எப்போதும் மகிழ்ச்சியுடனும் வெற்றிகரமாகவும் வாழ்வது எப்படி?

குழப்பங்களும் பரபரப்புக்களும் நிறைந்த ஒரு யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. கடுமையான போட்டா போட்டியும் நேர்மையற்ற போராட்டங்களும் யுத்தங்களும் கொண்ட புறவாழ்க்கையில் பொருள்களோடும் மனிதர்களோடும் பிராணிகளோடும் எப்போதும் யுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் நம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல நமக்குள்ளே ஆழத்தில் கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் தலைவிரித்தாடும் விருப்பங்களுக்கும் கடிவாளமற்ற எண்ணங்களுக்கும் அடிமைகளாகிவிட்டோம். இதன் பயனாக இரண்டு சக்திகளுக்கு இடையில் சிக்கித் தற்கால இளைஞன் தாறுமாறாகக் கிழித்தெறியப்படுகிறான். உள்ளே இருக்கும் குழப்பங்கள் ஒரு பக்கம்;; புறத்தே உள்ள போராட்டச் சூழ்நிலைகள் மறுபக்கம்.

அதே நேரம், ஒவ்வொரு புத்திசாலியும் ஒரு உண்மையை உணர்ந்து கொண்டிருக்கிறான். அதாவது அலை அலையாக உள்ளிருந்து மேலெழும் குழப்பங்கள் எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அவனுக்கு வாழ்க்கையில் வெற்றியும் அமைதியும் கிடைக்கின்றன. பிரச்சனையைக் கண்டவுடன் திகைப்புற்று விடைகிடைக்காது என்று இடிந்து போய்விடும் பொழுதுதான் அது நம்மைச் சாய்த்து விடுகிறது. எவ்வளவு கடுமையான பிரச்சனையாக இருந்தாலும் அமைதி நிறைந்த உள்ளத்தோடு மனிதன் அதை ஆராய்ந்தால் அவனை மிரட்டிக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு தென்படும்.

நமக்கென ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எண்ணி எண்ணிப் புழுங்குவது நம்மைப் பலவீனர்களாக்கி விடுகிறது. நம் மனப் பலவீனங்கள் வெளியில் இருந்து எழும் சவால்களுக்குத் திண்மையையும் உறுதியையும் சக்தியையும் ஊட்டுகின்றன. சுருங்கச் சொன்னால் நம்மை நாமே சவுக்கால் அடித்துக் கொண்டு பின்பு நோவு – வலி தாளாமல் புலம்புகிறோம். ஆகவேதான் அக விஞ்ஞானிகளான ரிஷிகளுடைய அறிவு செறிந்த தத்துவம், சூழ்நிலையோடு நம்மை ஒத்து வாழும்படி உபதேசிக்கிறது. புத்திக் கூர்மையுடன் அவற்றுக்கு ஈடு கொடுக்கும் பொருட்டு இடைவிடாது உழைக்கும்படி போதிக்கிறது. புற உலகுடன் இயைந்து வாழ்தல் என்பது நடக்கிறபடி நடக்கட்டும் என்று சோம்பிக் கிடப்பதையோ அறிவில்லாத சரணாகதியையோ குறிப்பாகக் கொள்ளக் கூடாது.

இடைவிடாமல் வாசிக்கப்படும் தெய்வீக இசைக்கு ஏற்றாற்போல் ஒழுக்கம், தானம், அன்பு, தியாகம், பரிவு, பொறுமை ஆகிய குணங்களுடன் தனது பயண வழியில் கூத்தாடியபடி முன்னேறும் பொழுதுதான் மனிதன் உலகுடன் இயைந்து வாழ்வதாகக் கொள்ளப்படும். வாத்தியக் கோஷ்டியில் பத்துக் கருவிகள் ஒரே சமயத்தில் வாசிக்கப் படும் பொழுது அந்த இசையை நாம் எவ்வாறு ரசிக்கிறோம்! வெவ்வேறு ஒலிகளும் சுரங்களும் ஒரு கவர்ச்சிகரமான இசையால் இணைந்து மொத்தப் பாட்டிலும் பரவி நிற்கும் தொனியிலே நமது கவனத்தைக் கலப்பதன் மூலம் அதை அனுபவிக்கிறோம். அது போலவே பிரச்சனைகளை முழுமையாக நோக்குவதற்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்வதன் மூலம் இசைந்த வாழ்வு வாழும் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். பிரபஞ்சத்தில் வாழும் பிரம்மாண்டமான மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினர் என்று நாம் நம்மை உணர்ந்து விட்டால் நமது சொந்தப் பிரச்சனைகளின் தன்மையே மாறிவிடும். நம்மை மிரட்டுவதற்குப் பதிலாகப் புன்னகை செய்யத் துவங்கி விடும். அதனால் விளையும் அமைதியால் நமது புத்திக்கு ஊட்டும் பிரச்சனையின் முடிச்சு எவ்வளவுதான் சிக்கலாக இருந்தாலும் நம் கைகள் அதை எளிதில் அவிழ்த்து விடும். இதற்குப் பதிலாக அனேகமாக எப்போதும் நாம் ஒரு தவறைச் செய்து விடுகிறோம். நாம் பரபரப்புக்கு இரையாகி விடுவதால் நமது குறுகிய நோக்கில் பிரச்சனை பயங்கரமானதாகத் தொடங்கி விடுகிறது.

வறுமை, நோய், தோல்வி, ஏமாற்றங்கள், அழிவு, மரணம் என்றவையெல்லாம் மேகத் தலையணையிலே உல்லாசமாகச் சாய்ந்து கொண்டிருக்கும் ஒரு கேடு கெட்ட சக்தியால் நமக்கென அனுப்பப்பட்டவையல்ல. இதை உணராதவரை நியாயமற்ற ஒரு விதி நம்மைப் பொறுக்கியெடுத்துச் சித்திரவதை செய்கிறது என்ற எண்ணம் மனத்தை பலவீனப் படுத்திக் கொண்டே இருக்கும். இந்தத் தவறான கருத்தினால் நம் திறமையெல்லாம் மடிந்து ஆற்றல்கள் மங்கிப் போகும். மாறாகப் போர்க்களத்தில் நிற்கும் ஒரு வீரனின் அமைதியுடனும் தைரியத்துடனும் நாம் வாழ்க்கையை எதிர்நோக்குவோமேயானால் நுhற்றுக்கு நுhறு வெற்றி கிடைக்கும் என்பது திண்ணம். அக உலகுடனும் புற உலகுடனும் இணைந்து வாழும் எளிய முறையின் மூலம் வலு வளர்ந்து கொண்டே போகும்.

நடக்கிறபடி நடக்கட்டும் என்று கிடப்பவனிடம் காணும் அமைதி பிணத்தின் சடத் தன்மையை ஒத்தது. ஆனால் வளர்ச்சியை நாடுபவனிடம் காணும் இசைவு அப்படிப் பட்டதல்ல. உணர்ச்சி மிக்க கீதத்தின் கடைசி ஒலி அடங்கியதும் இதயத்தின் மிது வந்து படிகிறதே உயிர்த்துடிப்புள்ள ஓர் மௌனம்! அதைப்போன்றது இது. இன்பம் நிறைந்தது; வெடி மருந்தைப்போல் சக்தி நிறைந்தது; மயிர்க் கூச்செறியச் செய்வது. இந்த இசைவைப் பயில வேண்டியது எங்கே? எப்போது? உங்கள் வீட்டிற்குள்ளேயோ வெற்றியில் மிதக்கும்போதோ அல்ல. சந்தை இரைச்சலிலே அதைப் பயில வேண்டும். கால் இடறினால் மரணம் என்னும் படியான வாழ்க்கையின் ஒடுக்கமான மலைப்பாதையிலே மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க வியர்க்க விறுவிறுக்க நீங்கள் ஏறுகிறீர்களே! அப்போது இதைப் பயில வேண்டும். இயைந்து வாழ்வது எளிதல்ல. தன்னையே மையமாகக் கொண்டு உங்கள் மனம் உலகத்தை நோக்குமேயானால் இது இயலாது. எப்போதும் உங்கள் உணர்வில் உலகின் முழுமையையும் மனித சமுதாயத்தின் மொத்தத்தையும் அகில உலகத்துக்கும் பொதுவான பிரச்சனைகளின் விரிவையும் நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த முழுமைக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் பொழுது உங்கள் சொந்தப் பிரச்சனை கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சுருங்கி விடும். பிரம்மாண்டமான புத்திக்கு அதைச் சாதிக்கும் வேலை வெறும் குழந்தை விளையாட்டு ஆகிவிடும்.

வௌ;ளம் தலைக்குமேல் போய்விட்டது என்று உங்களுக்குத் தோன்றும் பொழுது தெய்வங்களைச் சபிப்பதிலோ உங்கள் மீது நீங்களே இரக்கப்பட்டுக் கொள்வதிலோ பொழுதை வீணாக்காதீர்கள். தனது வயலினில் இருந்து உரிய இசையை எழுப்ப முடியாவிட்டால் அந்த வயலின் கலைஞர் என்ன செய்கிறார்? கலைவாணியையோ தனது குருவையோ சபையையோ அவர் சபிக்கத் துவங்குவதில்லை. வில்லைக் கீழே வைத்துவிட்டு கருவியிலுள்ள குமிழ்களைச் சரிப்படுத்தி சுருதியை மீட்ட ஆரம்பிப்பார்.

வாழ்க்கை என்ற இசையரங்கிலே அந்தக் கலைஞரைப்போல நீங்களும் தன்னம்பிக்கையோடும் அமைதியோடும் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உடனுக்குடனே வழிகாணுங்கள். இன்பம், வெற்றி என்ற இசை உங்களிடமிருந்து இடைவிடாது பெருக்கெடுக்காவிட்டால் உங்களுக்குள்ளே சுருதி கலைந்திருக்கிறது என்று பொருள். அதைச் சரிப்படுத்துங்கள். குறுகிய நோக்கு சோகத்தின் வித்து.

வாழ்க்கையின் தன்மையைச் செவ்வனே புரிந்து கொண்டு எப்போதும் மகிழ்ச்சியுடனும் வெற்றிகரமாகவும் வாழ்வது உங்கள் பிறப்புரிமை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *