நம்மைக் கவலையுறச் செய்பவை எவை?

நமது எண்ணங்களும் அவற்றின் பதிவுகளும் தானே! தினசரி காலை முதல் மாலை வரை பல காட்சிகளை, சம்பவங்களைக் காண்கிறோம். அவை அனைத்தும் மனதில் பதிகின்றதா? இப்பதிவுகளே எண்ணங்களாகி அவை ஞாபகங்களாக உறைகின்றன. மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனித்தால் அவை ஞாபகம், அதிலிருந்து எண்ணங்கள், அதிலிருந்து செயல்கள், அதிலிருந்து விளைவுகள், விளைவுகளினால் ஏற்படும் அனுபவங்கள் – அந்த அனுபவங்களின் பதிவுகளே மீண்டும் ஞாபகக் கருவு+லத்தில் சேர்ந்து கொள்கின்றன. இவையே கர்மா எனவும் மூளையின் வலைப்பின்னற் செயல்கள் (Network) எனவும் அழைக்கப்படுகின்றன.

நாம் தேடிக் கொண்ட அறிவு, நமக்குக் கிடைத்த அனுபவங்கள் என்பவற்றைப் பொறுத்து நம் ஞாபக சக்தி அமைகிறது. தொழில் சம்பந்தப்பட்ட அலுவல்களுக்கு (Technical) ஞாபக சக்தி அவசியம் தேவைப் படுகிறது. அப்போது தொழிலகங்களிலிருந்து விமானங்கள் முதல் கணனிகள் வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் உள்ளம் தொடர்பான விஷயங்களில் ஞாபக சக்தி இடையு+றாகச் செயல்படுகிறது. எது சரியானது, எது பிழையானது, எது உண்மையானது, எது பொய்யானது என்பவற்றைக் கண்டு பிடிக்க ஞாபக சக்தி உதவப் போவதில்லை. ஞாபக சக்தி உண்மையைக் கண்டு பிடிக்க முடியாதபடியும் செய்து விடுகிறது. மற்றவர்கள் நம்மை அவமதித்ததையோ, தீங்கு செய்ததையோ நாம் மனங்களில் பதிவு செய்து கொண்டு தேடுகிறோம். இவைகள் நம் ஞாபகத்தில் இடம் பிடித்து விடுகின்றன. நாம் யாரைப் பார்த்தாலும் நம்முடைய ஞாபக சக்தி அவர் செய்த தீங்குகளை நமக்கு ஞாபகப் படுத்துவதினால் அவரோடு நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது. நீங்கள் மற்றவர்கள் செய்த தவறுகளையும் தீங்குகளையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அனைவரையும் தொடர்ந்து வெறுத்து வந்தால் நீங்கள் பகை என்ற சேற்றில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி உங்களை முற்றிலுமாக அழித்துக் கொண்டு விடுவீர்கள். அன்பு காட்டத் தெரிந்த மனம்தான் மற்றவர்கள் செய்த தவறுகளையும் குற்றங்களையும் மனதில் பதிவு செய்துகொள்ளாமல் அவைகளை உடனடியாக மறந்து விடும்.

நாம் மற்றவர்களிடம் நல்ல உறவை உருவாக்கிக் கொள்ள அவர்கள் நம்மை அவமதித்ததை நாம் நம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளாமல் அவைகளை உடனடியாக மறந்துவிட வேண்டும். முக்கியமாக நம்மைப் புகழ்ந்து பேசி வருபவர்களிடம் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக நம்மைப் பயன்படுத்திக் கொள்ள நம்மைப் புகழ்ந்து பேசி வரக்கூடும். ஆக உளவியல் தொடர்பான விடயங்களில் நம்மிடம் இருந்து வரும் ஞாபகசக்தி நிறைய பிரச்சனைகளைத்தான் உருவாக்கும். நாம் இந்தத் தேவையற்ற ஞாபக சக்தியை அனைத்து நேரமும் சுமந்து நம் வாழ்க்கையை வேதனை நிறைந்ததாக மாற்றிக் கொண்டு அவதிப்பட்டு வருகிறோம். இந்தத் தேவையற்ற ஞாபக சக்தியிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும்போதுதான் மற்றவர்களிடம் நல்ல உறவை உருவாக்கிக் கொள்ள முடியும்.

அறிவு, அனுபவம், ஞாபகம் போன்றவைகள் நம் உள்ளங்களில் எண்ணங்களை உருவாக்கி வருகின்றன. எண்ணங்கள்தான் ஒருவனை இம்சை செய்பவனாகவும் மூர்க்கத் தனமானவனாகவும் ஆக்குகின்றன. பலவிதக் கட்டுப்பாடுகளை உருவாக்கி ஒருவனுடைய சுதந்திரத்தை முற்றிலுமாகப் பறித்து விடுகின்றன. எண்ணங்கள் தாம் ஏக்கம், பொறாமை, பேராசை போன்ற கெட்ட குணங்களை மனிதர்களிடம் வளர்த்துக் கெடுதல் நிறைந்த செயல்களைச் செய்யத் துhண்டி உலகில் அராஜகத்தைப் பரப்பி வருகின்றன. எண்ணங்கள்தான் நாடுகள், கட்சிகள், சமயங்கள், கடவுள்கள், பூஜைகள், சடங்குகள், புனித நுhல்கள், இனங்கள், ஜாதிகள் போன்றவற்றை உருவாக்கி மனித இனத்தை எண்ணற்ற பிரிவுகளாகப் பிரித்து சண்டைகளை உருவாக்கி வருகின்றன. எண்ணங்கள் இல்லாத நிலையில் ஒருவன் கண்ட அவமானங்கள், தீங்குகள் போன்றவைகள் முற்றிலுமாக காணாமல் போய்விடுவதைக் காண முடியும். ஆனால் மனதில் தொடர்ந்து உருவாகி வரும் எண்ணங்கள் நிரந்தரமாக நிலைத்து நிற்கும்படி செய்து வருகின்றன. பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியாதபடி பூதாகாரமாக வளரச் செய்து விடுகின்றன. நம்முடைய எண்ணங்கள் நம் சுயநலத்தைத் தழுவியே அமையும் போது நம்மால் மற்றவர்களுடன் நல்ல உறவை அனைத்துக் கொள்ளவே இயலாது. பகை, அழிவு, பொறாமை, பயம், ஏக்கம் போன்றவற்றை உருவாக்கும் எண்ணங்கள் மனதில் உருவாகாதபடி செய்வதைத்தான் “தியானம்” என்று கூறுகிறோம். எண்ணமில்லாத உள்ளத்தில் அமைதி உருவாகும். தொடர்ந்த அமைதி சாந்தியை உருவாக்கும். சாந்தி பரிணாம வளர்ச்சியைத் துரிதப்படுத்தும். பரிணாம இறுதி தெய்வீகத்தை வெளிப்படுத்தும். பிறப்பையே அழிக்கும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *