விண் என்பது என்ன?

மனிதனின் பிறப்பின் நோக்கமே ஆன்மாவை அடைவது தான் என்றால் பலருக்கு விளங்காது. சிலர் நகைக்கவும் செய்வர். பாவம் அவர்கள்! சிலருக்கு உண்மை என்று தெரிந்தால் கூட அது உடனே ஒத்துவராத ஒரு மயக்கமாக இருக்கிறது. ஒரு சிலருக்குப் புலன்வழி மாத்திரம் தெரியும் மற்ற சிந்தனை ஆராய்ச்சி இல்லை. அவர்களுக்கு விளங்காது. ஆனால் எல்லோருக்குமே காலத்தால் விளங்கிவிடும் என்பது நிச்சயம்.

ஒரு மாம்பழத்தை எடுத்துக ; கொள்வோம். பழம் கண் பார்வையிலே மாம்பழம் என்ற பெயரைக் காட்டி இதுவரை நமக்குத் தெரிவித்திருக்கின்றார்கள். அதனால் மாம்பழம் என்று சொல்கிறோம். இது புலன் அளவிலே பார்க்கின்றபோது ஒரு தோற்றத்திற்குரிய பொருளாக இருக்கிறது. புலனைக் கடந்து விஞ்ஞான அறிவுக்குப் போக வேண்டும். ‘விஞ்ஞானம்’ என்றால் என்ன? எத்தனையோ பொருட்களை நாம் பார்க்கிறோம். சூரியன், சந்திரன், மலை, கடல், தெரியாத அந்த ஒவ்வொரு தோற்றத்தையும் பிரித்துக்கொண்டே போனால் காட்சியில் எல்லாமே ‘விண்’ என்ற ஆகாசத்தினுடைய கூட்டு அல்லது கூட்டமேயாகும்.

எந்தத் தோற்றமானாலும், எந்தப் பொருளானாலும் அதைப் பிரித்துப் பார்ப்போமானால் கடைசியில் நிற்பது நுண்துகள்களாக உள்ள ‘விண்’. அந்த விண் என்பதை உணர்ந்துகொண்டோமானால் அது தான் ‘சிவம்’ என்ற பூரணம். அந்தப் பூரணமே தன்னைத் துண்டு படுத்திக்கொண்டு “சக்தி”யாக, இயக்கமாக வந்தது. அந்தச் சக்தி பரமாணு, ஆகாசம், Ether என்றும் குறிப்பிடப்படுகிறது. இதை மாத்திரம் மனதில் கொண்டு இந்தத் தோற்றங்களைப் பார்ப்போமேயானால் அதனுடைய கூட்டுதான் அனைத்தும் என்பது விளங்கும். அதாவது பௌதீகப் பிரிவு என்று பார்த்தால் முதலில் விண் தான். அந்த விண் சிறிது கூடும்போது காற்று, அதற்கு மேல் இன்னும் சற்று அழுத்தமாகக் கூடும்போது நெருப்பு. நெருப்பு, காற்று இரண்டுமே காற்றுதான். இது அழுத்தக்காற்று. அது லேசான காற்று, அவ்வளவுதான், இந்த இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டால் அது நீர், அதற்கு மேல் இன்னும் நெருங்கிக் கெட்டியானால் மண். இந்த ஐந்து பூதங்களாக உள்ளது விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய எல்லாமே விண்ணினுடைய கூட்டுத்தான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

விண் என்பது மூலக்கூறு. நாம் பிரபஞ்சத்தில் பார்க்கக்கூடிய எல்லாமே விண் என்பது தான். ஆனால் கூட்டாய்ப் பார்க்கிறோம். சூரியனைப் பார்க்கின்றோம். பெரிதாக இருக்கிறது. ஆனால் விண்ணறிவுக்குச் சூரியன் பரமாணுக்கள் பல சேர்ந்த ஒரு கூட்டுதான். – இது விஞ்ஞானம். அதாவது ‘விண்ஞானம்’ – விண்ணறிந்த ஞானம். விண் என்ற பரமாணுவின் நுண்ணிய இயக்கத்தை, அறிந்த அறிவு விஞ்ஞானம். அந்த விண்ணை அறிந்தவர்கள், அந்த நிலையிலே உலகத்தைப் பார்க்கக் கூடியவர்கள். அந்த நிலையிலே தன்னைப் பார்க்கக்கூடியவர்கள் இந்த உடலுக்குள்ளாக இயங்கிக் கொண்டிருப்பது விண் என்ற ”சித்தாகாசம்” என்ற உயிர் என்று சொல்லி வருகிறார்கள். அப்போது அந்த அறிவு பெற்றவர்களை ‘விண்ணவர்’ என்று சொல்வது மரபு. ‘ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்’ என்று சொன்னால் ஞானிகள் ஓட்டுக்கும் பொன்னுக்கும் ஒரே மதிப்பு தான் அளிப்பார்கள் என்பது. ஓடு பல விண்துகள்கள் நிறைந்த கூட்டு, பொன்னும் பல விண்துகள்கள் நிறைந்த கூட்டு. இந்த இரண்டிற்கும் வித்யாசமில்லை. தோற்றத்தில் தான் வித்யாசம். எல்லாமே அணுக்களுடைய கூட்டம்தான். இது விஞ்ஞான அறிவு.

அந்த விஞ்ஞான அறிவோடு இந்த மாம்பழத்தைப் பார்ப்போம். கண்ணால் பார்க்கும்போது பழமாகத் தெரிகிறது. விண்ணறிவுக்குப் போகும்போது இது பல கோடி விண் துகள்கள் நிறைந்த ஒரு கூட்டு “பழம்”; என்ற காட்சியாக இருக்கிறது. இப்பழத்தில் கோடிக் கணக்கான விண்துகள்கள் சேர்ந்து இருப்பதையும், அவை எல்லாம் ஒன்;றோடு ஒன்று சேர்ந்துகொண்டு “மாம்பழம்” என்ற ஒரு நாடகம் நடத்திக் கொண்டு உள்ளதையும் உணர்கிறோம். இதுதான் விண்ணறிவு. இந்த அறிவோடு உலகத்தைப் பார்ப்போம். பிரபஞ்சத்தைப் பார்ப்போம், மனிதனைப் பார்ப்போம், மரத்தைப் பார்ப்போம். எல்லாமே விண் அன்றி யாதும் இல்லை.

இந்த விண் என்பது எங்கு தோன்றி வந்திருக்கிறது என ஆராயும்போது அங்கு தான் தத்துவ ஞானம் (இருப்பு நிலை) மெய்ஞானம் வருகிறது. புலன் வழியே பார்த்து இத்தோற்றத்தை வைத்துக்கொண்டே யாரோ இதுவரை சொல்லிக் கொடுத்தார்கள், ‘மாம்பழம்’ என்று. நானும் அதையே மனதில் கொண்டு அதை மாம்பழம் என்று சொல்லி வருகிறேன். இது உண்மையான அறிவல்ல. ஏனென்றால் இதைப் பொருள் என்று கூறுகிறோம். ஆனால் இது பொருளல்ல. பல கோடி அணுக்கள் கூடி இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம். இந்நிகழ்ச்சியே பொருள் என்று நினைப்பது மயக்கம் அல்லது மாயை என்று சொல்லுகிறோம். இது அஞ்ஞானம்.

மாறாக விண்ணறிவுக்கு வந்தபோது, விஞ்ஞானத்திற்கு வந்தபோது இதுவே பல கோடி அணுக்கள் இணைந்து இந்தக் காட்சியிலே இருக்கிறது என்று அறிகிறோம். அந்த விண் என்பது என்ன என்று பார்க்கும்போது விரைவாக தற்சுழலோடு சுற்றிக்கொண்டே இருக்கக்கூடிய ஒரு நுண்ணிய துகள், அது தான் விண், அது எங்கிருந்து எப்படி வந்தது என்றால், பரம்பொருள் என்று சொல்லக்கூடிய, மனதுக்கு ஒன்றுமே இல்லை என்று விளங்கக்கூடிய சுத்த வெளி. அதனுடைய உள்ளடங்கிய ஆற்றலால் தன்னையே உடைத்துக்கொண்டு தானே நுண்ணிய இயக்கமாக வந்தது எதுவோ அது தான் விண்; அது தான் சக்தி.

இப்போது விண் என்பது என்ன? இறைநிலையே. இறைவனே பின்னப்பட்டு, எழுச்சி பெற்று, இயக்கத்திற்கு வந்த நிலை. அந்த பின்ன நிலையிலே (in that fractional state) ஆதியும் இருக்கிறது: இந்த விண்ணும் இருக்கிறது. நிலையாக இருக்கக் கூடிய பிரம்மம் அல்லது சிவம், பூரணம். மெய்ப்பொருள், தெய்வம் என்று சொல்லக்கூடிய ஒரு பொருள் கண்ணுக்கு, மனதுக்கு சுத்த வெளியாகக் காட்சியளிக்கிறது. ஆனால், அதிலிருந்து தோன்றி இயங்கி கொண்டிருக்கக்கூடிய அசைவு, கடலிலே அலை போன்றது விண். அப்போது விண் என்பது இயக்கநிலையிலேயே உள்ளது. அந்த இயக்கத்தை நிறுத்திவிட்டால் அந்த விண் என்பதன் தன்மை என்ன என்று பார்த்தால், அலையை நிறுத்திவிட்டால் அலையினுடைய தன்மை என்ன? – கடல், அதே போல் விண்ணுடைய இயக்கத்தை நிறுத்திவிட்டால் அதன் தன்மை என்ன? பூரணம், தெய்வம், சிவம், அப்போது சக்தி என்பதன் இயக்கத்தை நிறுத்தி விட்டால் சிவம். சிவம் என்பது இயங்கும் பொழுது சக்தி.

அதாவது இயங்கும் சிவன் தான் சக்தி. இது தான் தத்துவ ஞானம், மெய்ஞானம். ஏன் இதை மெய் என்று சொல்கிறோம் என்றால், இப்போது அந்தப் பழத்தைப் பார்த்தோம். அதைப் பொருள் என்று சொல்கிறோம் ஆனால் இது பொருளா அல்லது நிகழ்ச்சியா என்றால் பொருள் அல்ல, நிகழ்ச்சிதான். ஏனென்றால் பல கோடி அணுக்கள் கூடி மாம்பழம் என்ற காட்சியாக அது இருக்கின்றது. காட்சி பொருளாகாது; காட்சி நிகழ்ச்சிதான். அந்தக் காட்சிக்கு எது காரணமாக இருக்கிறது? அணுக்கள்.

இப்போது அந்த அணுக்கள் பொருளா என்று பார்ப்போம். எது இயங்கிக் கொண்டே இருக்கிறதோ, எது மாறிக் கொண்டே இருக்கிறதோ அது நிகழ்ச்சி. அந்த மாற்றத்தையோ, இயக்கத்தையோ கழித்து விட்டால், எது நிலையாக நிகழ்கிறதோ அதுதான் பொருள். அப்போது இயங்கிக் கொண்டே இருப்பது தான் அணு. அதை நிறுத்திவிட்டோம் என்றால் அது சிவம்; அது தான் பூரணம்.

நிகழ்ச்சியின்போது அணு; நின்றுவிட்டால் பொருள், சிவம், பூரணம், பொருள் என்ற நிலையிலேயே சிவமாக இருக்கிறது. முன்பு மொழி வழக்கிலே தோற்றம் எல்லாம் ‘பொருள்’ என்றோம். இப்போது உண்மையான பொருளைக் கண்டு பிடித்தாயிற்று. அதற்கு ‘மெய்ப்பொருள்’ என்று பெயர் சூட்டப்பட்டது. அது தான் மெய் (Truth) என்று சொல்வது. ஆக மெய்ப்பொருளாக இருப்பது சிவம். அதனுடைய அசைவாக இருப்பது பரமாணு, அதனுடைய கூட்டமாக இருப்பது தோற்றம்.
அறிவே சிவம். சிவமே அறிவு. மறுபடியும் இந்த மாம்பழத்தை எடுத்துக்கொள்வோம். பழம் என்பது என்ன? இறைவன் என்பது என்ன? கண் மூலமாகப் பார்க்கக்கூடியது மாம்பழம். இக்காட்சி கடந்தால் விஞ்ஞான அளவுக்குப் போகும்போது அணு, அதற்கு மேல் போகும்போது மெய்ஞானம். இந்த அணு என்பதாக ஒன்றும் இல்லை. எல்லாம் வல்ல இறைவனே இயங்கு நிலையில் அணுவாக இருக்கிறான்; கூடிய நிலையிலே மாம்பழமாக இருக்கிறான். மாம்பழத்திலே இப்போது சிவனைக் காண்கிறோம்.

சிவமே, பிரம்மமே, மெய்ப்பொருளே, தெய்வமே, அசைவிலே அணுவாகி, அணுக்கள் கூட்டிலே மாம்பழமாகிக் காட்சியளிக்கிறது. இப்போது பழத்திலே நாம் இறைநிலையைக் காண்கிறோம். எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும் இந்த மூன்று உண்மைகளை ஒரே நேரத்தில் பார்க்கக்கூடிய பழக்கம் இன்றிலிருந்து ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! இறைவனே தான், அசைவிலே அணுவாகிக், கூட்டிலே காட்சியாக இருக்கிறான். இதையே “எந்தப் பொருளிலும் என்னைக் காண்பவன் எவனோ, அவனை எப்போதும் நான் நீங்குவதில்லை, அவன் என்னை விட்டு நீங்குவதில்லை” என்று கீதையில் கண்ணனும் சொல்கிறான்.

‘அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்தது எது? தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க்குயிராய்த் தழைத்ததெது மனவாக்கினில் தட்டாமல் நின்றதெது.”
– தாயுமானவர்

மனவாக்கினில் தட்டாமல் நின்றது எது? அறிவும், அவனும் ஒன்றாக இருப்பதால், எங்கு தட்டும்? இதைக்கொண்டு தான் அவனே தான் அறிவாக இருக்கிறான். சிவமே அறிவாக, பிரம்மமே அறிவாக இருக்கிறது என்ற விளக்கத்திற்கு வந்து விடுகிறோம். இதை உணர்ந்தவர்கள், அறிவே இல்லாத பொருட்கள் பிரபஞ்சத்திலே ஒன்றுமே இல்லை என உணர்ந்தார்கள். அறிவுக்கு முன்னதாக இருந்த நிலை என்ன? இயக்க நிலை. பரமாணு கூட தன்னைத் தானே சுற்றிக்கொள்ள வேண்டும். இவ்வளவுதான் அதற்;குச் சுற்றளவு என்று இருக்கிறது. எல்லாமே இந்த ஒரு அமைப்பு (pattern), துல்லியம் (precision), இயக்க ஒழுங்கு (Regularity), என்பதை உடையது தான்.

ஒன்றோடு ஒன்று சேர்ந்தால் – சேரும்பொழுது ஒரு விளைவைத் தருகிறது. அப்படி சேர்ந்தவுடன் அங்கு இருக்கக்கூடிய அறிவு உழளெஉழைரளநௌள இயக்கத்தில் வந்துவிடுகிறது. நாம் காணக்கூடிய எல்லா பொருட்களிலும் எல்லாம் வல்ல இறைவனே அணுவாகி வந்ததினால், அங்கே முற்றறிவாக இருந்த சிவமே இங்கு சிற்றறிவாக அந்தப் பொருளிலே அறிவாகத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது, இயக்க நியதி என்ற பெயரில். அதன் பிறகுக் கூட்டு சேர்ந்து ஜீவனாக வரும்போது, உணர்ச்சி உள்ளதாக இருக்கிறது. மனிதனிடம் அந்த உணர்ச்சிகள் எல்லாம் கடந்து அறிவு என்பது என்ன? நான் யார்? என்று கேட்கிறோம்.

இதுவரையிலும் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வாழ்ந்தவன், இப்படி ரசிக்கக் கூடியவனும் எண்ணக்கூடியவனுமான என்னை ஆக்கியவன் யார், என்று தன்னையே திரும்பிப் பார்க்கிறான். பாருங்கள்! இது தான் ஆறாவது அறிவு. இதுவே ‘வித்’ வேதமாகி, வேதாந்தமாகி அவனாகிறது – அவனை உணர்த்துகிறது! இதை முழுவதுமாக உபயோகப்படுத்தி அவனிடம் சேர்ந்துகொள்வதே ஆன்மீகம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *