருப்பதால்தான் நான் இதைச் சொல்கிறேன். இவற்றை எல்லாம் ஏன் நான் திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் என்றால் உங்கள் தியானம் எவ்வித இடையு+றுமின்றி முழுமையாக நிகழ வேண்டும் என்பதற்காகத்தான்.

நம் நெஞ்சை நாம் ஏமாற்ற முடியாது. ஒவ்வொரு பொய்யும் நம்மை அறியாமல் நம்மைக் குற்றவாளி ஆக்கியிருக்கின்றது. குற்ற உணர்வைப் பதிவு செய்கிறது. குற்ற உணர்வுடன் இருக்கின்ற மனம் அந்தச் சுமையைத் தாங்குவது சுலபமானதல்ல. மேலோட்டமான வெற்றி, ஆழ்ந்த தோல்வி என்பதுதான் பொய் சொல்வதால் ஏற்படுகின்ற விளைவு. பொய் சொல்லும்போது உள்ளே உனக்குள் துயரப்பட வேண்டும். சூழ்நிலைக்காக முகத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கின்றோம். ஆனால் அது பொய்யான நடிப்பு. இதை உணரும்போது உண்மையின் மேன்மை புலப்படுகின்றது. சத்தியத்தைப் பின்பற்றவில்லையென்றால் குற்ற உணர்வைச் சுமப்போம்; பயத்தை அடைவோம். உண்மை பயத்தைக் கொடுக்காது; சத்தியம் அபயத்தைக் கொடுக்கும். பொய், பயம், குற்ற உணர்வு நமக்குள்ளே பிளவுபட்ட நிலை (split personality) யை உருவாக்கும். இந்நிலைக்கு சத்தியத்தைப் பின்பற்றாததே காரணம்.

ஒவ்வொரு முடிவுகளிடமும் விதவிதமாக நடந்து கொள்வதால் பயம். பிளவுபட்ட தன்மை வந்துவிடுகிறது. அவரவர் வாழ்க்கையில் சத்தியத்தைப் பின்பற்றாததால் ஏற்பட்ட துன்பங்களை மனக்கண்ணில் பார்க்க வேண்டும். சத்தியத் தைக் கைவிட்ட தருணத்தில் எமக்கு ஏற்பட்ட துன்பங்களை அனர்த்தங்களை எண்ணிப்பார்க்க வேண்டும். நாம் பாடமாக மாற்றுவதுதான் தியானத்தின் பலன். அவரவர் வாழ்க்கையில் சத்தியத்தைக் கைவிட்டதனால் ஏற்பட்ட விளைவுகளை எண்ணிப் பார்த்தால் சத்தியமில்லாதபோது துன்ப அனுபவங்களைத் தான் காண்போம். இவற்றைப் பாடமாகக் கொள்வோம். உண்மையை மறைக்க, மறைக்க குடும்பத்தில் இருள் சூழும். விடியாத வீடு என்று சொல்வார்கள்.

சத்தியத்தைப் பின்பற்ற அனைவருக்கும் விருப்பம் உண்டு. இருந்தபோதிலும் பலமுறை சத்தியத்தை விட்டுவிடுகிறோம். அதற்கு முக்கிய காரணம் சத்தியத்தை விடுவதால் தற்காலிக மாகக் கிடைக்கின்ற பலன். சில சூழ்நிலைகளில் சத்தியத் தைப் பின்பற்றினால் இழப்புக்களை அனுபவிக்கின்றோம். பொய்யில் சில லாபங்கள் கிடைப்பதால் அந்த லாபத்திற் காகப் பொய் சொல்கிறோம். அந்த லாபம் உண்மையான லாபமில்லை. மது முதலிய பானங்கள் அருந்தும்போது அவை தற்காலிக இன்பத்தைக் கொடுப்பதைப் போல் இருந்தாலும் உண்மையில் லாபமில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நுண்ணிய உண்மைகள் அமைதி யாக இருக்கும்போது சிந்தித்தால் விளங்கும். சத்தியத்தைப் பின்பற்றுவதனால் வரும் இழப்பு இழப்பு அல்ல. சத்தியத் தைக் கைவிடுவதால் வரும் லாபம் லாபமல்ல. அனைவருக்கும் உண்மை பேசுவதில் விருப்பம் இருந்தும் உண்மையைக் கைவிடக் காரணம் லாப நஷ்டக் குழப்பம்.

சத்தியத்தைப் பின்பற்றுகின்றபோது ஏற்படுகின்ற துன்பத்தை ஏற்றுக்கொள்வோம். உண்மை பேசுவதால் ஏற்படுகின்ற நட்டத்தை லாபமாகக் கருதுவோம். இந்தச் சிந்தனைகளை மனதிற்கொண்டு தியானிக்க வேண்டும். இங்கேயும் மனதை மாற்றுகின்ற பயிற்சி மூலம்தான் இந்த மாற்றத்தை நமக்குள் கொண்டுவர முடியும். ஏனெனில் நமது மனம் இந்தச் சமூகம் சார்ந்த வாழ்க்கையில் லாபத்தையே விரும்புகிறது. மனதில் மாற்றம் ஏற்பட்டால்தான் எனக்கு ஏற்படுகின்ற நஷ்டத்தையும் நான் லாபமாக ஏற்றுக்கொள்ள முடியும். எனவே நட்டம் நட்டமல்ல.

உண்மை பேசுவதனால் ஏற்படுகின்ற நட்டத்தை லாபமாகக் கொள்வோம். ஒரு மனிதனுடைய மன வளர்ச்சி, மனப் பக்குவம், அறிவின் முதிர்ச்சி என்பது எது நற்பண்புகள், எது கெட்டவை என்பவற்றை அறிவது அல்ல. ஆனால் தீய குணங்களைப் பின்பற்றும்போது ஏற்படும் இழப்பை யார் உணர்கிறார்களோ அவர்களே பக்குவமடைந்தவர்கள். லாபம் பெற்றவர்களல்ல.

அனைவருக்கும் நல்லவை, தீயவை பற்றிய அறிவுண்டு. ஆனால் பண்பட்டவர்கள்தான் இழப்புக்களை உணர்வார்கள். அங்கு லாப நட்டம் தெரியாது. இழப்புத்தான் தெரியும். இந்த மனமே பக்குவப்பட்ட மனம். பொய்யால் மேலோட்டமாக லாபத்தைப் பெறுவோம். ஆனால் அது இழப்புக்குத்தான் இட்டுச்செல்லும். நாம் செய்துவரும் தியானம் மீண்டும், மீண்டும் இதே கருத்தைப் பின்பற்ற வேண்டுமென்று சிந்திப்போம். பொய்மையைப் பின்பற்றுவதன் மூலம் நாம் வெற்றியடைந்தவர்கள் என்று கருதினாலும் உண்மையில் நாம் தோல்வியடைந்தவராவோம்.

வாய்மையே வெல்லும். சத்தியம் தோல்வியடைந்ததுபோல் தோற்றமளித்தாலும் வெற்றி சத்தியத்திற்குத்தான். சத்தியத் தையே தன் வாழ்க்கை முழுவதும் பின்பற்றிய காந்திஜியைச் சுட்டுக் கொன்றான் ஒருவன். இருந்தாலும் இதில் உள்ள உண்மை என்ன? மகாத்மாகாந்தி என்று அவரை உலகம் முழுவதும் இன்றுவரை போற்றிக் கொண்டாடுகிறது. அவர் இயற்கையாய் இறந்திருந்தால் இந்த அளவு புகழ் கிடைத்திருக்காது. அவர் சத்தியத்தையே கடைப்பிடித்து வாழ்ந்ததால் இந்த உயர்வு அவருக்குக் கிட்டியது.

ஒவ்வொரு நற்பண்பிற்குப் பின்னால் இந்த அளவு அறிவும் மேன்மையும் இருப்பது எங்களுக்கு அன்று தெரிந்திருக்க வில்லை. இந்த அறிவு முன்பே இருந்திருந்தால் வாழ்க்கையை இன்னும் செம்மையுறச் செய்திருக்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *