விடுதலையை நோக்கி

அண்மையில் உளவியலாளர்களால் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சியில், பலர் வறியவர்களாக இருப்பதற்கு மூல காரணம் அவர்களது முன்னோர்களின் மனப்பதிவில் பணம் என்பது பாவத்தைச் சம்பாதிக்கக்கூடிய ஒரு சாதனம் என்கிற எண்ணம் இருந்தது தான் என்ற உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணத்தாசை என்பது பாவ வழியில் நம்மைச் செலுத்தக்கூடியது என்றும், பணம் ஒர் ஆட்கொல்லி என்றும் முன்னோர்கள் ஆழமாக எண்ணிச் செயல்பட்டதன் விளைவு தான் அவர்களது வாரிசுகளின் மனப்பதிவாக மாறி அவர்களை ஏழைகளாக ஆக்கி விட்டது என்று சொல்கிறது அந்த ஆராய்ச்சி.

நமக்குப் பிறவி ஏன் ஏற்பட்டது என்று சிந்தித்துப் பார்த்தால் கர்மாவினால் தான் பிறவி ஏற்பட்டது என்பது தெரிய வரும். கர்மா ஏன் வந்தது என்றால் ஆசையால் கிளர்ந்தெழுந்த எண்ணங்கள் கர்மாவாக மாறின. அந்த ஆசைகளோ விருப்பு வெறுப்புக்கள் சார்ந்தவை. அப்படி எழுந்த நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றி வைக்கத்தான் இறைக்கருணை அந்த ஆசைகளுக்கேற்ற உடலையும் சூழ்நிலையையும் அமைத்துத் தந்து அவற்றை அனுபவிக்கும்படி நம்மைப் பிறக்க வைத்திருக்கிறது.

இந்நிலையில் தர்மத்தை மீறிய நிலையில் அதர்மமாக நடந்தால் தான் அதிக அளவில் செல்வம் சேர்க்க முடியும் என்பது புரிந்து, அப்படி அதர்மமாகச் செயல்பட்டுப் பாவத்தைச் சம்பாதிக்கத் தேவையில்லை என்று நினைத்துத் தர்ம வழியில் பழகியவர்கள் செல்வத்தை வெறுத்து வாழ்ந்ததால் இன்று நாம் வறுமை நிலையில் வாழ நேர்ந்துவிட்டது என்று இதைச் சொல்லலாமா? அப்படி அந்தப் பூட்டன், பாட்டன் காசைப் பெரிதாகப் பொருட்படுத்தாததால் தான் இன்று நாம் கோடீஸ்வரர்களாக இல்லாமல் யோகேஸ்வரர்களாக இருக்கின்றோம்.

விடுதலையை நாடித்தான் நாம் பிறப்பெடுத்திருக்கின்றோம். விருப்பின் மறுபக்கம் வெறுப்பு. சில சமயம் வெறுப்பே விருப்பமாக மாறும். ஆனால் விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் தான் விடுதலை அடைய முடியும். அந்த விடுதலையையும் அடைய வேண்டும் என்ற ஆசை எழக்கூடாது. அப்படி ஜீவன் ஆசைப்பட்டால் அது கர்மாவாக மாறி ஆத்மாவைச் சென்றடையும். அது மீண்டும் பிறப்பெடுக்க வழி வகுக்கும். எதற்கு ஆசைப்பட்டோமோ அதை அனுபவிக்கச் செய்யும். உடனடியாக நிறைவேறாவிட்டாலும் இறைவனின் கருணை எல்லாவற்றையும் அனுபவிக்க வழி வகுத்துத் தரும்.

விடுதலையில் விருப்பம் என்பது மனித இயல்பு. வெளியில் செல்லும்போது ஒரு கண்ணியத் தோற்றத்திற்காக அல்லது மதிப்பிற்காக என்று ஏதேதோ ஆடை அணிகலன்களை அடுக்கிக்கொண்டு போனாலும் வீட்டிற்கு வந்ததும் அவற்றையெல்லாம் கழற்றி எறிந்தால் தான் அப்பாடா என்று ஒரு விடுதலை உணர்வு ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டுப் பலவிதமான குழப்பங்களுக்குப் பின் ஒரு தீர்வு ஏற்பட்டால் அப்பொழுது அதில் ஏற்படும் ஒரு விடுதலை சுகத்தை அளிப்பதாக இருக்கும்.

எண்ணமில்லாத ஒரு நிலைக்குப் போவதால் தான் அந்த சுகம் ஏற்படுகின்றது. இப்படி எந்த வித எண்ணமும் இல்லாமல் சும்மா இருப்பதுதான் ஆத்மாவோடு இருக்கின்ற நிலை. அப்படியென்றால், மனம் சமநிலையில் இருந்துகொண்டு ஆத்மாவில் இணைந்திருப்பது சுகம் என்பது தெரிகின்றதா? எதையும் அல்லது எவரையும் சாராமல் நான் மட்டும் என்று தனிமையில் தன்னோடு தானாகக் கலந்திருப்பது ஆத்ம சுகம்.

சுகத்தைத் தேடி நாம் சேர்த்துக்கொண்ட எதுவும் நமக்கு சுகத்தை அளித்திருக்கின்றனவா? என்று கேட்டுப் பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். சுகத்தைத் தரும் என்று பெற்றவை எல்லாம் பிறகு சுமையாகத்தான் மாறியிருக்கின்றன. ஆனால் ஆத்ம சுகமோ புறப்பொருள்களால் பெறப்படுவதில்லை.

நமது தாய்மொழி தமிழ் என்ற விதத்தில் தெரிந்தாலும் அதில் உள்ள பல வார்த்தைகளுக்குப் பலருக்கும் உண்மையான பொருள் தெரிவதில்லை. பாத்திரமறிந்து பிச்சையிடு என்பது ஒரு பழமொழி. பிச்சைக்காரன் வைத்திருக்கும் பாத்திரத்தைப் பார்த்துப் பிச்சை போடுவது என்பது இதன் பொருளல்ல. பார்! திறம் அறிந்து பிச்சையிடு! என்பதுதான் இதன் உண்மையான பொருள். ஒருவரைப் பார்த்து அவரது திறமையை அறிந்து அவருக்குத் தேவையானவற்றை அளிக்க வேண்டும்.

பத்தரைமாற்றுத் தங்கம் என்பது அடிக்கடி சொல்லப்படுகின்ற ஒரு வார்த்தை. இதன் உண்மையான பொருள் என்ன? சுத்தமான தங்கத்தை எடுத்து எடை போடுகின்ற பத்தர் நல்லவராய் இருந்தாலும் அவர் மனதை மாற்றிப் பல முறை அதை உரசி உரசி ஓரளவு பொன்னை எடுக்கும் ஆசையை ஏற்படுத்தி விடுகின்ற தரம் வாய்ந்த தன்மை அந்தத் தங்கத்திற்கு இருப்பதால், பத்தரின் நேர்மையை மாற்றி விடுகின்ற தன்மை கொண்ட தங்கம் என்பது தான் இத்தொடரின் உண்மையான பொருள். இப்படித் தமிழில் ஏராளமான இருபொருள் சொற்றொடர்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் புரிந்துகொள்ளத் தெரிய வேண்டும். யாரோ சொன்னார்கள், நானும் செய்கிறேன் என்ற நிலையில் வாழ்ந்தால் விடுதலையை நோக்கிப் போக முடியாது.

விடுதலைக்காக முயற்சி செய்கின்றபோது சமுதாயப் பழக்க வழக்கங்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்து உண்மையைச் சரியாகப் புரிந்துகொண்டு, சரியானதை மட்டும் செய்யப் பழக வேண்டும். நமது ஒவ்வொரு செயலிலும் நமக்குப் புரிந்துணர்வு ஏற்பட்டால், இந்த வாழ்க்கை என்னும் விளையாட்டுக்கு என்ன காரணம் என்பதும், நான் யார் என்பதும் புரிந்துவிடும்.

தியானம் என்பது கர்மாவை அழித்தல், உயிரை வளர்த்தல் என்னும் இருவழிகளில் நன்மை அளிக்கக்கூடியது. நம் உட்பதிவுகளை நாம் மாற்றம் செய்ய வேண்டும். கர்மப்பதிவுகளை இல்லாமற் செய்து ஒன்றுமில்லாத நிலைக்கு மாறினால்தான் நாம் விடுதலையை நோக்கி முன்னேற முடியும்.

உயிர், புரிந்துணர்வால் தனது கருணை வலையை விரித்தல் தான் உயிரை வளர்த்தல் என்பது. கருணை பொங்கும் உள்ளம் கடவுள் வாழும் இல்லம். ஆனால் இப்போது நாம் வைத்திருக்கும் மனப்போக்கு ஆசைவயப்பட்டது. அங்குக் கருணை பொங்க வேண்டும்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது நமக்குத் தேவைகளில் தெளிவு இருக்கிறதா என்பதைத் தான். நமக்கு எது தேவை என்று தெரிந்து அவற்றை மட்டும் வாங்குகின்ற மனப்பக்குவம் இருக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி எது தேவையோ அதை மட்டும் செய்யப் பழக வேண்டும். அப்படிச் செய்யப் பழகுகின்றபோது மனம் அமைதியாக இருக்கும்.

நாள் முழுவதும் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு எதையாவது மாற்றி மாற்றிச் செய்து கொண்டே இருந்துவிட்டுக் களைத்துப் போய்ப் பிறகு வீட்டில் இருப்பவர்களிடம் எரிந்து விழுந்து அவர்களைக் குறை சொல்கின்றபோது இருவரின் மன நிலையும் பாதிக்கப்பட்டுவிடும். இது தேவையா? அளவோடு எல்லாம் செய்து, ஓய்வும் எடுத்துக்கொண்டு அமைதியாகச் செயல்படப் பழகினால் அந்த வீட்டில் அமைதி நிலைத்திருக்கும். தியானம் செய்ய நேரமும் கிடைக்கும். செய்யும் வேலைகளை இலகுவாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் ஈடுபடுகின்ற எல்லாச் செயல்களாலும் நமது மனோ நிலை மாறும்.

இயற்கைக்குப் பின்னால் இருக்கும் இறைவுணர்விற்கும் நமக்குள் இயங்குகின்ற உயிர்ச்சக்திக்கும் நாம் நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும். நண்பனின் தோள் மீது கைபோட்டுக்கொண்டு பேசிக்கொண்டே நடப்பது ஒரு சுகம். அந்த சுகத்திற்கும் கூட நீ படைத்தவனிடம் கடன் பட்டிருக்கிறாய்! என்று கௌதம புத்தர் கூறியிருக்கிறார். இந்த உலகத்தை, அதன் அழகைக் கண்டு ரசிக்க வைத்திருப்பது கூடக் கடன்தான். நாம் இப்படி இறைவனுக்கு எல்லாவற்றிற்குமே கடன் பட்டிருக்கிறோம். நீ இதை எனக்கு அனுபவிக்கத் தந்தாயே! என்று மனநிறைவுடன் பாராட்டி ஒவ்வொன்றிற்கும் நன்றி தெரிவிக்க நாம் பழக வேண்டும்.

அதோடு, நாம் அனுபவிக்கின்ற சுகங்களையெல்லாம் குறைக்கப் பழக வேண்டும். உலக விஷயங்களைக் குறைவாகப் பாவிக்க வேண்டும். குறைவான வேலை, குறைவான உணவு, குறைவான தூக்கம், குறைவான பேச்சு என்று எல்லாவற்றின் அளவையும் குறைக்க வேண்டும். மூச்சு விடுவதைக் கூட அதன் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். மனம் ஓடாவிட்டால் மூச்சின் வேகம் குறையும். மேலும் மூளையின் சுழற்சி வேகத்தையும் குறைக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்யச் செய்யக் கடவுளிடம் நாம் பட்ட கடன் குறையும். அப்படிக் குறைப்பதால் கர்மாவும் குறைந்துகொண்டே போகும்.

படைத்தவனிடம் கூட நாம் கடன்காரனாக இருக்கக்கூடாது. அவனது உடமைகளைப் பயன்படுத்துகின்ற அளவிற்கு நம் கடன் கர்மாவாக மாறிவிடும். இதற்கு விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் நாம் இருக்கப் பழக வேண்டும். வெறுப்பும் ஆசையின் ஒரு பிரிவு தான். விருப்பு வெறுப்பு இல்லையென்றால் எண்ணங்கள் இல்லை. எண்ணங்கள் இல்லையென்றால் கர்மா இல்லை. கர்மா இல்லையென்றால் நானும் அவனும் ஒன்று. ஜீவன் தன்னை இப்படிச் சுத்தப்படுத்திவிட்டால் ஆத்ம இணைவு. ஆத்மாவில் இணைந்தால் விடுதலை நிச்சயம். தொடர்பு விளங்குகின்றதா?

இப்படித் திருப்பித் திருப்பிப் பலவிதமாகச் சொல்லச் சொல்ல மெதுவாக மனம் இதை ஏற்றுக்கொள்ளும். இதை நாம் உணர்ந்து விட்டால் மனநிலை மாற்றம் அடையும். மாற்றம் அடைந்த மனம் ஆத்மாவாக மாறிச் செயல்படும். அங்கு ஆத்ம அனுபூதி வாய்க்கும். அதோடுமட்டுமின்றி இந்த மாற்றத்தால் உடலிலுள்ள செல்கள் எல்லாம் மலர்ச்சி அடைந்து புத்துணர்ச்சி பெறுகின்றன. அதனால் இந்த உடல் பொலிவுற்றுத் திகழ்கின்றது. இந்நிலையில் உடலின் ஆயுள் அதிகரிக்கின்றது. இந்த உபதேசத்தின் விளைவு இப்போது புரிந்திருக்கும்.

உடலிலுள்ள ஒவ்வொரு செல்லின் உட்புறத்தில் இருக்கும் பாக்டீரியாவிற்கு மிச்சோன்றியா என்று பெயர். இவற்றில் ஆயுளை நீடிக்கச் செய்யும் பேக்டீரியாவிற்கு தெலியோமோரஸ் என்று பெயர். இவையெல்லாம் நமது மனம் எதை எதிரொலிக்கின்றதோ, எந்த அளவிற்கு சாந்தமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அதிகரிக்கும். மேலும் உடல் உபாதைகளை அவை தாமே சரி செய்துகொள்கின்ற ஆற்றலைப் பெறும். நோயற்ற நிலைக்கு நம் உடல் நலத்தை உயர்த்தும்.

இதை நடைமுறையில் எப்படிப் புரிந்துகொள்ளலாம் என்றால், உண்மையான சந்நியாசிகளாக வாழ்ந்த எத்தனையோ மகான்கள் தாங்க முடியாத துன்பத்தைத் தரக்கூடிய நோய்களை உடல் அனுபவித்தாலும் கூட அவர்கள் அவற்றின் உபாதைகளைப் பொருட்படுத்தாமல், சிரித்துக்கொண்டு இனிமையாக, சாதாரணமாக இருப்பார்கள். உடலுக்குத் தான் வலிக்கிறது என்று அமைதியாகச் சொல்வார்கள். நாம் வாசித்தும், கேட்டறிந்தும் இருக்கின்ற எத்தனையோ சுவாமிமார்கள் தம் இறுதிக்காலம் வரை பொலிவுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்ததை நாம் அறிவோம்.

திபெத்தில் வாழ்ந்த ஒரு புத்த பிட்சு எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பார். மற்றவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். எல்லோரும் அவரை மிகவும் விரும்புவார்கள். அவர் சாகப்போகின்ற தருணத்தில் தனது சக பிக்குகளிடம், நான் செத்து விட்டால் இந்த உடலைக் குளிப்பாட்டாமல் அப்படியே தகனம் செய்து விடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அவர்கள் அவரது இறுதி விருப்பத்தை ஏற்றுக்கொண்டு அவர் இறந்த பிறகு குளிப்பாட்டாமல் அவர் உடலை அப்படியே தகனம் செய்தனர். அந்த உடலுக்கு எரியூட்டிய சில நொடிகளில் ஏராளமான பட்டாசுகளும், ஒளி சிதறும் மத்தாப்புக்களுமாக ஒரே வெளிச்சமும் வெடிச் சத்தமும் எழுந்து, கூட்டத்தினர் மகிழ்ச்சி அடைந்து கை தட்டி ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். பிறகுதான் தெரிந்தது, அந்தப் பிக்கு தன் ஆடைகளுக்குள் பட்டாசுகளை ஒளித்து வைத்துத், தான் இறந்த பின்னும் மக்களை மகிழ்வித்திருக்கிறார் என்ற விபரம். தான் செத்துத் தகனம் செய்கின்றபோதுகூட மற்றவர் எல்லாம் சிரிக்க வேண்டும் என்னும் உயர்ந்த உள்ளம் அவருக்கு இருந்திருக்கிறது.

பிறந்தது முதல் வாழ்ந்த விதத்தை ஒரு முறையாவது நாம் ஒவ்வொன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் சில சமயம் இப்படிப்பட்ட இந்த வாழ்க்கை தேவையா என்ற எண்ணம் தான் தோன்றும். எத்தனை எத்தனை வற்புறுத்தல்கள், கட்டுப்பாடுகள், ஏமாற்றங்கள், போலித்தனமான நடவடிக்கைகள், வேண்டா வெறுப்பான செயல்கள்? நாம் வாழ்ந்ததை விட வருந்திய நேரங்கள் தான் அதிகம் இருக்கும். இதை ஆழமாகப் பார்த்தால் நமது கர்மாவிற்கு ஏற்றபடிதான் நமக்கு வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வரும். இதில் நாம் செய்த புண்ணியம் இந்துக்களாகப் பிறந்திருப்பது.

ஏனெனில் இந்து சமயத்தில் தான் அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஜீவன் விடுதலை பெறுவதற்குரிய சரியான வழியை இந்து மதம்தான் காட்டுகின்றது. எதையும் செய்யலாம், செய்யாமலும் விடலாம். வழிபாட்டு முறைகள் எல்லாம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி கடைப்பிடிக்கலாம். எந்தவித வற்புறுத்தலும், கட்டுப்பாடுகளும் இந்து மதத்தில் இல்லை.

நமது இந்து சமயத்தில் பிறந்தவர்கள் கட்டாயம் ஒரு தடவையாவது காசிக்குப் போக வேண்டும். அங்குக் கங்கை நதியில் ஸ்நானம் செய்ய வேண்டும். தமக்கு விருப்பமான ஏதாவது ஒரு காய், கனி, இலை ஆகியவற்றை விட்டுவிட்டு வரவேண்டும். அப்படி விட்டபிறகு அவற்றைப் பிறகு எப்போதுமே உணவில் எந்த விதத்திலும் சேர்க்கக்கூடாது என்பது மரபாக இருந்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?

விடுதலையை நோக்கிச் செல்கின்ற முயற்சியில் ஈடுபடும் விதத்தில் தான் இந்து தர்மம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் வாழ்க்கையை ஓரளவிற்கு அனுபவித்தபிறகு சமூகத்திலிருந்தும் ஆசையின் அடிப்படையில் அமைந்த பழக்க வழக்கங்களிலிருந்தும் சிறிது சிறிதாக விடுபட வேண்டும் என்ற விதத்தில் தான் எல்லாம் செய்யப்படுகின்றன. அதைப் பழக வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் சில நடைமுறைகள் பழக்கத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. சமூகத்தில், சாப்பாட்டில், ருசியில் என்று எல்லாவற்றையும் சிறிது சிறிதாக விட்டு விலகச் சொல்வது ஏனென்றால், உன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றாகக் குறைத்துப் பழகு. நீ மேலும் மேலும் இவற்றை அதிகரித்துக்கொண்டே போனால் அவை கர்மாவாக மாறிவிடும். இந்த உடலைப் பாதுகாப்பதற்காக என்று நீ எடுப்பவற்றைக் கூட அவனுக்கு அர்ப்பணம் என்று நினைத்து எடுக்க வேண்டும் என்று அது சொல்கின்றது.

இதன் பொருள, பற்றுக்களை ஒவ்வொன்றாக விடப்பழகி அவற்றை விட்டு விலகித் தியானம், தவம் போன்ற முயற்சிகளில் ஆத்ம சாதகர் ஈடுபட வேண்டும் என்பது தான். இப்படியெல்லாம் செய்கின்றபோது ஆசை, சுயநலம், விருப்பு, வெறுப்பு போன்ற அடிப்படைக் குண இயல்புகள் எல்லாம் தானாகவே இல்லாமற் போய்விடும்.

தமிழ், தமிழ் என்று தமிழ்மொழியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்பவர்களுக்காக இந்தத் தகவல். யுனெஸ்கோ பாரபட்சமற்ற நடுநிலையில் செய்த ஆராய்ச்சியின்படி இன்னும் 50 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் இந்தியும் வங்காள மொழியும் தவிர ஏனைய பிராந்திய மொழிகள் எல்லாமும் இல்லாமற் போய்விடும். இந்தி மொழி கிராமப்புறங்களில் மிக ஆழமாக வேரூன்றி இருப்பதாலும், கிராமப்புறங்களில் ஆங்கிலம் பரவாததாலும், வங்காளிகள் அறிவு ஜீவிகளாக, ஆங்கிலம் தெரிந்தாலும் தம் தாய்மொழியில் தான் பேசுவது என்றிருப்பதாலும் இவ்விரு மொழிகள் தான் நிலைத்திருக்கும் என்றும், மற்ற எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலக்கல்வி புகுந்துவிட்டபடியால் அம்மொழிகள் அழியும் என்றும் அது கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டிலும், மலேசியாவிலும், கனடாவிலும் இந்தத் தலைமுறைவரை தான் தமிழ் மொழியின் உயர்வும், சிறப்பும் தெரிந்திருக்கும். தமிழ் நாட்டில் இப்போதே ஆங்கிலக் கல்விதான் பயிற்றப்படுகின்றது. எமக்கு அடுத்த தலைமுறையினர் தமிழின் இலக்கிய உயர்வுபற்றி அறியாமல் சாதாரணமாகப் பொருள் புரிந்தும் புரியாமலும் தமிழைப் பேசுவார்கள். அதற்குப் பிறகு தமிழ்மொழி கொண்டு செல்லப்படாது. அவர்களுக்கெல்லாம் ஆங்கிலம் தான் தெரியும். சிங்களமும் அப்படித்தான். ஏனெனில் இலங்கையிலும் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமுறை புகுந்துவிட்டது. எனவே இன்னும் 50 ஆண்டுகளில் உலகமெங்கும் ஒரே மொழி என்ற நிலை ஏற்படலாம். தகவல் தொடர்புச் சாதனங்களால் உலகம் சுருங்கி இருப்பதைப் போல மொழியாலும் நெருங்கினால் நல்லது தானே!

இன்று உலகம் முழுவதுமே ஏதோ ஒரு விதத்தில் பாதிப்புக்கு உட்பட்ட விதத்தில் தான் நின்று தடுமாறிக்கொண்டிருக்கிறது. சில நாடுகளில் தீவிர வாதம், சில நாடுகளில் பெரு வௌளம், சில நாடுகளில் வறட்சியும், பட்டினியும். சில நாடுகளில் பொருளாதாரச் சீர்குலைவு, சில நாடுகளில் பூகம்பம், சில நாடுகளில் மத, இனவாத வன்முறைப் போராட்டங்கள், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத நிலை அதிகரிப்பு என்று ஏதேதோ அழிவிற்குரிய செயல்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கனடா கடைசியாகத்தான் பாதிப்பு அடைய நேரும். ஏனெனில் கனடா உலக நாடுகளில் இப்போது செல்வ வளம் கொண்ட ஒரு நாடு. ஏதோ ஒரு தார்மீகப் போக்கு இந்த மண்ணில் பிறந்தவர்களிடம் இருக்கின்றது. இங்கு வாழ்கின்ற எந்த இனத்திற்குத் துன்பம் ஏற்பட்டாலும் இவர்கள் பேதம் பார்க்காமல் அந்தத் துன்பத்தில் தாமும் வந்து சேர்ந்து பங்கேற்கிறார்கள். இந்தத் தார்மீக மனப்பான்மை இந்த மண்ணைக் காப்பற்றத்தான் செய்யும். இப்படிப்பட்ட இந்தச் சூழ்நிலையில் விடுதலையை நோக்கிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற நாம் நமது முயற்சிகளை மேலும் தீவிரமாக, அதிகப் பொறுப்புணர்வுடன் செய்து முக்தி அடைந்து விட வேண்டும். மீண்டும் ஒரு பிறவி என்ற நிலை ஆன்மீக சாதகர்களுக்கு இருக்கக்கூடாது.

எதிர்காலத்தில் ஒருவர் எந்த இனம் என்ற பாகுபாடும் இருக்காது. இதய அளவிற்கு உயர்ந்த உணர்வுடன், கருணையும் அன்பும் கொண்டவர்களான மனித இனம் தான் இனி வரப்போகின்ற, மாற்றமடைந்த உலக இனமாக இருக்கும். இது தான் இப்போது நிலைமை. ஓர் ஆன்மீகக் குரு இப்படிப்பட்ட உண்மைகளையெல்லாம் சாதகர்களுக்குச் சொல்லத்தான் வேண்டும்.

எதுவுமே மனித முயற்சியால் நடைபெறுவன அல்ல. சூத்திரதாரியின் விருப்பம் இப்படியெல்லாம் நடந்துகொண்டு போகிறது. இதையெல்லாம் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நாம் நம் முயற்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த உலகத்தில் அடைய இனி என்ன இருக்கிறது? நமக்குக் கிடைத்திருப்பவை எல்லாமே அழியக்கூடியவை. இந்த அழியக்கூடிய விஷயங்களில் இன்னும் ஏன் ஆசை? இப்படி சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின் மாற்றத்திற்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும். எதுவுமே நிரந்தரமில்லை என்ற எண்ணம் 24 மணி நேரமும் நம்முள் நிலைபெற்றிருக்க வேண்டும். பொருள்களின் மீது ஆசையால் மனம் ஒட்டிக்கொண்டிருப்பதால் தான் வேதனையும் துன்பமும். இதைப் புரிந்துகொண்டு விட்டால் போதும்.

நாம் நமது ஆத்ம சக்தியைப் புலன்களின் வழியே வெளியில் செலுத்தி உலக இன்பங்களைப் பெற முயற்சித்தால் தான் மனதில் ஆசைகள் எழுகின்றன. அப்படிப் புலன் வழிச் செல்லாமல் இருக்கப் பழகினால் சக்தியும் செலவழியாது, ஆசையும் இருக்காது. நம்மைச் சுகமாக இருக்க விடாததும், சுகமளிப்பவற்றைக் கூட வெறுக்கச் செய்வதும் நம் மனநிலையால் ஏற்படுபவையே தவிர, அவற்றில் ஒன்றுமில்லை. எனது உயிர்சக்தியிலிருந்து புலன்களின் வழியாக வெளிப்படுகின்ற சக்தியும், எனக்கு எதிராக இருப்பவரின் புலன்களின் வழியாக வெளிப்படுகின்ற சக்தியும் கருத்துக்களால் தான் முரண்பட்டுப் போகின்றனவே தவிர, அந்தச் சக்தியும் நமது சக்தியும் ஒன்றேதான் என்பது புரிந்துவிட்டால் பிறகு பிரச்னை எழாது. அதன் பின் நாட்டில் சிறைச்சாலைகளே இருக்காது. ஆனால் இதைப் புரிந்துகொள்பவர்கள் தான் இல்லை.

எதிராளி சொல்கின்ற குற்றம் குறைகளை உள்ளத்தில் ஏற்றி வைத்துக்கொண்டு அதைப்பற்றியே பலவிதமாக யோசித்து யோசித்துப் பகைமையை வளர்த்துக்கொள்ளாமல் அவற்றை வந்த வேகத்திலேயே திருப்பி அடித்து விட வேண்டும். உள் வாங்கக் கூடாது. அப்படி வாழ்ந்தால் அவனுக்கு அமைதி. ஆனால் முதலில் சமூகம் அவனை சூடு சுரணையற்றவன், மான ரோஷம் இல்லாதவன் என்றெல்லாம் சொல்லும். இந்த வார்த்தைகள் எல்லாம் பிழையான விமர்சனங்கள். மானம் ரோஷம் உள்ளவன் என்றால் எதிர்த்துச் சண்டைக்கு அவர்கள் நிற்க வேண்டும், அதை நாம் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான் சமூகத்தின் எதிர்பார்ப்பு. அதுவும் ஆத்மா என்பதைப் புரிந்தவனால் சண்டை போட முடியுமா?

எனவே யார் என்ன சொன்னாலும் அதை உள்வாங்காமல் அப்படியே விட்டுவிட இனிப் பழகுங்கள். உலகத்தில் எழுகின்ற பிரச்னைகள் எல்லாமே உள்வாங்குவதிலும் விளங்கிக்கொள்வதிலும் தான் தங்கியிருக்கின்றது. இது போலித்தனமான ஒன்று. ஆன்மீக சாதகர்களின் நோக்கம் விடுதலை பெற வேண்டும் என்பது. இந்நிலையில் அவர்கள் இவற்றிலெல்லாம் சென்று சிக்கிக் கொள்ளலாமா? அப்படிப் போய்ச் சிக்கிக்கொண்டால் நமக்குக் கர்மா இன்னும் மிச்சம் இருக்கிறது என்று தான் பொருள். அது நம்மைச் சம நிலையிலிருந்து தவற இப்படியெல்லாம் தூண்டுகின்றது.

சமநிலை தவறினால் சக்திச் செலவழிப்பு ஏற்படும். அதோடு மட்டுமின்றி நாம் சமநிலை தவறாமல் நின்று செயல்படுகின்றோமா என்பதைப் பிரம்மம் சோதிப்பதற்காகக் கூட இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாகும். நம்மைத் தூண்டுவது எல்லாம் நமது கர்மா என்பது இன்னும் புரியாவிட்டால், மாயை நம்மைக் கடத்திக்கொண்டு போய்ப் பிறவித்தளையில் பூட்டக் கடைசிவரை முயன்றுகொண்டே இருக்கின்ற நிலையில், நாம் அதன் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொண்டு விடுவோம். எனவே தான் அவர்களுக்குள்ளே இருக்கின்ற ஆத்ம சக்திதான் ஜீவ சக்தியாக வெளிப்பட்டு இப்படிப்பட்ட குளறுபடிகளைச் செய்துப் பிரச்னைகளாகக் கொண்டு வருகிறது, இந்த மாயைக்குள் சிக்கிக்கொள்ள நான் தயாராக இல்லை. அவர்கள் எப்படி நடந்தாலும் நான் அதை அன்பால், கருணையால் ஏற்றுக்கொள்வேன் என்று நன்றாகச் சிந்தித்துச் சரியாக நடந்துகொள்ள ஓர் ஆன்மீக சாதகனால் முடிய வேண்டும்.

இந்த நிலைதான் பகைவனுக்கு அருள்வாய்! என்னும் உயர்ந்த நிலை. விடுதலை உண்மையில் வேண்டுமென்றால் பகைவனையும் அன்பால் வெல்கின்ற மனப்பக்குவம் நம்மில் ஏற்பட வேண்டும். அடித்தாலும் அமைதி காக்கின்ற தன்மை இருந்ததால் தான், அந்த அடியை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட மனப்பக்குவம் இருந்ததால் தான் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரகம் இந்தியாவிற்கு விடுதலையை வாங்கித் தந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எதிர்ப்பையே காட்டாமல் அடிகளை வாங்கிக்கொண்டு கீழே சாய்ந்த அந்த அகிம்சைப் போராட்டம் உலகத்தையே உலுக்கிவிட்டது. இந்த அற வலிமை ஆன்மாவை உணர்ந்தவருக்குத் தான் ஏற்படும்.

ஒரு மிருகம்கூடத் தன்னைச் சீண்டியவனைத் திருப்பித் தாக்கும். அது தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயற்கை தந்திருக்கும் தற்காப்பு உணர்வு அது. அதையும் வென்று அமைதி காக்கின்ற உள்ள உணர்வு கொண்டவனைத்தான் சாது என்றும் மகாத்மா என்றும் சொல்கின்றனர். உண்மையான சீல ஒழுக்கம் கொண்ட ஒரு பிராமணன், தன்னை அடித்தவனைத் திருப்பி அடிக்க மாட்டான். பகவான் பார்த்துக்கொள்வார் என்று அடங்கி ஒதுங்கிப் போவான். வேகமும், கோபமும் ரஜோ குணத்துடன் உள்ளவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கும்.

மானம், ரோஷம் என்பதெல்லாம் ஈகோவால் ஏற்படுவது. ஈகோ மாயை. நான் என்று எழும்பி நிற்பவன் அடிவாங்கத்தான் வேண்டும். ஈகோ என்னும் மாயையை அன்பு என்ற ஒன்றினால் தான் வெல்ல முடியும். தந்தையே! இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியுங்கள்! என்றார் இயேசுநாதர். ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு! என்று பைபிள் போதிக்கிறது. இவையெல்லாம் பெருகிய அன்பின் வெளிப்பாடு. சகிப்புத் தன்மையும் பொறுமையும் ஆன்மீக சாதகர்களுக்கு இருக்க வேண்டிய அருங் குணங்கள்.

நடைமுறை வாழ்க்கையில் ஆத்மசக்தி ஒவ்வொரு எழுச்சியாக சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி நம்மை அங்கேயும் இங்கேயுமாகப் போட்டு அலைக்கழிக்கின்றது. அதற்கேற்றவாறு நாமும் அலை பாய்வதால் நமது கர்மா அதிகரிக்கின்றது. அன்றாட வாழ்க்கை நமக்குக் கர்மாவை அதிகப்படுத்துகின்ற விதத்தில் தான் அமைந்திருக்கிறது. ஒருநாள் பொழுது விடிந்ததிலிருந்து இரவு படுக்கப்போகின்ற வரை ஒரு சம்சாரிக்கு, அதிலும் ஆத்ம சாதனையில் ஈடுபட்டுக்கொண்டே குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு எத்தனை பிரச்னைகள்? எத்தனை உணர்ச்சிக் கொந்தளிப்புகள்?

ஆத்மாவோடு இணைந்து நிற்கின்ற நிலையில் இருந்துகொண்டு, உணர்ச்சி வசப்படாமல் அவற்றை எதிர்கொண்டு, அவற்றால் எந்தவிதப் பாதிப்பும் அமைந்து விடாமல் சமநிலையில் மனதை வைத்துக்கொண்டு, நிதானத்துடன் செயல்பட எவ்வளவு பக்குவம் தேவைப்படும்? இதுதான் மாயைக்கும் நமக்கும் கர்மா என்ற விதத்தில் நிகழ்கின்ற போராட்டம். நாம் ஆத்மாவை நாடிச் சென்றால் மாயை நம்மை வெளியில் நின்று இழுக்கும். உறவுகளாகவும், பொருள்களாகவும் நம் கர்மாவை அதிகப்படுத்த அது வழி வகுக்கும்.

அத்தகைய நேரங்களில் தான் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அவன் தான் நானாக இருக்கிறான். அவனுக்குள்ளாக அவனே இதையெல்லாம் செய்விக்கிறான் என்ற ஒரே பிடிப்பில் நின்றிருக்க வேண்டும். குருவின் வார்த்தைப்படி, உண்மையில் நாம் ரோஷம் கெட்ட வாழ்க்கைதான் வாழ வேண்டும். வாழ்க்கை அப்படித் தெரிந்தாலும் நமக்கு மன அமைதி இருக்கும். ஆகவே ரோஷம், மானம் போன்ற அர்த்தமற்ற சொற்றொடர்களை நீக்கிவிட்டு ஆத்மாவோடு வாழப் பழகுங்கள்.

ராகத் துவேஷங்கள் என்று சொல்லப்படுகின்ற விருப்பு வெறுப்புகளை நீக்கி வாழ்கின்ற முறைதான் இதுவரை ஆராயப்பட்டது. ஏனெனில் கர்மாவை உடைக்காமல் அல்லது அழிக்காமல் விமோசனம் கிடைக்காது. கர்மாவில் சேர்ந்து செயல்பட்டால் அதற்குப் பலன் உண்டு. ஆனால் நமக்குப் பரம்பொருளுடன் இறுக்கமான தொடர்பு ஏற்பட்டுவிட்டால் அதன்பிறகு மாயையோ கர்மாவோ, பிறர் தருகின்ற நன்மை, தீமையான செயல்களோ நம்மைத் தாக்காது.

வாழ்க்கையில் கிடைக்கின்ற எல்லாமே இறைவன் தந்தது என்ற நிலைக்கு நாம் வருகின்றபோது அது சரணாகதி நிலை. யார் எது சொன்னாலும், எதைச் செய்தாலும் அதைப் பெரிதுபடுத்தி சண்டைக்குப் போகின்ற மனநிலை இப்போது நம்மிடம் இல்லை என்று துணிந்து சொல்லமுடியுமா? இந்நிலைதான் கர்மா இல்லாத சுதந்திர நிலை. நமக்குக் கர்மச் சூழ்நிலை ஏற்பட்டால், அதில் மாட்டிக்கொள்ளாமல், இது பிரம்மத்தின் விளையாட்டு, இது எனக்கு வேண்டாம் என்று விலகிவிடத் தெரிய வேண்டும். நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் கர்மாவை உருவாக்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எது நம் மனதில் ஒரு பச்சாதாபத்தை, தன்னைப்பற்றி நினைத்து வருந்துகின்ற எண்ணத்தை உருவாக்குகின்றதோ அவையெல்லாம் கர்மாவாக இருக்கும். எது நம் மனதை அமைதிப்படுத்துகின்றதோ அது நல்ல கர்மா. எது மன சஞ்சலத்தைத் தருகின்றதோ அது கெட்ட கர்மா. ஓரளவிற்கு இதைப் பயன்படுத்தி நாம் நம்மைச் சோதித்துக் கொள்ளலாம். எதைச் செய்தாலும் அதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. அதற்கேற்பக் கர்மாவும் நம்மைச் சேர்கிறது. நம் மனம் சமநிலையில் இருந்தால், நல்லது என்று தெரிவதை மட்டும் நாம் செய்வோம். அது தெரியாத நிலையில் எதையுமே முனைந்து செய்யாமல் வருவது வரட்டும் என்று சும்மா இருந்தால், போனது போகட்டும் என்று கவலைப்படாமல் இருந்தால் அதுதான் தப்பிக்க வழி.

இப்படி சும்மா இருப்பது விதியை வெல்லக்கூடிய ஒரு தீரனால்தான் முடியும். ஏனெனில் சும்மா இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனமாய் இருப்பதோ, ஒரு செயலும் செய்யாமல், ஒருவித எண்ணமும் இல்லாமல் சும்மா இருப்பதோ இயலாத காரியம். உடலும் மனமும் புத்தியும் ஒருவனை அப்படி இருக்க விடாது. ஆத்ம சாதகர்கள் சும்மா இருப்பதை ஒரு சாதனையாகப் பழகினால் அந்த உள்ளத்தில் அப்படிப்பட்ட நிலையில் வெளி ஏற்படும். ஒன்றுமில்லாத அந்த வெளியில் தெய்வீக சக்தி பெருக்கெடுத்து நிரம்பும்.

உலகத்தில் சூன்யமான இடம் என்று ஒன்று இல்லை. எல்லா இடத்திலும் சக்தி நிரம்பியிருக்கின்றது. நம்மை நாம் வெற்றிடமாக்கினால் அந்த வெளியில் தெய்வீக சக்தி நிரம்பும். வாழ்க்கைப் போராட்டங்களை எண்ணங்களாகக் கவலைகளாகப் போட்டுப் போட்டு நம்மை நாம் வருத்திக்கொண்டிருந்தால் அது வராது. அப்படியிருந்தும் அது கருணையால் நம்மை உறக்கத்தில் ஆழ்த்தி நம்முள் எழுகின்ற எண்ணங்களையும், மனப் போராட்டங்களையும் தற்காலிகமாக இல்லாமற் செய்து நம்மை அமைதிப்படுத்திப் புதுப்பித்து விடுகின்றது. உறக்கம் அங்கு அரு மருந்தாகச் செயல்படுகின்றது. ஆனால் நாமோ அதற்கும் அனுமதிக்காமல் தூங்காமல் ஓடித்திரிகின்ற நிலையில் வாழ்கிறோம். சிந்தியுங்கள். நம் அவலநிலை நன்கு விளங்கும்.

நாம் தூங்குகின்றபோது அதன் கருணை நம்மை ஆட்சி செய்கின்றது. நாம் விழித்து எழுந்தால் நமது கர்மாவால் இயங்குகின்ற மனம் தான் நம்மை ஆட்சி செய்கின்றது என்பது விளங்குகின்றதா? ஒன்றைத் துரத்திக்கொண்டு போய் வெற்றி கொள்வது என்பது கடினமானது. இருந்த இடத்த்pலேயே பெறுகின்ற வெற்றியே சிறந்தது. ஒன்றைத்தேடிச் சென்று பெறுகின்ற மகிழ்ச்சி பிறகு போய்விடும். இருந்த இடத்திலேயே அனுபவிக்கின்ற மகிழ்ச்சி மாறாது. அந்த மகிழ்ச்சி நிறைவைத் தருவதாக நிலைத்து நிற்கும்.

ஆனந்தம் என்பது நான் இப்போது வெறுமையாக, அதனுடன் இணைந்த நிலையில் அனுபவிப்பது. நடந்தவற்றை நினைத்து மகிழ்வது ஆனந்தமல்ல. எதிர்காலத்தில் நடக்க இருப்பதை நினைத்து மகிழ்வதும் ஆனந்தமல்ல. இப்போது இந்த நிமிடத்தில் அனுபவிப்பது. பிரம்மத்திற்கு இறந்த காலம், எதிர்காலம் என்று எதுவுமில்லை. இப்போது என்பதில் மட்டும் தான் பிரம்மம் இருப்பதால் நாம் இந்த நிமிடத்தை மட்டும் அனுபவிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும். இது சரியாகப் புரிய வேண்டும்.

இப்போது நான் என்கிறபோது, நான் ஆத்மாவாக மட்டும் இருக்கிறேன். பெயர். மொழி, வகிக்கின்ற பாத்திரம், பட்டம், பதவி, ஜாதி, இனம் என்ற எவ்விதப் பிரிவினையும் இந்நிலையில் இல்லை. ஆண், பெண் என்ற பாகுபாடும் இனி இல்லை. இப்போது – என்ற நிலையில் நாம் நிலைத்திருந்தால் மாயையும் கர்மாவும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. ஏதோ ஒரு நினைவில் இருந்ததால் பிழை செய்து விட்டேன் என்று வருந்துகின்ற நிலை ஏற்படாது. கர்மாவை ஏற்றாமல் என்னில் நான் நிகழ்காலத்த்pல் இருப்பதற்காகத்தான் ஜபம், தபம், தியானம் போன்ற சாதனைகள் எல்லாம் செய்கிறோம். ஜபம் நமக்குத் தேவையில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் ஒரு ஜபத்தைத் திருப்பித் திருப்பிச் சொல்கின்றபோது அது சுட்டுகின்ற தெய்வத்தின் சக்தி எல்லா நேரங்களிலும் நம்மில் சுரக்காது. அந்த ஜபத்தை நாம் உணர்வோடு ஒன்றிச் சொல்கின்ற நிலையில் தான் அது நிகழும். மேலும் மனம் தனியாக எதையோ சிந்தித்துக்கொண்டிருக்க வாய் மட்டும் இயந்திரத்தனமான மந்திரங்களை உச்சரிப்பதால் பயனில்லை. ஜபம் வேண்டாம் என்று இங்கு சொல்வது ஆன்மீக சாதனையில் ஞானம் பெற்று உயர் உணர்வு நிலைக்குத் தம்மை உயர்த்திக்கொண்டுவிட்ட சாதகர்களுக்காக மட்டுமே.

மந்திரம் என்பது ஒலியலை. அந்த ஒலியலை என்னுள் நுழைந்து எனக்குள் பரவ வேண்டும். மந்திரங்கள் மிகக் கவனமாக அர்த்தபாவத்துடன் சொல்லப்படுகின்றபோது மந்திரங்களிலிருந்து வருகின்ற ஒலியலைகள் அப்படியே எல்லா இடங்களிலும் பரவி, அந்த அலைகள் மறைந்து ஒளியாக அவை வெளிப்படுகின்றன.

வெப்பம், வெளி, ஒளி என்று நாம் விஞ்ஞான வகுப்பில் படித்திருக்கின்றோம். ஆனால் இவற்றின் உண்மைத் தன்மையை வேதாந்தம் தான் சொல்லியிருக்கின்றது. ஒலியானது காற்றின் உதவியுடன் எங்கும் பரவி அந்த ஒலியே ஒளியாகி விடுகின்றது. அப்படி வெளிப்படுகின்ற ஒளி அசைவதால் அணுக்கள் அசைந்து ஒன்றுபட்டுப் பொருள்களாகின்றன. இதை உணர்த்தத்தான் பரமசிவனின் ஒரு கையில் உடுக்கையும், மறு கையில் நெருப்பும் வைக்கப்பட்டிருக்கிறது.

ஒலியிலிருந்து தான் ஒளி வந்தது. மந்திரங்கள் ஒலி. ஞானம் என்பது வெளிச்சம். எனவே ஞானம் பெற்றவர்களுக்கு மந்திரங்கள் தேவையில்லை. மேலும் ஒலியலை மூலம் சக்தியைக் கட்டி எழுப்புகின்றபோது சில சமயம் புறச் சக்திகள் உட்புகுந்து நம்மைக் கட்டும். அது நல்லதாகவும் இருக்கும், தீயதாகவும் அமையும். நமக்கு அவற்றைப் பிரித்து அறிகின்ற யோக வலிமை இல்லை. ஒரு கோடி தடவை மந்திரங்களைச் சொல்வதால் ஒரு சில சித்திகள், ஆற்றல்கள் நமக்கு ஏற்படும். ஆனால் அவை நமது சாதனையைத் திசைதிருப்பி விடுமே அல்லாமல் விடுதலையை நோக்கி நம்மைச் செலுத்தாது.

இதில் உள்ள முதல் ஆபத்து மந்திரச்சொற்களைச் சரியாக ஏற்ற இறக்கங்களுடன், பொருள் புரிந்து சொல்ல வேண்டும். இல்லையேல் வெறும் உச்சரிப்பாக மட்டும் தான் அது இருக்குமே தவிர அதற்குரிய பலன் வாய்க்காது. அடுத்த ஆபத்து அன்னிய சக்திகளை, எதிர்மறைச் சக்திகளை உள்ளே இழுத்துவிடும். மூன்றாவது ஜபங்களை ஒழுங்காகத் தவற விடாமல் தொடர்ந்து செய்யாவிட்டால் சாதனை தவறிவிடும். எனவே தான் குரு மந்திர சாதனை வழிமுறையைச் சாதகர்களுக்குக் காட்டித் தராமல் நேரடியாக ஞானத்தை உபதேசித்துத் தியானத்தில் ஒளியைத் தரிசிக்கின்ற பயிற்சிக்கு உட்படுத்தியிருக்கின்றார். அவர் அடிக்கடி மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

தினமும் இரண்டு வேளை தவறாமல் தியானம் செய்யுங்கள். அந்தத் தியானத்தில் எண்ணங்களை ஒதுக்கி மனம், புத்தி ஆகியவற்றை இல்லாமற் செய்து ஒளியைத் தரிசிக்கின்ற நிலைக்கு உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள். பிறகு அந்த ஒளியை உடல் முழுவதுமாகப் பரவவிட்டு ஒளிமயமாக உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள். பிறகு அந்த ஒளியுடலைப் பரவெளியில் மிதக்கவிட்டு அங்கு ஒளிவீடு கட்டுங்கள் என்ற நிலைக்குத் தான் குரு படிப்படியாக சாதகர்களை விடுதலையை நோக்கி அழைத்துச் செல்கின்றார். அந்த ஒளியுடம்பைப் பிரித்து எடுக்கத் தெரிந்தால் நிச்சயம் விடுதலை தான். ஆனால் இந்தப் பயிற்சியை மனதால் செய்பவர்களுக்கு இது இயலாது. உணர்வால் உணர்ந்து முயல்பவர்களுக்கு இதில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

சாதகர்களால் செய்யப்படுகின்ற ஆத்ம சாதனைகள் உணர்வு கலந்த நிலையில் இருக்க வேண்டும். சாதனையில் உணர்வு கலந்தால் தான் பலன் கிடைக்கும். தம்பதிகளின் உடலுறவில் உணர்வு கலப்பதால் தான் அங்குப் பிள்ளைப்பேறு வாய்க்கின்றது. இதைப் பட்டினத்தார் தமது பாடலில் குறிப்பிடுகின்றார். உணர்வு கலங்கியதால் பிள்ளைப்பேறு. இங்கு தியானத்திலோ உணர்வு ஒளிர்கின்றது. உணர்வு ஒளிர்ந்தால் படைத்தவனைப் பிடிக்க முடியும். உணர்வால் இனித் தியானம் செய்யுங்கள். உணர்வால் தியானிப்பவர்களுக்கு வேறு வழிபாடு இனித் தேவையில்லை. உணர்வு கூடப் பரம்பொருளின் விரிவாக்கம் தான். உணர்வு என்பது ஓர் ஈரப்பதம். கசிவுத் தன்மை கொண்டது. அது கருணை என்ற கசிவு. அன்பு என்ற ஈரப்பதம்.

நமது சக்தி இருக்க வேண்டிய இடத்தில் ஆடாமல் அசையாமல் அப்படியே இருந்தால் சக்தி இழப்பு ஏற்படாது. சக்திக் குவிப்புதான் தியானம். சாதாரண வாழ்க்கை சக்தி இழப்பு. ஆன்மீக வாழ்க்கை சக்தி சேமிப்பு. எமது சக்தியை நாம் தொடர்ந்து ஒன்றுகுவித்து அதை நோக்கியே செலுத்திக் கொண்டிருந்தால் அது எப்போதாவது என்னைத் தன்னுடன் இழுத்து இணைத்துக் கொண்டுவிடும். நாம் இதற்கு மிக மிக முயன்றுகொண்டே இருக்க வேண்டும். அது நம்முடன் இணைந்தால் நாம் அதுவாகி விடுகின்றோம்.

ஆனால் இதற்காக அமைக்கப்பட்டுள்ள படிமுறைகள் எல்லாமே மாற்றிப் பயன்படுத்தப்பட்டு சக்தியை வீணடிக்கச் செய்வதாகவே வாழ்க்கைப் போக்கு அமைந்திருக்கின்றது. இதை அறிந்த பின்பு கெட்ட சக்திகள் நமது சக்திக் குவிப்பை ஊடுருவ ஆன்மீக சாதகர்கள் அனுமதித்துவிடக் கூடாது. நடைமுறை வாழ்க்கையில் கீழ் நிலையில் உள்ளவர்களிடம் தொடர்பு கொள்வதைக் கூடத் தவிர்த்துவிட வேண்டும்.

சட்டென்று யாரையும் கட்டித் தழுவுவதோ, கைகுலுக்குவதோ, காலில் விழுந்து வணங்குவதோ, தீய உணர்வுகள் நிறைந்த வீடுகளில் உண்பதோ இனித் தவிர்க்கப்பட வேண்டும். குடும்ப நிர்வாகம் பெரும்பாலும் பெண்களிடம் தான் இருப்பதால் இயல்பாகவே அவர்களுக்கு சக்தி அதிகம் இருக்கும். மேலும் பெண்களிடம் தான் ஆன்மீக சக்தியும் அதிகமாக வெளிப்படும். அதுபோலவே பெண்களிடம் தான் தீய சக்தியும், எதிர்மறை எண்ணப்போக்கும் அதிகமாக இருக்கும். இவற்றையெல்லாம் நன்றாகப் புரிந்துகொண்டு எப்போதும், எந்த இடத்த்pலும் சாதகர்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த நூலின் கடைசிக் கட்டுரையாக, விடுதலையை நோக்கிச் செல்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்ற ஆன்மீக சாதகர்களுக்கு, சும்மா இரு – சொல் அற என்பது பற்றி உபதேசிக்கப்பட்டிருக்கிறது. இப்படி சும்மா இருப்பதும், எண்ணங்கள் இல்லா நிலையில் மௌனமாக, மனமும் பேசாமல் இருப்பதும் சுலபமானவை அல்ல. என்றாலும் இந்த முயற்சியில் இடைவிடாமல் ஈடுபட்டு, சாதகர்கள் விடுதலையை நோக்கிய தங்களது நகர்வில் மிக நுட்பமாக, மிகக் கவனமாக விழிப்புணர்வோடு கூடிய விதத்த்pல் தங்களைப் பிணைத்துக்கொள்ள வேண்டும். இங்கு இருப்பது நானில்லை, அவன் தான் என்னில் இருந்து இயங்குகின்றான் என்று உணர்ந்து தன்மறுப்புடன் கடமைகளைக் கருவியாக மட்டும் இருந்து செய்யப்பழகினால், அவன் அருள் மற்ற அனைத்தையும் பார்த்துக்கொள்ளும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *