என்னுள் பொறுமையை வளர்ப்பேன்

உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டிருக்கின்ற அமைதி நீங்கள் ஆத்மாவிற்கு சமீபத்தில் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்து கிறது. வெளி வாழ்க்கையில் இன்னும் உங்களுக்குப் பிக்கல், பிடுங்கல்கள், பிரச்சனைகள் என ஏராளம் இருந் தாலும் நான் அமைதியானவன் என்ற உணர்வு உங்களுக்கு ஞானத்தின் மூலம் ஏற்பட்டிருக்கிறது. உங்களது இந்த ஆழ்ந்த அமைதியை யாராலும் குலைக்க இயலாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி நீங்கள் சில சந்தர்ப்பங் களால் தற்காலிகமாக நிலை குலைந்தாலும் மீண்டும் அந்த அமைதிக்கு வந்து விடுவீர்கள். எப்படி நாளாந்தம் பிரச்சனை கள் நித்திரையில் மறைந்துபோய் விடுகின்றனவோ அது போல தியானம் செய்வதன் மூலம் உங்களை நீங்கள் அமைதி நிலைக்குக் கொண்டு செல்கின்றீர்கள்.

ஞானப் பயிற்சி பெறுகின்ற உங்களுக்குக் கர்மயோகம், பக்தியோகம் எல்லாம் நன்கு தெரியும். இப்போது நீங்கள் அன்பு செலுத்த வேண்டும் என்ற பக்தி யோகத்தில் இருக்கிறீர்கள். மற்றவர்கள் ஏதோ தங்களது தேவைகளுக்காகவும் ஆபத்தில் இருந்து தப்புவதற்காகவும் பக்தி செய்கிறார்கள். உங்களுடைய பக்தியோ இதைவிட வேறு வழியில்லை என்ற ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. வாழ்வியலில் கொண்டுள்ள பக்தியில் நழுவுவதற்கோ, வேறு விதமாக மாறுவதற்கோ இடமுண்டு. ஞானத்தால் ஏற்பட்டுள்ள பக்தியில் நழுவவோ, மாறவோ எந்தவித வாய்ப்புமில்லை. ஏனெனில் ஞானம், தெளிந்த நல்லறிவாக உங்களில் உண்மையாக உணர்த்துவது. ஆத்மாவையும் உங்களையும் வேறுவிதமாகப் பிரித்துக் காட்டுவது ஈகோ எனப்படும் நான். இப்போது எங்களில் ஈகோ இல்லையென்று நீங்கள் சொன்னாலும் இன்னும் இருக்கிறது என்பதுதான் எனது அனுமானம். கழற்ற வேண்டியதைக் கழற்றாமல் சுமந்து கொண்டு திரிகிறீர்கள். சிந்தித்துப் பாருங்கள்.

எனது கர்மாவின்படி எனக்கு இரண்டு சாதனங்கள் தரப்பட்டிருக்கின்றன. நான் செய்தவற்றிற்குப் பதிலாக இவை தரப்பட்டிருக்கின்றன. அவற்றிலுள்ள நிறை குறை எல்லாமே எனது கர்மாவைப் பொறுத்தது. எனவே நான், எனது என்று சொல்லிக் கர்வப்பட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லை. ஞானம் பெற்றுவிட்டேன் என்று பெருமைப்பட்டுப் பீற்றிக்கொள்ளக்கூட உங்களுக்கு ஒன்றுமில்லை. எல்லாமே அவன் தந்தது.

நமது உடலிலுள்ள ஒவ்வொரு ஸெல்லிலும் அன்புதான் நிரம்பியிருக்கிறது. அது காதல் உணர்வாக வெளிப்படுகிறது. அன்புதான் ஆட்களைப் பொறுத்து மாறி வெளிப்படுகிறது. வேறு விதமாக அது வெளிப்பட்டாலும் பு+ரணமாக என்னில் நிறைந்திருப்பது அன்பு. எல்லா சாஸ்திரங்களையும் எடுத்துப் பார்த்தால் அன்பைப்பற்றி நிறைவாகச் சொன்னது வேதம்தான். சமூகம் அதை மறைத்துக் காமசூத்திரம் என்று வேறு விதமாக திரித்துச் சொல்லி விட்டது. சமூகத்திற்கு இதை விளக்கிச் சொல்லக்கூடிய அறிவில்லை. ஆகையால்தான் கோவில்களில் சிற்பங்களாக வடித்து வைத்து மறைமுகமாகச் சொன்னார்களே தவிர நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஒரு தாயோ, தகப்பனோ தன்னுடைய மகளுக்கோ, மகனுக்கோ விளங்கப்படுத்தக் கூடியதாக இருந்தால்தான் அது அறிவு.

இந்த அளவிற்கு இதைப்பற்றி ஏன் நான் எடுத்துரைக்கின்றேன் என்றால் நம் ஒவ்வொரு ஸெல்லிலும் காம உணர்வாக இந்தக் காதல் உணர்வு வைக்கப்பட்டிருக்கிறது. அன்பின் முழுமைதான் காதல் உணர்வு. ஆன்மீகத்தில் இந்தக் காதல் உணர்வு ஞானத்தால் முழுமையான அன்பாக மாறுகிறது. இப்படி மாறுகின்ற அன்பு தியானமாகி விடுகின்றது. தியானமாக மாறிய அன்பு, ஒளியாகி நம்மில் ஒளிர்கின்றது. இந்தப் புரிதலின் வழியாகத்தான் நம் ஸெல்களில் நிறைந்துள்ள அன்பை ஒளியாக மாற்றமுடியும். ஒளியுடல் பற்றி நான் முன்பு பலமுறை சொல்லி வந்ததன் உட்பொருள் இதுதான்.

நான் சொல்வது உலகத்தால் அறிந்து அனுபவிக்கப்பட்ட காமமல்ல. காமத்தை ஆரம்பிக்கின்ற காதல் உணர்வு. அதில் அன்பு மட்டுமே நிறைந்திருக்கிறது. இந்த அன்பைத் திறந்தபின் அதையே சிந்தித்துக் கொண்டிருப்பதுதான் தியானம். பக்தி என்பது இறைவனையே சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருப்பது. நானும் அவனும் ஒன்றாகி விடுவது. தியானம் என்பது இதுதான். இறைவன் அன்பு, ஒளி. அவனையே தியானிக்கின்ற போது ஸெல்களில் அன்பு நிறைந்து ஒளியாகின்றது. இதைப் புரிந்து கொள்ள வேதாந்த மொன்றும் தேவையில்லை. காதல் என்பது அன்பாக மாறி அன்பு பேரன்பாக மாறித் தொடர்ந்து அதிலேயே இருந்தால் அந்தப் பேரன்பு தியானமாக மாறி அந்தத் தியானம் ஒளி யாகின்றது. ஒளி என்பது ஆத்மாவாகிப் படைத்தவன் என்றாகிறது. நீங்கள் செய்கின்ற தியானத்தை இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். மிக எளிதாக ஆத்மாவில் இணைந்து விட முடியும். ஆனால் இதற்குக் கர்மா அனுமதிக்காது.

காதலிக்காமல் இருப்பதைவிடக் காதலித்துக் கைவிடுவது மேல் என்று ஷேக்ஸ்பியர் சொன்னார். ஏனெனில் காதலின் அனுபவம் உனக்குக் கிடைக்கிறது. இந்தச் சாதனையைப் பற்றி விரித்துச் சொன்னவர் ஒரு முனிவர். உள்ளார்ந்த உணர்வால் உணர்ந்து சொல்லப்பட்ட உண்மை இது. என்னில் நான் அன்பைச் செலுத்துவதுதான் பக்தி யோகம். உலக உயிரினங்கள் அனைத்திற்கும் இந்தக் காதல் காமமாக வைக்கப்பட்டிருக்கிறது. காமம் விதை; அன்பு மலர். அன்பு மலர் தியானமாக மலரவேண்டும். அது ஒளியாக தியானத்தின் அனுபவமாகவும் இறுதிச் செயலாகவும் மாறவேண்டும். அன்பு செலுத்தும் போது அன்பாக மாறிவிடு. அந்த அன்பு உன்னுடைய என்னுடையதாக இருக்காது. அப்போது அந்த அன்பின் வசப்பட்ட நீ ஓடிக்கொண்டிருக்கும் சக்தியாக மாறி விடுகின்றாய். அன்பு என்பது ஒளி. அது எல்லா இடங்களிலும் பாய்ந்து பரவிக் கொண்டிருப்பது.

ஒளி என்பது நீங்கள் மனத்தால் கொண்டுவருகின்ற ஒளியல்ல. மனமும் புத்தியும் என்று எங்களால் பிரித்து வைக்கப்பட்டவை களில் என்னுடைய கர்மாவால் எனக்கு ஏற்பட்ட ஞாபகங்கள், அனுபவங்கள், தேவைகள் எல்லாவற்றையும் நான் இறக்கி விட்டேன். ஆகையால் இப்போது அவை ஒளிச்சிதறல்களாக எனக்குக் காட்சியளிக்கின்றன. என்னுடைய மனம், புத்தி எனக்கு ஒளியாய்த் தெரிவது ஒருநிலை. எனது ஆத்மா ஒளியாய்த் தெரிவது மற்றொரு நிலை. மனம் ஒளியாகத் தெரிந்தால் அதன்பின் கூடிய விரைவில் ஆத்ம ஒளியைத் தரிசிக்க முடியும். அந்த ஒளியைத் தரிசிக்கின்ற நிலையில் எனது உடலில் உள்ள ஸெல்களில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அந்நிலையில் நான் அங்கு இல்லை, ஆத்மா மட்டுமே இருக்கும். அப்போது உங்களது கர்மா நல்லதாக இருந்தால் உங்கள் மனம் கவர்ந்த யாரோ ஒரு மகானாக ஆத்மா வெளிப்பட்டு, அந்த உருவெளித் தோற்றம் அது புத்தராகவோ ரமணராகவோ வேறு யாராகவும் இருக்கலாம், உங்களைத் தூக்கும். அது தற்செயலாய் நிகழ்வது அல்ல. அந்த ஞானிகளின் ஒளி வடிவம் ஒளியாய் வந்து உன்னைத் தூக்கும். அது உனது இறுதி நிலைக்கு முந்தைய நிலை. முதலில் ஒளிச்சிதறலிலிருந்து நேரடி ஒளிக்குள் இறங்கியபின் இது நிகழும். ஞானியின் வரிவடிவை மனதிற்குள் தொட்டாலும் அழுக்குப் படியாது. அவசரத்திற்கு ஒன்றும் வராது. படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும். தொடர்ந்து தன்னோடுதான் இருக்க வேண்டும்.

காமம் என்கின்ற அன்பு செய்கின்ற தூண்டல்தான் ஒரு ஸெல்லின் உள்ளே ஆழமாகப் பதிக்கப்பட்ட உணர்வு. அது அதிர்ந்து அலைகளாக மாறவேண்டும். அந்த அலையின் அதிர்வு அண்டக்கலப்பு. அந்த அண்டக்கலவி பிரபஞ்சத்தின் விரிவு. சேர்க்கை என்பது எனக்குள் தனியாக நிகழ்வது அல்ல. அது பிரபஞ்ச அளவிற்கு அலைகளாகப் பரவி நிறைவது. நான் நமது ஸெல்களது உள்ளே உறங்கிக் கிடக்கின்ற தெய்வீக சக்தியின் ஒரு வெளிப்பாடாகத்தான் இதை விவரிக்கிறேன். வேறு எந்தவிதப் பார்வையும் இங்கு இருக்கக்கூடாது. இதுநாள்வரை ஏதேதோ புரிந்து வைத் திருந்தீர்கள். இப்போது நான் உண்மையை எடுத்துரைக்கிறேன்.

ஆத்மா என்ற சூரியனில்தான் இனி நீங்கள் தங்கி வாழ வேண்டும். தியானம் என்பது நேரடியாக ஆத்ம ஒளியைத் தரிசிப்பதே தவிர வேறு எந்தவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்வதல்ல.

நம்முடைய மனதில் எவ்வளவோ இன்பங்களும் துன்பங்களும் வந்து சென்றுள்ளன. இத்துன்ப அனுபவத்திற்குக் காரணம் மனம் ஆதாரமாக இருப்பது. நித்திரையில் இருப்பவர்களுக்கும் யோகிகளுக்கும் இன்பமுமில்லை, துன்பமுமில்லை ஏன் மனமுமில்லை. மனம்தான் துன்ப துயரங்களுக்குக் காரணம். மனமில்லாத நிலையில் இன்பமுமில்லை, துன்பமுமில்லை. இன்பங்கள் மனதில் பதிவதில்லை. ஆனால் துன்பங்கள் மிக ஆழமாகப் பதிந்து விடுகின்றன. ஏனெனில் இன்பங்கள் எனது நல்ல செயல்களோடு தொடர்புபட்டது. துன்பங்கள் கர்மாவோடு தொடர்புபட்டவை. நல்ல செயல்களை நான் செய்வது குறைவு. கெட்ட செயல்கள் ஏராளம் செய்து விடுகிறேன். இனித் துன்பங்கள் நம்மைத் தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் யாரையும் துன்பப்படுத்தக்கூடாது. தீய செயல்களைச் செய்யக்கூடாது. அவை அடிமனதில் ஆழமாகப் பதிந்துவிடும். ஆழமாகத் துன்பப்படுபவர்களுக்கு அவர்கள் செய்த கர்மாதான் காரணம்.

மனம் இன்பத்தை ஞாபகப்படுத்துவதில்லை. துன்பத்தை அடிக்கடி நினைத்து மீண்டும் துன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். இதன்மூலம் துன்பத்தை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றோம். அது மேலும் கர்மாவாகப் பதிகின்றது. இன்பத்தை மறந்து விடுவதால் இன்பத்தைக் கொடுத்தவர்களையும் மறந்துவிடுகின்றோம். துன்பத்தை மறக்காமல் துன்பத்தைக் கொடுத்தவர்களை ஞாபகம் வைத்திருக்கிறோம். இது ஆழமாகப் பதிந்தால் குடும்ப உறவுகளில் பிரச்சனை ஏற்படாது. நல்லவற்றை நினைத்துக் குற்றங்களை மறக்கும் பண்பு நம்மில் ஏற்பட வேண்டும்.

துன்பத்தைக் கொடுத்தவர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அதை நீக்க மன்னித்தல் அவசியம். நம்மைத் துன்பப் படுத்தியவர்களை நாம் மன்னிக்கும் போது அவற்றை மறந்து விடுகிறோம். நமக்கு இன்பத்தைக் கொடுத்தவர்களிடம் நன்றியுணர்வும் துன்பத்தைக் கொடுத்தவர்களுக்கு அவர்களை மன்னிக்கும் தன்மையும் நமக்கு ஏற்பட வேண்டும். நன்றியுணர்வையும் மன்னிப்பையும் தியானம் செய்கிறேன். இன்பத்தைத் தந்தவர்களுக்கு நன்றி. துன்பத்தைத் தந்தவர்களுக்கு மன்னிப்பு. இவை இரண்டும் தியானத்தால் நம்மில் பதிய வைக்கப்பட வேண்டும்.

நாம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்புகளை அறிந்தோம். அறிவாகப் பெற்றதோடு நின்றுவிடாமல் நமது பண்புகளாக அவை மாற அவற்றைத் தியானிக்க வேண்டும்.

நாம் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய பண்பு பொறுமை அல்லது சகிப்புத்தன்மை. நமது மனதின் வளர்ச்சிக்கு மனப்பக்குவத்திற்கு அகிம்சை, மன்னிப்பு போல் அடுத்த முக்கிய பண்பு பொறுமையாய் இருந்து சகித்துக் கொள்வது. இயலாமை வேறு, பொறுமை வேறு. மிக முக்கியமான பண்பாகிய இந்தப் பொறுமை ஆன்மீக சாதகர்களுக்கு மிகமிக அவசியம். பொறுமை வாழ்க்கையில் ஓர் அம்சமாகவே இருக்க வேண்டும். இன்றைக்குத் தியானம் வரவில்லை, நாளைக்குப் பொறுமையுடன் முயல வேண்டும். எனக்கு ஆன்மீகம் வராது என்று உதறித் தள்ளிவிட்டுப் போகாமல் தொடர்ந்து முயல்வதுதான் பொறுமை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் பொறுமையை அளந்து பார்க்க வேண்டும்.

அவரவர் கர்மாவின்படி எல்லாம் நடக்கும். அதை எதிர்ப்பதற்கு நான் யார்? என்று சிந்தித்து வருவதைப் பொறுமையுடன் ஏற்கத் தெரிய வேண்டும். நம்வாழ்வில் பொறுமையின்மையால் பல துயரங்கள் ஏற்பட்டுள்ளன. வெறுப்பு, இழப்பு, துயரம் போன்றவை ஏற்பட்டதற்கு பல சூழ்நிலைகளில் பொறுமை இன்மையே காரணம். பொறுமையற்ற மனம், பக்குவம் அடையாத வளராத மனம். பொறுமையுடன் கூடியது பக்குவமாக வளர்ச்சியடைந்த மனம். பொறுத்துப் பொறுத்துத் தான் பொறுமையை அடைய முடியும். சிறிய விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடித்துச் சிறிது சிறிதாகப் பொறுமையை அடைய முடியும். அவரவர் ஒன்று, இரண்டு, மூன்று என ஒவ்வொரு மாதமாகப் பொறுமையை வளர்க்க வேண்டும். இப்படிப் படிப்படியாகப் பொறுமையை வளர்த்தால் தான் ஆத்மாவின் பரப்பளவு விரிவடையும். ஆத்மாவைச் சுற்றியுள்ள வேலி சாந்தம், அமைதி. இவை விரிவடையப் பொறுமை அவசியம்.

நான் எப்படி இருக்கவேண்டும் என்னும் விருப்பம் என்வச மில்லை. நான் விரும்புவது நடக்காது. எதைக்கொண்டு வந்தோமோ அதன்படிதான் வாழ்க்கை அமையும். அறிவை அகலப்படுத்தினால் பொறுமையின்மைக்கான காரணங்களும் குறையும். மனம் விரிந்தால் எல்லாம் சரிவரும். பொறுமையை வளர்ப்பேன் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். காலவரையறையை மனதிற்குள் கொண்டு வாருங்கள். சங்கல்பம் எடுத்துக் கொண்டு தினசரி ஞாபகப் படுத்த வேண்டும். நாம் பொறுமையாக இருக்கவேண்டும் என்ற அறிவை அடைந்தாலும் பொறுமையாக இருக்கும் மனதை அடையமாட்டோம். இதற்குப் பொறுமையாக இருக்கப் பழக வேண்டும். பொறுமை என்ற ஞானம் பொறுமையைக் கொடுக்காது. மனம்தான் பழக வேண்டும். பதினைந்து நிமிடம் தியானம் செய்தாலே பொறுமை வந்துவிடும். அதிகாலை எழுந்தவுடன் இன்று நான் ஒருசில நிமிடங்களா வது பொறுமையைக் கடைப்பிடிப்பேன், பொறுமையாகப் பேசிப் பொறுமையாய்க் கேட்டுப் பொறுமையைக் கையாள்வேன் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சங்கல்பத்தைத் தியானத்தில் ஏற்படுத்திப் பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களை இம்சைப்படுத்த நமது பொறுமையின்மையே காரணம். பொறுமையிருந்தால் நம்மையும் மற்றவர்களையும் சில சங்கடங்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கலாம்.

சிலர் வாகனம் ஓட்டும்போது, சிலரிடம் பேசும்போது, குழந்தை களிடம், பெரியவர்களிடம் பழகும்போது பொறுமையை இழக்கலாம். அந்தச் சூழ்நிலையில் பொறுமையுடன் இருப்பேன் என்னும் உறுதியை மனதிற்குள் கொண்டுவந்து பொறுமை யுடன் இருக்கலாம். பொறுமை தொடர்ந்து பழகுவதால்தான் வரும். மேலே குறிப்பிட்ட சந்தர்ப்பமெல்லாம் நமது பொறுமையைச் சோதிப்பதற்காக நம்மைச் சுற்றி நிகழ்பவை.

நமது மனம் அமைதியாக இருக்கும்போது, நம் மனம் எந்த இடத்தில் எப்படி செயல்படுகிறது, எந்தச் சூழ்நிலைகளில் கோபம் பொறாமை போன்றவை ஏற்படுகின்றன போன்றவற்றை அறியவும். அமைதியான நிலையில் மனதின் உண்மையான தன்மையை அறியமுடியும். எந்தச் சூழ்நிலைகளில் பொறுமையை இழக்கின்றோம் என்பதைப்பற்றி சிந்தியுங்கள். வேறு எண்ணத்தை மேற்கொள்ளாமல், நான் எப்பொழு தெல்லாம் பொறுமையை இழக்கின்றேன் என்பதை அறிய வேண்டும். பொறுமையை அல்லது சகிப்புத் தன்மையை எங்கு இழக்கின்றேன் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற சாதனையை மேற்கொள்ள வேண்டும். பொறுமையின்மைக்கு முக்கிய காரணம் ஏற்றுக் கொள்ளாமைதான். ஏற்றுக் கொள்ளாதபோது பொறுமையைக் கடைப்பிடிப்பது கஷ்டம். கார் ஓட்டும்போது அடுத்தவர் தவறாக ஓட்டினால் நான் பொறுமை இழக்கிறேன். அந்தச் சூழ்நிலையில் அவனது அறியாமை இது என்று பொறுமையுடன் நினைத்தால் நான் பொறுமையாக இருக்கமுடியும். ஏற்றுக் கொள்ளாத விஷயத்தில் வராது. பொறுமையுடன் ஏற்றுக் கொள்வதுதான் எமது சாதனையாக முடியும்.

பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கடைப்பிடிப்பதன் மூலம் மனதில் இருக்க வேண்டிய அமைதியும் ஒழுங்கும் மேலும் நிலைநிறுத்தப்படுகின்றன. நான் மனத்தால் அகிம்சையாக இருக்கிறேனா, மனத்தால் மன்னிக்கிறேனா, மனதால் துன்பப்படுகிறேனா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நன்மை செய்தவருக்கு நன்றியும், தீமை செய்தவருக்கு மன்னிப்பும் தருகிறேனா, பொறுமை சகிப்புத் தன்மை ஆகியவற்றைக் கடைப்பிடிக்கிறேனா என்று கவனிக்க வேண்டும். இப்படி நம்மை நாமே கவனித்தபடி இருந்தால் நமது வாழ்க்கை நிலை செம்மையுறும். பொறுமை, மன்னிப்பு அகிம்சை ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் பழக வேண்டும். இவற்றையெல்லாம் எல்லாப் பக்கங்களிலும் இடைவிடாமல் கடைப்பிடித்ததால்தான் ஒரு சாதாரண மனிதர் மகாத்மா என்று அனைவராலும் போற்றப்பட்டார். இவை அனைத்தையும் கடைப்பிடித்தால் நீங்களும் மகாத்மாதான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *