இதுதான் சுகத்தின் தன்மை” என்று புத்திக்கு உணர்த்தியது யார்?

தமிழ்ச்சமூகம் ஆன்மீகத் தேடலைத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. தன்னையும் தனது சூழலையும் அறிவதே கல்வி எனக் கருதப்படுகிறது. சூழலை அறிந்திருந்தோN;ம தவிர தன்னை அறிய முயற்சிக்கவில்லை. ‘தன்னை’க் கவனிப்பதே ஆன்ம ஒழுங்கு ஏற்பட முதல் படி. இந்தத் ‘தான்’ என்பது என்ன? என்ற ஆய்வே மூலத்திற்கொண்டு சேர்ப்பிக்கும். இதுவே அகவிஞ்ஞானமாக மலர்வுறுகிறது.

சடப்பொருளான உடலில் இருந்தாலும் சூட்சுமப் பொருளான உள்ளத்தாலேயே ‘வாழ்வு’ வாழப்படுகிறது. வாழ்க்கை என்பது உள்ளத்தில் ஏற்படும் பதிவும் எதிர்ப்பதிவுமே எனச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். தொடர்பதிவுகளை சமயம் ‘வினைகள்’ அல்லது ‘கர்மா’ எனக் குறிப்பிடுகிறது. இப்பதிவுகொண்ட உள்ளத்தின் பிரதியே மூளைச்செல்களில் பிரதிபலித்து இப்பிறப்பில் வாழ்க்கையாகக் கருதப்படுகிறது. இப்பதிவுகளை மென்பொருளான உள்ளத்தில் இருந்து அழித்து Reprogramme பண்ணலாம். அதற்குப் பெயரே ஆன்மீகச் சாதனை அல்லது ஆன்மீக வாழ்வு.

ஆன்மீகத்தைப் பாதுகாக்க அதற்குப் பூட்டிய கவசமே – உறையே – சமயம். ஆனால் சமயமோ இன்று ஆன்மீகம் வேறு, சமயம் வேறு என்று கூறும் விளங்காதவர்கள் கையில் சிக்கி வெறும் அர்த்தமற்ற சடங்குகளாக விளங்குகிறது. மனித உள்ளத்தில் அமைதி ஏற்படுத்துவதற்குப் பதிலாக அமைதியைக் குலைக்க முயல்கிறது. உலகில் சமயங்களால் ஏற்பட்ட சண்டைகளே அதிகம் என்பது வரலாறு புகட்டும் உண்மை. சிந்திக்காதவர்களுக்கு உலகமே இல்லை. கேள்வி கேட்டு தன்னையே யார் எனப் பார்ப்பது தான் சிந்தனையின் தொடக்கமாக இருக்க வேண்டும்.

இந்நிலையில் ‘தன்னடக்கம்’ (ஆத்ம விநிக்ரஹம்) என்பதை இன்று ஆய்வுக்குட்படுத்துவோம். ஆத்மா என்ற சொல், சமய நுhல்களில் பல அர்த்தங்களோடு உபயோகப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். இச்சொல்லிற்குண்டான உண்மையான பொருள் எது? அதற்கும் அதைப்பற்றி விளக்கம் அறிந்துகொள்ள முயற்சித்த ஒரு மனிதனுக்கும் என்ன உறவு? அந்த உறவு எத்தன்மை உடையதாய் இருப்பினும், அந்தத் தன்மையை ஒருவனிடத்தில் உள்ள கருவிகளில் எது அறிய முடியும்? அப்படி அறிந்து கொண்டால் அதனால் விளையும் பயன் என்ன? – என்பவற்றிற்குண்டான விளக்கங்களே சமய நுhல்களில் சாரமாக அமைந்திருக்கின்றன.

மனம் என்பது ஒரு பாத்திரம் போன்றது. அதில் தக்க வைத்துக்கொண்ட அனுபவங்களின் படிமங்களுக்கும்: எண்ணங்களுக்கும் மனமென்றே பெயர். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எல்லா அனுபவங்களும் பிறர் தந்தவை அல்ல! உலகைப் பற்றியும் தன்னைப் பற்றியும் தன் வாழ்க்கையைப் பற்றியும் வைத்துள்ள விமர்சனங்கள் யாவும் பிறரால் திணிக்கப்பட்டவை அல்ல! ஒவ்வொருவருடைய மனத்திலும் இந்த உலகை உபயோகித்து அனுபவங்களைப் பெறுவதிலும், பெற்ற அனுபவங்களைத் துணையாகக் கொண்டு, வாழ்வின் தன்மையைப் பற்றி ஒரு முடிவையோ விமர்சனத்தையோ பற்றிக் கொள்வதிலும் ஒரு தனித்தன்மை காண்கிறோம்! இந்த அனுபவங்களுக்கும் விமர்சனங்களுக்கும் துhண்டுகோலாயும், இது சரி, இது தவறு, இது ஏற்றுக்கொள்ளத்தக்கது – இது நிராகரிக்கத்தக்கது என்று, ஒரு நீதிபதியைப் போலச் செயலாற்றுவதும் மனமே. மனத்தின் நிகழ்வுகளைப் பற்றி ஆராய்ந்த முன்னோர்கள் மனத்தை மூன்று நிலைகளில் நிறுத்தி ஆராய்ந்திருக்கின்றனர்!
1. மனம் என்னும் ஞானசாதனம். இது சூட்சுமபூதங்களின் விகாரம் (மாறுபாடான தோற்றம்) ஒன்றும் நிரப்பப்படாத பாத்திரத்திற்கு ஒப்பிட்டுக் கொள்வோம்.

2. இப்பாத்திரத்தில் நிரப்பப்பட்ட சரக்குகள்! இவைகளையே தேடிக்கொண்ட ஞானம் என்றும், சுவைத்துக்கொண்ட அனுபவம் என்றும் கூறலாம். சுருக்கமாகக் கடந்த காலத்தின் கருவூலங்கள். இதற்கும் மனம் என்று தான் பெயர்.

3. நிரப்பப்பட்ட சரக்குகளில் சில தாங்கிக்கொள்ளும் பாத்திரத்திற்கு அதாவது மனதிற்கு ஒரு சுகத்தையும் புத்துணர்ச்சியையும் தந்தால் மீண்டும் அதே சரக்குகளை நிரப்பிக்கொள்ள மனத்திடையே தோன்றிய முயற்சி அல்லது துhண்டுதல். இத்துhண்டுதல்களுக்கும் மனமென்றே பெயர்.

இதுவே மனத்தின் செயல் வடிவம்! மனிதன் போராடிக்கொண்டிருப்பது நமக்குள் ஒளிந்திருக்கும் இந்தச் செயல்வீரனோடு தான். இவன் சேகரிக்க விரும்பும் பொருட்களான அனுபவத்தையும், எண்ணத்தையும் குறைக்காமல் வினியோகம் செய்து கொண்டிருந்தால் – இவன் நமக்கு நல்லவன். தன் தேவைகள் எங்கு பூர்த்தியாகவில்லையோ அங்கு இந்த மனம் உருவாக்கும் போராட்டத்திற்கே பொதுவாகக் ‘கவலை’ என்று சொல்லிவிடுகிறோம்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கையில் நம்மைக் கவலைப்படாமல் வைத்திருப்பது மனம் என்றும் அதனோடு ஒத்துழைத்து அதற்குத் தேவையானதைத் தருவது இயற்கையான கடமையென்றும் தோன்றும். இதில் இரண்டு விதமான தேவைகள் உண்டு. ஒன்று சுகம் வேண்டும்! மற்றொன்று சுகத்தைப் பெற ஒரு பொருள் வேண்டும். இவ்விரண்டில் முதல் தேவை எல்லோரிடத்திலும் காணப்படுவது, மாற்றமில்லை.
இரண்டாவதான ‘சுககாரணி’யான ஒரு பொருள் வேண்டும் என்பதில் நாம் வேறுபடுகிறோம். எது எனக்குச் சுகம் தருமோ அது உங்களுக்குத் தராது. எது உங்களுக்கு சுகம் தருமோ அது எனக்குத் தராது.

இங்குதான் நாம் சிறிது சிந்திக்க வேண்டும். தேவையின் ஒரு அம்சத்தில் நம் அனைவரையும் ஒன்றுபடுத்தியும், மற்றொரு அம்சத்தில் நம்மைப் பிரித்தும் வைப்பது இந்த மனம்தான். இந்நிலையில் மனத்தினுடைய இச்செயலுக்கு நம் முன்னோர்கள் தந்த பெயரே புத்தி என்பதாகும். ஓரே மனம் ஆற்றும் வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு பெயர்கள்!

புத்தி ஆற்றும் பிரதானமான வேலை ‘சுககாரணிகள்’ என்றழைக்கப்படும். உலகப் பொருட்களின் தன்மைகளையும், இருப்பிடத்தையும் உணர்த்தி, புலன்களைச் செயலில் இறக்கி அதைப் பெற வைப்பதே. அதனால் இந்தப் புத்தியினிடத்தில் சுகத்தின் உண்மையான சொரூபத்தையும், அதன் இருப்பிடத்தையும் காட்டிவிட்டால் ஏற்கனவே எதன் மீது பற்று வைத்திருந்ததோ அதனிடமிருந்து விலகி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொருளைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கிவிடும். சிந்தனை வலுப்பெற்றவுடன் அது செயலாக மாறும். ‘இதுதான் சுகத்தின் தன்மை’ என்று இந்த புத்திக்கு உணர்த்தியது யார்? எதனுடைய ஊடுருவல்களைத் துணையாகக் கொண்டு இந்த புத்தி, வெளி உலகத்தில் சுகத்தைத் தேடுகிறது?

இந்தக் கேள்விகளை, நம்மில் ஒருவரைப் பார்த்துக் கேட்டால் நிச்சயமாக, உலக இயல்பே பொருள் மூலம் சுகம் காண்பது தான் என்று சட்டென்று புதில் கூறிவிடுவார். ஆனால் சுகத்தின் இருப்பிடத்தைக் காண்பதே, நம் சமயக்குரவர்களின் ஆராய்ச்சிக்கு அஸ்திவாரமாக அமைந்ததால், அவர்கள் தரும் பதில் வேறு விதமாக இருக்கிறது!

அவர்கள் ஆராய்ச்சியால் விளைந்த உண்மை சாதாரண மனிதனின் ”அறிவிற்குத் துணை நிற்பது அவனிடமுள்ள அறியாமையே” – என்பதாகும். நாம் எதை அறிவின் செறிவு என்று கருதி இறுமாப்படைகிறோமோ அதை அவர்கள் அறியாமையின் விகாரம் என்கின்றனர்.

இது உண்மைதானா என்று பார்ப்போம். புத்திக்கு பொதுவான வேலை, தனக்கும் தான் விரும்பும் சுகத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதே. அந்த இடைவெளியைக் குறைப்பதன் வாயிலாகத் தானும் சுகமும் ஒன்றாக மாறி ”நான் சுகமாய் இருக்கிறேன்” என்ற நிலை கிடைக்கிறதென்பது மனித அனுபவம். இந்த ஒற்றுமைக்குத் துணையாய் இருப்பது மனமும், அதன் அனுபவங்களும். பொதுவாக அனுபவம் என்பது ஏதேனும் ஒரு பொருளைச் சார்ந்தே இருக்க வேண்டும். ”தன் உணர்வு” அல்லது ‘நான்’ என்கிற நிலை. இரண்டாவது எதனைத் துணையாகக்கொண்டு அனுபவித்தோமோ அந்தக் கருவி அல்லது கரணம் (மனம் புலன்களைப் போன்றன).
மூன்றாவது ‘அனுபவிக்கப்பட்ட பொருள்’! இதில் எது குறைந்தாலும் அனுபவம் என்பது சாத்தியமில்லை. கற்பனை அனுபவங்களுக்குக் கூட ஒரு கற்பனைப் பொருள் வேண்டும். ஆனால் காரணங்களும் கற்பனை செய்யும் கர்த்தாவும் யதார்த்தமாக இருக்க வேண்டும்.

மனிதன் தான் என்ற சுயநினைவோடும், தன்னிடத்தில் மனம் என்ற கருவி உண்டு என்ற நினைவோடும் செயலாற்றும் காலத்தையே ஜாக்ரதாஅவஸ்தா அல்லது விழிப்பு நிலை என்று அறிந்து வந்திருக்கிறோம். இதையே நாம் அன்றாட வாழ்க்கையென்றும் அழைத்துப் பழகியிருக்கிறோம். மனிதன் தன் கவனத்தைச் செலுத்துவது முற்றிலும் வாழ்க்கையின் இந்தப் பகுதிக்கே. ஆனால் வாழ்க்கை இன்னும் சில அனுபவ நிலைகளைக் கொண்டிருக்கிறது. அதுவே கனவும் உறக்கமும். கனவு என்பது விழிப்பு நிலையின் பிரதிபிம்பமாக ஏற்றுக் கொள்வோம். ஆனால் உறக்கம் இவ்விரண்டு பிரதான அனுபவ நிலைகளிலிருந்தும் மாறுபட்டது. அந்நிலையில் பொருட்களின் பரிமாணமும், பிரசன்னமும் இல்லை! கருவிகளின் செயல்களும் இல்லை. விழிப்புலகில் செயலாற்றிய கர்த்தாவும் இல்லை. இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது தான் நாம் தேடும் சுகம்! விழிப்புலகில் செயலாற்றிய எந்தப் பொருட்களின் வாயிலாக சுகத்தைத் தேடினோமோ, அந்தக் காரணிகள் இல்லை. ஆனால் சுகம் உண்டு. இதை மையமாகக்கொண்டே ஆனந்தம் என்பது ஒருவனுடைய சுயநிலை என்று சமயம் போதிக்கின்றது! இந்த உண்மையை விழித்தெழுந்ததும் புத்தி உணர வேண்டும். அப்படி உணர்ந்து, தான் பார்க்கும் பிற பொருட்கள் சுக காரணங்கள் அல்ல என்று உறுதிப்படுத்திக்கொண்டு, ஆத்ம சுகத்தில் நிலை பெற்றால் அதற்குத் தன்னடக்கம் என்று பெயர். அதாவது ‘புத்தி’ தான் பெற்ற ஞானத்தில் ஸ்திரப்பட்டு வெளியில் போவதில்லை என்பது அர்த்தம். இதையே ‘புத்திக் கட்டுப்பாடு’ என்றும் சொல்வர்.

ஆனந்தம் சுயரூபம் என்பது நேற்று பிறந்த ஞானம்! ஆனந்தம் வெளியில் உண்டு என்பது பல பிறவிகளில் நம்மிடமுள்ள தவறான கணிப்பு. இத்தவறை ஒரு மனிதன் உடனே திருத்திக்கொள்ள முடியாது. ஆகவே சுயக்கட்டுப்பாடு என்ற விழிப்புணர்ச்சி (awareness) ஒரு சாதனையாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உண்மை உணர்ந்தால் உயர் நலம் பெறலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *