அகவாழ்க்கையை ஒழுங்கமைப்பது எப்படி?

அகவாழ்க்கையை ஒழுங்கமைப்பது எப்படி? ஆன்மீக ஈடுபாடு என்பது தற்போதுள்ள சுகங்களை இழக்க வேண்டி வருமோ என்ற ஏக்கம், பெரும்பாலோரிடம் தெரிந்தது. அகவாழ்க்கையை ஒழுங்கு படுத்தியதும் புற வாழ்க்கை ஆனந்தமளிக்கிறது என்ற உண்மையை புரிய வைக்கும்போது மலைக்கின்றார்கள். ஒழுங்கமைப்பது என்றால் என்ன? எனக்கு எது தேவையோ, அதை அடைவது – நோக்கிச் செல்வது என்பதில் தெளிவின்மையே தயக்கத்திற்குக் காரணம். தங்களுக்கு எது தேவை என்பது இன்னும் பலருக்குப் புரியவில்லை! உடம்பில் இருந்தாலும் உள்ளத்தால் மட்டுமே வாழ்கிறோம். மனம், புத்தி என்ற இரு பகுதியாய் உள்ள சூட்சும சரீரங்களைக் கொண்டதே இந்த உள்ளம் அல்லது சித்தம். இது அனுபவங்களைப் பெற்று அவற்றை ஞாபகப் பதிவாக்கி – அதிலிருந்து எண்ணங்களை உருவி எடுத்து அவ்வெண்ணங்களைச் செயலாக்கி அதில் ஏற்பட்ட வெற்றி, தோல்வி என்ற உணர்ச்சிக் குவியல்களோடு அதையே மீண்டும் அனுபவ – ஞாபக – எண்ண – செயல் – அனுபவம் என்ற சூழலில் போட்டு வாழ்க்கை என்ற தடத்தில் மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்கிறது. இதையே ‘கர்மா’ என்று குறிப்பிடுகிறோம். இவற்றிற்கு வெளியில் சிந்தித்துப் பழகுவதே அக ஒழுங்கமைப்புக்கு இட்டுச் செல்லும்.

இன்று “வைராக்யம்” அல்லது ”புலனடக்கம்” என்பவைபற்றி ஆய்வு செய்வோம். ‘இந்திரிய’ என்றால் புலன்கள். ‘அர்த’ என்றால் அவற்றின் விஷயங்கள். ஆகையால் ‘இந்திரயார்த’ என்றால் புலன்களின் விஷயங்கள். ‘ராக’ என்றால் ஆசை, பற்று. ‘விராக’ என்றால் பற்றற்றவன். ‘வைராக்ய’ என்றால் பற்றற்றவனின் தன்மை அதாவது பற்றின்மை. ஆகையால் ‘இந்திரயார் தேஷு வைராக்யம்’ என்றால் புலன் விஷயங்களில் பற்றின்மை. புலன் விஷயங்களைத் தேடிப் போவதற்கு அடக்க முடியாத உந்துதல் இல்லாமை. ராகம் என்பது சாதாரண ஆர்வம். ஆசை இதை விட அதிகமானது. அது ஒரு விஷயத்திற்கான ஏக்கம். ‘அது’ இல்லாமல் என்னால் முடியாது என்ற எண்ணம். இது தான் பற்று.

வைராக்யம் என்றால் புலன் விஷயங்கள் எதையும் சுத்தமாகப் பார்க்காமல், கேட்காமல், தொடாமல், முகராமல், சுவைக்காமல் இருப்பதா? அவற்றுக்கும் நமக்கும் நடுவில் தடைபோட்டுக்கொள்வதா? அவற்றிடமிருந்து ஓட வேண்டுமா? வைராக்யம் என்பது இவற்றில் எதுவும் இல்லை.

ஆசைகளை வலியக் கட்டுப்படுத்துவது அல்லது வெளி வராமல் அடக்கிப் புதைத்து வைப்பது அல்ல வைராக்யம். விஷயங்களை அமைதியாக அவை உள்ளவாறே காணும் மனப்பான்மையே வைராக்யம் ஆகும்.It is not suppression of desires, but a mental state of objectivity towards the things of this world. “Suppression”  என்றால் – விஷயங்களை அனுபவிக்க ஆசைகள், ஏக்கங்கள், உந்தல்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை வெளியிடாமல் மனதில் போட்டுப் புதைத்து வைப்பதாகும். அப்பொழுது அவை எங்கே வெளிவந்துவிடுமோ என்ற பயம் இருக்கும். மாறாக வைராக்யம் என்பது இவை இல்லாத நிலையாகும். அதாவது விஷயங்களை அனுவிக்க வேண்டும் என்ற தீராத உந்தல்கள், ஏக்கங்கள், உழஅpநடடiபெ ரசபநள இல்லாத நிலையாகும்.
இந்த மனநிலையை எப்படிப் பெறுவது? இந்தத் தீவிர ஏக்கங்களிலிருந்து எப்படி விடுபடுவது? விஷயங்களை அவை உள்ளவாறே காண்பது தான் அதற்கான வழி. அதாவது நம்முடைய மன விகாரங்களை, விருப்பு வெறுப்புகளை அவற்றில் ஏற்றி வைக்காமல் அவற்றின் உபயோகம் என்ன? அவற்றுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம் என்ன? என்பவற்றை ஆலோசித்துக் காண்பது தான் வைராக்யம் – – objectivity.

அடிப்படையாகவே ஒவ்வொரு மனிதனும் தன்னைக் குறைகள் உள்ளவனாக, முழுமையற்றவனாகக் கருதுகிறான். இந்த மையக் கருத்தைச் சுற்றித்தான் நம்முடைய அனைத்து ஆசைகளும், ஏக்கங்களும், உந்தல்களும் இயங்குகின்றன. நான் முழுமையானவன் இல்லை; தான் பாதுகாப்பற்றவன்; ஆகையால் தான் பூர்ணமானவனாக ஆக வேண்டுமென்பது தான் எல்லா மனிதர்களுடைய அடிப்படை ஆசையாகும்.

பொருளையும், இன்பத்தையும் தேடுவதன் மூலம் பூர்ணத்துவத்தை அடையலாம் என்று எண்ணுகிறோம். ஆகவே நம்முடைய எல்லாத் தேடுதல்களும் பொருள், இன்பம் என்பவற்றின் தேடலில் அடங்கி விடுகின்றன. காமம் அல்லது இன்பம் என்பது அனைத்து விதப் புலனின்பங்களையும் குறிக்கும். பசிக்காகச் சாப்பிடுவது காமமல்ல. மாறாக விதவிதமாக நாக்கின் ருசிக்காகச் சாப்பிடுதலே புலனின்பம் என்பதாகும். உடலை மூடுவதற்கான ஆடை தேவை. அதை விதவிதமாக அணிய வேண்டும் என்பது காமம். அதே மாதிரி ”என்னுடைய பாதுகாப்பு இவற்றில் இருக்கிறது” என்றெண்ணி நாம் அடைய விரும்பும் பணம், பட்டம், பதவி, அதிகாரம், செல்வாக்கு என்பவை எல்லாம் ‘அர்த்தம்’ அதாவது பொருள் என்பதில் அடங்கும்.

நாம் நிறைவற்றவர்கள். பொருளும் இன்பமும் நமக்கு நிறைவைத் தருமென எண்ணி நாம் பொருளையும் இன்பத்தையும் தேடும்போது, மனிதர்களான நம்முடைய இந்தத் தேடுதலுக்கு ஒரு முடிவே இருக்கப் போவதில்லை. பொருட்களுக்கும் இன்பங்களுக்கும் நம்மை முழுமையாக்கிவிடும் திறன் இருக்கிறது என்று நாம் கருதும் வரை புலன் விஷயங்களில் நமக்கு வைராக்யம் வரப்போவதில்லை. பொருட்கள், இன்பங்கள் அடைய வேண்டுமென்ற தீவிர ஆசைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால், நாம் அவைகளைப் பற்றி விசாரம் செய்ய வேண்டும்.

பொருள் நமக்குப் பாதுகாப்பைத் தருமா? நாம் எத்தனை பொருட்களைச் சேர்த்தாலும் அவை நம்மைப் பாதுகாப்புள்ளவர்களாக ஆக்கப் போவதில்லை. நாம் எத்தனை இன்பங்களை அனுபவித்தாலும் அவை நம் வெறுமையை முழுமையற்ற நிலையை மாற்றப் போவதில்லை. ஆகையால் நாம் குறையுள்ளவர்கள் என்ற உணர்வை நீக்குவதற்கான முயற்சி – ஒரு முடிவற்ற முயற்சியாக இருக்கப் போகிறது. செல்வம் எவ்வளவு இருந்தாலும் அது நம்முடைய பாதுகாப்பற்ற உணர்வை நீக்குவதற்குப் போதுமானதாக இருக்கப் போவதில்லை. இதை நாம் ஆராய்ந்தறிய வேண்டும்.

முதலில் பொருட்களை அடைவதுபற்றி ஆராயலாம். எந்தப் பொருளை அடைந்தாலும் அந்த லாபத்துடன் சிறிது நஷ்டமும் கலந்துள்ளது. ஒரு பொருளை வாங்கும்போது நம் கையிருப்பு குறைகிறதல்லவா? மேலும் முயற்சியால் நாம் அடையும் எந்தப் பொருளும் நம்மிடம் எப்பொழுதும் தங்கி இருக்கப் போவதில்லை. ஒரு பொருளை அடைய வேண்டுமென்றால் நாம் அதற்காக நேரம் செலவழிக்க வேண்டும். உடலை வருத்திக் கொள்ள வேண்டும்; பொறுப்பு ஏற்க வேண்டும். ஒரு பொருளை அடையும்போது மற்றொன்றை அடைய முடியாமல் போகிறது, அல்லது இழக்க நேரிடுகிறது. ஆகையால் நேரம், உடல், உழைப்பு, மற்றொரு பொருளின் இழப்பு, இப்படிப்பல கஷ்டங்கள் ஏற்படுகின்றன. ஆகையால் நஷ்டத்துடன் கூடிய லாபத்தினால் நீடித்த, நிலைத்த பாதுகாப்பு என்றும் கிட்டப் போவதில்லை. மேலும் பாதுகாப்புக்கென்றே பொருளைச் சம்பாதித்துவிட்டு, அதன் பாதுகாப்புக்கு நாம் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் பொருள் இருப்பதாலேயே நம் பாதுகாப்பிற்கு ஆபத்தும் ஏற்படுகிறது.

இன்பம் நமக்கு நிறைவைத் தருமா? அவற்றையும் ஆராய்ந்து பார்க்கலாம். எந்த இன்பமும் நமக்கு நிறைவையும், நீடித்த திருப்தியையும் தரப்போவதில்லை. நம்மில் ஒவ்வொருவரும் தனக்கென்று தான் சிருஷ்டி செய்து கொண்ட ஒரு தனிப்பட்ட உலகத்தில் வாழ்கிறோம். அதில் எல்லா விஷயங்களையும் விரும்பத்தக்கவை (Likes) விரும்பத்தகாதவை (Dislikes) இவை இரண்டிலும் சேராதவை என்ற கோப்புகளில் (Files) பிரித்து வைத்துவிடுகிறோம். ஆனால் இந்தப் பிரிவு மிகவும் தெளிவானதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், இன்று, இங்கு நமக்குப் பிடித்தது எப்பொழுதுமே எல்லா இடங்களிலும் பிடிக்கும் என்று சொல்வதற்கில்லையே! மேலும் எனக்குப் பிடித்ததை நீங்கள் விரும்புவீர்கள் என்றும், உங்களுக்குப் பிடித்ததை நான் விரும்புவேன் என்றும் கூற முடியாது.
மகிழ்ச்சிக்கு வேண்டிய மூன்று அம்சங்கள்: எதை நாம் விரும்புகிறோம், எது நம்மை சந்தோஷப்படுத்தும் என்பது எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கிறது. மகிழ்ச்சி என்பதற்கு 3 அம்சங்கள் இருத்தல் வேண்டும். 1) சந்தோஷத்தைத் தரும் பொருள்2) அதை அனுபவிக்கத் தகுந்த கருவி (புலன்)3) தகுந்த மனநிலை.

இதை ஓர் உதாரணத்துடன் பார்ப்போம். நமக்கு ஐஸ்கிரிம் பிடிக்கும். ஐஸ்கிரிம் இருக்கிறது. ஆனால், அதைச் சாப்பிட நம் தொண்டை என்னும் கரணம் நன்றாக இருக்க வேண்டும். தொண்டை நன்றாக இல்லை என்றால் நம்மால் ஐஸ்கிரிமை அனுபவிக்க முடியாது. சரி, தொண்டை நன்றாக இருக்கிறது என்றாலும் அது மட்டும் போதாது; நம் மன நிலையும் நன்றாக இருக்க வேண்டும். ஐஸ்கிரிமை கொண்டு வரும்படி சொல்லி விட்டோம். அது வருவதற்குள் செல்போனில் ஒரு செய்தி வருகிறது. நெருங்கிய உறவினரின் உடல் நிலை சீரியஸ். அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டிருக்கிறார். இப்பொழுது அந்த ஐஸ்கிரிமைச் சாப்பிடும் மனநிலை இல்லை. நண்பர்களுக்காக சாப்பிட நினைத்தாலும், அது தொண்டையில் இறங்க மறுக்கிறது. சில நேரங்களில் தொண்டை நன்றாக இருக்கிறது. மனமும் நன்றாக இருக்கிறது. ஆனால் ஐஸ்கிரிம் இல்லை, அல்லது அதை வாங்கப் பணம் இல்லை.
ஆகையால் மகிழ்ச்சி இந்த மூன்று கூறுகளைச் சார்ந்து இருக்கிறது. இந்த மூன்றும் மாறிக்கொண்டேயிருப்பதால், மூன்றும் ஒன்றாக அமைவது கடினமாகிறது. ஆகையால் மகிழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புகள் சில நேரங்களில்தான் அமைகின்றன. விஷயங்களும் கரணங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனமோ ஒரு குரங்கு. ‘மூட் (mood)’ எப்பொழுது மாறும் என்று நம்மாலேயே சொல்ல முடியாது. மேலும், இப்பொழுது மிகப் பிடித்த விஷயமே சில நாட்கள் கழித்துச் சலிப்பைத் தர ஆரம்பித்து விடுகிறது. ஆகவே இன்பமும் பொருளைப் போலவே நிறைவையும் திருப்தியையும் தருவதில்லை என்று தெரிகிறது. ஆனாலும் இவற்றைத் தேடி அலைகிறோம். நம்முடைய ஆராய்ச்சியோ இதற்கு மாறானதைக் காட்டுகிறது. பொருளைத் தேடுவதில் நஷ்டமும், கவலையும் வருகின்றன. இன்பம் கிடைத்தாலும் வெகு சீக்கிரம் நம் கையை விட்டு நழுவி விடுகிறது.

பொருள் இன்பம் இவற்றில் உண்மையைக் காண்பதே வைராக்யம். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளும்போது, நம்மிடம் தானாகவே ஒரு வைராக்யம் தோன்றுகிறது. இது ஆசைகளை வலிய அடக்குவதால் வருவதல்ல. மாறாக, பொருள், இன்பம் என்பவற்றின் தன்மையைப் புரிந்து கொள்வதால், ஆசைகளின் பிடியிலிருந்து விலகுவதாகும். நாம் அடிப்படையில் தேடும் பூரணத்வம், நீடித்த பாதுகாப்பு என்பவற்றைப் பொருளும் இன்பமும் ஒருக்காலமும் தராது; என்பதை நன்கு அறிந்தால் தான் வைராக்யம் வரும். பொருட்கள் உலகில் அவசியம் தான். இதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவை நம் அடிப்படைத் தேடுதல்களைப் பூர்த்தி செய்யப் போவதில்லை என்று அறிவதே விஷயங்களை உள்ளவாறு அறிதலாகும்.

நம்முடைய பாதுகாப்பு, நிறைவு, திருப்தி என்பவை பொருட்களையும் இன்பங்களையும் சார்ந்து இல்லை என்ற உண்மையை நாம் காணும்போது, அவற்றிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்காமல் அவற்றை நாம் அன்றாட விவகாரத்திற்கு வேண்டிய பொருட்களாக மட்டுமே காண்கிறோம். அப்பொழுது பணத்தைப் பணமாகக் காண்கிறோம். பாதுகாப்புக்கான காப்புறுதியாக அல்ல! வீட்டை வீடாகப் பார்க்கிறோம், நம் இன்பத்தின் காரணமாக அல்ல! நிலத்தை நிலமாகப் பாக்கிறோம். நம் IMAGE-ன் விரிவாக அல்ல.
பொருட்கள் மீது நம் சொந்த மதிப்பீடுகளை ஏற்றி வைக்காமல், அவற்றை அவைகளாகப் பார்ப்பது தான் பாரபட்சமின்றிப் பார்த்தல் அல்லது ழடிதநஉவiஎவைல ஆகும். இது தான் வைராக்யம். வைராக்யம் என்பது ஆத்ம ஞானத்திற்கு மிகவும் அவசியமான பண்பு. ஆகையால் அதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக வைராக்கியத்தைப் பற்றி எழுதப்பட்ட பல விளக்கங்கள் குழம்பும்படியாக இருக்கின்றன.

வைராக்யம் என்பது ஓர் அறிவுபூர்வமான மனோபாவமே அன்றி பல்லைக் கடித்துக் கொண்டு ஆசைகளை அடக்குவது அல்ல. இங்கு நாம் ஒரு பொருளை விரும்பும்போது அதை ஏன் விரும்புகிறோம், அதனால் எனக்கு என்ன பயன், அது நீடித்த பயனைக் கொடுக்குமா என்றெல்லாம் விசாரம் செய்கிறோம். அப்பொழுது பொருட்கள் அவை உள்ளவாறே நமக்குத் தோற்றமளிக்கின்றன. அப்பொழுது அந்தப் பொருட்களை நம்விருப்பு, வெறுப்புகள், அதனால் நாம் அவற்றின் மீது ஏற்றி வைக்கும் போலியான மதிப்பீடுகள் (superimposition) என்பவற்றின் சிக்கல்களிலிருந்து விடுவிக்கிறோம்.

ஒரு சாதாரணப் பொருளின் மீது அதில் இல்லாத, நம்முடைய சொந்த மதிப்பீடுகளை ஏற்றி வைப்பதன் மூலம் அந்தப் பொருளை ஒரு விசேஷ சிம்மாசனத்தில் ஏற்றி வைக்கிறோம். இருப்பது என்னவோ வீட்டைக் கூட்டிப் பெருக்க உதவும் ஒரு தும்புதடி அல்லது துடைப்பம். அதற்கு நம்முடைய சொந்த மதிப்பீடு என்னும் பட்டுக் குஞ்சங்களைப் பொருத்துகிறோம். பின்னர் அதை விசேஷமாக்கி நம் சந்தோஷத்தை அதில் காண நினைக்கிறோம். எந்தப் பொருளும் நம்மை பந்தத்தில் ஆழ்த்துவதில்லை. எந்த வீடும் நம்மைப் பிடித்துக்கொண்டிருப்பதில்லை!

நாம் தான் நமக்கு வேண்டியது அதில் கிடைக்காது என்று அறிந்தும், அதற்கு விசேஷ மதிப்பீடு கொடுப்பதன் மூலம் அதைப் பிடித்துக்கொண்டு இருக்கிறோம். அப்புறம் வீடுநம்மைப் பிடித்துக் கொண்டிருப்பதாக உணர்கிறோம். அவை நம்மைப் பந்தப்படுத்துவதற்கு வேண்டிய கைப்பிடியை நாம் தான் அதற்கு அளிக்கிறோம்.

இதை நாம் புரிந்து கொள்ளும்போது பந்தம், பற்று விலகி விடுகிறது. இது தான் புலன் விஷயங்களில் வைராக்யமாக இருப்பதாகும். மனத்தை அறிவின் ஆளுகைக்குட்படுத்திபுலன்களின் தந்திரமான செய்தியை மறுக்க வைக்கும் முயற்சியே வைராக்யம் ஆகும். எங்கு விவேகம் இல்லையோ அங்கு வைராக்யம் தோன்றாது. புலனடக்கத்தை உருவாக்குவதற்கு முதல், புலன்களை அடக்கும் மனத்திற்கு ஒரு புதிய லட்சியத்தையும் அந்த லட்சியத்தைச் சுட்டிக்காட்டும் அறிவையும், ஒரு சாதகன் பெற முயல்வது அவசியமானதும் நியாயமானதும் ஆகும். அறிவை வளர்ப்போம்! ஆத்மானந்தம் பெறுவோம்!

1 thought on “அகவாழ்க்கையை ஒழுங்கமைப்பது எப்படி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *