நம்மை நாமே எப்படிப் புரிந்து கொள்வது?…..

நவராத்திரி மாதத்தில் முக்கியமான நாள் ஒன்று நம்மால் உணரப்பட வேண்டியது. அனைத்துக்கும் மூலமான பிரம்மத்தின் வெளிப்பாடான ஆக்க சக்தியை, நாம் நம்முடைய சுயசக்தியை (சரஸ்ரீஇயல்புஇ ஸ்வஸ்ரீ சுய) சுய இயல்பை நினைவு கூரவும் அதன் சிறப்பை உள்ளத்தில் மீண்டும் பதிக்கவும் சனாதன தர்மம் ஏற்படுத்தித்தந்த நாளே இந்த சரஸ்வதி வழிபாடு. மனிதன் தன்னை அறியும் முயற்சியில் தனது புலனுணர்வுகள், உலக அறிவுகள் யாவற்றையும் ஒதுக்கிவைத்து மனதை, உள்ளத்தை வௌ;ளையாக்கி எவ்வித அழுக்குமின்றி அப்பால் இருக்கும் பிரம்மத்தை – மூலத்தை – அனைத்துச் சக்திகளின் ஆதாரத்தை தியானத்தின் மூலம் உணர்ந்து கொள்ளவைக்கும் இந்நாள் பொன்னாள். எல்லா அறிவும், அறிந்து கொள்பவரும், இல்லாதபோது இருக்கக்கூடிய அந்த நிலையை, அது என்னவென்று தெரிந்து கொள்ள விரும்புவது நமது நோக்கம்.

நம்முடைய அன்றாடச் செயல்பாட்டு தினசரித் தேவைகளை நாடும் உலகத்துடன் அந்தநிலை எவ்வாறு உறவு கொண்டுள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

நம்முடைய வாழ்க்கை என்ன என்று நமக்குத் தெரியும். சோகமான, பயங்கள் நிறைந்த, எதுவுமே நிரந்தரமற்ற வாழ்க்கை. இது நமக்கு நன்றாகத் தெரியும். அந்த வேறுநிலை இந்த வாழ்க்கையுடன் எந்தத் தொடர்பு கொண்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளப் பலர் விரும்புகிறார்கள்.

அறிவை ஒதுக்கி விட்டால், நினைவுகளில் இருந்து விடுபட்டால் பின் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம். கொள்கை அளவில் அல்ல, கண்கூடாக இப்போது வாழ்க்கையின் நோக்கம் என்ன? நம்முடைய அன்றாட வாழ்க்கையின் நோக்கம் என்ன? ஏதோ உயிர் வாழ்வது, அவ்வளவுதானே! அதனுடைய எல்லாவிதமான துயரம், துக்கம், குழப்பம், போர்கள், அழிவுகள் ஆகியவற்றுடன் வாழ்வது.

“இது இப்படி இருக்கக்கூடாது, வேறு ஒன்றுதான் இருக்க வேண்டும்” என்று சொல்லலாம். ஆனால் அவை எல்லாம் வெறும் கொள்கைகள்; நடைமுறை உண்மைகள் அல்ல. நமக்குத் தெரிந்ததெல்லாம் குழப்பம், வேதனை, துன்பம் முடிவிலாத பகைமை என்பவைதான். நாம் உணரமுடிந்தால் இவை எல்லாம் எப்படி வருகின்றன என்பதும் நமக்குத் தெரிகிறது. வாழ்க்கையின் நோக்கம் கணத்திற்குக் கணம் நாள் தோறும் தனிப்பட்டவர்களாகவோ, கூட்டமாகவோ ஒருவர் ஒருவரை அழிப்பதும் ஒருவர் ஒருவரைச் சுரண்டுவதுமாகத்தான் இருக்கிறது. நம்முடைய தனிமைத் துன்பத்தில், துயரத்தில் மற்றவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறோம். நம்மிடமிருந்து தப்பிக்க முயல்கிறோம். கடவுள்கள் மூலமாகவும் பொழுது போக்குகள் மூலமாகவும் அறிவு மூலமாகவும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை மூலமாகவும் ஒன்றோடு இணைந்து கொள்வதன் மூலமாகவும் இதைச்செய்கிறோம். இதுதான் நம் நோக்கம். மேல் மனத்தளவிலோ, உள் மனத்தளவிலோ நாம் இப்பொழுது வாழ்கிறபடி. இதைத் தாண்டி அகன்ற, ஆழமான நோக்கம் ஒன்று, குழப்பமும் ஆதாயமும் சேர்ப்பதும் இல்லாத ஒரு நோக்கம் இருக்கிறது. முயல்வதில்லாத அந்நிலை ஒரு தொடர்பை நம் வாழ்வோடு கொண்டுள்ளது. என்னுடைய மனம் குழம்பி வேதனையுற்று தனிமைப்பட்டு இருக்குமேயானால் அதுவாக இல்லாத ஒன்றோடு அது எப்படித் தொடர்புகொள்ள முடியும்? இதை நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம். மெய்ப் பொருள் பொய்மையோடு, மாயையோடு எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்?

குழப்பங்கள், துயரம் என்பவற்றின் காரணங்கள் புரிந்து கொள்ளப்பட்ட போதுதான் உள்ளத்தை தாண்டிய ஒன்று உருக்கொள்ள முடியும்.

நான் கூறியதெல்லாம் நம்மை நாமே எப்படிப் புரிந்து கொள்வது என்பதைத்தான். ஏனென்றால் தன்னறிவு இல்லாமல் மற்றது இல்லை. அதாவது மனத்தின் சுயநல நடவடிக்கைகளிருந்து அப்பால் போவது. மனத்தால் அளவிட முடியாத அந்த நிலையை அனுபவித்த பிறகு அந்த அனுபவமே உள்ளார்ந்த மாற்றத்தைக் கொண்டு வருகிறது. நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் “தான்” தோற்றுவிக்காத அந்நிலையை அனுபவிக்கும்போது தீர்க்கமுடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *