வருவதை ஏற்றல் நன்று

நம் உடலில் ஒரு மின்னல் கொடிபோல் உயிர் இருக்கிறது. வேதம் இதனைக் குண்டலினி என்று சொல்கின்றது. மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கின்ற இதுதான் சக்கரங்களின் வழியாக மேலே எழும்பி இந்த உடலை இயங்கச் செய்கிறது. ஒவ்வொரு உடலும் இயங்குவதற்கு ஒரு கட்டளை விதிக்கப் பட்டிருக்கிறது. அதற்குக் கர்மா என்று பெயர். ஒவ்வொருவரின் இயக்கமும் அவரவரின் கர்ம வினையின்படியே நடைபெறு கின்றன. சமுதாயத்தில் துன்பம் மட்டுமே, என்னுடைய கர்மா இது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் வேதாந்த அறிவைப் பெறுகின்ற நிலையில் இன்பம், துன்பம் இரண்டுமே எனது கர்மாதான். நான் செய்தவற்றின் பிரதி விளைவுகள் எனக்கே திரும்ப வருகின்றன.

ஞான உபதேசம் பெற்று ஆத்ம வித்தைக்குரிய பயிற்சிகளை மேற்கொள்ளத் துவங்கிய பிறகு மூலத்துடன் எனது தொடர்பை ஏற்படுத்த வேண்டுமே தவிர படைப்பின் நியதிக் காக உருவாக்கப்பட்ட தெய்வ வடிவங்களை இன்னமும் பிடித்துக் கொண்டு அதில் போகக்கூடாது. அவையெல்லாம் படிமுறைக்காக வைக்கப்பட்டவை. எல்லாமாக இருக்கின்ற இறைசக்திதான் அவற்றின் வழியாக ஒளிச்சிதறல்களாக வெளிப்படுகின்றன. அவற்றைக் கடந்து ஆத்மாவாகிய என்னுடன் நான் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன்.

எல்லாவற்றிற்குள்ளேயும் ஈதரிக் எனர்ஜி இருக்கின்றது. அந்த ஆற்றல் இரவில் பு+மிக்கு வந்து போகிறது. அதை நாம் ஓசோன் என்கிறோம். குளிர் காலத்தில் ஈதரிக் எனர்ஜி அதிகமாக வரும். மேற்கு நாடுகளில் குளிர் மிக மிக அதிகம். குளிர் பட்டவுடன் நம் உடல் நடுங்குகிறது. அப்படி நடுங்கிச் சூடாகும் இது இயற்கையாய் நிகழ்வது. அதனால் உடலில் இருக்கும் ஈதரிக் எனர்ஜி வெளிப்படுகிறது. இது புதியதான ஒரு தகவலாக இருக்கும். குளிர் காலத்தில் எனக்குள் இருக்கின்ற தெய்வீக ஆற்றலை நான் அதிகமாக வெளிப்படச் செய்கிறேன். அது உடலில் வெப்பமாக வெளிப்படுகின்றது. உடல் சூடாவதற்குத்தான் நடுங்குகிறது.

சூரியனுக்கு நிறமில்லை. ஆனால் அதிலிருந்து ஏழு நிறங்கள் வெளிப்படுகின்றன. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு நிறமாக அது வெளிப்படுத்துகின்றது. பூமியில் இருப்பவர்களுக்குத்தான் அதன் நிறங்கள் கண்களுக்குத் தெரிகின்றனவே தவிர சூரியனுக்கு நிறமில்லை. சூரியனுக்கு காலை மாலை என்று எதுவுமில்லை. பு+மி சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகின்றன. அதைப் போலத்தான் பிரம்மம் என்பது பற்றிப் பூரணமான ஒரு விளக்கம் கொடுக்க இயலாது. யார் எந்தக் கட்டத்தில் நிற்கிறார்களோ அந்த அளவிற்குத்தான் பிரம்மத்தைப் பற்றி விளங்கிக் கொள்ள இயலும். எத்தனையோ மதப் பெரிய வர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்களெல்லாம் அவரவர் நிலைகளில் நின்று பிரம்மத்தைப் பற்றி விளக்கியும் பாடியும் வைத்திருக்கிறார்கள். அந்த நிலைகளை ஞானத்தால் மட்டுமே அடைய முடியும். வேதாந்த பார்வையால் பார்க்கின்றபோது ஒன்றை ஒன்று ஈர்ப்பதென்பது படைப்பிலேயே இருக்கின்றது. காம உணர்வு இயற்கையாகவே ஸெல்களுக்குள் வைக்கப் பட்டிருக்கின்றது. அந்தக் காம உணர்வு என்னைத் தூண்டு கிறது. தூண்டப்பட்ட அது பொருள்களிலோ, மனிதர்களிலோ உணர்வாக மாறுகிறது. அந்தக் காதல் உணர்வு நாட்கள் செல்லச் செல்ல அன்பாக மாறுகின்றது. பிறகு அந்த அன்பு நீக்க முடியாத அளவிற்குப் பேரன்பாக மாறுகிறது.

இந்த அன்பு தொடர்ந்து இருக்கின்றபோது தியானமாக, ஒரே நினைவாக மாறுகிறது. அந்தத் தியானம் தொடர்கின்றபோது ஒளியாக மாறுகின்றது. ஒளிதான் மூலம். ஒளியிலிருந்துதான் உலகம் வந்தது. இந்த ஒளிதான் எனது உள்ளமாக உலக விஷயங்களைக் காவிக்கொண்டு திரிகிறது. இந்த ஒளி நிலைமைக்கு என்னை உயர்த்தி எனக்குள்ளே அன்பை நிறைத்தால் ஆத்மாவும் இந்த ஒளியும் ஒன்று. இதுவரை மனமாகவும் புத்தியாகவும் எனக்கு உறைபோல் இருந்து செயல்பட்ட ஒளியை இவ்வாறு நான் விடுவித்தேன். இந்த ஒளி என்னில் தொடர்ந்து நிலைநாட்டப்பட்டால் அது ஆத்மாவாகவே ஒளிரும். அந்த ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடு இல்லை. அது எனக்குள் இருக்கும்போது ஆத்மா. வெளியில் எல்லாமாகப் பரந்திருப்பது பரமாத்மா. இந்த தெய்வீக சக்தியைத் தான் நாம் சுவாசிக்கின்றோம். இதற்குள்ளேதான் நாம் வாழ்கின்றோம். இந்த தெய்வீகம் எல்லா இடங்களிலும் அலைகளாக, இயக்கமாக சுருண்டு கொண்டிருக்கிறது. அலையாக நிற்கின்ற ஈதரிக் எனர்ஜி படர்கின்றபோது எனக்குள்ளே மக்னெடிக் எனர்ஜியாக பொருளாக வருகிறது. நாம் தியானத்தின் வழியே மீண்டும் அலை நிலைக்குப் போகிறோம். அலையை உற்பத்தி செய்கின்ற மூலமாகிய எனது ஆத்மாவிற்குப் போகிறோம். மூலத்திலிருந்து வெளிப்பட்ட அலையாக நான் இருக்கிறேன். அது உடம்பாக இருக்கும்போது எலக்ட்ரோ மெக்னடிக் என்றும் அது உயிராக இருக்கும்போது ஈதரிக் என்றும் சொல்லப்படுகிறது. இது மனித சமுதாயம் புரிந்துகொள்வதற்காகக் கண்டுபிடித்த அளவுகோலே தவிர இது உண்மையான ஈதரிக் இல்லை. காற்றுக்குள் நடுநாயக மாக இருப்பது ஈதரிக். தண்ணீருக்குள்ளும் மற்ற படைப்புகள் அனைத்திற்குள்ளும் நடுநாயகமாக நிற்;பது ஈதரிக். அதைத் தான் ஆத்மா அல்லதுஉயிர் என்று சொல்கிறோம். கீழ் மட்டத்தில் அதை ஜீவன் என்றும் நடுமட்டத்தில் பார்க்கின்ற போது உயிர் என்றும் உயர் மட்டத்தில் ஆத்மா என்றும் அதனை அழைக்கின்றோம்.

ஆத்மாவோடு நான் இணைந்திருந்தால் புத்துணர்வு பெறுவேன். புதிய மனிதன் ஆவேன் என்பதை உணர்த்துவதன் ஓர் அடை யாளம்தான் நித்திரை. இரவு படுத்துத் தூங்கி காலையில் எழும்போது இரவு முழுவதும் உடல், மனம், புத்தி எல்லாவற்றையும் துறந்து மூலத்துடன் நாம் தொடர்பு கொள்வதால்தான் இழந்த சக்தி புதுப்பிக்கப்பட்டு மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் புதிய பொலிவுடன் எழ முடிகிறது. ஆழ்ந்த நித்திரையில் அறிவு இல்லை. ஆனால் தியானத்தில் அறிவு இருக்கிறது. இந்தத் தியானத்தில் நான் மனதையும் இந்த மனதில் என்னால் ஏற்றிவைக்கப்பட்ட ஏராளமான விஷயங்களையும் பிரித்து விடுகிறேன். மனதில் ஏராளமான விஷயங்களை ஏற்றினால் மன அழுத்தம் (stress) வரும். அதிலிருந்து தப்பிப்பதற்கு மாத்திரைகளைப் போட்டு அதை மழுங்கச் செய்ய முயல்கிறோம். என்னுடைய பிரச்சனைகளை நான் மறக்க முடியுமானால் என்னுடைய பிரச்சனைகள் பிரச்சனைகளே அல்ல என்ற விளக்கத்தைப் பெற முடியும் என்றால் இந்த மன அழுத்தமும் அதனால் ஏற்படுகின்ற வியாதிகளும் ஏற்படாது.

மின்னல்கொடி என்று ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட குண்டலினி சக்தி உடலின் கீழ் பாகத்தில் மூலாதாரம் என்ற இடத்தில் ஒரு பாம்பாக சுருண்டு இருக்கிறது. இந்தக் குண்டலினி சக்தி நமது ஞானத்தாலும், தியானத்தாலும் மேலே எழும்ப வேண்டும். தியானத்தைத் தவிர வேறு எந்த முயற்சியாலும் அதனை எழுப்ப முடியாது. ஆனால் உலக வழக்கத்தின்படி தேங்காயை ஓங்கி அடித்தல், நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ளுதல், தலையில் கற்பு+ரம் ஏற்றுதல் தோப்புக்கரணம் போடுதல் போன்றவற்றைச் செய்வார்கள். ஆனால் ஞானம் இல்லாமல் எழும்பினால் ஆட்டம்போடும். கோவில்களில் மேள சத்தத்திற்குப் பலர் ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஐயா வந்து விபூதி போட்டவுடன் அது அடங்கி விடும் என்று சொல்வார்கள். ஆனால் அந்த சக்தி சிறிது நேரத்திற்குத்தான் அப்படி இருக்கும். பிறகு கீழே இறங்கிவிடும். இவையெல்லாம் தற்காலிகமானவை. படிமுறை களாலும் ஞானப்பயிற்சிகளாலும் சக்தி எழும்புவதுதான் நல்லது.

இந்த உடலுக்குரிய குண்டலினி சக்தி மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் ஆகிய சக்கரங்களின் வழியே மேலே எழும்பி மணிபூரக சக்கரம் எனப்படுகின்ற சூரிய சக்கரத்தில் நிற்கிறது. சூரிய சக்கரம் புத்தி சக்தியை அதிகரிக்கச் செய்யும். ஆனால் உலகத்தில் பெரும்பாலோர் உடல் தொடர்புடன் கூடிய ஸ்வாதிஷ்டான சக்கர நிலையிலேயே நின்று விடுகின்றனர். அதாவது கல்யாணம் முடித்துப் பிள்ளை பெறுவதுதான் வாழ்க்கை என்ற நிலையில் செயல்படுகின்றனர். ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஒவ்வொரு ஒலி இருக்கின்றது. இளைய பருவத்தினர் காதல் வயப்பட்டுக் கருத்தை சிதற விடக்கூடாது என்பதற்காகத்தான் பெற்றோர் அவர்களைப் படிப்பில் கூடுதல் கவனத்தைச் செலுத்தக்கூடிய விதத்தில் கண்காணித்து வளர்ப்பது. (பாலன் தேவராய சுவாமிகள் இயற்றிய) கந்தர்சஷ்டி கவசத்தில் ரி ரி ரி ரி ரி என்று ஒரு வரி வரும். இந்த ரி என்னும் ஒலி ஸ, ரி என்ற வரிசையில் இரண்டாவது எழுத்து. அந்த ஒலி இனப்பெருக்கச் சுரப்பியை இயங்கச் செய்து மேலே எழும்பச் செய்வதற்காக அமைக்கப் பட்ட மந்திர ஒலியாகும். இந்த ஒலிகளுக்கும் அலைகளுக்கும் தொடர்பு இருக்கிறது.

தமிழ் மொழியிலுள்ள வல்லினம் ரஜோகுணத்திற்குக் கொண்டு செல்லும். இந்த ரஜோகுண ஒலியமைப்பைத் தெலுங்கு மொழி அதிகம் பயன்படுத்துகின்றது. கன்னடமொழி இடையின ஒலியமைப்பை எடுத்துக் கொண்டு விட்டது. மலையாள மொழி மெல்லின ஒலியைச் சேர்த்துக் கொண்டு விட்டது. இடையின ஒலியைப் பயன்படுத்துகின்ற கன்னடக்காரர்களின் முன்னேற்றம்தான் சிறப்பாகத் தெரிகின்றது. ஒலியைப் பயன் படுத்துகின்ற விதத்தில் குண வேறுபாடு தெரியவரும்.

மின்னல்கொடியான குண்டலினியின் அதிர்வலைகள் உயிரை இயக்குகின்றன. உயிர் உடம்பை இயக்குகின்றது. ஒவ்வொரு அணுக்களிலும் குண்டலினி சக்தியின் வெளிப்பாடு சூட்சுமமாக நிறைந்திருக்கிறது. இது உடம்பில் நாடிகளின் மூலம்தான் இயக்கத்தைக் கொண்டு செல்கிறது. நாடிகள் கீழ்நோக்கிச் சென்று செயல்படும்போது பஞ்சபூதக் கலவையான உடம்பு சம்பந்தப்பட்டு அறியும் கருவிகள் மூலமும் கர்மயந்திரங்கள் மூலமும் (கை, கால், வாய், எருவாய், கருவாய்) செயல் படுகின்றது. இந்த விழிப்பு நிலையில் உடலும் மனமும் சிற்றின்பத்தை நோக்கி ஓடுகின்றன. இந்த உயிர் இயக்கம் சிற்றின்பத்தை ஆனந்தமயமாகப் பார்க்கின்றது. ஞானம் இல்லாததால் இந்த நிலை. இதே சக்தி மேல் நோக்கிப் பயணம் செய்து சகஸ்ரார தளத்தில் ஆற்றலாக மாறி அறிவுமயமாக ஆகின்றது. ஞானத்தைப் பெறுகின்ற நிலையில் உள்ளவர்களுக்குக் குண்டலினி சக்தி மேலே ஏறி அறிவு மயமாக இருக்கும். இந்த நிலையில் தியானத்தைத் தீவிரமாகப் பயிற்சி செய்தால் பிரம்மத்துடன் இணைப்புக் கிடைக்கும் நிலை வாய்க்கும்.

மனித உடம்பின் ஆற்றலானது சகஸ்ராரத்தில் அறிவு மயமாக அன்பில் ஒடுங்குகிறது. இப்படி அன்பில் ஒடுங்கும் நிலையை சித்தர்கள் சிவசக்தி ஐக்கியநிலை என்கிறார்கள். சக்கரங் களில் ஏழாவது நிலை சக்திதளம். இங்கு ஆற்றல் அதிகரித்து நிற்கும். அதற்கு மேலாக இருப்பது சிவதளம். அங்கு அன்பின் சக்தி அதிகமாக இருக்கும். இவை ஒன்று சேர்வதுதான் சிவசக்தி ஐக்கிய நிலை. மாறி மாறி தியானத்தின் மூலம் இந்த நிலைகளில் நிற்கப் பழகினால், அந்த நிலையில்தான் ளுழஅநடிழனல டிநஉழஅந ழெடிழனலஇ ழேடிழனல டிநஉழஅந நஎநசலடிழனல என்ற நிலை சித்திக்கும். சிவதளத்தில் நீ படைப்பின் பிரஜையாகின்றாய். ஒரு பூச்சிக்கும் உனக்கும் பிறகு வித்தியாசமில்லை. இரண்டும் ஒன்று. படைப்பால் வேறுவேறாக எல்லாம் தெரிந்தாலும் அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான். இருப்பது பிரம்மம்தான். அவரவரின் இயக்கத் திறன்தான் வேறு வேறு.

சகஸ்ர தளத்தில் குண்டலினி ஆற்றலானது தனது நிஜ உருவத்தை இழந்து அறிவாக மாறுகின்றது. ஞானமாக மாறிய அது அன்பில் ஒடுங்குகின்றது. சிவசக்தி ஐக்கியமே மனித உடம்பிலுள்ள சோம, சூரிய, அக்னி என்ற மும்மண்டலங்களாக ஒளிர்கின்றது. சிவசக்தி வடிவமான குண்டலினி சக்தி மூலாதாரம் முதல் சகஸ்ரார தளம்வரை உள்ள ஆறு சக்கரங்களைத் தனது சூட்சும உடம்பாக எடுத்துக் கொள்கிறது. (இந்த ஆறு சக்கரங்களைத்தான் ஆறுபடை வீடுகளாக அமைத்திருக்கின்றனர் சித்தர்கள். இந்த ஆறு சக்கரங்களும் விஞ்ஞான ரீதியாக டக்ளஸ் கிளாண்ட்ஸ் நாளமில்லாச் சுரப்பிகள் என்று குறிப்பிடப்படு கின்றன.)

அதனாலேயே இந்த சக்தி வயப்பட்ட சிவம் அல்லது சிவம் வயப்பட்ட சக்தி என்பது சத்சித் ஆனந்தமாக ஒளிர்கின்றது. மனத்திலிருந்து ஒளிமயயாக அது வெளிப்படும். இதுதான் உங்களை இறுதிவரை கொண்டு சேர்க்கும். குண்டலினி சக்தி ஜீவனை அம்மையப்பனை நோக்கித் தள்ளிச் செல்கின்றது. இதை நம் கண்களாலோ, காதுகளாலோ, புலன்களாலோ அறிய முடியாது. ஆனால் ஆனந்தநிலை நமக்குத் தெரியும். நாம் அதை அனுபவிப்போம். காரணம் நம் ஆத்மாவிலுள்ள மூன்றாவது கண் சிவசக்தி ஐக்கியத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படி சிவசக்தி ஐக்கியமாகி ஆனந்தத் தாண்டவமாடுகின்ற எழுச்சி பெற்ற குண்டலினி சக்தியைப் புஜங்கி, சப்தப் பிரம்மம், பிராணசக்தி, பிரகிருதிமாத்ருகா, ஈஸ்வரி, குடிலாங்கி என்று சிறப்புப் பெயர்கள் கொடுத்து லலிதா, சகஸ்ரநாமம் சிறப்பாகக் கூறுகின்றது.

ஒவ்வொரு உடலும் தனித்தனி விதமாக சிருஷ்டிக்கப்படு வதற்கு முன் வினைப்பயன்தான் சரீரத்தின் வடிவமாக உயிர்களுக்குக் கிடைக்கப் பெறுகிறது. உலகைப் படைப்ப தற்கு விருப்பமுள்ள இறைவன் முதலில் உயிரையும் பிரகிருதியையும் படைக்கிறார். பிரகிருதியிலிருந்து சத்வ, ரஜோ, தமம் என்ற மூன்று குணங்களும் பிறந்து அவை உயிரையும் உடம்பையும் பிணைக்கின்றன. இயற்கையின் எல்லா அம்சங்களிலும் இந்த மூன்று குணங்களும் கலந்திருக்கின்றன. படைப்புக்கு முன்பே இவை இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் மாறி மாறி இவை வெளிப்படும். இந்தக் குணங்களால் ஏற்படுகின்ற தாக்கங்களைத்தான் நற்பண்புகள் என்றும் தீய குணங்கள் என்றும் சொல்கின்றோம்.

முக்குணங்கள் வெளிப்படையாகத் தோன்றுவதில்லை. ஆனால் பிரகிருதியுடன் சேர்த்து வரும்போது வெளிப்படும் பொருளாக மாறுகிறது. என்றாலும் இதற்கு முழு உருவம் கிடையாது. குணங்களுக்கு உருவம் இல்லையென்றாலும் வெளியில் தெரிவது எப்படி? சூரியனுக்கு என்ன நிறமென்று சொல்லமுடியாது. அந்த நிறமற்ற நிலையிலிருந்தே ஏழு வண்ணங்களும் தோன்றுகின்றன. அதுபோலவே முக்குணங்களும் மூலப்பிரகிருதியில் மறைந்திருக்கும் சுத்த சத்துவ நிலையிலேயே தோன்றுகின்றன. நீராவி கையில் பிடிக்கும் அளவிற்குத் திடமில்லாதது, உருவமில்லாதது, காற்றைப் போல நாலு திசைகளிலும் அலையக்கூடியது. ஆனால் அதே நீராவி நெருக்கமடையும் போது மேகமாக மாறி மழையாகக் கொட்டுகிறது. பிரகிருதியிலும் நீராவி போல் மிதந்து கொண்டிருந்த முக்குணங்கள் சுத்தசத்துவம் என்ற நெருக் கத்தை அடையும்போது உருவமாக மாறுகின்றது. உடல் முழுவதும் பரவியிருக்கின்ற முக்குணங்கள் உடலின் நெருக்கத்தால் மனம் என்ற ஒன்றாக உருவாகின்றது.

முக்குணங்களில் சத்வகுணம் என்பது நிர்மலத் தத்துவம் உள்ளது, ஒளிமயமானது, ஞானம் நிறைந்தது, சன்மார்க்கத்தில் ஈடுபடக்கூடியது, சிற்றின்பத்தைப் புறம் தள்ளுவது. இதன் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் ஞானிகள், மகான்கள், முனிவர்கள். இவர்கள் நாட்டையும், காட்டையும், உறவுகளையும், பகையையும், பெண்ணையும், மண்ணையும் ஒன்றாகக் கருதுவார்கள். இந்த சத்வகுணம் இவர்களுக்கு மனதிலிருந்தே தோன்றுகிறது.

இன்னொரு குணம் ரஜோ குணம். இது விருப்பமே வடிவெடுத்தது, ஆசை மிகுந்தது, மனிதனைத் தொழில் செய்யத் தூண்டுவது. உட்காராதே! எழுந்து ஓடு! வேண்டிய மட்டும் உழை! என்று துரத்தும். வெற்றி வந்தால் சிரிக்கச் செய்யும், தோல்வி வந்தால் அழச் செய்யும்.

மூன்றாவது தமோ குணம். மயங்குவது, மயக்க வைப்பது, எல்லாம் முடிந்து போச்சு என்று சலிப்பைத் தருவது, அப்பன், பாட்டன் சோறு போடுவான் என்று சோம்பிக் கிடப்பது, அறி யாமை நிறைந்தது, அடுத்தவர் சொத்தை அபகரிக்கவும் காத்திருக்கக் கூடியது. இந்த மூன்று குணங்களுமே பிரகிருதி மூலமாக நம் உடம்பில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் கிருஷ்ணரும் இருக்கிறார், அர்ச்சுனனும் இருக்கிறான், சகுனியும் இருக்கிறான். இந்த மூன்று குணங்களுமே மாறி மாறி நம் மனதில் வெளிப்படு கின்றன. நமது மனம் இப்படித்தான் இயங்குகிறது. இந்த இயக்கம் நாடிகள் வழியாக நமது உடம்பிற்குள் எப்படி எல்லாம் ஊர்ந்து செல்கிறதோ, அதன்வழியாகக் குண்டலினி கொண்டுவரும் தெய்வீக சக்திகள் அப்படியெல்லாம் நடந்து நம்மைக் கடந்து செல்கிறது என்று சித்தர்கள் கூறுகிறார்கள், ரகசியமாக.

இனி நாம் மேற்கொண்டு பழகவேண்டிய நற்பண்பு ஏற்றுக் கொள்ளுதல் என்பதாகும். எதையும் நம்மால் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அப்படியே ஏற்றுக் கொண்டா லும் மற்றவருக்காகத்தான் அதை ஏற்கிறோமே தவிர உண்மையில் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதில்லை. அன்றாட வாழ்க்கையில் ஏராளமான விஷயங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. உலகம் முழுவதுமே ஒன்றுதான் என்ற கருணை இருந்தால் எதையும் ஏற்க முடியும். இருப்பதை இருந்தபடி ஏற்றுக்கொள்ளத் தெரியவேண்டும்.

பொறுமையைப் பல இடங்களில் பின்பற்ற வேண்டியிருக்கிறது. அறிவிலும், அறிந்து கொள்ளும் நிலையிலும் பொறுமை தேவை. பொறுமையைக் குலைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏராளம் ஏற்படும். அன்பு கலந்திருந்தால் தான் பொறுமை ஏற்படும். ஞானமும் இருக்க வேண்டும். மனக்கட்டுப்பாட்டிற்கும் என்னை வடிவமைப்பதற்கும் பொறுமை கட்டாயம் தேவை. பிழை செய்தவர்களைக் கண்டித்துத் திருத்துவதற்கும் பொறுமை தேவை. கண்டித்தல் எதிர்ப்பலையை உருவாக்கும். பிறகு அந்த எதிர்ப்பலை வளரும். மனதில் ஒரு காயத்தை ஏற்படுத்தாமல் பிழைகளைச் சரிசெய்யப் பொறுமை அதிகம் தேவை. கண்டிக்கப்பட்ட மனதின் அடிப்படையில் ஒரு பெரிய எழுச்சி உருவாகும். அப்படி ஏற்படாமல் அன்பின் அடிப்படை யில் பிழை திருத்தப்பட வேண்டும்.

சில தத்துவங்கள் புரியவில்லை என்றால் சிறிது காலத்திற்குப் பின் புரியும். அறிவிலும் குணத்திலும் மாற்றம் வரவேண்டு மானால் பொறுமை வேண்டும். நம்மிடமிருக்கின்ற பண்புகள் காலத்தினால் நற்பண்புகளாக மாறும். பொறாமை, கோபம், சலிப்பு போன்றவற்றை மெதுவாகத்தான் விடமுடியும். சாந்தம், கருணை, அகிம்சை, மெதுவாகத்தான் வரும். இங்கு பொறுமை மிக முக்கியமானது. என்னை மாற்ற நான் முயற்சி செய்கிறேன். இறைவன் அருளையும் நாடுகிறேன். இதுவரை பொறுமையாய் காத்திருந்தேன். என் மாற்றத்திற்குச் சரியான முயற்சி செய்கிறேன். மாற்றம் வரும்வரை பொறுமையுடன் காத்திருப்பேன். இந்த வார்த்தையை சிந்தித்து மெதுவாக அமர்ந்திருப்பேன்.

மனதில் வரும் மாற்றம் ஒரு மலர் மலர்வதைப்போல, அதற்குரிய காலம் வரும்வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். முயற்சி செய்து பலன் வரும்வரை பொறுமையுடன் இருப்பதே சாதனை. படைப்பில் காலம் மிக முக்கிய பங்கு பெறுகிறது. இதில் கர்மாவும் கலந்து செயல்படுகிறது. எப்படிப்பட்ட குணங்களுடன் வாழவேண்டும் என்ற அறிவை சுலபமாக அடைந்துவிடுவோம். என்ன குணங்கள் நமக்கு வேண்டுமென்பது எளிதில் நமக்குத் தெரிந்துவிடும். அவை நம் குணங்களாக மாறக் காலம் தேவை. பண்புகளை எடுத்துத் தியானம் செய்கிறேன்.

நாம் எவ்வளவோ சூழ்நிலைகளைச் சந்திக்கிறோம். அவற்றை ஏற்றுக் கொண்டால் அந்தச் சூழ்நிலை நம்மைப் பாதிப்ப தில்லை. ஒரு சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் நமக்குச் சிக்கல் அதிகம். நாம் பலருடன் பழகுகிறோம். சிலருடைய சொற்கள் சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏற்றுக் கொள்ளாத குணங்கள், செயல்கள் கொண்ட மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுதல் என்ற பண்பை நாம் ஏற்றுக் கொண்டுவிட்டோம். நாம் சூழ்நிலைகளை ஏற்றுக் கொண்டால் பிறகு அவற்றால் பாதிக்கப்படுவதில்லை. என்னுடைய மன அமைதியைப் பாதிக்கும் எதையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. மன அமைதிக்குப் பின்னால் நிம்மதி இருக்கிறது. எனது நிம்மதியைப் பாதிக்கும் எதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மனம் மாறினால் வாழ்க்கை எளிதாக இருக்கும். மனதின் அலை அன்பிலிருந்து வெளிப்பட்டால் என்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் அன்பாகப் பரவி அணைக்கும். அவை எல்லாமே அன்பாக மாறும். அடிப்படைக் கருணை விளங்கினால்தான் பொறுமை, அகிம்சை போன்ற நற்பண்புகள் என்னில் வளரும். அன்பு மயமான வாழ்க்கைக்குப் பொறுமை மிக அவசியம். இந்தப் பொறுமை விளைகின்ற ஆழ்பரப்பு கருணை. பக்தி, கருணை எல்லாம் நெருக்கத்தைத் தருபவை. மனதில் கருணை இருந்தால்தான் பொறுமை ஏற்படும். கருணை இல்லாத உன் நடவடிக்கை உன் மனதில் வடுவாக மாறி கர்மாவாகப் பதிந்து விடும். அதை அனுபவிக்க மீண்டும் ஒரு பிறவி எடுக்க வேண்டி வரும்.

இதுதான் நியதி. நல்லவிஷயங்கள் நல்ல கர்மாவால் வருபவை. அவையும் கருணையாக நடந்ததால்தான் ஏற்பட்டவை. மனிதர்கள் அன்பைத் தேடித்தான் அலைகிறார் கள். வீடு என்பதே அன்பைப் பகிர்ந்து கொள்வதற்காகத் தான். ஆனால் நடைமுறையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையைப் பார்த்துக்கொண்டு வாழ்கின்ற வாழ்வாகப் போய் விட்டது. உள்ளத்தில் கருணை இருந்தால் அன்பு, அகிம்சை, பொறுமை என்று எல்லாம் நம்மில் இருக்கும். பக்தி என்று சமயம் சொல்வதும் கருணையால் விளைவதுதான். பக்தி என்பது கருணை சார்ந்த நெருக்கம். என்னில் கருணை நிரம்பி இருந்தால் தீய குணங்கள் எனக்குள் இருக்காது. இறைவனையும் என்னையும் இணைப்பது கருணை. நான் மற்றவரிடம் இணைந்து பழகவும் இந்தக் கருணைதான் தேவை. எல்லாப் பிராணிகளும் கருணையைப் புரிந்து கொள்ளும். இயற்கையில் கருணை நிரம்பியிருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி நம்மிடம் இல்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *