ஏற்பதால் ஏற்படும் மாற்றங்கள்

வேத உபநிஷத்துக்கள் படித்துப் பிரம்மசூத்திரம் பயின்று தற்போது நடத்தையைச் சுத்தப்படுத்துகின்ற விஷயங்களைப் பயிற்சி செய்து கொண்டிருக்கின்றோம். மனமென்பது என்னவென்று அறிவுள்ளவன் தடுமாறிக் கொண்டிருக்கின்ற போது வேத வழிகாட்டலால் ஆத்மாவின் வெளிப்பாட்டில் எனது விருப்பு வெறுப்புக்கள், ஆசைகள், அபிலாஷைகள் எல்லாம் எண்ண வடிவில் பதிந்திருப்பதே மனமாகும் என்பது நமக்கு விளங்கியிருக்கிறது. எண்ண வடிவில் உள்ளவற்றைப் புரிந்துகொண்டு தியானத்தின் மூலம் நான் வேறு, என் உடல் வேறு, உடலுக்கு ஏற்பட்ட கவலைகள், இன்பங்கள் எல்லாம் வேறு என்பதைப் பிரித்து உணர்ந்து சமூகத்தாலும் என்னுடைய உணர்ச்சிகளாலும் நிரப்பப்பட்ட எனது மனதை வெறுமையாக்கிக் கொண்டு வருகிறேன்.

ஆத்மா ஒளியுடையது. எனவே வெறுமையாக்கப்பட்ட மனமும் ஆத்மாவின் ஒளிச்சிதறலால் ஒளியுடையதாக மினுங்குகிறது. இந்த ஒளி தொடர்ந்து வெளிப்பட்டுப் பொன்னொளியாக ஒளிரும். என்னில் தொடர்ந்த பிறப்புக்களால் ஏற்றப்பட்ட தீய குணங்களை நீக்கித் தற்போது நற்பண்புகளை எனது மனதில் பதிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். ஒரே ஒரு ஆத்மாதான் விரிந்து இந்தப் பிரபஞ்சமாகக் காட்சி அளிக்கின்றது. இதில் அவரவர் கர்மாவிற்கேற்றபடி மனிதர்களாக, ஆணாக, பெண்ணாக வெவ்வேறு வடிவம் எடுத்திருக்கின்றனர். எல்லோரும் தேடுவது நிம்மதி என்ற பெயரில் அமைதியை. அமைதி என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கின்ற நிலையில் இன்று உலகம் இருக்கிறது. இந்த அமைதி எனக்குள்தான் இருக்கிறது. அமைதி ஏற்பட்டு விட்டால் உடனே ஆனந்தம் தானாக ஏற்பட்டுவிடும்.

இந்த நிலையை அடைவதற்காகத்தான் நாம் நம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டிய நற்பண்புகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். இந்தப் பயிற்சி நம்மைப் புடம் போட்டு எங்கிருந்து நாம் ஆரம்பித்தோமோ அந்த ஆதி நிலைக்கு நம்மைக் கொண்டு செல்கிறது. இந்த வளர்ச்சியினால் நமது வாழ்க்கைச் சுழற்சியில் ஏற்பட்ட பதிவுகள் எல்லாம் அழிக்கப்படுகின்றன. எந்த முயற்சியும் எனக்கு விளைவைக் கொடுத்து அந்த விளைவை நான் அனுபவித்து அமைதி கொள்ள வேண்டும் என்பது வாழ்க்கை நியதி. எனவேதான் நாம் முயற்சிகளை மேற்கொள்கின்றோம். அவற்றின் பலன் இரண்டு விதமாக இருக்கும். ஒன்று ஏற்கத் தக்கதாகவும் ஒன்று தள்ளத்தக்கதாகவும் இருக்கும். ஏற்கத் தக்கதையே நோக்கி எல்லோரும் பயணித்தாலும் அதன் விளைவு வேறு யாருடைய கையிலோ இருக்கிறது. இதை ஏன் இப்படி அமைத்திருக்கின்றது? எனக்கும் மீறின ஒரு சக்தி என்னைப் படைத்துக் காத்து அழிக்கின்ற ஒரு சக்தியாக இருக்கின்றது. அது எனக்குள்ளும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதை எப்படி அடைவது என்பது தான் மனித முயற்சியின் உச்சக் கட்டம். படைப்பு தன்னை நோக்கி வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்த சக்தி இத்தகைய அமைப்பை வைத்திருக்கிறது.

இதில் பலன் கிடைக்கிறதோ இல்லையோ முயற்சியே ஆனந்தம். இந்த வகையில் நாம் மேற்கொள்ள வேண்டிய நற்பண்புகளில் தற்போது ஏற்றுக் கொள்ளுதல் என்னும் நற்பண்பைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் பண்பு நம்மில் ஏற்பட வேண்டும். ஏனெனில் எனக்கு வருபவற்றில் விருப்பு, வெறுப்பு அவற்றைக் கொண்டு வருபவரில் விருப்பு, வெறுப்பு என்றெல்லாம் எனக்குள் இருக்கும். இதை ஆழமாகப் பார்த்தால்தான் இந்த விருப்பு வெறுப்பு எல்லாமே எனது கர்மாவால் நான் செய்த வினையால் இவற்றைக் கொண்டு வந்து என்னிடம் சேர்த்திருக்கின்றன என்பது விளங்கும். கர்மாதான் உள்ளத்தில் விருப்பு வெறுப்பாகப் பதிந்து வெளிப்பட்டு செயல்படுகின்றது.

இந்த உண்மையை வேதாந்த அறிவால் நாம் பெற்றிருக் கிறோம். ஆனால் இதற்குக் கல்வி மிக அவசியம் என்றில்லை. கிராமத்தில் வசிக்கின்ற பாமர மக்கள்கூட இந்த உண்மை யைத் தெரிந்து வாழ்க்கையைச் சுலபமாகக் கொண்டு செல்லத் தெரிந்திருக்கிறார்கள். இந்த உலகம் புரியாத புதிராக இருக்கும். ஆனால் ஏதோ ஒன்று எல்லாவற்றிற் குள்ளேயும் இருக்கிறது. அதுதான் எல்லாவற்றையும் வழி நடத்துகிறது என்று அறிகின்றபோது வாழ்க்கை எந்தவிதச் சங்கடங்களையும் தராமல் சாதாரணமாக உணரப்படுகின்றது.

உலக அளவின்படி என்னை நான் நேசிக்கிறேனா? என்றால் இல்லை என்பதுதான் பதில். அவரவரும் ஈகோவால்தான் தன்னை நேசிக்கிறார்களே தவிர உண்மையான நானை உணர்ந்து நேசிப்பதில்லை. உண்மையில் தன்னை நேசித்தால் தன்னிலும் அன்பு செலுத்தி எல்லோரிலும் அன்பு செலுத்து வார்கள். அன்பு என்பது உலகத்தைப் படைப்பதற்கும் எனக்குள் இருப்பதற்கும் அணுக்கள் எல்லாம் ஒட்டியிருப்பதற் கும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு பசை. அன்பினால் தான் எல்லாம் ஒன்றோடொன்று ஒட்டியிருக்கின்றன. எனக்குள் இருப்பதை அன்பென்றும் எங்கும் பரவி நிறைந்திருப்பதைக் கருணை என்றும் சொல்கிறோம்.

மனித குலத்தில் மிக உயர்ந்தவர்களாக வாழ்ந்த பெரியோர் கள் எல்லோருமே அன்பு செய்! கருணை செய்! உதவி செய்! என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு சொல் சொல்வதற்கே அதுதான் எனக்கு சக்தியைக் கொடுக்கிறது. அதன் கருணை எனக்கு உதவாவிட்டால் என் நாக்கு அசையாது. சொல் வெளிவராது. கருணை என்பது படைத்தவனுக்கும் படைப்பிற் கும் இடையில் உள்ள நெருக்கம். இதைப் பக்தி என்று சொல்கிறார்கள். இதை உணர்ந்து விட்டால் அடுத்த பிறப்பு இல்லை. இதை உணராமல் உணர்ச்சிகளிலும் சமுதாயப் போக்கிலும் வாழ்ந்தால் அடுத்த பிறவி கர்மாவின்படி உண்டு.

ஏற்றுக் கொள்ளுதல் என்ற பண்பை மேற்கொள்கின்றபோது எதுவும் உன்னைக் கட்டிப் போடக்கூடாது. நீ இந்து அல்ல, நீ மனிதனல்ல, நீ பிரம்மத் துளி. சமுதாயம் கொடுத்த அடை மொழிகளெல்லாம் இனி உனக்குத் தகுந்தவையல்ல. இதுவரை எதிரியாக இருந்தவரை இனி எதிரியாக நினைக்கக்கூடாது. அவர் வழியாக வந்த கர்மா முடிந்தது என்று நினைத்து அவரை மன்னித்து மறந்துவிட வேண்டும். பூச்சி, விலங்கு எது என்றாலும் அதை அடிக்க முற்படக்கூடாது. பூமியில் நீயும் படைக்கப்பட்டிருக்கிறாய். உன் வழியில் நீ போ என்று சொல்ல வேண்டும். கருணையுடன் கூடிய சுத்தமான சிந்தனையுடன் அவற்றுடன் பேசினால் அவை புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும். செய்து பார்த்தால் தெரியும். உனது மனம் சுத்தமாக இருந்தால் மற்றவர்களால் உங்கள் மனதைப் புரிந்து கொள்ள முடியும். தியானம் மேம்பட மேம்பட பிறமனங்களின் போக்கும் நடக்க இருப்பவையும் தெரிய வரும். மனமென்னும் சக்தி எனக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மனம் உலகத்திலுள்ள அனைத்தையும் தனக்குள் ஏற்றி வைத்திருக் கிறது. இந்த மனத்திலிருந்து அவை எல்லாவற்றையும் நீக்க வேண்டும். நீக்கினால் மனம் ஒளியாய் இருக்கும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் யோகிகள் வான்வெளி இடங்களுக்குப் பயணம் செய்து அங்கு என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் தங்களது ஒளியுடலால் அப்படிப் பயணம் செய்திருக்கின்றனர்.

தியானத்தில் பல எண்ணங்கள் எழாமல் ஒரே எண்ணமாக மாற்ற மானசீக ஜபம் செய்யப் பழக வேண்டும். ஓர் எண்ணம் எப்படி மூன்று பரிமாணம்; கொண்ட விஷயமாக மாறும்? உங்களைச் சுற்றியுள்ள பொருட்களெல்லாம் எண்ணங்களில் உள்ள பொருட்கள் தானே? உங்களால் ஒரு பொருளை ஆழ்ந்து கவனித்தால் உருவாக்கமுடியும். நன்றாக இறுகிய விழிப்புணர்வுடன் கூடிய மூலசக்திதான் பொருளாகத் தெரிகிறது. அதைப் பார்த்து அதனுடன் உறவு கொள்ள மனோசக்தி துடிக்கின்றது. அது பிறகு தேவையாகவும் அது இல்லாமல் இருக்க முடியாது போலவும் ஆகிவிடுகிறது. புத்திக்குப் போதனை கொடுத்தால் அப்படி ஏற்படுகின்ற ஆசைகள் எழாது.
எப்படி உடல் ஒளியாக மாறுகிறது? எண்ணங்கள் இல்லாமல் போனால் உடல் ஒளியாக மாறும். எதன்மீது ஆசைப்பட்டாலும் எனது செயல்கள் தனது சக்தியை இழக்கும். ஒன்றுமே தேவையில்லை என்று இருப்பதுதான் வயதாகாமல் இருப்பதற்கு ஒரு ரகசியம். உடலிலுள்ள ஸெல்கள் வளர்ந்து தேய்ந்து வயதை அதிகரிக்கச் செய்கிறது. ஆசைப்பட வில்லை என்றால் எனது சக்தி அதன்மீது பாயாமல் அப்படியே சேமிக்கப்படுகிறது. அதனால் இளமையாக இருக்க முடியும். முதுமையை விரைவாக வரவழைப்பது நாங்கள் தான். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வயது இருக்கிறது. அந்த வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வதும் வீணடிக்காமல் சேமித்து சக்தியோடு இருப்பதும் நம் கையில் இருக்கிறது. இந்த சக்தியை எதன்மீதும் விடாமல் உன்னுடனேயே வைத்திருக்க வேண்டும். இது ஆன்மீகத்தில் மிக உயர்ந்த பாடம். இந்த ளுரிநச ழெசஅயட நநெசபல pழறநச ஐ உன்னிலிருந்து அது வெளியேறாமல் பாதுகாப்பதன் மூலம் நீ அதிகரிக்கச் செய்யலாம். நீ அழகை ரசிப்பதற்கும் ஒன்றைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் என்று எல்லாவற்றிற்கும் சக்தி தேவைப்படு கிறது. சக்திதான் பின்னின்று அனைத்திற்குமாக செலவழிக்கப் படுகிறது. மன இயக்கம்தான் புலன்களின் வழியாக சக்தியைச் செலவிடச் செய்து முதுமையை வரவழைக் கின்றது. ஆகையால்தான் சும்மா இரு என்று சொல்லியிருக் கின்றனர். நீ சும்மா இருந்தால் அது வெளிப்பட்டு உன்னோடு பேசும்.

மனம் சிறிது முயற்சி செய்தாலே உயர்ந்த நிலைக்குப் போய்விடும். அழியக்கூடியவை, அழியாதவை பற்றிய தெளிந்த அறிவு உன்னில் ஏற்பட்டாலே நீ மனதைக் குழப்பிக் கொண்டிருக்க மாட்டாய். மனம் மிகக் கூரிய சக்தி வாய்ந்தது. கலைகளில் மிகுந்த திறமை கொண்டவர்களின் வாழ்க்கை உணர்ச்சி மயமானது. அவர்களின் சக்தி ஒரே விஷயத்தில் மிகக் கூர்மையாகப் பாய்ந்து வெளிப்படுகிறது. அதனால் அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் உணர்ச்சிகளால் தடுமாறுகின்ற நிலை ஏற்படும். பொருள் முதல் சார்ந்த வாழ்க்கைக்கு மாயை அவசியமான ஒன்று. இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பிப்பது மாயை. உனது மனதில் எது நிற்கக்கூடாதோ அதை நிற்கவைப்பது அல்லது வந்துபோவது மாயை. தொழிலும் அதில் ஏற்படுகின்ற பிரச்சனைகளும் மாயையே. தியானத்தால் மட்டுமே கர்மாவை வெகுவிரைவில் நீக்கி இல்லாமற் செய்யமுடியும்.

நான் போதித்த உண்மைகளை நீங்கள் அடிக்கடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். உங்களை விட்டுவிட்டுப் பொதுவாக சிந்தித்துப் பிறகு உங்களைச் சேர்த்து சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்கும்போது விவரம் புரியும். மனம் அமைதியாக இருந்தால்தான் இவற்றைப்பற்றி சிந்திக்க முடியும். எத்தனையோ பிறவிகளுக்குப் பிறகு இந்த உபதேசத்தின் மூலம் எனது வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப்பற்றி அவன்தான் என்னை அறியச் செய்திருக்கிறான்.

நம்மைச் சுற்றி நாம் விரும்பாத நமக்கு சங்கடத்தைக் கொடுக்கின்ற மனிதர்கள், சூழ்நிலைகள், அதர்மங்கள் நடைபெறுவதை நாம் பார்க்கின்றோம். அவைகளினால் பாதிப்பை அடைகின்றோம். அந்தப் பாதிப்பைக் குறைக்க முக்கியமான பண்பு ஏற்றுக் கொள்ளுதல் என்னும் பண்பு. அந்தப் பொருள்களை, மனிதர்களை நான் அவ்விதமே ஏற்றுக் கொள்கிறேன் என்று தியானம் செய்ய வேண்டும். என்னைச் சுற்றியுள்ள மனிதர்களின் குணங்களை ஏற்றுக் கொள்கிறேன். இதில்தான் பிரச்சனை வரும். ஏனெனில் சமுதாயம் சொல்லித் தந்த கருத்துக்களின் மூலம் தான் நாம் அனைத்தையும் பார்க்கிறோம். நமது சொந்த சிந்தனையால் சிந்தித்துப் பார்த்து முடிவெடுப்பதில்லை.

என்னைக் குறித்துப் பலர் ஒவ்வொரு முடிவை வைத்திருக்கிறார்கள். அவை அவரவர்களின் பார்வை. நல்லவராகவும் சிலர் என்னைப் பொல்லாதவராகவும் பயனற்றவனாகவும் பயன் கொடுப்பவனாகவும் உயர்வாகவும் தாழ்வாகவும் முடிவு செய்திருக்கிறார்கள். நாங்கள் வாழ்கின்ற வாழ்க்கை மற்றவர்களின் அபிப்பிராயத்தைச் சார்ந்ததாகவே இருக்கிறது. நாலுபேர் என்ன சொல்வார்கள் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். சில உண்மையாகவும் சில பொய்யாகவும் இருக்கலாம். அது அவர்களைப் பொறுத்தவரை சரி என்று நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னைப் பற்றி முடிவெடுப்பது அவர்களின் சுதந்திரம். என்னைக் குறித்து மக்கள் வித விதமாகப் பேசியிருக்கலாம். சில மிகைப்படுத்தப்பட்டதாகவும் தவறாகவும் இருக்கலாம். என்னைப்பற்றிப் பேசுவதற்கு மற்றவர்களுக்கு உரிமை உண்டு. ஏனெனில் நான் இந்தச் சமூகத்தில் ஒருவன். அவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக் கின்ற உரிமை எனக்கிருக்கிறது.

என்னைப்பற்றி மற்றவர்களுடைய சொல் அல்லது கருத்து அவர்களுடைய உரிமை. அதை எந்த அளவிற்கு நான் எடுத்துக் கொள்கிறேன் என்பது என்னைப் பொறுத்தது. என்னைப்பற்றிப் பேச உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேட்க முடியாது. ஏற்கத்தான் வேண்டும். நம்முடைய வாழ்வில் பலரைச் சந்தித்துப் பல சந்தர்ப்பங்களில் துயரம் பெறுவோம். அதற்கு முக்கிய காரணம் ஏற்றுக் கொள்ளாமை என அறிந்தோம். இப்போதே நாம் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு மனதை அமைதிப்படுத்தத் தியானம் செய்வோம்.

நான் என் கடந்த காலத்தை ஏற்றுக் கொள்கிறேன். இன்பம், துன்பம், மான அவமானங்களை ஏற்றுக் கொள்கிறேன். அது போல வர இருக்கும் எதிர்காலத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். நிகழ்காலத்தில் நடப்பவற்றையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். இவற்றை எனது மன அமைதி கெடாமல் இருப்பதற்காக நான் ஏற்றுக் கொள்கிறேன். உடல், வயது, ஆரோக்கியம், சில குறைகள், சில நேரங்கள், சில பலவீனங்கள், நோய்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். ஏற்றுக்கொள்ளுதல் என்பது பலவீனங்களைத் தொடர விடுவதில்லை. அவற்றை இல்லாமற் செய்ய முயற்சிக்கிறேன். நோய்கள் இருந்தால் நீக்க முயற்சிக்கிறேன். அவற்றையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். புலன்களை ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய மனம் சஞ்சலமடையும். அமைதியற்ற நிலையில் சில சமயங்களில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். ஒரே மனது துன்பமாகவும் இன்பமாகவும் இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். என் அறியாமையைப் பிறர் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். உடல், மனம், புலன், அறிவு, அறியாமை ஆகிய அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பழகுதலே இந்தத் தியானம்.

ஏற்றுக் கொள்ளுதல் என்ற பண்பைத் தியானித்து வந்தோம். ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலை நம்மைப் பாதிக்கின்றது. ஏற்றுக் கொண்டால் பாதிக்காது. இறுதியாக எதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எதை நாம் மாற்ற முயற்சிக்க வேண்டும் என்ற அறிவு அவசியம். இறைவனிடத்தில் ஒரு பிரார்த்தனை, “இறைவா! மாற்றமுடியாத விஷயத்தில் ஏற்றுக் கொள்ளும் மனநிலையைக் கொடுப்பாயாக. மாற்றக்கூடிய விஷயத்தை மாற்ற முயற்சி செய்யக்கூடிய சக்தியைக் கொடுப்பாயாக! எதை மாற்றமுடியும்? எதை மாற்றமுடியாது என்ற அறிவைக் கொடுப்பாயாக”. இறைவனிடத்தில் நாம் விடுக்கும் வேண்டுதலில் இது முக்கியமானது. நமக்கு வந்த அனுபவங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வது அவசியம். இப்போது நாம் வாழ்வது நம் கையில் உள்ளது. முயற்சி செய்யாமல் ஏற்றுக் கொள்வதென்பது சரியானதல்ல. மாற்றக்கூடியதை மாற்ற முழுமுயற்சி செய்த பின்பே ஏற்றுக் கொள்ளுதல் என்னும் தியானம் அவசியம். மாற்றக்கூடியதை மாற்றுவதற்கு முயற்சி செய்வேனாக. எதை மாற்றமுடியாது என்கிற அறிவைக் கொடுப்பாயாக! எதை மாற்றமுடியும், முடியாது என்ற அறிவை அடைவேனாக! இவை இரண்டும் சரியான அறிவு.

நாம் அடைந்த நற்பண்புகளை நம் குணங்களாக, நமது தன்மையாக மாற்றுவதற்கு அப்பண்புகளைத் தியானத்தில் பயிற்சி செய்து வருகிறோம். ஏற்றுக் கொள்ளாமை என்னைச் சிக்கலில் கொண்டு விட்டுவிடும். ஏற்றுக் கொள்ளுதல் சிக்கலில்லாமல் என்னைக் கொண்டு செல்லும். எல்லா நேரங்களிலும் மனதைக் குவிக்க முடியாது. மனதைக் குவித்தல் தியானம். அந்த நேரங்களில் பண்புகளைத் தியானித்தல் அவசியம். அடுத்த நற்பண்பு உண்மை பேசுதல். சத்யம்வத – என்பது வேதவாக்கு. உண்மையே பேசு என்பது இதன் பொருள். நாம் ஏன் உண்மை பேச வேண்டும்? தேவை என்ன? என்ற கேள்விக்கு மீண்டும் உபநிஷத், சத்யமேவஜெயதே! வாய்மையே வெல்லும்! என்று பதிலுரைக்கிறது. உண்மைதான் உண்மையான வெற்றியை அடையும். இந்த இரண்டு வாக்கியங்களை மனதில் கொள்ள வேண்டும். இவற்றை இறை நாமத்தைப் போல மனதில் இருத்த வேண்டும். இறைவன் என்னிடத்தில் வேதம் மூலமாகப் பேசுகிறார். இறைவன் எனக்கிட்ட கட்டளை, உண்மை பேசு, வாய்மையே வெல்லும். இதை மனதிற்குள் வைத்து தியானம் செய்வோம்.

உண்மை பேசும்போது எனது சக்தி முழுவதும் ஒன்றாகும். பொய் பேசுகிறபோது உண்மை முன்னால் நிற்கும். அதை மறைத்துப் பொய் வெளிப்படும். தொடர்ந்து இப்படி மாறி மாறி வந்து செல்லும்போது எனது மூளை இரண்டு பக்கமும் இரண்டாகப் பிரியும். உனது சக்தி பிளவுபட்டதாக ஆகிவிடும். ஒன்றுபட்ட சக்தி வலிமையாகச் செயல்படும். பிளவுபட்ட சக்தி மூளையைப் பாதிப்படையச் செய்யும். உடல்நலத்தைப் பாதிக்கும். மனதில் பட்டதைச் சொல்வதுதான் சரி. அகிம்சை, மன்னித்தல், நன்றி தெரிவித்தல், பொறுமை, சகிப்புத்தன்மை, ஏற்றுக் கொள்ளுதல், உண்மை பேசுதல் போன்ற நற்பண்புகளை நாம் ஏற்றுச் சிந்தித்துத் தியானிப்பதால், கடைப்பிடித்தலால் நம்மனதில் எப்போதும் அமைதி கெடாமல் நிம்மதியாக வாழ்க்கை அமையும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *