மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய விரும்புவது எது?

மனித மனம், – ஏக்கங்களை நீக்க, ஆசையை நிறைவேற்றிக்கொள்ள – தனக்குத் தானே உருவாக்கிக்கொண்ட செயல்களை ”சிந்தனை” என்கிறோம். முடிவான சிந்தனையை ”ஞானம்” என்கிறோம். ஞானம் வாழ்வின் வளர்ச்சிக்கும் நீடித்த மகிழ்விற்கும் வழி செய்கிறது. மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய விரும்புவது எது? பலருக்கு இக்கேள்விக்குப் பதில் தெரியவில்லை என்பது உண்மை.

பொருள், உறவு, கருத்துக்கள் என்ற முப்பரிமாணத்துக்குள் சிந்திப்பதை விட்டு இவைகளுக்கு வெளியே சிந்தித்திருக்கிறோமா? அமைதியாக ஆழ்ந்து சிந்தித்தால் இம் மூன்றிற்குள்ளும் தானே மனித சமுதாயம் கட்டுண்டு கிடக்கிறது! – சிக்குப்பட்டுத் தடுமாறுகிறது!

துரதிர்ஷ்டவசமாக நாம், வாழ்வு – இறப்பு எனப் பகுத்துள்ளோம். இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வை ”வாழாது போய்விடுவோமோ” என்று பயப்படுகிறோம். வாழ்க்கை என்று சொல்வதை, இந்த வாழ்வு என்னவென்று நீங்கள் உண்மையில் ஆராயும்போது, கொள்கையாக இன்றி உங்கள் கண்கள், உங்கள் காதுகள், உங்கள் புலன்கள் எல்லாவற்றாலும் பார்க்கும்போது எவ்வளவு மட்டரகமாக, எவ்வளவு சிறியதாக, அற்பமானதாக, ஆழமில்லாததாக இருக்கிறது என்று நீங்கள் காண்கிறீர்கள்.

நீங்கள் ஒரு பெரிய வீட்டை, ஒரு பென்ஸ்காரை, அழகான தோட்டத்தை, நீச்சல் குளத்தை, ஒரு பெரிய பதவியை, ஒரு பட்டத்தை உடையவராக இருக்கலாம். ஆனால் மனதுக்குள் வாழ்க்கை முடிவில்லாத யுத்தமாக, ஒரு தொடர்ந்த போராட்டமாக, முரண்பாடுகளை, முரண்பட்ட ஆசைகளை, பல்வேறு தேவைகளைக் கொண்டதாக இருக்கிறது. இதைத் தான் நாம் ”வாழ்தல்” என்று கூறுகிறோம். இதனையே நாம் பற்றியிருக்கிறோம். அதற்கு ஒருமுடிவு கட்டும் எதையும் – நீங்கள் பெருமளவு உங்கள் உடலுடன் மட்டுமே ஈடுபட்டிராவிட்டால் – நாம் இறப்பு என்று கூறுகிறோம். பூதவுடல் முடிவுக்கு வருகிறது எனினும், முடிவுறுவதற்குப் பயப்படுவதால் நாம் எல்லா வகையான நம்பிக்கைகளையும் வைத்துக் கொண்டிருக்கிறோம். அவை யாவும் தப்பித்தல்கள் (Escapism)- மறுபிறப்பு உள்பட.

எது முக்கியமெனில் நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்கிறீர்கள் என்பதே! அடுத்த பிறவியில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்பதல்ல. அடுத்த கேள்வி, மனம் முற்றிலுமாகக் காலம் இல்லாமல் வாழ முடியுமா? என்பது தான். ஒருவர் கடந்தகாலம் எனும் பிரச்னையை மெய்யாகவே புரிந்துகொள்ள வேண்டும். நேற்றையதினம் என்னும் கடந்தகாலம் இன்றைய தினம் மூலம், நேற்று என்ன இருந்ததோ அதிலிருந்து நாளையை உருவமைப்பது. காலத்தின், பரிணாமத்தின் விளைவான அந்த மனம் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு இருக்க முடியுமா? அதாவது கடந்த கால ஞாபகங்களுக்கு இறப்பது. இதைத் தெரிந்திருக்கும் மனம் தான் தியானம் என்பதைச் சந்திக்க முடியும். இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் தியானம் புரிய முயற்சிப்பது சிறுபிள்ளைத்தனமான கற்பனை.

‘உண்மை’, ‘என்ன இருக்கிறது’ என்பதல்ல, ஆனால் ‘என்ன இருக்கிறது!’ என்பதைப் புரிந்துகொள்ளுதல் உண்மையின் கதவைத் திறக்கிறது. மெய்யாகவே என்ன இருக்கிறது என்பதை, நீங்கள் என்ன என்பதை உங்கள் இதயத்தால், உங்கள் மனதால், உங்கள் மூளையால், உங்கள் உணர்வுகளால் புரிந்து கொள்ளாவிட்டால், நீங்கள் உண்மை என்பதைப் புரிந்துகொள்ள இயலாது. அதற்குச் சக்தியுள்ள – ஒருநிலைப்பட்ட மனம் தேவை.

ஒருநிலைப்பட்ட மனம்:
மனம் என்னும் கருவி நம்மிடத்தில் இருப்பதால் நமக்கு மனிதர்கள் என்று பெயர்! மனத்தின் வடிவம் எண்ணங்கள்! கண், காது, மூக்கு, நாக்கு, தோல் போன்ற புலன்களின் வாயிலாக, நாம் பெற்ற பொருட்களின் சூட்சுமமான தன்மைகளை அந்தரங்கமாகத் தரித்துக் கொண்டால் அதற்கே எண்ணம் என்று பெயர்! ஒரு எண்ணத்தைத் துணையாகக் கொண்டு எண்ணற்ற எண்ணங்களை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் இந்த மனமென்னும் அந்தக்கரணத்திற்கு (உள்கருவி) இயற்கையாக உண்டு.

எண்ணங்களின் பரிணாமத்திற்கு ஒவ்வொருவருடைய கடந்தகால அனுபவங்களும், ஆசைகளும், ஏக்கங்களும், புதிதாகப் பார்த்த, கேட்ட, பொருளின் மீதுள்ள சுகம் பெறும் நம்பிக்கைகளும், எரியும் நெருப்பிற்கு எண்ணெய் போல் துணை செய்யும். நாம் வாழும் உலகம் எண்ணிக்கையில் நிச்சயித்துச் சொல்லமுடியாத அளவிற்கு அனேக பொருட்களைக் கொண்டதாயும், ஒருவன் கற்பனையில் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும், இன்னும் ஒரு புதுக் கற்பனையை உருவாக்கிக்கொள்ள வழிகாட்டுவதாயும் அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட உலகில் ஒருவனுடைய மனம், குறிப்பிட்ட ஒழுக்கத்திற்கு எளிதில் தன்னை வசமாக்கிக்கொள்ளும் என்பது பகற்கனவாக ஒரு பாமரனுக்குத் தோன்றும்! தோற்ற அளவிலான இந்தத் தோல்வி மனப்பான்மையை இயற்கையானதாக ஏற்றுக்கொண்டு, சலிப்படைவதையே தன் சுபாவமாக ஏற்றுக்கொண்டால் – அவனுக்கு ‘சம்சாரி’ என்று பெயர்!

அதற்கு மாறாக மன ஒழுக்கத்தைத் தேவையெனக் கருதி, மனம் என்னும் கருவி, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நமக்குக் கிடைத்தது: அதனிடத்தில் நாம் ஒரு உறுதியையும் ஒழுக்கத்தையும் உருவாக்குவது அவசியம் என்று உணர்ந்து, அதற்கான முயற்சிகளைத் தெளிவோடு பின்பற்றுபவனுக்குச் ‘சாதகன்’ என்று பெயர். இதுவரை நாம் கண்ட, காணப்போகும் ‘வாழ்க்கை நெறிகள்’ யாவும் சாதகனுக்கு உரியதால், நம்மை நாமே சாதகர்களாக எண்ணி, மனதின் தன்மையைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்!

எண்ணங்களின் தொடர்ச்சியான ஓட்டமே மனம் என்று கண்டோம்! இத்தொடர்ச்சியில் இயற்கையாகப் பல பொருட்கள் ஊடுருவியிருக்கும். இதனால் மனதிற்கு எந்தக் கெடுதலும் இல்லை. ஆனால் அப்படி ஊடுருவிச் செல்லும் பொருட்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துத் தான் அடைய விரும்பும் பொருட்களாக மாற்றி, அதன் தன்மைகளைத் தன் எண்ணத்தால் உயர்த்தி, அதற்கும் தனக்கும் ஒரு உறவை உருவாக்கிக்கொண்டு, அந்த உறவின் வெளியீடாக மீண்டும் அதைப்பற்றிச் சிந்தி;த்து, அதை அடைய எடுத்துக்கொள்ளும் செயல்களுக்கு மூலமாய் அமைந்த சிந்தனைகளையே, சமய இலக்கியங்கள் குறிப்பாக மனம் என்று கருதுகின்றன.

மனம் என்னும் கருவியில் எந்தக் குறையுமில்லை. அதில் புகுந்த பொருள்களின் ஆக்கிரமிப்பைN;ய பிரச்னையாகக் கருதுகிறோம்.! இந்த உண்மையை நாம் அனைவரும் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பலன் பெற்றால் நம் ஆன்மீக வெற்றிக்கு அது பெரிதும் துணை புரியும்.

நம்மில் பெரும்பாலோர், ஆன்மீக வளர்ச்சி என்ற பெயரிலும், மன அடக்கம் என்ற பெயரிலும், மனம் என்னும் ஒரு சாதாரண கருவியை, அர்த்தமற்ற சிக்கல்களுக்கு உள்ளாக்கித் தேவையற்ற விறைப்பையும், துன்பத்தையும் வலிந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்! இப்படிப்பட்ட சாதகர்களின் தோல்வியால் ஆன்மீகம் என்ற சொல்லைக் கேட்டவுடன், ஒரு வித்தைக்காரன் உடலை வளைத்துப் பழகுவதுபோல், ஒரு சாதகன் தன் மனதை வளைத்துப் பழக வேண்டுமென்றும், அப்படி வளைக்கும் வல்லமை கொண்டவர்களே, ஆன்ம உலகில் புக முடியும் என்றும் பிறர் கருதி, ஆன்ம லாபத்தை ஒரு பயத்தோடும், அதைத் துhர வைத்திருக்கும்வரை, தான் உலகோடு வைத்திருக்கும் உறவுக்கு அழிவில்லை என்றும் கருதி, வெற்றிகரமாக நழுவிக் கொண்டவர்கள் பலரை நாம் காண்கிறோம்.

மன அடக்கம் என்பது 24 மணி நேரமும் ஒரே ஒரு சிந்தனையைப் பிடித்துக் கொண்டிருப்பதல்ல. இப்படியொரு வினோதமான வெற்றியை யாரும் அடைய முயற்சித்தால் அந்த வளர்ச்சிக்குச் ‘சித்தப் பிறழ்வு’ (Insanity) என்று பெயர். மாறாக மனத்தின் தன்மையையும், அது தன் ஏற்றுக்கொள்ளும் எண்ணங்களோடு உருவாக்கிக்கொள்ளும் உறவின் தன்மையையும் சரியாகப் புரிந்துகொண்டு, எண்ணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்காமல் அவ்வெண்ணங்களால் அடைய விரும்பும் நோக்கங்களைப் ‘பல’ வற்றிலிருந்து, ‘ஒன்றாக’க் குறைத்துக்கொண்டால் அதற்கே மனக்கட்டுப்பாடு என்று பெயர். இதையே கொள்கைப்பற்று என்றும், லட்சியப் பிடிப்பு என்றும், ஒரு நிலைப்பட்ட மனம் என்றும் பலவாறாகக் கூறுகிறார்கள்.

இந்த உண்மையை இன்னும் ஆழமாகப் பார்ப்போம். சலிப்படையாமல் சிந்தித்துப் பழகுங்கள்! எண்ணங்களின் தொடர்ச்சியான ஓட்டம் – மனம்! சரி. எண்ணம் என்பது நாம் காணும் பொருட்களின் மனச் சாயல்;;: இந்தச் சாயலுக்கும் மனம் என்று பெயர். இச்சாயலை ஏற்றுக்கொள்ளும் கருவிக்கும் மனம் என்று பெயர்!

உதாரணமாக என் வாழ்க்கையில், இந்த நிமிடம்தான் முதன் முதலாக ஒரு பொருளைப் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம். இப்பொழுது நான் பார்த்த புதுப்பொருள் பற்றிய இரண்டாவது எண்ணம் என் மனதில் சாத்தியமில்லை. காரணம் இதனுடைய தன்மை என்னவென்று எனக்குத் தெரியாது. ஏனெனில் நான் இதை இன்னும் அனுபவத்திற்குரிய பொருளாக மாற்றவில்லை! இதனால்; ‘ஞாபகசக்தி’ என்னும் எண்ணச் சுரங்கத்திலிருந்து இதற்குத் துணையாக ஒரு எண்ணத்தை உருவி, பார்த்த பொருளை இரண்டு எண்ணங்களாலோ, இரண்டிற்கு மேற்பட்ட எண்ணங்களாலோ சுற்றிச் சுற்றி வரச்செய்ய முடிவதில்லை. இந்த நிலையில் என் மனம் என்னும் கருவியை இப்புதிய பொருளைப் பொறுத்த வரையில் வளர்த்துக்கொண்ட கட்டுப்பாட்டிற்கோ ஒழுக்கத்திற்கோ நான் செலவழித்த சக்தியும், காலமும் எவ்வளவு?

இப்புதிய பொருளுக்கு ‘A’ என்று பெயரிடுவோம். நான் என் நண்பரிடம் சென்று ”நண்பா, ‘A’ என்ற பொருளைப்பற்றி நான் சிந்திப்பதே இல்லை! என் மனத்தை அச்சிந்தனையிலிருந்து முற்றாகக் கட்டுப்படுத்தி விட்டேன்”. – என்று டம்பம் அடிப்பதாக வைத்துக்கொள்வோம். நண்பர் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்! பைத்தியக்கார நிலைக்கு நாம் வந்துவிட்டதாகப் பரிகசிப்பார்;. இந்த நிலைதான் இன்று பெரும்பாலான ஆன்மீகச்சந்தைகளிலே நமக்கு வினியோகமாகி வரும் மனக்கட்டுப்பாட்டு முறைகள்.

மேலே சொன்ன உதாரணத்திலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை: மனக்கட்டுப்பாடு அல்லது ஸ்திரபுத்தி என்பது, ஒரே ஒரு பொருளை ஒரே எண்ணத்தால் சிறைப்படுத்தி, ஒரு நாள் முழுவதும் அதே எண்ணத்தில் லயித்து விடுவது என்பது அல்ல. மாறாக மனம் யாருடைய துhண்டுதலும் இன்றி, தன் கடந்த கால அனுபவங்களிலோ அல்லது பழக்கத்திலோ, ஒரு பொருளையும் அதனால் விளைந்த சுகத்தையும் மீண்டும் அசைபோட ஆரம்பித்து அந்த அந்தரங்க அசைவுகளை எண்ணச் சிதறல்களாக வெளிக்காட்டிக் கொண்டிருந்தாலும், அல்லது பெற்ற ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை மீண்டும் வலுப்படுத்த, விரிவுபடுத்த சிந்தனைகளை உமிழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த அசைபோடும் நிலையில் இருந்து மனதை விடுவிக்க வேண்டும். உலகில் நாம் பெறும் பொருட்களோ, அனுபவமோ ஆத்மா என்ற மெய்ப்பொருளின் துணையில்லாமல் இருப்பதில்லை.

ஒரு பொருளைப் பார்க்கவும் அனுபவிக்கவும் சித்ரூபமாகிய ஆத்ம தத்வம் இல்லாவிட்டால் இயலாது – என்ற உண்மையை விசாரபலத்தால் மீண்டும் மீண்டும் ஸ்திரப்படுத்தி, ஆத்ம ஸ்வரூபத்தை தன் ஸ்வரூபமாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பிற பொருட்களின் மீது பழக்கதோஷத்தால் வைத்திருந்த பற்றுதல்களிலிருந்து மனம் பெறும் விடுதலையே, உண்மையான மன ஒழுக்கம் அல்லது ஸ்திரபுத்தி ஆகும்.

இந்த விடுதலை நிலையானதாக இருந்தால், அவனுக்குச் ‘சித்தன்’ என்று பெயர். இன்னும் முயற்சிக்கும் நிலையில் இருந்தால் அவனுக்குச் ‘சாதகன்’ என்று பெயர். எது சித்தனின் லட்சணமோ, அது சாதகனுக்கு லட்சியம்! எது விடுதலையின் குறியோ, அது விடுதலை விரும்பிக்குக் குறிக்கோள். சித்தன் பெற்ற தெளிவும் விடுதலையும் எதுவென்று தெரியாமல், ஒருவன் சாதனையில் இறங்கினால் அது வேதனையாகவே முடியும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *