நாம் எதை தேடுகிறோம்?

உலகியல் வாழ்க்கை, தேடலை முடுக்கித் துரத்துவதால் நின்று சிந்திக்கப் பலருக்கு முடிவதில்லை. அவர்கள் தங்களை – தமது நிலையை – செயல்களை – விளைவுகளைத் தாங்களே பார்த்து, அடைய வேண்டியது என்ன என்ற தெளிவை ஏற்படுத்து வதே எமது நோக்கம்!

இந்த அமைதியற்ற உலகில் ஒவ்வொருவரும் ஒருவித மகிழ்ச்சியை, ஒரு புகலிடத்தை, ஒருவித அமைதியைக் காண முயலும்போது எதைத்தான் தேடுகிறோம்? எதைக் கண்டு பிடிக்க முயல்கிறோம்? என்பதை அறிந்து கொள்வது உண்மையில் முக்கியமானது.

நாம் மகிழ்ச்சியைத் தேடுகிறோமா? அல்லது ஒருவித மகிழ்ச்சியைத்தரும் என்று நம்புகின்ற ஒரு மனத்திருப்தியைத் தேடுகிறோமா? மகிழ்ச்சிக்கும் மனத்திருப்திக்கும் வேறுபாடு இருக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியைத் தேட முடியுமா? ஒருவேளை நீங்கள் மனத்திருப்தியைக் காணலாம். ஆனால் மகிழ்ச்சியை நீங்கள் காணமுடியாது. மகிழ்ச்சி ஒன்றில் இருந்து பெறப்படுவது; அது மற்ற ஒரு பொருளின் உபபொருள். ஆகவே, பெருமளவில் அக்கறையும் கவனமும் சிந்தனையும் கவனிப்பும் தேவைப்படும் ஒன்றுக்கு நம்முடைய மனத்தையும் இதயத்தையும் கொடுப்பதற்கு முன்னே நாம் எதைத் தேடுகிறோம் என்பதைக் கண்டு கொள்ள வேண்டுமல்லவா? அது மகிழ்ச்சியா? அல்லது மனத்திருப்தியா? நம்மில் பலர் மனத் திருப்தியைத்தான் தேடுகிறோம் என்று நான் பயப்படுகிறேன். நாம் திருப்தி அடைய விரும்புகிறோம். தேடியதன் பின் முடிவில் ஒரு நிறைவு உணர்வைப் பெற விரும்புகிறோம்.
நிலையான ஒன்றுக்கான தேடல் பலரிடம் இருக்கிறது. ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்ள ஏதோ ஒன்று நமக்கு நம்பிக்கை ஊட்டும்; உறுதிதரும். தொடர்ந்த ஆர்வத்தையும் தொடர்ந்த உறுதிப்பாட்டையும் கொடுக்கும் என்று தேடுகிறோம். ஏனெனில் நம்மில் நாம் உறுதியாக இல்லை. நம்மை நமக்குத் தெரியவில்லை. கண் கூடாக உள்ளவை பற்றி நமக்கு அதிகமாகத் தெரியும். புத்தகங்கள் அவற்றைப்பற்றிச் சொல்லியிருப்பதை அறிவோம். நமக்கு நாமே தெரிந்து கொள்ளவில்லை. நேரடியான அனுபவம் நமக்கு இல்லை.

நிரந்தரமான இன்பத்தை, நிரந்தரமான திருப்தியை விரும்புகிறோம். அதை ‘உண்மை’ என்றும் ‘கடவுள்’ என்றும் அல்லது நீங்கள் விரும்பும் பெயரில் அழைக்கிறோம். இன்பத்தைத் தரும் அறிவு, நாளை மாய்ந்து போகாத திருப்தி, இன்பத்தைத் தரும் அனுபவம் என்பவற்றையே விரும்புகிறோம். நாம் பல தரப்பட்ட திருப்திகளைச் சோதித்து விட்டோம். அவை எல்லாம் மறைந்து போய்விட்டன. கடவுளிலும் மெய்ப்பொருளிலும் நிரந்தர திருப்தியைக் காண்பதில் இப்பொழுது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். உண்மையில் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.

எது தேடுகிறதோ அதையும் தேடுகின்றவரையும் ஆராய்கின்றவரையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? நிரந்தரமான ஒன்றைத் தேடுவதற்கு முன் ‘தேடுகிறவரை’ அறிந்து கொள்வது அவசியமல்லவா? நான் என்னை அறிந்து கொள்ளாதவரையில் என் சிந்தனைக்கு அடிப்படை இல்லை. என்னுடைய தேடல் முழுதும் வீணே!

மாயைகளில் நான் தப்பித்துக் கொள்ளலாம். கருத்து வேறுபாடுகள், சச்சரவுகள், போராட்டங்களிலிருந்து நான் ஓடி விடலாம். மற்றொருவரை நான் துதிக்கலாம். மற்றொருவரை என்னுடைய விமோசனத்திற்காக நாடலாம். ஆனால் நான் என்னைப் பற்றிய அறியாமையிலிருக்கும் வரை என்னுடைய முழு இயக்கத்தையும் உணராதவரை என் சிந்தனைக்கோ, அன்புணர்வுக்கோ, செயல்பாட்டிற்கோ எந்தவித அடிப்படையும் இல்லை.

உங்களை நீங்கள் தெரிந்து கொள்ளாமல் உங்கள் தனிவழிச் சிந்தனை ஓட்டத்தைத் தெரிந்து கொள்ளாமல் ஏன் சிலவற்றைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளாமல் நீங்கள் கலை சமயம் பற்றி, உங்கள் நாடு – உங்கள் அயலவர் பற்றி, உங்களைப் பற்றி ஏன் சிலவித நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளாமல் எதைப்பற்றியும் உண்மையாக உங்களால் எப்படிச் சிந்திக்க முடியும்? உங்கள் பின்னணியைத் தெரிந்து கொள்ளாமல், உங்கள் சிந்தனையின் சாரத்தைத் தெரிந்து கொள்ளாமல், அது எங்கிருந்து வருகிறது என்று தெரிந்து கொள்ளாமல் நீங்கள் தேடுவது முற்றிலும் பயனற்றது. உங்கள் செயல் அர்த்தமற்றது அல்லவா? நீங்கள் இந்துவாக இருக்கலாம்; உங்கள் மதம் எதுவாக இருந்தாலும் அதற்கு அர்த்தமே இல்லை. வாழ்வின் முடிவான குறிக்கோள் என்ன என்று கண்டுபிடிப்பதற்குமுன் நம்மில் இருந்து நாம் தொடங்க வேண்டுமல்லவா? இது மிக எளிதாகப் பட்டாலும் மிகக் கடினமானது. தகுந்த விழிப்போடு இருந்தால்தான் தன்னை அறிய முடியும்.

உங்களைப்பற்றி எவ்வளவு தெரிந்து கொள்கிறீர்களோ அவ்வளவுக்குத் தெளிவு ஏற்படுகிறது. தன்னை அறிவதால் மனம் அமைதியடையும்போதுதான் அந்த அமைதியில் அந்த நிசப்தத்தில், மெய்ப்பொருள் தோற்றம் கொள்கிறது. அதன் பின்னரே ஆனந்தம் இருக்க முடியும்.!

ஒருவர் தன்னை அறிந்து கொள்ளும்போது, அதன் மூலம் படைப்பு பு+ர்வமான மகிழ்ச்சியைக் கொண்டுவரும்போது, மனத்தின்பால் படாத ஒன்றை அனுபவிக்கும்போது அதில் ஒரு பெரும் மாறுதல் நம்மை ஒட்டிய உடனடி உறவுகளில் ஏற்படக்கூடும். நாம் வாழ்கின்ற உலகிலும் அவ்வாறே ஏற்படும். நமது ஆழ்ந்த தியானம் இறைவனை இரு விதங்களில் நிரூபிக்கின்றது.

(1) என்றும் புதுமையான ஆனந்தம் அவனிருப்பிற்கு சாட்சியாக நம்மில் அணு அணுவாக ஊடுருவி நம்மை நம்ப வைக்கிறது.
(2) தியானத்தில் ஒருவன் இறைவனுடைய உடனடியான வழிகாட்டுதலை ஒவ்வொரு இடையு+றுக்கும் அவனுடைய போதுமான விடையைக் காண்கிறான்.
தியானத்தின் ஆனந்தம், நான் வேலை செய்யும் வேளைகளில் ஆழ்மனத்தில் திரும்பி வரும்போதெல்லாம் ஒவ்வொரு செயலிலும் மிகச்சிறிய விவரங்களில்கூட சரியான போக்கை மேற்கொள்ளுமாறு நான் சூட்சுமமாக இயக்கப்படுகிறேன்.

மனித வாழ்வு, நாம் இறைவனுடைய விருப்பத்துடன் ஒன்றுபடும்வரை துன்பத்தினால் சூழப்பட்டுள்ளது. அவன் ஒருவன்தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனின்றி யார் சுமக்க முடியும்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *