உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டிருக்கின்ற அமைதி நீங்கள் ஆத்மாவிற்கு சமீபத்தில் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்து கிறது. வெளி வாழ்க்கையில் இன்னும் உங்களுக்குப் பிக்கல், பிடுங்கல்கள், பிரச்சனைகள் என ஏராளம் இருந் தாலும் நான் அமைதியானவன் என்ற உணர்வு உங்களுக்கு ஞானத்தின் மூலம் ஏற்பட்டிருக்கிறது. உங்களது இந்த ஆழ்ந்த அமைதியை யாராலும் குலைக்க இயலாது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படி நீங்கள் சில சந்தர்ப்பங் களால் தற்காலிகமாக நிலை குலைந்தாலும் மீண்டும் அந்த அமைதிக்கு வந்து விடுவீர்கள். எப்படி நாளாந்தம் பிரச்சனை கள் நித்திரையில் மறைந்துபோய் விடுகின்றனவோ அது போல தியானம் செய்வதன் மூலம் உங்களை நீங்கள் அமைதி நிலைக்குக் கொண்டு செல்கின்றீர்கள்.

ஞானப் பயிற்சி பெறுகின்ற உங்களுக்குக் கர்மயோகம், பக்தியோகம் எல்லாம் நன்கு தெரியும். இப்போது நீங்கள் அன்பு செலுத்த வேண்டும் என்ற பக்தி யோகத்தில் இருக்கிறீர்கள். மற்றவர்கள் ஏதோ தங்களது தேவைகளுக்காகவும் ஆபத்தில் இருந்து தப்புவதற்காகவும் பக்தி செய்கிறார்கள். உங்களுடைய பக்தியோ இதைவிட வேறு வழியில்லை என்ற ஞானத்தை அடிப்படையாகக் கொண்டது. வாழ்வியலில் கொண்டுள்ள பக்தியில் நழுவுவதற்கோ, வேறு விதமாக மாறுவதற்கோ இடமுண்டு. ஞானத்தால் ஏற்பட்டுள்ள பக்தியில் நழுவவோ, மாறவோ எந்தவித வாய்ப்புமில்லை. ஏனெனில் ஞானம், தெளிந்த நல்லறிவாக உங்களில் உண்மையாக உணர்த்துவது. ஆத்மாவையும் உங்களையும் வேறுவிதமாகப் பிரித்துக் காட்டுவது ஈகோ எனப்படும் நான். இப்போது எங்களில் ஈகோ இல்லையென்று நீங்கள் சொன்னாலும் இன்னும் இருக்கிறது என்பதுதான் எனது அனுமானம். கழற்ற வேண்டியதைக் கழற்றாமல் சுமந்து கொண்டு திரிகிறீர்கள். சிந்தித்துப் பாருங்கள்.

எனது கர்மாவின்படி எனக்கு இரண்டு சாதனங்கள் தரப்பட்டிருக்கின்றன. நான் செய்தவற்றிற்குப் பதிலாக இவை தரப்பட்டிருக்கின்றன. அவற்றிலுள்ள நிறை குறை எல்லாமே எனது கர்மாவைப் பொறுத்தது. எனவே நான், எனது என்று சொல்லிக் கர்வப்பட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லை. ஞானம் பெற்றுவிட்டேன் என்று பெருமைப்பட்டுப் பீற்றிக்கொள்ளக்கூட உங்களுக்கு ஒன்றுமில்லை. எல்லாமே அவன் தந்தது.

நமது உடலிலுள்ள ஒவ்வொரு ஸெல்லிலும் அன்புதான் நிரம்பியிருக்கிறது. அது காதல் உணர்வாக வெளிப்படுகிறது. அன்புதான் ஆட்களைப் பொறுத்து மாறி வெளிப்படுகிறது. வேறு விதமாக அது வெளிப்பட்டாலும் பு+ரணமாக என்னில் நிறைந்திருப்பது அன்பு. எல்லா சாஸ்திரங்களையும் எடுத்துப் பார்த்தால் அன்பைப்பற்றி நிறைவாகச் சொன்னது வேதம்தான். சமூகம் அதை மறைத்துக் காமசூத்திரம் என்று வேறு விதமாக திரித்துச் சொல்லி விட்டது. சமூகத்திற்கு இதை விளக்கிச் சொல்லக்கூடிய அறிவில்லை. ஆகையால்தான் கோவில்களில் சிற்பங்களாக வடித்து வைத்து மறைமுகமாகச் சொன்னார்களே தவிர நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஒரு தாயோ, தகப்பனோ தன்னுடைய மகளுக்கோ, மகனுக்கோ விளங்கப்படுத்தக் கூடியதாக இருந்தால்தான் அது அறிவு.

இந்த அளவிற்கு இதைப்பற்றி ஏன் நான் எடுத்துரைக்கின்றேன் என்றால் நம் ஒவ்வொரு ஸெல்லிலும் காம உணர்வாக இந்தக் காதல் உணர்வு வைக்கப்பட்டிருக்கிறது. அன்பின் முழுமைதான் காதல் உணர்வு. ஆன்மீகத்தில் இந்தக் காதல் உணர்வு ஞானத்தால் முழுமையான அன்பாக மாறுகிறது. இப்படி மாறுகின்ற அன்பு தியானமாகி விடுகின்றது. தியானமாக மாறிய அன்பு, ஒளியாகி நம்மில் ஒளிர்கின்றது. இந்தப் புரிதலின் வழியாகத்தான் நம் ஸெல்களில் நிறைந்துள்ள அன்பை ஒளியாக மாற்றமுடியும். ஒளியுடல் பற்றி நான் முன்பு பலமுறை சொல்லி வந்ததன் உட்பொருள் இதுதான்.

நான் சொல்வது உலகத்தால் அறிந்து அனுபவிக்கப்பட்ட காமமல்ல. காமத்தை ஆரம்பிக்கின்ற காதல் உணர்வு. அதில் அன்பு மட்டுமே நிறைந்திருக்கிறது. இந்த அன்பைத் திறந்தபின் அதையே சிந்தித்துக் கொண்டிருப்பதுதான் தியானம். பக்தி என்பது இறைவனையே சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருப்பது. நானும் அவனும் ஒன்றாகி விடுவது. தியானம் என்பது இதுதான். இறைவன் அன்பு, ஒளி. அவனையே தியானிக்கின்ற போது ஸெல்களில் அன்பு நிறைந்து ஒளியாகின்றது. இதைப் புரிந்து கொள்ள வேதாந்த மொன்றும் தேவையில்லை. காதல் என்பது அன்பாக மாறி அன்பு பேரன்பாக மாறித் தொடர்ந்து அதிலேயே இருந்தால் அந்தப் பேரன்பு தியானமாக மாறி அந்தத் தியானம் ஒளி யாகின்றது. ஒளி என்பது ஆத்மாவாகிப் படைத்தவன் என்றாகிறது. நீங்கள் செய்கின்ற தியானத்தை இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். மிக எளிதாக ஆத்மாவில் இணைந்து விட முடியும். ஆனால் இதற்குக் கர்மா அனுமதிக்காது.

காதலிக்காமல் இருப்பதைவிடக் காதலித்துக் கைவிடுவது மேல் என்று ஷேக்ஸ்பியர் சொன்னார். ஏனெனில் காதலின் அனுபவம் உனக்குக் கிடைக்கிறது. இந்தச் சாதனையைப் பற்றி விரித்துச் சொன்னவர் ஒரு முனிவர். உள்ளார்ந்த உணர்வால் உணர்ந்து சொல்லப்பட்ட உண்மை இது. என்னில் நான் அன்பைச் செலுத்துவதுதான் பக்தி யோகம். உலக உயிரினங்கள் அனைத்திற்கும் இந்தக் காதல் காமமாக வைக்கப்பட்டிருக்கிறது. காமம் விதை; அன்பு மலர். அன்பு மலர் தியானமாக மலரவேண்டும். அது ஒளியாக தியானத்தின் அனுபவமாகவும் இறுதிச் செயலாகவும் மாறவேண்டும். அன்பு செலுத்தும் போது அன்பாக மாறிவிடு. அந்த அன்பு உன்னுடைய என்னுடையதாக இருக்காது. அப்போது அந்த அன்பின் வசப்பட்ட நீ ஓடிக்கொண்டிருக்கும் சக்தியாக மாறி விடுகின்றாய். அன்பு என்பது ஒளி. அது எல்லா இடங்களிலும் பாய்ந்து பரவிக் கொண்டிருப்பது.

ஒளி என்பது நீங்கள் மனத்தால் கொண்டுவருகின்ற ஒளியல்ல. மனமும் புத்தியும் என்று எங்களால் பிரித்து வைக்கப்பட்டவை களில் என்னுடைய கர்மாவால் எனக்கு ஏற்பட்ட ஞாபகங்கள், அனுபவங்கள், தேவைகள் எல்லாவற்றையும் நான் இறக்கி விட்டேன். ஆகையால் இப்போது அவை ஒளிச்சிதறல்களாக எனக்குக் காட்சியளிக்கின்றன. என்னுடைய மனம், புத்தி எனக்கு ஒளியாய்த் தெரிவது ஒருநிலை. எனது ஆத்மா ஒளியாய்த் தெரிவது மற்றொரு நிலை. மனம் ஒளியாகத் தெரிந்தால் அதன்பின் கூடிய விரைவில் ஆத்ம ஒளியைத் தரிசிக்க முடியும். அந்த ஒளியைத் தரிசிக்கின்ற நிலையில் எனது உடலில் உள்ள ஸெல்களில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். அந்நிலையில் நான் அங்கு இல்லை, ஆத்மா மட்டுமே இருக்கும். அப்போது உங்களது கர்மா நல்லதாக இருந்தால் உங்கள் மனம் கவர்ந்த யாரோ ஒரு மகானாக ஆத்மா வெளிப்பட்டு, அந்த உருவெளித் தோற்றம் அது புத்தராகவோ ரமணராகவோ வேறு யாராகவும் இருக்கலாம், உங்களைத் தூக்கும். அது தற்செயலாய் நிகழ்வது அல்ல. அந்த ஞானிகளின் ஒளி வடிவம் ஒளியாய் வந்து உன்னைத் தூக்கும். அது உனது இறுதி நிலைக்கு முந்தைய நிலை. முதலில் ஒளிச்சிதறலிலிருந்து நேரடி ஒளிக்குள் இறங்கியபின் இது நிகழும். ஞானியின் வரிவடிவை மனதிற்குள் தொட்டாலும் அழுக்குப் படியாது. அவசரத்திற்கு ஒன்றும் வராது. படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும். தொடர்ந்து தன்னோடுதான் இருக்க வேண்டும்.

காமம் என்கின்ற அன்பு செய்கின்ற தூண்டல்தான் ஒரு ஸெல்லின் உள்ளே ஆழமாகப் பதிக்கப்பட்ட உணர்வு. அது அதிர்ந்து அலைகளாக மாறவேண்டும். அந்த அலையின் அதிர்வு அண்டக்கலப்பு. அந்த அண்டக்கலவி பிரபஞ்சத்தின் விரிவு. சேர்க்கை என்பது எனக்குள் தனியாக நிகழ்வது அல்ல. அது பிரபஞ்ச அளவிற்கு அலைகளாகப் பரவி நிறைவது. நான் நமது ஸெல்களது உள்ளே உறங்கிக் கிடக்கின்ற தெய்வீக சக்தியின் ஒரு வெளிப்பாடாகத்தான் இதை விவரிக்கிறேன். வேறு எந்தவிதப் பார்வையும் இங்கு இருக்கக்கூடாது. இதுநாள்வரை ஏதேதோ புரிந்து வைத் திருந்தீர்கள். இப்போது நான் உண்மையை எடுத்துரைக்கிறேன்.

ஆத்மா என்ற சூரியனில்தான் இனி நீங்கள் தங்கி வாழ வேண்டும். தியானம் என்பது நேரடியாக ஆத்ம ஒளியைத் தரிசிப்பதே தவிர வேறு எந்தவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்வதல்ல.

நம்முடைய மனதில் எவ்வளவோ இன்பங்களும் துன்பங்களும் வந்து சென்றுள்ளன. இத்துன்ப அனுபவத்திற்குக் காரணம் மனம் ஆதாரமாக இருப்பது. நித்திரையில் இருப்பவர்களுக்கும் யோகிகளுக்கும் இன்பமுமில்லை, துன்பமுமில்லை ஏன் மனமுமில்லை. மனம்தான் துன்ப துயரங்களுக்குக் காரணம். மனமில்லாத நிலையில் இன்பமுமில்லை, துன்பமுமில்லை. இன்பங்கள் மனதில் பதிவதில்லை. ஆனால் துன்பங்கள் மிக ஆழமாகப் பதிந்து விடுகின்றன. ஏனெனில் இன்பங்கள் எனது நல்ல செயல்களோடு தொடர்புபட்டது. துன்பங்கள் கர்மாவோடு தொடர்புபட்டவை. நல்ல செயல்களை நான் செய்வது குறைவு. கெட்ட செயல்கள் ஏராளம் செய்து விடுகிறேன். இனித் துன்பங்கள் நம்மைத் தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் யாரையும் துன்பப்படுத்தக்கூடாது. தீய செயல்களைச் செய்யக்கூடாது. அவை அடிமனதில் ஆழமாகப் பதிந்துவிடும். ஆழமாகத் துன்பப்படுபவர்களுக்கு அவர்கள் செய்த கர்மாதான் காரணம்.

மனம் இன்பத்தை ஞாபகப்படுத்துவதில்லை. துன்பத்தை அடிக்கடி நினைத்து மீண்டும் துன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். இதன்மூலம் துன்பத்தை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றோம். அது மேலும் கர்மாவாகப் பதிகின்றது. இன்பத்தை மறந்து விடுவதால் இன்பத்தைக் கொடுத்தவர்களையும் மறந்துவிடுகின்றோம். துன்பத்தை மறக்காமல் துன்பத்தைக் கொடுத்தவர்களை ஞாபகம் வைத்திருக்கிறோம். இது ஆழமாகப் பதிந்தால் குடும்ப உறவுகளில் பிரச்சனை ஏற்படாது. நல்லவற்றை நினைத்துக் குற்றங்களை மறக்கும் பண்பு நம்மில் ஏற்பட வேண்டும்.

துன்பத்தைக் கொடுத்தவர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அதை நீக்க மன்னித்தல் அவசியம். நம்மைத் துன்பப் படுத்தியவர்களை நாம் மன்னிக்கும் போது அவற்றை மறந்து விடுகிறோம். நமக்கு இன்பத்தைக் கொடுத்தவர்களிடம் நன்றியுணர்வும் துன்பத்தைக் கொடுத்தவர்களுக்கு அவர்களை மன்னிக்கும் தன்மையும் நமக்கு ஏற்பட வேண்டும். நன்றியுணர்வையும் மன்னிப்பையும் தியானம் செய்கிறேன். இன்பத்தைத் தந்தவர்களுக்கு நன்றி. துன்பத்தைத் தந்தவர்களுக்கு மன்னிப்பு. இவை இரண்டும் தியானத்தால் நம்மில் பதிய வைக்கப்பட வேண்டும்.

நாம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்புகளை அறிந்தோம். அறிவாகப் பெற்றதோடு நின்றுவிடாமல் நமது பண்புகளாக அவை மாற அவற்றைத் தியானிக்க வேண்டும்.

நாம் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய பண்பு பொறுமை அல்லது சகிப்புத்தன்மை. நமது மனதின் வளர்ச்சிக்கு மனப்பக்குவத்திற்கு அகிம்சை, மன்னிப்பு போல் அடுத்த முக்கிய பண்பு பொறுமையாய் இருந்து சகித்துக் கொள்வது. இயலாமை வேறு, பொறுமை வேறு. மிக முக்கியமான பண்பாகிய இந்தப் பொறுமை ஆன்மீக சாதகர்களுக்கு மிகமிக அவசியம். பொறுமை வாழ்க்கையில் ஓர் அம்சமாகவே இருக்க வேண்டும். இன்றைக்குத் தியானம் வரவில்லை, நாளைக்குப் பொறுமையுடன் முயல வேண்டும். எனக்கு ஆன்மீகம் வராது என்று உதறித் தள்ளிவிட்டுப் போகாமல் தொடர்ந்து முயல்வதுதான் பொறுமை. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தப் பொறுமையை அளந்து பார்க்க வேண்டும்.

அவரவர் கர்மாவின்படி எல்லாம் நடக்கும். அதை எதிர்ப்பதற்கு நான் யார்? என்று சிந்தித்து வருவதைப் பொறுமையுடன் ஏற்கத் தெரிய வேண்டும். நம்வாழ்வில் பொறுமையின்மையால் பல துயரங்கள் ஏற்பட்டுள்ளன. வெறுப்பு, இழப்பு, துயரம் போன்றவை ஏற்பட்டதற்கு பல சூழ்நிலைகளில் பொறுமை இன்மையே காரணம். பொறுமையற்ற மனம், பக்குவம் அடையாத வளராத மனம். பொறுமையுடன் கூடியது பக்குவமாக வளர்ச்சியடைந்த மனம். பொறுத்துப் பொறுத்துத் தான் பொறுமையை அடைய முடியும். சிறிய விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடித்துச் சிறிது சிறிதாகப் பொறுமையை அடைய முடியும். அவரவர் ஒன்று, இரண்டு, மூன்று என ஒவ்வொரு மாதமாகப் பொறுமையை வளர்க்க வேண்டும். இப்படிப் படிப்படியாகப் பொறுமையை வளர்த்தால் தான் ஆத்மாவின் பரப்பளவு விரிவடையும். ஆத்மாவைச் சுற்றியுள்ள வேலி சாந்தம், அமைதி. இவை விரிவடையப் பொறுமை அவசியம்.

நான் எப்படி இருக்கவேண்டும் என்னும் விருப்பம் என்வச மில்லை. நான் விரும்புவது நடக்காது. எதைக்கொண்டு வந்தோமோ அதன்படிதான் வாழ்க்கை அமையும். அறிவை அகலப்படுத்தினால் பொறுமையின்மைக்கான காரணங்களும் குறையும். மனம் விரிந்தால் எல்லாம் சரிவரும். பொறுமையை வளர்ப்பேன் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். காலவரையறையை மனதிற்குள் கொண்டு வாருங்கள். சங்கல்பம் எடுத்துக் கொண்டு தினசரி ஞாபகப் படுத்த வேண்டும். நாம் பொறுமையாக இருக்கவேண்டும் என்ற அறிவை அடைந்தாலும் பொறுமையாக இருக்கும் மனதை அடையமாட்டோம். இதற்குப் பொறுமையாக இருக்கப் பழக வேண்டும். பொறுமை என்ற ஞானம் பொறுமையைக் கொடுக்காது. மனம்தான் பழக வேண்டும். பதினைந்து நிமிடம் தியானம் செய்தாலே பொறுமை வந்துவிடும். அதிகாலை எழுந்தவுடன் இன்று நான் ஒருசில நிமிடங்களா வது பொறுமையைக் கடைப்பிடிப்பேன், பொறுமையாகப் பேசிப் பொறுமையாய்க் கேட்டுப் பொறுமையைக் கையாள்வேன் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சங்கல்பத்தைத் தியானத்தில் ஏற்படுத்திப் பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களை இம்சைப்படுத்த நமது பொறுமையின்மையே காரணம். பொறுமையிருந்தால் நம்மையும் மற்றவர்களையும் சில சங்கடங்கள் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கலாம்.

சிலர் வாகனம் ஓட்டும்போது, சிலரிடம் பேசும்போது, குழந்தை களிடம், பெரியவர்களிடம் பழகும்போது பொறுமையை இழக்கலாம். அந்தச் சூழ்நிலையில் பொறுமையுடன் இருப்பேன் என்னும் உறுதியை மனதிற்குள் கொண்டுவந்து பொறுமை யுடன் இருக்கலாம். பொறுமை தொடர்ந்து பழகுவதால்தான் வரும். மேலே குறிப்பிட்ட சந்தர்ப்பமெல்லாம் நமது பொறுமையைச் சோதிப்பதற்காக நம்மைச் சுற்றி நிகழ்பவை.

நமது மனம் அமைதியாக இருக்கும்போது, நம் மனம் எந்த இடத்தில் எப்படி செயல்படுகிறது, எந்தச் சூழ்நிலைகளில் கோபம் பொறாமை போன்றவை ஏற்படுகின்றன போன்றவற்றை அறியவும். அமைதியான நிலையில் மனதின் உண்மையான தன்மையை அறியமுடியும். எந்தச் சூழ்நிலைகளில் பொறுமையை இழக்கின்றோம் என்பதைப்பற்றி சிந்தியுங்கள். வேறு எண்ணத்தை மேற்கொள்ளாமல், நான் எப்பொழு தெல்லாம் பொறுமையை இழக்கின்றேன் என்பதை அறிய வேண்டும். பொறுமையை அல்லது சகிப்புத் தன்மையை எங்கு இழக்கின்றேன் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற சாதனையை மேற்கொள்ள வேண்டும். பொறுமையின்மைக்கு முக்கிய காரணம் ஏற்றுக் கொள்ளாமைதான். ஏற்றுக் கொள்ளாதபோது பொறுமையைக் கடைப்பிடிப்பது கஷ்டம். கார் ஓட்டும்போது அடுத்தவர் தவறாக ஓட்டினால் நான் பொறுமை இழக்கிறேன். அந்தச் சூழ்நிலையில் அவனது அறியாமை இது என்று பொறுமையுடன் நினைத்தால் நான் பொறுமையாக இருக்கமுடியும். ஏற்றுக் கொள்ளாத விஷயத்தில் வராது. பொறுமையுடன் ஏற்றுக் கொள்வதுதான் எமது சாதனையாக முடியும்.

பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கடைப்பிடிப்பதன் மூலம் மனதில் இருக்க வேண்டிய அமைதியும் ஒழுங்கும் மேலும் நிலைநிறுத்தப்படுகின்றன. நான் மனத்தால் அகிம்சையாக இருக்கிறேனா, மனத்தால் மன்னிக்கிறேனா, மனதால் துன்பப்படுகிறேனா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நன்மை செய்தவருக்கு நன்றியும், தீமை செய்தவருக்கு மன்னிப்பும் தருகிறேனா, பொறுமை சகிப்புத் தன்மை ஆகியவற்றைக் கடைப்பிடிக்கிறேனா என்று கவனிக்க வேண்டும். இப்படி நம்மை நாமே கவனித்தபடி இருந்தால் நமது வாழ்க்கை நிலை செம்மையுறும். பொறுமை, மன்னிப்பு அகிம்சை ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் பழக வேண்டும். இவற்றையெல்லாம் எல்லாப் பக்கங்களிலும் இடைவிடாமல் கடைப்பிடித்ததால்தான் ஒரு சாதாரண மனிதர் மகாத்மா என்று அனைவராலும் போற்றப்பட்டார். இவை அனைத்தையும் கடைப்பிடித்தால் நீங்களும் மகாத்மாதான்.

ஆத்மாவுடன் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு விட்டீர்களா? அல்லது அது உங்களைத் தன்னுடன் இணைக்கின்றதா? அந்தத் தொடர்பு உங்களுக்கு ஏற்பட்டு விட்டதென்றால் காரணமில்லாத, சொல்லத் தெரியாத ஆனந்தம் உங்களிலிருந்து வெளிப்படும். சின்னச் சின்னப் பிரச்சனைகளை உள்ளத்தில் எடுத்து வைத்துக்கொண்டு குழம்பாமல் அதனுடன் தொடர்பு கொண்ட நிலையிலேயே தொடர்ந்து இருக்கப் பழகினால் வாழ்க்கை நிறைவாக இருக்கும்.

மனதைப் பண்படுத்துதல் தான் ஆன்மீகம். மனதிலுள்ள குப்பைகளை எல்லாம் அடித்துப் பெருக்கிச் சுத்தப்படுத்த வேண்டும். நாம் உலக விஷயங்களை எடுத்துக் குழம்புவதால் தான் மன அமைதி கெடுகின்றது. அமைதி கெடுவதற்குக் காரணம் நாங்களே. நீங்கள் மனதில் ஏற்றி வைத்ததை இறக்கி விடுங்கள். பிறகு தானாகவே வழியைக் காட்டும், தொடர்பையும் ஏற்படுத்தும். மனதைவிட வேறு ஒன்றாலும் இறைத் தொடர்பை ஏற்படுத்த முடியாது. சடங்குகள், சமயங்கள் எல்லாம் மனதை ஏமாற்றுபவை. உண்மையைச் சொல்லி மனதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

எல்லோரும் இன்பத்தைத் தேடுகிறார்கள். நாமும் அதைத்தான் தேடுகிறோம். நமக்குப் பாடமாக போதமாக அமைந்தவை, உலகத்தில் முதலில் தோன்றிய வேதங்கள், அவற்றின் வழியொற்றி வந்த உபநிஷதங்கள். குருவிற்கு அருகில் நெருங்கியிருத்தல் என்பதே உபநிஷதத்தின் பொருள். அது பாவ வினையைப் போக்குகின்றது. உண்மையை உணர்த்து வது. மதங்கள் மனதைச் சலனப்படுத்துபவை. உள்ளத்தை உயர்த்துவதற்கு உபநிஷதங்கள் உதவிசெய்தன.

இறையருளை வெளிக்கொணர்வது கருணை. கருணை இல்லாமல் எதையும் செய்யமுடியாது. மனித ஜீவன் வெவ்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தெய்வீகத்தை நோக்கித் தன்னைச் செலுத்துகிறது. ஆன்மீக முயற்சிகளில் நீங்கள் செலவழிக்கின்ற நேரங்கள் வீண்போவதில்லை. இந்த முயற்சிகள் உங்களை இறைசக்திக்கு அருகில் கொண்டு சேர்ந்திருக்கின்றன. தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தால் அதுவாகவே ஆகிவிட முடியும். ஆனால் அந்தத் தொடர்ந்த முயற்சி உங்களிடமில்லை. வாழ்க்கையின் நோக்கம் ஆனந்தம். எல்லாமே அதுவாய் இருக்கின்றபோது நீங்கள் இந்த உலகம், உங்கள் அலுவல், உங்கள் உடம்பு என்று மற்றவற்றிற்குத் தேவையில்லாமல் அதிக முக்கியத்து வம் கொடுக்கிறீர்கள். உங்களுக்குத் தரப்பட்ட நேரத்தைத் தேவையில்லாதவைகளுக்கு ஒதுக்குவதுதான் அதிகம். உங்களுக்குக் கிடைத்த குறைவான வாழ்நாளில் நீங்கள் தெரிந்துகொண்டே பிழையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நோக்கத்தை ஒதுக்கிவிட்டு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நீங்கள் புத்திசாலியா? இல்லை.

இந்த அறிவைப் பெற்றபின்பும் நீங்கள் வாழ்க்கைச் சேற்றில் விழலாமா? எது உண்மையென்று தெரிந்தும் நீங்கள் அதில் ஈடுபடாமல் இருந்தால் உங்களது கர்மா இரண்டு மடங்காகி விடும். கூடுதல் பிரச்சனைகள் வரும். என்னைப் படைத்தவன் என்னைச் சுற்றி எல்லாவற்றிற்குள்ளும் இருந்து கொண்டு என்னைக் கவனித்துக் கொண்டு இருக்கிறான். அவன்தான் என்னைப் படைத்தவன். பிறப்புச் சுழற்சிக்குள் என்னைத் தள்ளியவன். இப்படி இருக்கும்போது நான் என்னை அவனை நோக்கித் திருப்பாமல் இருந்தால் அது பாவம். அறிந்தபின் பிழை விடக்கூடாது. தெரிந்து ஒரு குற்றத்தைச் செய்தால் அதற்குத் தண்டனை அதிகம். இதைத் தினமும் பலமுறை நினைத்துக் கொள்ளுங்கள். உண்மையைத் தேடுகின்றதான இந்த ஆத்ம வித்தையை நீங்கள் கற்க முனைந்தது தற் செயலானதல்ல. இந்தப் பாதையை அவன்தான் உங்களுக்குக் காட்டியிருக்கின்றான். தொடர்ந்து இதில் நிற்பதற்கும் அவனருள் தான் காரணம். இந்த வாய்ப்பு அமைந்தபின் ஒரு பதினைந்து நிமிடம் தியானத்தில் ஈடுபட உங்களால் முடியாதா?
உங்களது மனமும் புத்தியும் ஒளிச்சிதறல்களாக வெளிப்பட வேண்டும். எங்கும் பரவியுள்ள பரப்பிரம்மத்தின் ஒளித்தெறிப்பு தான் எனக்குள் ஆத்மாவாக இருக்கிறது. காற்றையும், கருணையிலிருந்து வெளிப்படுவதான அன்பையும் கண்ணால் பார்க்க முடியாது. பார்க்க முடியாவிட்டாலும் அவை இருப்பதை நாம் உணர்கிறோம். அதுபோல் அவன்தான் நானாக இருக்கிறான் என்பதை உணர வேண்டும்.

சின்ன வயதிலிருந்தே என்னை ஒழுங்குபடுத்தி அது காட்டிய வழியில் நான் நடந்து வாழ்க்கையில் பெறவேண்டியவற்றையும் பெற்று அதனுடைய விளைவை நான் அனுபவிக்க வேண்டும். அப்படி அனுபவிப்பதில் நான் திருப்தியாகி அமைதியடைய வேண்டும். அந்த அமைதியில் ஆழ்ந்து அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இப்படி யாரும் நடந்து கொள்கிறீர்களா? உங்கள் பாதையில் ஓடிக்கொண்டுதானே இருக்கிறீர்கள். இவை வாழ்க்கையில் ஏற்பட வேண்டிய முக்கியமான கட்டங்கள். என்னுடைய முயற்சியால் இந்த வெற்றி எனக்குக் கிடைக்கவில்லை. இது எனக்குப் பிரம்மம் தந்தது என்ற உணர்வு உங்களில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

அகிம்சையைப்பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக் கிறோம். அகிம்சை என்பது எனக்கு நான் செய்யும் நன்மை. அகிம்சையின் முக்கியமான அம்சமாக நாம் கொள்ள வேண்டியது, நான் ஒருவனை வேறு ஒரு ஆளாக எண்ணக் கூடாது. அவனுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய எண்ணம் எதுவும் எழக்கூடாது. அந்த எண்ணத்தை அவனை நோக்கி நான் செலுத்தினால் அது என்னையே திருப்பித் தாக்கும். ஆத்மா ஒன்று என்பதால் எல்லாமே என்னைச் சேரும். என்னிலிருந்து புறப்படுவது என்னையே வந்து சேரும்.

தியானத்தில் நற்பண்புகளைத் திரும்பத் திரும்ப நினைத்து என்னில் பதிக்கின்றபோது அந்த நற்பண்புகள் நம்முடைய வையாகின்றன. நம்மை விட்டு இந்த உடலையும் மனம் புத்தியையும் வேறாகப் பிரித்துப் பார்த்து அவற்றை ஈகோவாக அறிய வேண்டும். ஈகோ நானல்ல, ஆத்மாவே நான் என்பதை உருவேற்ற வேண்டும். கண்கள் திறந்திருக்கும்வரை தான் எல்லாம் வேறு வேறு. இந்தக் கண்களை மூடிவிட்டால் எல்லாம் ஒன்று. “கள்ளப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய…” என்று இதை உணர்ந்துதான் பாடியிருக்கிறார்கள். மேல் நிலைக்கு உயர்ந்து வந்த பிறகு புலன்களும் மனமும் அவற்றின் போக்கின்படி போகக்கூடாது. போக இயலாது. ஏனெனில் மனம் ஆத்மாவாகி விட்டபடியால் இனி அது மனமாக இயங்க வேண்டிய அவசியமில்லை. மனமென்பது என்னால் ஏற்றப்பட்ட விஷயங்களைக் கொண்டு சுற்றுவது. நான் அதை நிறுத்தி ஏற்றியவற்றையெல்லாம் மெது மெதுவாக இறக்கி அந்த மனமே இப்போது ஒளியாகிறது. மனதின் ஓட்டத்தை நிறுத்தி யோசித்தால் புத்தியாக வேலை செய்யும். எல்லாமாய் இயங்குவது அவனே. உள்ளிருந்து வருகின்ற பேரொளியைப் பிடிக்கின்ற பெரிய உள்ளமாக விரிய வேண்டும்.

நம் மனதை அமைதியாக வைத்திருக்க, நமக்குள் முன்னேற்றமடைய, நம்மை நாம் உயர்த்திக் கொள்ள, நம் மனதைப் பண்படுத்த இன்றியமையாத குணம் மன்னித்தல். மனித வாழ்வில் பலருடன் பலவிதமான உறவுகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. பல உறவுகள் நம்மை மகிழ்வித்திருக்கிறார்கள். பலர் நம்மைத் துயரப்படுத்தியிருக்கிறார்கள். (குழந்தைகள் உட்பட) நம்மை அறியாமல் அவர்கள்மீது பழிவாங்கும் உணர்வு, குரோதம் நமக்குள் இருக்கும். குரோதம், பழிவாங்கும் எண்ணம், துவேஷம் நீங்கவேண்டு மானால் அவர்களுடைய தவறுகளை மன்னிக்க வேண்டும். அவர்களுடைய தவறுகளை மன்னிப்பதனால் பெறப்படுகின்ற முதல் பலனை நான் பெறுகிறேன். அமைதி அடைகிறேன் உயர்கின்றேன்.

என்னை மற்றவர் துன்புறுத்தினால் அதன் பலனை இறைவன் கொடுப்பான். என்னை உயர்த்த நான் அவர்களை மன்னிக்கின் றேன். இதை நாம் உணர வேண்டும். ஒருவரை மன்னித்து விட்டால் அந்தச் சம்பவம் மனதை விட்டுப் போய்விடும். மன்னிக்கவில்லையென்றால் அது திரும்பத் திரும்ப நினைவிற்கு வந்து பெரிதாகும். பாவத்தை மன்னித்து விடலாம். ஆனால் செய்யப்பட்ட பாவம் பிறகு கர்மாவாக அனுபவிக்கத்தான் வேண்டும். நான் எல்லோரையும் மன்னிக்கத் தொடங்கி விட்டால் என்னில் இறைசக்தி நிறைந்து விடுவதால் எனது பாவத்தால் ஏற்படுகின்ற பிரதிபலன் பெரிய அளவில் தாக்காது.

என்னை உயர்த்த நான் அவர்களை மன்னிக்கின்றேன். இதை நாம் உணர வேண்டும். உணர்வுபு+ர்வமாக மன்னிக்கின்றேன் என்ற சொல்லை நான் அறிந்தால் போதும். அனைவரையும் நான் மன்னிக்கின்றேன். இந்த வாக்கியம் இறைவனது வாக்கியத்திற்குச் சமம். இதையே நாம் சிறிது காலத்திற்கு மேற்கொள்ள வேண்டும். நாம் சாஸ்திரத்தில் படிக்கின்ற பண்புகளை நம்வசமாக்கித் தியானிக்க ஆரம்பித்தோம். அந்த முயற்சியில் இம்சை அகிம்சையாக மாறியது. பழிவாங்குதல் மன்னிப்பாக மாறியது. மன்னிக்கும் குணம் இருந்தால்தான் மோட்சத்தை அடைய முடியும். மன்னிப்பதால் மனதிலுள்ள மேடு பள்ளங்கள் சமப்படுத்தப் படுகின்றன.

மன்னித்து விட்டுவிட்டால் வெறுப்பும் கோபமும் வராது. மற்றவர்கள் என்னைத் துன்பப்படுத்தியதை நான் மன்னிக்கா விட்டால் மீண்டும் என்னை நானே அதை நினைத்துத் துன்பப்படுத்திக் கொள்கிறேன். மன்னிப்பதால் எனது சக்தியை நான் வைத்திருக்கிறேன்; அமைதி அடைகிறேன். இதைத் தியானத்தில் நான் சிந்திப்பதன் மூலம் என்னில் இந்த நற்பண்புகளைப் பதிய வைக்கிறேன். மன்னித்தல் என்ற குணம் மேலான பலம் தரும் சக்தி. ஒருவர் தீங்கு செய்தாலும் துயரத்தைக் கொடுத்தாலும் அவருக்கு நாம் அதே துயரத்தைத் திருப்பிக் கொடுக்க அவரை விட ஒரு மடங்கு சக்தியிருந்தால் போதும். ஆனால் நம்மைத் துன்பப் படுத்துபவர்களைவிட நூறு மடங்கு நம்மிடம் அதிக சக்தி இருந்தால்தான் அவர்களை மன்னிக்க முடியும். மன்னிக்க நூறு மடங்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தியைத் தியானத்தின் வழியாக வளர்த்தெடுக்க வேண்டும். அமைதியில் கேட்கப்படும் சத்தத்தை உணரும் பாவனையுடன் அமர்ந்திருப் போம். சொல்லால், நடத்தையால் அவமானப் படுத்தியவர்களை என்னுடைய பலத்தினால் மன்னிக்கின்றேன். மன்னிப் பவனுக்குப் பலம் அதிகம். ஞானத்தால்தான் இந்தப்பலம் ஏற்படும். இனிமேல் துயரப்படுத்தப் போகின்றவரை நான் இப்போதே மன்னிக்கின்றேன் என்றால் என்ன பொருள்? மனதை அந்த அளவிற்குப் பண்படுத்திப் பக்குவப்படுத்தி அதைச் சரியான நிலையில் வைத்திருந்தால் தான் இந்த நிலையை அடைய முடியும். சொல்லால் நடத்தையால் துன்புறுத்துவது அவர்களின் இயல்பு என்றால் மன்னிப்பது என் சுபாவம். கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை மன்னிக்கின்றேன். எதிர்காலத்தில் வரப்போகின்றவற்றையும் மன்னிக்கின்றேன். நான் மற்றவர்களைத் துயரப்படுத்தியதை அவமானமாகக் கருதுகிறேன். மற்றவர்கள் என் தவறை மன்னிக்காமல் இருக்கலாம். ஆனால் நான் மன்னிக்கின்றேன். சாதாரண மக்கள் சாதாரண செயலில் ஈடுபடுவர். அசாதாரண மக்கள் அசாதாரண செயலில் ஈடுபடுகிறார்கள். ஆன்மீகத்திற்கு வந்த நான் எனது செயல் உயர்ந்ததாக இருக்கப் பழகிக் கொண்டேன்.

மற்றவர்களை நாம் மன்னித்தல் என்பது உண்மையில் நாம் செய்த ஒரு தவறைத் திருத்திக் கொள்வதுதான். நான் செய்த கர்மாதான் அவனிடமிருந்து தவறான விதத்தில் எனக்குத் துன்பமாக வந்து சேர்ந்தது. அவன் எனக்குத் துன்பத்தைத் தந்ததற்காக அவனிடம் பகை, விரோதம் பார்க்காமல் வருவதை ஏற்று அவனையும் மன்னிப்பதால் கர்மாவும் கழிகின்றது. மேலும் கர்மாவைக் கூட்டாமல் எனக்குள் அமைதி ஏற்படுகிறது. மன்னித்தல் என்பது ஏற்கனவே செய்யப்பட்ட தவறைத் திருத்திக் கொள்வதுதான். இது நம்மை நாம் திருத்திக் கொள்கின்ற ஒரு பண்பு. நம்மை அவமானப் படுத்தியவர்களை, விதவிதமான துன்பத்தில் ஆழ்த்தியவர்களை மன்னிக்க முடியும். மன்னிக்கும் போது தவறு திருத்தப்படுகிறது.

உலகத்தைப் பொருட்படுத்தும் என்மனம்தான் அனைத்திற்கும் காரணம். உண்மையில் அவரை நாம் மன்னிக்கவில்லை. நம்மை நாமே மன்னிக்கின்றோம். நாம் யாரையும் பழி சுமத்தவில்லையென்றால், மன்னிக்கவில்லையென்றால் பிறகு யார் யாரை மன்னிப்பது? தியானத்தில் இந்தக் கருத்தைச் சிந்திப்போம். சஞ்சல மனதில் மன்னிக்க இயலாது. பழி சுமத்தியவரை மனதிலிருந்து நீக்குவதுதான் மன்னித்தல்.

உங்களது தவறு, அவன் மூலம் வந்து உங்களைக் குத்துகின்றபோது நீங்கள் அதை எதிர்க்காமல் மன்னித்ததால் உங்கள் தவறை நீங்கள் திருத்திக் கொள்கிறீPர்கள். சீறிப் பாய்ந்திருந்தால் அது இன்னொரு தவறு, இன்னொரு பிரச்சனை வருவதற்கு வழிவகுத்திருக்கும். கர்மா ஏற்படாமல் செய்வதற்கு மன்னித்தல் என்னும் பண்பு மிக அவசியம். எல்லா ஆத்மாவும் ஒன்று. நடைமுறையில் உயர்ந்திருக்கலாம், தாழ்ந்திருக்கலாம், கர்மா அனைத்திற்கும் பின்னணி. ஞானத் தினால் நற்பண்புகளைக் கைக்கொண்டு அனைத்தையும் வென்று முன்னேறலாம். அகிம்சையைப் பழகினால்தான் மன்னிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். இம்சை, அகிம்சையாக மாறி, அதன்மூலம் பழிவாங்கும் குணம் மாறி, மன்னிக்கும் பண்பு வரும்.

நவராத்திரி விழா என்பது சக்திக்குரிய நாள். பிரம்மம் மூன்று சக்திகளாகப்பிரிந்து இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த சக்திகளைப் பெண் தெய்வங்களாக்கி, அவற்றைச் சிறப்பாக வழிபடுகின்ற நாட்கள் இவை. தீய குணங்களை அறவே ஒழித்து, உள்ளத்தைத் தூய்மையுறச் செய்பவள் துர்க்கை. அப்படித் தூய்மையடைந்த உள்ளத்தில் நற்பண்புகளாகிய செல்வத்தை நிரம்பச் செய்பவள் மகாலட்சுமி. நற்பண்புகளைப் பெற்றபின் புத்தி தெளிவடைகின்றது. தெளிந்த நல்லறிவே ஞானம். பிறவியைக் கடப்பதற்கு ஞானம் தான் தேவை. அந்த ஞானத்தை அருள்பவள் சரஸ்வதி.

குண்டலினி சக்தி இதய சக்கரத்தில் நிற்கின்ற நிலையில் ஒருவரிடம் நல்ல குணங்கள் நிறைந்திருக்கும். குண்டலினி அந்த நிலையை அடையும்வரை கஷ்டமான முயற்சியாக இருக்கும். சக்தி இதய சக்கரத்திற்கு வந்தபின் தொண்டை, நெற்றி என்று மேலே ஏறுவது எளிதாகும்.

மன்னித்தல் என்னும் பண்பு மிக ஆழமானது. நாம் ஒருவரைப் பற்றி இதுவரை வைத்திருந்த பிழையான எண்ணங்கள் அத்தனையையும் முழுமையாக உள்ளத்திலிருந்து அழித்து விடுவதே மன்னித்தல் என்பதன் முழுப்பொருளாகும். அன்பை விரித்தால்தான் இது நடக்கும். இதற்கு ஞானம் உதவி செய்ய வேண்டும். நம்முள் சூழ்ந்திருந்த வெறுப்பும், பகையும் தீய உணர்வுகளால் ஏற்பட்டவை. அவை இலேசில் அழியாது. இதயச் சக்கரத்தில் நின்று, நானும் அவரும் ஒன்று சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அறியாமையும்தான் எங்களுக்குள் துவேஷத்திற்குக் காரணமாய் அமைந்தன. கர்மாவால் இது ஏற்பட்டது போன்ற உண்மைகளைச் சிந்தித்து மனம் ஏற்றுக் கொண்டால் பகை உணர்வு மறைந்து விடும்.

மன்னிப்பைக் கொண்டு வெறுப்பை அழித்துவிட்டால் என் மனதில் நிறைவு என்ற சக்தி நிறைந்திருக்கும். சக்தியைக் கூட்டுவதும் குறைப்பதும் காலம்தான். இன்று ஏற்படுகின்ற சோகமும் சக்திக் குறைபாடும் இரண்டொரு தினங்களில் மாறி என்னில் சக்தி பெருகுகின்ற சூழ்நிலை ஏற்படலாம். சோகம் என்பது உண்மையில் சோகமல்ல. என்னில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக ஏற்படுவது. வெற்றி என்பது வெற்றியல்ல. என்னுடைய சமநிலையை சோதிப்பதற்கு அது வருகின்றது. வெற்றி – தோல்வி என்பது மனிதரைப் பொறுத்ததா? நிரந்தரமானதா? என்றால் அவை மனித மனதைப் பொறுத்தது.

மனித மனதைச் செப்பனிடுவதுதான் ஆன்மீகம். முன்பு அங்குமிங்குமாக அலை பாய்ந்து திரிந்த மனதை இப்போது அமைதியாக வைத்திருக்க முடிவது மேற்கொள்கின்ற ஆன்மீக முயற்சிகளால்தான். நாம் இன்னும் முயற்சிகளுடன் பயிற்சிகளை மேற்கொண்டால் மனதின் மேற்பரப்பு அமைதி யானவுடன் ஆத்மா வெளிப்படத் தொடங்கும். அது என்னுடன் தொடர்பு கொள்ள ஆவலாக இருக்கிறது. நாம் துன்பங்களாகக் கருதி அவதிப்படுபவை எல்லாம் தன்னோடு நாம் பேசுவதற்கு அது ஏற்படுத்துகின்ற முயற்சி. நான் அதனோடு எப்போதும் பேசுவதில்லை, நன்றி செலுத்துவதுமில்லை. எனக்கு எதாவது தேவையென்றால்தான் அதனோடு பேசுகின்றேன். ஆனால் அதுவோ என்னுடன் பேசப் பல பக்கத்தாலும் முயற்சி செய்கின்றது. இந்நிலையில் அது எனக்குத் தருகின்ற துன்பம் என்னை அணைப்பதற்காக அது விடுக்கின்ற அழைப்பு. இந்த ஆன்மீக உண்மையை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனக்கு இன்று ஐந்து துன்பம் ஏற்பட்டது என்றால் ஐந்து அழைப்பு எனக்கு அவனிடமிருந்து வந்திருக்கிறது என்று பொருள். ஞானம் இல்லாததால் நான் அவற்றிற்குப் பதில் அளிக்கவில்லை. துன்பம் நிரந்தரமென்றால் அது ஏன் மாறிக் கொண்டே இருக்கிறது? இப்போது துன்பம் வெறும் அனுபவமாக மட்டுமே இருக்கிறது. பிரச்சனை வரும், அதை நான்தான் துன்பமாகப் பார்க்கிறேன். பிரச்சனையைத் துன்பமாக்குவது நானும் என்னை ஆட்டிப் படைக்கும் கர்மாவும், அதற்குப் பின்னால் இருக்கும் மாயையும்தான்.

உனக்கு எற்படுகின்ற பிரச்சனையை நீதான் துன்பமாக எடுக்கிறாய். அதே பிரச்சனையை உன் மகனோ மகளோ துன்பமாகப் பார்ப்பதில்லை. ஏன்? அவரவர் பார்வை மாற்றம். இதற்கு ஞானம்தான் உதவ வேண்டும். வாழ்க்கையில் நான் விளையாடுவதற்கு எனக்குத் தரப்படுகின்ற பந்து பிரச்சனை. உனக்குப் பிரச்சனை என்று எதுவும் வராவிட்டால் நீயே ஏதாவது பிரச்சனையை உருவாக்கி விடுவாய். என்னால் நானே எனக்கு உருவாக்கிக் கொள்வது பிரச்சனை. நல்லதாக நடந்தால் அதைப் பிரச்சனையாக எடுக்க மாட்டாய். நஷ்டம் வரக்கூடியதாக இருந்தால் அல்லது உன்னால் முடிவெடுக்க முடியாதென்றால் அது பிரச்சனை. உன்னால் வருவதை ஏற்க முடியாவிட்டால் பிரச்சனை. உன்னால் முடியும் என்றால் எதுவுமே பிரச்சனையில்லை. ஆகவே வரும் சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் உன்னை வைத்துத்தான் அளக்கிறாய். நீயோ பிரம்மம். ஆனால் உன்னை நீ தவறாக நினைப்பதால்தான் இவையெல்லாம் உன்னைப் பாதிக்கின்றன. நான் யார் என்ற கேள்வி ஆன்மீகத்தில் மிக முக்கியம். நான் அதை ஈகோ என்று நினைக்கிறேன். உடலும் மனமும் நான் என நினைப்பது ஈகோ. ஈகோவை கர்வம் என்று சொல்லலாம். உடலும் மனமும் நான் என்பது ஈகோ. அதை மிக அழுத்தமாக நான்தான் என்று நினைத்தால் அகங்காரம். இதையே உயர்பரிணாமத்தில் நின்று பார்த்தால் உடலும் மனமும் நானல்ல.

என்னிலிருந்து சக்தி பல்வேறு பக்கங்களாக வெளிப்படுவதை ஒரு கண்ணாடி வழியாகப் பார்ப்பதாகக் கற்பனை செய்தால் அது ஒரு சிலந்தி வலைபோலக் காட்சியளிக்கும். என்னில் இருந்து உடல் மனம் புத்தியால் வெளிப்படும் இயக்கம் அனைத்தும் எனது சக்தி வெளிப்பாடுதான். என்னுள் இப்படி ஆத்மாவாக இருக்கின்ற சக்திதான் எல்லா இடங்களிலும் பரமாத்மாவாகப் பரவியிருக்கிறது. இந்த ஞானத்தைப் பயிற்சியில் கொண்டு வருவதற்குத்தான் தியானம் மிக அவசியம். தியானத்தால் உங்களை நீங்களே சுத்தப் படுத்துவதுதான் தியானம். பரமாத்மாவின் தெறிப்பு உங்களுக்குள் ஒளிவடிவமான ஆத்மாவாக இருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுகளை ஆராயமுடியுமே தவிர சரியான முடிவிற்கு வரமுடியாது. தொப்புள்தான் அறிவின் இருப்பிடம். அறிவால் ஆத்மாவைப் பிடிக்க முடியாது. உணர்வால்தான் பிடிக்கமுடியும். உணர்வு என்பது அன்பும் கருணையுமான இதய சக்கரம். அது மேலே உயர்ந்து தொண்டைக்கு வந்தால் அது ஆத்மாவை நெருங்குகிறது. இந்த அமைப்பைத் தான் தாந்த்ரீக பு+ஜை முறைகளால் குண்டலினி சக்தியை மேலே உணர்த்துகிறார்கள். அறிவின் பின்னால் உள்ள ஆத்மாவால் ஆத்மாவை அறிகின்ற முறைதான் குருவின் போதனைமுறை.

உடலுக்கும் உயிருக்கும் உள்ள வேறுபாடுதான் நான். உடல் வேறு. நான் வேறு. இந்த உடல் என் கர்மாவிற்கு ஏற்றபடி தரப்பட்டிருக்கின்றது. நான் கர்மாவைக் குறைத்தால் உடல் மாறும். நான் இந்தப் பு+மியில் இறங்கியபோது என்னில் வைக்கப்பட்ட வரைபடம் எனது கர்மா. எனது பரிணாம வளர்ச்சிக்கேற்ப எனது வரைபடம் மாறவேண்டும். உங்களுக்கு ஏற்படுகின்ற கோபமே சில மணி நேரங்களுக்குப் பின் மாறி விடுகின்றது. ஞானத்தால் கோபமே ஏற்படாது. இதன்மூலம் உடலிலும் மாற்றம் தானாக ஏற்படும். இப்போது உங்கள் உடலில் மனதில் இருக்கின்ற சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா? ஞானம் பெற்றபின் உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? முன்பு பிரச்சனையைத் துன்பமாகக் கருதிய நீங்கள் இப்போது அந்தப் பாதிப்பு இல்லாமல் அதை எதிர்கொள்ள முடிகிறதல்லவா? இதற்கு என்னுடைய உபதேசம் உதவிற்று என்றாலும் அடிநூலாக இருந்து பிரம்மம்தான் உதவியிருக்கிறது. இதற்கு உங்களது புண்ணியமும் முயற்சியும் சேர்ந்து வந்திருக்கிறது. ஆகவே பிரம்மத்திற்கு நன்றி கூறவேண்டும்.

நான் சுகமானவனாக இருக்கிறேன், நான் சந்தோஷமானவனாக இருக்கிறேன், நான் புனிதமானவனாக இருக்கிறேன் என்று முதலில் மனதிற்குள் சொல்லிவிட்டுப் பிறகு ஜபத்தைக்கூறிப் பிறகு தியானத்தைத் துவங்க வேண்டும். நான் ஆரோக்கிய மானவனாக இருந்தால்தான் என் உடம்பு எனது சாதனைக்கு உதவியாக இருக்க முடியும். சோர்வுற்ற மனதில் தியானம் நிகழாது. எனவே உள்ளம் மகிழ்வுற்று இருக்க வேண்டும். புனிதமான எண்ணங்களைத்தான் நான் நினைத்து நினைத்து அசைபோட வேண்டும். அதற்குப் புனிதமானவற்றைக் கேட்க வேண்டும். என்னைப் புனிதப் படுத்தினால்தான் என்னால் புனிதமான ஒன்றைத் தொடமுடியும்.

அவனை நோக்கித் திருப்பப்பட்ட வாழ்க்கைதான் புனிதமான வாழ்க்கை. உடல், மனம், புத்தி ஆகிய கருவிகள் தூய்மையாக இருக்க வேண்டும். தினமும் தலைக்குக் குளிப்பது மிகவும் நல்லது. ஆசிரமங்களில் சந்நியாசிகளின் பயிற்சிகளில் தினமும் குளிக்கும்போது ஒரு கிண்ணத்தில் உப்பை நீரில் கரைத்து அந்த உப்பு நீரைக் கையில் உயர்த்திப்பிடித்துத் தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதால் நம் உடலைச் சுற்றியிருக்கின்ற தெய்வீக சக்தியை சுத்தப்படுத்துகிறார்கள். பிறகு தண்ணீருக்குள் இறங்கி நின்று பிறகுதான் கங்கைக்குள் பாயவேண்டும் என்பது தரப்படுகின்ற பயிற்சி. உலகத்தில் உள்ள எல்லாமே தூய்மையுள்ளவைதான். ஏனெனில் எல்லாவற்றிற்குள்ளேயும் அதுதான் அணுவாய், அணுவிற்குள் ஆற்றலாய், ஆற்றலுக்குள் அறிவாய், அதற்குள் ஒளியாய் இருக்கின்றது. இந்த உண்மை உணரப்பட வேண்டும்.

எங்களுக்குள் ஏற்படுகின்ற தூண்டல் எல்லாமே ஆத்மீகத் தொடர்பு உள்ள தூண்டல்தான். ஏனெனில் அதிலிருந்துதான் நாங்கள் வந்துள்ளோம். துன்பம் என்பது அவனுடைய அழைப்பு. துன்பம் ஏற்படாவிட்டால் உலகத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பேன். துன்பம் என் ஓட்டத்தை தடுத்து என்னை நிற்கச் செய்கிறது; சிந்திக்க வைக்கிறது. அதிக துன்பத்தை அனுபவிப்பவர்கள் இறைவனால் இழுக்கப் படுபவர்கள். நாங்களாய் போட்டுக் கொண்ட தடைகள் தான் எங்களது உயிர் ஒளியை அடைந்து அதை அனுபவிக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன. நீயாய் ஏற்படுத்திக் கொண்ட விளைவுகள்தான் உனக்குத் தடை. என்னை எதிர்ப்பவர்களை மன்னித்து விட்டுவிட்டால் என்னுடைய சக்தியை அவர்கள் எடுத்து எனக்குள் பெருக்கமாட்டார்கள். மனம் நிம்மதியாய், அமைதியாய் இருக்கும். எனக்குத் தொல்லை கொடுப்பவர்கள் என்னைத் திருத்திச் சரிசெய்யத் தான் அப்படி நடக்கிறார்கள். அவர்கள் அறியாமையால் செயல்படுகிறார்கள் என்று மன்னித்து விட்டால் பிறகு பிரச்சனை இருக்காது. இப்படிச் செய்கின்றபோது ஞாபகப் பாதையில் இருந்த அனைத்தையும் அழித்து விடுகின்றோம். அவர் இவர் என்று இதில் பாகுபாடு பார்க்கக் கூடாது. எல்லோருமே நான்தான். ஒவ்வொரு மூச்சுக்கும் உன்னால் அதற்கு நன்றி தெரிவிக்க முடிந்தால் உன்னை அது அதி விரைவில் தன்னிடம் சேர்க்கும். உன்னைச் சரியான பாதைக்கு இட்டுச் செல்லும். இதற்கு எல்லா நேரமும் உன் சிந்தனை அதனிடமே இருக்க வேண்டும்.

எந்த நேரமும் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாமல் தூய்மையுடனும் நிறைந்த அன்புடனும் இருந்தால் அது எனக்கு வழிகாட்டுவதில் என்ன பிரச்சனை ஏற்பட இருக்கிறது? இப்போதே உங்களுக்கு அதனுடன் ஏற்பட்டுள்ள தொடர்பு தெரியத் துவங்கியிருக்க வேண்டும். விளக்கத்தாலும் பயிற்சியாலும் நீங்கள் ஆத்மாவிற்குப் பக்கத்தில் இருக்கிறீர் கள். அது உங்களுக்கு வழிகாட்டத் துவங்கியிருக்கும். பல விஷயங்களைச் செய்யாதே என்று சொல்லியிருக்கும். சில விஷயங்களைச் செய் என்று சொல்லியிருக்கும். அந்தத் தொடர்பைப் புரிந்து கொண்ட நிலையில் அதற்கு நாம் கட்டாயம் நன்றி தெரிவிக்க வேண்டும். முன்பு வெளியில் யார் யாரிடமோ எதனிடமெல்லாமோ தங்கியிருந்தீர்கள். இப்போது உங்களிலேயே நீங்கள் ஆத்மத் தொடர்புடன் தங்கியிருக்கத் துவங்கிவிட்டீர்கள் என்பது உண்மை. இதை விட்டால் சுலபமான வேறு பாதை இல்லை. எனவே எப்படியாவது உள்ளே சென்று அதனுடன் இணையுங்கள்.

ஆத்மாவுடன் இணைந்திருக்கும் போது ஏற்படுகின்ற அமைதி உங்களை ஆனந்தத்திற்கு அழைத்துச் சென்றதா? பயிற்சியின் அடுத்த படி ஆனந்தம்தான் என்பது தெரிகின்றதா? அதை அடைவதற்குப் பயிற்சி உங்களிடம் குறைவாக இருக்கின்றது. மனம் இன்னும் முழுமையாக விரிவடையவில்லை. அதற்கு முயற்சி செய்யுங்கள்.

அகிம்சை என்னும் நல்ல குணத்தைப் பின்பற்ற வேண்டு மென்றால் ஒரு காலத்தில் எனக்கு எதிரியாக இருந்தவனை மன்னித்து விடவேண்டும். அதோடு அவனுக்கு நல்ல உணர்வு அலைகளை அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் அவனுடைய கெட்ட உணர்வு அலைகள் என்னைச் சேர்ந்து விடும். அகிம்சையைப் பின்பற்றுகின்ற நான், இம்சை செய்கின்ற நான் என எனக்குள் இரண்டு பேர் இருக்கிறார்கள். இந்த இருவருக்குள் போராட்டம் நிகழ்கிறது. இம்சை செய்கின்ற நான் அநேக தருணங்களில் அகிம்சையைப் பின்பற்றுகின்ற நானை வென்றுவிடுகின்றது. அகிம்சையை விரும்புகின்றேன். மற்றவர்களைத் துன்புறுத்தாத நானாக அமர்ந்திருக்கின்றேன். அகிம்சை மேலோங்கி இருக்கிறது. உலக விவகாரங்களுக்குள் சென்றவுடன் அகிம்சை மறந்து இம்சையாளனாக மாறச் சந்தர்ப்பம் உண்டு. அகிம்சையை விரும்பும் நான் இம்சை உடையவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இம்சை செய்யும் என்னிடம் போராடி வெற்றி அடைய முடியாது. எனவே என்னிடமே நான் பிரார்த்தனை செய்கின்றேன். மனமே! உணர்வுகளே! யாருக்கும் இம்சை செய்யாதீர்கள். அகிம்சையுடன் இருங்கள். மற்றவர்களுக்கு செய்யும் இம்சையை உங்களுக்கு நீங்களே செய்கிறீர்கள். கண்களே! மற்றவர்களுக்கு இம்சை செய்யாதீர்கள். நாக்கே! யாரையும் சொல்லால் துன்புறுத்தாதே! என்று நமக்கு நாமே விடுக்கும் வேண்டுகோள், பிரார்த்தனை. அகிம்சையை விரும்புவராக நாம் தியான நிலையில் அமர்ந்திருக்கின்றோம். மன அமைதியுடன் சந்தோச நிலையில் உள்ளேன். என்னிடம் நானே மேற்கொள்ளும் இந்தப் பிரார்த்தனையை சிலகாலம் மேற்கொள்வோம். நம்முடன் மனம் அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்கும்போது நாம் மற்றவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றோம். எனவே நான் எப்போதும் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்படி எப்போதுமே இருப்பவரால்தான் முக்தியடைய முடியும். நம் மனம் போராடிக் கொண்டிருக்கும்போது மற்றவருக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றோம். மற்றவருக்குத் துன்பம் கொடுக்கக் கூடாதென்றால் நாம் அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது சுயநலமல்ல. எவ்வளவோ குறைகள், மாற்றங்கள் என்னிடம் இருப்பினும் நான் சஞ்சலமில்லாமல் அமைதியாக இருக்கின்றேன். மற்ற நேரங்களில் அமைதி காக்கப்படும் போது அகிம்சையாக இருக்கின்றேன். நம்மை இழப்பதற்குமுன் நாம் தயாராக இருப்பதே தியானப்பயிற்சி. என்னைச் சுற்றி எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தபோதிலும் மகிழ்வாக இருக்கின்றேன் என்பது தியானம். இப்போது செய்கின்ற தியானத்தில் இக்கருத்துக்களின் பொருளை நினைத்துக் கூறுதல் அவசியம்.

“நான் அமைதியாய் இருக்கின்றேன். எனக்குள் மகிழ்ந்திருக் கின்றேன். நான் ஏன் மற்றவர்களைத் துன்புறுத்த வேண்டும்? என்னைத் துன்புறுத்தியவர்களை மன்னித்து அமர்ந்திருக்கி றேன். என் மன அமைதியை யாரும் தடையுறச் செய்வ தில்லை. நான் எனக்குள் மகிழ்ந்திருக்கிறேன். அமைதியாக, அகிம்சையாளனாக இருக்கிறேன்.” இதை விடாமல் தொடர்ந்து 10, 15 நாட்களுக்குத் தியானத்தில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எனக்கு நான் விடுக்கின்ற வேண்டுகோளே இனி எனது பிரார்த்தனை. பலவிதமான தியானப் பயிற்சிகள் இருக்கின்றன. இப்போது நாம் செய்வது பண்புகளை நம்வசமாக்குவது! (நல்ல பண்புகளை நம்வசமாக்குவது மகாலட்சுமி பூஜை) கெட்ட பண்புகளை அறுத்தல் துர்க்கா பூஜை. நற்பண்புகளை அடைந்தவுடன் நமக்குக் கிடைப்பது ஞானம் எனும் வெட்டவெளி. உள்ளம் தற்போது வெள்ளை நிறமாக மாறிவிட்டது. வெண்மையான ஞானத்திற்குரியவள் சரஸ்வதி. ஞானத்தை வேண்டுவது சரஸ்வதி பூஜை.

தியானத்தில் அமர்கின்ற வேளையில் நமது உடல், மனம், சித்தம் அமைதியாக இருக்கின்றன. இம்சை செய்கின்ற மனநிலை இப்போது இல்லை. நிதானம் தவறும்போதுதான் இம்சை செய்யும் தூண்டல் எழுகின்றது. நிதானத்தைத் தொடர்ந்து வைத்திருப்பது தியானத்தில் முக்கிய பயிற்சி. உடல், மனம், வாக்கு, சிந்தனை ஆகியவை அமைதியாக இருப்பதாக எண்ண வேண்டும். எண்ணங்கள் அனைத்தும் சாந்தியடைந்து விட்டன. அதிலிருக்கும் போது இம்சை இல்லை. தியான நிலையில் நான் சாந்தி அடைந்துள்ளேன் என்று சிந்தித்து அமர்ந்துள்ளேன்.

அமைதிபெற்ற உடல், வாக்கு, மனம் சாந்தியடைந்துள்ளன. நான் சாந்தமானவன். என்னையும் மற்றவரையும் நான் துன்புறுத்த மாட்டேன். எனது அகிம்சை என்னுடைய மகா விரதம். என் உடலும், சொல்லும் மனமும் அமைதியடைந்து விட்டன என்ற இதே எண்ணங்கள் நம் மனதில் தொடரட்டும். வேறு எண்ணங்கள் வேண்டாம். எதை உபதேசிக்கின்றோமோ அதுவாகவே ஆகிறோம் என்பது தியானத்தில் ஒரு தத்துவம். நல்ல பண்புகளை நமதாக்குவதற்கு அவை நம்மிடம் இருப்பதாக நினைத்து அதன்படி செயல்படப் பழகவேண்டும். இல்லாவிட்டாலும்கூட இருப்பதாகப் பாவித்தால் பழகப்பழக அவை நம்மிடம் வந்து சேர்ந்துவிடும்.

இறைவன் நாமத்தைத் தொடர்ந்து ஜெபிப்பதைப் போல் நாம், ”நான் யாரையும் துன்புறுத்தாதவன், துன்புறுத்த விரும்பாதவன், அகிம்சையைப் பின்பற்றுபவன்!” என்று திரும்பத் திரும்ப தொடர்ந்து மனதிற்குள் கூறி வரவும். இவ்விதம் நம்மை நாம் தியானிக்கும்போது அகிம்சை நமக்குக் கிடைக்கின்றது. தியானத்தில் பயிற்சியால் இந்தப் பாவனையை மேற்கொள்கிறோம். அகிம்சையுடையவன் என்ற பாவனையை எனக்குள் விதைக்கின்றேன். அது மரமாக வளரும். சில காலங்களில் பெரிய மரமாக உயர்ந்து நிற்கும். அகிம்சையாளன் என்பதை மனதுக்குள் விதைத்து வலுப்படுத்தவும். எல்லாப் பண்புகளிலும் மேலான பண்பு அகிம்சையே ஆகும்.

துன்புறுத்தமாட்டேன் என்று சிந்திப்பதால் எனக்குள் நேர்மறை எண்ணம் வளர்கின்றது. எதிர்மறை இல்லை. துன்புறுத்து தலும் அதன் விளைவுகளும் அதனால் ஏற்படுகின்ற மனப் பிரச்சனைகளும் என் அமைதியைக் குறைக்கின்றன. என் அமைதி கெடாமல் இருக்க நான் அகிம்சையை மேற் கொள்ளத்தான் வேண்டும். அகிம்சை என்பது உயிரைக் கொல்லாமல் இருப்பது மட்டுமல்ல என்னை நேரடியாக ஆத்மாவோடு தொடர்புபடுத்துவது. விளையாட்டுக்குக்கூட யாரையும் துன்புறுத்தாத நிலை இருந்தால்தான் நான் அகிம்சையாளனாக இருக்கமுடியும். பிறர் நம்மைத் துன்புறுத்தினால் இது என் கர்மா என்று அதை எடுக்கத் தெரிய வேண்டும். நாம் அதை எப்படி எடுக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் நிம்மதியும் அது கெடுவதும் ஏற்படுகிறது. வாழ்க்கையைப்; புரிந்து கொண்டால் அதைக் கொண்டு செல்வது சுலபம். குடும்பத்தில் இருந்தால் நாம் நம்மைப் பார்த்துக் கொண்டு மற்றவரைச் சீண்டாமல் சென்றால், கொஞ்சம் பொய்யும் நடிப்பும் இருந்தால், சமாளித்துக் கொண்டு போகலாம். ஏனெனில் ஏறுக்கு மாறாகத்தான் எல்லாம் அமையும். அதைக் கொண்டு செல்லத் தெரிய வேண்டும். எல்லாவற்றிற்கும் ஞானம் தேவை. உடனிருக்கும் உறவை ஆத்மாவாகப் புரிந்து அன்பும் அனுசரித்தலுமாக நடந்தால் எல்லாம் சரி. வாழ்க்கையைச் சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. வாழ்க்கையில் எங்கெங்கு சிக்கல்கள் இருக்குமென்பதைப் புரிந்துகொண்டு அதைச் சமாளிக்கத் தெரிய வேண்டும்.

சிலர் நான் எந்த நேரமும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் அது உள்ளத்திலிருந்து உண்மையாக வரவேண்டும். எல்லோருமே வெளியில் மகிழ்ச்சியாகத்தான் காணப்படுகிறார்கள். ஆனால் மனதில் நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதில்லை. நான் ஒளியுள்ளவனாக, பு+ரண ஆனந்தம் உள்ளவனாக இருக்கிறேன். நான் அகிம்சையைக் கடைப்பிடிக்கிறேன். ஆனந்தமாக இருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன், தூய்மையாக இருக்கிறேன் என்றெல்லாம் திரும்பத் திரும்ப சொல்லி உருவேற்றி உள்ளுக்குள் போக வேண்டும். அப்படிச் செய்கின்றபோது உள்ளத்தில் வேறு ஒருவித எண்ணமும் இல்லாமற்போய் ஆத்மாவின் ஒளி மட்டுமே இருக்கிறது. அந்த ஒளியை நீங்கள் பாருங்கள். மற்றவற்றை அது செய்யும். நன்றி தெரிவித்து தெரிவித்து தொடர்ந்து அதைப் பாருங்கள். இதுதான் உங்களது தியானம்.