அனைவரையும் நான் மன்னிக்கிறேன்

ஆத்மாவுடன் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு விட்டீர்களா? அல்லது அது உங்களைத் தன்னுடன் இணைக்கின்றதா? அந்தத் தொடர்பு உங்களுக்கு ஏற்பட்டு விட்டதென்றால் காரணமில்லாத, சொல்லத் தெரியாத ஆனந்தம் உங்களிலிருந்து வெளிப்படும். சின்னச் சின்னப் பிரச்சனைகளை உள்ளத்தில் எடுத்து வைத்துக்கொண்டு குழம்பாமல் அதனுடன் தொடர்பு கொண்ட நிலையிலேயே தொடர்ந்து இருக்கப் பழகினால் வாழ்க்கை நிறைவாக இருக்கும்.

மனதைப் பண்படுத்துதல் தான் ஆன்மீகம். மனதிலுள்ள குப்பைகளை எல்லாம் அடித்துப் பெருக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். நாம் உலக விஷயங்களை எடுத்துக் குழம்புவதால் தான் மன அமைதி கெடுகின்றது. அமைதி கெடுவதற்குக் காரணம் நாங்களே. நீங்கள் மனதில் ஏற்றி வைத்ததை இறக்கி விடுங்கள். பிறகு தானாகவே வழியைக் காட்டும், தொடர்பையும் ஏற்படுத்தும். மனதைவிட வேறு ஒன்றாலும் இறைத் தொடர்பை ஏற்படுத்த முடியாது. சடங்குகள், சமயங்கள் எல்லாம் மனதை ஏமாற்றுபவை. உண்மையைச் சொல்லி மனதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

எல்லோரும் இன்பத்தைத் தேடுகிறார்கள். நாமும் அதைத்தான் தேடுகிறோம். நமக்குப் பாடமாக போதமாக அமைந்தவை, உலகத்தில் முதலில் தோன்றிய வேதங்கள், அவற்றின் வழியொற்றி வந்த உபநிஷதங்கள். குருவிற்கு அருகில் நெருங்கியிருத்தல் என்பதே உபநிஷதத்தின் பொருள். அது பாவ வினையைப் போக்குகின்றது. உண்மையை உணர்த்து வது. மதங்கள் மனதைச் சலனப்படுத்துபவை. உள்ளத்தை உயர்த்துவதற்கு உபநிஷதங்கள் உதவிசெய்தன.

இறையருளை வெளிக்கொணர்வது கருணை. கருணை இல்லாமல் எதையும் செய்யமுடியாது. மனித ஜீவன் வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தெய்வீகத்தை நோக்கித் தன்னைச் செலுத்துகிறது. ஆன்மீக முயற்சிகளில் நீங்கள் செலவழிக்கின்ற நேரங்கள் வீண்போவதில்லை. இந்த முயற்சிகள் உங்களை இறைசக்திக்கு அருகில் கொண்டு சேர்ந்திருக்கின்றன. தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தால் அதுவாகவே ஆகிவிட முடியும். ஆனால் அந்தத் தொடர்ந்த முயற்சி உங்களிடமில்லை. வாழ்க்கையின் நோக்கம் ஆனந்தம். எல்லாமே அதுவாய் இருக்கின்றபோது நீங்கள் இந்த உலகம், உங்கள் அலுவல், உங்கள் உடம்பு என்று மற்றவற்றிற்குத் தேவையில்லாமல் அதிக முக்கியத்து வம் கொடுக்கிறீர்கள். உங்களுக்குத் தரப்பட்ட நேரத்தைத் தேவையில்லாதவைகளுக்கு ஒதுக்குவதுதான் அதிகம். உங்களுக்குக் கிடைத்த குறைவான வாழ்நாளில் நீங்கள் தெரிந்துகொண்டே பிழையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நோக்கத்தை ஒதுக்கிவிட்டு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நீங்கள் புத்திசாலியா? இல்லை.

இந்த அறிவைப் பெற்றபின்பும் நீங்கள் வாழ்க்கைச் சேற்றில் விழலாமா? எது உண்மையென்று தெரிந்தும் நீங்கள் அதில் ஈடுபடாமல் இருந்தால் உங்களது கர்மா இரண்டு மடங்காகி விடும். கூடுதல் பிரச்சனைகள் வரும். என்னைப் படைத்தவன் என்னைச் சுற்றி எல்லாவற்றிற்குள்ளும் இருந்து கொண்டு என்னைக் கவனித்துக் கொண்டு இருக்கிறான். அவன்தான் என்னைப் படைத்தவன். பிறப்புச் சுழற்சிக்குள் என்னைத் தள்ளியவன். இப்படி இருக்கும்போது நான் என்னை அவனை நோக்கித் திருப்பாமல் இருந்தால் அது பாவம். அறிந்தபின் பிழை விடக்கூடாது. தெரிந்து ஒரு குற்றத்தைச் செய்தால் அதற்குத் தண்டனை அதிகம். இதைத் தினமும் பலமுறை நினைத்துக் கொள்ளுங்கள். உண்மையைத் தேடுகின்றதான இந்த ஆத்ம வித்தையை நீங்கள் கற்க முனைந்தது தற் செயலானதல்ல. இந்தப் பாதையை அவன்தான் உங்களுக்குக் காட்டியிருக்கின்றான். தொடர்ந்து இதில் நிற்பதற்கும் அவனருள் தான் காரணம். இந்த வாய்ப்பு அமைந்தபின் ஒரு பதினைந்து நிமிடம் தியானத்தில் ஈடுபட உங்களால் முடியாதா?
உங்களது மனமும் புத்தியும் ஒளிச்சிதறல்களாக வெளிப்பட வேண்டும். எங்கும் பரவியுள்ள பரப்பிரம்மத்தின் ஒளித்தெறிப்பு தான் எனக்குள் ஆத்மாவாக இருக்கிறது. காற்றையும், கருணையிலிருந்து வெளிப்படுவதான அன்பையும் கண்ணால் பார்க்க முடியாது. பார்க்க முடியாவிட்டாலும் அவை இருப்பதை நாம் உணர்கிறோம். அதுபோல் அவன்தான் நானாக இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.

சின்ன வயதிலிருந்தே என்னை ஒழுங்குபடுத்தி அது காட்டிய வழியில் நான் நடந்து வாழ்க்கையில் பெறவேண்டியவற்றையும் பெற்று அதனுடைய விளைவை நான் அனுபவிக்க வேண்டும். அப்படி அனுபவிப்பதில் நான் திருப்தியாகி அமைதியடைய வேண்டும். அந்த அமைதியில் ஆழ்ந்து அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இப்படி யாரும் நடந்து கொள்கிறீர்களா? உங்கள் பாதையில் ஓடிக்கொண்டுதானே இருக்கிறீர்கள். இவை வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய முக்கியமான கட்டங்கள். என்னுடைய முயற்சியால் இந்த வெற்றி எனக்குக் கிடைக்கவில்லை. இது எனக்குப் பிரம்மம் தந்தது என்ற உணர்வு உங்களில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

அகிம்சையைப்பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக் கிறோம். அகிம்சை என்பது எனக்கு நான் செய்யும் நன்மை. அகிம்சையின் முக்கியமான அம்சமாக நாம் கொள்ள வேண்டியது, நான் ஒருவனை வேறு ஒரு ஆளாக எண்ணக் கூடாது. அவனுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய எண்ணம் எதுவும் எழக்கூடாது. அந்த எண்ணத்தை அவனை நோக்கி நான் செலுத்தினால் அது என்னையே திருப்பித் தாக்கும். ஆத்மா ஒன்று என்பதால் எல்லாமே என்னைச் சேரும். என்னிலிருந்து புறப்படுவது என்னையே வந்து சேரும்.

தியானத்தில் நற்பண்புகளைத் திரும்பத் திரும்ப நினைத்து என்னில் பதிக்கின்றபோது அந்த நற்பண்புகள் நம்முடைய வையாகின்றன. நம்மை விட்டு இந்த உடலையும் மனம் புத்தியையும் வேறாகப் பிரித்துப் பார்த்து அவற்றை ஈகோவாக அறிய வேண்டும். ஈகோ நானல்ல, ஆத்மாவே நான் என்பதை உருவேற்ற வேண்டும். கண்கள் திறந்திருக்கும்வரை தான் எல்லாம் வேறு வேறு. இந்தக் கண்களை மூடிவிட்டால் எல்லாம் ஒன்று. “கள்ளப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய…” என்று இதை உணர்ந்துதான் பாடியிருக்கிறார்கள். மேல் நிலைக்கு உயர்ந்து வந்த பிறகு புலன்களும் மனமும் அவற்றின் போக்கின்படி போகக்கூடாது. போக இயலாது. ஏனெனில் மனம் ஆத்மாவாகி விட்டபடியால் இனி அது மனமாக இயங்க வேண்டிய அவசியமில்லை. மனமென்பது என்னால் ஏற்றப்பட்ட விஷயங்களைக் கொண்டு சுற்றுவது. நான் அதை நிறுத்தி ஏற்றியவற்றையெல்லாம் மெது மெதுவாக இறக்கி அந்த மனமே இப்போது ஒளியாகிறது. மனதின் ஓட்டத்தை நிறுத்தி யோசித்தால் புத்தியாக வேலை செய்யும். எல்லாமாய் இயங்குவது அவனே. உள்ளிருந்து வருகின்ற பேரொளியைப் பிடிக்கின்ற பெரிய உள்ளமாக விரிய வேண்டும்.

நம் மனதை அமைதியாக வைத்திருக்க, நமக்குள் முன்னேற்றமடைய, நம்மை நாம் உயர்த்திக் கொள்ள, நம் மனதைப் பண்படுத்த இன்றியமையாத குணம் மன்னித்தல். மனித வாழ்வில் பலருடன் பலவிதமான உறவுகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. பல உறவுகள் நம்மை மகிழ்வித்திருக்கிறார்கள். பலர் நம்மைத் துயரப்படுத்தியிருக்கிறார்கள். (குழந்தைகள் உட்பட) நம்மை அறியாமல் அவர்கள்மீது பழிவாங்கும் உணர்வு, குரோதம் நமக்குள் இருக்கும். குரோதம், பழிவாங்கும் எண்ணம், துவேஷம் நீங்கவேண்டு மானால் அவர்களுடைய தவறுகளை மன்னிக்க வேண்டும். அவர்களுடைய தவறுகளை மன்னிப்பதனால் பெறப்படுகின்ற முதல் பலனை நான் பெறுகிறேன். அமைதி அடைகிறேன் உயர்கின்றேன்.

என்னை மற்றவர் துன்புறுத்தினால் அதன் பலனை இறைவன் கொடுப்பான். என்னை உயர்த்த நான் அவர்களை மன்னிக்கின் றேன். இதை நாம் உணர வேண்டும். ஒருவரை மன்னித்து விட்டால் அந்தச் சம்பவம் மனதை விட்டுப் போய்விடும். மன்னிக்கவில்லையென்றால் அது திரும்பத் திரும்ப நினைவிற்கு வந்து பெரிதாகும். பாவத்தை மன்னித்து விடலாம். ஆனால் செய்யப்பட்ட பாவம் பிறகு கர்மாவாக அனுபவிக்கத்தான் வேண்டும். நான் எல்லோரையும் மன்னிக்கத் தொடங்கி விட்டால் என்னில் இறைசக்தி நிறைந்து விடுவதால் எனது பாவத்தால் ஏற்படுகின்ற பிரதிபலன் பெரிய அளவில் தாக்காது.

என்னை உயர்த்த நான் அவர்களை மன்னிக்கின்றேன். இதை நாம் உணர வேண்டும். உணர்வுபு+ர்வமாக மன்னிக்கின்றேன் என்ற சொல்லை நான் அறிந்தால் போதும். அனைவரையும் நான் மன்னிக்கின்றேன். இந்த வாக்கியம் இறைவனது வாக்கியத்திற்குச் சமம். இதையே நாம் சிறிது காலத்திற்கு மேற்கொள்ள வேண்டும். நாம் சாஸ்திரத்தில் படிக்கின்ற பண்புகளை நம்வசமாக்கித் தியானிக்க ஆரம்பித்தோம். அந்த முயற்சியில் இம்சை அகிம்சையாக மாறியது. பழிவாங்குதல் மன்னிப்பாக மாறியது. மன்னிக்கும் குணம் இருந்தால்தான் மோட்சத்தை அடைய முடியும். மன்னிப்பதால் மனதிலுள்ள மேடு பள்ளங்கள் சமப்படுத்தப் படுகின்றன.

மன்னித்து விட்டுவிட்டால் வெறுப்பும் கோபமும் வராது. மற்றவர்கள் என்னைத் துன்பப்படுத்தியதை நான் மன்னிக்கா விட்டால் மீண்டும் என்னை நானே அதை நினைத்துத் துன்பப்படுத்திக் கொள்கிறேன். மன்னிப்பதால் எனது சக்தியை நான் வைத்திருக்கிறேன்; அமைதி அடைகிறேன். இதைத் தியானத்தில் நான் சிந்திப்பதன் மூலம் என்னில் இந்த நற்பண்புகளைப் பதிய வைக்கிறேன். மன்னித்தல் என்ற குணம் மேலான பலம் தரும் சக்தி. ஒருவர் தீங்கு செய்தாலும் துயரத்தைக் கொடுத்தாலும் அவருக்கு நாம் அதே துயரத்தைத் திருப்பிக் கொடுக்க அவரை விட ஒரு மடங்கு சக்தியிருந்தால் போதும். ஆனால் நம்மைத் துன்பப் படுத்துபவர்களைவிட நூறு மடங்கு நம்மிடம் அதிக சக்தி இருந்தால்தான் அவர்களை மன்னிக்க முடியும். மன்னிக்க நூறு மடங்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தியைத் தியானத்தின் வழியாக வளர்த்தெடுக்க வேண்டும். அமைதியில் கேட்கப்படும் சத்தத்தை உணரும் பாவனையுடன் அமர்ந்திருப் போம். சொல்லால், நடத்தையால் அவமானப் படுத்தியவர்களை என்னுடைய பலத்தினால் மன்னிக்கின்றேன். மன்னிப் பவனுக்குப் பலம் அதிகம். ஞானத்தால்தான் இந்தப்பலம் ஏற்படும். இனிமேல் துயரப்படுத்தப் போகின்றவரை நான் இப்போதே மன்னிக்கின்றேன் என்றால் என்ன பொருள்? மனதை அந்த அளவிற்குப் பண்படுத்திப் பக்குவப்படுத்தி அதைச் சரியான நிலையில் வைத்திருந்தால் தான் இந்த நிலையை அடைய முடியும். சொல்லால் நடத்தையால் துன்புறுத்துவது அவர்களின் இயல்பு என்றால் மன்னிப்பது என் சுபாவம். கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை மன்னிக்கின்றேன். எதிர்காலத்தில் வரப்போகின்றவற்றையும் மன்னிக்கின்றேன். நான் மற்றவர்களைத் துயரப்படுத்தியதை அவமானமாகக் கருதுகிறேன். மற்றவர்கள் என் தவறை மன்னிக்காமல் இருக்கலாம். ஆனால் நான் மன்னிக்கின்றேன். சாதாரண மக்கள் சாதாரண செயலில் ஈடுபடுவர். அசாதாரண மக்கள் அசாதாரண செயலில் ஈடுபடுகிறார்கள். ஆன்மீகத்திற்கு வந்த நான் எனது செயல் உயர்ந்ததாக இருக்கப் பழகிக் கொண்டேன்.

மற்றவர்களை நாம் மன்னித்தல் என்பது உண்மையில் நாம் செய்த ஒரு தவறைத் திருத்திக் கொள்வதுதான். நான் செய்த கர்மாதான் அவனிடமிருந்து தவறான விதத்தில் எனக்குத் துன்பமாக வந்து சேர்ந்தது. அவன் எனக்குத் துன்பத்தைத் தந்ததற்காக அவனிடம் பகை, விரோதம் பார்க்காமல் வருவதை ஏற்று அவனையும் மன்னிப்பதால் கர்மாவும் கழிகின்றது. மேலும் கர்மாவைக் கூட்டாமல் எனக்குள் அமைதி ஏற்படுகிறது. மன்னித்தல் என்பது ஏற்கனவே செய்யப்பட்ட தவறைத் திருத்திக் கொள்வதுதான். இது நம்மை நாம் திருத்திக் கொள்கின்ற ஒரு பண்பு. நம்மை அவமானப் படுத்தியவர்களை, விதவிதமான துன்பத்தில் ஆழ்த்தியவர்களை மன்னிக்க முடியும். மன்னிக்கும் போது தவறு திருத்தப்படுகிறது.

உலகத்தைப் பொருட்படுத்தும் என்மனம்தான் அனைத்திற்கும் காரணம். உண்மையில் அவரை நாம் மன்னிக்கவில்லை. நம்மை நாமே மன்னிக்கின்றோம். நாம் யாரையும் பழி சுமத்தவில்லையென்றால், மன்னிக்கவில்லையென்றால் பிறகு யார் யாரை மன்னிப்பது? தியானத்தில் இந்தக் கருத்தைச் சிந்திப்போம். சஞ்சல மனதில் மன்னிக்க இயலாது. பழி சுமத்தியவரை மனதிலிருந்து நீக்குவதுதான் மன்னித்தல்.

உங்களது தவறு, அவன் மூலம் வந்து உங்களைக் குத்துகின்றபோது நீங்கள் அதை எதிர்க்காமல் மன்னித்ததால் உங்கள் தவறை நீங்கள் திருத்திக் கொள்கிறீPர்கள். சீறிப் பாய்ந்திருந்தால் அது இன்னொரு தவறு, இன்னொரு பிரச்சனை வருவதற்கு வழிவகுத்திருக்கும். கர்மா ஏற்படாமல் செய்வதற்கு மன்னித்தல் என்னும் பண்பு மிக அவசியம். எல்லா ஆத்மாவும் ஒன்று. நடைமுறையில் உயர்ந்திருக்கலாம், தாழ்ந்திருக்கலாம், கர்மா அனைத்திற்கும் பின்னணி. ஞானத் தினால் நற்பண்புகளைக் கைக்கொண்டு அனைத்தையும் வென்று முன்னேறலாம். அகிம்சையைப் பழகினால்தான் மன்னிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். இம்சை, அகிம்சையாக மாறி, அதன்மூலம் பழிவாங்கும் குணம் மாறி, மன்னிக்கும் பண்பு வரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *