உணர்ந்து தெளிதலே ஞானம்

மனிதன், படைப்பில் ஓர் அங்கம். படைப்பு அமைதியானது. அதில் வரும் வில்லங்கங்கள் எல்லாம் இடையில் வந்தவை. அமைதி மனித இயல்பு. ஆனால் அந்த அமைதியைக் கெடுத்துக்கொள்வது நாம் தான். ஆத்ம சக்தி மனமாக, புத்தியாக ஐம்புலன்களின் வழியாக வெளிப்பட்டுச் செயல்படுவது தான் வாழ்க்கை. அப்படிச் செயல்படும்போது அது ஏன் குழம்ப வேண்டும்? அந்தச் சக்தியை நாம் பொருள்களிலும் மனிதர்களிலும் செலுத்துவதால், நமக்கு அவை சுகமளிக்கும் என்று எதிர்பார்ப்பதால் அது குழம்புகிறது. பொருள்களும் உறவுகளும் மாறும் தன்மை கொண்டவை. அந்த அறிவு இல்லாததால் நாம் அவற்றைப் பற்றிக்கொண்டு அவை நாம் நினைத்தபடி தான் இருக்கும். நான் ஆசைப்பட்டபடி, விரும்பியபடி எல்லாம் என்னிடம் அவை பிரதிபலிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத் தான் தரும். நினைத்தது நடக்காது. மாறாக அவை அவற்றின் போக்குப்படி செயல்பட்டு நமக்கு அடி விழும். அப்படி விழும்போது நமக்கு விருப்பு வெறுப்பு ஏற்படும். அந்த நிலையில் நம்மில் நேர்க்குணம், எதிர்க்குணம் என உருவாகும். படைப்பின் தன்மையோ அமைதி. இப்போது படைப்பிற்கும் அதன் வாழ்வின் போக்கிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இந்த நிலையில் எதைத் திருத்த வேண்டும்? என்று ஆராய்ந்தால், நம்மைத்தான் நாம் திருத்த வேண்டும் என்பது தெரிய வரும். நம்மை நாம் எப்படித் திருத்துவது? என்பது அடுத்த கேள்வி.

அறியாமையை நீக்குவதன் மூலம்தான் நம்மை நாம் திருத்த முடியும். அறியாமை நீக்கப்பட வேண்டுமென்றால் நான் யார்? என்ற உண்மை நமக்குப் புலப்பட வேண்டும். என்னில் இருக்கின்ற ஆன்மாவை நான் என்று இந்த உடலாக எண்ணிக்கொண்டு வாழ்வதால் ஏற்பட்ட குழப்பம் தான் மனதின் இந்தச் சலனம். உண்மையில் நான் யார் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் தேடல் உள்ளவர்கள் குருவை நாடிச் செல்கின்றனர்.

படைப்பு அதிர்வுத் தன்மை கொண்டது. நாம் அந்த அதிர்வால் உருவானவர்கள். படைப்பின் இந்த அதிர்வு பூமியிலும் என்னிலும் எதிரொலிக்கும். இப்படிப்பட்ட இந்த மனிதப் படைப்பில் உண்மையைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் புத்தி என்ற கருவி வைக்கப்பட்டிருக்கின்றது. நாம் அதைத் தேவையான விதத்தில் பயன்படுத்துகிறோமா என்பது கேள்வி.

நாம் நம்மைப்பற்றி என்ன நினைத்து வைத்திருக்கிறோம் என்று ஆன்மீக அறிவின் துணை கொண்டு ஆராயுங்கள். நான் யார்? நான் ஏன் இங்கு வந்திருக்கின்றேன்? என்றும் சிந்தியுங்கள். நான் பிரம்மத்தின் ஒரு துளி பிரம்ம விருப்பத்தால் நான் இங்கு வந்திருக்கிறேன் என்றும், நான் தெய்வீகத்தின் ஒரு பகுதி எனது தெய்வீகத்தைப் பிரித்துக் காட்டுவதற்காக, என்னை வெளிப்படுத்துவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன் என்றும் நமக்குத் தெரிகிறது. அப்படியென்றால் அன்பின் வெளிப்பாடாக எமது செயல்கள் அமைதல் வேண்டும் அல்லவா?

சமூகக் கருத்துக்கள் எல்லாம் மனங்களால் ஏற்படுத்தப்பட்டவை. மனம் குறையுள்ளது. நிறைவடைந்த மனம் சமுதாயத்தில் இல்லை. அப்படி நிறைவடைந்திருந்தாலும் அது வெளிப்படாமல் அடங்கி இருக்கும். நாம் அப்படி இருக்காமல் உண்மையான அன்பு சேர்ந்த கருணையோடு நமது செயல்களைச் செய்ய வேண்டும்.அப்படிச் செயல்பட்டு நமது தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும். உள்ளும் புறமும் மாற்றம் நிகழ்கின்ற ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இந்த மாற்றத்தில் சில அழியும். சில ஆக்கம் பெறும். இதில் அழிவின் அளவு அதிகமாக இருக்கும். ஆவது குறைவாயிருக்கும். வாழ்க்கைத்தரம் இனி மாற்றமடையும். நம்மைச் சேர்ந்த உறவுகள், தொழில்கள், நடைமுறைகள் எல்லாமே மாறும். முன்பு இருந்த விவசாய சமூகம் தான் மாறிக் கைத்தொழில் மற்றும் தொழிற்துறை என வளர்ச்சி பெற்றது. பின்னர் அது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியாக மாறிற்று. இந்தத் தகவல் சேகரிப்பு நம் சுய அறிவாக மாற வேண்டும். அறிவின் அடுத்த கட்டம் தெளிந்த அறிவாக ஆதல். ஞானம் ஏற்பட்டால்தான் எல்லாவிதத்திலும் தெளிவு ஏற்படும். பிறவற்றிலிருந்து தேடித்தேடி அறிவைத் திரட்டிய நிலை போய், எதைப்பற்றி என்றாலும் நம் உள்ளிருந்தே தகவல் பெறப்படும் நிலை அது. இந்த ஞானம் தான் வெளியுலகில் தேடப்படுகின்ற வரை விஞ்ஞானமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. விண்+ஞானம் ஸ்ரீ விஞ்ஞானம். இந்த விஞ்ஞானம் என்பது வெளியை ஆராய்கின்ற அறிவு. ஆனால் விஞ்ஞானத்தால் இறுதி உண்மையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சக்தி தான் மனமாக இயங்குகிறது. சக்தியை ஒழுங்குபடுத்துவது வாழ்க்கை. மனிதர்கள் சக்தியை ஒழுங்குபடுத்தி வாழ்கிறார்களா என்றால் இல்லை என்பது தான் பதில். அவர்கள் மனதைச் சமுதாயப் போக்கில் கொண்டு சென்று அதில் எழும் உணர்ச்சிகளைத் துன்பம் என்றும் பயம் என்றும் , மகிழ்ச்சி, கவலை என்றும் வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார்கள். தம்மால் தாங்கி ஏற்கக்கூடியதை மகிழ்ச்சி என்றும், தாங்கிக் கொள்ள இயலாததைக் கவலை என்றும் சொல்கின்றனர். இது சக்திப் பிறழ்வு. இப்படி நம் சக்தி பிசகாமல் அதை ஓரிடத்தில் அமைதியுற்று நிலை நிறுத்துவதற்குத் தியானம் என்று பெயர். இந்தத் தியானத்தின் மூலமாகத்தான் எனக்குள் இருப்பதையும் இந்தப் பிரபஞ்சமாக இருப்பதையும் நாம் அறிய முடியும். ஏனெனில் நாம் அதிலிருந்து வந்தவர்கள்.

ஒன்றைப் போல் ஒன்று இருப்பதைப் புரிந்து கொள்ளாமல் மாயையாக நாம் மனைவி என்றும் மக்கள் என்றும் வெவ்வேறாகப் புரிந்துகொண்டு ஏண்டா கல்யாணம் செய்துகொண்டோம் என்றும், எனக்கு இப்படி ஒரு பிள்ளை ஏன் தான் பிறந்ததோ என்றும் புரியாமல் ஏங்கி சலித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அன்றாடச் செயல்களில் நம் அமைதியைக் குறைத்துக் கோப தாபங்களை ஏற்படுத்துகின்ற சூழ்நிலை பலமுறை ஏற்படுகின்றது. மிகப் பலர் மோசமான சூழ்நிலை பாதிப்பிற்கு உட்படுகின்ற நிலை தான் இன்று பெரும்பாலும் இருந்து வருகின்றது. சுதந்திரமாக, அமைதியாக. நம் விருப்பப்படி மெதுவாக எல்லாம் செய்துகொண்டு போகின்ற நிலை இப்போது இல்லை. எல்லோருமே நேரத்தோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடுகின்ற நிலைதான் இன்று எங்கும் காணக்கூடியதாக இருக்கின்றது. இப்படிப்பட்ட வெகு வேகமான சூழ்நிலையில் தான் ஆத்ம சாதகர்கள் தங்களை அமைதியாய் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது எவ்வளவு கடினமான சோதனை என்பது அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும். அவர்கள் அமைதியை விரும்பினாலும் உறவுகள் அதைக் குலைக்கின்ற விதத்தில் தான் செயல்படுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு முரண்பட்டு மோதுகின்ற போது அப்படிப்பட்ட சூழ்நிலையை அமைதி கெடாமல் எப்படிச் சமாளித்துக் கொண்டு போகிறோம் என்பதில் தான் சாதனையின் முதிர்ச்சி வெளிப்படும்.

நம் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்ற இத்தகைய மோசமான சூழ்நிலைகளில் தான் நாம் அதுவும் ஆத்மா, என் கர்மாவினால் தான் அது என் உறவாக வந்து என்னைப் பாடாய்ப்படுத்தி எடுக்கிறது என்ற லாஜிக்கைக் கொண்டு வந்து அந்த இறுக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டுவிட வேண்டும். இந்த முயற்சி மாயையில் சிக்காத அறிவுத் தெளிவு நிலைக்கு நம்மைக் கொண்டு சேர்க்கும்.

குடும்பச் சூழ்நிலை, கல்விச் சூழ்நிலை, பிறகு சமுதாயச் சூழ்நிலை என்று அமைந்துள்ள எல்லாமே நம்மைக் கட்டுப்படுத்தித் தான் கொடுமைப்படுத்தின என்பது மறுக்க இயலாத ஓர் உண்மை. விளையாடாதே, படி, படி என்று வீட்டில் படிப்பைப்பற்றி அளவிற்கு மீறிய அக்கறை காட்டிக் கொடுமைப் படுத்துவார்கள். நம் விருப்பப்படி எதுவுமே செய்யவிடாமல் பயங்கரக் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள்.

பள்ளிக்கூடத்திலோ கணக்கு, ஆங்கிலம், தமிழ் இலக்கணம் என்று மிக எளிதாகக் கற்பிக்கக்கூடிய பாடங்களை ஆசிரியர்கள் தமது கெடுபிடியான அணுகுமுறைகளால் பயப்படுத்தி அந்தப் பாடங்களைப் புரியாத புதிர்களாக ஆக்கி நம் மனதில் அவற்றின் பெயரைக் கேட்டாலே நடுங்கக்கூடிய பயத்தை உண்டாக்கி விட்டதுதான் அதிகம்.

இவற்றைத் தாண்டி சமுதாயத்திற்கு வந்தாலோ அவ்வளவுதான். நமது திறமைக்கும், புதிய அணுகுமுறைக்கும் வாய்ப்பே இல்லை. அரைத்த மாவை அரைப்பதுபோல் சமுதாயம் மிகக் குறுகிய கண்ணோட்டத்தில், முன்னேற விடாத ஒரு பிற்போக்கு மனப்பான்மையில் போட்ட பாதையில் தான் நாம் நடக்க வேண்டும் என்பது எழுதாத சட்டமாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அனுசரித்து அடங்கிப் போகின்றவர்கள் வாழ்ந்து போவீரே! என்ற வகையைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் பரிணாம வளர்ச்சியில் தன்னை நோக்கிச் செல்கின்ற நிலையில் வந்து பிறந்தவர்களுக்கோ வாழ்க்கை பெரும் போராட்டம். ஒவ்வொரு கட்டமும் ஒரு சவால். எதிரான நிகழ்வுகள். மேலும் இவள் அடங்காதவள், அவன் திமிர் பிடித்தவன், அது உருப்படாது போன்ற விமர்சனங்கள். இப்படிப்பட்ட மோசமான சமுதாய அமைப்பிலிருந்துதான் இப்போது விடுபட்டு இந்த ஆத்ம சாதனையில் ஈடுபட்டிருக்கின்றோம். இந்த நிலையில் சமுதாயச் சீர்கேடுகள் எவை என்னும் அறிவுத் தெளிவு ஏற்பட்டிருக்கின்றதா, இல்லையா?

இப்போது நாம் இருக்கின்ற இந்த நிலையில் இன்னும் நமது சூழ்நிலை நம்மை உணர்ச்சிக் கொந்தளிப்பிற்குத் தள்ளினால், அதற்கு நாம் ஆட்பட்டால், நமக்குத் தான் பிரஷர் ஏறும். நமது சக்தி சீரழியும். இப்படி நம்மை நாம் கடுப்பேற்றிக்கொண்டிருந்தால் நமக்கும் ஆத்மாவிற்கும் தொடர்பு ஏற்படுத்த இயலாது. இதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அறிந்தால் மட்டும் போதாது. புரிந்து கொள்ளவும் வேண்டும்.

புரிதலில் உணர்ச்சி வெளிப்படும். இந்த உணர்ச்சி என்பது அன்பிலிருந்து வெளிப்படுவது. அன்போ கருணையின் எழுச்சி. இந்த அன்பும் கருணையும் நமது சூட்சும சரீரத்தில் இருக்கின்ற உள்ளம் அல்லது இதயத்திலிருந்து தான் வெளிப்படுகின்றன.

சூட்சும உடல் நமது உடலை விட்டு மூன்று அடிகள் அளவிற்கு நம்மைச் சுற்றி இருக்கிறது. இந்த சூட்சும சரீரத்தில் தான் கிரகங்கள் சூட்சுமமாக இணைந்துகொண்டு இயங்குகின்றன. சந்திரன் மனமாகவும், சூரியன் புத்தியாகவும் நமக்குள் இருந்து செயல்படுகின்றன. ஏழு சக்கரங்களும் பஞ்சபூத சக்திகளால் தொடர்பு கொள்ளப்பட்டு சூட்சுமமாக இயங்குகின்றன. இப்படி இயற்கையும் பிரபஞ்ச சக்தியும் கண்ணுக்குத் தெரியாமல் நமககுள் இணைந்து நம்மைச் செயல்பட வைக்கின்றன. உண்மையில் சூட்சும சரீரத்தின் இயக்கத்தால் தான் இந்த உடம்பு இயங்குகின்றது. ஏனெனில் இது வெறும் ஜடம் மட்டுமே.

இந்த உடலோ அல்லது சூட்சும சரீரமோ கர்மாவால் இயங்குவதாகச் சொல்லப்பட்டாலும் அது உண்மையல்ல. தெய்வீக சக்திதான் தன்னை வெளிப்படுத்துவதற்காக இவற்றைப் பயன் படுத்திக்கொண்டிருக்கிறது. ஆத்மாவைப் பிரிந்து ஜீவன் தன்னை அறியாத நிலையில் வாழ்கின்றபோது அந்தப் பிரிவால் துயருறுகின்றது. ஆனால் அதைப் புரிந்துகொள்ளாமல் வாழ்க்கைப் போராட்டத்தால் தான் துன்பப்படுவதாக எண்ணிக்கொள்கின்றது. அந்நிலையில் ஒரு குரு தான் ஜீவனை ஆத்மாவுடன் கொண்டு இணைக்கின்ற அரும் பணியைச் செய்கின்றார்.

இந்த சூட்சுமமான விஷயத்தைத் தான் நமது சனாதன தர்மம் மிக நுட்பமாக ஆத்மாவைக் கிருஷ்ணர் என்றும் ஜீவனை ராதா என்றும் அவர்கள் இருவரையும் இணைக்கின்ற குருவை சகி என்றும் உருவகப்படுத்தி, ராதையையும் கிருஷ்ணரையும் பிரேமிகளாக அதாவது நேசிப்பவர்களாகச் சொல்லியிருக்கின்றது. அதுபோலவே ஆத்மாவை ராமன் என்றும், சீதையை ஜீவன் என்றும், பிரிந்து துயருற்ற இவர்களை ஒன்று சேர்க்கும் பணியைச் செய்கின்ற அனுமனை குரு ஸ்தானத்திலும் வைத்து ராமாயணம் விவரிக்கின்றது. இந்தப் பிணைப்பில் வெளிப்படுவது அன்பு, அன்பு, அன்புதான். இருவரும் ஒன்று சேர்ந்துவிட்ட நிலையில் அங்கு இருப்பது ஆனந்தம் மட்டுமே. இவற்றையெல்லாம் இப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்.

ராமரும், கண்ணனும் என்றுமே அழியாத அவதார பருஷர்களாக இருப்பது, ஆத்மாவாக அவர்களை உணர்வதால் தான். பரமாத்மா தான் என்னுள் ஒரு துளியாக இருக்கின்ற ஆத்மா. அந்த ஆத்மா பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்து ஜீவனாக இயங்குகின்றது. இந்நிலையில் அந்தப் பரமாத்மாவுடன் ஜீவனாகச் செயல்படுகின்ற ஆத்மாவை, நீ அவன் தான் என்பதை உணர்த்தித் தொடர்பு ஏற்படுத்தித் தருவதுதான் ஆன்மீகம். இந்த ஆன்மீகப் பணியைச் செய்பவர், நடுவில் இருந்து தொடர்பு ஏற்படுத்தித் தருபவர் குரு.

உடலெடுத்து, கல்வி பெற்று, உத்தியோகம் பார்த்து, மணம் முடித்து வாழ்வது தான் வாழ்க்கை என்று 92மூ மக்கள் எண்ணியிருக்கின்றனர். ஆனால் வாழ்க்கை அந்த அளவோடு முடிந்து விடுவதில்லை. அதன் பின் ஞானம் பெற்று ஆன்மீகவாதியாக மாறி சாதனையில் ஈடுபட்டுத் தன்னை மூலமாகிய அதனுடன் இணைக்கின்ற போதுதான் முக்தி நிலை என்னும் விடுதலை கிடைக்கும். அப்போது அந்நிலையில் பிறப்பை இல்லாமற் செய்யலாம்.

குரு சொல்வதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு புரிதலுக்கும் மூளையில் ஒரு நியுரோன் ஒளிரும். இப்படி ஒவ்வொரு புதிராகப் புரிந்துகொண்டு மூளையில் உள்ள எல்லா நியுரோன்களும் ஒளிர்கின்ற நிலை ஒளியுடல் பெற்ற நிலை. அந்நிலையை அடைந்தவர்கள் புத்தர்கள் ஆவார்கள். அதாவது புத்தியைப் பயன்படுத்துபவர்கள் புத்தர்கள்.

இப்படிப்பட்ட இந்த உண்மைகள் எல்லாம் குரு பரம்பரையாக நமது சனாதன தர்ம வழிமுறையில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. குரு தட்சிணாமூர்த்தி, வியாசர், ஆதி சங்கரர், சின்மயானந்தர் என்று தொடர்ந்து வருகின்ற இந்தப் பரம்பரையில் தற்போது ஸ்வாமி பரமாத்மானந்த ஸரஸ்வதி மூலமாக இந்த உண்மைகள் உபதேசங்களாக நமது தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தப்பட்டு வருகின்றன. இது இறை விருப்பம்.

நாம் கருணைமிக்கவராய் இருந்தால் மாயையை வெல்லலாம். அன்பால் அகிலத்தையே வெல்லலாம். இந்தக் கருணையும் அன்பும் ஆன்மீகவாதியின் லட்சணமாக இருத்தல் வேண்டும். இப்படி இருப்பவர்களைத்தான் சமுதாயம் நல்லவன் என்று சொல்லும். மனதை அமைதிப்படுத்தியவனாகத் தனது செயல்கள் தன்னைக் குழப்பாத நிலையில் செயல்படுபவனாக ஆன்மீகவாதிகள் தம்மைப் பழக்க வேண்டும்.

இந்த பூமிக்கு அனுப்பப்பட்ட அனைவருமே ஒருவகையில் மன நோயாளிகள் தான். கர்மாவைக் கழித்து மனதை சரிப்படுத்துவதற்காகத் தான் இந்தப் பூமியென்ற மருத்துவமனைக்கு நாம் அனைவரும் அனுப்பப்பட்டிருக்கின்றோம். கர்மா என்பது மனதை அலைக்கழிக்க வைப்பது என்றால் நாம் மனநோயாளிகள் தான்.

இந்தப் பித்தம் தெளிய மருந்து தருபவர் குரு. ஆனால் எத்தனை பேருக்குப் பித்தம் தெளிந்திருக்கிறது என்பது தான் கேள்வி. பித்தம் தெளிந்துவிட்டது என்றால், எண்ணங்கள் இல்லாத, மூலத்துடன் எப்போதும் இணைந்து இருக்கின்ற தன்மை நம்மில் வெளிப்பட வேண்டும். அடுத்தது அன்பின் வெளிப்பாடு. யாரோடும் கணக்குப் பார்க்காத, அளவிட முடியாத அன்பை வெளிப்படுத்துதல். மேலும் பிரச்னைகள் எத்தனை என்றாலும் அவற்றைப் பதறாமல் கையாளுகின்ற தன்மை, எந்த நேரத்திலும் இந்த உடலை விட்டு விட்டுப் புறப்படத் தயார் என்ற மனநிலை போன்றவை எல்லாம் மனநோயிலிருந்து விடுபட்டு விட்டோம் என்பதை அறிவிக்கின்ற மாற்றங்கள் ஆகும்.

இந்த அறிவை நாம் பெற்றது சாதாரண செயல் அல்ல. நாம் இதுவரை எடுத்த பிறவிகளில் தொடர்ந்து செய்துகொண்டு வந்த ஆன்மீக முயற்சிகளின் அடுத்த கட்டம், இந்தப் பிறவியில் நாம் குருவைச் சந்தித்து இந்த அறிவைத் தொடர்ந்து பெற்றுத் தெளிவடைகின்ற நிலை. இதனை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு விட வேண்டும். இது ஒன்றே நம் குறிக்கோள் என்று வைத்துக்கொண்டு மற்ற புற ஆசைகள் அவ்வளவையும் வேண்டாம் என்று விட்டு விட்டு, ஞானம் பெற்றவர்களாகப் பெற்ற ஞானத்தைப் புரிந்துகொண்டவர்களாகப் புரிந்து கொண்டதை வாழ்க்கையில் பயன்படுத்தத் தெரிந்தவர்களாக நாம் மாற வேண்டும்.

இப்படிப்பட்டவர்களை சனாதன தர்மம் ஜிக்ஞாசு என்று குறிப்பிடுகின்றது. ஜிக்ஞாசு என்றால் ஞானத்தைத் தேடுவதில் பெரு விருப்பம் கொண்டவன் என்று பொருள். இனியாவது வாழ்க்கையைப் புரிந்துகொண்டு தெளிந்த அறிவைப் பயன்படுத்தித் தெய்வீகத்தை வெளிப்படுத்தி வாழ்வோம்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *