ஆன்மீக முன்னேற்றம் என்றால் என்ன?..

”இறைவன் எல்லோரையும் தன்னுடைய இருப்பான எல்லையற்ற ஆனந்தத்திலிருந்து தான் படைத்துள்ளான். அவர்கள் உடலினால் வேதனையுடன் நெருக்கப்பட்டாலும் தன்னுடைய பிரதிபிம்பமாகப் படைக்கப்பட்ட மனிதர்கள் உடலுணர்ச்சிகளுடன் தங்களை ஐக்கியப் படுத்திக் கொள்ளாமல் இறுதியாக அதற்கும் மேலே உயர்ந்து தன்னுடன் மறுபடியும் ஒன்றி விடுவார்களென்றுதான் கடவுள் எதிர்பார்க்கிறார்” – ஸ்ரீ சத்ய சாயி பாபா

உண்மையான ஒரு பக்தனுக்குத் தெய்வீக அனுபவம் இயற்கையாகத் தவிர்க்க முடியாததாக ஏற்படுகிறது. அவனுடைய தீவிரமான ஏக்கம் இறைவனைத் தடுக்க முடியாத வேகத்துடன் இழுக்க ஆரம்பிக்கிறது. தேடுபவனின் உணர்வு வட்டத்திற்குள் பரம்பொருள் பேரண்ட தரிசனமாக அக் காந்த சக்தியால் இழுக்கப்படுகிறார்.

ஒருவருடைய ஆன்மீக முன்னேற்றத்தைத் தியானத்தில் அவருடைய ஆனந்தத்தின் ஆழத்தினால் மட்டுமே அறிய முடியுமே தவிர அவருடைய வெளிப்புறச்சக்திகளை பறை சாற்றுவதால் அல்ல. என்றும் புத்தம் புதிய ஆனந்தமே இறைவன் அவன் அள்ள அள்ளக் குறையாதவன் – நீ உன் தியானத்தைப் பல ஆண்டுகள் தொடரும் பொழுது அவன் எண்ணற்ற விதங்களில் உன்னை ஏமாற்றி விளையாடுவான். அவனை அடையும் வழியை அறிந்தவர்கள் – பக்தர்கள் வேறு எந்த மகிழ்ச்சியையும் அவனுக்கு ஈடாகக் கொள்ளக் கனவில் கூட நினைக்க மாட்டார்கள். அவனது வசீகரிக்கும் தன்மை ஒப்பற்றது. அதற்கு இணை வேறு ஏதும் இல்லை.

இவ்வுலக இன்பங்களிலிருந்து நாம் எவ்வளவு சீக்கிரம் அலுப்படைந்து விடுகிறோம்! மனிதர்கள், பொருட்கள்மீதுள்ள இச்சைக்கு முடிவேயில்லை. முழுதும் திருப்தி அடைவதென்பதே மனிதனுக்கு இல்லை. ஒன்றன்பின் ஒன்றாக அவன் குறிக்கோளும் மாறும். அவன் தேடும் வேறு ஏதோ ஒன்று இறைவன்தான். அவன் மட்டுமே மனிதனுக்கு நிரந்தரமான ஆனந்தத்தைத் தரமுடியும். மனித வாழ்வு நாம் இறைவனுடைய விருப்பத்துடன் ஒன்றுபடும்வரை துன்பத்தினால் சூழப்பட்டுள்ளது. இறைவனின் ‘சரியான பாதை’ அகந்தையுடன் கூடிய புத்திக்கு பெரும்பாலும் திகைப்பாகவே இருக்கிறது.

தன்னை ஓர் அற்பமான அகங்காரத்துடன் ஐக்கியப்படுத்திக்கொண்டு மனிதன் தானே நினைப்பதாகவும், தீர்மானிப்பதாகவும், உணர்வதாகவும், உணவைச் செரிப்பதாகவும், தன்னைத்தானே உயிருடன் வைத்துக் கொண்டிருப்பதாகவும் நினைத்துக் கொள்கிறான். தன்னுடைய சாதாரண வாழ்வில், தான் கடந்தகால கர்மச் செயல்களாலும் இயற்கை அல்லது சூழ்நிலையாலும் ஆட்டுவிக்கப்படும் ஒரு கைப்பொம்மை மட்டுமே அன்றி வேறல்ல என்பதை சிந்தித்து ஒருபோதும் ஒத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு மனிதனுடைய அறிவு பூர்வமான எதிர்ச் செயல்கள், உணர்ச்சிகள், மன நிலைகள், மற்றும் பழக்கங்கள் கடந்த காலக் காரணங்களின் வெறும் விளைவுகளே. இக்காரணங்கள் இப்பிறவியிலோ அல்லது முற்பிறவியிலோ விளைவிக்கப்பட்டவையே. இருந்தபோதும் இம்மாதிரியான பாதிப்புகளுக்கும் மேலே அவனது ஆன்மா மிக உயர்ந்த நிலையில் உள்ளது. ஆன்ம சாதகன் நிலையற்ற உண்மைகளையும் விடுதலைகளையும் உதறித்தள்ளி எல்லா மாயைகளையும் கடந்து தன்னுள் நிலைபெறுகிறான். உலக சமய நுhல்கள், “மனிதன் சீர்கேடு அடையும் உடல் அல்ல் ஆனால் என்றும் வாழும் ஆன்மா” எனக் கூறுகின்றன.

ஆதி சங்கரர் அவருடைய புகழ் பெற்ற ‘சதகத்தில்’ (சதஸ்லோகி) வெளிப்படைச் சடங்கு அஞ்ஞானத்தை அழிக்க முடியாது; ஏனெனில் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. அனுபு+தி ஞானமே அறியாமையை நீக்கும். ஞானம் என்பது ஆராய்ச்சி இல்லாமல் தோன்ற முடியாது. நான் யார்? இப்பிரபஞ்சம் எப்படித் தோன்றியது? அதை உண்டாக்கியவர் யார்? அதனுடைய இயற்பியல் காரணம் என்ன? என்ற விசாரணைதான் இட்டுச் செல்லும். இக்கேள்விகளுக்கெல்லாம் புத்தியிடம் பதில் இல்லை. ஆகையால் ரிஷிகள் ஆத்ம விசாரணைக்காக யோக முறையை உருவாக்கினர். இந்த யோக முறையையே பகவத்கீதை விளக்குகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *