பூமியை உயர்த்துவோம்

காற்று ஒலியைக் கொண்டு வருகிறது, சூரியன் ஒளியைக் கொண்டு வருகின்றது என்று விஞ்ஞானிகள் முதலில் கூறி வந்தனர். இப்போது ஒலி, ஒளி ஆகியவற்றைத் தெய்வீக சக்தியாகிய ஈதரிக் எனர்ஜிதான் சூரியனின் வழியாகக் காற்றின் வழியாகப் பூமிக்குக் கொண்டு வருகிறது என்று சொல்கின்றனர். விஞ்ஞானம் சொல்கின்ற இந்த ஈதரிக் எனர்ஜி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது. படைத்தவனின் எண்ணம் அல்லது நோக்கம் தான் தெய்வீக சக்தி. இந்தத் தெய்வீக சக்திதான் ஆத்மாவின் ஆற்றலாகத் திகழ்கின்றது.

ஊதா நிறமாக ஒளிர்கின்ற இந்த ஈதரிக் எனர்ஜிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். இந்தத் தெய்வீக சக்தியும், மனிதனில் உள்ள ஆத்ம சக்தியும் ஒன்றையொன்று ஈர்த்து ஒன்றாக இணைய வேண்டும். இரண்டும் ஒத்திசைவு நிலையில் ஒன்றுபட்டு இயங்க வேண்டும். இரண்டு இசைக்கருவிகள் ஒன்றாகச் சேர்ந்து இசைக்கின்றபோது அவற்றின் நாதம் ஒன்றுபட்டு இணைந்தால் தான் இனிய இசை பிறக்கும். அதுபோல் கர்மாவால் விளைகின்ற எண்ணங்களை இல்லாமற் செய்து மௌனமாய் இருக்கின்றபோது உள்ளுக்குள் பரநாதம் ஒன்று ஒலிப்பது கேட்கும். அந்தப் பரநாத ஓசையுடன் ஆத்மாவின் ஒலி இணைய வேண்டும். இந்த ஒலி ஆஸ்த்துமாவால் அல்லது குறட்டையால் வெளிப்படுகின்ற ஓசை அல்ல.

கவர்தல் என்ற ஒன்றைப் படைப்பு உருவாக்கியிருக்கின்றது. அன்பால் ஒன்றையொன்று கவருகின்ற இயல்பு இது. மனிதனில் இது அன்பாகவும் இறைவனில் இது கருணையாகவும் இருக்கிறது. அன்போடு கருணையும் சேர்கின்றபோது அது சுயநலமற்ற போக்காகவும் பிறரோடு நெருங்கக்கூடிய தன்மையாகவும் அமையும். தர்மம் தலை காக்கும் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மையாகும். நாம் பிறருக்குத் தேவையான உதவிகளைக் கருணையோடு செய்தால் அது ஏதாவது ஒரு தருணத்தில் நம்மை யார் மூலமாவது காப்பாற்றும். நமது அன்பும் கருணையும் ஏதாவது ஒரு விதத்தில் எங்காவது பிரதிபலிக்கும். ஒவ்வொரு செயலும், நாம் எண்ணுகின்ற எண்ணங்களும் ஓர் எதிர் விளைவைக் கொடுக்கும். நல்லதைச் செய்தால் நல்லதே திரும்ப வரும். நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும். பிரம்மம் நம் செயலுக்கேற்ற விளைவையே தரும். நம்மில் ஒரு முதிர்ச்சியும் வளர்ச்சியும் ஏற்படுவதுதான் இறைவன் தருகின்ற அந்த விளைவு.

மனித மனநிலை இப்பொழுது மிகவும் மாறிவிட்டது. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் என்று படித்த காலமெல்லாம் எங்கோ போய் விட்டது. கணினி மோகம் அதிகரிக்க அதிகரிக்க, மனம் பேதலித்த நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது. சின்ன விஷயத்திற்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டுத் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற சூழ்நிலை இன்று அதிகரித்துவிட்டது. மாணவப் பருவத்திலேயே ஒருவரையொருவர் சுட்டுக்கொள்கின்ற அளவிற்கு வன்முறை அன்றாடச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. உணர்ச்சி வேகம் ததும்பிக்கொண்டிருக்கிறது. உலக மனப்போக்கே கொதிப்பான ஒரு நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட இந்த நிலையில் முக்திக்கான முயற்சியில் ஈடுபட்டு ஓரளவிற்கு உயர்நிலையை அடைந்த பின்பு சாதகர்கள் முயற்சியைக் கைவிட்டுவிடக் கூடாது. ஏனெனில் பிறவியே துன்பம் தான். இன்னும் ஒரு பிறவி எடுத்து மீண்டும் முயற்சியைத் தொடர்வதை விட இந்தப் பிறவியிலேயே முக்தி அடைந்து விட வேண்டும். அதுமட்டுமின்றித் தாம் செய்யும் இடைவிடாத முயற்சிகளால் ஆத்ம சாதகர்கள் பூமியின் அதிர்வலைகளை உயர்த்துகின்றார்கள். அவர்கள் தியானத்தால் மூலத்தைத் தொடர்பு கொள்கின்றபோது, அந்தத் தொடர்பின் மூலம் பிரம்மம் அவர்களை இழுக்கின்றபோது, அவர்களைத் தூண்டிலாகப் பாவித்துப் பூமியையும் சேர்த்து இழுக்கின்றது. தெய்வீக சக்தி ஆன்ம சாதகர்களின் பரிணாம உயர்வினால் அவர்களைத் தன்னை நோக்கி இழுக்கும். காந்தம் இரும்பை இழுக்கின்றபோது அந்த இரும்பிற்கு அருகில் இருக்கின்ற இரும்புத் துண்டுகளும் இழுபடுகின்ற இரும்பில் வந்து ஒட்டிக்கொள்வதைப் போல, உலக நன்மைக்காகப் பிரம்மத்திடம் சாதகர்கள் பிரார்த்திக்கின்றபோது பூமியும் அதன் தன்மையில் உயர்வை அடைகின்றது. அதன் மூலம் கொதிப்படைந்த மனங்கள் அமைதி நிலைக்குத் திரும்பும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நமது அறிவிற்கேற்றபடிதான் கருத்துக்களை நாம் உருவாக்கினோம். சிறிய வயதில் அது குறை, இது பிழை என்றும், இறைவன் மனிதர்களை ஏற்றத்தாழ்வுகளோடு ஏன் படைத்தான் என்றும் சிலரை அழகாகவும், சிலரை அழகற்றவராகவும் ஏன் படைக்க வேண்டும்? மாற்றிப் படைத்திருக்கலாமே என்றெல்லாம் பலவிதமான சிந்தனைகள் ஏற்படும். வளர வளரத்தான் அனுபவ முதிர்ச்சி பெறப் பெறத்தான் இறைவனின் படைப்பு பூரணமாகத் தான் இருக்கிறது என்பதும் அவரவருக்கு அமைவது என்பது கர்மாவின் பின் விளைவே என்பதும் தெரிய வரும். அறிவின் இந்த வளர்ச்சிதான் பரிணாம வளர்ச்சி.

ஆன்மீகத்தில் ஈடுபட்ட பிறகு தான் அவரவர் கர்மாவிற்கு ஏற்றபடி வாழ்க்கை என்பதும், தனிப்பட்டவரின் முயற்சியால் தான் பரிணாம முன்னேற்றம் ஏற்படுகின்றது என்பதும் புலப்படுகின்றது. ஆனால் வாலிப வயதில் அந்த வயதிற்கேற்ற அறிவு நிலையில் சமுதாயத்தின் சீர்கேடுகளும், ஏற்றத் தாழ்வுகளும் மனதைத் தாக்கி அக்கிரமக்காரர்கள் அதிகாரம் செலுத்துகின்றபோது ஒரு தர்ம ஆவேசம் ஏற்படும். அது அநியாயங்களைக் கண்டு மனம் பொறாத நிலை. அந்த வயதில் அப்படி ஏற்படத்தான் வேண்டும். அதில் பிழை ஏதும் இல்லை.

ஜவஹர்லால் நேரு, ஒருவனுக்கு 18 வயதில் கம்யூனிசமும், 40 வயதில் சோஷலிசமும் உணர்வாக ஏற்படாவிட்டால் அவன் மனிதனில்லை என்று கூறினார். சமுதாய அமைப்பிற்கும், போக்கிற்கும் ஏற்றபடி தான் ஒருவனது இளம் வயது அறிவின் முதிர்ச்சி அமைந்திருக்கும். வளர வளரத்தான், சுய சிந்தனை ஏற்பட்டால் தான் உண்மை நிலை விளங்கும்.

படைத்தவனிடம் முறையிடுவதன் மூலம் தான் இப்போது நிகழ்கின்ற சீரழிவு குறைக்கப்பட முடியும். மனித மனநிலை மிகவும் சீர்கெட்டு உலக அளவில் அநியாயமும், அக்கிரமமும், வன்முறையும் உச்ச நிலைக்குப் போயக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவற்றையெல்லாம் அழித்துத் தான் தர்மத்தை நிலை நாட்ட முடியும். அதைத்தான் இயற்கையின் சீற்றமும், துப்பாக்கிக் கலாச்சாரமும் இப்போது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஆன்மீக சாதகர்கள் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி, இறைவா! உலக அளவில் அமைதியைத் தா! சமாதானத்தைத் தா! மனித மனங்களைச் சாந்தப்படுத்து. இயற்கையை அமைதி அடையச் செய். நீ எமக்குத் தந்த நன்மைகள் அத்தனைக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்! என்று பிரார்த்தித்து நடப்பவை அனைத்திற்கும் சாட்சியாக இருந்து உள்ளுக்குள் ஒடுங்க வேண்டும். அழிவிற்குப் பின் புதியதோர் யுகம் பிறக்கும் என்ற உண்மை நமக்குத் தெரிவதால் அமைதியில் தோய்ந்து வருபவற்றை ஏற்க வேண்டும்.

இவ்வாறு சாதகர்கள் தமது தியானத்தினால் தாம் உயர்கின்றபோது, உள்ளுக்குள் ஒடுங்குகின்றபோது பூமியின் அழிவு நிலை ஓரளவிற்குத் தடுக்கப்படுகிறது. அன்பும் கருணையும் கொண்ட மனங்களின் தியானத்தால் பூமியின் அதிர்வலைகள் உயர்த்தப்படுகின்றன. அப்பொழுது மனித மனக் கொந்தளிப்பு அடங்கி அமைதியடையும். இவ்வாறு இருந்த இடத்த்pல் இருந்தபடி அரும் பணியாற்றிச் சேவை செய்கின்ற வாய்ப்பும், பூமியைப் பரிணாமப்படுத்துகின்ற தகுதியும் ஆன்மீக சாதகர்களிடம் இருக்கின்றது. இப்படி பூமியை உயர்த்துகின்ற முயற்சியால் தீய சக்திகளும், தீவிரவாதிகளும் அழிந்து போவார்கள்.

ஓர் அதிசயத்தக்க உண்மை என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் பெண் மயக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டார்கள் என்றே சொல்லலாம். பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாக வைத்து அவர்களைச் சுற்றியே தமது எண்ணங்களைப் படரவிட்டுக்கொண்டிருந்த தன்மை மாறி இப்போது அதுவும் ஒரு படைப்பு: வீட்டிலுள்ள தாய், சகோதரி போல் இவளும் ஒன்று என்ற மன முதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது. மேலும் பெண்கள் தம்மை வெளிப்படுத்திக் காட்டத் தொடங்கிய பிறகு, அவர்களிடம் இருந்த அடக்கம் போய்விட்ட பிறகு, சரிக்குச் சமமாக அவர்கள் பயமின்றி எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுத் திறமையைக் காட்டத் துவங்கிய பிறகு அவர்களைக் காமப் பார்வை பார்ப்பதை விட்டு நண்பர்களாகப் பார்க்க இன்றைய இளைஞர்கள் பழகி வருகிறார்கள். இது ஓர் ஆரோக்கியமான மாற்றம்.

எவையெல்லாம் முன்பு இளைஞர்களைக் கவர்ந்ததோ அவையெல்லாம் இப்போது விலகி விட்டன, நிதானமாகவும், முன்னேற வேண்டும் என்ற அறிவு சார்ந்த முனைப்புடனும் இளைஞர்கள் செயலாற்றத் துவங்கிவிட்டனர். இந்த மாற்றம் உண்மை. ஆகையால் பெண்களும் இப்போது போலித்தனமில்லாத இயல்பு நிலையில் செயல்பட முடிகின்றது. இந்த மாற்றம் சிறிய அளவில் தான் இருக்கிறது. இன்னும் பெண் மயக்கத்திலிருந்து விடுபடாத நிலையில், பெண்களைச் சிறுமைப்படுத்திச் சீரழிக்கின்ற நிலைதான் இருக்கிறது என்று சிலர் கூக்குரலிட்டாலும் அந்த நிலை இப்போது நிகழ இருக்கின்ற பேரழிவிற்குப் பின் இராது. ஏனெனில் அதன் பிறகு இருக்கப்போகின்ற மனித மனதிடம் அன்பும் கருணையும் தான் மிகுந்திருக்கும். அதில் கவர்ச்சியோ, பேராசையோ இருக்காது.

ஆன்ம சாதகர்களின் பயணம் வித்தியாசமானது. சாதாரண வாழ்க்கையின் பிக்கல் பிடுங்கல்களுக்கிடையே அறியாமையோடு கூடிய கர்ம வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், தமக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களால் துரத்தப்பட்டு பல திசைகளுக்கும் ஓடித்திரிந்து கடைசியில் இறையருளால் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வாய்த்தது. அப்படி இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்த பின் பல தியாகங்கள் செய்யும்படி ஆயிற்று. முக்கியமாக நான் என்னும் அகம்பாவம் அகன்று எல்லாமே அவன் என்ற பார்வை மாற்றம் ஏற்பட்டது. நான் என்பது எழுந்து ஆடிப் பிறகு அடங்கிய நிலை உண்டாயிற்று. இந்த நிலையில் சமுதாயமும், சமயமும் எங்கோ ஒரு மூலையில் பின் தங்கி விட்டன. மக்கள் கோவில்களுடனும், சடங்குகளுடனும் நிற்கின்றபோது ஓர் ஆன்மீகவாதி வேத உண்மைகளின் ஒளியினால் ஞானம் பெற்று அந்த ஞான ஒளியில் தனது ஆத்மாவின் ஒளியைத் தரிசிக்கத் துவங்கி விடுகின்றான்.

தனிப்பட்ட வளர்ச்சிதான் நம்மை உயர்த்தும் என்பதால் தான் சாதகர்கள் குருவைத் தேடிச் சரணடைகின்றனர். ஒரு குரு தன்னை நாடி வந்து சேர்கின்ற சீடர்களுக்கு விஞ்ஞான அறிவுடன் கூடிய வேத உண்மைகளைக் கற்பிக்கும் விதத்தில் அவர் பிறந்ததிலிருந்தே தயார் செய்யப்படுகிறார். ஒரு சிஷ்யனைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு வந்து சேர்க்கின்ற பிரம்மம், குருவையும் வேதங்களை அறிந்தவராய், பிரம்ம உணர்வில் தோய்ந்தவராய், சீடனின் சந்தேகங்களை நீக்கி ஞான வழியில் செலுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவராய் உருவாக்குகின்றது.

ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஓர் இடத்தில் தயார் நிலையில் குருவும், சரணடைகின்ற நிலையில் சீடனும் சந்தித்து விடுகின்றனர். அப்போதிலிருந்து வாழ்க்கைப் பயணமும் பார்வையும் மாற்றம் பெறத் துவங்கிவிடுகின்றன. கர்மப்பதிவுகளால் அமைந்த இந்த வாழ்க்கையும், மனப்பதிவுகளும் முழுமையாக இந்தப் பாதையில் பயணம் செய்ய விடாமல் இடையிடையே தடுத்து இழுக்கின்றன என்றாலும் சமுதாயப் பிடிப்புகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு அல்லது விடுவித்துக்கொண்டால் தான் ஜீவன் மேலே எழும்பி உயர முடியும்.

சமுதாயம் பொய்மையைத் தனது கலாச்சாரமாகக் கொண்டிருக்கிறது. ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த கலாச்சாரம் உண்மையில் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்டது. இறைவனை அடித்தளமாகக் கொண்டது என்பதை ஒருவன் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமுதாய ஆட்டத்திற்கு ஏற்ப ஆடுவதும் விழுவதுமாக இருந்தால் இந்த உண்மை புரியவே புரியாது. இந்த நிலை மாறி வளர்ச்சி என்பது தனிப்பட்ட மனிதனுக்குத் தான் என்பது புரிந்து திருப்தியும் மகிழ்ச்சியும் தனக்குள்ளேயே இருப்பதை உணர்ந்துகொண்டே உயர்வதுதான் ஆன்மீகம். இந்த நிலைக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்த பரம்பொருளுக்கு நாம் ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்த வேண்டும்.

சாப்பிடுவது, தூங்குவது, சந்ததி பெருக்குவது, சாவது என்ற நிலை மாறி ஒரு புதிய வாழ்க்கை முறையை நமக்குக் காட்டியது பிரம்மமே. அதற்குரிய சூழ்நிலைகளை அமைத்துத் தந்ததும் அது தான். அதற்கு நாம் கட்டாயம் நன்றி செலுத்தத்தான் வேண்டும். என்னுடைய தியானத்தால் நானும் உயர்ந்து இந்த பூமியின் தரத்தையும் உயர்த்துவேன் என்ற உறுதியுடன் நாம் ஒவ்வொரு நாளும் இறைவனை நோக்கித் தியானிக்க வேண்டும். ஏனெனில் இந்தப் பூமிதான் என்னை வளர்த்தது. எனது உண்மையான தாய் பூமியே. கல்லும் மண்ணும் தான் இந்த உடலில் எலும்புகளாகவும், சதையாகவும் மாறி அமைந்துள்ளன. நான் அந்தத் தாயை மதித்து உயர்த்த வேண்டாமா? அன்னை பூமியின் அற்புதங்களை உணர்ந்து போற்ற வேண்டாமா? இயற்கையின் பேரெழிலையும், நான்கு பருவங்களின் அழகிய மாற்றங்களையும் கண்டு, ரசித்து, அனுபவிக்கத்தானே பிரம்மம் நம்மை இந்த கனடாவிற்குக் கொண்டு வந்து சேர்த்தது. ஆனால் நாமோ மழையையும், வெய்யிலையும், பனியையும் சனியன் பிடித்தது என்று திட்டிக்கொண்டு இருக்கிறோம்.

அனைத்தையும் வரவேற்க வேண்டும். அனைத்தையும் ஏற்று நன்றி தெரிவிக்க வேண்டும். நம்மை இந்த ஞானப்பாதையில் செல்வதற்கு உரிய வாய்ப்புக்களையும் சூழ்நிலையையும் தடைகள் ஏற்படுத்தாத உறவுகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதே பெரிய ஆசீர்வாதம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தகுதியற்றவரை ஆன்மப் பயிற்சி பெறுவதற்குப் பிரம்மம் விடாது. ஏதாவது தடைகளை ஏற்படுத்தித் துரத்திவிடும். சூழ்நிலையும் உறவுகளும் தடுக்கும். சிந்தித்தால் இது விளங்கும்.

இருளும் ஒளியும் கலந்த உலகத்திலிருந்து ஒளி உலகத்திற்கு இந்த ஞான உபதேசம் ஒருவனைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. தன்னையும், தன் அறிவையும், தன் உடலையும் ஒளி மயமாக மாற்றுகின்ற இந்த சாகாக்கல்விக்கு வேதாந்தம் என்று பெயர். மற்ற படிப்புகள் எல்லாம் இந்தப் பிறவியோடு முடிவது. இந்தக் கல்வியோ பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்து விட்ட இடத்திலிருந்து மேலும் சாதனையைத் தொடர்ந்து செய்யக்கூடிய உயர்ந்த, அழியாக்கல்வி. எனவே தான் இது சாகாக்கல்வி.

பிரம்மத்தால் தூண்டப்பட்ட மனித அறிவியல், வாழ்க்கை என்றால் என்ன என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. வாழ்க்கையின் சக்தி ஆத்மா. அது எங்கும் நிறைந்திருப்பது. உலகப் பதிவுகளை நாம் ஒதுக்கினால் அதனோடு நம்மால் தொடர்புகொள்ள முடியும். அப்படி அதோடு நாம் தொடர்பு கொண்டால் பூமியின் அதிர்வை உயர்த்த முடியும். அப்படி உயர்த்துகின்றபோது இந்தப் பூமியில் உள்ள அத்தனை உயிரினங்களையும், மரம், செடி, புழு, பூச்சி, மிருகம் என அனைத்தையுமே நாம் உயர்த்துகின்றோம். இப்படிச் செய்வதால் நாம் பிறந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறோமா இல்லையா? இந்த நிலையை அடைய இறைவனின் கருணை நம் கருணையாக மாற வேண்டும். அவ்வளவுதான். அதோடு நமது செயலில் அந்தக் கருணை வெளிப்பட வேண்டும். எனவே இனி நாம் நம்மையும் உயர்த்திக்கொண்டு இந்தப் பூமியையும் உயர்த்த வேண்டும். அதற்கு நாம் கருணைமயமாக மாறி நமது செயல்கள் எல்லாம் கருணையாக வெளிப்பட வேண்டும்.

உலக அறிவின்படி உடலுக்குள் தான் உயிர் இருக்கிறது என்று எல்லோரும் சொல்வது வழக்கம். ஆனால் உயிருக்குள் உடல் இருக்கிறது என்பது வேதாந்தம். இதன் பொருளை ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பிரம்மம் தான் இந்தப் பிரபஞ்சமாக உயிர்த்திருக்கின்றது. இந்த உயிர்ப்பிற்குள் இருந்து தான் எல்லாப் படைப்புக்களும் பல்வேறு வடிவங்களைப் பெற்று வெளிப்படுகின்றன. எனவே உயிர்ப்பிற்குள் தான் எல்லாப் படைப்புக்களின் உடல்களும் இருக்கின்றன. இதன் பொருள் இப்போது புரிகின்றதா?

உடல் என்பது உயிரின் விரிவாக்கம். இந்த உடல் 16 அலைகளாகவும், மனமும் புத்தியும் 19 அலைகளாகவும் இருக்கின்றன. இந்த 35 அலைகள் தான் உடலை இயக்குபவை. இந்த அலைகளின் ஓட்டம் நின்று விட்டால் அந்த உயிர்ப் பொருள் ஜடமாகிறது.

குழப்பமில்லாத அறிவுத் தெளிவைப் பெற்றவர்கள் தெளிந்தவர்கள் ஆவார்கள். வேதாந்தத்தை அறிந்தால் மட்டும் போதாது. அறிந்ததைப் புரிந்துகொண்டு தெளிய வேண்டும். நான் யார், எனது செயல்பாடு என்ன, எது நானாக இருந்து இயங்கிக்கொண்டிருக்கிறது போன்றவற்றை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் உயர்ந்த நிலை. பிரம்மத் தொடர்பு ஏற்பட்டு விட்டால் பிறகு இரண்டு என்ற நிலையே இல்லை. எல்லாம் ஒன்று. தர்மப்படி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டு, நான் யார்? என் நிலை என்ன, என்பதை உணர்ந்து தெளிதலே ஞானம்.

கலாச்சாரம் அது இது என்று சும்மா புலம்பிக்கொண்டு கண்மூடித்தனமாகத் தனது சுகத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் தான் எல்லாம் சமூகத்தால் செய்யப்பட்டுக்கொணடு வருகிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையின் அவலங்களையும், கேவலங்களையும் புரிந்துகொண்ட பிறகு இனியும் அறிவீனத்தாலும், ஆசையாலும் வாழாமல், பெற்ற ஞானத்தால் பிரம்மத்தைப் பிடித்துக்கொண்டு உன்னைத் தவிர எனக்கு உய்வதற்கு வேறு வழியில்லை. எனக்கு எல்லாமே நீ தான், வேறு எதுவுமே எனக்கு வேண்டாம். நீயே கதி! என்று அதனுடன் இணைந்து விடுவதற்கான முயற்சிகளில் சதா ஈடுபட்டுக்கொண்டிருப்பதே இனி அனைவரின் வாழ்க்கை முறையாக அமையட்டும். இவ்வாறு நாம் நம்மை உயர்த்திக்கொள்கின்றபோது இந்தப் பூமியின் தன்மையும் தானாகவே உயர்ந்துகொண்டு போகும். இது உண்மை.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *