மெய்ஞானம் என்றால் என்ன?

உலகிற்கு நன்மையான செயல்களையே செய்து, அதனாலே மக்கள் மனம் ஒரு நிறைவு பெற்று அவர்கள் வாழ்க்கையிலே துன்பங்கள் நீங்கி இன்பம் மலரக் காணும் பொழுது அந்த மக்களால் அளிக்கக் கூடிய ஒரு வாழ்த்து, ஒரு மனநிறைவுதான் புகழ். “புகழ்”. என்பது தான் விரும்பிப் பெறுவதோ, தானே ஏதேனும் ஒன்றைச் செய்து அதன் மூலமாக வரவேண்டும் என்று நினைப்பதோ அல்ல. தன் செயலின் மூலமாக மக்கள் காட்டும் மன நிலைதான் புகழாக இருக்கும். இந்த உலகிற்கு, தன்னை வளர்த்து, காத்து அனைத்து வசதிகளையும் அளித்து வரக்கூடிய சமுதாயத்திற்கு நாம் செய்யும் கடமைகள் மூலமாகவே அத்தகைய புகழைப் பெற இயலும். அக்கடமையின் மூலமாக எத்தனையோ பேர்களுடைய வாழ்க்கை செப்புறும்; அவர்களுடைய உள்ளங்கள் மலரும், நிறைவு பெறும்.

மெய்ப்பொருள் உணர்வுக்காகவேதான் ஆறாவது அறிவு. நமது அறிவினுடைய நோக்கம் – பிறவியின் நோக்கம் – மெய்ப் பொருளை உணர வேண்டும் என்பதே. ஏன் என்றால் மெய்ப்பொருள் என்பது இயற்கையின் அடிப்படையான நியதி. அந்த இயற்கை நியதி ஆதி நிலையாகவும் அணுநிலை என்ற அசைவாகவும் பிரபஞ்சம் என்ற கோர்வையாகவும் உயிர்களாகவும் நான்கு வகையிலே மலர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நான்கு வகை இயற்கை நியதிகளை உணர்ந்து கொண்டால்தான் ஒருவன் சாpயாகச் செயல்பட முடியும். ஒவ்வொரு செயலும் ஒரு விளைவு தருகிறது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அந்தச் செயலின் விளைவாக என்ன என்ன பெற முடியும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இயற்கையின் இயல்பைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையின் ஆதி நிலை, அசைவு நிலை, அதனுடைய கூட்டு இயக்கங்களால் தோன்றிய பிரபஞ்சம், பேரியக்க மண்டலம், அதன் வழியே தோன்றி வந்த உயிர்கள் போன்றவற்றின் தொடர்பை அறிந்து கொண்டால்தான் இன்னது செய்தால் பிறருக்கு இந்த அளவு நன்மை உண்டாகும் என்ற தெளிவு பிறக்கும். சுக துக்க இயல்பினை உள்ளத்தாலே கூர்ந்துணர்ந்து, அறிந்து, புரிந்து அவ்வப்பொழுது தன் சேவைகளை, தொண்டுகளை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள இயற்கையின் ரகசியங்களை, அமைப்புகளை, வளங்களை, நியதிகளை உணர்ந்து கொள்ளுதலே மெய்ஞ்ஞானம் எனப்படும்.

ஆகவே மெய்ப்பொருள் உணர்வு என்றால் எந்த இயற்கை அனைத்துமாக இருந்து கொண்டு நியதி மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதனுடைய பிரிவுதான் ஒவ்வொன்றும். இப்படி அனைத்துமே, ‘இயற்கையின் ஒரு கூறுதான்’ என்ற எண்ணம் இருக்கும்போது அகம்பாவம் என்ற தன் முனைப்பு குறையும். எல்லாமே பிரம்மம், ஒன்று என்ற உணர்வு உள்ளத்தில் பதியத் தொடங்கினாலே படைப்பின் உணர்வான கருணை தனிமனத்;தில் அன்பாக ஊற்றெடுக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *