நான் செய்கிறேன், நான் இதற்குச் சொந்தக்காரன், நான் அனுபவிக்கிறேன். இப்படி ‘நான்’, ‘நான்’ என்று சொல்வதே அகங்காரம் ஆகும். நான், நான் என்று நம்மைத் தனித்து எண்ணும் எண்ணம் இல்லாதிருத்தலே அகங்காரமின்மை ‘அநஹங்கார’ எனப்படும்.
ஆத்ம ஞானம் வந்தால்தான் அகங்காரம் என்பது முற்றிலும் அழியும். கந்தசஷ்;டி, சூரன்போர் உணர்த்துவதும் இதைத்தான் என்பது பலருக்குப் புரிவதில்லை.
நானே இந்த பிரபஞ்சம் அனைத்திற்கும் சொந்தமானவன் என்று அறிபவனே அகங்காரத்திலிருந்து முற்றும் விடுபடுகிறான். அகங்காரத்திலிருந்து எப்படி விடுபடுவது? என்றால், அகங்காரம் ஏன் எழுகிறது என்று அறிவதன் மூலமே அது முடியும். அகங்காரத்தின் காரணம் அறியாமை.
அகந்தையின் உண்மை என்ன என்று நாம் விசாரம் செய்யாததால் – சிந்தித்துப் பார்க்காததால் அகங்காரம் கொழுத்துப் போய் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. இந்த நுபழ நம்மிடம் கேட்கும் உரிமைகள் எல்லாம் நியாயமானவையா என்று ஆராய்ந்து பார்த்தால் அகங்காரம் காற்று இறங்கிய பலுhன் போன்று ஆகிவிடும். அறிவு, அறியாமை, திறன், அதிகாரம், சாதனை என்று எதையும் அகங்காரம் தனது என்று சொந்தம் கொண்டாட முடியாது.
சிறுவயதில் இந்த ‘நான், நான்’ என்ற தனித்தன்மை அகங்காரமாகத் துவங்குகிறது. அதன் மூலதனம் அறியாமையே ஆகும். நாளடைவில் இந்த மூலதனம் அதிகம் செலவழியாமலேயே அகங்காரம் கொழுத்துக் கொண்டே வருகிறது. அறியாமையை எனது என்று சொல்லிக்கொள்வதில் நாம் பெருமைப் படுவதில்லை. ஆனால், எனக்கு அறிவு இருக்கிறது என்று சொல்லிக் கொள்வதில் எல்லோருக்குமே பெருமை. இந்தப் பெருமைக்கு நாம் உரியவர் தானா என்று காண்போம்.
அறிவை நாமா படைத்தோம்? இல்லை. மூடி இருக்கும் அறியாமை நீங்கும்போது ஏற்கனவே இருக்கும் அறிவு தானாக வெளிப்படுகிறது. ஆகையால்தான் நாம் கண்டுபிடிப்பு (னுளைஉழஎநசல) என்று கூறுகிறோம். நாம் அறிவை ‘டிஸ்கவர்’ செய்துகொண்டே, அதாவது, அறிவு இருப்பதையே கண்டுபிடிக்கிறோம். அறிவை நாம் படைக்கவில்லை. அப்பொழுது நான் அறிவாளி என்று நாம் எப்படிப் பெருமைப்பட முடியும்?
அறிவை வேகமாகப்பெறும் திறன், சூழ்நிலை என்பவற்றையும் நாம் படைக்கவில்லை. நாம் பிறந்தபோது ஓர் உடலும் புத்தியும் கொடுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் பிறந்தோம்! இவை நமக்குக் கொடுக்கப்பட்டன. இவைதான் கற்கக்கூடிய சூழ்நிலைகளையும், வாய்ப்புக்களையும் நமக்கு அளித்தன. பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், அயலார், பள்ளிகள், சமூகம், பல்வேறு அனுபவங்கள் என்பவை அனைத்தும் நம் அறியாமையைச் சிறிது, சிறிதாகக் களைந்துகொண்டே வரக் காராணமாக இருந்தன. நம்முடைய அகங்காரம் இவர்களையோ, இந்தச் சூழ்நிலைகளையோ படைக்கவில்லை. ஆனால் இதன் பலனான அறிவைச் சொந்தம் கொண்டாட மட்டும் முனைகிறது. நமக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள உறவைப் பற்றி உள்ள அறியாமையிலிருந்தே விளைகின்றன.
தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளதால், நம் செயல்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், நாம் தேர்ந்தெடுத்துச் செய்த செயலின் பலன்மேல் நமக்கு அதிகாரம் இல்லை. ஏனெனில், எத்தனையோ சாத்தியக் கூறுகளில் எது வருவதற்கு வாய்ப்பு என்பதை வைத்து நாம் பலனை எதிர்பார்க்கலாமே தவிர அதுதான் வருமென்பது நிச்சயமல்ல. ஆகையால், பலனுக்கு நாம் காரணமல்ல, நாம் செய்யும் எந்தச் செயலுக்கும் வேண்டிய மூலப் பொருட்களை நாம் படைக்கவில்லை. அதற்கான பலனோ – அறிந்த, அறியாத இப்போதைய, முந்திய இப்படிப் பலவித சூழ்நிலைகளின் விளைவாக அமைகிறது. இந்தச் சூழ்நிலைகளுக்கும் நாம் பொறுப்பு அல்ல.
ஒரு கால்பந்து விளையாட்டில் ஆட்டம் முடிவதற்கு இன்னும் சில செகண்டுகளே உள்ளன. அப்பொழுது என்னுடைய பலமான கால்தான் பந்தை உதைத்து வெற்றியை நிர்ணயிக்கும் கோலைப் போடுகிறது என்றாலும், இந்த வெற்றிக்குக் காரணமாகும் எத்தனையோ விஷயங்களையும், சூழ்நிலைகளையும் என்னால் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது.
அப்படி இருக்கும்போது இந்த வெற்றி என்னால்தான் என்று நான் எப்படிக் கூறமுடியும்? கால்பந்தையோ, கால்பந்து விளையாட்டையோ, என்னுடைய பலமான ATHLETIC BODYயையோ நான் படைக்கவில்லை. எத்தனையோ பேர்களும் எத்தனையோ அனுபவங்களும் இந்தத் திறனை நான் பெறுவதற்குக் காரணம் ஆகின்றன. மழை பெய்து விளையாட்டு பாதியில் நிற்கவில்லை. என் சக விளையாட்டுக் காரர் சரியான நேரத்தில் சரியான கோணத்தில் எனக்குப் பந்தை pass செய்திராவிட்டால் நான் அந்த கோலைப் போட்டிருக்க முடியாது. இப்படி எத்தனை விஷயங்கள் இந்த கோலுக்கு காரணமாக அமைகின்றன?
ஆகையால் அகங்காரத்தையும், கர்வத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவை மிகவும் குழந்தைத் தனமாகவே தோன்றுகின்றன. இந்த உலகையும், அதில் நம்முடைய இடத்தையும் நாம் வகிக்கும் பங்கையும் நன்கு புரிந்து கொண்டால் பணிவு தானாக வரும். அப்பொழுது நாம் கர்வப்படவும் மாட்டோம். நம்மையே கண்டனம் செய்து கொள்ளவும் மாட்டோம். சுயகண்டனமும் அகங்காரத்தின் மற்றொரு வெளிப்பாடு தான்.
சுயகண்டனம் என்பது ஒரு வித மன அழுக்கு என்பதையும், உண்மையில் ஒரு செயல் அல்லது ஒரு எண்ணம் என்பதைத் தவிர நிந்தனை செய்வதற்கு எதுவும் இல்லை என்பதைக்கண்டு, அந்தச் சுய கண்டனத்தை நீக்க வேண்டும்.
நம்மையும், இந்த உலகத்துடன் நமக்கு உள்ள சம்பந்தத்தையும் சரிவரப் புரிந்து கொண்டால் கர்வம், சுயநிந்தனை இந்த இரண்டுக்குமே இடம் இல்லை. நம்மையும் சேர்த்து இந்த உலகத்தை அது உள்ளவாறே காண முயல்கிறோம்.
இவ்வுலகம் பல அற்புதமான வாய்ப்புகள் நிறைந்ததாக உள்ளது. அவற்றை நம்மால் முடிந்தவரை கற்பதற்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்துகிறோம். நமக்குக் கொடுக்கப் பட்ட உடல், மனம், புலன்களின் சேர்க்கை என்னும் இந்த அற்புத சாதனத்தையும் நம்மால் முடிந்தவரை நன்கு பயன் படுத்துகிறோம். அறியாமையை அகற்றுவதற்கு இது தான் சாதனம். இதனால் விளையும் எந்த நன்மைக்கும் நமக்கென்று தனிப் பாராட்டையும் பெயரையும் எடுத்துக்கொள்வது நியாயமல்ல. அதற்குத் தகுந்த ஆதாரமும் இல்லை.
இந்த உலகத்தைக் கர்வமும் அகந்தையும் இன்றி அறிவு பெறுவதற்கும், மனதைப் பக்குவப்படுத்துவதற்கும் தகுந்த மேடையாக எண்ணுவோம். இதுதான் அகங்காரத்தை நீக்கும் வழி.