ஒரு சரியான வழிகாட்டி யார்?

திருப்தியின்மை; மகிழ்ச்சியின்மை; பாதுகாப்பின்மை என வாழ்க்கையில் ஏற்படுகின்ற அலை வீச்சுக்கள் பலரையும் சமயம், ஆன்மீகம் என்று ஒதுங்க வைக்கிறது. உடலால் வாழ்ந்தாலும் வாழ்க்கை என்பது உள்ளத்தில் தான் பிரதிபலிக்கின்றது. மனம் என்ற கருவியே பிரச்னைகளின் நிலைக்களமாக இருப்பதை உணர்வதால், வாழ்வின் ஒரு கட்டத்தில், சிந்திப்பவர்களுக்குத் தேடல் தொடங்குகிறது. தன் மனம் எழுப்பும் வினாக்களுக்கு விடை காண முற்படும் இத்தேடலில், பல் வேறு வழிகளை இவர்கள் நாடிச் செல்லுகின்றனர். ஆன்மீகச் சந்தையில் பல வியாபாரிகள் இருப்பதால் மக்களுக்குத் தான் போக வேண்டிய இடத்தைச் சரியாகத் தொpவு செய்வதில் குழப்பம் ஏற்படுகின்றது. ஒரு சரியான வழிகாட்டி, ‘இதைப் பின்பற்று!’ ‘அதைச் செய்’!, என்று சொல்ல மாட்டார். அவரால், ‘உன் உள்ளே பார்!’ என்று மட்டும் தான் கூற முடியும். இந்த அடிப்படையில் தான் நாம், மனிதன் தன்னை ஆன்மீகப் பார்வையில் அறிய, தன்னில் மாற்றத்தை ஏற்படுத்தத், தன்னை யார் என்று புரிந்துகொள்ளச் சில சிந்தனைகளை எடுத்துரைத்து அதன் மூலம் மேலும் சிந்தித்து ஆராயத் துhண்டுகிறோம். அந்த வரிசையில் கீதை குறிப்பிடும் ‘‘ஆசார்ய உபாசனம்” அதாவது ‘குரு வணக்கம்” என்பதை நமது ஆய்வுக்குட்படுத்துகிறோம்.

உறங்குபவனுக்கு உபதேசம் அவசியமில்லை. காரணம் உறக்கத்தில் உறவுகள் உணரப்படுவதில்லை. எங்கு உறவுகள் உதயமாகின்றனவோ அங்கேயே வாழ்க்கையின் முரண்பாடுகளும் அதற்குண்டான தெளிவுகளைத் தேடும் முயற்சிகளும் ஆரம்பமாகின்றன. மனித வாழ்க்கையில் இரண்டு விதமான உறவுகளைக் காணலாம். ஒன்று வாழ்க்கையின் ஆரம்பச் சூழ்நிலையில் அமைந்த தாய் தந்தையர், சகோதரர்கள், மற்றும் இவை சார்ந்த உறவுகள். மற்றொன்று, வளர ஆரம்பித்த பின் தன் விருப்பங்களைத் தானே நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற துணிவு வந்தவுடன், வளர்ந்தவன், தனி மனிதன், சுதந்திர மனிதன், உலகை உபயோகிக்கத் தெரிந்தவன், சிறகு விரிந்த பறவை என்று தனக்குத் தானே சூட்டிக்கொண்ட அடையாளங்களோடு தேடிக்கொண்ட நண்பர்கள், காதலன் அல்லது காதலி, கணவன் அல்லது மனைவி என இவை போன்ற பிறவும் இதில் அடங்கும்.

இவ்விரண்டு வகை உறவுகளில் எது தன்னை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்போடும் வைத்திருக்கிறதோ அதை நிலை நிறுத்திக் கொள்வதிலும், எது தனக்கு உபயோகமாய் இல்லா விட்டாலும் கட்டிக் காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வால் சிறைப்படுத்தப்பட்டு அவர்களின் தேவைகளை விரும்பியோ, விரும்பாமலோ நிறைவேற்றி வருவதிலும் மனித வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் அடங்கிவிடுகின்றன.

உற்சாகத்தோடு உறவுகளை ஏற்றுக்கொண்ட மனிதன், காலத்தின் வேலை ஆரம்பமானவுடன் அவ்வுறவுகளின் மீதிருந்த கவர்ச்சியும், தேவையும் ஒரு மயக்கமே என்பதை நகைச்சுவையோடோ, மனக் கிலேசத்தோடோ ஏற்றுக் கொள்ளத் தொடங்கி வாழ்வின் அர்த்தத்தை எடை போட ஆரம்பிக்கிறான். வஞ்சகமில்லாத விசாரம், வாழ்வின் குறைகளை அவனுக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்தத் தெளிவோடு இனி என்ன? என்ற கேள்விக்கு விடை காண முயற்சிக்கிறான். இங்கு அவனுக்குக் கிடைத்த துணையே ஆன்மீகம் என்பதும், அதனைச் சுட்டிக் காண்பித்தவரே குரு அல்லது ஆசார்யர் என்பதும், ‘குரு’ என்ற சொல்லிற்கு நாம் கண்டுகொண்ட அவசர அர்த்தம.; இதுவே இன்றைய சமுதாயத்தில் பரவியிருக்கும் அர்த்தமும் அவ்வர்த்தத்தைத் தாங்கி வரும் குருமார்களும் ஆவர். இவையெல்லாம் ஓரளவிற்கு உண்மையென்றாலும் கூட இது மட்டுமல்ல, ‘குருவும் – குரு பக்தியும்’.

உறவுகளை மூலமாகவும், தான் அடைய விரும்பும் நிலைகளுக்கு அவற்றை நுழைவாயில்களாகவும் கருதி வாழ்வில் உறுதியைத் தேடி அலையும் மனிதனை நிறுத்தி, உறவால் பலன் பெறுவதை மட்டும் நினையாமல், வாழ்வில் தோன்றும் ஒவ்வொரு உறவும் அவனது யதார்த்த சொரூபமான ஆத்ம தத்துவத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக மாற்றிய பெருமையும் – ஒரே நேரத்தில் உறவுகளை ஏற்றுக் கொள்ளவும், அப்படி ஏற்றுக்கொண்ட நிலையிலேயே தாமரை இலைத் தண்ணீர் போல் நிலையான அந்தரங்க விடுதலையை உறுதிப்படுத்திய பாங்கும் – சுதந்திரம் என்ற சொல்லுக்குச் சரியான அர்த்தத்தைக் காண்பித்து உண்மையில் ஒருவனைச் சுதந்திரம் உள்ளவனாக ஆக்கிய பெரு நிலையையும் கொண்ட ஒரு புனிதமான உறவுக்குரியவரே குரு என்பவர் ஆவார். இது நாம் வளர்த்துக்கொண்ட ‘சமூக உறவு’ அன்று. இந்த ஆச்சர்யமான உறவை இதுவரை எந்த சமய சாஸ்திரங்களும், முனிவர்களும் முற்றாக வர்ணித்து விடவில்லை. இவ்வுறவு பற்றிய அறிவு ஆராய்ச்சியால் கிடைப்பதல்ல. அனுபவத்தால் மட்டுமே பெற வேண்டிய தெளிவு.

அனுபவங்களைத் துhர வைத்து, அவ்வனுபவங்களைச் சுற்றிப் பிறர் தந்த விஷயங்களை ஒன்றுசேர்த்து, அதன் வாயிலாகப் பெற்ற ஆராய்ச்சி தந்த அறிவு வேறு. மாறாக ஒரு அனுபவத்தைத் தனதாக்கி, ‘இது என் அனுபவம்’ என்பதாய்ப் பெற்ற அறிவு வேறு. உதாரணமாக மருத்துவர் என்பவர், மகப்பேறு காலத்தில் ஒரு தாய் படும் வேதனைகளை முழுமையாக அறிவார். எந்தெந்த உறுப்புகள் எப்படி எப்படி அவள் சரீரத்தில் செயல்படும் என்பதும், வேதனைப் படுத்தும் – வேதனைப் படும் என்ற விவரத்தை அவர் தாயை விட அதிகமாக அறிவார். இது அறிவு தந்த அனுபவம்! அந்த அறிவும், அனுபவமும் தாயின் சுகப் பிரசவத்திற்குத் துணையாய் இருக்கும், இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் உறுப்புகளின் அசைவு பற்றிய, எந்தவித உடலியல் ஞானமும் இல்லாத அந்தத் தாய் பெற்ற ‘அனுபவம் தந்த அறிவு’, அம்மா! என்ன வலி – என்ன நோவு! என்பது. அம்மா என்ன வலி! என்பது ஒரு ஆராய்ச்சியாளனுக்கு விளக்கமாக அமையாது. ஆனால் அனுபவசாலிகளான இரண்டு தாய்மார்கள் தங்கள் உணர்வைப் பகிர்ந்துகொள்ளும் போது அங்கே இந்த மூன்று சொற்களுமே அதிகமானவை.

வாஞ்சையான ஒரு தழுவலும், சொல்லே தேவையில்லாமல் அர்த்தத்தை மட்டும் தாங்கி வரும் ஒரு சிரிப்பும், எல்லா விளக்கங்களையும் தரும் ஆற்றல் படைத்தவை. மருத்துவர் பெற்றது அறிவார்ந்த அனுபவம். தாய் பெற்றது அனுபவம் தந்த அறிவு. இதே போல் குருவின் மகிமையை உணர முயன்ற பல பேர் குருவால் பலன் பெறாமலேயே போயினர் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை. தாய் அன்பை மக்களும், இல்லற சுகத்தைக் கணவனும், சகோதர உணர்வை உடன் பிறந்தாரும், நட்பின் உயர்வை ஒரு நண்பனும் எப்படி எளிதாய் உணர்வார்களோ – அவர்கள் மட்டுமே அதை உணர முடியுமோ அதைப்போல ஒரு சீடன் மட்டுமே குருவின் உயர்வையும், அவ்வுறவால் விளைந்த பலனையும் அறிந்துகொள்ள முடியும். இனி நமக்கு அவசியமான கேள்வி, யார் சீடன்? என்பதே.

பொதுவாக ஒவ்வொரு உறவுக்கும் ஒரு நோக்கம் வேண்டும். இந்த நோக்கம், தான் தேடிக்கொண்ட பொருளின் தன்மையைச் சார்ந்து அமைந்தால் அதை நியாயமான தேவை என்றும், பொருளின் தன்மைக்கு எதிர் மறையாக ஒருவனது எதிர்பார்ப்பு இருந்தால் அதை அறியாமையில் விளைந்த உறவென்றும் கூறுகின்றோம்! தவறான எதிர்பார்ப்புகள் ஒருக்காலும் வெற்றி பெறப் போவதில்லை, மாறாகச் சலிப்புணர்வையே அவை தரும். உறவின் இந்த அம்சத்தைக் குரு – சீடர்களிடத்தில் பார்க்க முயற்சிப்போம்.

குரு என்பவருக்கு இயற்கையான தன்மையாக மறை நுhல்களும், மறை நுhல் நலம் பெற்ற மகான்களும் ஏற்றுக்கொண்ட ஒரே கருத்து ‘அறியாமை’ என்னும் அந்தகாரத்தை நீக்கும் வல்லமை கொண்டவர் என்பதே.
‘கு காராத் அந்தகார:
ரு காராத் தந் நாஸக:”
என்பது வடமொழி தந்த விளக்கம். ‘கு’ என்ற சொல்லால் அந்தகாரம் என்னும் அறியாமையும், ‘ரு’ என்ற சொல்லால் அதை நாசம் செய்பவராயும் எவர் உளரோ அவரே குரு என்னும் சொல்லுக்குரியவர்.

இப்பொழுது ஒரு சீடனுடைய உறவுக்கு உட்பொருளாக ஞான வேட்கை அமையுமாயின், அந்த உறவு நியாயமான உறவு. ஞானமார்க்கத்தில் சீடன் வேண்டி நிற்கின்ற வெற்றி அல்லது நோக்கம் இயற்கையாய் நிறைவேறும். இதற்கு மாறாக வேறு ஏதேனும் ”வேண்டுகோள்கள்”இ ”தேவைகள்”, உறவின் துடிப்பாய் அமைந்தால் அந்த வேண்டுகோள்கள், ஏக்கங்கள் நிறைவேறலாம் – நிறைவேறாமலும் போகலாம். ஆனால் அதற்குக் குரு தேவை என்ற அவசியமில்லை! திறமை படைத்த எவரும் அதைச் செய்யலாம் – இறைவன் கருணை இருந்தால்!

குரு ஆற்றுகின்ற செயல் ஒரு சாதாரண உதவியல்ல. உதவி ஒருவன் வாழ்வில் வரும் – போகும்! சில சமயங்களில் எங்கிருந்து வந்தது என்ற மூலம் தெரியாமலே தன் பலனைக் காட்டிவி;ட்டுச் சம்பவங்கள் மறைவதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். குருவும் – சீடனும் அசாதாரணப் பிறவிகள் அல்ல. அவர்கள் உறவுக்குப் பாலமாய் அமைவது இருவரில் ஒருவர் ஆற்றும் வினோதச் செயல்கள் அல்ல. மாறாக ஞானமே அவர்களது உறவுக்கு ஆதாரம்.

”தத்வித்திப் பிரணி பாதேன
பரிப் ரஸ்னேன சேவையா
உபதேக்ஷ்யந்தி தே ஞானம்-
ஞானினோ தத்வ தர்சின:”
என்பது ஒருவனிடத்தில் சீடனை உருவாக்குவதற்கான கீதை காட்டிய பாதை. ”உண்மையை உணர்ந்தவர்கள் உபதேசிக்கிறார்கள். பணிவோடும், பகுத்தறிந்த வினாவோடும் அவர்களை நெருங்கி, உரிய பணிவிடையோடு அந்த ஞானத்தைப் பெற்று நீயும் உய்வாய்!” என்பது அதன் கருத்து.

எளிமையாக உணர்ந்துகொள்ள ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். இன்று நாம் தெய்வங்களாக வழிபடும் சிலைகள் எல்லாமே ஒரு காலத்தில் சாதராண கற்களாகவே இருந்தன. ஒரு கல்லாய் அது இருக்கும்போது இன்று பார்த்து வணங்கும் ஆயிரக்கணக்கானோர் அன்றும் பார்த்தனர். ஆனால் அக்கல் வழிபாட்டிற்குரியதாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பலருடைய கண்களுக்கு ஒரு காட்சிப் பொருளாகவே அந்தக் கல் இருந்தது. ஒரு சிற்பி அந்தக் கல்லைக் கண்டபொழுது தான் இதனுள் ஒரு சிலையை உருவாக்கலாம் என்று கருதினான். சிலை வெளிவந்தது. இப்பொழுதும் அது கல் தான். ஆனால் கல்லோடு இதுவரை மறைந்து கிடந்த அழகும், அருளும் வெளிப்பட்டதனால் அது வழி;பாட்டிற்குரியதாக மாறி விட்டது. இக்கல்லை வழிபாட்டிற்குhpயதாக மாற்றியதில் சிற்பி செய்த செயல் என்ன? அவர் செதுக்கித் துhக்கி எறிந்ததும் கல்லே! சிலையாய் நிறுத்தி வைத்ததும் கல்லே! கல் தள்ள வேண்டியதைத் தள்ளினால் தனக்குள் இருக்கும் அழகை வெளிக்காட்டுவது இயற்கை.

இதே போல் தான் குருவும்! நாம் எல்லோரும் சாதாரண கல்லுக்குச் சமமானவர்களே. குரு, தன் ஞானமென்னும் உளியால் நம்மை மறைத்திருந்த அஞ்ஞானம் என்னும் ”அவசியமற்றதை” நீக்கினார். ஒருவனது சொரூபமாகிய ஆன்ம லட்சியம் மனதில் தோன்றத் துவங்கியது. இப்பொழுது அந்தச் சிலை சிற்பியின் தன்மையை, அவரது திறனை முழுமையாக ஏற்றுக் கொண்டது. அதே நேரத்தில் சுதந்திரமாகவும் இருக்கிறது.

ஒரு ரகசியம்! சிற்பி வடித்து முடிக்கும் வரை சிலை, ”வேண்டும்” என்றோ, ”வேண்டாம்” என்றோ எதிர்வினை புரிவதில்லை. சிற்பியின் செயலுக்குத் தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டது. ஆனால் மனிதன் என்னும் கல்லோ உயிர்த்துடிப்பு நிறைந்தது. விருப்பு – வெறுப்புகளே அதனை மூடியிருக்கும் மாசுகள். குருவென்னும் சிற்பி ஒவ்வொரு முறை உளியை ஓங்கும்போதும் இப்பொழுது வேண்டாம், பிறகு! என்றும், இது வேண்டாம், அது! என்றும் அது எதிர்வினை புரிகிறது.

இருளை நீக்கி அருளை வெளிக்கொணரும் முயற்சியில் குருவும் தொடருகிறார். இருளை நிலைநிறுத்திக் கொண்டு, அருளை மறுப்பதில் கலியுகம் வெற்றி கண்டுகொண்டிருக்கிறது. விழிப்போம்! விடுதலை பெறுவோம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *